மோடிஜிக்கு தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் வந்திருக்கிறது …

kaveri-in-trichy

தரை தெரிய ந க ரு ம் காவிரி

kaveri-flow

4 அங்குல உயரத்திற்கு தரை தெரிய நகரும் காவிரி-2

காவிரியைக் காண ஆசையோடு, ஆவலோடு சென்றேன்.
வழக்கமாக செப்டம்பர் மாதங்களில் காவிரி ஆறு இரண்டு கரைகளையும்  தொட்டுக் கொண்டு, அகண்ட காவேரியாக, காற்றில் சிற்றலைகளை  கிளப்பிக்கொண்டு, உல்லாசமாக ஓடிக்கொண்டிருக்கும்.

போனவன் தஞ்சையிலும், திருச்சிராப்பள்ளியிலும் –

கண்டேன் காவிரியை…
இரண்டு கரைகளையும் தொட்டுக் கொண்டு – கரை புரள ஓடியது காவிரி
என்று சொல்லத்தான் ஆசை.

ஆனால்…… மிக மிக மெல்லியதாக, பல இடங்களில்,
4-5 அங்குலம் உயரம் கூட நீர் இல்லாத நிலையில்,
தரை தெரியும் அளவுக்கு தான் காவிரி நகர்ந்து கொண்டிருக்கிறது.
செப்டம்பரில் இது மிகப் பரிதாபமான தோற்றம்.
தமிழகம் கேட்டுப் பார்த்தது…
வாட்டர் மேனேஜ்மெண்ட் போர்டு சொல்லிப் பார்த்தது…
உச்ச நீதிமன்றம் உத்திரவு இட்டு பார்த்தது.
யார் சொன்னாலும் கேட்க மறுக்கிறது கர்நாடகா.
அப்படி ஒரு திமிர்த்தனம்….
நமக்குரிய நீரை அடாவடியாக பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறது.
அணையை திறந்து மூடும் அதிகாரம் அதன் வசம் இருப்பதால் தானே
இத்தனை வேண்டுகோள்களையும், உத்திரவுகளையும் கர்நாடகாவால்
புறக்கணிக்க முடிகிறது….?

இதுவே நாம் படும் துயரங்களுக்கான கடைசி காலகட்டமாக இருக்கட்டும். இந்த ஆண்டு, இயற்கையின் துணையோடு, வடகிழக்குப் பருவ மழையின் அருளோடு, பாசனம் ஜெயிக்க வேண்டுவோம்.

அடுத்த ஆண்டிலிருந்தாவது நிலை மாற வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் உத்திரவுப்படி மீண்டும் இன்று பேச்சு வார்த்தை
நடக்கவிருக்கிறது. இதில் என்ன முடிவு வரும் என்று யாரும்
யோசிக்க வேண்டிய, எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை….
ஏற்கெனவே அனைவரும் அறிந்த முடிவு….!

இந்த கூட்டத்தின் முடிவுகளை தெரிவிப்பதோடு,
இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர,
தான் என்ன செய்ய உத்தேசித்துள்ளது என்பதை மத்திய அரசு
நாளைய தினம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தாக வேண்டும்.

மத்திய பாஜக அரசு இதுவரை தானாக முன்வந்து காவிரி மேலாண்மை
வாரியத்தை அமைக்காததற்கு காரணம் – ஓட்டு வங்கி அரசியல்.

கர்நாடகாவிற்கு விரோதமாக பாஜக அரசு எந்த முடிவையும்
எடுத்ததாக பெயர் வந்து விடக்கூடாது என்பதில் மோடிஜி அரசு
இதுவரை மிக ஜாக்கிரதையாக இருந்தது.
இப்போதும் கூட, கர்நாடகா மாநில பாஜக அதே நிலையில் தான்
இருக்கிறது.

ஆனால், பாஜக கட்சியின் முக்கிய தலைவர் என்பதைத் தாண்டி,
பிரதமர் என்கிற அரசியல்சட்ட பொறுப்பினையும்
வகிக்கும் திரு.மோடி அவர்கள் இனியும் ஒரு கட்சிக்காக
மட்டும் இயங்க முடியாது.

தான் வகிக்கும் பொறுப்பின் நிலையை உணர்ந்து, அரசியல் சாசனம்
அவருக்கு விதிக்கும் கடமைகளைச் செய்ய வேண்டும்.
இதுவரை அரசியல் காரணங்களுக்காக செயல்படாமல் இருந்தாலும்,
இப்போது, சுப்ரீம் கோர்ட் தரும் பாதுகாப்பான முகமூடியை அணிந்து
கொண்டு, சுப்ரீம் கோர்ட் உத்திரவின்படி மத்திய அரசு செயல்படுகிறது
என்று சொல்லிக் கொண்டாவது –

உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை
மத்திய அரசு அமைக்க வேண்டும்…..

மீண்டும் எத்தகைய குழப்பங்களுக்கும், சந்தேகங்களுக்கும்
இடமில்லாதபடி, காவிரி நீர் பாயும் வழியில் உள்ள அனைத்து
அணைகளின் மதகுகளையும், மூடவோ, திறக்கவோ
முழு அதிகாரம் கொண்டதாக அது அமைக்கப்பட வேண்டும்.
காவிரி ட்ரைபியூனலின் இறுதி பங்கீட்டின்படி, 4 மாநிலங்களுக்கும்
உரிய நீர் கிடைக்கச் செய்யவேண்டும்.

ட்ரைபியூனல் கொடுத்த உத்திரவின்படி, தென்மேற்கு பருவமழை
துவங்கும் ஜூன் முதல் வாரத்திலிருந்தே, நீர் பங்கீடு உறுதி
செய்யப்பட்டு அன்றாடம் கிடைக்கும் நீர் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
கர்நாடகம் தனது அணைகளில் தேக்கிக்கொண்டு, பிறகு தன்
வசதிக்கேற்ப நீரை விடுவிக்கும் அடாவடிக்கு முற்றுப்புள்ளி
வைக்கப்பட வேண்டும்.

கட்சி நலனுக்கு அப்பாற்பட்டு, தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்கச்
செய்ய வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு இருக்கிறது. இந்த பதவியில்
யார் வகித்தாலும் செய்ய வேண்டிய நியாயமான கடமை அது.

தன் கடமையிலிருந்து தான் தவற மாட்டேன் என்பதை
நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ் நாட்டு மக்களுக்கு மோடிஜி
நிரூபித்தாக வேண்டிய கட்டத்தில் இருக்கிறார்.

 

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to மோடிஜிக்கு தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் வந்திருக்கிறது …

 1. gopalasamy சொல்கிறார்:

  If management board is not construed it is not only affecting Tamilnadu but Bengalore city reputation also will be affected. Modi should consider himself as P.M of country; not a petty leader of political party.

 2. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  தமிழ்நாட்டு மக்களுக்கு பிரதமர் நிருபித்தால்… அதிகபட்சம் கட்டிய டெபாசிட் கிடைக்கும் தேர்தலில்… ஆனால் கரநாடகத்திற்கு சாதகமாக செயல்பட்டால் மாநில ஆட்சி, சீஎம் பதவி, ராஜ்யசபா உறுப்பினர்கள்…
  கூட்டி கழிச்சு பார்த்தால் கணக்கு சரியாத்தான் இருக்கும்.

 3. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  சைதை அஜீஸ் சொல்வது உண்மையல்லவா? காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு மத்தியில் இருந்தபோது ஏன் ஒன்றுமே செய்யவில்லை? ஓட்டுமட்டுமே காரணமல்லவா? ‘நமது பிரதமரை எப்படி கட்சி நலனுக்கு எதிராக செயல்பட விடுவார்கள்? இப்போது இல கணேசன் அவர்கள் எம்.பியாவதற்கே வேறு மானிலம் தேவைப்படுகிறது. தனியா எலெக்ஷன்ல நின்றிருந்தா, பொன் ராதாவுக்கே டெபாசிட் தேறுமான்னு தெரியாது.. என்ன ஒரு ஆறுதல்னா, மின்சார விஷயத்தில் திமுக+காங்கிரஸ் போங்காட்டம் ஆடி தமிழகத்தின் நலனை வஞ்சித்ததுபோல், மோடிஜி அவர்கள் செய்யவில்லை. இரு மானிலப் பிரச்சனையில்தான் முடிவெடுக்கத் தயங்குகிறார். பார்க்கலாம் என்ன செய்யப்போகிறார் என்று.

  நாமும், விவசாயத்துக்கு நீர் இல்லை என்று பஞ்சப் பாட்டுப் பாடிக்கொண்டே, நம் ஆற்று நீரை ஓசிக்கு பெப்சி போன்ற கம்பெனிகளுக்குக் கொடுக்கிறோம். மணலை அள்ளி, தண்ணீர்ப்பஞ்சம் ஏற்படுத்துகிறோம். அப்புறம் லவோ திவோ என்று அடித்துக்கொள்கிறோம்.

 4. மாறன் சொல்கிறார்:

  மோடிஜியை குறை சொன்னால் தாங்காதே உங்களுக்கு.
  உடனே மணல் கொள்ளை, பெப்சி என்று வேறு திசைக்கு
  மாற்றி விடுவீர்களே.

  • ravi சொல்கிறார்:

   //உடனே மணல் கொள்ளை, பெப்சி என்று வேறு திசைக்கு//
   இது பொய் என்று சொல்கிறீர்களா ?? காவிரி நதிக்காக போராடும் அனைவரும் கண்டு கொள்ளாமல் இருப்பது மணல் கொள்ளையை .. ஏன் , அனைவருக்கும் கமிஷன் வருகிறது .. அப்படித்தானே..
   தாமிரபரணி , வைகை இரண்டும் தமிழ் நாட்டில் ஓடும் நதி .. நாம் அதில் மதுரையின் சாக்கடையை கலந்து விட்டோம்.. இதற்கு உங்களின் பதில்..ஸ்ரீவைகுண்டம் ஆணை விவகாரம் தான் நாறி கொண்டு இருக்கிறதே .. இதை பற்றி கேட்டால் அணைத்து திமுக , அதிமுக ஆட்கள் கம் என்று ஆகி விடுவார்கள்..

   அமராவதி . காவிரி இரண்டும் பாயும் கரூர் மாவட்டத்தில் தான் தண்ணீர் பஞ்சம்.. தெரிந்து கொள்ளுங்கள்..

   • மாறன் சொல்கிறார்:

    இங்கு இவ்வளவு பாயும் நீங்கள் உள்ளூர்க்காரராக
    எடுத்த முயற்சி என்ன ? அதையும் நாங்கள் தெரிந்து கொள்ளலாமா ?

    • ravi சொல்கிறார்:

     மிரட்டப்பட்டோம் , வழக்குகள் போட்டோம் , ஒரு இடத்தில குவாரி மூடப்பட்டு , அடுத்த இடத்தில திறக்கப்படும்… அவ்வளவே
     அதெல்லாம் சரி !!
     ஆட்சிக்கு வந்தால் மணல் கொள்ளை நிறுத்தப்படும் என்று சொன்னவர்களை பற்றி ஒரு வார்த்தை கேட்காமல் எங்கள் மேல் பாய்வது நியாயமா ?? இல்லை, திமுக ஊழல் செய்தால் தவறு , அதிமுக ஊழல் நல்லது என்று நினைக்கிறீர்களா ?
     சரி , இந்த பிரச்சனைக்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் ??

 5. gopalasamy சொல்கிறார்:

  there is a big vote bank for Congress – DMK alliance. Even then They did not do anything to solve the problem. Why ? Sonia is the one of the most powerful woman in the world. Why she did not think for justice ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கோபாலசாமி,

   இப்போது கர்நாடகாவில் ஆட்சி புரிவது கூட காங்கிரஸ் கட்சிதானே…?
   சுப்ரீம் கோர்ட் உத்திரவை மீறாதீர்கள் என்று காங்கிரஸ் தலைவி
   திருமதி சோனியா காந்தி – உத்திரவிட்டிருக்க வேண்டாமா…?

   காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளிடையேயும்
   பல விஷயங்களில் எந்தவித வேறுபாடும் இல்லை…

   – வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.