ரூபாய் நோட்டு வாபஸ் – திரு.எஸ்.குருமூர்த்தி அவர்களின் வாதங்கள்….

gurumoorthi-2

ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிக்கப்பட்டு, 50 நாட்கள் முடிவடைந்து
விட்ட இந்த நிலையில் இதன் சாதக, பாதகங்களைப்பற்றி, இயன்ற வரையில்
நேர்மையாக, வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என்பது என் நோக்கம்….

எனவே, பாஜக ஆதரவாளரும், பொருளாதார நிபுணருமான
திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’
ஆங்கில நாளிதழின் ஆசிரியர் ஜி.எஸ்.வாசுவுக்கு அளித்த ஒரு பேட்டியை கீழே
தந்திருக்கிறேன் – ஆளும்கட்சிக்கு மிக நெருக்கமான ஒரு பொருளாதார
நிபுணர் இதை விட வெளிப்படையாகப் பேச முடியாது என்பதை
நான் உணர்கிறேன். அவரது வெளிப்படைத்தன்மைக்கு
நமது பாராட்டுகள்.

—————————–

ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பு வெளியாகி சுமார் 50 நாள்கள் கழிந்துவிட்டன.
அதன் தாக்கம், நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகள் குறித்து
என்ன நினைக்கிறீர்கள்?

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கை என்பது நமது
பொருளாதாரத்தின் மீது திணிக்கப்பட்ட நடவடிக்கைதான். ஆனால், அந்த
நடவடிக்கையை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக் காரணம் என்ன? என்பதை
நாம் யோசிக்க வேண்டும். 2004-ஆம் ஆண்டில் இருந்தே நமது நாட்டு
பொருளாதாரத்தில், வேலைவாய்ப்பைப் பெருக்குவதில் முன்னேற்றத்தை
ஏற்படுத்தாமல் சொத்துகளின் (நிலம், தங்கம், பங்குச் சந்தை) மதிப்பில் போலியான
வளர்ச்சி காட்டப்பட்டு வந்தது. நமது உண்மையான பொருளாதார
நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு பெருமளவிலான பணம் புழக்கத்தில் இருந்தது.

உயர் மதிப்பு நோட்டுகளின் எண்ணிக்கை 2004-ஆம் ஆண்டில் 34 சதவீதமாக
இருந்தது. அடுத்த 6 ஆண்டுகளில் இது 79 சதவீதமாக உயர்ந்து, 2014-ஆம் ஆண்டில்
86 சதவீதமாக அதிகரித்தது. இதனால் பல்வேறு சொத்துகளின் விலை
செயற்கையாக உச்சத்தைத் தொட்டது. அதிகாரபூர்வமற்ற பணத்தின் புழக்கம்
அதிகரித்ததே இதற்குக் காரணம்.

இது உண்மையான வளர்ச்சி இல்லை. நாட்டில் கணக்கில் வராத பணம் அதிக
அளவில் தொடர்ந்து புழங்குவது நீண்ட காலத்தில் பொருளாதாரச் சீரழிவுக்கு வழி
வகுக்கும். அந்த மோசமான சூழ்நிலை ஏற்படாமல் தவிர்ப்பதற்கு இப்போது
எடுக்கப்பட்ட நடவடிக்கை அவசியமானது என்பதே எனது கருத்து. இது தவிர்க்க
முடியாத நடவடிக்கை.

முந்தைய சூழ்நிலையே தொடர்ந்தால் தேசம் எந்த நிலைக்கு செல்லும் என்பதை
முன்பே விவாதிக்காதது துரதிருஷ்டவசமானது. அதனால், இப்போதைய மத்திய
அரசும், பிரதமரும் அரசியல் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். முன்பு இந்திய
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர் இது குறித்து முன்னேற்பாடுகள் எதையும்
மேற்கொள்ளவில்லை. வங்கியில் இருந்து வெளியான ரூ.500, ரூ.1000 நோட்டுகளில்
ரூ.5 லட்சம் கோடி வங்கிக்குள் மீண்டும் வராமலேயே புழக்கத்தில் இருந்துள்ளது.
இதுதான் கருப்புப் பணமாகவும் உருவெடுத்தது. இதைத் தடுக்கத்தான் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.

———————–

ஆனால், இது முறையாக திட்டமிடப்பட்ட நடவடிக்கைதானா?

நிச்சயமாக இல்லை. இதனை மேலும் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியிருக்க
வேண்டும். ஆனால், உலகில் இதுபோன்ற மிகப்பெரிய நடவடிக்கை இதற்கு முன்பு
எங்கும் மேற்கொள்ளப்பட்டதில்லை. பொதுவாக பணவீக்கம் உச்சத்தை எட்டி,
பணத்துக்கு மதிப்பே இல்லாமல் போகும் சூழ்நிலையில்தான், இதுபோன்ற ரூபாய்
நோட்டு வாபஸ் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், நமது நாட்டில் நிலவிய
சூழ்நிலை முற்றிலும் வேறுபட்டது. இங்கு உயர் மதிப்பு நோட்டுகள் அதிகம்
இருந்தது மூலதனப் பெருக்கத்தையும், வளர்ச்சியின் பாதையையும் சிதைப்பதாக
இருந்தது. கண்டிப்பாக இதனை நிறுத்தியாக வேண்டும். 2004 அல்லது 2005-ஆம்
ஆண்டிலேயே மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கையை எடுத்திருந்தால்,
இதுபோன்ற கடினமாக சூழ்நிலை உருவாகியிருக்காது.

——————–

இப்போதைய மத்திய அரசு ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழிந்துவிட்டன.
அவர்கள் குறைவான மதிப்புள்ள நோட்டுகளை போதிய அளவில் அச்சிட்டுவிட்டு,
உயர் மதிப்பு நோட்டுகளை வங்கிக்கு கொண்டுவர முயற்சித்திருக்கலாம் அல்லவா?

இதில் இரண்டு பிரச்னைகள் உள்ளன. கருப்புப் பணத்தையும், அதனால்
உருவாக்கப்படும் கருப்பு சொத்துகளையும் ஒரே அடியில் ஒழிக்க வேண்டும்.
படிப்படியாக உயர் மதிப்பு நோட்டுகளை திரும்பப் பெற்றால் இது சாத்தியமாகாது.

இரண்டாவதாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இதில் இணைந்து செயல்பட
வேண்டும். எனவே, ஆர்பிஐ தலைமை மாற்றத்துக்குப் பிறகு இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது என்று நான் கருதுகிறேன்.

———————

அப்படியென்றால் மத்திய அரசுக்கும், முந்தைய ஆர்பிஐ கவர்னருக்கும் இடையே
முழு நம்பிக்கை இல்லை என்று கூறுகிறீர்களா?

நான் அப்படிக் கூறவில்லை. ஆனால், முழு நம்பிக்கையில்லாமல் இருவரும்
இணைந்து செயல்பட முடியாது. இதுபோன்ற முக்கிய நடவடிக்கைகளை ஒருமுறை
விவாதித்துவிட்டால், அதில் ரகசியத்தைக் காக்க முடியாது. மத்திய அரசில்
முக்கியமானவர்களுடன் மட்டும் முதலில் பிரதமர் இதனை விவாதித்துவிட்டு,
பிறகுதான் அமைச்சரவைக் கூட்டத்தில் உயர் மதிப்பு நோட்டுகள் வாபஸ்
நடவடிக்கையைக் கூறியுள்ளார். இதனால், அமைச்சர்களிடம் பிரதமருக்கு நம்பிக்கை
இல்லை என்றா கூற முடியும்? இது மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட
நடவடிக்கை என்பதே எனது கருத்து.

——————-

இப்போது ஏறக்குறைய 90 சதவீத உயர் மதிப்பு நோட்டுகள் வங்கிகளிடம்
வந்துவிட்டன. இதன் மூலம் கருப்புப் பணம் ஒழிப்பு என்ற முக்கிய நோக்கம்
நிறைவேறிவிட்டது என்று கருதுகிறீர்களா?

ஆமாம்… இதுவரை வங்கிக்கு வராமலேயே புழக்கத்தில் இருந்த பணம் இப்போது
வங்கிக்கு திரும்பியுள்ளது. இப்பணத்தை மீண்டும் புழக்கத்தில் விடும்போது
வங்கிகள் அதனைக் கண்காணிப்பது எளிதாகும். இந்த நடவடிக்கையால்
எதிர்மறையான தாக்கம் ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால், இது சிறிது
காலத்துக்கு மட்டும்தான்.

இதனால்தான் ஏராளமான பொதுமக்கள் வங்கி வாசல்களில் நீண்ட வரிசையில்
காத்திருக்க நேரிட்டது. ஆனால், அவர்கள் அரசு மீது எவ்வித காழ்ப்புணர்ச்சியையும்
ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ரூபாய் நோட்டு பிரச்னையால் வன்முறை
நிகழக்கூடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்தது. ஆனால், மக்கள் இந்த
நடவடிக்கையை ஆதரித்தனர். இந்திரா காந்தி ஆட்சியில் வங்கிகள்
தேசியமயமாக்கப்பட்ட நடவடிக்கையை மக்கள் வரவேற்றனர். அதேபோன்று
இப்போதைய நடவடிக்கையும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

—————————

அப்படியென்றால் எந்தக் கட்டத்திலும், யாருக்கும் அசெளகர்யம் ஏற்படவில்லை
என்று கூறுகிறீர்களா?

யாருக்கும் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று நான் கூறவில்லை. இதன்
மூலம் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. 10 லட்சம் கோடி வரைதான் வங்கிக்கு
திரும்ப வரும் என்று எதிர்பார்த்து, அதற்கு மாற்றாக ரூ.6 முதல் 7 லட்சம்
கோடியைத்தான் ஆர்பிஐ அச்சடித்து வந்துள்ளது. ஒருவிதத்தில் இது தவறான
கணிப்புதான் என்றாலும் இந்த நடவடிக்கையால் உண்மையான பொருளாதார
வளர்ச்சி என்ன என்பது தெரியவரும். சொத்துகளின் பண மதிப்பு மட்டும் உயராமல்,
வளர்ச்சி என்பது ஆக்கபூர்வமானதாக இருக்கும்.

————————-

கருப்புப் பணம் ஒழியும் என்ற நோக்கில் மக்கள் பிரதமரின் நடவடிக்கையை
முதலில் ஆதரித்தாலும், இப்போது ஆதரவு குறைந்து விட்டதுதானே?

முதலில் மக்கள் இந்த நடவடிக்கையை பெருவாரியாக ஆதரித்தனர் என்ற
கருத்தையே மீண்டும் கூறுகிறேன். பொது நன்மை கருதி அவர்கள் ஏற்றுக்
கொண்டார்கள். இது சிரமம்தான் என்றாலும், நாட்டுக்கு அவசியமான ஒன்று. அடுத்த
சில வாரங்களில் பிரச்னை தீர்ந்துவிடும் என்றே நினைக்கிறேன். இப்போது
மொத்தமாக ரூ.13.5 லட்சம் கோடி வங்கிக்குத் திரும்பி வந்துள்ளது. இது
உண்மையான வெற்றி.

————————-

சிறிய, நடுத்தரத் தொழில்களுக்கு வங்கிகள் அதிகம் உதவ வேண்டும் என்ற
கருத்தை உடையவர் நீங்கள். இப்போதைய நடவடிக்கையால் சிறு, நடுத்தரத்
தொழில் நடத்துவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த உங்கள் பதில் என்ன?

அனைத்துத் தொழில்களையும் முன்னேற்றுவதற்கான முன்னோட்டமாகத்தான்
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு, நடுத்தரத்
தொழில்கள் பாதிக்கப்பட்டது போலத் தோன்றினாலும் விரைவில் நிலைமை சீராகும்.

சிறு, நடுத்தர தொழில்களுக்குத் தேவையான கடனில் 60 சதவீதம் மட்டுமே
கிடைத்து வருகிறது. அதுவும் அதிக வட்டியில்தான் கிடைக்கிறது. அதாவது
இப்போது சிறு, நடுத்தரத் தொழில்களில் 4 சதவீதத்தினர் மட்டுமே வங்கிக் கடன்
பெறமுடிகிறது. மீதமுள்ள 96 சதவீதம் பேர் அதிக வட்டிக்கு வெளியில் கடன்
பெற்றுத்தான் தொழில் நடத்துகின்றனர். இப்போது வங்கிக்கு பெருமளவில் பணம்
வந்துள்ளது. இனி வங்கிகள் சிறு தொழில் தொடங்க அதிக அளவில் குறைந்த
வட்டியில் கடன் அளிக்க முடியும்.

———————————-

இது நிச்சயமாக நடைபெறும் என்று நம்புகிறீர்களா? வங்கிகளில் உள்ள கூடுதல்
பணத்தில் இருந்து பெரு நிறுவனங்கள்தானே அதிக கடன் பெற்று லாபமடையும்?

ஏதாவது பெரிய இடத்தில் இருந்து அழுத்தம் இன்றி இதுபோன்ற செயல்கள் (பெரு
நிறுவனங்களுக்கு வங்கிகள் அதிக கடன் கொடுப்பது) நடைபெறாது என்பதே எனது
கருத்து. பல்வேறு தொழில் நடத்துபவர்கள், வங்கிக் கணக்குகளைத் தொடங்கி,
வங்கி அமைப்புக்குள் வந்துவிட்டால், அவர்களுக்கு எளிதாக வங்கிக் கடன்
கிடைக்கும்.

—————————————

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி)
என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு வலுவான பொருளாதாரத்தில் புழக்கத்தில் உள்ள பணத்துக்கும் ஜிடிபி-க்கும்
உள்ள விகிதம் 8 சதவீதத்தை ஒட்டி இருக்க வேண்டும். இப்போது இந்த விகிதம் 12
சதவீதமாக உள்ளது. கடந்த 1999-ஆம் ஆண்டில் இந்த விகிதம் 9.4 சதவீதமாக
இருந்தது. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் இருப்பதே
இப்போதைய நிலைக்குக் காரணம். நாட்டில் ரூ.12 லட்சம் கோடி ரூபாயாவது
குறைந்த மதிப்புள்ள நோட்டுகளாக இருக்க வேண்டும். அப்போதுதான் பணம்
தேங்காமல் புழக்கத்தில் இருக்கும். இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை
எடுக்காவிட்டால் முறையான பொருளாதார வளர்ச்சி ஏற்பட வழியில்லை என்பதே
எனது கருத்து.

* நாட்டில் கணக்கில் வராத பணம் அதிக அளவில் தொடர்ந்து புழங்குவது நீண்ட
காலத்தில் பொருளாதார சீரழிவுக்கு வழி வகுக்கும். அந்த மோசமான சூழ்நிலை
ஏற்படாமல் தவிர்ப்பதற்கு இப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை அவசியமானது. *

———————————————————

பின் குறிப்பு –

1) நல்ல நோக்கம் – ஆனால், ஒழுங்காக திட்டமிடப்படவில்லை என்று
திரு.குருமூர்த்தி கூறுகிறார்.
நாமும் ஆரம்பம் முதலே அதைத்தான் கூறி வருகிறோம்.

——————

சில விஷயங்கள் இந்த பேட்டியில் தொடப்படவே இல்லை….

1) உயர்மதிப்புடைய, இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வெளியிடப்பட்ட
விஷயத்தை இங்கு அவர்கள் விவாதிக்கவில்லை.
கேட்டிருந்தால், அதையும் தவறு என்றே கூறி இருப்பார்
என்று நினைக்கிறேன்.

( பேட்டியின் இடையே திரு.குருமூர்த்தி அவர்கள் கூறி இருப்பது –
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் இருப்பதே
இப்போதைய நிலைக்குக் காரணம். நாட்டில் ரூ.12 லட்சம் கோடி ரூபாயாவது
குறைந்த மதிப்புள்ள நோட்டுகளாக இருக்க வேண்டும். அப்போதுதான் பணம்
தேங்காமல் புழக்கத்தில் இருக்கும்……..)

2) cashless or less-cash விவகாரம் குறித்தும் இங்கே
பேசப்படவில்லை. நான் திரு.குருமூர்த்தி அவர்களின் விவாத அரங்கு
ஒன்றிற்கு நேரில் சென்றிருந்தேன்.

cashless soceity – என்பது, இந்தியாவில்
நடைமுறை சாத்தியமில்லாத விஷயம் என்பதை
அங்கே அவர் வெளிப்படையாகவே கூறினார்.

———————

நேற்றைய தினம் திரு.ராகுல் காந்தி அவர்கள் இந்த விஷயம் குறித்து
பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

ஒன்றைத்தவிர, மற்ற எல்லாமே வெறும் அரசியல் தான் என்று
நான் கருதுகிறேன்.

ஆனால், அந்த ஒரு கேள்வி, நியாயமான ஒன்று…
மக்களுக்கு பாஜக அரசு அதற்கான் விளக்கத்தை
அவசியம் தர வேண்டும்…
மத்திய அரசின் நடவடிக்கைகளைப்பற்றி மக்கள் நம்பிக்கை
கொள்ள வேண்டுமானால், அந்த விவரம் அவசியம் வெளியிடப்பட
வேண்டும்…..

அது என்ன கேள்வி …. ?

500-1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட
நவம்பர் 8-ந்தேதிக்கு முந்திய இரண்டு மாதங்களில்,
வங்கிகளில் 25 லட்சம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்தவர்கள்
பற்றிய விவரங்கள் வெளியிடப்பட வேண்டும்….!!!

மக்களின் நம்பிக்கையை மத்திய அரசு பெற விரும்பினால்,
சாக்கு போக்கு சொல்லாமல், இந்த விவரங்களைத் திரட்டி,
வலைத்தளத்தில் வெளியிட வேண்டும்…. செய்யுமா….?

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ரூபாய் நோட்டு வாபஸ் – திரு.எஸ்.குருமூர்த்தி அவர்களின் வாதங்கள்….

 1. LVISS சொல்கிறார்:

  Where the implementation went wrong is allowing people to deposit the old notes in any bank — They should have been asked to deposit the notes only in their bank accounts in any of their branches -This would have done away with having to fill up a form and show idendity cards -Those who did not have accounts should have been asked to deposit the old notes in Post offices where their idendity can be checked thoroughly before accepting the cash –The procedure that was followed put lot of pressure on the small branches which did not have staff to attend to thousands of people –All this late sitting and crowding in the banks and the roads could have been avoided —
  Why Rs 2000 was introduced was explained clearly in a discussion by Bibek Debroy a member of NIti Ayog to Karan Thapar and also a group of youngsters in another channel -Many seems to have missed out on this explanation and are still asking this question —

  http://www.ndtv.com/india-news/why-2000-rupee-note-makes-sense-is-necessary-economist-bibek-debroy-1626050
  In an interview Mr Gurumurthy said that when he asked the PM whether he meant cashless society the PM had reportedly told him that it was less cash society that he meant —
  This is also politics by Raghul Gandhi -Probably He wants to see whether the name of every party comes in this including the ruling party — What if the ruling party name comes in the list -It would show they have deposited the money lying with them — Any money that is shown in the account is accounted money and can be questioned —

 2. Lakshmi Mohan சொல்கிறார்:

  அன்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,

  துவக்கம் முதலே நீங்கள் எழுதி வந்த கருத்துக்களை அறிவேன்.
  நல்ல நோக்கத்துடன் தான் உங்கள் கட்டுரை இருந்தது..
  அதில் எதுவும் ஐயம் இல்லை..

  திரு குருமூர்த்தி அவர்கள் கூறியதை போன்று உலக அளவிலே இப்படி ஒரு நடவடிக்கை எந்த நாடுமே முன்கூட்டியே எடுத்ததில்லை..
  நிலைமை கை மீறும்போதுதான் எடுக்கத் துணிவார்கள்..
  மக்கள் சக்தி மீது மிகவும் பயம் கொண்டு தவிர்க்கப் பார்ப்பார்கள்.
  அந்த கையறு நிலையிலே மக்களும் வேறு வழியின்றி ஏற்றுக் கொள்வார்கள்..
  இங்கே நான் உணர்வது ..

  எந்த ஒரு சராசரி அரசியல்வாதியும் இத்தகைய நடவடிக்கை எடுக்கத் துணிய மாட்டார்கள்..
  அப்படியே துணிந்தாலும் கடும் நெருக்கடி காரணமாக இடையிலேயே பின் வாங்கி விடுவார்கள்..

  பிரதமர் மோடியின் துணிச்சல் பாராட்டத் தக்கது..
  மக்கள் கஷ்டப் பட்டார்கள் …உண்மைதான்…
  ஆனால் இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில்
  அறுபது ஆண்டுகளாக காங்கிரஸ் பேரியக்கம் ஆண்டும்..
  50 சதவீத கிராமங்களில் மின் வசதி இல்லை..
  வங்கி கணக்கை துவக்க வைக்க முயலவில்லை..
  அரசு மற்றும் தனியார் துறைப் பணியாளர்களை தாண்டி
  ஒருவரும் அரசுக்கு வருமான வரி கணக்கு கொடுத்ததில்லை..
  அதைப்பற்றி திருவாளர்கள் சிதம்பரமோ முகர்ஜியோ என்றுமே கவலை பாடவும் இல்லை..
  வரி கட்டும் குடிமகனை எவ்வளவு கசக்க முடியுமோ அதைத்தான் இதுவரை செய்து வந்தார்கள்..
  என்னுடைய நண்பர்களில் சிலர் பைனான்ஸ் மற்றும் ஆட்டோ மொபில் உதிரி பாகங்கள் தொழில் செய்து வருகின்றார்கள்..
  அவர்கள் இதுவரை எந்த ஒரு வரியும் செலுத்தாமல் குவித்தார்கள்..
  இந்த திட்டம் வந்தவுடன் அவர்களுக்கு வந்த கோபம் இதுவரை நான் பார்த்து அறியாதது..
  ஒரு ஒழுங்கு முறைக்குள் செயல் பட வேண்டுமென்றால் எல்லோர்க்கும் கடினமாகத்தான் இருக்கின்றது..
  இதனால் பிரதமர் மோடிக்கு என்ன தனிப்பட்ட லாபம்.?

  பல பினாமிகள் தங்கள் பணத்தை ஏழை மக்களிடம் கமிஷன் அடிப்படையில் மாற்ற முயலும்போதே தேங்கி கிடந்த பணம் வெளியில் வரத் தொடங்கி விட்டது…ஏழைகளுக்கும் பலன் கிடைக்கத் தொடங்கி விட்டது.

  இவ்வளவு பெரிய திட்டத்தை நடைமுறைப் படுத்தும்போது பல இன்னல்கள், எதிர்பார்க்காத சிக்கல்கள் வரத்தான் செய்யும்..
  ஆனால் அன்னை இந்திரா காந்தியைப் போன்று மிக தைரியமான முடிவை நாட்டிற்காக எடுத்த மோடியை மட்டும் அல்ல அருண் ஜெட்லீ , முன்னாளில் திண்டுக்கல் கலெக்டராக பணியாற்றி இன்றைய நிதி செயலராகவும் உள்ள சக்தி காந்த
  தாஸ் போன்ற அனைவருமே பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள்..

  நம் மாநிலத்தில் ரேஷன் அட்டையில் உள் தாள் ஓட்டுவதில் இரண்டு கழகங்களும் எவ்வளவு திறமையாக பணியாற்றுகின்றன என்பதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்..

  இவ்வளவு பெரிய மலைக்க வைக்கும் முடிவு,,பலவித சிக்கல்கள் அத்தனையும் எதிர்கொண்ட மக்கள் , அரசு , அரசு அதிகாரிகள் ,வங்கிப் பணியாளர்கள் அனைவரையும் போற்றுவோம்..

  – இலக்குமி மோகன்

 3. Sanmath AK சொல்கிறார்:

  Dear KM Sir,

  I am not any brilliant economist to put an argument against such an experienced economist, but I have one question for this statement – ///இப்போது ஏறக்குறைய 90 சதவீத உயர் மதிப்பு நோட்டுகள் வங்கிகளிடம் வந்துவிட்டன. இதன் மூலம் கருப்புப் பணம் ஒழிப்பு என்ற முக்கிய நோக்கம் நிறைவேறிவிட்டது என்று கருதுகிறீர்களா?

  ஆமாம்… இதுவரை வங்கிக்கு வராமலேயே புழக்கத்தில் இருந்த பணம் இப்போது
  வங்கிக்கு திரும்பியுள்ளது. இப்பணத்தை மீண்டும் புழக்கத்தில் விடும்போது
  வங்கிகள் அதனைக் கண்காணிப்பது எளிதாகும்.///…..The notes released earlier were also through banks. For eg, I am a salaried employee. So whatever the money I have is accounted for(in my case it is the fact). Now if I have to take some certificate or approval from govt officer, and if he/she demands bribe, if I am paying that, my tax-paid accounted money is going to him. How will the bank monitor this ???….. What is the guarantee that, same would not happen again ???

  My mom & dad, both of them were salaried employees, used to have at least 5000 in cash(which I know) as a contingency sum…. Mostly this would not come out unless there is some kind of emergency. Even otherwise this would normally go in pieces for household expenses or to some medical expenses. Here the money which was at my home was not a black money – but the “bhakths” and other pro-bjp economists are trying to portray this as “black money”……… what I gave was an example….

  For a country with more than 60% of population employed or indulged in unorganized sector and a country where around 30% of people are below poverty line, this scheme is a blunder….. My small brain understands this demonetization as in this manner…..

 4. Arun சொல்கிறார்:

  Nice article and analysis!!!

 5. இளங்கோ சொல்கிறார்:

  ராகுல் காந்தி கேட்ட அந்த 25 லட்சம் ரூபாய் லிஸ்ட்டைப்பற்றி
  ஏன் யாரும் பேச மாட்டேனென்கிறார்கள் ?
  அதை வெளியிடுவதில் மத்திய அரசுக்கு, பிரதமருக்கு என்ன கஷ்டம் ?
  மடியில் கனம் இல்லை என்றால் உடனே வெளியிட்டு அவர் வாயை அடைத்து விடலாமே.?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.