சு.சா.வின் “தோஸ்த்”…. என்று ஒருவர்…!!!

சில மாதங்களுக்கு முன், ஒரு தடவை ரெயிலில் பயணம்
செய்து கொண்டிருந்தபோது, ( A.C.2 tier. ) வித்தியாசமான
ஒரு பெர்சனாலிடியை சந்தித்தேன்… எனக்கு பக்கத்து
இருக்கை….சில மணி நேரங்கள் அவருடன் சேர்ந்து பயணிக்கவும், சகபயணிகளுடன் அவர் நடந்து கொண்ட விதத்தை காணவும், நிறைய உரையாடவும் சந்தர்ப்பம் வாய்த்தது….!

ரெயிலை விட்டு இறங்கும்போது, அந்த சக-பயணியின்
சகவாசம், நான் பல வருடங்களுக்கு முன் படித்த திரு.இந்திரா
பார்த்தசாரதி அவர்களின் அற்புதமான பாத்திரப்படைப்பு
கொண்ட சிறுகதை ஒன்றை நினைவுபடுத்தியது.

நண்பர்களுக்குச் சொல்ல – அந்த கதையை நீண்ட நாட்களாக
தேடிக்கொண்டிருந்தேன். இப்போது தான் கிடைத்தது…
மேலே தொடரும் முன்னர், நீங்களும் அந்த சிறுகதையை
படித்து விடுங்களேன்…

——————————————

அவஸ்தைகள்-
திரு.இந்திரா பார்த்தசாரதி எழுதியது.

(புகைப்படத்தில் – திரு.இந்திரா பார்த்தசாரதி அவர்கள்)

சாமான்களை சரிபார்த்து, நண்பர்களுக்குக் கைகாட்டி விட்டு,
என் சீட்டில் உட்காரப் போனபோதுதான் அவரை கவனித்தேன்.

பவளம் போன்ற திருமேனி. என் உள்ளுணர்வு சொல்லிற்று,
வயது அறுபத்தைந்திருக்கலாமென்று. ஆனால் கண், கண்ட
வயது ஐம்பது. நிரந்தர ‘ஸினிஸிஸ’த்தின் நிழற் கீற்றாய் படிந்த
ஏளனப் புன்னகை. கை விரல் ஒன்பதில் ஒவ்வொரு
கல்லென்று நவரத்தின மோதிரங்கள்.

அவர் அணிந்திருந்த உடையும், அவருடைய தோற்றமும்
அவரை ஹிந்தி மாநிலத்தவர் என்று அறிவித்தது. தும்மைப் பூ
போல் பளீரென்ற வேட்டி, குர்த்தா.

அவர் அறிதுயில் கோலம் கொண்டிருந்தார், கால்களை
தாராளமாக நீட்டியபடி. இன்னொருவர் அங்கு உட்கார
வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு இருந்ததாகவே
தெரியவில்லை. உலகத்தைப் பந்தாகச் சுற்றி தம் குர்தாப்
பையில் வைத்திருப்பவர் போல் அவர் அலட்சியமாகப்
பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் காலருகே இரண்டு பேர் பணிவுடன் நின்று
கொண்டிருந்தார்கள். தமிழர்கள். சென்னை சென்ட்ரல்
ஸ்டேஷனில் ஒரு வடநாட்டுக்காரருக்கு பணிவிடை செய்வது
போல் முறுக்கேறிய மீசையுடன் இரண்டு தமிழர்கள் நின்று
கொண்டிருந்தது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

‘பழம் எல்லாம் சரியா?’ என்று பாதி ஹிந்தியிலும், பாதி

ஆங்கிலத்திலும் அவர் கேட்ட கேள்விக்கு, அவர்கள் தலையை
ஆட்டி ‘சரிய்யா’ என்றார்கள் தமிழில்.

‘ஸீட்’டுக்குக் கீழே இரண்டு பழக்கூடைகள் இருந்தன.

அவர் எங்களைப் பார்த்துப் புன்னகை செய்தார்.

‘எங்கே போகிறீர்கள்?’ என்றார் ஹிந்தியில்.

‘டெல்லிக்கு’ என்றாள் என் மனைவி.

‘ஹும்!’ அவர் ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினார்.

அது ஏ.ஸி. ஸ்லீப்பர், இரண்டாம் வகுப்புப் பெட்டி. இன்னொரு

ஸீட்டில் உட்கார வேண்டியவன் – அவன் இளைஞன்,
இருபத்திரெண்டு வயதிருக்கலாம் – ஒரு சூட்கேஸ், பை,
சகிதமாக வந்து அவரருகில் நின்றான்.

‘என்ன வேணும்?’ என்றார் ஆங்கிலத்தில்.

‘இது என் இடம், எழுந்திருங்கள், உட்கார வேண்டும்.’

‘தம்பி, அட்ஜெஸ்ட் பண்ணிகிட்டு உட்காரு. ஐயா ரயில்வே
போர்ட் மெம்பர்.’

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இவரா ரயில்வே
போர்ட் மெம்பர்? அரசாங்க உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு
முகத்தில் ஒரு தனிக்களை இருக்கும். இவரைப்பார்த்தால்,
ஜோதிடர் என்று சொல்லாம். இல்லாவிட்டால், ஓர்
அரசியல்வாதி என்று என்று சொல்லலாம், ஒரு மந்திரி
என்று கூட வைத்துக் கொள்ளலாம். நிச்சயமாக அரசாங்கத்தில்
உயர்தர உத்தியோகத்திலிருப்பவர் என்று யாருமே
சொல்லமாட்டார்கள். மேலும், ‘ரயில்வே போர்ட் மெம்பர்’,
இந்த வகுப்பில் ஏன் பயணம் செய்ய வேண்டும்? அவருக்கு
ஸலூன் இருக்கக்கூடுமே!

‘அவர் யாரா இருந்தா எனக்கு என்னய்யா? என் இடம் எனக்கு
வேணும்..’ என்றான் இளைஞன்.

அவர் அந்தப் பையன் சொன்னதைக் காதில் போட்டுக்
கொள்ளாமல், ஓர் ஆரஞ்சுப் பழத்தை உறித்துக் கொண்டிருந்தார்.

‘ப்ளீஸ் கெட் அப், ஐ வான்ட் டு ஸிட்டெளன்’ என்றான்

அவ்விளைஞன், குரலில் சற்று கண்டிப்புத் தோன்ற.

‘வேறு இடம் பார்த்துக் கொள். நான் கண்டக்டரிடம்
சொல்லுகிறேன்’ என்றார் அவர் ஹிந்தியில்.

‘ஓகே. நானே சொல்லுகிறேன். நீங்கள் யாராயிருந்தாலும் சரி,
என் ஸீட்டை உங்களால் ஆக்ரமிக்க முடியாது. நீங்கள் ரயில்வே
போர்ட் மெம்பர் என்று சொல்வதே பொய். அரசியல்வாதியாக
இருக்கலாம்’ என்றான் அந்த இளைஞன் ஹிந்தியில்.

அவன் ஹிந்தியில் சொன்னது, அவருடைய பணியாளர்களுக்குப்
புரியவில்லை. அவர்கள் அவனை ஏற இறங்கப் பார்த்தார்கள்.

அவர் அவர் அவனைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். பிறகு
கால்களை மடக்கிக் கொண்டார்.

‘என்னய்யா பெரியவரைப் போய் இப்படி..’ என்றான்
அவருடைய ஆட்களில் ஒருவன்.

‘அப்படிச் சொல்லுங்க.. பெரியவர், மரியாதை தரவேண்டியதுதான்.

ரயில்வே போர்ட் மெம்பர், அது இதுன்னு சொல்லாதீங்க..’

‘ரயில்வே போர்ட் மெம்பர்தான்யா; நாங்களும் ரயில்வேயில்
தான் வேலை செய்யறோம்.’

அந்த இளைஞன் அவர்களைப் புன்னகையுடன் நோக்கிவிட்டு
உட்கார்ந்தான். அவர்களையும் அவர் இவ்வாறு சொல்லி
ஏமாற்றியிருக்கக் கூடுமென்று அந்தப் புன்னகை கூறியது.

அவர் என் மனைவியை நோக்கி ஹிந்தியில் சொன்னார்.
‘என் பேர் ரவிஷங்கர் மிஸ்ரா. இது நான் எழுதிய நூல்,
கவிதைத் தொகுப்பு’

அவர் தம் பக்கத்திலிருந்த புத்தகத்தை எடுத்து அவளிடம்
கொடுத்தார்.

அவர் கவிஞராக இருக்கக் கூடுமென்று நான்
எதிர்பார்க்கவேயில்லை. நானும் இலக்கிய ரசிகனாக இருக்க
முடியாதென்று அவர் நினைத்த காரணத்தினால் தான் அந்தப்
புத்தகத்தை என் மனைவியிடம் கொடுத்தார் என்று எனக்குத்
தோன்றியது.

என் மனைவி அந்தப் புத்தகத்தைப் புரட்டினாள்.
நானும் பார்த்தேன்.

சின்னச் சின்னக் கவிதைகள். மூன்று வரிகளுக்கு
மேலில்லை.

‘முன்னுரை யார் என்று பாருங்கள்’ என்றார் அவர்.

ஓர், அரசியல் பெரும்புள்ளி.

புத்தகத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள அவர் கையை
நீட்டினார். கவிதைகளை என் மனைவி படித்தாக வேண்டுமென்று
அவர் விரும்பியதாகத் தெரியவில்லை.

‘எனக்குப் பல்கலைக் கழகப் பட்டம் டாக்டர் என்பதோடு,
நான் தொழிலிலும் டாக்டர்’ என்றார் அவர்.

கவிஞர், டாக்டர், இன்னும் என்னென்ன ஆச்சர்யங்கள்
காத்திருக்கின்றனவோ என்று எனக்குத் தோன்றிற்று.

அவர் இன்னொரு புத்தகத்தை எடுத்து என் மனைவியிடம்
கொடுத்தார்.

மருத்துவ நூல், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி
எல்லாம் கலந்த ஒரு நூல்.

‘அல்லோபதி இல்லையா?’ என்று நான் கேட்டேன்.

‘எனக்குத் தெரியும்.. ஆனால் நம் நாட்டுக்கேற்றவை இவைதான்
என்பது என் அபிப்பிராயம். புற்றுநோயைக் கூட குணப்படுத்திவிட
முடியும், செய்து காட்டியிருக்கிறேன்.’

‘நீங்கள் ரயில்வே போர்ட்மெம்பர் என்று இவர்கள்
சொல்லுகிறார்களே?’ அவர் அதை மறுக்கவுமில்லை,

ஆமோதிக்கவுமில்லை. வெறும் புன்னகைதான் பதில்.

ரயில்வே அட்வைஸரி கவுன்சில் மெம்பரா இருக்கலாம்
என்றான் அந்தப் பையன்.

இரண்டும் ஒண்ணுதானுங்க! என்றான் அந்த இருவரில் ஒருவன்.

எப்படிங்க ஒண்ணா இருக்க முடியும்? ரயில்வேல வேலை
செய்யறீங்க, இது, கூடவா தெரியலே? என்னவா இருக்கீங்க?
என்றான் இளைஞன்.

பழ காண்ட்ராக்டருங்க

எனக்குப் புரிந்தது.

வண்டி புறப்படும் போலிருந்தது.

கோயிங் ஸார். குட் ஜர்னி ஸார். என்று கைகளைக் கூப்பி
அவரிடம் விடைபெற்றுக் கொண்டு, அவர்கள் வண்டியை விட்டு
இறங்கினார்கள்.

‘என் பேர் மோகன்’ என்று சொல்லிக் கொண்டே கைகளைக்
கூப்பினான் அந்த இளைஞன். நீங்கள் யாரென்று எனக்குத்
தெரியும், என் அப்பாவை உங்களுக்குத் தெரியும். ராஜகோபாலன்
பிடிஐ ‘ என்று தொடர்ந்தான்.

ஓ.. அப்படியா? அவர் எப்படியிருக்கார்?

செளக்கியம். நான் இன்ஜினியரிங் முடிச்சிருக்கேன்.
அடுத்த வாரம் அமெரிக்கா போறேன்.

குட்.. கம்ப்யூட்டரா?

ஆமாம்.

அங்கேயே செட்டில் ஆயிடுவே..

நோ நோ.. திரும்பி வந்துடுவேன்…

அவர் எங்களிருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரையும் உரையாடலில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக

நான் மோகன் அமெரிக்கா போகப் போவதைப் பற்றிச் சொன்னேன்.

கையை நீட்டு என்றார் அவர் எழுந்து உட்கார்ந்தவாறு.

மன்னிக்கவும். எனக்கு நம்பிக்கையில்லை.

அமெரிக்காவில் முக்கால்வாசிப் பேருக்கு
நம்பிக்கையுண்டு தெரியுமா?

இருக்கலாம் எனக்கு இல்லை.

நான் பெரிய ஜோதிடன். டில்லியில் மிஸ்ரா என்று நீ
கேள்விப்பட்டதேயில்லையா? நன்றாக ஹிந்தி பேசுகிறாய், நீ
டில்லயில் தானே இருக்கிறாய்?

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் டில்லியில்தான்.
எனக்கு உங்களைப் பற்றித் தெரியாது.

மொரார்ஜியிடம் எண்பதில் சொன்னேன், உங்களுக்கு இன்னும்
கொஞ்ச காலந்தான் பதவியென்று. இந்திராகாந்தி என்னை தேடிக்
கொண்டு வந்தார். தேர்தலில் ஜெயிப்பீர்கள் என்றேன்.
கைலாஷ் காலனியில் என் வீட்டுக்கு வந்தாயானால்,
வாசலில் வரிசையாய் கார் நின்று கொண்டிருக்கும்,
ஜோஸ்யம் கேக்க. உனக்குக் காசு வாங்காமல் சொல்லுகிறேன்
என்கிறேன், வேண்டாமென்கிறாய்.

மன்னிக்கவும். இறந்த காலத்தைப் பற்றி எனக்குத் தெரியும்.

எதிர்காலத்தில் என்ன நடக்குமென்று ஸஸ்பென்ஸ்
இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்.

எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு விட்டால் வாழ்க்கை
போரடிக்கும் என்றான் மோகன்.

என்ன நடக்குமென்று தெரிந்து கொண்டால்,
தவறுகள் செய்யாமல் உன்னைத் திருத்திக் கொள்ள
உதவுமல்லவா?

விதியில் உங்களுக்கு நம்பிக்கையிண்டா?

நிச்சயமாக

அப்படியானால் நடப்பது நடந்துதானே ஆகவேண்டும்?
தவறுகளை எப்படி திருத்திக் கொள்ள இயலும்?

குதர்க்கம் பேசுகிறாய். இந்தக் காலத்து இளைஞர்கள்
எல்லோருமே இப்படித்தானிருக்கிறார்கள். உங்கள் ரீகன்
மனைவியும் ஜோஸ்யம் கேட்கிறாள் தெரியுமா?

எங்கள் ரீகனா? நான் அமெரிக்காவுக்குப் போகப் போகிறேன்
என்பதால் அமெரிக்கனாகி விடுவேனா? என்று கூறிவிட்டு
மோகன் சிரித்தான்.

அப்பொழுது கண்டக்டர் அங்கு வந்தார். ‘நீங்கள் தான் மிஸ்டர்
மிஸ்ராவா?’ என்றார் மிகவும் பவ்யமாக.

அவர் தலையசைத்தார்.

எல்லாம் செளகர்யமாக இருக்கிறதா?

இருக்கிறது. நான் மிஸ்டர் மிஸ்ரா இல்லை, டாக்டர்…’

மன்னிக்கவும்… மருத்துவ…

ஆமாம்.

ஏதாவது வேண்டுமா, உங்களுக்கு?

ஒரு தலையணைதான் கொடுத்தான் உங்கள் பையன்.
போதாது; இரண்டு வேண்டும்’

‘எஸ் ஸார்’

வண்டி தாமதமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
எனக்கு நாளைக்கு அடுத்த நாள் பதினொன்று மணிக்கு
உங்கள் மந்திரி ஸிந்தியாவுடன் அப்பாய்ன்ட்மென்ட் புரிந்ததா?

எஸ் ஸார்.

ஏதாவது வேண்டுமானால், பிறகு சொல்லுகிறேன்.

எஸ் ஸார்

இவருக்கு ஏன் இவ்வளவு மரியாதை? ரயில்வே அட்வைஸரி
கவுன்ஸிலில் மெம்பர் என்பதாலா, இல்லாவிட்டால்
அவர் சொல்வது போல் அரசாங்க ஜோஸ்யர் தானா?

அவர் அணிந்திருந்த ஒன்பது மோதிரங்கள் மீது
என் கவனம் சென்றது.

”ஒன்று கேட்கலாமா?” என்றேன் நான்.

”கேளுங்கள். ”

”கையில் ஒன்பது மோதிரங்கள் அணிந்திருக்கிறீர்களே.. ”

”அதுவா?” என்று அவர் புன்னகையுடன் கூறினார்.
”நவரத்தினங்கள். ஒன்பது என்ற எண்ணின்
விசேஷம் தெரியுமா? ”

”தெரியாது. ”

‘”ஒன்பதை இரண்டால் பெருக்கி வரும் தொகையின்
எண்களைக் கூட்டிப் பாருங்கள். ஒன்பது. இந்த மாதிரி
எந்த எண்ணால் பெருக்கிக் கூட்டிப் பார்த்தாலும் கடைசியில்
வருவது ஒன்பதுதான். உதாரணமாக 9 x 102 = 918; 9 + 1 + 8 = 18; 1 + 8 = 9. இந்த மாதிரி, இது ஏன் தெரியுமா? ”

”தெரியாது. ”

”ஒன்பதுதான் இறைவன். எதனாலும் பாதிக்கப் படாதவன்.
ஒன்பதைக் கடவுளாக ஏற்றுக் கொண்டால், எல்லா நன்மைகளும்

ஏற்படும். இன்று என்ன தேதி? ”

”பதினெட்டு. ”

”அதாவது, 1 + 8 = 9. நான் எந்தக் காரியம் செய்தாலும்
ஒன்பதில்தான் செய்வேன். நவக்கிரகங்களின் தாத்பர்யம்
இப்பொழுது புரிகிறதா? ”

”எல்லோருக்குமே ஒன்பது நல்லதுதானா?” என்று
கேட்டாள் மனைவி.

”நிச்சயமாக. ”

என்னை நவரத்தினக் கல் மோதிரம் வாங்கிப் போட்டுக்
கொள்ளுங்கள் என்று நச்சரிக்கப் போகின்றாளோ என்ற பயம்
எனக்கு வந்தது.

‘எல்லாருக்குமில்லை’ என்ற நான் இழுத்தேன்.

”இல்லை. எல்லாருக்குந்தான்.” என்றார் அவர்
உறுதியான குரலில்.

என் மனைவி அவரிடம் கையை நீட்டினாள்.

”ஒரு கேள்வி கேளுங்கள் சொல்லுகிறேன்.” என்றார் அவர்.

”எனக்கு ஆஸ்துமா உண்டு. அது எப்பொழுது போகும்? ”

அவர் ஐந்து நிமிஷங்கள் கையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

பிறகு சொன்னார். ”நவக்கிரக பூஜை செய்யுங்கள்.
பூஜை ஒன்பது நாள் நடக்க வேண்டும். நவரத்தினக் கல்
மோதிரம் அணிய வேண்டியது அவசியம். பாதிப் பேர்
இதுதான் நீலம் இதுதான் மரகதம் என்று பொய் கல்லைக்
காட்டி ஏமாற்றுவார்கள். உண்மையான கல் வேண்டுமானால்,

இந்தாருங்கள்..” என்று சொல்லிக் கொண்டே அவர் தம்மருகில்
வைத்திருந்த டயரியில் இருந்து ஒரு கார்டை எடுத்துக்கொடுத்தார்.

”இந்த ஆள் நம்பகமானவன். என் பேரைச் சொல்லுங்கள்.
இந்தாருங்கள், இதுதான் என் முகவரி. ”

”நவகிரக பூஜை நீங்களே வந்து செய்வீர்களா?”
என்று கேட்டேன் நான்.

”அது என்னால் முடியாது. நான் ஆட்களை
அனுப்பி வைக்கிறேன். ”

அவர் உடனே கண்களை மூடிக்கொண்டார்.
சில விநாடிகளுக்குப் பிறகு கண்களைத் திறந்து
‘மன்னித்துக் கொள்ளுங்கள். நான் ஒரு மணிநேரம் தியானம்
செய்யவேண்டும் ‘ என்றார்.

”செய்யுங்கள். ”

”இந்த ஆளை நம்பறீங்களா?” என்றான் மோகன்.

”ஏதானும் சக்தி இருக்கணும். இல்லாமலா. மொரார்ஜி,
இந்திராகாந்தி எல்லாரும் இவரைத் தேடிண்டு போறா?”
என்றாள் என் மனைவி.

”பதவி வந்துட்டா அதுக்கு நாம தகுதியா என்ற சந்தேகம்
எல்லா அரசியல்வாதிகளுக்கும் வந்துடும். அதனால்
ஜோஸ்யர்களை தேடிண்டு போறாங்க. சக்தியுமில்லே
ஒரு மண்ணாங்கட்டியுமில்லே. ”

என் மனைவியும் கண்களை மூடிக்கொண்டதிலிருந்து
அவள் அவனுடன் வாக்காட விரும்பவில்லை என்று தெரிந்தது.

திடீரென்று கண்விழித்தேன். ஒரே சத்தம். ‘டாக்டர்.. டாக்டர்’

நாலைந்து பேராக மிஸ்ராவை எழுப்ப முயன்று கொண்டிருந்தார்கள்.

அவருக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது.
அவர் கண்களைத் திறக்கவேயில்லை.

”என்ன அவருக்கு?” என்றேன் நான்.

”எங்களுக்குத் தெரியாது, கண்டக்டர் சொன்னார்,
இவர் டாக்டர்னு. இங்கேயிருந்து மூணாம் கம்பார்ட்மெண்ட்லே
ஒரு குழந்தைக்குத் தூக்கித் தூக்கிப் போடுது. என்னன்னு
தெரியலே. இவரைக் கூட்டிக்கிட்டுப் போகலாம்னு வந்தோம்”.
என்றான் ஒருவன்.

”டாக்டர் மிஸ்ரா, டாக்டர் மிஸ்ரா” என்று நானும் அவரை
எழுப்ப முயன்றேன்.

அப்பொழுது என் மனைவி சொன்னாள்,” உங்களுக்குச் சத்தம்

கேட்கலியா, அவருக்கே பயங்கர ஆஸ்துமா மூச்சு
வாங்கறதைப் பாருங்க.. ”

மேலே படுத்துக் கொண்டிருந்த மோகன் கீழே இறங்கினான்.

அவன் வந்தவர்களிடம் சொன்னான் : ”இவர் டாக்டருமில்லை
ஒண்ணுமில்லை. குழந்தையைக் காப்பாத்தணும்னா வேற
கம்பார்ட்மெண்ட்லே டாக்டர் இருந்தாப் பாருங்க’
வந்தவர்கள் போய்விட்டார்கள்.

அவரை எழுப்பி, ”என்கிட்டே மருந்து இருக்கு, சாப்பிடறாரா
கேளுங்கோ.. ‘ என்றாள் என் மனைவி.

மிகவும் கஷ்டப்பட்டு அவரை எழுப்பினேன். கண்களைத்
திறந்து சுற்று முற்றும் பார்த்தார். அவரைப் பார்க்க பரிதாபமாக
இருந்தது.

”டெட்ரால் எஸ்ஏ இருக்கு வேணுமா?” என்றாள என் மனைவி.

”வண்டியிலே நவகிரக பூஜை செய்ய முடியுமா?” என்று
கேட்டான் மோகன்.

”அது தப்பு. கஷ்டப்படறவாளுக்கு உதவி செய்யணும்.
கிண்டல் செய்யக் கூடாது. ஆஸ்துமான்னா என்னன்னு

கஷ்டப்படறவாளுக்குத் தெரியும்.” ‘ என்றாள் என் மனைவி.

ஐயாம் ஸாரி மாமி என்றான் மோகன்.

—————————————————————–

– கதை முடிந்து விட்டது… நான் தொடர்கிறேன்…

மேற்கண்ட கதையில் வரும் டாக்டர் / ஜோஸ்யர்
என்றெல்லாம் சொல்லிக்கொண்ட நபரைப் போன்ற அதே
behaviour நான் சொன்ன சகபயணிக்கு.

அவர் நிஜமா, போலியா என்பதைப் பற்றி எனக்கு
கவலை இல்லை. ஆள் சுவாரஸ்யமாக தெரிந்ததால்,
பேசிக்கொண்டே பயணித்தேன். ஏனோ தெரியவில்லை..
அவருக்கு என்ன பிடித்திருந்தது – சகஜமாக பேசிக்கொண்டே
வந்தார்….. நிறைய கதைகள் –
டெல்லி அரசியல் கதைகள் சொன்னார்….

நடுவே, தான் சு.சாமியின் “தோஸ்த்” – அவருக்காக
பல விஷயங்களை செய்து தருகிறேன் என்று சொன்னார்…
அவர் இன்று இருக்கும் top position-க்கு என்ன காரணம்
தெரியுமா ? என்று கேட்டார்… சில விஷயங்கள் சொன்னார்….!

எனக்கு நம்பிக்கை வரவில்லை….
தான் அண்மையில் செய்து கொடுத்த ஒன்றிரன்டு
விஷயங்களை பற்றி சொன்னார்…. சம்பவம் உண்மை தான்
என்றாலும், அதனுடனான இவர் தொடர்பை எப்படி நம்புவது…?

plain-ஆக அவரையே கேட்டேன்….
சில கணங்கள் என்னை உற்றுப் பார்த்தார்….

தன் செல்-போனை எடுத்து யாருக்கோ போன் செய்தார்…
எடுத்தவரிடம் கிட்டத்தட்ட 5 நிமிடங்கள்
தெலுங்கில் மாட்லாடினார்…! ஏதோ, பரிகாரம், பூஜை –
சம்பந்தமாக என்பது மட்டும் எனக்கு புரிந்தது….

பேசி முடித்தபிறகு, யாரிடம் பேசிக்கொண்டிருந்தேன்
தெரியுமா…? என்றார்…

no idea என்றேன். செல்போன் முன்பக்கத்தை
என்னிடம் காட்டினார்…

அதில் ஒரு நம்பர் இருந்தது- கூடவே “naidugaru”
என்று ஆங்கிலத்தில் பெயரும், திரு.சந்திரபாபு நாயுடு
அவர்களின் full screen புகைப்படமும்…!!!!

—————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to சு.சா.வின் “தோஸ்த்”…. என்று ஒருவர்…!!!

 1. தமிழன் சொல்கிறார்:

  அவஸ்தைகள் கதை நன்றாக இருந்தது. உங்களுடைய அனுபவமும் புரிந்துகொள்ளக்கூடியதுதான்.

  எனக்கு ஒரு யோகா மாஸ்டர் இருந்தார். அவர் சாதாரண வேலை பார்த்தவர் (எனக்கு யோகா, தியானம் சொல்லித்தந்தபோது அவர் சாதாரண வேலையில் இருந்தார்). இங்கு ஒரு ‘ஜோஸ்யர்/சாமியார்’ வந்திருந்தார். அவரை இந்த யோகா மாஸ்டர் பார்த்துப்பேசின போது, யோகா மாஸ்டரின் திறமைகளை அந்த ஜோஸ்யர் புரிந்துகொண்டார். இவ்வளவு திறமை வைத்துக்கொண்டு ஏன் சாதாரண வேலையில் இருக்கிறாய், என்னுடன் வந்துவிடு. சாமியார் மாதிரி முடியை வளர்த்துக்கோ, உடையையும் சாமியார் உடைக்கு மாற்றிக்கொள். அப்புறம் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்றாராம். யோகா மாஸ்டருக்கு பணத்தில் அதீத ஆசையில்லாததால், அதுவும் ஏமாற்றுவித்தைகளில் ஆர்வம் இல்லாததால், தனக்கு அதில் விருப்பம் இல்லையென்று சொல்லிவிட்டாராம்.

  ஜோசியம் ஒரு திறமைதான். அது கைவரப் பெற்றால், அதை வைத்துக்கொண்டு, சாமியார் வேடம் போடுவது மிக சுலபம். அப்புறம் பெரிய பெரிய ஆசாமிகளின் தொடர்பு கிடைக்கும். அந்தத் தொடர்பின்மூலம் நிறைய பலன் கிடைக்கும். இப்படித்தான் சந்திராசாமி அவர்கள் தாட்சரின் நட்பைப் பெற்றார். நம்ம ஊரிலும் பல ஜோசியர்கள் பணத்தில் கோலோச்சுவதைப் பார்த்திருப்பீர்கள்.

  இதனை நம்பும் எல்லா அரசியல்வாதிகளும், ‘ஆமாம்.. இவர் சரியான ஜோதிடராக இருந்தால், தான் தோல்வி அடையப்போவதைச் சொல்லியிருக்கணுமே, இவர் இறக்கப்போவதைச் சொல்லியிருக்கணுமே’ என்றெல்லாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அவர்களுக்கு எத்தைத் தின்றால் திரும்பவும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கமுடியும் என்று ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்களைச் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள்.

  ஜோதிடம் ஒரு விஞ்ஞானம்தான். பெரும்பாலான ஜோதிடர்கள் ஓரளவு திறமை பெற்றவர்கள். முதல் 7 1/2 சனியா.இந்த ராசிகளா,.. கஷ்ட தசை போன்று basic rulesஐ வைத்து ஓரளவு கணிக்கின்றனர். அதனால்தான் அவர்கள் சொல்வது பெரும்பாலும் சரியாக அமைந்துவிடுகிறது. பத்து நிகழ்வுகளைக் கூறி, அதில் ஓரிரண்டு பலிக்கும்போது, பலித்ததை மாத்திரம் விளம்பரப்படுத்திவிடுவர் (இந்திரா காந்தி திரும்பவும் பதவிக்கு வருவார் என்று So & So பத்திரிகையில் அப்போதே சொன்னேன் என்பதுபோல)

  கதையில் வரும் மோகன் மாதிரி இளைஞர்கள் அரிது.

 2. gopalasamy சொல்கிறார்:

  Akbar Sastry is Janaki Raman’s short story. That is also about train journey.

 3. NS RAMAN சொல்கிறார்:

  Nice story and interesting one

  Most of the politicians and businesses personalities are going behind astrologers
  With the cross connection of money and political power these Gurujis becoming power brokers. Unfortunately in our country people got more faith in Guru than God

  I personally believe Astrology and it can give you an early indication if it is predicted by a proper person.

 4. selvarajan சொல்கிறார்:

  மரத்தடி ஜோதிடர் முதல் ஓட்டல்களில் ரூம்களில் இருக்கும் ஜோதிடர் வரை — ” பிரபலங்களோடு : அரசியல்வாதிகள் — தலைவர்கள் — நடிகர்கள் போன்றவர்களோடு எடுக்கப்பட்டாதாக உள்ள போட்டோ இல்லாமல் பிழைப்பை நடத்துவது கடினம் — அதைப்பார்த்துதானே நம்ம ஆட்கள் ஏறி விழுகிறார்கள்….

  இதில் உங்களோடு பயணித்த ” ரயில் தோஸ்த் ” கூறியதில் ஆச்சர்யம் ஏதுமில்லை …. இதுபோன்றவர்கள் தங்களின் விழாக்களுக்கு மேலே குறிப்பிட்ட பிரபலங்களை அழைப்பதே ஒரு ” தற்காப்புக்குத்தானே ” …? நேர்மையான..? ஒருவர் கூறுவதைப் பாருங்கள் : —
  // உங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசியல்வாதிகள் மட்டுமல்ல. ஜோசியர்களும், சாமியார்களும் கூட ஆசைப்படுகிறார்கள். தங்கள் அன்பினால் கட்டுப்படுத்தத் தெரியாமல், பாவம், புண்ணியம், நல்லது, கெட்டது என்று சொல்லி உங்களுக்குள் ஒரு பயத்தை விதைக்கிறார்கள். //
  Read more at : முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை; முப்பது வருஷம் தாழ்ந்தவனும் இல்லை! http://isha.sadhguru.org/blog/ta/muppathu-varusham-vazhnthavanum-illai-muppathu-varusham-thazhnthavanum-illai/ — எவ்வளவு ” அருமையாக ” கூறியிருக்கிறார் பாருங்கள் … ! என்ன செய்வது காலத்தின் கோலம் …..

  பத்திரிக்கைகள் முதல் டி .வி. க்கள் வரை ஜோதிடர்களின் ராசிபலன்கள் இல்லாதவைகள் ஏதாவது இருக்கிறதா … ? இதுபோன்ற ஆசாமிகள் கொழுக்க பாதையமைத்து கொடுப்பதே இவர்கள்தான் … அதுவுமில்லாமல் அரசியல்வாதிகளின் ஜோதிடர்களின் பட்டியல் முதல் அவர்களின் கணிப்புவரை அனைத்தையும் மக்களுக்கு விவரமாக காட்டுவதும் இந்த மீடியாக்கள் தான் …..

  கருப்புப்பணத்தை பதுக்கவும் — வெள்ளையாக வேறு விதத்தில் மாற்றவும் வழிவகை செய்துக் கொடுத்து கமிஷன் ஏஜெண்டாக செயல்படும் சாமியார்களின் எண்ணிக்கை அதிகம் என்பது வருமானவரித்துறை போன்ற துறைகளுக்கு தெரிந்தும் — கிட்ட நெருங்க தடுப்பது அரசியல்வாதிகள்தானே ….

  எந்த விதமான இயற்கை பேரழிவு ஏற்பட்டாலும் — அடாவடியாக அடுத்த நாட்டுக்காரன் ” சுட்டுக்கொன்றாலும் ” நேரில் சென்று ஆறுதல் கூற திராணியற்ற ஆட்சியாளர்கள் — எத்தர்கள் உருவில் உலாவரும் ஜோதிடர்கள் மற்றும் சாமியார்களின் நிகழ்ச்சிகளுக்கு ” நேரம் தவறாமல் ” ஆஜராவது என்பது இருவருக்கும் உள்ள ” அண்டர்ஸ்டேண்டிங் ” அன்றி வேறு என்ன …. சு.சா . வின் இந்தவகை தோஸ்த் களில் கா.மை . சந்தித்தவரும் ஒருவர் போல இருக்குமோ …? என்ன இருந்தாலும் ” சு.சுவாமியின் நெருங்கிய நண்பர் சந்திராசாமி ” போல வருமா …. ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.