பகுதி-2 – நீதியும், நியாயமும் -அவ்வளவு சுலபமாக கிடைத்து விடுமா….?

.

இந்த ஒரு வழக்கு என்றில்லை…..
பொதுவாகவே நம் நாட்டில் இது தானே நிலை…?
எத்தனை ஆண்டுகளாக காவிரி வழக்கு இழுபட்டுக் கொண்டிருக்கிறது
என்று இப்போது நிதரிசனமாக பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.

பொதுவாக கிரிமினல் வழக்குகளில் –
முதலில் காவல் துறையால் வழக்கு விவரங்கள் முழுவதுமாக
சேகரிக்கப்பட்டு, அவை முறையாக விசாரித்தறியப்பட்டு,
சாட்சியங்கள், ஆதாரங்கள் திரட்டப்பட வேண்டும்.

பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
பின்னர் – செஷன்ஸ் கோர்ட்டில் சில ஆண்டுகள் கிடக்கும்.

முடிவு சாதகமாகவோ, பாதகமாகவோ – எப்படி இருந்தாலும்,
நிச்சயம் ஒரு அப்பீல் (மேல் முறையீடு) இருக்கும்.
விளைவாக உயர்நீதிமன்றத்தில் – சில, பல ஆண்டுகள்
கிடப்பில் இருக்க வேண்டியிருக்கும்.

அங்கு கிடைக்கும் முடிவின் அடிப்படையில் மீண்டும் ஒரு முறை
மேல்முறையீடு….உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு
வருவதற்கு முன்னரே அநேக வழக்குகளில், சம்பந்தப்பட்டவர்களின்
ஆயுள் முடிவுக்கு வந்து விடுகிறது.

இந்த லட்சணத்தில், ஷராபுதீனின் வழக்குகள் என்று முறையாக
நடத்தப்பட்டு, எப்போது தீர்ப்புகள் வரப்போகின்றன…?
இவன் அதுவரையில் வெளியில் இருந்தால், இவனுக்கு எதிராக
யார் சாட்சியம் அளிக்க முன்வருவார்கள்…?

இது இங்கேயே, இப்படியே இருக்கட்டும் –
நாம் முதலில் தொடங்கிய –
கொலைகாரனுடன் ஒரு சிநேகிதம் –
கதைக்குள் போவோமா.. ?

————-

கொலை செய்யப்பட்ட ராஜ்குமார் சிங், அந்த கிராமத்தின்
பண்ணையார். பெரிய பணக்காரன். கிராமத்திலுள்ள
முக்கால்வாசி நிலத்திற்கும் சொந்தக்காரன்.
பொறுக்கி.பெண்பித்தன். ஏகப்பட்ட அடியாட்களை வைத்துக்
கொண்டு, கிராமத்தில் அனைவரையும் அடக்கி ஆண்டு
வந்தான். பல திரைப்படங்களில் நாம் பார்க்கும் கேரக்டர் தான்
(ஷோலே அம்ஜத் கானை நினைவிருக்கிறதா… ?
– சரி – சஹாபுதீன் புகைப்படம் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா…?)

அவன் பண்ணையில் வேலை செய்து வந்தவன் தான்,
பிஜெந்தர் சிங்கின் நண்பன் – பியாரேலால்.

பியாரேலாலின் மனைவியும், பண்ணையாரின் வீட்டில்
-தோட்டத்தில் வேலை செய்து வந்தாள். ஒரு சமயம் பண்ணை
ராஜ்குமார் சிங், பியாரேலாலின் மனைவியுடன் தவறாக நடக்க
முயற்சி செய்திருக்கிறான்.

தப்பித்து ஓடிவந்து விட்ட அந்தப் பெண், தன் கணவனிடம்
இது பற்றிக் கூறி இருக்கிறாள். ஆத்திரம் அடைந்த
பியாரேலால் – ராஜ்குமார் சிங்கிடம் போய் சண்டை
போட்டிருக்கிறான். தன் ஆட்களை விட்டு பியாரேலாலை
அடித்து துவைத்த ராஜ்குமார் சிங், இரவில், மயக்கமாக,
குற்றுயிராகக் கிடந்த பியாரேலாலை தூக்கி வந்து, ரெயில்வே
ட்ராக்கில் போடச் செய்திருக்கிறான்.

உள்ளூர் போலீஸ்காரர்கள் எல்லாம் அவன் ஆட்கள். மறுநாள்
-போலீசாரால், பியாரேலால் ரெயிலில் அடிபட்டு இறந்து
விட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, கதை சுலபமாக
முடிக்கப்பட்டு இருக்கிறது.

அங்கெல்லாம், நண்பனின் மனைவியை சகோதரியாகவே
கருதுவார்கள் – அப்படியே (பஹன் என்று ) கூப்பிடவும்
செய்வார்கள். ரக் ஷா பந்தன் பண்டிகை அன்று, சொந்த
சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டுவது போல், கணவரின்
நண்பர்களையும் சகோதரராக பாவித்து அவர்கள் கையிலும்
ராக்கி கயிறு கட்டுவது அந்த பெண்களின் வழக்கம். ராக்கி
கயிறு கட்டிய சகோதரிக்கு எந்த ஆபத்து வந்தாலும், உடன்
பிறந்தவன் போல் உதவ வேண்டிய கடமை கயிறு கட்டிக்
கொண்டவனுக்கு உண்டு.

நண்பன் பியாரேலால் கொல்லப்பட்டதும், அவன் மனைவி,
கைக்குழந்தையுடன் – அநாதையாக்கப்பட்டதும், பிஜெந்தர்
சிங்கிற்கு தாங்க முடியாத சினத்தை உண்டு பண்ணி
இருக்கிறது. இயல்பாகவே முரடனான அவன், ராஜ்குமார்
சிங்கை தீர்த்துக் கட்ட முடிவு செய்திருக்கிறான்.

அப்போதெல்லாம், அங்கு சர்வசகஜமாக கள்ளத் துப்பாக்கிகள்
விலைக்கு கிடைக்கும். 4000-5000 விலையில்,ஒற்றை குண்டு
போட்டு சுடக்கூடிய நாட்டுத் துப்பாக்கி கிடைக்கும். (நான் கூட
அத்தகைய துப்பாக்கி ஒன்றைப் பார்த்திருக்கிறேன் )

பியாரேலாலின் இறுதிச் சடங்குகள் முடிந்த மறுநாள்,
ராஜ்குமார் சிங் சுட்டுக் கொல்லப்பட்டான். போலீஸ் பிஜெந்தர்
சிங் மீது IPC-302 பிரிவின் கீழ் கொலைக்குற்றம் சாட்டி,கைது
செய்து,சிறையில் அடைத்து, வழக்கு தொடர்ந்திருக்கிறது.

இப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது. என் மீது
முழு நம்பிக்கை வைத்து, தான் கொலை செய்தது எப்படி
என்பதை விவரமாகக் கூறினான் பிஜெந்தர் சிங் !

காலை 8 மணிக்கு தொழிற்சாலை உள்ளே வந்து, தன்
பிரிவான மெயின்டெனன்ஸ் செக் ஷனுக்கு போய்,
அட்டென்டென்ஸ் கொடுத்து விட்டு, தான் அன்றைய தினம்
எந்த இடத்தில், என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை
கேட்டறிந்து கொண்டு, அதைக்குறிக்கும் ஒர்க் ஆர்டரையும்
பெற்றுக் கொண்டு, அந்த இடத்திற்குப் போய் – ஒன்றிரண்டு
பேரைப் பார்த்து பேசி விட்டு, வேலையைத் துவக்கி விட்டு –
பின்னர் காணாமல் போய் விட்டான்.

பிஜெந்தர் சிங் போன்ற முரட்டு யூனியன் தலைவர்களை
தொழிற்சாலை நுழைவாயிலில் செக்யூரிடி பொறுப்பில்
இருக்கும் சூபர்வைசர்கள் விரோதித்துக் கொள்ளத் தயாராக
இருக்க மாட்டார்கள். எனவே -யூனியன் செல்வாக்கும்,
செக்யூரிடி சூபர்வைசர்களிடம் நல்ல பரிச்சயமும் உள்ள
இவனைப் போன்றவர்கள், தேவைப்படும் போது –
தொழிற்சாலையை விட்டு வெளியே போய் மீண்டும் உள்ளே
வரக்கூடிய வாய்ப்பு இருக்கவே செய்தது.

அதைப்பயன்படுத்திக்கொண்டு, காலை 9.30 மணிக்கு
வெளியேறியவன், வெளியில் பைக்குடன் காத்திருந்த ஒரு
நண்பனுடன் 15 கிமீ தள்ளி இருந்த கிராமத்திற்கு
சென்றிருக்கிறான். அந்த கிராமம், டெல்லி-சண்டிகாரை
இணைக்கும், ஜி.டி.ரோடு எனப்படும் முக்கிய சாலையிலிருந்து
5 கிமீ தள்ளி உள்ளே இருக்கிறது. ஊரை விட்டு வெளியே
சென்று திரும்பும் கிராமத்தவர்கள் பஸ்ஸில் வந்தால் மெயின்
ரோட்டில் இறங்கி கிராமத்திற்கு போக 5 கிமீ பயணிக்க
வேண்டும்.

எங்கோ வெளியூர் போய் விட்டு, பஸ்ஸில்
வந்து ஜி.டி.ரோடு சந்திப்பில் இறங்கி இருக்கிறான் பண்ணை
ராஜ்குமார் சிங். அவனை கிராமத்திற்கு அழைத்துச் செல்ல
அவனது வேலையாள் ஒருவன் வண்டியுடன் வந்து தயாராகக்
காத்திருக்கிறான்.

இந்த விவரங்களை எல்லாம் பிஜெந்தர் சிங்கின் நண்பன்
ஏற்கெனவே உளவு கண்டு பிஜெந்தர் சிங்கிடம் சொல்லி
இருக்கிறான். குறிப்பிட்ட இடத்தில் முன்னதாகவே
நண்பனுடன் பைக்கில் போய் இறங்கிக் கொண்ட பிஜெந்தர்
சிங் நண்பனை பைக்குடன் கொஞ்ச தூரம் தள்ளி மறைவாக
போய் நிற்கும்படி கூறி விட்டு, தான் ஒரு மரத்தின் மீது ஏறி,
மறைவாக உட்கார்ந்து கொண்டு ராஜ்குமார் சிங்கின் வரவை
எதிர்நோக்கி காத்திருக்கிறான்.

காலை சுமார் 11 மணி. பஸ் வந்து நிற்கிறது. ராஜ்குமார் சிங்
இறங்கியவுடன் சென்று விடுகிறது.சிறிது தள்ளி, வண்டியுடன்
காத்திருந்த வேலையாளை நோக்கி நடக்கிறான் ராஜ்குமார்
சிங். சுற்றுவட்டத்தில் வேறு ஆள் நடமாட்டமே இல்லை.

திடீரென்று மரத்திலிருந்து குதிக்கும் பிஜெந்தர் சிங்
கண்ணிமைக்கும் நேரத்தில், மிக அருகிலிருந்து ராஜ்குமார்
சிங்கை சுட்டு விடுகிறான். ராஜ்குமார் சுருண்டு
விழுகிறான்.கையில் துப்பாக்கியுடன் நிற்கும் பிஜெந்தர் சிங்கை
பார்க்கும் வேலையாள் பயந்து அந்த இடத்தை விட்டு ஓடிப்
போய் விடுகிறான்.

சாவதானமாக, ராஜ்குமார் இறந்து விட்டானா என்பதை உறுதி
செய்து கொண்டு, பிஜெந்தர் சிங் சிறிது தள்ளி பைக்குடன்
காத்திருந்த நண்பனிடம் சென்று மீண்டும் தொழிற்சாலை
அருகே வண்டியில் வந்து இறங்கிக் கொள்கிறான். மதியம் 12
முதல் 1 மணி வரை, தொழிற்சாலையில் உணவு
இடைவேளை. இடைவேளை முடிந்து தொழிற்சாலை உள்ளே
செல்லும் தொழிலாளர்களுடன் பிஜெந்தர் சிங்கும் கலந்து
உள்ளே சென்று விடுகிறான்.

செத்துப்போன ராஜ்குமார் சிங்கின் வேலையாள் சொன்ன
சாட்சியத்தை வைத்துக் கொண்டு, போலீஸ் பிஜெந்தர் சிங்கை
கொலைக்குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்திருக்கிறது.

பிஜெந்தர் சிங் தரப்பின் வாதம் – ராஜ்குமார் சிங்கின்
கொலைக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
கொலை நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில், தான்
தொழிற்சாலைக்குள் வேலை செய்து கொண்டிருந்திருந்தான் –
என்பதே.

ஒரு பணக்காரப் பொறுக்கி, தான் சகோதரியாக பாவிக்கும் தன்
நண்பனின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற
அயோக்கியன், தன் உயிர் நண்பனை கொன்று
தண்டவாளத்தில் போட்ட கொலைகாரன் – முழு
கிராமத்தையும் வதைத்து வருபவன் ராஜ்குமார் சிங் -உள்ளூர்
போலீஸ் அவன் பக்கம். அவனை எந்த சட்டமும்  ஒன்றும்
செய்யாது.

“அவனைக் கொன்றது தவறா – பாபு நீங்களே சொல்லுங்கள்”
என்று என்னிடமே கேட்டான் பிஜெந்தர் சிங். நான்
தொழிற்சாலையில் உள்ளூர் நண்பர்களிடம் கொலை
செய்யப்பட்ட ராஜ்குமார் சிங் பற்றி விசாரித்தேன். கொலை
சம்பவம் நிகழ்ந்தபோது வெளியான உள்ளூர் நாளிதழ்களையும்
படித்துப் பார்த்தேன். அந்த கேரக்டர், கிட்டத்தட்ட பிஜெந்தர்
சிங் சொன்ன மாதிரி தான் இருந்தது.

-இரண்டு மாதங்கள், நான் கோர்ட்டில், நிர்வாகத்தின்
பிரதிநிதியாக சாட்சியம் அளிக்க அழைக்கப்படும் வரை இந்த
விஷயம் என் மனதினுள் அலைபாய்ந்து கொண்டே இருந்தது.

பின்னர் ஒரு நாள் நான் சாட்சிக் கூண்டினுள் நின்றேன்
-தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பாக.

எனக்கு, இந்த வழக்கை எப்படி அணுக வேண்டும் என்று
டிபார்ட்மெண்டில் வாய்மொழியாக ஆலோசனை கூறப்பட்டு
இருந்தது. “பிஜெந்தர் சிங் அன்றைய தினம் வேலைக்கு
வந்திருந்தது உண்மை. ஆனால் காலை 9 மணியிலிருந்து
பகல் 1 மணி வரை அவரை யாரும் அவரது பணியிடத்தில்
பார்க்கவில்லை இதற்கு மேல் இந்த விஷயத்தில் நிர்வாகம்
எதுவும் கூறுவதற்கில்லை” என்று நான் சாட்சி கூற
பணிக்கப்பட்டிருந்தேன்.

நான் கூண்டிலேறி கூறியது – “சம்பவம் நடந்த அன்று
பிஜெந்தர் சிங் தொழிற்சாலைக்குள் இருந்தார். அன்றைய
தினம் மெயின்டெனன்ஸ் செக் ஷனில் அவருக்கு
கொடுக்கப்பட்ட வேலையை செய்திருக்கிறார். அதற்கான
ரிக்கார்ட்ஸ் இருக்கின்றன”. அத்தாட்சிகளாக அன்றைய தின
அட்டென்டென்ஸ் ரெஜிஸ்டர் மற்றும் ஒர்க் ஆர்டர்கள்
ஆகியவற்றின் பிரதிகளையும் கோர்ட்டில் ஆதாரங்களாகக்
கொடுத்தேன்.

அரசு வக்கீல் குறுக்கு விசாரணையின்போது, மீண்டும் மீண்டும்
வெவ்வேறு விதங்களில் கேட்டார் – “சம்பவம் நிகழ்ந்த அன்று,
தொழிற்சாலைக்கு பிஜெந்தர் சிங் வந்திருந்தாலும் – இடையில்
வெளியே சென்று வந்திருக்கலாம் அல்லவா” என்று.

நானும் மீண்டும் மீண்டும்  ஒரே மாதிரி பதிலைத் தான்
சொல்லிக் கொண்டிருந்தேன். “தொழிற்சாலை விதிமுறைகள்
(standing orders) அதற்கு இடம் கொடுக்கவில்லை. காலையில்
பணிக்கு தொழிற்சாலை உள்ளே வந்து விட்டால், தகுந்த பாஸ்
அவுட் இன்றி யாரும் வெளியே செல்ல முடியாது. ரிக்கார்ட்ஸ்
படி அன்றைய தினம் பிஜெந்தர் சிங்கிற்கு பாஸ் அவுட்
எதுவும் கொடுக்கப்படவில்லை. எனவே அவர் வெளியே
சென்றிருக்க வாய்ப்பு இல்லை” என்று !

சில மாதங்கள் கழித்து – பிஜெந்தர் சிங் strong alibi -காரணமாக,
அதாவது குற்றம் நிகழ்ந்த சமயத்தில், வேறு இடத்தில்
இருந்ததற்கான வலுவான ஆதாரம் காரணமாக, அந்த
வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டான்.

தற்காலிக பணி நீக்க உத்திரவு விலக்கப்பட்டு,பிஜெந்தர் சிங்
மீண்டும் பணியில் அனுமதிக்கப்பட்டான் !

இரண்டு மாதங்கள் கழித்து, —

எங்கள் அலுவலக மேலிடத்திலிருந்து எனக்கு வேறு
ஊருக்கு மாற்றல் உத்திரவு வந்தது !!

( பிஜெந்தர் சிங் டெல்லி ரெயில் நிலையம் வரை வந்து
நான் ஜி.டி. யில் ஏறும் வரை சுமார் 5 மணி நேரம் –
காத்திருந்து, கண்களில் நீர் மல்க, கட்டி அணைத்து
என்னை குடும்பத்துடன், வழியனுப்பி வைத்தான் ! )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to பகுதி-2 – நீதியும், நியாயமும் -அவ்வளவு சுலபமாக கிடைத்து விடுமா….?

 1. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  சட்டத்தைவிடப் பெரியது நியாயம். ‘நாம் எப்படி சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளலாம்’ என்று கேட்பவர்கள், 1. வாய்ப்பு கிடைக்காதவர்கள். 2. செயல்படுத்த (physically) இயலாதவர்கள்.

  குழந்தை தவறு செய்தால் அடிப்பவர்கள், பக்கத்து வீட்டுக்காரனோ மற்றவர்களோ தவறு செய்தால் திட்டுபவர்கள் (இது சட்டத்திற்குப் புறம்பானது. போலீஸ் நிலையத்தில்தான் புகார் கொடுக்கவேண்டும்), அரசியல்வாதிகளைத் திட்டுவது (இது விமரிசனத்தில் வராது. அவன் திருடன் என்று சொல்வதே சட்டத்திற்குப் புறம்பானது).. இவர்கள்தான், பிஜேந்தர் சிங் போன்றவர்களை, சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டது தவறு என்று சொல்வார்கள்.

 2. Lakshmi Mohan சொல்கிறார்:

  அன்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,

  மிகவும் அருமை ..
  நியாயமான முடிவைத்தான் எடுத்துள்ளீர்கள்.
  இத்தகைய சூழலை மனதில் கொண்டு நிர்வாக நடைமுறை என்ற சிகப்பு நாடாவிற்கு இடங்கொடாமல் எடுத்த முடிவு..
  பாராட்ட வேண்டும் உங்களை..!

  இத்தகைய மன உறுதி படைத்தோர் பெருகியிருந்தால் நாடு எப்போதோ நலம் பெற்றிருக்கும்..

  வாழ்க வளமுடன் ..!

  அன்புடன்.
  இலக்குமி மோகன்

 3. Yogi சொல்கிறார்:

  Sir

  You are a real Tamil

  Yogi

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்கள் நெல்லைத்தமிழன்,
   இலக்குமி மோகன் மற்றும் யோகி ஆகியோருக்கு நன்றி.

   பிஜேந்தர் சிங் – கொலைகாரனுக்கு கொடுத்த தண்டனை
   சுயநலத்தால் விளைந்தது அல்ல. பொது நலம்.
   சட்டப்படியும், நீதிமன்றத்தில் நியாயமான தீர்ப்பு
   வழங்கப்பட்டிருந்தாலும், அது இப்படியாகத்தான் இருந்திருக்கும்.

   பல வருடங்களுக்குப் பிறகு (ஒருவேள நீதி வென்றிருந்தால் ) –
   கிடைத்திருக்கக்கூடிய தண்டனையைத்தான் பிஜேந்தர் தானே
   பொறுப்பேற்றுக் கொண்டு நிறைவேற்றி விட்டான்.

   அப்போது அவன் இதைச்செய்திரா விட்டால், இறுதித்தீர்ப்பு
   வருவதற்குள், அந்த பாவி இன்னும் பலபேரை நாசம்
   செய்திருப்பான். அது தவிர்க்கப்பட்டது பிஜேந்தரின் செயலால் தானே…?

   இந்த கோணங்கள் தான் என்னைச் செயல்பட வைத்தன.
   என் மனசாட்சி இதில் மிகவும் மகிழ்ச்சியே கொண்டது.
   ( அந்த ஊர் மாற்றலும் எனக்கு நன்மையே விளைவித்தது…! )

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   பி.கு. –
   இப்போது சஹாபுதீன் விவகாரத்திலும்
   ஒரு பிஜேந்தர் சிங் உருவானால், அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை
   அல்லவா …!!!

 4. vignaani சொல்கிறார்:

  Worthy Repetition

 5. selvarajan சொல்கிறார்:

  கொலைகாரனோடு ஒரு சிநேகிதம் …..!
  Posted on ஏப்ரல் 14, 2012 by vimarisanam – kavirimainthan — என்ற இடுகையில் — தாங்கள் நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு முத்தாய்ப்பாக ஒரு மறுமொழி இட்டுள்ளீர்கள் — அது :– // நன்றி நண்பர்களே.

  என் பணிக்காலத்தில் நிகழ்ந்த சில பதைப்பூட்டும்
  நிகழ்ச்சிகளை என் மனைவியிடமோ மற்ற குடும்ப
  உறுப்பினர்களிடமோ கூட இது வரை சொன்னதில்லை –
  அவர்களுக்கு டென்ஷன் ஏற்படுத்த வேண்டாம் என்பதே
  காரணம் !

  இப்போது என் எண்ணங்களை வெளியிட இந்த வலைத்தளம்
  ஒரு பெரும் வடிகாலாக இருக்கிறது.
  உங்களுக்கு இது பிடித்திருந்தால் – இது போன்ற
  இன்னும் சில முக்கிய நிகழ்வுகளையும் நேரம் வரும்போது
  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  நன்றி.
  – வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன் // பிஜேந்தர் சிங் போன்றவர்களின் நியாயமும் — சஹாபுதீன் போன்றவர்களின் கொடூரங்களையும் விளக்கிய தங்களுக்கு நன்றி …மற்றும் பிடித்திருக்கிறது — மேலும் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள் … !!! அடுத்து ஒரு செய்தி :—
  // உமாபாரதி தலைமையில் தமிழக, கர்நாடக அமைச்சர்கள் கூட்டம்// http://www.dinamani.com/india/2016/sep/29/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2572586.html?pm=home —- இதனால் ஏதாவது ” பயன் ஏற்படுமா “..? –இதேபோன்று ஒரு பேச்சுவார்த்தையில், இரு மாநில முதல்வர்களும், 4 வருடங்கள் முன்பு பேசினர். அது தோல்வியில் முடிந்ததுதான் வரலாறு….2012, நவம்பர் மாதம் 29ம் தேதி நடைபெற்றது. அப்போதைய கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் (பாஜக) மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் இரு மாநில அரசுகளுக்கு இடையே எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை…. பின்பு வெளியே வந்த ஜெயலலிதா ” ஒரு சொட்டு தண்ணீரும் தரமுடியாது என்று ஷெட்டர் கூறியதாக தெரிவித்தது — மீண்டும் உச்ச நீதிமன்றத்தையே நாடியது என்பது அனைவரும் அறிந்ததே — இந்நிலையில் — அதுவும் உமா பாரதியின் முன் பேச்சுவார்த்தை என்பது தான் — கொஞ்சம் இடிக்கிறது — தற்போதைய கர்நாடக முதல்வர் சித்தராமையா — தனது பரிவாரங்களுடன் சென்று பிரதமரை சந்திக்காமல் உமா பாரதியை தான் சந்தித்தார் என்பது சில நாட்களுக்கு முன் நடந்தது — மேலாண்மை வாரியம் ஒன்று தான் தீர்வு — மற்றதெல்லாம் —- ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   இது உச்சநீதிமன்றத்திற்காக, நிகழ்த்திக் காட்டப்படும்
   ஒரு நாடகம் … அவ்வளவே.
   இதன் விளைவு, முடிவு என்னவாக இருக்கும் என்பது
   நமக்கு ஏற்கெனவே தெரிந்தது தானே…!

   இதற்கு அடுத்த நிலை,
   அதாவது மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது…?
   எவ்வளவு விரைவாக செயல்படப்போகிறது…?
   முழுமனதுடன் செயல்படுமா…?
   அல்லது மீண்டும் எதாவது கொக்கிகள் வைக்கப்படுமா…?
   என்பது தான் முக்கியம்…

   பாஜகவை, அதன் தலைமையை நம்ப முடியாது.
   பினாமி – சுனாமி …!!! உங்களுக்கு தெரிந்தது தானே…!!
   நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

   (காவிரியை நேரில் கண்டேன் –
   கண்களில் ரத்தக்கண்ணீர் வருகிறது…)

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. Temple Jersey சொல்கிறார்:

  Kaverimainthan sir,
  you experience & sharing your thoughts to the society is much needed.
  Please continue to write blogs.

  Thanks
  NJ RAM

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.