மூன்று முதல்வர்களுடன் பணியாற்றிய திருமதி சாந்த ஷீலா நாயர் ஐ.ஏ.எஸ் – அவர்களுடன் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் ….

எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா என்கிற மூன்று முற்றிலும்
வித்தியாசமான (ஆளுமைகள் – personalities) – தமிழக
முதல்வர்களுடன் பணியாற்றி, மூவரிடமும் நற்பெயர் பெற்றவர்

– திருமதி சாந்த ஷீலா நாயர்.
சிறந்த, புத்திசாலித்தனமான, நேர்மையான – நிர்வாகி.

தமிழகத்தை சுனாமி தாக்கியபோதும் –
தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம் அமலுக்கு வந்தபோதும் – அவரது சிறப்பான பணியை வெளியுலகம் நன்கு உணர முடிந்தது….

ஜெயலலிதா அவர்களின் அடித்தர மக்களுக்கான
சமுதாய நலத்திட்டங்கள் பலவற்றை உருவாக்கியதிலும்,
வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியதிலும், அவருக்கு
பெரும் பங்கு உண்டு.

மகளிர் தினத்தையொட்டி ஒரு வித்தியாசமான கட்டுரையை
எழுத வேண்டும் என்று நினைத்திருந்த சமயத்தில்,
திருமதி சாந்த ஷீலா நாயர் அவர்களின் பேட்டியை பார்க்க
நேரிட்டது….

கூடவே பல ஆண்டுகளுக்கு முன்னர் அவருடன் எனக்கு
ஏற்பட்ட ஒரு சுவாரஸ்யமான அனுபவமும் நினைவிற்கு
வந்தது. அப்போது, அவர் திருச்சி மாவட்ட கலெக்டராக
பணியாற்றி வந்தார் . 81 அல்லது 82 ஆம் வருடமாக இருக்கும்.

———————————————————————
( இந்த பேட்டி – விகடனுக்கு நன்றி )

ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும், சர்ச்சைகள் இன்றி அமைதியுடனும் அடக்கத்துடனும் அரசு உயர் பொறுப்புகளில் பணியாற்றி, சமீபத்தில் ஓய்வுபெற்றவர் சாந்த ஷீலா நாயர் ஐஏஎஸ்.

மதிக்கத்தக்க பெண்மணியாக அரசுப் பொறுப்புக்கு வர
நினைப்பவர்கள் பலருக்கும் இவர் முன்னுதாரணம். தன்
43 ஆண்டுகால ஐஏஎஸ் பணி அனுபவத்தையும்,
தான் எதிர்கொண்ட பல சவாலான தருணங்களையும்
கனிவான குரலில் பணிவாகப் பேசுகிறார்.

“நான் பிறந்தது கேரளாவின் திருவனந்தபுரத்தில். அப்பா
மிலிட்டரியில இருந்ததால, இந்தியாவின் பல ஊர்களில் படிச்சு
வளர்ந்தேன். ஆனா, அதிகமா வசிச்சது சென்னையில தான்.
இங்க குயின் மேரிஸ் கல்லூரியில பி.ஏ.,
கிறிஸ்டியன் கல்லூரியில் எம்.ஏ., படிச்சேன்.
காலேஜ்ல படிக்குறப்பவே மாணவர் மன்றத் தலைவியா இருந்தேன்.

அப்படியே படிப்புமேல இருந்த ஆர்வமும், மக்களுக்கு சேவை
செய்யணும்ங்கிற எண்ணமும் என்னை ஐ.ஏ.எஸ் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துச்சு. பெற்றோர், பேராசிரியர்கள், நண்பர்கள் பலரும் என்னை உத்வேகப்படுத்தினாங்க. நான் தங்கியிருந்த ஒய்.டபிள்.யூ.சி ஹாஸ்டல்ல எனக்குப் பல வருஷத்துக்கு முன்னாடியே தங்கிப் படிச்சு
ஐஏஎஸ் ஆன இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அன்னா ஜார்ஜ், எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன்.

ஒருகட்டத்துல டிபேட், டிராமான்னு அதிகம் கவனம் செலுத்தினதை நிறுத்திட்டு, காலேஜ் ஃபைனல் இயர்ல சின்சியரா படிச்சு ஐ.ஏ.எஸ் எக்ஸாம் எழுதினேன். 1973-ல் கலெக்டர் எக்ஸாம்ல செலெக்ட் ஆனேன். ஐ.ஏ.எஸ் பயிற்சி, மதுரையில கலெக்டர் பயிற்சி முடிஞ்சு,

திண்டுக்கல்ல சப் கலெக்டரா நியமிக்கப்பட்டேன். அப்படியே மாவட்ட கலெக்டர், பல துறைகளில் உயர் பொறுப்புகள்னு பல ஏற்ற, இறக்கங்களைச் சரிசமமாகவே பார்த்துட்டேன்” என மெல்லிய புன்னகையுடன், தன் பணிச்சூழல்களைப் பற்றிச் சொல்கிறார்.

“அடுத்தடுத்து சீக்கிரமா பெரிய பெரிய பொறுப்புகளுக்கு
நியமிக்கப்பட்டேன். அப்படி 1984-ல் நான் சென்னை மாநகராட்சியின் கமிஷனரா இருந்தப்போ, எனக்குக் குழந்தை பிறந்துச்சு.

அப்போவெல்லாம் மூணு மாசம்தான் மகப்பேறுகால விடுப்பு.
அந்த லீவ் பீரியட் முடிஞ்சதும் உடனே வேலைக்குப் போக
வேண்டிய சூழல். அப்போ ராத்திரி பகலா பல நாள் வேலை செய்ய வேண்டியதா இருக்கும். குழந்தையை என்னால சரிவர கவனிச்சுக்கக்கூட முடியாத சூழல். என்னோட அம்மாதான் குழந்தையை கவனிச்சுக்கிட்டாங்க. போகப் போக என்னோட பணிச்சூழலைப் புரிஞ்சுகிட்டு, என்னோட பையன் வளர்ந்தான். அதுவும் குழந்தையோட நான் செலவழிக்குற நேரம் குறைவா
இருந்தாலும் அதை ரொம்பவே குவாலிட்டியா, உலகமே என்
குழந்தைதான்னு இருப்பேன்.
அதனாலதான் குடும்பம், வேலைன்னு சரியாக என்னோட
திட்டமிடலை செஞ்சுக்க முடிஞ்சுது.

அப்போ எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம். அவருக்கு உடல்நிலைக்
குறைவால், அரசியல் களம் பரபரப்பாக இருந்துச்சு. அப்போ
சென்னை மாநகராட்சி கமிஷனரா, சிட்டியை… அதிகாரிகள்
குழுவோட பாதுகாத்துட்டு இருந்தேன். குறிப்பா 1987-ல்
எம்ஜிஆர் மறைந்த சமயத்துல சென்னையில பயங்கர கலவரம்.
இப்போ இருக்குற மாதிரி இன்டர்நெட், செல்போன் வசதிகள்
அப்போ கிடையாது. ஒன்றரை நாள்ல அமைதியை நிலைநிறுத்த, ரொம்பவே மெனக்கெட வேண்டியதா இருந்துச்சு.

அப்போ ராஜாஜி ஹாலில் எம்ஜிஆரின் இறுதி ஊர்வலம்
நடைபெற்றதையும், மெரினா கடற்கரையில அவருக்கான நல்லடக்கம் நடக்குற பொறுப்புகளையும் இரவு பகல் பார்க்காம செய்தேன். அந்தச் செயல்பாடுகள் என்னோட பணி அனுபவத்துல நல்ல ஒரு லேர்னிங்கா இருந்துச்சு. என்னோட
அந்த அனுபவங்களை, போன வருஷம் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுச் சமயத்துல, உயர் பொறுப்புகள்ல இருந்தவங்க கேட்டாங்க”

– என்பவர் தன் பணிக்காலத்தில் வெற்றிகரமாகச் செயல்படுத்திய சில திட்டங்களைப் பற்றிப் பேசுகிறார்.

“2004-ம் ஆண்டு சுனாமி வந்த சமயத்துல முதலமைச்சர்
ஜெயலலிதா என்னிடம் ஆலோசனை நடத்திட்டு, உடனே
என்னை நாகப்பட்டினம் போய் சீரமைப்புப் பணிகளைச் செய்யவும் நாளைக்கு நான் அங்க வந்து பார்க்கிறேன்னு சொன்னாங்க.
நான் உடனே அங்க போய்ப் பார்த்தேன். ஒரே இடத்தில் இறந்த
நிலையில ஆறாயிரம் உடல்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ந்தேன்.

உடனே சக ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள்
உதவியுடன் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி,
ரெண்டே நாள்ல அங்க சுகாதாரம் மீட்டெடுக்கும் முயற்சியை
வெற்றிகரமாகச் செய்தேன். என்னோட பணியைப் பாராட்டி, இலங்கை அரசு அவங்க நாட்டுல மீட்புப் பணியை செய்துகொடுக்கச் சொல்லிக் கேட்டாங்க. இலங்கைக்கும் சென்று மீட்புப் பணியை செய்துவிட்டு வந்தேன்”.

“2001-ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வாரியச் செயலாளராக
இருந்தபோது, கடுமையான வறட்சி. மழைநீர் சேகரிப்புத்
திட்டத்தை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா
துவங்கி வைத்து, அந்த முழு பொறுப்பையும் எங்கிட்ட
ஒப்படைச்சாங்க. அந்த திட்டம் மிகப்பெரிய வெற்றித்திட்டமானது எல்லோருக்கும் தெரியும்” என்று மென்மையாகப் புன்னகைத்தவரிடம்…

சிவில் சர்வீஸ் உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு வர்றவங்க அடிக்கடி பணிமாறுதல்களையும், ஆட்சி மாற்றம் நடக்கும்போது
ஆட்சியாளர்களுக்கு இணக்கமாக இல்லாமல் போனால்
பழிவாங்குதல் உள்ளிட்ட சிக்கல்களையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும். அந்த பிரச்னைகளை நீங்கள் எதிர்கொண்டீர்களா என்றதும், சிறிது நேர சலனத்தை உடைத்து, பேச ஆரம்பிக்கிறார்.

“ஆட்சி மாற்றம் நடக்கும்போது ஆட்சியமைக்கும் ஆட்சியாளர்களால் பல அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதும், பிடிக்காதவங்க… மதிப்பு குறைந்த பதவிகளில் நியமிக்கப்படுவதும் ரொம்பவே
சகஜம்தான்.

எங்க கேரியர்ல இதெல்லாம் சகஜம். நானும் அப்படி
பழிவாங்கப்பட்டிருக்கேன். மோசம்னு நினைக்குற
டிபார்ட்மென்ட்டுலயும் பணி செஞ்சிருக்கேன். நிறைய ஏற்ற
இறக்கங்களையும் சந்திச்சிருக்கேன். என் மேல பல வழக்குகள்
போடப்பட்டு, அதை எதிர்கொண்டிருக்கேன். சொல்ல முடியாத
அலைக்கழிப்புக்கு ஆளாக்கப்பட்டிருக்கேன்.

மனசாரச் சொல்றேன்… எனக்கு ஆட்சியாளர்கள்,
உயர் அதிகாரிகள் பலரால் கொடுக்கப்பட்ட பல கஷ்டங்களை
நினைச்சு வருதப்பட்டதுண்டு. அப்பலாம்…இப்போதைய பிரச்னை, நாளைக்குச் சரியாகிடும்னு நினைச்சு வேலையில மட்டுமே கவனத்தைச் செலுத்தினதுண்டு. ஆனா பல ஆட்சி மாற்றங்கள் போது, நான் எதிர்கொண்ட அரசியல் ரீதியான சிக்கல்கள் ரொம்பவே அதிகம்.

அந்த அரசியல் ரீதியான சிக்கல்களைப் பத்தி ரொம்ப
வெளிப்படையா பேச நான் விரும்பல. ஒவ்வொரு முறை
ஆட்சியாளர்களால பிரச்னைகளை சந்திக்கிறப்ப எல்லாம் என்
பையனோட விளையாடுறது, மியூசிக் கேக்குறது, பிடிச்ச புக்ஸ்
படிக்குறது, தெய்வ வழிபாடுகள்னு மனசை அமைதிப்படுத்தி,
கவலைகளை மறக்க முயற்சி செய்வேன்.

நம்மோட வாழ்க்கையில இருக்குற ஏற்ற இறக்கங்களைப் போல, சிவில் சர்வீஸ் பதவிகள்லயும் நிறையவே நடக்கும்.
இதெல்லாம் தெரிஞ்சுதானே ஐஏஎஸ் பணிக்கு வந்தேன். அப்போ
நடந்ததை எல்லாம் நினைச்சு நிறைய முறை வருத்தப்பட்டிருக்கேன்”.

“சிக்கல்கள் இல்லாத வாழ்க்கை யாருக்குமே சாத்தியமில்லை.
அதை எதிர்கொண்டுதான் மேல வரணும். அது எல்லா
வேலைக்கும் பொருந்தும். சிவில் சர்வீஸ் பதவியில
நிறைய சிக்கலான பிரச்னைகள் வரும். அதுவும் நேர்மையாக
இருப்பவங்களுக்குச் சொல்லவே வேண்டாம். இதுக்கு எல்லாம்
கலங்காம, நாம நேர்மையாகவும், திறமையாகவும் செயல்பட்டா ஒரு நாள் இல்லாட்டியும் எப்பயாச்சும் ஒருநாள், ஒரு ஆட்சி இல்லாட்டியும், மற்றொரு ஆட்சியாளர்களால் அங்கீகாரமும், பலனும் கிடைக்கும்.

என்னோட 44 ஆண்டு பணிக்காலமும் முழுக்க ஸ்மூத்தாக
இல்லை. எந்த சூழல்லேயும் நமக்கான தனித்துவத்தை
இழக்காம, நேர்மையா இருந்தா நமக்குன்னும் ஒரு நல்ல பெயர்
காலம் முழுக்க இருக்கும்.
நானும் அப்படித்தான் நான் உண்டு, என் வேலை உண்டுன்னு
இருந்தேன். அதுவும், இன்னைக்கு பெரிய பதவியில இருக்கலாம். நாளைக்கே டம்மியான பதவிக்குப் போடுவாங்க. இதுல நெகிழ்ச்சியான விஷயம், வெளியில எல்லாரும் நல்ல, பெரிய பதவின்னு நினைக்குற பதவிக்கு உள்ளேதான் நிறைய வலியும் வேதனையும் சோதனைகளும் இருக்கும்.

நான் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதானு மூணு
முதல்வர்களோடேயும் பணியாற்றியிருக்கேன். ஆட்சியாளர்களாலும் உயர் அதிகாரிகளாலும் பழிவாங்கவும்பட்டிருக்கேன்” தன் பயண
அனுபவங்களை ஒளிவு மறைவின்றிச் சொல்பவர் தான்
பணியாற்றிய முதல்வர்களைப் பற்றிக் கூறுகிறார்.

“தமிழக முதல்வர்களான எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா
மூணு பேர்கிட்டயும் அருகில் இருந்து பணியாற்றும் வாய்ப்பைப்
பெற்றிருக்கிறேன்.

1982-ம் ஆண்டு தமிழகத்திலேயே முதன்முறையா நான் கலெக்டராக இருந்த திருச்சி மாவட்டத்தின் பாப்பாக்குறிச்சி கிராமத்துல இலவச மதிய உணவு திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் துவக்கிவைத்தார். அத்திட்டத்தை
நான் சிறப்பா செயல்படுத்தியதை அவரே பாராட்டினாரு.
அதேபோல, கருணாநிதி முதல்வராக இருந்தப்போ அவரோட
தனிச் செயலாளராகவும் இருந்து பணிசெய்திருக்கேன். குறிப்பா
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் பழகி வேலை செய்ற
தருணம் அதிகம் எனக்குக் கிடைச்சுது.

2011-ம் ஆண்டு ஓய்வு பெற்றபின்னர், பணி நீட்டிப்பு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் தமிழக திட்டக்குழு துணைத் தலைவராக இருந்தேன். ஜெயலலிதா, போன வருஷம் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயார் செய்ற வேலையைக் கொடுத்து, அதை ரெண்டு வருஷத்துல நிறைவேற்றும்படியாக இருப்பது போல தயாரிக்கச் சொன்னாங்க. அதைச் செய்து கொடுத்து,

அவங்க ஆட்சிக்கு வந்ததும்,
ஆபிசர் ஆன் ஸ்பெஷல் டியூட்டின்னு எனக்கு ஒரு பொறுப்பு
கொடுத்தாங்க. அவங்க மருத்துவமனையில அனுமதிக்கப்பட்ட சமயத்துல அவங்க உடன் இருக்கும் வாய்ப்பு எனக்கு அமையலை.

ஆனா, அவங்க ஆளுமைத்திறனைப் பார்த்து நான்
வியந்திருக்கேன். அவருடைய மறைவு எனக்கும்
அதிர்ச்சியாகத்தான் இருக்கு”.

மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட, 25-க்கும் மேற்பட்ட துறைகளில்
பணி செய்திருக்கேன். சமீபத்துலதான் பதவியில இருந்து
விலகினேன். இப்போ சென்னையில இருக்குற என்னோட
வீட்டுலதான் ஓய்வெடுத்துட்டு இருக்கேன். கூடிய விரைவிலேயே என் மனசுக்குப் பிடிச்ச மாதிரி ஆக்கபூர்வமான விஷயம் எதாச்சும் செய்யலாம்னு இருக்கேன்.

—————————————————————-

பின் குறிப்பு – திருமதி சாந்த ஷீலா நாயர் அவர்கள்
திருச்சியில் கலெக்டராக பணிபுரிந்து வந்தபோது,
நான் அவரை சந்திக்க நேர்ந்த ஒரு சுவாரஸ்யமான
நிகழ்வை அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.

(தொடரும் – பகுதி-2-ல்)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to மூன்று முதல்வர்களுடன் பணியாற்றிய திருமதி சாந்த ஷீலா நாயர் ஐ.ஏ.எஸ் – அவர்களுடன் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் ….

 1. புதியவன் சொல்கிறார்:

  தலைப்பு – எனக்கேற்பட்ட அனுபவம். அதை அடுத்த இடுகைக்கு ஒத்திவச்சுட்டீங்களே சார்.

  எல்லா அதிகாரிகளும் நல்லா நாட்டுக்குச் சேவை செய்து தன் பதவியைப் பயன்படுத்தி நல்லது பண்ணினோம்னு இருக்கணும்னு நினைச்சுத்தான் பதவிக்கு வர்றாங்க. நல்லவனாவே இருந்து, கடவுள் சோதனைக்கு மேல் சோதனையாக் கொடுத்தா அந்தக் கடவுள் மேல் வெறுப்பு வருவதில்லையா? பல சமயம், மேனேஜருக்காக, கம்பெனிக்காக நிறைய தவறுகளை (part of business என்று justify செய்து) செய்வதில்லையா?

  ஸ்திதப்ப்ரக்ஞன்போல் இருந்தால்தான் அதிகாரிகளால் நல்லது செய்யமுடியும். பதவில இருக்கணும்கற ஆசை வந்தால், மகுடிக்குக் கட்டுப்படும் நாகம்போல், அரசியல்வாதிகளுக்குத் தலையாட்டியாக இருந்து, தானும் தேனெடுத்தவன் புறங்கையாக சொத்துசேர்க்கவேண்டியதுதான்..அல்லது அதிகாரத்தை வைத்து பல சொந்த பயன்களை அடையவேண்டியதுதான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   நானும் 40 ஆண்டு காலம் அரசுப்பணியில்
   இருந்து, நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால் –
   என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டி இருக்கிறது
   என்பதை நடைமுறையில் அனுவித்து தான் வெளியே வந்தேன்.

   சத்தியமாக இருப்பவர்கள், பல துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி இருப்பது உண்மையே….

   ஆனால், பொறுமையாக இருந்தால்,
   நாம் மாறாமல் நம் வழியில் உறுதியாகவே இருந்தால்,
   நிச்சயம் ஒரு நாள் புரிந்து கொள்ளப்படுகிறோம்…

   ஒரு வேளை இறுதி வரை புரிந்து கொள்ளப்படாமலே
   வெளியே வர நேர்ந்தாலும் கூட –
   மனதுக்கு கிடைக்கிறதே – மகிழ்ச்சியும், நிம்மதியும்…
   அது விலை மதிப்பற்றது….
   அதற்காக எத்தகைய துன்பங்களையும் எதிர்கொள்ளலாம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நிறைய நண்பர்கள் வழக்கமாக “தமிழ்மண” -த்தின் மூலம்
  புதிய இடுகை இருப்பதை தெரிந்துகொண்டு இங்கே வருவது வழக்கம்.

  சில நாட்களாக தமிழ்மணம் சரியாக update செய்வதில்லை.
  ஏதோ technical problem. எனவே, தொடர்ச்சியாக
  இடுகைகளை படிக்க விரும்புவோர்,
  இந்த பக்கத்தின் வலது புறம் கீழே follow வில் click
  செய்து தங்கள் மெயில் ID யை பதிவு செய்து விட்டால்,
  இடுகைகள் உடனுக்குடன் கிடைக்கும்…. நன்றி.

 3. Tamilian சொல்கிறார்:

  I also had an experience of knowing her while I was a liaison officer of our Trichy Division. She was the collector in 1981 and I was transferred from Calcutta. I had to meet her for various purposes and she was kind enough to recommend our bank for opening 2 branches in that district which we opened . She inaugurated the opening I think. Very smart lady with ability to take quick decisions. I late met her when she was Home Secretary at fort St George .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.