முன்னாள் நிதியமைச்சர் – சுவாரஸ்யமான வருமான வரி வழக்கொன்று…. !!!

justice

சில சட்ட நுணுக்கங்கள் பற்றியும்,
சட்டத்திலுள்ள சந்து பொந்துகளை
பயன்படுத்திக் கொள்வது எப்படி என்பது பற்றியும்,
கொஞ்சம் புரிந்து கொள்ள – ஒரு அலசல்…!!!

உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு –

வருமான வரி இலாகாவிலிருந்து தனக்கு வந்துள்ள
ஒரு நோட்டீசை நிறுத்தி வைக்க (stay order)
உத்திரவிடக்கோரி –

அதே வருமான வரி இலாகாவிற்கு
பல வருடங்கள் தலைமைப் பொறுப்பேற்றிருந்த
ஒரு முன்னாள் நிதியமைச்சர் உயர் நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்கிறார்.

நீதிமன்றமும் அவரது வேண்டுகோளை ஏற்று,
வருமான வரி இலாகாவின் உத்திரவிற்கு Stay கொடுக்கிறது.

என்ன மாதிரியான வழக்கு அது ….?

மனுதாரரின் தாத்தா மிகப்பெரிய பணக்காரர்.
அந்த காலத்தில், தமிழ்நாட்டிலேயே பெரிய பணக்காரர்…
அதாவது, பிரிட்டிஷ்காரர்கள் காலத்திலேயே…
தன் பெயரில் ஒரு பல்கலைக்கழகத்தையே நிறுவியவர்…!!!

1948-லேயே காலமான அவரது சொத்துக்கள் பிரிக்கப்பட்டு,
1956-ல் பரம்பரை சொத்தாக பேரருக்கு வருகிறது…
என்ன, எத்தனை… எங்கே…?

மற்ற சொத்துக்களுடன்,
கர்நாடகாவில் – 200 ஏக்கர் காப்பி எஸ்டேட் …!

1956-ல் தனக்கு பரம்பரை சொத்தாக தாத்தாவிடமிருந்து
கிடைக்கப்பெற்ற 200 ஏக்கர் காப்பி எஸ்டேட்டை –
பேரர், தன் வாரிசுகளுடன் பகிர்ந்து கொள்கிறார்…
இது எப்போது, எந்த வருடத்தில்
நிகழ்ந்தது என்பது தெரியவில்லை..
எப்படியும் பேரக்குழந்தையும் அதில் இருப்பதால்,
அந்த குழந்தை பிறந்த பின்னராகத்தான் இருக்கும்.

(சாதாரணமாக பரம்பரை சொத்துக்கள் ஒருவரின்
மறைவிற்கு பிறகு தான், அவரது வாரிசுகளுக்கு போகும்..
இங்கு ஏனோ வித்தியாசம்…இருக்கும்போதே பங்கு பிரித்தல்…)
வருமான வரி கணக்கீடு காரணமாக இருக்கலாம்..!

பேரர், அவரது மனைவி,
அவர்களது ஒரே மகன், மகனது மனைவி,
அவர்களது குழந்தை (அதாவது பேரக்குழந்தை ) –
5 பேருக்குமாக ஆளுக்கு 40 ஏக்கர் என்று
அந்த 200 ஏக்கர் காப்பி எஸ்டேட் பிரிக்கப்படுகிறது.

இந்த 5 பேருமே வருமான வரி ரிடர்ன் கொடுப்பவர்கள்..
தங்களது வருமானத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவை,
விவசாய வருமானம் என்று வகைப்படுத்தி,
ஆண்டுதோறும், அந்த தொகைக்கு வருமான
வரியிலிருந்து விலக்கு பெற்று வந்தார்கள்.

வருமான வரி இலாகாவால், 2016-ல், அவர்களது 2009-10 க்கான

வருமான வரி கணக்கு ரிடர்ன் மறுபரிசீலனை செய்யப்பட்டு,
தலா ஆளுக்கு 6 லட்சம் ரூபாய் கூடுதல் வரி கட்ட வேண்டும்
என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நோட்டீஸ் மீதான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க
கோரி தான் வழக்கு போடப்பட்டிருக்கிறது… தடையுத்தரவும்
பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

மனுதாரரின் வாதம் என்ன…?

இந்த குறிப்பிடப்பட்ட தங்களது வருமானம், கர்நாடகாவில்
தங்களுக்கு சொந்தமான காப்பி எஸ்டேட்டில் விளைந்த
காப்பிக்கொட்டையை விற்றதால் கிடைத்த வருமானம்.

இத்தனை ஆண்டுகளாக, அந்த எஸ்டேட்டில்
உற்பத்தியாகி, விற்பனை செய்யப்பட்ட காப்பி உட்பட அத்தனை
விவசாய பொருட்களுக்கும் தாங்கள் வருமான வரியிலிருந்து,
agricultural income என்கிற தலைப்பில் முழுவதுமாக வருமான வரி விலக்கு பெற்று வந்ததாகவும்,

தற்போது தங்களுக்கு இந்த வருமானத்திலிருந்து வரி
கட்டச்சொல்லி நோட்டீஸ் வந்திருப்பது,
( அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ) உள்நோக்கத்துடன்
செய்யப்பட்டுள்ளது என்றும் –

தாங்கள் காப்பி கொட்டையை process செய்து விற்றால் தான்
அது பிசினஸ் வருவாயாக கருதப்படும்.

தாங்கள் வெறுமனே, விளைச்சலை தரப்படுத்தி, சுத்தப்படுத்தி,
காயவைத்து விற்றதால், அது வருமான வரி விதிப்பிற்கு
உட்பட்டது அல்ல என்றும் கூறி தடை பெறப்பட்டுள்ளது.

இத்தனை ஆண்டுகள் வருமான வரி இலாகாவிற்கு
தலைமை பொறுப்பு வகித்த ஒருவருக்கு,
பல வருடஅனுபவங்கள் பெற்ற
புகழ்பெற்ற சட்ட நிபுணர் ஒருவருக்கு –
எந்த வருமானம் வரிகளுக்கு உட்பட்டது என்பது
தெரியாமலா இருக்கும்… ?
பின் ஏன் எதிர்த்து வழக்கு போட வேண்டும்…?

முதல் காரணம் வக்கீல் ஃபீஸ் இல்லை…!!!
எவ்வளவு ஆண்டுகள் வேண்டுமானாலும்
கீழ் கோர்ட், மேல் கோர்ட், அதற்கும் மேல் கோர்ட்
என்று கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம்.
அதற்குள் ஆட்சிகள் மாறலாம் – காட்சிகள் மாறலாம்…!!!

இன்னனொரு முக்கிய காரண்ம் –
இதை அப்படியே ஏற்றுக் கொண்டு பணத்தை கட்டினால்,
அடுத்த 5 ஆண்டுகளுக்கும் வட்டியுடன் வசூலிப்பார்கள்…
பின்னர் எதிர்காலங்களிலும் கட்ட வேண்டியிருக்கும்..!

இந்த காப்பி எஸ்டேட் வருமானம் தொடர்பாக
வருமான வரி சட்டத்தில் ஒரு விசேஷ பிரிவே இருக்கிறது.
அது என்ன சொல்கிறது….?

இந்த சட்டப்பிரிவு, காப்பி எஸ்டேட் மூலம் வரும்
வருமானத்தை இரண்டு
பிரிவுகளாக (மட்டுமே) பிரிக்கிறது…

ஒன்று – காப்பி கொட்டையை பதப்படுத்தி (cure) விற்பனை
செய்து விடுவது… இந்த வகை விற்பனையில் வரும் மொத்த
வருமானத்தில் 25 % வருமானம் மட்டும், வருமான வரி
கணக்கீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். மீதி 75 % விவசாய
வருமானமாக கருதி முழுவிலக்கு அளிக்கப்படும்.

இரண்டு – காப்பி கொட்டையை, பதப்படுத்தி, வறுத்து,
பொடி செய்து, சிக்கரி சேர்த்தோ சேர்க்காமலோ, விற்பனை
செய்வது…. இந்த வகை விற்பனையில், மொத்த வருமானத்தில்
40 % வருமானம், வருமான வரி கணக்கீட்டுக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டு, மீதி 60 % வருமானம் விவசாய
வருமானமாக கருதி முழுவிலக்கு அளிக்கப்படும்.

————-

ஆக, காப்பி எஸ்டேட் மூலம் வரும் வருமானத்தில் –
25 % அல்லது 40 % வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு,
மீதி வருமானத்திற்கு தான் விவசாய வருமானமாக
கருதி விலக்கு அளிக்கப்படும்…!!!

முழுவதுமாக, 100 % வரி விலக்கு கொடுத்து இந்த பிரிவில்
விதிகள் ஏதும் இல்லை… ஆனால், சட்ட நிபுணர்கள்
வேறு ஏதேனும் விதிகளை சுட்டிக் காட்டக்கூடும்…
நமக்கு தெரிந்த சட்ட நிலை இது தான்…

——————

ஆனால், மிகப்பெரிய சட்ட நிபுணர்,
பல ஆண்டுகள் வருமான வரி இலாகாவிற்கே
தலைமை தாங்கியவர் – அவர் சொல்வதற்கு
காரணம் இல்லாமலா இருக்கும்…. ?

——————

இதற்கு முன்னால் நான் அளித்த வருமான வரி
“ரிடர்ன்” களை –
அப்படியே ஏற்றுக் கொண்ட வருமான வரி இலாகா
இப்போது எப்படி பழைய கணக்குகளை நோண்டலாம்
என்பது அவரது முக்கிய கேள்வி…

ஒன்று – அண்மைக்காலம் வரை
நிதியமைச்சராக இருந்த ஒருவரிடம் –
அவரது கீழ் இயங்கும் வருமான வரி இலாகா
எப்படி கேள்வி கேட்க துணியும்….? எனவே அவரது
ரிடர்ன் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும்…!

இரண்டு – வருமான வரி சம்பந்தமான கணக்கு “ரிடர்ன்” களை
ஆறு ஆண்டுகள் வரை மறுபரிசீலனைக்கு உட்படுத்தலாம்
என்பது வருமான வரி விதிகளில் ஒன்று.

ஆறு ஆண்டுகள்
முடிவடையும் முன்னர், மறுபரிசீலனை செய்யப்பட்டு
நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விட்டது.
எனவே, இதில் சட்ட விரோதம் என்று சொல்வதற்கு
ஒன்றுமில்லை.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, இப்போது
உள்நோக்கத்துடன் செய்கிறார்கள் என்று
இவர் சொல்வாரேயானால்,

அதே வாய்ப்புகள் இவர் அதிகாரத்தில் இருந்த காலத்திலும்
இருந்தன… அப்போதும் அரசுக்கு எதிரானவர்கள் மீது
அந்த வாய்ப்புகள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன
என்கிற வாதத்தை இவரே ஏற்றுக் கொள்வது போல்
அமையாது..?

இப்போதைக்கு நமக்கு இதற்கெல்லாம் விடையோ,
விளக்கமோ கிடைக்காது.
நமது நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின்
எண்ணிக்கையில் இன்னும் ஒன்று கூடும்…!!!
அவ்வளவே…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to முன்னாள் நிதியமைச்சர் – சுவாரஸ்யமான வருமான வரி வழக்கொன்று…. !!!

 1. சாமி சொல்கிறார்:

  காபின்னு சொன்னவுடனே எனக்கு ‘பசி’க்குதுங்க ஐயா. இதோ ஆர்டர் பண்ணிட்டேன்.

 2. Ganpat சொல்கிறார்:

  நான் படித்த மிகச் சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும் சிறந்த ஆரோக்கியமும் அருள வேண்டி மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன். _/I\_

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  கண்பத்,

  நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் தரிசனம் கண்டு மகிழ்ச்சி…!!!

  உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.