யாருக்கும் வெட்கமில்லை, வேதனையில்லை, மனசாட்சியும் இல்லை…!!!

..

ஒரு வழக்கு –

சுமார் 25 வருடங்களுக்கு முன்னர்,
டிசம்பர் 1991, இரவு 9.45 மணியளவில்,
ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள்கள்
கொண்ட ஒரு போலீஸ் டீம், சென்னை பேசின் ப்ரிட்ஜ் ஏரியாவில்
கலியன் என்கிற 21 வயது வாலிபரை, அவரது மனைவி, மற்றும்
கைக்குழந்தையுடன் ஒரு திருட்டு வழக்கு குறித்து
விசாரிப்பதற்காக பிடித்து அழைத்துச் செல்கிறது.
அந்த இளஞரின் மனைவி தங்களை விட்டு விடும்படி
காவலர்களிடம் கெஞ்சுகிறாள், கதறுகிறாள்…. நடக்கவில்லை.

பின்னர், உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் தலையிட்டதன் பேரில்,
அந்த பெண்ணும், குழந்தையும் மட்டும் விடுவிக்கப்படுகிறார்கள்.
எவ்வளவு கெஞ்சியும், அந்த வாலிபரை காவலர்கள்
விடுவிக்கவில்லை.

மூன்றாம் நாள் அந்த பெண்ணிடம், அவளது கணவன்
இறந்து விட்டான் என்று சொல்லப்படுகிறது.

அவனைப் பிடித்து அழைத்துச் சென்ற சப்-இன்ஸ்பெக்டர்,
பிரகாசம் என்கிற அந்த இளைஞன் தனது பிடியிலிருந்து
தப்பி ஓடியதாகவும், அவனைத் தாங்கள் துரத்திச்சென்றபோது,
அவன் பேசின் ப்ரிட்ஜ் பாலத்திலிருந்து தவறி விழுந்து, அந்த
காயங்களின் விளைவாக, அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு
சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனதாகவும்
அரசுக்கு ரிப்போர்ட் செய்கிறார்.

உள்ளூர் மக்கள் இதை எதிர்த்து காவல் நிலையம் எதிரே
திரண்டு கோஷம் போடுகின்றனர்…
அந்த எதிர்ப்பின் காரணமாக, அரசு ஒரு RDO விசாரணைக்கு
உத்திரவிடுகிறது.

அபூர்வமாக,
அந்த விசாரணை ரிப்போர்ட் –
போலீசாரின் கடுமையான தாக்குதல்கள் காரணமாகவே
அந்த இலைஞன் இறந்திருக்கிறான் என்று கூறுவதாக
அமைகிறது.

காவல் துறைக்கு எதிரான ரிப்போர்ட்….!!!
அதனால் தானோ என்னவோ –
1991-ல் நடந்த இந்த சம்பவம் 2009-ம் வருடம் தான்
செஷன்ஸ் கோர்ட் முன் முதல் முறையாக
விசாரணைக்கு வருகிறது.

வழக்கு விசாரணை தொடர்கிறது … தொடர்கிறது…
தொடர்ந்து கொண்டே இருக்கிறது….

குற்றம் சாட்டப்பட்ட 3 காவலர்களில் ஒருவர் இறந்து
விடுகிறார். மீதி இரண்டு பேரும் பணியிலிருந்து ஓய்வு
பெற்று விடுகின்றனர்.
(பெயர்களை தவிர்த்திருக்கிறேன்…)

கடைசியாக இந்த வழக்கை விசாரிக்கும் செஷன்ஸ் நீதிபதி –

பாலத்திலிருந்து விழுந்து தான் அந்த வாலிபன்
இறந்தான் ( 25 வருடங்களுக்கு முன்… ? )
என்கிற போலீஸ் தரப்பு வாதத்திற்கு எதிர் கேள்வி
வைக்கிறார்… “பிரிட்ஜிலிருந்து விழுந்தவனின் உடலில்
67 இடங்களில், ஆயுதத்தால் தாக்கியது போன்ற
காயங்கள் உருவானது எப்படி..? ” என்று….!

பல ஒத்திப் போடல்களுக்குப் பிறகு,
ஒரு வழியாக இந்த வழக்கு
சென்ற வாரம் செஷன்ஸ் கோர்ட்டில்
முடிவுக்கு வந்து தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது.

கோர்ட், அந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிளுக்கு
ஆயுள் தண்டனை விதித்து விட்டு,
மாநில அரசுக்கு – பாதிக்கப்பட்ட / கொல்லப்பட்ட
அந்த இளைஞரின் குடும்பத்துக்கு
ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி உத்திரவு
பிறப்பித்திருக்கிறார்….

1991-ல் கஸ்டடியில் நடந்த கொலைக்கு,
26 வருடங்களுக்குப் பிறகு – 2017-ல் பரிகாரம்.
கணவனை இழந்த அந்த இளம் பெண்,
இந்த 26 ஆண்டுகளில்
அந்த கைக்குழந்தையை வளர்க்க என்னவெல்லாம்
பாடுபட்டிருப்பாரோ…

ஒரு அபலைப்பெண்ணுக்கு நீதி, நியாயம், உதவி – கிடைக்க –
நமது சிஸ்டத்தில் 26 ஆண்டுகள் தேவைப்படுகிறது.
இதில் யாருக்கும் வெட்கமில்லை,
தாமதம் குறித்து வேதனையில்லை,
ஏன் இப்படி என்று யோசிக்க மனசாட்சியும் இல்லை…!

அவர் பட்ட கஷ்டங்களை
எந்த இழப்பீடால் சரி செய்ய முடியும்… ?

இப்போது கூட அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைத்து விட்டது
என்று உறுதியாக சொல்ல முடியாது. இது செஷன்ஸ் கோர்ட்
தானே…? அந்த காவலர்களோ, அரசோ, அப்பீலுக்கு
உயர்நீதிமன்றம் சென்றால் – செத்தது வழக்கு.

அந்த பெண் மட்டும் அல்ல….
அந்த குழந்தையின் காலம் கூட முடிவடைந்து விடக்கூடும்.
கீழ் நீதிமன்றத்திலேயே இவ்வளவு வருடங்கள் என்றால்,
இன்னும் மேலே, அதற்கும் மேலே – சென்றால்…?

இதை ஒரு செய்தியாக கூட போடத்தோன்றவில்லை
நமது தமிழ் செய்தித் தாள்களுக்கு…..

ஒரு ஆங்கில நாளிதழில் சிறியதாக வந்திருந்த
இந்த செய்தியை படித்து விட்டு, just இன்னொரு
செய்தியாக என்னால் கடந்து போக முடியவில்லை.
மனம் வலிக்கிறது…
இதைப்படிக்கும்போது –
உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்…

ஆனால், இதற்கெல்லாம் என்ன தீர்வு…?
FIR பதிவு செய்த 6 மாதங்களுக்குள்
நீதிமன்ற விசாரணை துவங்க வேண்டும்…
வழக்கு துவங்கிய 6 மாதங்களுக்குள்
விசாரணை முடிந்து,
தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்…
என்று ஒரு நடைமுறையை கொண்டு வர –

எத்தனையோ நீதிபதிகள், தலைமை நீதிபதிகள்,
அரசியல்வாதிகள், அரசாங்கங்கள் – வந்து போகின்றார்களே
இவர்களில் எவருக்கும் தோன்றுவதில்லையா…?

இதென்ன ஒரு நாடு…?
நமக்கு ஜனநாயகம் என்ன கேடு…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to யாருக்கும் வெட்கமில்லை, வேதனையில்லை, மனசாட்சியும் இல்லை…!!!

 1. sakthivel சொல்கிறார்:

  oru nermaiyana sarvathikara aatchi vendum

  • GVS சொல்கிறார்:

   ஓட்டு பிச்சை கேட்க வரும்போது
   நாம் அவசியம் இந்த கேள்விகளை அவர்களிடம்
   கேட்க வேண்டும்.

 2. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! எழுதுங்கள் …. எழுதிக்கொண்டே இருங்கள் … நீங்கள் குறிப்பிட்டுள்ள ” அந்த மூன்றும் ” யாருக்கும் — எப்போதுமே ஏற்படப் போவது இல்லை ….. ” வழக்கு ” என்றால் பல காலங்களுக்கு வழுக்கிக்கொண்டே போவதற்குத்தான் என்று நீதி மன்றங்களுக்கு புரிந்துள்ள அளவுக்கு நமக்கு புரியவுமில்லை — தெரியவுமில்லை … ஹூம் .. என்ன செய்வது …. ? அடுத்து ஒரு செய்தி — அந்த செய்திக்கும் உங்களின் இன்றைய இடுகை தலைப்பே மிகவும் பொருத்தமாக இருக்கும் … அந்த செய்தி : —

  // கடலில் சுட்டுக் கொன்றாலும் தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லை?.. அதனால்தான் மவுனமா மோடி?? //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-fishermen-shot-dead-why-modi-silent-276083.html …. என்ன உங்களின் // யாருக்கும் வெட்கமில்லை, வேதனையில்லை, மனசாட்சியும் இல்லை…!!! // என்கிற கூற்று .. ஓ .கே. தானே … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   பிரதமரின் ஒரு ட்விட்டர் இரங்கலுக்கு கூட
   கொடுத்து வைக்கவில்லை அந்த “தமிழ்” மீனவனின் சாவு…

   மைத்ரியிடம் இமேஜ் கெட்டு விடுமே…!

   இதை பலமாகச் சொல்வதும் ஆபத்து…
   பக்தர்கள் கூட்டம் படையெடுத்து வந்து விடும்.

   • selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! // பிரதமரின் ஒரு ட்விட்டர் இரங்கலுக்கு கூட
    கொடுத்து வைக்கவில்லை அந்த “தமிழ்” மீனவனின் சாவு… // என்ற உங்களின் ஆதங்கத்தை போக்கும் விதமாக — பா.ஜ . க. வின் அதிகாரபூர்வ நபர் ஒரு ” ட்வீட் ” போட்டுள்ளார் …… ஒரு சில ஜென்மங்களை திருந்தப் போவதுமில்லை — திருத்துவாரும் யாருமில்லை …. !! // மீனவர் படுகொலை.. பொர்க்கி சாமி போட்ட திமிர்த்தனமான ட்வீட்!
    Subramanian Swamy‏Verified account
    @Swamy39
    The Porkis in Tamil Nadu should hire kattamarans and go fight the SL Navy, instead of hiding in the city sewer.//
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tn-jaffana-grous-want-no-solution-fishermen-problem-says-swamy-276147.html

    எங்களுக்கு கட்டுமரங்கள் கிடைக்க ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் சுவாமி … !! தங்களின் முந்தைய இடுகை ஒன்றின் தலைப்பு // உத்தமரா, வில்லனா, ஹீரோவா, ஜோக்கரா … டாக்டர் சு.சுவாமி….?
    Posted on திசெம்பர் 21, 2015 by vimarisanam – kavirimainthan //
    இப்போதாவது இந்த ” சு . சுவாமி ” அந்த நான்கில் தமிழர்களுக்கு எந்த ரகம் அவர் என்று கூறுவீர்களா ….?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     செல்வராஜன்,

     உத்தமர், ஹீரோ இரண்டையும் விட்டு விடலாம்…

     ஒரு பாதி வில்லன் – மறு பாதி ஜோக்கர்
     இரண்டும் கலந்த கலவை இந்த ஜென்மம்.

     இங்கே வரும்போது –
     வேறு எதுவும் செய்ய வேண்டாம்…
     சாணிக்கரைசல் இருந்தால் போதும்…

     காலம் வரும் …!

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 3. புதியவன் சொல்கிறார்:

  “மனம் வலிக்கிறது… இதைப்படிக்கும்போது – உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்…”

  ஆம் கா.மை. சார். அந்தப் பெண் செய்த புண்ணியம், 26 ஆண்டுகள் கழித்து அவள் கணவன் சாவுக்கு போலீசார்தான் காரணம் என்று கீழ்க்கோர்ட்டிலாவது தீர்ப்பு வந்தது. ஆனால், அவள் குடும்பம் இழந்த காலத்திற்கு என்ன தீர்வு. எளியவர்களைக் காலால் உதைத்து முன்னேறுகிறது நமது சமூகம். இத்தகைய வழக்குகளில் (பொதுமக்கள் இன்னொரு வாதியாக இருக்கும் வழக்குகளில்), அரசு மேல்முறையீட்டை அனுமதிக்கக்கூடாது.

  தலைமை நீதிபதி அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு, மத்திய அரசு 200+ நீதிபதிகளின் நியமனத்தைத் தாமதப்படுத்துவதாகச் சொல்லியிருந்தார். இருக்கிற நீதி முறைமையைச் சரி செய்யாமல், மேலும் மேலும் நீதிபதிகளை நியமித்து பொதுமக்களுக்கு ஏன் செலவு வைக்கவேண்டும்? ஒரு வழக்கை 3 மாதங்களுக்குள் முடித்துவைக்க முடியவில்லையென்றால், (அதற்கு அவர்கள் படித்த படிப்பு உதவவில்லையென்றால்) கிராமத்துப் பஞ்சாயத்துகளைவிட, நம் நீதிமன்றங்கள் எந்த விதத்தில் உசத்தி? நம் நீதிமன்றங்கள் எந்த வழக்கை சரியான தீர்ப்பு கூறி முடித்துவைத்திருக்கின்றன? இவைகள், Employment exchange for வக்கீல்கள், நீதிபதிகள் மற்றும் பணியாளர்கள். இவர்கள் இப்படி அ’நீதியாக நடந்துகொள்ளும்போது (அதாவது வழக்குகளை 20-50 ஆண்டுகள் என்று இழுத்தடிக்கும்போது), மத்திய அரசு மாத்திரம் ‘புதிய நீதிபதிகள்’ நியமனத்தை 250 ஆண்டுகள் இழுத்தடிக்கக்கூடாது?

  நீங்கள் எந்த பெரிய வழக்கை எடுத்துக்கொண்டாலும், அதில் எவ்வளவு அநீதியாக நீதிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை அறியலாம். நீங்கள் எந்த வழக்கையும் எடுத்துச் சொல்லலாம். (சஞ்சய்தத், மான் கொலைவழக்கில் சம்பந்தப்பட்டவர், குடி வேகத்தில் சாலையில் இருந்தவரைக் கார் ஏற்றிக் கொலை செய்த நடிகர், தமிழகத்தில் சமீபத்தில் நடிகர் ஒருவரை கார் ஏற்றிக் கொன்றது. 60 கோடி சொத்துக்குவித்தார் என்ற வழக்கில் எத்தனை வருடங்கள், எத்தனை முறை நீதி மாற்றம், 100கோடி அபராதம் என்று ஏகப்பட்டது சொல்லிக்கொண்டே செல்லலாம்). தவறாக நீதி வழங்கினால் தூக்குத் தண்டனை, அதேபோல், பொது நல வழக்கு என்று உப்பு சப்பில்லாமல் வழக்கு போடுபவருக்கும், 1 கோடி ரூபாய் அபராதம் என்று சட்டம் கொண்டுவந்தால், சம்பந்தா சம்பந்தமில்லாமல், தேவையில்லாதனவற்றிர்க்குக் காழ்ப்புணர்வோடு வழக்கு போடும் தொல்லையும் நீங்கும், காழ்ப்புணர்வோடு நீதி வழங்குவதும் தொலையும்.
  (எதிலும் இருப்பதுபோல், நீதி/வக்கீல்/காவல் துறைகளிலும் நல்லவர்கள் சிலர் இருப்பார்கள். அவர்களை வணங்குகிறோம். அவர்களுக்கு இவை பொருந்தாது)

  இப்போதைய நிலையில், பணம் இருந்தால் நீதியை நிச்சயமாக விலை கொடுத்து வாங்கலாம் என்ற நிலைமைதான் உள்ளது.

 4. Bagawan சொல்கிறார்:

  Sir,
  India become more corrupted because of our lax legal system and judiciary. It needs complete revamp. There should be a timeline for each case. There should not be unlimited adjournments but shall be limited to maximum three. Also when a case goes for appeal and if the case is proved then the punishment shall be doubled. Then only we can see real case goes for appeal and money power or political power does not have any influence.
  We must make above a serious issue in the coming parliament election and vote the party who support it. Justice delayed is justice denied.

 5. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  justice delayed-justice denied,No use of politicians

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.