நாக்கை சப்பிக்கொண்டு உள்ளே நுழைந்து விட்டன அரசியல் நரிகள்….!!!

bull

மிக மிக மென்மையாக, எந்தவித வன்முறைக்கும் அசிங்கங்களுக்கும், ஆபாசங்களுக்கும், இடம் கொடுக்காமல்,

யாருக்கும் இடைஞ்சலின்றி, இளைஞர்கள், இளம் பெண்கள்,
தாய்மார்கள், குழந்தைகள் என்று அனைத்து தரப்பினரும்
சிறிதும் கவலையோ, அச்சமோ இன்றி கலந்துகொள்ளும்
விதத்தில் உலகுக்கே ஒரு உதாரணமாக மெரினாவில் நடந்து
வருகிறது உணர்ச்சி மிகு தமிழ் இளைஞர்களின் போராட்டம்.

அவர்களின், உழைப்பிற்கும், போராட்டத்திற்கும் கிட்டத்தட்ட
வெற்றி கிடைத்து விட்ட நிலையில் –
அரசியல்வாதிகள் உள்ளே புகுந்து விட்டது நிதரிசனமாக
தெரிகிறது….!

காட்டில் சிங்கங்கள் வேட்டையாடி இரையை பிடித்தவுடன்,
நரிகள் நாக்கை சப்பிக்கொண்டு, சுற்றி சுற்றி வருமாம்.
மிச்ச சொச்ச இரையை கவர்ந்து கொள்ள….!!!

“விடாதீர்கள், நிறுத்தாதீர்கள் – தொடருங்கள் போராட்டத்தை”
என்று எப்போது முதல் அரசியல்வாதியின் குரல் கேட்டதோ –

அப்போதே தோன்றியது சந்தேகம். இப்போது வரிசையாக
ஒவ்வொரு கட்சியினரின் ஆசைகளும் வெளிப்படுகின்றன.

வீரியமுடன் நடக்கும் போராட்டத்தில், விஷமிகள்
ஒப்பனையுடன் உள்ளே நுழைந்து விட்டது தெரிகிறது.
போராட்டம் தொடர்ந்தால்…? இடையில் அவர்கள் புகுந்து
வன்முறைகளுக்கான வித்துக்களை இட்டால் …?

அரசு பலப்பிரயோகம் செய்ய வேண்டி இருக்கும்…
போராட்டக்காரர்கள் சிதறுவார்கள்…
சிலர் கைது ஆவார்கள்… பலர் தலைமறைவு ஆவார்கள்…

அது தான் இவர்களுக்கு தேவை…
அதைத்தான் இவர்கள் எதிர்பார்க்கிறார்கள் –
உடனே பிரச்சினையை இவர்கள் கையில் எடுத்துக் கொள்வார்கள்…

அடக்குமுறை அரசியல் என்று
காவல்துறையின் மீதும், அரசின் மீதும் – குற்றம் சாட்டப்படும்….
அதற்கு மேல் தொடரும் போராட்டம் அரசியல்வாதிகளின்
கைகளில் சென்று விடும்…

இத்தனை அழகாக, அற்புதமான அறவழியில் போராட்டம்
நடத்திய இளைஞர்களின் உழைப்பின் பலன் இந்த கேடுகெட்ட
அரசியல்வாதிகளுக்கா போய்ச்சேர வேண்டும்…?

அவசர சட்டம் … நாளை சட்டமன்றத்தில் நிரந்தர சட்டமாக
நிறைவேற்றப்படுவது உறுதி. இதற்கு மேல், இதன் குறுக்கே
யாராவது வரவேண்டுமானால், அது நீதிமன்றங்களின் மூலமாகவே
நிகழ வேண்டும். நீதிமன்றங்கள் குறுக்கிடுவதை நாம் என்றுமே
தவிர்க்க முடியாது. உரிய முறையில் துவக்கத்திலிருந்தே
போராடினால், நீதிமன்றத்திலும் நமக்குரிய நியாயத்தை
பெற முடியும்….

இளைஞர்கள் இன்னும் போராட தமிழகத்திற்கு என்று
தீர்க்கப்படாத பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன…
அவற்றை எல்லாம் இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால்,
இதே தீவிரத்துடன் இணைந்தால், தீர்க்க முடியும் என்கிற
நம்பிக்கை இப்போது ஏற்பட்டிருக்கிறது. அதையும்
செய்து முடிக்க வேண்டுமானால் –

வீரியமாக இருக்கும்போதே,
கிட்டத்தட்ட வெற்றியடைந்த இந்த நிலையிலேயே,
உள்ளே புக மிகத்தீவிரமாக முனைந்துகொண்டிருக்கும்
அரசியல் நரிகளுக்கு இடம் கொடுக்காமல் –

இப்போதைய போராட்டங்கள்
முடித்துக் கொள்ளப்பட வேண்டும்.

எஞ்சி இருக்கும் –
தமிழகப் பிரச்சினைகளை பட்டியலிட்டு –

அவற்றை நிறைவேற்ற,
மத்திய, மாநில அரசுகளுக்கு –

மீண்டும் வருவோம் ஜாக்கிரதை “கபர்தார்…” என்று
கால அவகாசத்துடன் கூடிய உரிய எச்சரிக்கையை –
கொடுத்து விட்டு –

இன்றைய போராட்டங்களை
முடிவிற்கு கொண்டு வருவது நல்லது என்பது
என் கருத்து.

உணர்ச்சி வசப்படாமல், இளைஞர்கள் கூடி,
யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
முக்கியமாக, இந்த போராட்டம் நீர்த்துப்போய்
கரைந்து விடாமல், வீரியமாக இருக்கும்போதே –
முடித்துக் கொள்ளப்பட வேண்டும்.

அப்போது தான் அடுத்த போராட்டத்தைப்பற்றிய
அச்சம் மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கும்….!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to நாக்கை சப்பிக்கொண்டு உள்ளே நுழைந்து விட்டன அரசியல் நரிகள்….!!!

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  அனைத்து நண்பர்களுக்கும் –

  இன்றைய ….
  “நாக்கை சப்பிக்கொண்டு உள்ளே நுழைந்து விட்டன
  அரசியல் நரிகள்….!!! இடுகையை படித்திருப்பீர்கள்..

  அந்த கருத்து உங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும்
  என்றே நம்புகிறேன்.

  இயன்ற வரை இந்த கருத்து பரவலாக
  போராடும் இளைஞர்களின் பார்வைக்கு
  கொண்டு செல்லப்பட வேண்டும்… சரி தானே ?

  இந்த வலைத்தளத்து நண்பர்கள் அனைவருக்கும்
  இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 2. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  சரியான கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள்.
  இது உரிய முறையில் போராடும் இளைஞர்களிடம்
  கொண்டு சேர்க்கப்பட வேண்டும்

  காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர்
  கார்த்திகேய சிவசேனாதிபதியும் உங்களைப்போன்றே
  வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

  கார்த்திகேய சிவசேனாதிபதி தன் முகநூல் பக்கத்தில்
  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பது :-

  “ஜல்லிக்கட்டு ஆர்வலர்களே,
  இறுதியாக மத்திய அரசு மற்றும் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் அரசால் ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  இதை முதல் கட்ட நடவடிக்கையாக எடுத்து கொண்டு, சட்டரீதியாகவும், பாராளுமன்றம் மூலமாகவும் நிரந்தர தீர்வுக்கான பணிகளை தொடங்குவோம்.

  தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் பல உள்ளன. எனினும்,
  இப்போது ஜல்லிக்கட்டு பிரச்னையில் மட்டுமே கவனம்
  செலுத்த வேண்டும். நாம் அமைதியை கடைப்பிடித்து, ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு சட்ட ரீதியாக நிரந்தர தீர்வை ஏற்படுத்த முயற்சி செய்வோம். மாணவர்களும், மக்களும் போராட்டத்தில் களமிறங்கவில்லை என்றால் இந்த வெற்றி கிடைத்திருக்காது.

  இந்த சூழ்நிலையில் போராட்டம் முடிவுக்கு வர வேண்டும்.

  பின்னர் சிறிது ஓய்வு எடுத்து கொண்டு, இது குறித்து சென்னை, மதுரை, கோவை, சேலம் மற்றும் நெல்லையில் ஆலோசனை நடத்துவோம்.

  போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு குழுவின், கல்லூரியின்
  பிற அமைப்புகளின் தலைவர்களை அடையாளம் காணுங்கள்.
  நாம் அனைவரும் மீண்டும் ஒன்று கூடுவோம்.

 3. தமிழன் சொல்கிறார்:

  தமிழக முதல்வர் அவசரச் சட்டம் கொண்டுவந்தவுடனேயே, போராட்டத்தின் தீர்வு எட்டப்பட்டுவிட்டது. முதல்வரை, ஜல்லிக்கட்டு போட்டியை ஆரம்பிக்கச் சொல்லிவிட்டு போராட்டத்தை முடித்துக்கொண்டிருக்க வேண்டும். இதற்குமேல் போராடுவது, காரணத்தை நீர்த்துப்போகச் செய்யும். அவசரச் சட்டத்தை நிரந்தரச் சட்டமாக்குங்கள், பீட்டா நம் கலாச்சாரத்துக்கு எதிராகப் போனால் தடை செய்யவேண்டும் என்பதோடு முடித்துக்கொள்வதுதான் நல்லது. ஜவ்வாக இழுப்பது, போராட்டத்தின் காரணத்துக்கே இழுக்கைத் தந்துவிடும். As a by product of this protest, இளைஞர்கள் வெளிநாட்டு பானங்களுக்கும் உணவுகளுக்கும் எதிரான மனநிலை கொண்டுவந்தாலே, நம் நாட்டுக்கு நல்லதாகிவிடும். பீட்டாவின் காரணம் (agenda), வெளிநாட்டு உணவை நம் நாட்டில் தள்ளிவிடுவதுதான் என்பதைப் புரிந்துகொள்வதே போதுமானது. அதற்குத்தான் பீட்டா உழைக்கிறது. ஏற்கனவே நம் சூழலுக்கு ஒத்துவராத காலை உணவு நம் இல்லத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டது. குதிரைக்கு உணவான ஓட்ஸ், நம்முடைய உணவு என்பதுபோல் விளம்பரம் செய்யப்படுகிறது. நம்மை முட்டாளாக்க, நமக்குப் பிடித்த ஃப்ளேவர் என்றெல்லாம் மார்க்கெட் செய்யப்படுகிறது. அதனை நோக்கி இளைஞர்கள் திரும்பவேண்டும். ஆற்று மணல் கொள்ளைபோகாமல் தடுக்கவேண்டும்.

  சரியான சமயத்தில் கா.மை அவர்களின் இடுகை வந்துள்ளது.

 4. kalakarthik சொல்கிறார்:

  என் கருத்தும் அதுதான்.அடுத்த கவலை.இந்த இளையோரின் உடல் நிலை குறித்து.இந்த பனியும் வெய்யிலும் உடல் பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடாதென்று இறைவனை வேண்டுகிறேன்
  karthik amma

 5. Raman A V சொல்கிறார்:

  Perfect note. Anti social elements and other political parties waiting for an opportunity to spoil the focus. Dear Students and protesters, please go back to your work and take care of your health too.

 6. Raja சொல்கிறார்:

  Nalla Arivurai, but they are not accept Because they have psychological problem. Stage,Mike,appreciation,claps makes every one fool. Even they are not accept their victory . If they are not left today or 2morrow they will pay for it. Govt support protest that’s why women ,children,families came. I feel really worry about the common knowledge of youngsters.Once again Media helps for more damage every one frustrated about their news. They don’t know what is journalism….

 7. selvarajan சொல்கிறார்:

  அய்யா …! நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டே உள்ளே நுழைந்து விட்டன … உள்ளே நுழைந்ததோடு நில்லாமல் ” தனித்தமிழ்நாடு — தேசியக்கொடி அவமதிப்பு — மோடிஜிக்கு அர்ச்சனை ” என்று தனி ஆவர்த்தனம் நடத்த துவங்கி விட்டன ” புல்லுருவிகள் …

  ஆங்காங்கே ஒரு சில இடங்களின் ரேக்ளா ரேசும் — ஜல்லிக்கட்டும் அதிகமான பரிசு பொருட்களை காட்டி ஆளும் கட்சியினர் அரங்கேற்றிய போதே இதன் அடுத்தகட்டம் எதை நோக்கி என்பது புரிய ஆரம்பித்து விட்டது …

  அதுமட்டுமில்லாமல் — போராட்டம் திசை மாறுவதால் தான் விலகி கொள்வதாக ” ஹிப் ஹாப் ஆதி ” என்பவற்றின் பேட்டி அனைத்து டி .வி. களிலும் ஒளிபரப்பாகி கொண்டு இருப்பது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறி கொண்டு இருக்கின்றன …

  இரவு – பகல் பாராமல் ஒரு தன்னெழுச்சி போராட்டத்ததை சீர்குலைக்க — ஆதிக்க சக்திகளின் ஆட்டம் ஆரம்பமாகி விட்டது .இனி … ?

 8. Sundar Raman சொல்கிறார்:

  வேறு ஒரு தளத்திலே இட்ட பின்னூட்டம் :

  பெரியார் விதையா .?. ஆதலால் தான் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்களோ ?. ஜல்லிக்கட்டு, சாமிக்கு மாடு , அதன் மூலம் கன்று – கிட்டத்தட்ட எல்லா தரப்பு மக்களையும் குவித்து குலம் , பெருமை , பாரம்பரியம் என யோசிக்க வைத்து விட்டார்கள் ( அந்த பீட்டாவுக்கு நன்றி) …இனி மக்களிடம் உள்ள அறிவு அதை எடுத்த்து செல்லும். குறிக்கோளும் , லட்சியமும் இல்லாத மனிதர்களிடம் அதை புகட்டாகிவிட்டது ( எல்லாரும் இல்லை ..பெரும்பாலான இளைஞர்கள், பெண்கள் ) . பக்தி இனி வழி நடத்தும்.

 9. GVS சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  மிகச்சரியான நேரத்தில் மிகவும் அவசியமான செய்தியை
  நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் எழுதிய பிறகு
  இதை வலியுறுத்தி நிறைய செய்திகள் வெளிவருகின்றன.
  எல்லா இடங்களிலும் அரசியல்வாதிகள் புகுந்து
  நாசம் பண்ணி விடுகிறார்கள். நாளை கல்லூரிகள்
  திறக்கப்படுவது ஒரு நிம்மதி தரும் செய்தி.

 10. LVISS சொல்கிறார்:

  This what I wrote in an earlier comment — The protestors should call off their protests and wait for the outcome of the assembly proceedings — Having said that , any protests however worthy has a time line afer which it will lose stream or will see outsiders getting in —

 11. selvarajan சொல்கிறார்:

  அய்யா ….. ! திசை திரும்பி விட்டது — காவல்துறையினர் தடியை கையில் எடுத்துவிட்டனர் — ” திருவல்லிக்கேணியில் தடியடி — அவ்வை சண்முகம் சாலையில் கண்ணீர் புகை குண்டு வீச்சு — மெரினா சாலைகள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் ” என்று செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன ….

  அரசியல் கட்சிகள் { நாக்கை சப்பிக்கொண்டு உள்ளே நுழைந்து விட்டன அரசியல் நரிகள்….!!! } எதிர்பார்த்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாக நடைமுறைக்கு வந்துகொண்டு இருக்கின்றன — தன்னெழுச்சி போராட்டத்தை வைத்து — தங்களுக்கு எந்த வகையிலாவது லாபம் கிடைக்குமா என்று காத்துக்கிடந்தவர்களுக்கு – ஒரு வாய்ப்பாகி கொண்டு இருக்கிறது — தடியடிக்கு ” கண்டன குரல்கள் ” ஒலிக்க ஆரம்பித்து விட்டன … இனி மற்ற நடப்புகள் ” வழக்கம் போலத்தானே ” … ?

 12. selvarajan சொல்கிறார்:

  அய்யா … முந்தைய பின்னூட்டத்தில் // தடியடிக்கு ” கண்டன குரல்கள் ” ஒலிக்க ஆரம்பித்து விட்டன … இனி மற்ற நடப்புகள் ” வழக்கம் போலத்தானே ” … ? // என்று வினவியிருந்தேன் ….

  ஆரம்பித்து விட்டது சதிகாரர்கள் வன்முறை வெறியாட்டம் // போலீஸ் தடியடியால் வன்முறையாக மாறிய ஜல்லிக்கட்டு போராட்டம்.. ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்திற்கு தீவைப்பு //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jallikattu-ice-house-police-station-set-on-fire-miscreant-jan-23-272450.html

  இனி தீ வைப்பு — சாலைகளில் மரங்களை வெட்டிப்போட்டு மறியல் — கட்டாய கடையடைப்பு — கல்வீச்சு — உச்ச கட்டமாக எதை வேண்டுமானாலும் எறிந்து தங்களின் எண்ணத்தை ஈடேற்றிகொள்வார்கள் … அப்படித்தானே … ? இளைஞர்களின் உன்னத நடவடிக்கையை வேறு விதமாக மாற்ற — மாற்றிவிட்ட சதிகாரர்கள் ” அலங்காநல்லூரிலும் ” தங்களின் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள் …. அப்படித்தானே …. ?

 13. today.and.me சொல்கிறார்:

  Dear KM JI

  Padma vibhusan to. Jaggi vasudev
  Padma bhusan to Tuglak Cho

  Expecting your views

 14. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இது ஆசிரியர் சோ அவர்களுக்கு இவர்கள்
  செய்யும் அவமரியாதை….

 15. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்ப டுடேஅண்ட்மீ,

  இப்போது கூட ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை.
  இன்னமும் நேரம் இருக்கிறது…
  சோ அவர்களுக்கு நிகழ்ந்த அவமானத்தை சரி செய்ய –
  இவர்கள் இன்னொன்று செய்யலாம்…

  ஆசிரியர் “சோ” அவர்களின் பெயரை எடுத்து விட்டு,
  அந்த இடத்தில் இவர் பெயரை நுழைத்து விடலாம் –

  “ஸ்ரீலஸ்ரீ நித்யானந்தா சுவாமிகள்”

  -பொருத்தமாக இருக்கும்….

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.