எம்ஜியார்…..என்கிற பிம்பம் உருவான விதம் ….!!!

mgr-m-m

அப்போதெல்லாம், புரட்சித்தலைவர், மக்கள் திலகம்
என்கிற பட்டங்கள் எல்லாம் கிடையாது…
எங்களுக்கு அவர் “எம்ஜியார்” மட்டும் தான்…!
11-12 வயதிருக்கும் எனக்கு – முதல் தடவையாக
நான் எம்ஜியார் படம் பார்த்தபோது.

அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாக்களில் மூன்று ஹீரோக்கள்
இருந்தார்கள். மூவருக்கும் மூன்றெழுத்து தான்…

சிவாஜி, எம்ஜியார், ஜெமினி…

இதில் வேடிக்கை என்னவென்றால்
சிவாஜியை பிடித்தவர்களுக்கு எம்ஜியாரை பிடிக்காது.
எம்ஜியாரை பிடித்தவர்களுக்கு சிவாஜி
பெயரைச் சொன்னாலே எரிச்சல்.
இதில் அதிருஷ்டம் செய்தவர்ஜெமினி தான்.
அவரை கொண்டாடியவர்களும் இல்லை –
வெறுத்தவர்களும் இல்லை….He was a soft hero..!

எனக்கு என்னவோ – சிவாஜியையும் பிடிக்கும்…
எம்ஜியாரையும் பிடிக்கும்…

ஆனால், என் அண்ணாக்களும் ( 4 பேர்…!!! ), நண்பர்களும்
என்னை ஒரு விசித்திர ஜந்துவாகவே பார்த்தார்கள்.
அவர்களில் ஒருவனைத்தவிர மீதி எல்லாருமே சிவாஜி பிரியர்கள்….
சிவாஜியை பிடிப்பவனுக்கு எப்படி எம்ஜியாரை பிடிக்க முடியும்
என்று என்னிடம் சண்டை பிடிப்பார்கள்…..!!

ஒருவரை பிடிப்பதால் இன்னொருவரை பிடிக்கக்கூடாது
என்பது சட்டமா என்ன ?

என் ரசனை எனக்கு …
ராஜா, ராணி – சரித்திரப்படம் என்றால் –
அவை எம்ஜியாரை தவிர வேறு யாருக்கும் பொருந்தாது –
என்பது என் அபிப்பிராயம்.
இன்று வரை அந்த அபிப்பிராயம் மாறவில்லை…

mgr-historical

சிவாஜியை வேறு விஷயங்களுக்காக பிடிக்கும் –
அற்புதமான வசன உச்சரிப்பு, தமிழ், அவரது கம்பீரக்குரல்,
வித்தியாசமான முகபாவங்கள்,
மாறுபட்ட கதாபாத்திரங்கள்…

எனவே எனக்கு அன்றிலிருந்து இன்று வரை
இருவரையுமே பிடிக்கும்.
ஜெமினியை அந்த காலத்தில் நாங்கள் எல்லாம்
அங்கீகரிக்கவே இல்லை.
ஆனால், பிற்காலத்தில் பழைய படங்களை பார்க்கும்போது,
ஜெமினி மட்டுமே மிக இயற்கையாக (underplay) நடித்திருப்பதும்,
மற்ற இருவரின் நடிப்பிலும் மிகைத்தன்மையும் இருப்பதையும்
உணர முடிந்தது.
காலங்கள் மாறும்போது, ரசனைகளும் மாறுகின்றனவே…!

அந்த காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த எம்ஜியார் படம்
“மலைக்கள்ளன்” – இப்போதும் எனக்கு பிடித்த
பாடல்களில் ஒன்று, நாமக்கல் கவிஞரின் அந்த
“எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே ” என்று எம்ஜியார் பாடும் பாடல்.

பின்னர் நிறைய படங்கள் – எல்லாம் ராஜா ராணி,சரித்திர
படங்கள். மதுரை வீரன், மகாதேவி, மன்னாதி மன்னன்……
நாடோடி மன்னன் – என்று வரிசையாக….

எம்ஜியாருக்கு பிடித்த பாடலாக “அச்சம் என்பது மடமையடா”
பாடலை கூறுவார்கள்…எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது…

இளமையில் நான் பெரும்பாலும், வடக்கேயே படித்தாலும்,
ஒரு மூன்று வருட காலம் சென்னையில் படித்தேன்.
அந்த சமயத்தில் என் நெருங்கிய தோழர்களில் ஒருவர் –
திமுகவை உருவாக்கிய ஐந்து தலைவர்களில் ஒருவரான
என்.வி.நடராஜன் அவர்களின் மகன் என்விஎன் பன்னீர்செல்வம்…!

அவன்(ர்), தந்தை திமுகவில் முக்கிய தலைவர்களில்
ஒருவராக இருந்ததால், எம்ஜியார், அவருக்கும் நன்கு
பழக்கமானவராக இருந்தார். எம்ஜியாருக்கு
கட்சியில் அப்போது இருந்த செல்வாக்கு பற்றி எல்லாம்
பன்னீர்செல்வத்தின் மூலம் அப்போதே எனக்கு தெரிய வந்தது….

பின்னர் நான் வடக்கே போய் விட்டேன்…
எம்ஜியார் முதலமைச்சராக இருந்தபோது நான்
பெரும்பாலும் வடக்கேயே இருந்தேன். இடையில்
தமிழ்நாட்டிலும் சில ஆண்டுகள் இருந்தேன்… அவர்
மறைந்த சமயத்தில் இங்கே, திருச்சியில் தான் இருந்தேன்.

ஒரு திரைப்பட நடிகராகவோ,
ஒரு அரசியல்வாதியாக,
முதலமைச்சராகவோ,
எம்ஜியார் அவர்களை ரசித்ததை விட,
விரும்பியதை விட –

ஒரு மிகச்சிறந்த மனித நேயமுள்ள மனிதராக,
தான் சந்திக்கும் அனைவரையுமே
நேசித்த ஒரு மனிதராக,
அடுத்தவருக்கு தெரியாமலே,
வெளியே சொல்லாமலே –
பலருக்கும் உதவி புரியக்கூடிய
ஒரு நிஜ ஹீரோவாக,
தனக்கென்று எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல்,
தான் சம்பாதித்ததை எல்லாம்
பிறருக்காகவே செலவழித்த ஒரு
அற்புதமான கொடைவள்ளலாக, ஒரு நல்ல மனிதராக –
என் இதயத்தில் நிறுத்திக் கொள்ளவே நான் விரும்புகிறேன்…

பிற்காலத்தில், இரண்டு சமயங்களில்
அவரை மிக நெருக்கத்தில்
பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

ஸ்ரீரங்கத்தில் ராஜகோபுரம் உருவாகிக் கொண்டிருந்தது….
கோபுரத்தில், 200 அடி உயரத்தில் தொழிலாளர்கள்
வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்….
கும்பாபிஷேகம் நெருங்கிக் கொண்டிருந்ததால் தீவிரமாக
வேலை நடந்து கொண்டிருந்தது….

மஹாராஷ்டிராவில் பணி புரிந்து கொண்டிருந்த நான் –
அந்த சமயத்தில் விடுமுறையில் அங்கே போயிருந்தேன்…
ஒரு ஞாயிறு காலை சுமார் பத்து மணி இருக்கும் –
கோபுரத்திற்கு கீழே – காந்திஜி சிலையருகே –
திடீரென்று ஒரு கார் வந்து நின்றது….

ஒரே சமயத்தில் முன்,பின் கதவுகள் திறந்தன.
ஆச்சரியம் – நம்பவே முடியவில்லை…
எந்தவித பந்தாவோ, போலீஸ் பாதுகாப்போ இல்லாமல் –
எம்.ஜி.ஆர். (கூடவே இதயம் பேசுகிறது மணியனும்…)
காரிலிருந்து வெளியே வந்தார்….

திடீரென்று அந்த இடமே பரபரப்பானது..
சுற்று முற்றும் பார்த்தார்… மேலே கோபுரத்தை பார்த்தார்…
வலது கையைத் தூக்கி மேலே பார்த்துக் கொண்டே அசைத்தார்..
மேலே, கோபுரத்தின் உயரத்தில் வேலை செய்துகொண்டிருந்த

கட்டிடத்தொழிலாளர்களுக்கு ஒரே ஆச்சரியம்,
மகிழ்ச்சி, ஆரவாரம் –
“வாத்யாரே” “வாத்யாரே” என்று
மேலேயிருந்து பலத்த கூக்குரல்கள்…!!!

மேலே பார்த்து – எல்லாருக்கும் வணக்கம் சொன்னார்…
எல்லா பக்கமும் கைகுவித்து
அனைவருக்கும் வணக்கம் சொன்னார்.
அடுத்த நிமிடம் காரில் ஏறினார்…. பறந்து விட்டார்…

ஒரே நிமிடத்தில் அந்த இடத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில்
ஆழ்த்தி விட்டு பறந்து விட்டார்.
எம்ஜியாரே அக்கறையுடன் வந்து பார்த்த மகிழ்ச்சியில் –
பின்னர் பணி படு மும்முரமாக நடந்தது….!

பின்னர் ஒரு தடவை எம்ஜிஆர் அவர்களுடன்
ஒரே மேடையில்,
அலுவலக நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற சம்பவம்….
(அதைப்பற்றி இதே விமரிசனம் தளத்தில்
முன்பொரு தடவை விவரமாக எழுதி இருக்கிறேன்…)

சுமார் இரண்டு மணி நேரங்கள் மேடையில், அவருக்கு
மிக அருகாமையில், இரண்டடி தூரத்தில் நின்றுகொண்டு,
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த
மகிழ்ச்சிகரமான, மறக்கமுடியாத அனுபவமும் கிடைத்தது….
ஒரு மிகப்பெரிய ஆளுமையின் அருகாமையை
அப்போது நன்கு உணர முடிந்தது….

எங்கேயோ, தொலைதூரத்தில்,
எந்தவிதத்திலும் அவருடன் சம்பந்தம் இல்லாத
என் போன்ற ஒருவனுக்கு
தன்னுடைய இருப்பின் (simply by his presence ) மூலமே
இவ்வளவு நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும்
அவரால் கொடுக்க முடிந்தால் –

அவருடன் வருடக்கணக்கில் நெருங்கிப்பழக,
சேர்ந்து உழைக்க – அவரது சகல பரிமாணங்களையும்
கண்டு அனுபவிக்க – வாய்ப்பு கிடைத்தவர்கள்
அவரைப்பற்றி எத்தகைய நினைவுகளில் இருப்பார்கள்…?

எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா
கொண்டாடப்படும் இன்றைய தினம் அவரைப்பற்றி
அவசியம் எழுத வேண்டும் என்று தோன்றியது.
பத்திரிகைகளின் மூலமும்,
மற்ற பிரபலங்களின் மூலமும் தெரியாத
எதை நான் புதிதாகச் சொல்லி விடப்போகிறேன்…?

எனவே தான், அவரைப்பற்றிய
என் நினைவுகளைப்பற்றி சொல்ல முனைந்தேன்….

“வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி,
மக்கள் மனதில் நிற்பவர் யார்….? ”

கட்சி, அரசியல், வகித்த பதவிகள் –
இவற்றை எல்லாம் தாண்டி –
எத்தனை ஆண்டுகள் ஆனாலும், மக்கள் மனதில்
நிலைத்து நிற்கக்கூடிய மிகச்சில மனிதர்களில்
எம்.ஜி.ஆர். அவர்களும் ஒருவர்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to எம்ஜியார்…..என்கிற பிம்பம் உருவான விதம் ….!!!

  1. GVS சொல்கிறார்:

    Vow. Kavirimainthan Sir,
    Your views almost reflect mine.
    I feel the same way as you feel about MGR.

  2. Sundar Raman சொல்கிறார்:

    உங்களை விட வயதில் சின்னவன் என்றாலும் கிட்ட தட்ட அதே எண்ணங்கள் தான் , elementry பள்ளியில் சிவாஜி – எம்.ஜி .ஆர் தான் , கமல் – ரஜினி அதற்கப்புறம், ஒரு சில ஆண்டுகளுக்கு பின் அரசியலில் – எப்போதுமே நான் அவர் பக்கம் தான் . எம்.ஜி .ஆர் ஒரு மாமனிதன்தான் .

  3. தமிழன் சொல்கிறார்:

    இன்றைக்குக் காலையிலிருந்து நீங்கள் ஏன் எம்ஜியார் பற்றி இன்று பதிவு எழுதவில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

    எம்ஜியாரின் மனித நேயம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவர் தன்னுடைய வாழ்க்கையை எழுதிய ‘நான் ஏன் பிறந்தேன்’ பாகம் 2 வாசித்துக்கொண்டிருக்கிறேன். எவ்வளவு நேர்மையாக அவர், அவருடைய வாழ்க்கையை அணுகியிருக்கிறார் என்பதையும், எப்படிப்பட்ட வறுமையின் பிடியில் இருந்திருக்கிறார் என்பதையும், அவர் ஒரு நல்ல ஆளுமையாக வளர்வதற்கு அவருடைய அம்மாவும், அண்ணன் சக்ரபாணி அவர்களும் எவ்வளவு உதவியிருக்கிறார்கள் என்பதையும், எந்தச் சூழ்நிலைகளில் அவர் மறுமணம் புரிந்துகொண்டார் என்பதையும் ரொம்பவும் நேர்மையாக எழுதியிருக்கிறார். அவர் தவறு செய்யாமல் அவருடைய அண்ணன் எப்படி அவரைக் காத்து நின்றார் என்பதையும் ஒளிவு மறைவு இன்றிச் சொல்லியிருக்கிறார்.

    அப்படிப்பட்ட வறுமை, கஷ்டப்பட்ட பின்புலத்தில் இருந்து வருபவர்கள் பொதுவாக, பணம் வரும் காலத்து, வசதி வாய்ப்புகள் வரும் காலத்து, பணத்தை அளவுக்கு அதிகமாகச் சேர்க்கும் எண்ணமே கொண்டிருப்பார்கள். தான், தன் குடும்பம், தன் தலைமுறைகள் இவைகள் எல்லோருக்கும், அர்த்தமற்ற முறையில் பணத்தைக் குவிக்கும், அளவில்லாத பணக்காரனாக இருக்கும் mentalityயே அப்படிப்பட்டவர்களிடம் இருக்கும். தன்னை மதிக்காமல் கஷ்டப்படுத்தியவர்களை நினைவில்கொண்டு, தனக்கொரு காலம் வரும்போது அவர்களையும், அவர்களைப்போன்றவர்களையும், அவர்களது சுற்றத்தையும் மிக மோசமாக நடத்தக்கூடிய எண்ணம்தான் அப்படிப்பட்டவர்களிடம் இருக்கும். இவை எதுவும் இல்லாமல், வளர வளர, மற்றவர்களை மன்னிக்கும், உதவும் சுபாவமும், ஏழை எளியவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் எண்ணமும் உடையவராக அவர் பரிணமித்ததுதான் அவரின் தனிப்பட்ட செம்மையான குணம். அதனால்தான் எளிய மக்கள், தன்னோடு ஐக்கியப்படுத்திப்பார்க்கமுடியாத நிறம் கொண்டிருந்தபோதும், தமிழர் இல்லை என்ற அவதூறை மற்றவர்களால் எப்போதும் வீசப்படுபவராக இருந்தபோதும், எண்ணி வியக்கத்தக்க பேச்சாளராக இல்லாமலிருந்தபோதும், மிகுந்த புகழ்வாய்ந்த செல்வாக்குள்ள நடிகராக இருந்தபோதும், தன்னில், தன் குடும்பத்தில் ஒருவராக எண்ணி அவர்மீது அளவிடமுடியாத பாசம் காண்பிக்கமுடிந்தது. அதனால்தான் தொண்டையில் குண்டடிபட்டு பேச்சுவன்மையை இழந்தபோதும் திரையுலகில் செல்வாக்கோடும், வெற்றிப்படங்கள் கொடுப்பவராகவும் இருக்கமுடிந்தது. தேர்தலின்போது தமிழகத்துக்கே வராமல் வெற்றிபெற முடிந்தது. அவருக்கு உடல் நலமில்லை என்றபோது, ஒட்டுமொத்த தமிழகமே ‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டுவேன்… இந்த ஓருயிரை நீ வாழவிடு’ என்று இறைவனை வேண்டவைத்தது. அமெரிக்காவிலிருந்து நோய் ஓரளவுக்குத் தீர்ந்து பொதுக்கூட்டத்தில் நன்றிகூறும் விதமாகப் பேச வந்தபோது,, தாய்மார்களால் ‘நீ பேசவேண்டாம். நிறுத்து. மேடைக்கு வந்ததே போதும்’ என்று அளவிலாத உள்ளன்போடு சொல்லவைத்தது.

    அவரால் வாழ்ந்தவர்கள் பலர். அவரால் பெரிய நிலைக்கு வந்தவர்கள் பலர். “வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி”. ஆனால் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் தகுதி படைத்த சரித்திர புருஷர். நினைவுகூறியதற்கு நன்றி.

  4. selvarajan சொல்கிறார்:

    அய்யா … எம்.ஜி.ஆருக்கும் – சிவாஜிக்கும் இருந்த பாசம் – நட்பு பற்றி அவர்களின் ரசிகர்களுக்கு பெரும்பாலும் தெரியாது — சிவாஜி தஞ்சாவூரில் கட்டிய சாந்தி கமலா தியேட்டரை திறந்து வைத்தது – எம்.ஜி.ஆர். அவர்கள் தான் — அதுமட்டுமின்றி திறந்து வைத்த அன்று சிவாஜிக்கு சொந்தமான சூரக்கோட்டை பண்ணையில் ஒரு விருந்தும் கொடுக்கப்பட்டது — அதில் எம்.ஜி.ஆரும் – அவருடன் சக மந்திரிகளும் கலந்துகொண்டார்கள் … அப்போது அவருடன் பயணித்த பலரும் வேறுவித எண்ணத்தோடு கேட்ட கேள்விக்கு எம்.ஜி.ஆர். அளித்த பதிலை படித்தால் — சிவாஜி மீது அவர் வைத்திருந்த பாசத்தைப்பற்றியும் — எம்.ஜி.ஆரின். உயர்ந்த தன்மையையும் புரியும் — அதைப்பற்றி முழுவதும் அறிய : // எம்.ஜி.ஆர் திறந்து வைத்த சிவாஜியின் தியேட்டர் // http://www.ithayakkani.com/jsp/Content/display_content_front.jsp?linkid=1&linkname=2012-04-23&content=566&columnno=0&starts=0&menu_image=- … சொடுக்கவும் — என்னே ஒரு உயர்ந்த — பண்பாளர் என்பது புரியும் …!!!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      உங்கள் சுட்டிக்கு மிக்க நன்றி செல்வராஜன்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  5. Raja சொல்கிறார்:

    MGR than tamilina Thalaivar. After MGR admk never find a male leader because of his personality and his attitude. I love and admire him from my childhood.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.