காஷ்மீர் – நேற்று, இன்று, நாளை….?

dal-lake-srinagar-winters

இன்று பலருக்கும் காஷ்மீர் குறித்த பழைய,
அடிப்படை விவரங்களை எல்லாம் சரிவர புரிந்து கொள்ளாத
முடியாத ஒரு நிலை இருந்து வருகிறது.

காஷ்மீரில், – முக்கியமாக ஸ்ரீநகரில் – நடந்து வரும் கல்லெறியும்
போராட்டங்களும், கண்களை கொடுமையாக காயப்படுத்தும்
துப்பாக்கிச் சூடுகளும், 85 நாளையும் கடந்த ஊரடங்கு உத்திரவுகளும்
மக்களை உணர்வுபூர்வமாக இந்திய அரசுக்கு எதிராக சிந்திக்கத்
தூண்டுகின்றன. இன்றைய இந்த கலவரம் மட்டுமே நிஜமான
பின்னணியை தரவில்லை.

இன்றைய சூழ்நிலைக்கான அடிப்படை விவரங்களை மக்கள்
சரியாக உணர்ந்து கொண்டால் தான், எது சரி, எது தவறு என்று
சரியாக யோசிக்க முடியும்.

காஷ்மீர் குறித்த அடிப்படை விவரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
இருந்தால் தான் இது சாத்தியமாகும். இது குறித்த விவரங்களை
எல்லாம் தொகுக்கும் முயற்சியில் கடந்த சில நாட்களாக நான்
ஈடுபட்டிருந்தேன்.

அதற்குள், நேற்றைய தினமணி நாளிதழின் தளத்தில் ஒரு
அற்புதமான, அத்தனை விவரங்களையும் உள்ளடக்கிய ஒரு கட்டுரை
வெளியாகி இருப்பதைப் பார்த்தேன். நமது தேவையை இது
முற்றிலுமாக பூர்த்தி செய்கிறது. மிகுந்த அக்கரையுடன் தகவல்களை
சேகரித்து இந்த கட்டுரையை எழுதிய திரு.சி.சரவணன் அவர்களுக்கும்,
பதிவிட்ட தினமணி நாளிதழுக்கும் நமது நன்றி, பாராட்டுகள்.

இந்த கட்டுரையை விமரிசனம் தளத்தில் மறுபதிவு செய்வதன் மூலம்,
இதுவரை இந்த கட்டுரையை படித்திராதவர்கள் படிக்கவும்,
எதிர்காலத்தில் -அத்தனை விவரங்களும் ஒரே இடத்தில் இருந்தால்,
நமக்கு reference purpose -க்கு உதவும் என்பதாலும்
கீழே பதிவிட்டிருக்கிறேன்.

——————————-

“நம்மிடம் இருக்கும் தேசப்பற்று, நாம் எல்லோரும் இந்தியர்கள் என்கிற
கௌரவத்தை எல்லாம் கழற்றி வைத்துவிட்டுத் தெளிவான பார்வையைச்

செலுத்துங்கள். காஷ்மீர் தனிநாடாக வேண்டும் என்கிற கோரிக்கையின்
நியாயங்கள் புரியும்” என்ற மையப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஒரு

காணொளிக் காட்சி தமிழகம் முழுவதும் இஸ்லாமிய இளைஞர்களிடையே
பரவி வருகிறது.

இந்தக் காணொளிக் காட்சியில் இடம் பெற்றிருக்கக்கூடிய விவாதங்களுக்கு
விடை தருவதற்கு முன்னர், காஷ்மீர் மாநிலம் உருவான வரலாற்றைச்
சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம்.

இந்தியா – பாகிஸ்தான் என்ற ஆகிய இரண்டு சுதந்திர நாடுகள்
உருவாக்கப்படுவதாக 1947-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்தது.

ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்டிருந்த மாகாணங்களும் சமஸ்தானங்களும்
சுதேசி அரசுகளும் தங்கள் விருப்பம்போல் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன்
இணைந்துகொள்ளலாம் என்று மௌன்ட்பேட்டன் பிரபு அறிவித்தார்.

ஹைதராபாத், ஜுனாகாத், காஷ்மீர் தவிர்த்த பிற சமஸ்தானங்களும் சுதேசி
அரசுகளும் தங்கள் எல்லைக்குட்பட்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன்
இணைந்தன.

முஸ்லிம்கள், இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் கலந்து வாழ்ந்துவந்த
காஷ்மீர் சமஸ்தானத்தை ஹரிசிங் என்கிற சீக்கியர் ஆட்சி செய்துவந்தார்.
எந்த நாட்டுடன் இணைவது என்பது குறித்து முடிவெடுக்காமல் அவர் காலம்
தாழ்த்திவந்தார்.

இந்த நிலையில், 1947 அக்டோபர் 22-ம் தேதி, குர்ஷித் அன்வர் தலைமையில்
இஸ்லாமியக் குழு ஒன்று காஷ்மீர் மீது படையெடுத்தது. ஹரிசிங்
படையினரால் குர்ஷித் படையை எதிர்கொள்ள முடியவில்லை.
அக்டோபர் 24-ம் தேதி காஷ்மீரின் மஹுரா மின்நிலையத்தைக் குர்ஷித்
படையினர் கைப்பற்றினர். காஷ்மீர் பிரிகேடியர் ராஜிந்தர்சிங் கொல்லப்பட்டார்.
காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியைக் குர்ஷித் கைப்பற்றினார்.

எனவே, ஹரிசிங் தனது துணைப் பிரதமர் ஆர்.பி.ராம்லால் பத்ரா மூலமாக
ஒரு கடிதத்தை இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைத்தார். அந்தக் கடிதத்தில்,
இந்தியாவுடன் இணைய தாம் விரும்புவதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

அன்றைய காஷ்மீர் பிரதமர் மெஹர்சன் மகாஜனும், காஷ்மீர் இஸ்லாமிய
மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவருமாகிய ஷேக் அப்துல்லாவும் இதற்கு
ஒப்புதல் அளித்தனர். முறைப்படி இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்ததும்,
அக்டோபர் 27-ல் இந்தியப் படை காஷ்மீருக்குள் நுழைந்தது. குர்ஷித் படையைத்

தடுத்து நிறுத்தியது. காஷ்மீரைக் கைப்பற்றும் குர்ஷித்தின் திட்டம்
முறியடிக்கப்பட்டது.

இதற்குள், ஐக்கிய நாடுகள் அவையின் தலையீட்டின் காரணமாக சண்டை
நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

குர்ஷித்தால் கைப்பற்றப்பட்ட காஷ்மீர் பகுதிகள் யாவும் பாகிஸ்தான்
ராணுவத்தின் பிடிக்குள் கொண்டுவரப்பட்டன. குர்ஷித் படையைக்
காஷ்மீருக்கு அனுப்பியதே பாகிஸ்தான்தான் என்ற உண்மை இதன்மூலம்
வெளி உலகுக்குத் தெரியவந்தது.

அபோத்தாபாத் என்ற நகரின் வழியாகத்தான் காஷ்மீருக்குள் குர்ஷித் அன்வர்
படையெடுத்து நுழைந்தார். 77 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சாலையைப்
பாகிஸ்தானின் உதவியில்லாமல் அபோத்தாபாத்தை யாரும் தாண்டிவிடமுடியாது.

ஆனால், எங்களுக்குத் தெரியாமல் பத்தானியத் தீவிரவாதப் பழங்குடியின
குழுவினர் காஷ்மீருக்குள் நுழைந்தனர் என்று இன்றுவரை பாகிஸ்தான்
சொல்லிவருகிறது.

குர்ஷித் பயன்படுத்திய போர் ஆயுதங்கள் யாவும் பாகிஸ்தானால்
வழங்கப்பட்டவை ஆகும். பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இந்தத்
தாக்குதலுக்குத் திட்டங்கள் வகுத்தனர்.

இதன் காரணமாகக் காஷ்மீர் சமஸ்தானத்தின் மூன்றில் ஒரு பகுதி ஆஸாத்
காஷ்மீர் என்ற பெயரில் பாகிஸ்தான் பிடிக்குச் சென்றது. மீதமுள்ள இரண்டு
பகுதிகள் ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலமாக இந்தியாவுடன் இணைந்தன.

காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா? இந்தியாவுடன்
இணைய விரும்புகிறார்களா? அல்லது தனி நாடாக இருக்க விரும்புகிறார்களா?
என்பதை அறிய பொது வாக்கெடுப்பு நடத்த ஐக்கிய நாடுகளிடம் பாகிஸ்தான்
வற்புறுத்தியது.

இந்தக் கோரிக்கையை அன்றைய இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு
ஏற்றுக்கொண்டார். ஆனால், காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் ராணுவம் வெளியேற
வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பாகிஸ்தான் இதற்கு
ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, பொது வாக்கெடுப்பு என்ற முன்மொழிவை
இந்தியா ஏற்க மறுத்துவிட்டது.

காஷ்மீர் மன்னர் ஹரிசிங் மற்றும் காஷ்மீர் இஸ்லாமியத் தலைவர் ஷேக்
அப்துல்லாவின் ஒப்புதலின் பேரில், இந்தியாவுடன் காஷ்மீர் முறையாக
இணைந்துவிட்டது. இந்த இணைப்பின் மூலமாக மன்னராட்சி மறைந்து
மக்களாட்சி பிறந்தது. பெரும்பான்மையினராக வாழும் இஸ்லாமிய மக்களின்
விருப்பத்துக்கு ஏற்ப, ஷேக் அப்துல்லா ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

பிற மாநிலங்கள்போல் அல்லாது காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரங்களும் கூடுதல்
தகுதிகளும் வழங்கப்பட்டன. இதற்காக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில்
370-வது சட்டப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது.

மேற்படி காஷ்மீர் மாநிலம் உருவான வரலாற்றை உற்றுநோக்கும்போது, 70
ஆண்டுகள் கழிந்தபிறகும் காஷ்மீர் தனிநாடு கோரிக்கை தேவையா என்ற
வினா எழும்புகிறது. ஆனால், காஷ்மீர் பிரிவினை வேண்டும் என்று
கோருபவர்களிடம் நியாயம் இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்துவிடுவோம்.

அந்தக் காணொளியில், காஷ்மீர் பிரிவினைக்கு அவர்கள் கூறும் காரணங்களில்
முதன்மையானது என்னவெனில், “இந்தியா சுதந்திரம் அடைந்தபோது காஷ்மீர்
தனித்துதான் இருந்தது. எனவே, தனித்துப் பிரிந்துவிடுவது தவறில்லை”.

————————————————–
page-2

மேற்படி கேள்வியைக் கேட்பவர்கள், பின்வரும் கேள்விக்கு என்ன பதில்
அளிப்பார்கள்?

“இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, 565 சுதேசி அரசுகள் தனித்தே இருந்தன. 15
மாகாணங்கள் தனித்தே இருந்தன. இப்போது 580 நாடுகளாக இந்தியாவைப்
பிரித்துவிடலாமா?”

காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா எதுவும் செய்துவிடவில்லை
என்பதுதான் அவர்களின் இரண்டாவது குற்றச்சாட்டு.

மற்ற மாநிலங்களுக்கு இல்லாத அதிகாரமாகக் காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள
முதன்மையான சிறப்பு அதிகாரமே, பிற மாநிலத்தவர் அங்கு சொத்துகளை
வாங்கமுடியாது என்பதுதான். எனவே, பிற மாநிலத்தவரின் தொழிற்சாலைகள்,
வணிக நிறுவனங்கள் போட்டிக்குச் செல்லமுடியாத நிலையில், தங்கள் மாநில
மக்களுக்கான பொருளாதார மேம்படுத்தல் திட்டங்களைச் சுயசார்பாகவும்
சுதந்திரமாகவும் வகுக்க வேண்டியது அந்த மாநில ஆட்சியாளர்களின்
பொறுப்பாகத்தானே இருக்க முடியும்?

எனினும், மத்திய அரசிடம் தமது மாநில பொருளாதார வசதிக்காகக் கூடுதல்
நிதி கேட்பதும், கூடுதலாகத் திட்டங்களைக் கேட்பதும் காஷ்மீரின்
உரிமையேயாகும். இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுமே மத்திய அரசு
தங்களுக்கு உரிய நிதியை ஒதுக்குவதில்லை என்ற குற்றச்சாட்டை எழுப்பத்தான்
செய்கின்றன. மத்திய அரசு தேவையான நிதியை ஒதுக்க இயலாமைக்காக,
அனைத்து மாநிலங்களும் தனி நாடு கேட்க ஆரம்பிக்கலாமா என்ன?

காணொளியில் காணப்படும் மூன்றாவது குற்றச்சாட்டு இந்திய ராணுவத்தின்
அடக்கு முறை பற்றியது.

அப்பாவி காஷ்மீர் மக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துகிறது என்றாலோ,
பெண்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன என்றாலோ அவை
ஏற்புக்குரியவை அல்ல. இந்தச் செயல்கள் யாவும் ராணுவ அதிகாரிகளின்
ஆணைக்கிணங்கச் செயல்படுவதாக இருக்கிறதா அல்லது தனி மனிதத்
தவறுகளா என்பதை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். மனித நேய
மீறல்களை யார் செய்தாலும் அது குற்றமே ஆகும். குற்றவாளிகளை
அடையாளப்படுத்தி அவர்களுக்கு உரிய தண்டனைகளைப் பெற்றுத்தர
வேண்டியதைத் தவிர்க்கத் தேவையில்லை.

ஆனால், பொது மக்களுக்குக் கேடுகள் ஏற்படும் வகையில் வன்முறையில்
ஈடுபடும் சில தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மீதான
தாக்குதல்களை, அப்பாவிகள் மீதான தாக்குதல்களாகத் திசை திருப்புவதை
ஏற்றுக்கொள்ளமுடியாது.

பொது மக்கள் புழங்கும் பகுதிகளில் குண்டு வைப்பதை நியாயப்படுத்துகிற
எவரையும் நாம் அங்கீகரிக்க வேண்டிய அவசியமில்லை.

அந்தக் காணொளியில் முன்வைக்கப்படும் நான்காவது குற்றச்சாட்டு, காஷ்மீர்
மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தவே இல்லை என்பதுதான்.

ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் வெளியேறினால்தான் பொது
வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஐக்கிய நாடுகள் அவையிடம் இந்தியா
தெரிவித்துவிட்டது. ஆனால், இன்றுவரை பாகிஸ்தான் தான் ஆக்கிரமித்த
காஷ்மீரிலிருந்து வெளியேறவில்லை. மாறாக அந்தப் பகுதிகளைத் தமது நாட்டின்
ஆட்சிக்கு உட்பட்டதாக மாற்றிக்கொண்டுவிட்டது என்பதை, காணொளிக்
காட்சியைத் தயாரித்தவர்கள் மறைக்கிறார்களா? மறுக்கிறார்களா?

பொது வாக்கெடுப்புக்கு நேரு ஒப்புக்கொண்டபோது அம்பேத்கரும் ஆதரித்தார்.
ஆனால், அவர் எழுப்பிய வினா மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.
“ஒருவேளை காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுடன் இணைய விருப்பம் தெரிவித்தால்,
அங்கு இருக்கக்கூடிய இந்துக்கள், சீக்கியர்களின் எதிர்காலம் என்னவாகும்?”

அம்பேத்கரின் வினாவுக்கான விடையைத் தேடுவதற்கு, இந்தியா – பாகிஸ்தான்
பிரிவினையின்போது நிகழ்ந்த கொடுமைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரம் அடைந்துவிட்டன என்று இனிப்புகளைப்
பரிமாறி மகிழ்ச்சியைக் கொண்டாடிக்கொண்டிருந்த அதேவேளையில், 7
லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

நவகாளியிலும் ராவல்பிண்டியிலும் கொல்லப்பட்ட இந்துக்கள் மற்றும்
முஸ்லீம்களின் ரத்த ஆறு, வரலாற்றுப் புவியியலில் மறைக்கப்பட்டுவிட்டது.
பாகிஸ்தானில் வசித்துவந்த இந்துக்களையும் சீக்கியர்களையும் குறிவைத்து
முஸ்லீம்கள் தாக்குதல் நடத்தினர். இந்தியாவின் எல்லையோரத்தில் தங்கியிருந்த
முஸ்லீம்கள் மீது இந்துக்கள் தாக்குதல் நடத்தினர். இவர்களின் தாக்குதலின்போது
கொல்லப்பட்ட மனிதர்களைவிட, பாலியல் வல்லுறவு கொள்ளப்பட்ட பெண்களே
அதிகம்.

மாற்று மதப் பெண்களின் மார்பகங்களிலும் தொடைகளிலும் தங்களின் மத
அடையாளங்களாகச் சூலம், பிறைநிலா ஆகியவற்றை அச்சிடுவதை மதிப்புமிக்கச்
செயல்களாக மதவெறிக் குழுக்கள் செய்தன. மார்புகளை அறுத்தல், ஆடைகளைக்
களைத்து சாலைகளில் ஓடவிடுதல் போன்ற வன்முறைகளிலிருந்து தப்பித்துச்
செல்வதற்காக, ஆயிரக்கணக்கான பெண்கள் தற்கொலை செய்துகொண்டனர்.

ஆறுகளிலும் கிணறுகளிலும் குதித்து இறப்பது, தனது உறவினர்களால்
வெட்டப்படுவது, தீயிட்டுக்கொள்வது போன்ற கொடுமைகளையும் பெண்கள்
சந்தித்தனர்.

பாகிஸ்தானில் மேற்படி துன்பங்களிலிருந்து தப்பித்தவர்கள், பட்டியல் வகுப்பினரும்
பழங்குடியினருமே. காரணம், மலம் அள்ளுவதற்கும் குப்பை வாருவதற்கும் அவர்கள்
தேவைப்பட்டனர். இழிதொழில் செய்வதற்குத் தேவைப்படுவார்கள் என்பதற்காக
அவர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு மறுப்பு
தெரிவித்தபோது, லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்டோரை அம்பேத்கர் மீட்டுக்
கொண்டுவந்தார் என்பது தனி வரலாறு.

இங்கு நாம் குறிப்பிட வேண்டியது ஒன்றே ஒன்று மட்டும்தான். காஷ்மீர் மக்களில்
பெரும்பாலோர் தனி நாடு கோரி விருப்பம் தெரிவித்தாலோ அல்லது
பாகிஸ்தானுடன் சேர விருப்பம் தெரிவித்தாலோ, அங்கிருக்கக்கூடிய இந்துக்கள்,
சீக்கியர்களின் நிலை என்னவாகும்? அவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பேற்பது?

இந்தியாவுடனே இணைந்து இருக்க விரும்புகிறோம் என்று சொல்லக்கூடிய
காஷ்மீர் மக்களின் எதிர்காலம் என்னவாகும்? அவர்களைக் காஷ்மீரிலிருந்து
வெளியேற்றிவிட வேண்டுமா?

அல்லது அவர்களாகவே வெளியேறிவிட வேண்டுமா? காஷ்மீருக்குள் எங்களுக்குத்
தனி நாடு வேண்டும் என்று இந்துக்களும் சீக்கியர்களும் பௌத்தர்களும் குரல்
எழுப்பினால், காஷ்மீருக்குள் தனித் தனியாக நாடுகள் உருவாக்கப்படுமா? காஷ்மீரில்
வாழும் பெரும்பாலான இஸ்லாமியர்கள் தனிநாடு கோருகிறார்கள் என்பதே பொய்ப்
பிரசாரம் ஆகும்.

———————–
page-3

தனி நாடு கோரிக்கைகள் என்பது இன்றைய ஆயுதக் காலத்தில் பயனற்றதாகவும்
இழப்புகளாகவுமே முடிவுறுகின்றன.

தமிழீழம் கோரி நடத்தப்பட்ட மிகப்பெரிய போராட்டம் தற்போது தோல்வியில்
முடிந்திருக்கிறது. இந்தத் தோல்வி தாற்காலிகமானது என்று தமிழீழ ஆதரவாளர்கள்
சொல்லலாம். ஆனால், மீண்டும் ஓர் ஆயுதப் போராட்டம் அங்கு உருவாகுவதற்கு
வாய்ப்பு இல்லை. அப்படியே அங்கு தமிழீழம் உருவானாலும், அதற்கு
அடிப்படையாக ஓர் அறவழிப் போராட்டமே காரணமாக இருக்கமுடியும்.

வீரம் என்று சொல்லப்படுவதெல்லாம் மனிதநேயத்துக்கு எதிரான செயல்பாடுகளே
ஆகும். உலகில் வீரத்தால் உருவான நல்லவற்றோடு ஒப்பிட்டால் மரண
எண்ணிக்கைகளும் பெண்கள் மீதான தாக்குதல்களுமே முன்னிலை பெறும்.

விலங்கினத்திலிருந்து மனிதனைப் பிரித்தெடுத்தது அவனின் தாய்மொழி.
தாய்மொழி கொடுத்த பகுத்தறிவின் உச்சகட்டம்தான் அரசியல். அந்த அரசியலின்
உச்சகட்டம் தாய்நாடு. தாய்மொழியும் தாய்நாடும் மனிதனுக்கு அறிவையும்
குடியுரிமையையும் வழங்குகின்றன. அறிவும் குடியுரிமையும் ஒரு மனிதனின்
வாழ்வாதாரங்களைக் கட்டமைக்கின்றன.

இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்றெல்லாம்
உருவாக்கப்பட்டுள்ள 195 நாடுகள் யாவும் தாற்காலிக எல்லைக்கோடுகள்தான்.
இந்த எல்லைக்கோடுகளுக்காக நடத்தப்பட்ட போர்களும் உயிரிழப்புகளும்
மனிதநேயத்துக்கு எதிரான வருத்தத்துக்குரிய நிகழ்வுகளேயாகும்.
உயிரினத்தின் முதல் கடமை உயிர் வாழ்தலே. யாருக்காகவும் யாரும் யாராலும்
உயிரை விட்டுவிடக் கூடாது. பகை உணர்வுகள் அதிகரிக்கும்போது போர்
உணர்வுகள் அதிகரிக்கவே செய்யும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாலஸ்தீனம் என்பது எங்களுக்குச்
சொந்தமாக இருந்தது என்று சொல்லிக்கொண்டு, யூதர்கள் 1948-ல்
இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற பெயரில்
ஒரு நாட்டை ஏற்படுத்திக்கொண்டனர்.

யூதர்களுக்கு ஆதரவாக இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகள் குறிப்பாகக்
கிறிஸ்தவச் சார்புள்ள நாடுகள் செயல்பட்டன. இந்த இஸ்ரேல் உருவாக்கச்
சிக்கலில்தான் இன்றைக்கும் இஸ்லாமிய கிறிஸ்தவ மத மோதல்கள்
தொடர்கதையாகத் தொடர்கின்றன. இஸ்லாமிய தீவிரக் குழுக்கள் யாவும்
பாலஸ்தீனத்திலிருந்தே உருவாகின. இந்த இஸ்ரேல் – பாலஸ்தீனச்
சிக்கல் முடிவுக்கு வரும்வரை, உலக நாடுகளிடையே முஸ்லீம் – கிறிஸ்தவ
மத மோதல்கள் முற்றுப் பெறாது.

இந்த இஸ்ரேல் – பாலஸ்தீன சிக்கலோடு ஒப்பிடும்போது, காஷ்மீர் சிக்கல்
எளிதில் முடிவுக்குக் கொண்டுவரப்படக்கூடியதே.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போரே வந்துவிடக் கூடாது என்ற
நல்லெண்ணத்துடன் சிந்திப்பவர்கள் இரண்டு நாடுகளிலும் அணி திரள வேண்டும்.

இரண்டு நாடுகளும் நட்பு நாடுகளாகிவிட்டால், இரு நாடுகளுக்கான ராணுவச்
செலவுகள் 90 சதவீதம் குறைந்துவிடும். இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும்
மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் மேம்பாடு அடையும்.

போரில்லா உலகம் என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு
மனிதநேயப் பகுத்தறிவுப் பாடத் திட்டங்களைப் பள்ளி மாணவர்களுக்குக்
கற்றுத்தர இரண்டு நாடுகளும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

மேற்படி நட்பை நாம் நாடிப்போவதற்குத் தடையாக இருக்கக்கூடிய
அனைத்துச் சிக்கல்களையும் மறந்துவிடுவோம். விட்டுக் கொடுப்போம்.
தற்போது யார் யாரிடம் எவை எவை இருக்கிறதோ அவையாயும் அங்கங்கே
அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.

மதிப்பியலுக்கான சண்டைகளை ஒதுக்கிவைத்துவிட்டால், இரு நாட்டு மக்களும்
அண்ணன் தம்பிகளாகவே வாழ்வார்கள். அந்த அன்புக்காலத்தை நெருங்குவதற்குப்
பிரிவினை பேச்சுகளைக் கைவிடுவதுதான் சரியான
பாதையாக இருக்கும்.

இந்தக் காணொளியை உருவாக்கிப் பரப்பி வருபவர்கள் ஒன்றைத்
தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியச் சுதந்திரம் என்பது இந்துக்களால் மட்டும்
உருவானதல்ல. இஸ்லாமியர்களின் பங்களிப்பு இல்லாமல் இன்றைய இந்தியா
உருவாகவில்லை. பிளாசிப் போர் நாயகர் சிராஜ் உத் தௌலாவின் வீரம் தொடங்கி,
ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் அறிவு வரை, இந்தியாவின் தன்மானத்துக்கும்
வளர்ச்சிக்கும் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர்களைத்
தெரிந்துவைத்திருக்கிற இஸ்லாமிய இளைஞர்கள் யாவரும், மேற்படி
காணொளிக் காட்சிப் பிரசாரங்களுக்குச் செவிசாய்க்கமாட்டார்கள்.

இந்தியா எங்களின் தாய்நாடு. எங்களின் தேசப்பற்றை யாரும் சந்தேகப்படத்
தேவையில்லை என்று வாழ்ந்துகொண்டிருக்கிற இஸ்லாமிய மக்களிடையே
மூளைச் சலவைக்காகப் பரப்பப்படும் மேற்படி காணொளிக் காட்சிகளின் மீது
கவனம் செலுத்த வேண்டியது மத்திய – மாநில அரசுகளின் கடமையாகும்.

தத்தமது மதக் கருத்துகளை மற்றவர்கள் மீது திணிப்பதற்கான முயற்சிகளை
யார் மேற்கொண்டாலும் அந்த அயோக்கியத்தனத்தைத் தடுப்பதற்குரிய
நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
போரில்லா உலகம் என்பதற்கான திறவுகோலாக எல்லைக் கோடுகளை
அழிக்கும் நாடுகள் மலரும் வரை ‘ஒற்றுமை இந்தியா’ என்பதே
நமது இலக்காக இருக்கட்டும்.

சி.சரவணன்
செல்பேசி – 9976252800
மின்னஞ்சல் – senthamizhsaravanan@gmail.com

பின் குறிப்பு – இத்துடன் இன்னும் சொல்லப்பட வேண்டிய சில
செய்திகளும் இருக்கின்றன… இப்போதைக்கு இது இப்படியே
இருக்கட்டும்.. தேவைப்படும்போது, மீதியையும் எழுதலாம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to காஷ்மீர் – நேற்று, இன்று, நாளை….?

 1. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! // இந்திய ராணுவத்தின் துணிச்சலான முயற்சி…..// என்கிற இடுகையின் பின்னூட்டத்தில் தினமணி பத்திரிக்கையில் வந்திருந்த காஷ்மீர் பற்றிய பதிவை குறிப்பிட்டு இருந்தேன் — அருமையான விவரங்கள் — அனைவரும் கண்டிப்பாக தெரிந்துக் கொள்ள வேண்டிய — காஷ்மீர் வரலாறு .. தாங்கள் அதை நம் தளத்தில் பதிவிட்டதற்கு — நன்றி … !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   உங்கள் பின்னூட்டத்தையும் பார்த்தேன்…
   சொல்ல மறந்து விட்டேன்.
   ஒருவேளை நான் கூட
   தினமணி பதிவை பார்க்கத் தவறி இருக்ககூடும்.
   சரியான நேரத்தில், இடத்தில் – தினமணி பதிவை
   நினைவூட்டியதற்கு நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. srinivasanmurugesan சொல்கிறார்:

  மற்ற மாநிலங்களைப்போல் காஷ்மீரிலும் பொது சட்டங்கள் அமுல் படுத்தப்பட்டு சிறப்பு அந்தஸ்துகள் நீக்கப்பட்டால் மற்ற மாநில மக்கள் அங்கு குடியேறி தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டால் தற்போதுள்ள நிலமை நிச்சயம் மாறும்.

 3. ravi சொல்கிறார்:

  சிங் என்று பெயர் வைத்தால் சீக்கியரா ? ஹரி சிங் டோக்ரா ராஜபுத்திர மன்னர்.. ஹிந்து மதத்தவர் ..
  இந்த காணொளியை தயாரித்தவர்களை கேளுங்கள் .. ராஜ்நாத் சிங் சீக்கியரா என்று ??
  புதுக்கோட்டை மாவட்டம், திருவாங்கூர் தனி நாடாக இருந்தது .. இதையும் தனி நாடாக பிரித்தால் நலம்.. எப்படி ??

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.