இருக்கும் இடத்தை விட்டு – எங்கெங்கோ தேடலாமா ….. ? (பகுதி-1)

.

.

எதற்கெடுத்தாலும், அரசாங்கத்தையே சார்ந்திராமல்,
உயிர்ப்புடனும், துடிப்புடனும் இருக்கும் கிராம மக்கள்
ஒன்று சேர்ந்தால், எதை வேண்டுமானாலும் சாதிக்க
முடியும் –

மஹாராஷ்டிரா மாநிலத்தில், அஹ்மத் நகர் மாவட்டத்தில்,
ரலேகான் சித்தி கிராமத்தில் அன்னா ஹஜாரே அவர்கள்
சாதித்தவற்றை எல்லாம் பார்த்தபோது –

இது சத்தியம் என்பது தெளிவாகப் புரிந்தது.
கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக – தமிழகத்திலும்
இத்தகைய கிராமங்கள் உருவாகக்கூடாதா என்கிற ஏக்கம்
நெஞ்சில் இருந்தது.

ஆனால், ஏற்கெனவே இந்த உயிர்ப்பு இங்கு
இருக்கத்தான் செய்கிறது…
அதற்கு போதிய விளம்பரம் கொடுக்காமல்,
அதனை பெரிய அளவில் ஊக்குவிக்காமல் –

மற்ற இடங்களுக்கும் கொண்டு செல்லாமல் இருக்கும்
தவற்றினை நாம் தான் செய்துகொண்டிருக்கிறோம்
என்று இப்போது தோன்றுகிறது.

நம் ஊர்களைப் பற்றி, நாமே அறியாமையில் இருந்து
விட்டோமென்று இப்போது தோன்றுகிறது.
எவ்வளவோ தேடித்தேடி படித்தாலும் கூட,

என் பார்வையிலும் இப்போது தான்
இத்தகைய சில விஷயங்கள் படுகின்றன.

இத்தகைய செய்திகளை வெளியுலகிற்கு அடையாளம்
காட்டிய தமிழ் இந்து நாளிதழிற்கும், செய்தி கட்டுரை
எழுதிய திரு.டி.எல்.சஞ்சீவிகுமார் அவர்களுக்கும்
நான் / நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
நான் அடுத்து எழுதவிருக்கும் சில இடுகைகளுக்கு
அடிப்படையாக அமைந்தது இவரது கட்டுரைகள் தான்.

முதலில் –

ஒரு வித்தியாசமான கிராமத்தை தெரிந்து கொள்வோமே –

ஓடந்துறை கிராமப் பஞ்சாயத்து –
கோவை மாவட்டம், கோத்தகிரி மலையடிவாரத்தில்
பவானி ஆற்றை ஒட்டி அமைந்திருக்கிறது.வாழைத்
தோட்டங்களும் பாக்குத் தோப்புகளும் நிறைந்த பசுமையான
பூமி. பெரும்பாலானோர் நகரத்தின் வாடையே அறியாத
மலைவாழ் மக்கள்.

கடந்த ஐந்தாண்டுகளில் இவர்களது
கிராம பஞ்சாயத்து செலுத்தியிருக்கும் மின் கட்டணம்
சுமார் 1.20 கோடி ரூபாய் என்கிறார்கள்…!

இதில் அதிசயமான விஷயம் இந்த பஞ்சாயத்தின் சார்பாக
ஆண்டுக்கு 6.75 லட்சம் யூனிட் வீதம் கடந்த 10 ஆண்டுகளில்
சுமார் 67.50 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி
செய்திருக்கிறார்கள்.

அதில் ஆண்டுக்கு 2.15 லட்சம் யூனிட் வீதம் கடந்த 10
ஆண்டுகளில் 21.5 லட்சம் யூனிட் மின்சாரத்தை தமிழ்நாடு
மின்வாரியத்துக்கு விற்பனை செய்திருக்கிறார்கள்
அதன் மூலம் சுமார் ரூ. 65 லட்சம் வருவாய்
பெற்றிருக்கிறார்கள். இப்போதும் இது தொடர்கிறது.

இதில் விசேஷம் என்னவென்றால், அந்த ஊரில்
மின் உற்பத்தி நிலையம் என்று எதுவும் இல்லை….!
பின் எப்படி…?

1996 தொடங்கி 2006 வரைக்கும் ஓடந்துறை பஞ்சாயத்து
பொதுப் பஞ்சாயத்தாக இருந்திருக்கிறது. அந்த 10 வருடங்களும்
அந்த பஞ்சாயத்தின் தலைவராக இருந்தவர் சுமார்
60 வயதுள்ள திரு.சண்முகம் அவர்கள்.

odamthurai-panchayat

2006-ல் அந்த பஞ்சாயத்தை பெண்களுக்காக ஒதுக்கியதும்,
திரு சண்முகம் ஒதுங்கிக் கொள்ள,
அவரது மனைவியான திருமதி லிங்கம்மாளை தலைவியாக
தேர்ந்தெடுத்திருக்கின்றனர் கிராம மக்கள். கடந்த அடுத்த
பத்து ஆண்டுகளாக பஞ்சாயத்து தலைவராக தொடர்பவர்
திருமதி லிங்கம்மாள் சண்முகம்…!!!

ஓடந்துறை பஞ்சாயத்து மின் உற்பத்தியை துவக்கியது
எங்கே, எப்படி என்று விவரிக்கிறார் திரு.சண்முகம்
அவர்கள்…

” 96-ம் வருஷம் நான் பொறுப்புக்கு வந்தப்ப இந்த ஊர்
வெறும் மலைக்காடுங்க . வாசனைக்குக்கூட தார் சாலையைப்
பார்க்க முடியாது. மக்கள் தொகை
ஆயிரத்துச் சொச்சம்தான்.

பஞ்சாயத்து வரி வருவாயும் பெருசா இல்லைங்க.
ஆனா, மின் கட்டணம் மூவாயிரம் வந்துச்சுங்க.
கட்ட முடியாம அல்லாடினோம். ஊருக்குள்ள வந்து
பியூஸை பிடுங்கிட்டுப் போயிடுவாங்க. ஊரே
இருண்டுக் கிடக்கும். மோட்டார் ஓடாம குடித்தண்ணிக்கு
அல்லாடணும். உருட்டிப் புரட்டிக் கட்டுவோமுங்க.
ஒத்தை விளக்குக்கு மின்சாரம் கொடுக்க முடியலையேன்னு
கவலை அரிச்சதுங்க.

நம்ம பக்கம் சோலார் தொழில்நுட்பம் வந்தப் புதுசுங்க அது.
கல்லார்புதூர், வினோபாஜி நகர் ஆகிய ரெண்டு கிராமத்துல
சோலார் தெருவிளக்கு அமைச்சோம். கணிசமா செலவு
குறைஞ்சது.

மூணு வருஷத்துல குடிநீர் மோட்டாருக்கு மட்டும்
15,000 ரூபா மின் கட்டணம் வந்துச்சு. திணறிட்டோம்.
உடனே அதைக் குறைக்க மரக்கட்டையை எரிச்சி
(Biomass Gasifier) மின்சாரம் தயாரிச்சோம். அன்னைக்கு
யூனிட் 3 ரூபாய் கட்டணம். நாங்களே மின்சாரம்
தயாரிச்சப்ப யூனிட் 1.75 ரூபாய்க்கு கிடைச்சதுங்க.

சுமார் 50 % மின் கட்டணம் மிச்சம் பண்ணோம்.
முதல்ல அஞ்சு வருஷத்தை இப்படியே ஓட்டிட்டோம்.
அதுக்குள்ள நாலைஞ்சு மடங்கு மக்கள் தொகை பெருகிடுச்சு.

வீடுகள் அதிகமாகிடுச்சு. குடிநீர் தொட்டிகள், குடிநீர் குழாய்
இணைப்புகள், தெருவிளக்குகள் நிறைய கொண்டு
வந்துட்டோம்.

மின்கட்டணமும் கிடுகிடுன்னு 2 லட்சமாக எகிறிடுச்சுங்க.
வரி வருவாயைப் பெருக்கியிருந்தாலும் இந்த மின்
கட்டணத்துக்கு ஏதாவது ஒரு வழி பண்ணனும்னு
மனசுக்குள்ளே திட்டம் ஓடிக்கிட்டேயிருந்ததுங்க. அப்படி
தோணுனதுதானுங்க காத்தாலை மின் உற்பத்தித் திட்டம்.

அதைப் பத்தி விசாரிச்சப்ப நம்ம ஊருக்கு தேவையான
மின்சாரத்தைவிட கூடுதலாக மின்சாரம் உற்பத்தி
செய்யலாமுன்னு சொன்னாங்க.

2004-ல் கிராம சபையைக் கூட்டினோம். வருஷத்துக்கு
350 கிலோ வாட் திறன் கொண்ட காத்தாலையை நிறுவத்
தீர்மானம் போட்டோம். அதன் மதிப்பீடு அன்னைக்கு
ரூ. 1 கோடியே 55 லட்சம். வரி வருவாயை நிர்வாகத்தை
சிறப்பா செஞ்சிருந்ததால் எங்க பஞ்சாயத்துல சேமிக்கப்பட்ட
உபரி நிதி கையிருப்பு 40 லட்சம் ரூபாய் இருந்துச்சு.

இன்னமும் 1.15 கோடி ரூபாய் வேணும்….!
அரசு அதிகாரிகள்கிட்டே கேட்டோம். வழியே
இல்லைன்னுட்டாங்க.

மரபு சாரா எரிசக்தி திட்டத்தில் கோடிக்கணக்கான மானியம்
கொடுக்குற மத்திய அரசும் மாநில அரசும் அன்னைக்கு
எங்களை கண்டுக்கவே இல்லை. பேங்குக்கு போனா
சூரிட்டி கேட்குறாங்க. எங்ககிட்ட என்ன இருக்கு சூரிட்டி?

பொறம்போக்கு நிலம் கூட கிடையாது. எல்லாம் வனத்துறை
நிலம். ஒரு வைராக்கியம் பிறந்துச்சு.

ஊர்க்காரங்க கொஞ்சம் பேரை கூட்டிக்கிட்டு கோயமுத்தூரு
ஆவாரம்பாளையத்துல இருக்குற சென்ட்ரல் பேங்க் ஆஃப்
இந்தியாவுக்கு போனேன். பேங்கு சேர்மனை பார்க்கச்
சொன்னாங்க. ஒரு பெண்மணி அவங்க. அவங்களைப்
பார்த்தோம்.

“படிக்காத கிராமத்து ஜனங்கம்மா நாங்க. ஆனா,
நாணயமானவங்க. கிராமத்தை நல்லா நிர்வாகம்
பண்ணியிருக்கோம். கடனை திருப்பி
அடைச்சிடுவோம்மா”ன்னு சொன்னோம்.
எங்களை எல்லாம் நிதானமாக பார்த்தவங்க,
ஒரு நிமிஷம் அமைதியா இருந்தாங்க. அப்புறம்,
“நீங்க கேட்குறது மிகப் பெரிய தொகை. சூயூரிட்டி
இல்லாம கொடுக்க முடியாது.

ஆனால், நான் உங்களை, உங்கள் கிராமத்து மக்களை
நம்புறேன். வங்கி விதிகளை தளர்த்தி என் சக்திக்கு மீறி
ரிஸ்க் எடுக்குறேன். வாக்குறுதியை காப்பாத்துங்க’னு
சொல்லி ஒரே கையெழுத்துல ஒண்ணேகால் கோடி
ரூபாயைக் கொடுத்தாங்க.
எங்களுக்கு சிலிர்த்துப் போச்சுங்க.

அடுத்து இன்னொரு பிரச்சினை. எங்க ஊருல
காத்தாலையைப் போடுற அளவுக்கு காத்து கிடையாதுங்க.

உடுமலைப்பேட்டை மைவாடி பஞ்சாயத்துத் தலைவர்கிட்ட
பேசினேன். அவரும் கிராம சபை தீர்மானம் போட்டு சம்மதம்
கொடுத்தார்.

அங்கே வெற்றிகரமாக காத்தாடியை நிறுவிப்போட்டோமுங்க.
உடனே மின்சாரம் உற்பத்தி தொடங்கினோம். வாரந்தோறும்
மக்களை அழைச்சிட்டுப்போய் பொறியாளர்கள் உதவியோடு
காத்தாலையை சிறப்பா பராமரிச்சோம். நல்ல அறுவடைங்க.

முதல் வருஷமே 6.75 லட்சம் யூனிட் மின்சாரம் கெடைச்சது.
எங்க தேவை 4.5 லட்சம் யூனிட்தான். மிச்சம் 2.15 லட்சம்
யூனிட்டை மின்வாரியத்துக்கு வித்தோம். அந்தம்மாவுக்கு
கொடுத்த வாக்கு தவறாம மாசம் ஒன்றரை லட்சம் ரூபாய்
லோன் கட்டினோம். இதோ இந்த பத்து வருஷத்துல
1.15 கோடி ரூபாய் அசல், 50 லட்சம் ரூபாய் வட்டி
1.65 கோடி ரூபாயை கட்டி முடிச்சிட்டோம். சொச்சம் ரூபாய்
நிர்வாக நடைமுறை பாக்கி இருக்கு. அவ்வளவுதான்.

இதோ இப்ப காத்தாடி முழுமையாக எங்க கிராமப்
பஞ்சாயத்தின் சொத்தா மாறிடுச்சுங்க. இனிமே கெடைக்குற
வருவாய் அத்தனையும் எங்க கிராமத்துக்குதான். இப்பவே
பல்வேறு திட்டங்கள் மூலம் எங்க கிராமத்தை முன்னேற்றி
இருக்கேன்.

இப்ப காத்தாடியில இருந்து முழுசா வருமானம்
கொட்டுதில்லைங்க, இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு
வந்து பாருங்க, எங்க கிராமத்தை குட்டி சிங்கப்பூரா
மாத்திக்காட்டுறேனுங்க”. உற்சாகம் பொங்கப் பேசுகிறார்
சண்முகம்.

இப்போதும் உடுமலைப்பேட்டையில் கம்பீரமாக
சுழன்றுக்கொண்டிருக்கிறது ஓடந்துறை
மக்களின் மின் உற்பத்திக் காற்றாடி.

கிராமப் பஞ்சாயத்து சார்பில் இந்தியாவில்
ஓடிக்கொண்டிருக்கும் ஒரே காற்றாடி மின் ஆலையும்
அதுதான். காற்றாடி மட்டுமா ?

ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசுகள் உட்பட
மொத்தம் 43 நாடுகளின் பிரதிநிதிகளை தன்னை நோக்கி
ஈர்த்திருக்கிறது ஓடந்துறை கிராமம்….

அது எப்படி …?

( தொடர்கிறது – பகுதி-2-ல் )

!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to இருக்கும் இடத்தை விட்டு – எங்கெங்கோ தேடலாமா ….. ? (பகுதி-1)

 1. BalakrishnanK சொல்கிறார்:

  I feel ashamed about me after reading this article. These people without education has done great things to the society. I have not contributed anything to society. What is the use of degrees, technical knowledge etc.

  • ssk சொல்கிறார்:

   a Man here

   • 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    பாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.கே – நாம் வருத்தப்படவேண்டிய அவசியமில்லை. நிறைய படிக்காத இந்தப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்குத்(ஒருவர் தன் கிராமத்தில் காற்றாலை வைக்க இடம் கொடுத்தார். கர்நாடகா, கேரளம் போல் ‘நடந்துகொள்ளவில்லை) தெரிந்தது, ஒரு அரசியல்வியாதிக்கும் (எழுத்துப்பிழை) தெரியவில்லையே. அவர்களெல்லோரும் வெட்கித் தலைகுனியவேண்டும்.

    என்னைக் கேட்டால், எம்.பி நிதி, எம்.எல்.ஏ நிதி ஆகியவற்றை, அரசாங்கமே, எம்.எல்.ஏ சொல்லும் பஞ்சாயத்துக்கு மொத்தமாக அளித்து இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்களுக்கு (குளம் தூர் வாருதல், ஏரி பராமரிப்பு போன்றவை) உபயோகப்படுத்தச் சொல்லவேண்டும். இப்போ, தேவையில்லாமல், வெட்டி தகர ஷீட்களில் பஸ் ஸ்டாண்ட் கூரை என்று வீணாக அமைத்துக் கணக்குக் காண்பிப்பதில்தான் செலவழிகிறது.

 2. srinivasanmurugesan சொல்கிறார்:

  சபாஷ்…

 3. sakthivel சொல்கிறார்:

  Congrats to village peoples and bank officials who have given good support to them

 4. selvarajan சொல்கிறார்:

  // தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் ஓடந்துறை ஊராட்சியில் 101 பசுமை வீடுகள் // http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2014/mar/17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-859820.html —- அரசின் நலத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு ” மாநில அளவில் மாதிரி ஊராட்சியாக ” ஓடந்துறை விளங்கி வருகிறது — அதுமட்டுமின்றி // சுகாதாரத்தில் ஓடந்துறை முதலிடம் கிராமசபை கூட்டத்தில் அறிவிப்பு // http://www.dinamalar.com/news_detail.asp?id=1355615 — என்றும் செயதிகள் வந்த வண்ணம் உள்ளன — ” ஒன்று பட்டால் உண்டு வாழ்வே ” என்பதற்கிணங்க கிராம சபையின் மூலம் மக்களின் சக்தி ஒன்று திரட்டப்பட்டு — பல நல்ல திட்டங்களை ” நமக்கு நாமே ” – [ இது அந்த டுபாக்கூர் நமக்கு நாமே இல்லை } என்று வரையறுத்து சிறப்பாக செயல் படுத்தும் இம்மக்களுக்கு ஒரு — பாராட்டுக்கள் ….

  அடுத்து ” காவிரி உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவினரின் ” — உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை எப்படி …. ? தமிழகத்திற்கு …. ?

 5. Sridhar சொல்கிறார்:

  KM sir,

  I am copying your post and sending to my friends, hope you will appreciate sir. Thanks

  Sridhar

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஸ்ரீதர்,

   மிக்க நன்றி.
   அவசியம் செய்யுங்கள்.
   இந்த செய்திகள் எல்லாம் முடிந்த அளவு
   அதிக மக்களை சென்றடைய வேண்டும் என்பது
   தானே நமது நோக்கம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. s. haja najeemudeen சொல்கிறார்:

  வணக்கம். ஓடந்துறை கிராமப் பஞ்சாயத்து தலைவர் –திருமதி லிங்கம்மாள் சண்முகம் அவர்களது அலைபேசி எண் கிடைக்குமா… தினமணி யின் மகளிர்மணி பகுதிக்காக பேட்டி எடுக்க வேண்டும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திரு.s. haja najeemudeen,

   மன்னிக்கவும். என்னிடம் அந்த தகவல் இல்லை.
   நீங்கள் ஓடந்துறை கிராம பஞ்சாயத்தின் தரைவழி தொலை பேசி
   எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டால் – கிடைக்கலாம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.