பஞ்சாயத்தால் அப்படியென்ன செய்து விட முடியும்….?

green-village

உள்ளாட்சியில் இரண்டு வகை –

1) நகர்ப்புற உள்ளாட்சி, ( இது பேரூராட்சி, நகராட்சி,
மாநகராட்சி என்கிற மூன்று அடுக்குகளுக்குள் வருகிறது.
இவை – ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை )

2) ஊரக உள்ளாட்சி ( இது கிராமப் பஞ்சாயத்து,
பஞ்சாயத்து ஒன்றியம், மாவட்டப் பஞ்சாயத்து என மூன்று
அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை மூன்றும்
ஒன்றுக்கொன்று தொடர்பில் இருப்பவை. )

இந்த நகர்ப்புற உள்ளாட்சியில் –
முழுவதுமாக அரசியல் கட்சிகள் ஆதிக்கம்
செலுத்துவதால், இதனைப்பற்றி நாம் தீவிரமாக
தெரிந்து கொள்ள வேண்டியதில்லை…
ஏனெனில் நாம் கவலைப்பட்டோ, திருத்த முடியும்
என்று நம்பிக்கை கொள்ளவோ – இதில் வழியே இல்லை…!

இந்தியா உருப்படும் என்பதற்கு நம்பிக்கை கொடுக்கும்
வகையில் இருப்பவை ஊரக உள்ளாட்சி தான்.

எனவே, ஊரக உள்ளாட்சிகளைப் பற்றி சற்று விரிவாக
புரிந்து கொள்ள உதவுவதே இந்த இடுகையின் நோக்கம்….
( பல இடங்களிலுமிருந்தும் திரட்டப்பட்ட தகவல்களயும்,
புள்ளி விவரங்களையும் அடிப்படையாகக் கொண்டு
இது எழுதப்படுகிறது…)

————

பொதுவாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரிதாக
அதிகாரம் எதுவும் இல்லை என்பது நம்மில் பலரின்
எண்ணம்… ஆனால், உண்மை நிலை அதுவல்ல.

மேலிருந்து கீழாக அதிகாரம் போவதற்கு பதிலாக,
கீழிருந்து மேலாக நிர்வாகம் போகும்படி அமைந்திருப்பது
தான் பஞ்சாயத்து சட்டங்களின் அடிப்படை –

முதலில் கிராம பஞ்சாயத்துக்கள்
அதற்கு மேலே பஞ்சாயத்து ஒன்றியங்கள்
அதற்கும் மேலே மாவட்ட பஞ்சாயத்துக்கள்
அதற்கு மேலே மாநில ஊரக வளர்ச்சித் துறை,
அதற்கும் மேலே மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை
என்று படிப்படியாக மேல்நோக்கி நிர்வாகம் போகிறது….

இவற்றின் மூலம் –

கிராமங்களின் தேவைகள்,
அவற்றில் உள்ள சாலைகள் பற்றிய விவரங்கள்,
குடிநீர் வசதி,
நீர்ப்பாசன வசதி,
பள்ளி வசதி – என்று பலதரப்பட்ட தேவைகளையும்,
புள்ளி விவரங்களையும் சுலபமாக திரட்டவும்,
அதற்கு தகுந்தபடி திட்டங்கள் இடவும் இது உதவுகிறது.

சரி – கிராம பஞ்சாயத்துக்களில் உறுப்பினர்கள்
யார்…? அவர்களை தேர்ந்தெடுப்பது எப்படி…?

1992-ம் ஆண்டில், 73 மற்றும் 74-வது இந்திய
அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி –

கிராம ஊராட்சியில் இருக்கும் வாக்காளர்கள்
ஒவ்வொருவருமே தானாகவே கிராம சபையின்
உறுப்பினராகிவிடுகிறார். இந்த வாக்காளர்கள்
அனைவரையும் உள்ளடக்கிய அமைப்புதான்
கிராம சபை.

1994-ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி
அனைத்து வாக்காளர்களையும் கொண்ட அரசு அங்கீகாரம்
பெற்ற அமைப்பு தான் ஒவ்வொரு கிராம சபையும்…
அது வெறும் குறைகளை மட்டும் சொல்லும் அமைப்பு
கிடையாது. மக்கள் அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பு.

நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு மற்றும்
நாடாளுமன்ற கூட்டுக் குழுக்கள் ஆகியவற்றுக்கு
இணையான அங்கீகாரம் பெற்றவை அவை. பஞ்சாயத்து
நிர்வாகத்தை அவை கண்காணிக்கும். தவறு செய்தால்
தட்டிக் கேட்கவும். நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு
பரிந்துரைக்கவும் உரிமையும், அதிகாரமும் பெற்றவை.

கிராமத்தின் மக்கள் நினைத்தால் தங்கள் தேவைகளுக்காக
எப்போது வேண்டுமானாலும் கிராம சபையைக்
கூட்டிக்கொள்ளலாம். ஒரே இடத்தில்தான் கிராம
சபையைக் கூட்ட வேண்டும் என்பதில்லை. தேவையைக்
கருதி ஒரு கிராமத்தில் பல்வேறு பகுதிகளிலும்
கூட்டிக்கொள்ளலாம். மாநிலத்துக்கு மாநிலம் கிராம
சபைகளின் செயல்பாடுகள் மாறு படுகின்றன.
தமிழகத்தில் ஓர் ஆண்டில் சுதந்திர தினம், குடியரசு தினம்,
தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாட்களில்
கண்டிப்பாக கூட்ட வேண்டும்.

தமிழ கத்தில் 12,524 கிராமப் பஞ்சாயத்துளும்,
385 பஞ்சாயத்து ஒன்றியங்களும்,
31 மாவட்டப் பஞ்சாயத்துக்களும்,
528 பேரூராட்சிகளும், 124 நகராட்சிகளும்,
12 மாநகராட்சிகளும் இருக்கின்றன.
ஊரக உள்ளாட்சியில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து
399 மக்கள் பிரதிநிதி களும்,
நகர உள்ளாட்சியில் 12 ஆயிரத்து 820 மக்கள்
பிரதிநிதிகளும் பணியாற்றுகிறார்கள்.

கிராம பஞ்சாயத்துக்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது..?
உள்ளே சென்று பார்த்தால், ;
உண்மையிலேயே பிரமிப்பாக இருக்கிறது…
கிராமங்கள் நினைத்தால், என்னென்னவோ செய்யலாம்..!!!

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி,
மாநில அரசின் 29 வகை அதிகாரங்கள் கிராம
பஞ்சாயத்துக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் –
( இந்திய அரசியலைமைப்புச் சட்டம் –
பட்டியல் 11 – பிரிவு 243 ஜி )

விவசாயம்,
விசாயம் சார்ந்த விஷயங்கள்,
நில மேம்பாடு மற்றும் நில சீர்திருத்தங்கள்,
சிறு பாசன திட்டங்கள்,
நீர் வள மேம்பாட்டுத் திட்டங்கள்,
கால் நடைகள்,
பால் உற்பத்தி சார்ந்த அம்சங்கள்,
கோழி வளர்ப்பு,
மீன் வளம்,
சமூகக் காடுகள்,
உணவு பதனிடுதல் உள்ளிட்ட சிறு தொழில்கள்,
குடிநீர்,
சாலைகள், சிறு பாலங்கள்,
நீர்வழித் தடங்கள், படகு போக்குவரத்து,
மரபுசாரா எரிசக்தி,
கல்வி, தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி,
சுகாதாரம், நூலகம் – போன்றவை….

நம் நாட்டின் ஜீவன் கிராமங்களில் தான் இருக்கிறது
என்பது வெறும் வார்த்தை அல்ல.

இந்த நாட்டை முற்றிலுமாக மாற்றி விடக்கூடிய
சக்தியும், அதிகாரமும் கிராம மக்களிடையே இருக்கிறது
என்பது சத்தியமான வார்த்தை.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், அன்னா ஹஜாரே
அவர்களின் பின்னணியை அறிந்து கொள்ள விரும்பியபோது
நான் படித்த விஷயங்களின் மூலம், அவர் தனது சொந்த
வறண்ட கிராமமான ரலேகான் சித்தி-யை எப்படி எல்லாம்
வளமாக்கி காட்டி இருக்கிறார் என்பதை உணற முடிந்தது.

நம் தமிழ்நாட்டில் விஷயம் எப்படி என்று ஆராய புகுந்தால்,
ஓடந்துறை, அதிக்கத்தூர் போன்ற சில கிராமங்கள்
முன்னுதாரணங்களாக வெளிப்பட்டுள்ளன.
வாய்ப்பு கிடைக்கும்போது மேலும் சில வித்தியாசமான
கிராமங்களையும் காணலாம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to பஞ்சாயத்தால் அப்படியென்ன செய்து விட முடியும்….?

 1. badrinath சொல்கிறார்:

  ///கிராம பஞ்சாயத்துக்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது..?
  உள்ளே சென்று பார்த்தால், ;
  உண்மையிலேயே பிரமிப்பாக இருக்கிறது///
  அய்யா.. எல்லாம் சரி……பஞ்சாயத்து நிலங்களை APPROVED செய்ய உரிமை உண்டா.. இல்லையா.. ரியல் எஸ்டேட்காரர்கள் இப்படி நிலங்களை மனைகளாக விற்கலாமா..? கூடாதா.. அதை சொல்லவில்லையே….

  • ravi சொல்கிறார்:

   விவசாய நிலங்களை மாற்றுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை .. 3 வருடம் பருவம் இல்லை என்று சொல்லி , இன்னம் சில விஷயங்களை செய்தால் போதும் …
   மணல் குவாரி ஆரம்பிக்கும் போது , பஞ்சாயத்தில் அதை எதிர்த்து தீர்மானம் போட்டும் , அவை வருகின்றன .. டாஸ்மாக் விஷயத்திலும் இதே தான்.. இவை ஊரார் எதிர்ப்பு, பஞ்சாயத்து எதிர்ப்பு இரண்டையும் மீறி வருபவை…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.