துக்ளக் ஆசிரியர் “சோ” – சில நினைவுகள்….

….

….

அதிகாலையில் செய்தியை தொலைக்காட்சியில்
பார்த்தபோது, திடுக்கிடலோ, அதிர்ச்சியோ
ஏற்படா விட்டாலும், நிச்சயமாக ஏற்கெனவே இருந்த
வருத்தம் இன்னமும் சில மடங்கு கூடுதலாகியது என்று
கூறுவது தான் சரியாக இருக்கும்.

“சோ” அவர்கள் ஏற்கெனவே பலமுறை மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு, மிக சீரியசான நிலைக்கு போய்
மீண்டு திரும்பியவர் என்பதால், மனம் ஓரளவுக்கு
இத்தகைய செய்தியை ஏற்கும் பக்குவத்தில் தான் இருந்தது.

“சோ” அவர்களைப்பற்றி எல்லாரும் சொல்லாதது
எதை நான் சொல்லி விடப்போகிறேன்…?
எனது ஒன்றிரண்டு நேரிடையான அனுபவங்களை
ஏற்கெனவே இந்த தளத்தில் சொல்லி இருக்கிறேன்…

இருந்தாலும் …..

சில மாதங்களுக்கு முன்னால் –
ஆசிரியர் “சோ” அவர்களை தனிப்பட்ட முறையில்
சந்தித்து, மனம்விட்டு சில விஷயங்களை பரிமாறிக்
கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
இதற்கு முன்னால், பொது இடங்களில் சந்தித்திருக்கிறேனே
தவிர, தனிப்பட்ட முறையில் அவருடன் பழக்கமில்லை.
ஆனால், ஒரு விதத்தில் நான் சோ அவர்களை –
ஏகலைவன் போல் ஒரு ” மானசீக குரு”வாக (சில
விஷயங்களில் மட்டும்) வரித்து செயல்படுகிறேன்.

ஒரு நாள் “துக்ளக்” அலுவலகத்திற்கு நேரில் சென்றேன்.
அவருக்கு நேரம் இருந்தால், அரை மணி நேரம் பேசலாம்…
இல்லையென்றால் குறைந்த பட்சம் சந்திப்புக்கு ஒரு
நேரமாவது கேட்டு, பெற்றுக்கொண்டு வரலாமென்று தான்
போனேன்.

என் துரதிருஷ்டம். அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது.
அன்று காலை தான் அவர் மீண்டும் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவரது உதவியாளர்களிடம் கவலையோடு அவர் நிலை
பற்றி விசாரித்தேன். மிகவும் சகஜமான மன நிலையில் –
அவர்கள் கூறியது எனக்கு கவலைக்கு பதிலாக
சிரிப்பை உண்டாக்கியது.

அப்படி என்ன சொன்னார்கள்…?

வழக்கமான உடல் பிரச்சினைகளுக்காக,
பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றிருக்கிறார்
ஆசிரியர். ஓரளவு பரிசோதனைக்குப் பிறகு டாக்டர்கள்
அவருக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு ( நுரையீரலில்
கோளாறு….) சிகிச்சை தர அவரை ஒரு 10 நாட்களுக்கு
மருத்துவமனையில் in-patient ஆக admit ஆகச் சொல்லி
இருக்கிறார்கள்.

மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர வேண்டும் என்றவுடன்
கடுப்பானவர், டாக்டரைப் பார்த்து –

” ஏன் சார் சிகரெட்டை விட்டா
சரி பண்ணிடலாம்னு சொன்னீங்க இல்லையா…?
உங்க பேச்சை நம்பி தானே நானும் சிகரெட்டை விட்டேன்…
ரெண்டு வருஷம் ஆச்சு…சிகரெட்டும் போச்சு –
ஒடம்பும் சரியாகல்லை….திரும்ப அட்மிட் வேற ஆக
சொல்றீங்களே.. இது எப்ப தான் சரியாகும் ? ”
என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு டாக்டர் அவரை கூலாக “எத்தனை வருஷமா
சிகரெட் பிடிச்சுக்கிட்டிருந்தீங்க..?” என்று கேட்டிருக்கிறார்…

“அம்பது வருஷமா” இது சோ அவர்களின் பதில்..

“அப்ப குணமாகவும் அதே அளவு காலம் பிடிக்கும்…!!!”
இது டாக்டரின் பதில்….!!!

விடுவாரா சோ…!!
மீண்டும் அட்டாக் – “இதை அப்பவே ஏன் சொல்லலை..?
சொல்லி இருந்தீங்கன்னா சிகரெட்டையாவது
விடாம இருந்திருப்பேனே…
அநியாயமா என்னை ஏமாத்திட்டீங்களே….”

அந்த அளவிற்கு தன் உடல்நிலையை
லேசாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம்
உடையவராக இருந்தார் சோ அவர்கள்.

அவர் உடல்நிலை பற்றி கேட்டபோது –
“எல்லாம் சரியா ஆயிடுத்துன்னும் சொல்ல முடியாது.
ரொம்ப சீரியஸ்னும் சொல்ல முடியாது..
ஏதோ இப்போதைக்கு ஓடிக்கிட்டுருக்கு…..
ஓரளவு தாங்கற மாதிரி இருந்தா – இருக்கறதுல
பிரச்சினை இல்லை… இல்லைன்னா, போயிடறது பெட்டர்…”

பாவம் – அவர் கடந்த சில ஆண்டுகளாக மிகவும்
சிரமப்பட்டு விட்டார். போனது நமக்கெல்லாம் துக்கமாக
இருந்தாலும், ஒருவிதத்தில் அவருக்கு பர்சனலாக
இது ஒரு ( relief ) விடுதலை தான்.

நேற்று முன் தினம் மறைந்த ஜெயலலிதா அவர்களும்
சோ அவர்களும் மிக நீண்ட நாட்களாக நட்புடன்
பழகியவர்கள். YGP அவர்களின் அமெச்சூர் நாடக குழுவில்
சோ இணைந்தபோது அங்கே, ஏற்கெனவே பங்கேற்றுவந்த
ஜெயலலிதாவின் தாய் சந்தியா அவர்களின் மூலம்
அவரது மகளான சிறு வயது ஜெ. அவருக்கு பழக்கமாகி
இருக்கிறார்.

ஜெ. தன்னை விட 14 ஆண்டுகள் மூத்தவரான
சோ அவர்களை ஒரு நம்பிக்கையான நண்பராக
மட்டும் அல்லாமல் தனது மூத்த சகோதரராகவும்
பாவித்து வந்தார். ( இடையிடையே மனஸ்தாபங்கள்
ஏற்பட்டாலும் கூட….)

ஜெ. அவர்களின் 60-வது வயதன்று யாரும் எதிர்பார்க்காத
ஒரு புகைப்படம் வெளியாகியது.

சோ அவர்களின் இல்லத்திற்கு
தானாகவே சென்ற முதல்வர் ஜெ.அவர்கள்,
சோ மற்றும் அவரது மனைவியிடம்
வணங்கி ஆசி பெற்றார்…

cho-and-jj-on-her-60

அதற்கு பிறகு, 2015-ல் சோ அவர்கள் மருத்துவமனையில்
மிகவும் சீரியசான நிலையில் இருந்தபோது –
முதல்வர் ஜெ. மருத்துவமனைக்கு சென்று அவரை
பார்த்து நலம் விசாரித்தபோது எடுக்கப்பட்ட ஒரு
வீடியோ ( ஜெ.அவர்களிடம் அனுமதி பெறாமல்
எடுக்கப்பட்டு, வெளியாகி, பிரச்சினையை உண்டுபண்ணிய
வீடியோ இது…)

முற்றிலும் தனிப்பட்ட உரையாடல் என்கிற
விதத்தில், formality எதுவும் இன்றி உரையாடுகிறார்கள்.
அவர்களுக்குள் உள்ள பாசமும், அக்கறையும் அதில்
வெளிப்படுவதை பார்க்கலாம்.

ஜெ – “கவலைப்படாதீங்க…
எல்லாருக்கும் வர்ரது தான்.
நான் டாக்டர்ஸ் கிட்ட பேசினேன்
எல்லாம் சரியாயிடும்னு சொல்ராங்க

” உனக்கு தான் அநாவசிய சிரமம் ”
” not at all – it is always a pleasure to see you -”

” we need you ”

14 வயது மூத்தவரான சோ அவர்கள் தனது
இளைய சகோதரியை கவனித்துக் கொள்வதற்காகத்தான்,
அவர் சென்ற மறுநாளே பின்தொடர்ந்து
மேலுலகம் சென்று விட்டாரோ….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to துக்ளக் ஆசிரியர் “சோ” – சில நினைவுகள்….

 1. இளங்கோ சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  இதயத்தை தொடுகிறது உங்கள் எழுத்து.
  மனதிலிருந்து வெகு இயல்பாக வார்த்தைகள் வருகின்றன.
  உங்கள் இடுகை மிக மிக நன்றாக இருக்கிறது.

 2. தமிழன் சொல்கிறார்:

  சோ – துக்ளக் – அச்சச் சோ!! – வருந்துகிறேன்.

  விகடன் எம்.டி அவர்கள் துக்ளக் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தபோது சோ அவர்கள்தான் ஞாபகத்துக்கு வந்தார். ‘சோ’ சொன்ன கண்டிஷன்’களை ஒப்புக்கொண்டு அவரை ஆசிரியராக துக்ளக்கை ஆரம்பித்தார். பத்திரிகையில் ஒருபோதும் தலையிட்டதில்லை. சோ அவர்கள் ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். ஒருதடவை (எமர்ஜென்ஸியின்போது) பத்திரிகையை சீஸ் செய்ய போலீஸ் வந்தபோது, ரெடியாகி இருந்த துக்ளக் இதழ்களை இலவசமாக வெளியே வீசி எறிந்துவிடுவது என்று தீர்மானித்து (அப்போதுதான் இதழில் சொல்லியுள்ள செய்திகள் மக்களிடம் போய்ச்சேரும் என்று நினைத்து) செயல்படுத்தியபோது, பாலன் அவர்கள் அதைப்பற்றி என்றுமே பிரஸ்தாபித்ததில்லை. ஏன் நஷ்டம் என்று சொன்னதேயில்லை என்று சொல்லியிருக்கிறார். தான் துக்ளக் மூலம் நிறையப் பணம் சம்பாதித்தது விகடன் பாலசுப்ரமணியம் (எம்டி என்று விளித்து) அவர்களால்தான் என்று சொல்லியிருக்கிறார்.

  சோவின் பலம், தனக்கு நேர்மையானது என்று தோன்றுவதை எழுதுவது. மற்றவர்களின் விமரிசனத்துக்கு ஏற்றபடி தன் கொள்கையை மாற்றிக்கொண்டதே இல்லை. சோவின் அப்பா காங்கிரஸ்காரராக இருந்தபோதும், எமெர்ஜென்சியினால், இந்திராவின் அடக்குமுறைக் குணங்களால், காங்கிரஸ் எதிர்ப்பு (இந்திரா எதிர்ப்பு) நிலையை எடுத்தார். இந்திரா மறைந்தபோதும், அந்த இதழில், இந்திராவின் குறைகளைப் பட்டியலிட்டிருப்பார். இறந்துவிட்டார் என்பதனால் புகழ்ந்திருக்கமாட்டார்.

  சோவின் பலம் நகைச்சுவை. அதிலும் தன்னையே Satire செய்துகொள்ளும் மன பலம். அவர் கடுமையாக விமரிச்சவர்கள் கூட, அவருடைய நட்பைப் பேணினார்கள். அவரின் இறப்புக்கு அவரால் விமரிசிக்கப்பட்டவர்கள் வந்ததே அதற்குச் சான்று. இன்னொரு பெரிய பலம், எந்தக் காரணத்தை முன்னிட்டும் நட்பையோ, அறிமுகத்தையோ சொந்த லாபங்களுக்கோ, காரணங்களுக்கோ எப்போதும் உபயோகப்படுத்திக்கொள்ளாத நேர்மை. பாஜக ராஜ்ஜியசபை எம்பியாக்கியபோதும், அவரின் கருத்தை நேர்மையாகவே விமரிசனம் செய்துள்ளார்.

  சோ எதில் வித்யாசமானவர் என்றால், தன் கருத்தைச் சொல்லும்போது, அடுத்தவர் கருத்தை மதிப்பவர் அவர். அவருக்கு இவர் வேண்டும், அவர் வேண்டாம் என்பது கிடையாது. கருத்துக்கள் மோதலைத் தவிர, தனிப்பட்ட முறையில் பகைமை உணர்வு இல்லாததனால், கி.வீரமணி, கருணானிதி, ஸ்டாலின், அழகிரி போன்றோரும் அவரிடம் மதிப்பு வைத்திருந்தனர். நிறையபேர், ஜெ., அதிமுக வை ஆதரித்து எழுதுவது பார்ப்பனீயச் சிந்தனையினால் என்று கருதுகின்றனர். அவரிடம் அந்தமாதிரிச் சிந்தனை இருந்ததுபோல் அவர் எழுத்து காண்பித்ததில்லை. ஜெ.வை, சிறிய பெண்ணாக இருக்கும்போதிலிருந்து திரையுலகத்திலிருந்து அவருக்குத் தெரியும். அப்படியும், ஜெ.வை விமரிசிக்க அவர் 95-96களில் தவறியதில்லை. ஆரம்பத்தில் ஜெ. அவர்கள் கோபம் கொண்டாலும் (ஜெ.வுக்கு இந்த இயல்பு உடன் பிறந்த குணம். அவருடைய தாயார்கூட ஜெ. கோபப்படுவார்கள் என்று எழுதியிருக்கிறார். இது பெரிய குறை கிடையாது) சோவிடம் தன் சொந்த அப்பாவைப் போன்ற மரியாதையைக் கொண்டவர். அந்த வாஞ்சையினால்தான், சோ, ஜெ.வை முதல்வராக இருந்தபோதும் ஒருமையிலேயே அழைத்தார். தன் 60 அகவையில், சோவை வீட்டில் சந்தித்து அவர்களின் ஆசிகளையும் பெற்றுக்கொண்டார்கள். சோ அவர்கள், ஜெ.வையும் அதிமுகவையும் கொஞ்சம் மென்மையாக விமரிசனம் செய்தார் என்பது உண்மைதான். அது, மோர், பாலிடாலைவிட நல்லது என்று விமரிசனம் செய்வதுபோல, இரண்டும் வெண்மையாக இருந்தாலும்.

  சோவை நலம் விசாரிக்கும் அந்த வீடியோவில், ஜெ.வின் அன்பும், தைரியமும், பாஸிடிவ் ஆட்டிடியூடும் தெரியும். (ஜெ. பற்றி எழுதும்போதே பல நினைவுகள் வருகின்றன. தந்தையின் துணையற்றவர். தாயின் துணை ஒரு அளவுக்குத்தான் அவருக்கு இருந்தது. திரையுலகப் பணம். அவருக்குக் கடவுள் அருளால் எம்ஜியார் என்ற mentor, சோ போன்ற நண்பர், தனக்கே உரிய புத்திசாலித்தனமும், வாழ்க்கையைத் தைரியமாக அணுகும் பண்பும், அவரின் வாழ்க்கையை நடத்தியது)

  எல்லாப் பத்திரிகைகளையும், ஒருவர், அந்த அந்த வயது கடக்கும்போது வாங்குவதையோ வாசிப்பதையோ நிறுத்துவர். (கோகுலம், விகடன்/கல்கி, குமுதம், கொஞ்சம் வயது ஆனபின் விகடன்/கல்கி, அப்புறம் பக்திப் பத்திரிகைகள் போன்றவை). ஆனால் எல்லா வயதுடையவர்களும் பெருமையாக வாங்கிய பத்திரிகை துக்ளக். எல்லோரும் சோவின் கருத்தென்ன என்று அறிய ஆவல் கொள்வார்கள். ‘நான் இந்தியா வரும்போது, பழைய துக்ளக் இருந்தாலும் (previous weeks) வாங்கிப் படிப்பேன்.

  அரசியல்வாதிகளுக்கும், தான் செய்வதை, நேர்மையாக ஒருவர் விமரிசனம் செய்வதை வரவேற்கவே செய்வார்கள். கூட இருக்கும் அல்லக்கைகள் (வேறு எப்படி அழைப்பதாம்) ஜால்ரா சத்தம் மட்டுமே போடும். இனி இந்தமாதிரி அரசியல் கண்ணாடியாக யார் இருக்கிறார்கள்?

  அரசியல் ஆளுமையும், அரசியலின் கண்ணாடியும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் மறைந்தது வருத்தம்தான். இவர்களின் நினைவு அரசியலில் இருப்பவர்களுக்கும், அரசியல் ஆர்வம் கொண்டவர்களுக்கும் எப்போதும் இருக்கும்)

  50 வயதைக் கடந்தவர்கள், தாங்கள், பெரிய ஆளுமைகள் உடையவர்கள் வாழ்ந்தபோது வாழ்ந்திருக்கிறோம் என்று மனதைத் தேத்திக்கொள்ள வேண்டியதுதான்.

 3. LVISS சொல்கிறார்:

  Only those who has seen Tughlaq grow from the begining will know how bold a man he was – He did not spare any one as far as criticism is concerned —
  I have seen some of his plays , someof them twice —
  The photo of Cho blessing the madam is something i have not seen in any magazine – Thank you – Two tragedies in a row for T Nadu –

 4. Mahesh Thevesh சொல்கிறார்:

  தன் அன்புத்தங்கையைக் கவனிக்க அண்ணா அவரைத்தொடரந்து
  மேலுலகம் சென்று விட்டார்.தமிழகத்திற்கு ஏற்பட்ட மாபெரும்
  நஷ்டம்.இருவர் ஆத்மாக்களும் சாந்தி அடைய நான் பிராரத்திக்கிறேன்

 5. LVISS சொல்கிறார்:

  There was also an English biweekly Pickwick edited by Cho which was discontinued after sometime –

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.