500 -1000 – கருணையுள்ள மக்களும் -மனிதாபிமானமே இல்லாத மத்திய அரசும்…

hospital

நேற்றிரவு திடீரென்று இடியாக வந்திறங்கிய செய்தி –
அதை மோடிஜி மக்களுக்காக கொண்டு வந்த “சுனாமி” என்று
வர்ணிக்கிறார் தபாஜக தலைவியார்.

அரசாங்கத்தை குறை சொல்ல வேண்டும் என்கிற
எண்ணத்தில் நான் இதை எழுதவில்லை.
நல்ல நோக்கத்தோடு அரசு செய்யும் சில செயல்களும் கூட
மக்களை எப்படி பாதிக்கின்றன என்று தான் விவரிக்க
முயல்கிறேன்.

இன்று காலையில் –
செண்டிரல் ஸ்டேஷனிலும்,
எக்மோர் ஸ்டேஷனிலும்
வடக்கேயிருந்தும், தெற்கேயிருந்தும் குடும்பங்களாக
வந்திறங்கிய பாவப்பட்ட ஜென்மங்களை – பாவம்
பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஊரில் ரெயில் ஏறும்போது
அவர்கள் கற்பனை கூட செய்து பார்க்காத துன்பங்களை
எல்லாம் வண்டியை விட்டு இறங்கியதும் சந்தித்தார்கள்.

பசிக்கு 4 இட்லியோ, காப்பியோ சாப்பிட முடியவில்லை.
ஆட்டோ பிடிக்க முடியவில்லை..
உறவினர் சென்னையில் இருந்தவர்கள் தப்பித்தார்கள்.
சென்னையில் யாருமே இல்லாமல் வந்தவர்கள் –
பாவம் அவர்களின் நிலையை விவரிப்பது மிகவும் கடினம்.

எக்மோரில் அரசு தாய் சேய் (பிரசவ) மருத்துவமனையின்
முன்பாக பார்த்த உறவின பெண்களின் நிலையோ –
கல்லையும் கரைத்து விடும். நிறைய பேர் அக்கம் பக்கம்
உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம்
போன்ற ஊர்களிலிருந்து வந்து தங்கள் வீட்டு பெண்களை
பிரசவத்திற்காக சேர்த்திருந்தனர்.

500 ரூபாய் நோட்டுக்கள் கையில் இருந்தாலும் –
தங்களின், தங்கள் நோயாளி உறவினர்களின் பசியாற்ற –

ஆஸ்பத்திரி வாயிலில் ஒரு காப்பி கூட,
4 இட்லி கூட, ஒரு பிஸ்கட் பாக்கெட் கூட, ஒரு ப்ரெட்
பாக்கெட் கூட வாங்க கதி இல்லாமல் பரிதவித்துக்
கொண்டிருந்தனர்…. ( என் பாக்கெட்டில் இருந்த சிறு
அளவு பணத்தைக் கொண்டு வெகு சிலருக்கு உதவ
முடிந்தது… என் வீட்டிலும் 500 ரூபாய் நோட்டுக்கள் தான்
இருந்தன. இருந்த ஐந்தாறு 50-100-ஐ தான் நான் எடுத்துக்
கொண்டு போயிருந்தேன்..ATM தான் உதவாதே…)

ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு தொலைக்காட்சிக்கு
பேட்டி அளித்த தபாஜக தலைவியார் சொன்னார் –
“ஒரே ஒரு நாளைக்கு தானே…?
சுனாமி வந்தபோது மக்கள் என்ன செய்தார்கள்…?
சமாளித்துக் கொள்ளவில்லையா…? இப்போது
மோடி அவர்கள் நல்ல சுனாமியை கொண்டு வந்திருக்கிறார்..
நல்ல விளைவுகள் ஏற்படப்போகின்றன – மக்கள் பொறுத்துக்
கொண்டு தான் ஆக வேண்டும் ”

-இதை அவர் அந்த தாய்-சேய் மருத்துவமனையின் முன்
நின்று சொல்லி இருந்தால் தெரிந்திருக்கும்….சுனாமி
எப்படி இருக்குமென்று.

ஆனால், உதவி கிடைத்தது -கிடைக்கிறது…

கருணையுள்ள சாதாரண மக்களிடமிருந்து…
தெருவோர ஸ்டேண்டிலிருக்கும் ஆட்டோ டிரைவர்கள்
முகம் பழக்கமான நபர்களை வண்டியில் அழைத்துப்
போகிறார்கள். “பரவாயில்லை சார்.. இரண்டு நாள்
கழிச்சு கொடுங்க” என்று சொல்கிறார்கள்.
சில ஆட்டோக்காரர்களுக்கு, பழக்கமான பெட்ரோல்
பங்க்குகளில் கடனுக்கு பெட்ரோல் கிடைக்கிறது.

அக்கம் பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடைகளில்,
டீக்கடைகளில், ஓட்டல்களில் – தெரிந்த முகங்களுக்கு
கடனுக்கு கிடைக்கிறது. ஆனால், மனித நேயத்திற்கும்
அளவு இருக்கிறது அல்லவா…?

முற்றிலும் புதியவர்களுக்கு –
வெளியூர்களிலிருந்து வருபவர்களுக்கு –
எந்த வழியும் இல்லை…

இந்த பிரச்சினை ஒரு நாளுடன் போகப்போவதில்லை.
குறைந்த பட்சம் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நாம்
படாத தொல்லைகளையெல்லாம் படப்போகிறோம்.

நாளை முதல் வங்கி வாசல்களில் –
2000 ரூபாய் எடுப்பதற்கு
இரண்டாயிரம் பேருடன் வரிசையில் நிற்கப்போகிறோம்.
ஏற்கெனவே உள்ள வங்கி ஊழியர்களை கொண்டு
இந்த பெரும் சுமையை எப்படி உள்வாங்கப்
போகிறார்களோ தெரியவில்லை.

கருப்புப்பணத்தை ஒழிக்க வேண்டியது மிகவும்
அவசியமான வேலை தான். ஆனால், கருப்பு
பணக்காரர்களுடன் சினேகிதம் வைத்துக்கொண்டு,
தோள் மேல் கை போட்டுக்கொண்டு –
ஒன்றும் அறியாத அப்பாவி மக்களை
இப்படி வதைப்பது என்ன நியாயம்…?

தவறு செய்தவர்கள் தப்பிச்செல்ல ஏகப்பட்ட ஓட்டைகளை
உருவாக்கி வைத்து விட்டு, எந்த தவறும் செய்யாத
சாதாரண மக்களை ஏன் அவதியுறச் செய்ய வேண்டும்…?

முக்கால்வாசி நகைக்கடைக்காரர்கள், நேற்றைய கணக்கை
இன்னமும் முடிக்காமலே வைத்திருக்கிறார்கள். இன்றும்
கூட 5 லட்சம் கொடுத்து நாலரை லட்சத்துக்கு நகை
வாங்கி கொள்ளலாம்.
( பத்து சதவீதம் – நோட்டு மாற்றத்திற்கு கமிஷன் )
விழுப்புரத்திலிருந்தும், மதுரையிலிருந்தும் செய்திகள்
வருகின்றன… 500 ரூபாய் நோட்டுக்கு 450 ரூபாய் சில்லறை
கொடுக்கிறார்கள் என்று…)

அதிகாரபூர்வமாகவே, ஒரே நாளில் தங்கம்
ஒரு சவரனுக்கு (8 கிராம்) கிட்டத்தட்ட
1200 ரூபாய் விலை ஏறி இருக்கிறது.

( பின் சேர்க்கை – இப்போது 1480 எகிறி இருக்கிறது…
எனவே பத்து பவுனுக்கு 14,480 ரூபாய் அதிகம்
கொடுக்க வேண்டும்…ஒவ்வொரு தகப்பனுக்கும்
மத்திய அரசு கொடுக்கும் தண்டனை … )

பத்து நாளில் பெண்ணுக்கு கல்யாணம் வைத்திருக்கிற
ஒரு தகப்பன் பத்து பவுன் நகைக்காக – 12,000 ரூபாய்
கூடுதலாக “கடன்” வாங்க வேண்டும்… (ஆமாம்… நம்மைப்
போன்ற நிலையில் உள்ளவர்கள் கடன் வாங்காமல்
கல்யாணம் நடத்த முடியுமா…? )

நஷ்டக் கணக்கிற்கு –
ஏற்கெனவே “காந்தி கணக்கு” என்று சொல்வார்கள் –
இது மோடிஜி கணக்கா…?

சர்க்கார் நோட்டை செல்லாது என்று அறிவிக்க –
கருப்புப் பணக்காரன் தங்கத்தை வாங்கிக் குவிக்க –
அப்பாவி தகப்பன்கள் தலையில் சுமை ஏறுகிறதே…

சாதாரண மக்களை இந்த அளவிற்கு
தொல்லைப்படுத்தாமல் இதைச் செயல்படுத்தியிருக்க
முடியாதா…?

( தொடர்கிறது- இன்னும் சிறிது நேரத்தில்
பகுதி -2-ல் )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to 500 -1000 – கருணையுள்ள மக்களும் -மனிதாபிமானமே இல்லாத மத்திய அரசும்…

 1. Amuthan சொல்கிறார்:

  இதில் வேறு என்ன ஓட்டைகள் இருக்கும் என நினைக்கிறீர்கள்?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அமுதன்,

   பகுதி-2-ல் இவற்றை சொல்லி இருக்கிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. தமிழன் சொல்கிறார்:

  எப்படிச் செய்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   நான் எதிர்பார்த்ததை /எதிர்பார்ப்பதை
   பகுதி-2-ல் எழுதி இருக்கிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. சாதாரணமானவன் சொல்கிறார்:

  கடன் வாங்கி தான் கல்யாணம் நடத்த வேண்டிய அவசியம் என்ன!

  பத்து நாளில் பெண்ணுக்கு கல்யாணம் வைத்திருக்கிற
  ஒரு தகப்பன் பத்து பவுன் நகைக்காக – 12,000 ரூபாய்
  கூடுதலாக “கடன்” வாங்க வேண்டும்… (ஆமாம்… நம்மைப்
  போன்ற நிலையில் உள்ளவர்கள் கடன் வாங்காமல்
  கல்யாணம் நடத்த முடியுமா…? )

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.