ஓடந்துறை – ( பகுதி-2 ) இருக்கும் இடத்தை விட்டு ……

m-p

இவர் தான் திருமதி லிங்கம்மாள் சண்முகம் –
ஓடந்துறை கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர்…

green_houses11_lingammal

1996 முதல் 2006 வரை முதல் பத்து வருடங்கள் இவரது
கணவர் சண்முகமும், அடுத்த பத்து வருடங்கள்
2006 முதல் 2016 வரை – இவருமாக இந்த கிராமத்தில்
செய்திருக்கும் புதுமைகள், சாதனைகள் –
பலரையும் இந்த கிராமத்திற்கு வரவழைத்திருக்கின்றன….

ஒரு கிராமப் பஞ்சாயத்து தனது வரிகளை 100 %
வசூலித்தால் தமிழக அரசு அதற்கு இணையாக மூன்று
மடங்கு ஊக்கத் தொகை வழங்குகிறது.

இந்த சலுகைகள் குறித்து, ஊர் மக்களிடம் பேசி இருக்கிறார்
லிங்கம்மாள். அரசுக்கு முழுமையாக வரி செலுத்த வேண்டிய
அவசியத்தை விளக்கி இருக்கிறார்கள்.

சிறப்பு முகாம்கள் நடத்தி வீட்டு வரி, கடை வரி,
குடிநீர் வரி, தொழில் வரி, வரைபட அங்கீகாரக் கட்டணம்
என்று 100 % வரியை வசூலித்தார். ரூ.20 ஆயிரமாக இருந்த
வரி வருவாய் ரூ.1.75 லட்சமாக உயர்ந்தது. அதற்கு ஈடாக
மும்மடங்கு ஊக்கத்தொகையாக தமிழக அரசு ரூ.5.25 லட்சம்
கொடுத்திருக்கிறது.

மறுஆண்டு 3.5 லட்சம் வரி வசூலித்தார். அதே போல்,
தமிழக அரசிடமிருந்து ஈடாக 10.5 லட்சம் ஊக்கத் தொகை
பெற்றார். சரி, இந்தத் தொகையை எல்லாம் என்ன
செய்கிறார்கள்?

“எங்க கிராமத்துல யாரும் வெளியே வட்டிக்கு கடன்
வாங்குறதில்லைங்க. கிராமத்துல இருக்குற ஒவ்வொரு
வாக்காளருக்கும் கிராமப் பஞ்சாயத்தே கடன் வழங்குது.
ஒரு ரூபா வட்டிங்க. கடன் பெறுவதற்கு ரெண்டு தகுதி
வேணுமுங்க. தகுந்த காரணம் இருக்கோணும்.
பழைய பாக்கி இருக்கக் கூடாது.

மருத்துவச் செலவு, பிரசவ செலவு, கல்விக் கட்டணம்,
சிறு கடை வைக்க கடன் தர்றோமுங்க. கல்யாணம்,
காது குத்து, நல்லது, கெட்டதுகளுக்கும் கடன் உண்டுங்க.

ஆயிரம் ரூபாய் தொடங்கி 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும்
கொடுத்திருக்கோம்” என்கிறார்.

கொடுக்கும் தொகைக்கு எழுதி வாங்குவது கிடையாது.
சரியான காரணமாக இருந்தால் உடனே பணம் தருகிறார்கள்.
பதிவேட்டில் தவணைத் தொகை வரவு வைக்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக நடந்துவரும் இந்தத் திட்டத்தில்
திரும்ப வராதகடன் என்கிற பேச்சுக்கே இதுவரை
இடம் இல்லை.

இங்கிருக்கும் பழங்குடியினர் காலம் காலமாக தனியார்
தோட்டங்களில் கொத்தடிமைகள் போல
இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கென நிரந்தர
வசிப்பிடம் கிடையாது. அவர்களுக்கு தனியார் தோட்ட
முதலாளிகளிடம் போராடி நிலத்தைப் பெற்று வீடுகள்
கட்டிக்கொடுத்திருக்கிறார் லிங்கம்மாள்.

தனியார் தோட்ட நிறுவனங்களிடம் குறிப்பிட்ட அளவுக்கு
அதிகமாக தரிசு நிலம் இருந்தால் அதனை அந்த கிராமப்
பஞ்சாயத்து கையகப்படுத்திக்கொள்ளலாம் என்பது சட்டம்.

இதனை அறிந்த லிங்கம்மாள் ஆறு ஏக்கர் நிலத்தை
கையகப் படுத்தினார். முதலாளிகள் உயர் நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தனர். அவற்றையும் எதிர்கொண்டு
வெற்றி பெற்றார் லிங்கம்மாள். அங்கு பழங்குடி
இனத்தவருக்கு 250 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.

green_houses-101

இவை தவிர வினோபாஜி நகரில், தமிழக அரசின்
சார்பில் 101 பசுமை வீடுகள் சோலார் மின்
தொழில்நுட்பத்துடன் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரே இடத்தில் 101 பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்
பட்டிருக்கும் தமிழகத்தின் ஒரே பஞ்சாயத்து ஓடந்துறை
மட்டுமே. இதிலும் ஒரு சிறப்பு உண்டு. தமிழகம்
முழுவதுமே பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு
வருகின்றன. ஆனால், அதில் பயன்பெற அடிப்படை
தகுதியாக சொந்த நிலம் வைத்திருக்க வேண்டும்.
இங்கு நிலம் இல்லாதவர்களுக்கு நிலத்துடன் வீட்டை
சொந்தமாக்கிக் கொடுத்திருக்கிறார் லிங்கம்மாள்.

இங்கே தமிழக அரசுக்கு சொந்தமான பூமிதான நிலம்
3.22 ஏக்கர் இருந்திருக்கிறது. வருவாய் துறையிடம்
பேசியவர், கிராமசபை தீர்மானம் மூலம் கிராமப்
பஞ்சாயத்துக்கு அந்த நிலத்தை மாற்றியவர், அங்கு
வீடுகளை கட்டியிருக்கிறார். “கிராமத்துல இருக்குற
மொத்தப் பேருக்குமே சொந்த வீடு இருக்கு.
அதுல பாதி வீடுகள் சர்க்கார் வீடுங்க. வாடகை
வீடுங்கிற கலாச்சாரமே இங்கே கெடையாதுங்க”
என்கிறார் லிங்கம்மாள்.

இத்தோடு நிற்கவில்லை சாதனைகள் …
இந்த கிராமத்தில் 100% மாணவர்களும் கல்வி
பெறுகிறார்கள். இடை நின்ற மாணவர் ஒருவர் கூட
கிடையாது.

மின்சாரத்தை மிச்சப்படுத்தும் சோலார் தெருவிளக்குகள்,
எல்.இ.டி. விளக்குகள் ஜொலிக்கின்றன. ஒவ்வொரு
வீட்டுக்கும் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் கிடைக்கிறது.
தெருக்கள் தூய்மையாக பளிச்சிடுகின்றன . இதற்காக
மத்திய, மாநில மற்றும் உலக நாடுகள் அளித்திருக்கும்
விருதுகள் கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தை
அலங்கரிக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு அனைத்து
கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களையும் திரட்டி இவர்கள்
கிராமத்துக்கு அனுப்பியது. அனைவருக்கும் உள்ளாட்சி
நிர்வாகம் குறித்து லிங்கம்மாளும் முன்னாள் பஞ்சாயத்துத்
தலைவரும் அவரது கணவருமான சண்முகமும் பாடம்
எடுத்திருக்கிறார்கள்.

green_houses-world-bank-director-inspection

வாஷிங்டனிலிருந்து உலக வங்கி இயக்குநர்
தலைமையிலான குழு ஒன்று ஓடந்துறையை ஆய்வு
செய்திருக்கிறது. ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய
வளர்ந்த நாடுகளின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கூட
இங்கே நேரில் வந்து பல விஷயங்களை பார்த்துச்
சென்றிருக்கிறார்கள்.

மின்சார உற்பத்தி மற்றும் தொகுப்பு வீடுகளை பார்வையிட்ட
ஆப்பிரிக்க நாடுகளின் அமைச்சர்கள் தங்கள் நாட்டில்
இதுபோன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

சிக்கிம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின்
அரசு செயலர்கள் கூட ஓடந்துறையை வந்து
பார்வையிட்டுச் சென்றிருக்கிறார்கள். சென்னை அண்ணா
மேலாண்மையகத்தில் பேரூராட்சி தலைவர்கள் மாநாட்டில்
உரையாற்றியிருக்கிறார் கிராமப் பஞ்சாயத்து தலைவர்
லிங்கம்மாள்.

தமிழ்நாட்டின் ஒரு பெருமையான சின்னமாக
விளங்குகிறது ஓடந்துறை கிராம பஞ்சாயத்து.

————————————————

ஆனால் –

12,620 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ள தமிழ்நாட்டிற்கு
ஒரு ஓடந்துறை போதுமா….?

இன்னும் அதிக அளவில் இத்தகைய கிராம பஞ்சாயத்துகள்
தமிழ்நாட்டில் உருவாகாததற்கு என்ன காரணம்…?

அந்த குறையை போக்க நாம் என்ன செய்ய வேண்டும்…?

மூன்று வயது குழந்தையை
காமக்கொடூரன் கற்பழித்தது,
கல்லூரி மாணவன் மோட்டார் சைக்கிளில்
வந்து பெண்ணிடம் செயின் பறித்தது,
கள்ளக்காதலன் உதவியோடு
மனைவி – கணவனை கொன்றது,
சந்தேகத்தால் – கணவன், மனைவியை
கழுத்தை நெறித்து கொன்றது,
பள்ளியில் படிக்கும்
சிறுவர்கள் “தண்ணி பார்ட்டி” நடத்தியது –

போன்ற எல்லா ” முக்கிய ” நிகழ்வுகளையும்
விவரமாகத் தொகுத்து, விலாவாரியாக படம் பிடித்து
காட்டும் – நமது மீடியாக்கள் –

தொலைகாட்சி சேனல்கள் –
” தம்மாத்தூண்டு ” அக்கரையாவது காட்டி,
தங்களது “பிஸி”யான நடவடிக்கைகளுக்கிடையே –

ஓடந்துறை பஞ்சாயத்து வளர்ந்தது எப்படி போன்ற
விஷயங்களையும் படம் பிடித்து காட்டினார்கள் என்றால் –
இது போன்ற செய்திகள் பரவலாக மக்களிடம் போய்ச்சேரும்.
நமது மக்களிடையே – இப்படிப்பட்ட கிராமங்கள் கூட
தமிழ்நாட்டில் இருக்கின்றன என்கிற செய்தி முதலில்
போய்ச்சேர வேண்டும்.

அடுத்து, கிராம பஞ்சாயத்துக்கள் அரசியல்வாதிகளின்
பிடியிலிருந்து முற்றிலுமாக விடுவிக்கப்பட வேண்டும்.
கிராம பஞ்சாயத்தில் நிச்சயமாக அரசியல் தலையீடு
இருக்காது என்கிற நிலை உறுதி செய்யப்பட வேண்டும்.

இவை நிகழ்ந்தால் –
இன்னும் ஏகப்பட்ட ஓடந்துறைகளை தமிழ்நாட்டில்
இன்னும் சில வருடங்களில் நிச்சயம் பார்க்கலாம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ஓடந்துறை – ( பகுதி-2 ) இருக்கும் இடத்தை விட்டு ……

 1. sakthivel சொல்கிறார்:

  Yes, Nowadays media is giving importance to cinema only. It seems that everything is possible provided non-corrupted people is in administration.

 2. தமிழன் சொல்கிறார்:

  காமை சார்,

  நீங்களும் 2 வாரங்களுக்கு ஒரு முறை, நேர்மறைச் செய்திகளுக்கு (இதுபோன்ற வளர்ச்சி சார்ந்த, நம்பிக்கை அளிக்கக்கூடிய, எளிய படிப்பறிவில்லாத மக்கள் மற்ற தொழில்முறை அரசியல்வாதிகளுக்குப் படிப்புச் சொல்லித்தரக்கூடிய) ஒரு இடுகை ஒதுக்குங்கள். முடிந்தால் இரண்டாவது சனி போன்று ஒரு குறிப்பிட்ட தினத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கும் தேடுதல் வேட்டை நடத்தச் சௌகரியமாக இருக்கும். உங்கள் தளத்தைப் படிப்பவர்களும் உங்களுக்கு லீட் கொடுக்க வாய்ப்பாக அமையும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப தமிழன்,

   அவசியம் முயற்சிக்கிறேன்.
   ஏற்கெனவே நான் இந்த வழக்கத்தை துவங்கி விட்டதை
   கவனித்திருப்பீர்கள் …. நேர்மறையான செய்திகளையும்
   கலந்து தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
   இடுகைகளின் சுவையையும், விருவிருப்பையும் கூட்ட –
   நீங்கள் சொன்னது போல் நமது வலைத்தள நண்பர்களிடமிருந்தும்
   “லீட்” செய்திகளை எதிர்பார்க்கிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Karthik சொல்கிறார்:

    Mikka nandri ayya. Perumaiyaga irrukirathu….TV channels online blogs, all are spreading negative news because people like nagative news to hear…since they are broadcasting, we changed. Or vice versa….So i am really not following TV channels. But i like news paper where atleast it is equally spread. ( but we need to ignore political bias)

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     கார்த்திக்,

     நீங்கள் கூறுவது உண்மையே.
     ஆனால், இப்போதெல்லாம் செய்தித் தாள்களை
     படிக்கும் வழக்கம் கூட
     குறைந்து கொண்டே வருகிறது.

     தொலைகாட்சிகள் சுலபமாக மக்களை சென்றடைகின்றன.
     எனவே, அவர்கள் இன்னும் கொஞ்சம் சமூக அக்கரையுடன்
     செயல்பட்டால் -இந்த மாதிரி நல்ல செய்திகள்
     பெரிய அளவில் மக்களிடையே போய்ச்சேரும்.
     காட்சிகளாக பார்க்கும்போது,
     இவை நடக்ககூடியவை தான் என்று
     அவர்களிடையே நம்பிக்கையும் உண்டாக இவை உதவும்.

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 3. s. haja najeemudeen சொல்கிறார்:

  வணக்கம். ஓடந்துறை கிராமப் பஞ்சாயத்து தலைவர் –திருமதி லிங்கம்மாள் சண்முகம் அவர்களது அலைபேசி எண் கிடைக்குமா… தினமணி யின் மகளிர்மணி பகுதிக்காக பேட்டி எடுக்க வேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.