ஒரு பெண் எழுத்தாளரின் தமிழக அரசியல் அனுபவங்கள் ….

.

.

ஒரு இடுகைக்காக பழைய செய்திகள் சிலவற்றைத் தேடி,
அலைந்து கொண்டிருந்தேன். அப்போது எதேச்சையாக
கண்ணில் பட்ட ஒரு விஷயம் –
அந்தக் காலத்தில், தமிழகத்தில் திமுக செயலாற்றி
வந்த பின்னணியைச் சொல்கிறது.
இந்த வலைத்தள நண்பர்களும் இந்த கட்டுரையை படிக்க
வேண்டுமென்று என்று நினைத்து இங்கே பதிப்பிக்கிறேன்.

நீண்ட காலமாக தமிழில் படித்து வருபவர்கள்
எழுத்தாளர் வாஸந்தி அவர்களை நிச்சயம் அறிவார்கள்.
தமிழில் பல நாவல்களை எழுதி இருப்பவர் பின்னாட்களில்
இந்தியா டுடே செய்தி நிறுவனத்திலும் முக்கிய பொறுப்பு
வகித்தவர்….

vaasanthi-1

நீண்டகால வட இந்திய வாழ்க்கைக்கு பிறகு, இந்தியாடுடே
இதழின் தமிழ் பதிப்பாசிரியராக சென்னை
திரும்பிய அவர் அப்போது தனக்கு ஏற்பட்ட உடனடியான
அனுபவங்களை விவரிக்கிறார்….

———————————————

ஒரு செய்திப் பத்திரிகை ஆசிரியையாக நான் கால்
வைத்த போது, அச்சுப் பிழை திருத்துபவருக்குத் தெரிந்த
சில அடிப்படை விஷயங்கள்கூட, எனக்குத்
தெரிந்திருக்கவில்லை. எனது ஆங்கில அறிவில் அபார
நம்பிக்கை இருந்தும், galley’, ‘form wise’, ‘slug’, ‘caption’, format’ என்ற வார்த்தைகள் புரியாமல், இரண்டு நாட்கள்
தடுமாறினேன்.

காலை ஐந்து மணிக்கு எழுந்து, இரவு ஒன்பதரை, பத்துக்குப்
படுக்கப் போகும் வழக்கமுள்ள நான், இரவு ஒரு மணி,
இரண்டு மணிவரை அலுவலகத்தில், வாரத்தில் இரண்டு
நாட்களாவது பணிபுரியவேண்டியிருந்தது. ஓரிருமுறை
அலுவலகத்திலேயே தங்கி, மறுநாள் ஒன்பது மணிவரை
வேலை பார்க்கவும் நேர்ந்தது. தினமுமே வீட்டிற்குத் திரும்ப
இரவு எட்டு, எட்டரை ஆகிவிடும்.

தொழில்ரீதியில் நேரிடையான தாக்குதல்கள்,
வேலையில் சேர்ந்த உடனேயே ஏற்பட்டது. அந்த
காலகட்டத்தில், ‘இந்தியா டுடே’ தமிழ்ப் பதிப்பு,
அதிகபட்சம் ஆங்கில இதழிலிருந்து
மொழிபெயர்க்கப்பட்டகட்டுரைகளைக் கொண்டதாகவே
இருந்தது.

அப்போதுதான் நான் கால் வைத்திருந்ததால், எனது அதிகார
எல்லைகளைப் பற்றி எனக்குக் குழப்பமாக இருந்தது.
தில்லி அலுவலகம் சொன்னபடி, மற்ற மொழி ஆசிரியர்கள்
நடந்து கொண்டார்கள். மாற்றுக்கருத்துச் சொல்லும் வழக்கம்
இருக்கவில்லை. ஆங்கிலத்தில் வரும் கட்டுரைகளை
மொழிபெயர்க்கும்போது (அவை ஆங்கிலப் பதிப்பில்
வெளியாகிவிடுவதால்) நிச்சயமாக வரிகளை மாற்றவோ,
திருத்தவோ உரிமை கிடையாது.

ஆங்கில இதழுக்கு, அப்போது சென்னைக் கிளையில்,
ப்ரகாஷ் சுவாமி நிருபராக இருந்தார்.

நான் போய்ச் சேர்ந்த இரு வாரத்தில்,
அவர், தி.மு.க. தலைவரின் இரு மனைவிகளும்
தனித்தனியாகக் கட்சி அரசியலில்,
தங்களின் அதிகாரத்தைச் செலுத்துவதாக ஒரு கட்டுரையை
ஆங்கில இதழுக்கு எழுதியிருந்தார்.

அந்தக் கட்டுரைக்கும் எனக்கும்
துளியும் சம்பந்தமில்லை. தமிழகத்து அரசியல் சம்பந்தப்பட்ட
கட்டுரை என்பதால், அதைத் தமிழ் இதழில் போடவேண்டிய
கட்டாயத்தில் இருந்தேன்.

அதைப் பக்கமாக்குவதற்குமுன் வந்திருந்த ‘ரீணீறீறீமீஹ்யில்’
படித்துப் பார்த்தபோது, ஒரு வரியை நீக்கிவிடலாம் என்று
முடிவு செய்தேன். கனிமொழியின் முதல் திருமணம்
விவாகரத்தான சமயம் அது. ஆனால், செய்தி வெளியில்
வந்திருக்கவில்லை.

கட்டுரையிலிருந்த, ‘விவாகரத்தான மகள் கனிமொழி’
என்ற சொற்கள் சம்பந்தப்பட்டவரை புண்படுத்தலாம்
என்று நினைத்து, அவற்றை நீக்கிவிட்டு ‘பக்கம்’ செய்ய
அனுப்பிவிட்டேன். அன்று ‘டெபுடி காப்பி எடிட்டர்’
இருந்தார். இறுதியாக பக்கத்தைக் கவனித்து அச்சுக்கு
அனுப்பும் வேலை அவருடையது.

மறுநாள், அச்சாகிவிட்ட பக்கங்கள் எனது பார்வைக்கு
வந்த போது திடுக்கிட்டேன். நான் நீக்கியிருந்த சொற்கள்
அச்சாகியிருந்தன. அன்று மாலை ‘டெபுடி காப்பி எடிட்டர்’
வந்தபோது, ‘‘நான் அடித்திருந்த சொற்கள் எப்படி வந்தன’’
என்று கேட்டேன். ‘‘பக்கம் ஆகி வந்த போது நான்கு
சொற்கள் தேவைப்பட்டன; அதனால் அவற்றைச் சேர்த்துக்
கொண்டேன்’’ என்றார்.

நான் ஏன் அவற்றை விலக்க நினைத்தேன் என்று அவரிடம்
சொல்லவில்லை. எப்படியும் ஆங்கில பதிப்பில் வந்த
விவரம்தானே என்றிருப்பார்.

ஆனால், கட்டுரை தமிழ்ப் பதிப்பில் வெளியானதும், ஒரு
பூகம்பம் வெடிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

‘முரசொலி’ ஞாயிறு மலர் பல பக்கங்களை எனக்காக
ஒதுக்கியது. என்னை, நான் நினைக்கவே கூசும் அளவுக்கு,
பெண் ஆசிரியை, அரசியலுக்கே வராத தலைவரின் வீட்டுப்
பெண்களைப் பற்றி தரக்குறைவாக எழுதியதற்காக’
வசைபாடி தூற்றிற்று;

எனது ஒழுக்கத்தை, நேர்மையைக்
கேள்வி கேட்டது; எனது சாதியைக் குறிப்பிட்டது;

வாஸந்தி என்ற பெயரை ‘வாந்தி’ என்று எழுதிற்று.
‘குங்குமம்’ இதழில் வசை தொடர்ந்தது. கேள்வி_பதில்
பகுதியில், தானே ஒரு கேள்வியைப் போட்டு,
‘வாஸந்தியை ‘வா’ என்று சந்திக்கு இழுக்க எத்தனை நேரம்
ஆகும்?’ என்று, பதிலையும் போட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால், கட்டுரை எழுதிய
ப்ரகாஷ் சுவாமி, எந்தக் கண்டனத்துக்கும் உள்ளாகவில்லை.

இந்த தாக்குதல் எனக்கு மிகப் பெரிய கலாசார அதிர்ச்சியை
ஏற்படுத்திற்று.

தமிழ் நாட்டில் ஒரு பெண்ணைத் தாக்கவேண்டுமானால்,
ஆண்களின் மிகச் சுலபமான ஆயுதம், அவளது ஒழுக்கத்தைக்
குறை கூறுவது என்று, பின் வரும் ஆண்டுகளில் புரிந்து
போனது. இது அந்த சமூகத்தின் பலவீனமே தவிர, எனது
குறையல்ல என்கிற தெளிவு எனக்கு இருந்ததால், அத்தகைய
அவதூறுப் பிரசுரங்களை கண்டு கொள்ளாமல் இருக்கப் பழகிக்
கொண்டேன்.

ஆனால், ஆரம்பத்தில் அது ஏற்படுத்திய அதிர்விலிருந்து
மீள்வது, சுலபமாக இருக்கவில்லை. அடுத்த சில மாதங்களில்,
கலைஞர் கருணாநிதியைப் பேட்டி காண வேண்டி வந்தபோது,
நேரம் கொடுக்க அவர் சுலபத்தில் சம்மதிக்கவில்லை.

ஆனால் கடைசியில் ஒத்துக் கொண்டவர், என்னைக்
கண்டதும், ‘முரசொலி’யில் தன்னைக் கேட்காமலே
சின்னக்குத்தூசி அந்தக் கட்டுரையை எழுதிவிட்டதாகச்
சொன்னார். அவரது விளக்கம் எனக்கு சமாதானமாகவில்லை
என்றாலும், அவரது அணுகுமுறை இறுக்கத்தைத் தளர்த்திற்று.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ஒரு பெண் எழுத்தாளரின் தமிழக அரசியல் அனுபவங்கள் ….

 1. today.and.me சொல்கிறார்:

  அன்பின் காமை,

  // இதில் வேடிக்கை என்னவென்றால், கட்டுரை எழுதிய
  ப்ரகாஷ் சுவாமி, எந்தக் கண்டனத்துக்கும் உள்ளாகவில்லை. //

  வாஸந்தி அவர்களுக்கு இன்னமும் தெரியவில்லை, அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதென்று. 😀 😀

  http://www.ndtv.com/video/news/news/karunanidhi-may-be-93-but-he-behaves-like-he-is-39-says-mk-stalin-415147

 2. selvarajan சொல்கிறார்:

  தனக்கு காரியம் ஆக வேண்டுமென்றால் அடிபணிவதும் { இந்திராகாந்தியிடம் } — தன் குடும்பத்து உறுப்பினர்களுக்கு நல்ல பதவி வேண்டுமென்றால் – தாஜா செய்வதும் — மிரட்டுவதும் { சோனியா – மன்மோகன் } — தனக்கும் — தனது ஆட்சிக்கும் இடைஞ்சல் என்றால் — வசைப்பாடி — தாக்கவும் முற்படுவதும் { மதுரையில் இந்திரா தாக்கப்பட்டது } — தன் குடும்பத்து பெண்களை விமர்சித்தால் — தரம் தாழ்ந்து எழுதுவதும் — பேசுவதும் — கைவந்த கலையாச்சே — நம்மவருக்கு … ?

  தனக்கு வருமானம் வரும் என்றால் — தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று கூறுவதும் வாடிக்கை தானே … ? முன்பு சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் வந்த இரண்டு இடுகைகள் மிகவும் ரசனைக்கு உரியதாக இருந்தது — அவைகள் : — // 1 . பெரியாரை ஏன் ஏற்க மறுக்கிறார் கலைஞர் கருணாநிதி ?
  Posted on திசெம்பர் 24, 2010 by vimarisanam – kavirimainthan — 2 . கண்ணகியை பற்றிய பெரியாரின் வசவு மழை !! பெரியாரை ஏற்க மறுக்கும் கலைஞர் -2
  Posted on திசெம்பர் 25, 2010 by vimarisanam – kavirimainthan // முடிந்தால் படியுங்கள் — !!!

 3. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  சமீபத்தில் வைரமுத்து கேள்வி பதிலொன்றைப் படிக்க நேர்ந்தது. ஒரு தடவை குங்குமத்தில், ஜெ. நடித்த படத்தில் பிடித்தது எது என்ற கேள்விக்கு எங்கிருந்தோ வந்தாள் படத்தில் அவர் சிறப்பாக நடித்ததாக பதில் எழுதினாராம். அது ஆசிரியர் குழுவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி, கருணானிதி முன்பு சென்றதாம். அவர், அந்த பதிலில் தவறு இல்லை என்று சொன்னதும்தான், குங்குமத்தில் பிரசுரமானதாம். குங்குமத்தில் அரசியலோ அல்லது, திமுக விரும்பாத ஒன்றோ பிரசுரம் ஆகவேண்டுமென்றால் கருணானிதியின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு அவர் அனுமதித்தால் மட்டுமே நடக்கும். இதிலும் நிச்சயம் கருணானிதி, அவரது Ghost Writers ஒருவரான (இப்படி நிறைய பேர் இரண்டு கட்சிகளிலும் உண்டு) சின்னக்குத்தூசியை பதில் எழுதச் சொல்லியிருப்பார்.

  வந்த புதிதில் தமிழ் இந்தியா டு டே, நிறைய வாசகர்களைப் பெற்றது (புதுமையாகவும், கட்சி சார்பற்றது என்று பலர் கருதியதாலும். 1988-89 என்று ஞாபகம்). ஆனால், அதன் மொழிபெயர்ப்பு, தமிழகத்துக்கே அன்னியமாக அமைந்தது. ரொம்பவும் எரிச்சல் தரக்கூடியது. வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு, அதே வரிசையில். இந்தி சீரியலை தமிழில் மொழிபெயர்ப்பதுபோல். (“வா இங்கே அருகில்” என்பதுபோல்)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.