திரு.தினகரனின் லாயர்…!!! புலனாய்வு பத்திரிகைகள், மீடியா – மௌனம் – ஏன்..?


“உன் நண்பன் யாரென்று சொல்… நீ எத்தகையவன் என்று
நான் சொல்கிறேன்..” என்கிறது ஒரு ஆங்கில பழமொழி…

அதையே கொஞ்சம் மாற்றி, “உன் லாயர் யார் என்று சொல்…
உன் லாயக்கு என்னவென்று நான் தெரிந்து கொள்கிறேன்”
என்று இப்போதெல்லாம் (சில சமயங்களில் மட்டும்)
சொல்லி விட முடிகிறது…!!!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் திருவாளர் தினகரன்
அவர்களின் தகுதிகளை தெரிந்து கொள்வதை விட,
இரட்டை இலை கோரி அவருக்காக தலைமை தேர்தல்
அதிகாரி முன்பாக ஆஜரான வக்கீல் யார், அவர் பின்னணி
என்ன என்று பார்த்தாலே போதுமானதோ – என்று
தோன்றுகிறது…!!!

முக்கியமாக வாதாடியவர், மூத்த காங்கிரஸ் தலைவரும்
சுப்ரீம் கோர்ட் சீனியர் லாயருமான திரு.அபிஷேக் மனு
சிங்க்வி அவர்கள்…( மற்ற இரண்டு வக்கீல்களை விட்டு
விடுவோம்.)

டெல்லி அரசியலை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு
சிங்க்வி அவர்களைப்பற்றி ஓரளவு தெரிந்திருக்கும்.
ஒருவேளை தெரியாமல் இருந்தால் அவர்களுக்காகவும்,
மற்ற வாசக நண்பர்களுக்காகவும், திரு சிங்க்வி பற்றிய
பின்னணி கொஞ்சம்…..

( அவர் செக்ஸ் புகார் ஒன்றில் சம்பந்தப்பட்டு, காங்கிரஸ்
ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை
விட்டு விடுவோம்… அது இங்கு சம்பந்தப்படவில்லை …!!! )

இது, அவரது வருமான வரி வழக்கு சிக்கல் குறித்தது –

வருமான வரி ஆண்டுகள் 2010-11, 11-12, 12-13 தொடர்பான
ரிடர்ன்களில் அவர் செய்த கோல்மால்கள் குறித்து,
ஜோத்பூர் (அவர் ராஜஸ்தான்வாசி), வருமான வரி கமிஷனர் –
மறுபரிசீலனை செய்ததில்,
அவர் செய்த பல தில்லுமுல்லுகள் கண்டுபிடிக்கப்பட்டு,
அவருக்கு 100 % கூடுதல் வரி விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர் Income Tax Settlement Commission-க்கு
அப்பீல் செய்தபோது, அவரது தில்லுமுல்லுகள்
உறுதி செய்யப்பட்டு, அவருக்கு Income Tax Settlement
Commission-ஆல் 57 கோடி (ஐம்பத்தேழு கோடி) ரூபாய்
அபராதம் விதிக்கப்பட்டது…..

( அதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றம் செல்ல, வழக்கு,
நம்ம ஊர் வழக்கம்போல், pending-ல் இருக்கிறது…
என்ன அவசரம்… இருக்கட்டும்…
இதுவே, வக்கில்லாத விவசாயியாக இருந்தால், ட்ராக்டரை
பிடுங்கிக்கொண்டு போயிருப்பார்கள்….அவனும் தூக்கில்
தொங்கி இருப்பான்…)

தில்லுமுல்லுகள் என்று சொல்லப்பட்டவையாவன –

– அவரது வங்கிக்கணக்கிலிருந்து பல சமயங்களில்,
7 கோடி முதல் 32 கோடி வரை ரொக்கமாக
எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான சரியான செலவுகள்,
காரணங்கள் – காட்டப்படவில்லை….!!!

-2010-11-ஆம் ஆண்டிற்கான வருமான வரி ரிடர்ன்படி,
ஜனவரியிலிருந்து, மார்ச் வரைக்கான காலத்தில்,
எக்கச்சக்கமான செலவினங்கள் ( 18,000 இனங்கள் … )
காட்டப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, கணக்கு முடியும் நாளான
31, மார்ச் அன்று மட்டும் – 1200 செலவு இனங்கள்….!!!
வருமான வரி இலாகா, இதற்கான ஒரிஜினல் வவுச்சர்களை
சமர்ப்பிக்கும்படி உத்திரவிட்டபோது –

– அவரால் முடியவில்லை. தனது இயலாமைக்கான
காரணமாக அவர் கூறியது –

அவரது உதவியாளரின் அறையில் வைக்கப்பட்டிருந்தபோது
இந்த வவுச்சர்களை கரையான் கடித்து சாப்பிட்டு விட்டதாம்…!
( வடுவூராரின் ஒரு நாவல் தலைப்பு எனக்கு நினைவிற்கு
வருகிறது…..”தோலிருக்க சுளைமுழுங்கி” …)

– 2012-13-ஆம் ஆண்டிற்கான வருமான வரி ரிடர்னில் –
சட்டசம்பந்தமாக வெளியாகும் இதழ்களுக்கு சந்தா
செலுத்திய வகையில் – 75 லட்சம் ரூபாயும்,
சட்ட அறிவை விருத்தி (!) செய்துகொள்ள வாங்கிய
புத்தகங்களுக்காக சுமார் 8 கோடி ரூபாயும் செலவழித்ததாக
சொல்லி இருக்கிறார்…

மேற்கொண்டு, ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் செலவாக
ஒண்ணரை கோடி ரூபாய் கணக்கு காட்டி இருக்கிறார்…!!!

இது குறித்து அவர் யாருக்கெல்லாம் பணம் கொடுத்ததாக
பெயர் விலாசம் கொடுத்திருந்தாரோ, அந்த விலாசங்களுக்கு
வருமான வரி இலாகா அனுப்பிய சம்மன் அநேகமாக,
அனைத்தும் விலாசதாரர் இல்லாததால் திரும்ப வந்து
விட்டன…!!!

– இதைத்தவிர, தனது அலுவலகத்திற்காக கம்ப்யூட்டர்கள்
(LAPTOPs) வாங்கிய வகையில் 5 கோடி ரூபாய்
செலவிடப்பட்டு உள்ளதாக கணக்கு….

வருமான வரி இலாகா தானே ஒரு கணக்கு போட்டு
பார்த்திருக்கிறது….. ஒரு லேப்டாப் 40,000 ரூபாய் என்று
வைத்துக் கொண்டால் கூட, 5 கோடி ரூபாயில் 1250 லேப்டாப்
வாங்கலாமே என்று… அவரது மொத்த உதவியாளர்களின்
எண்ணிக்கையோ பதினாலு (14) தானாம்…

பதினாலு பேருக்கு 1250 லேப்டாப்….!!!
பொய் சொன்னால் கூட நம்பும்படி சொல்ல வேண்டாமா…?

இப்படியா ஆடு திருடிய கள்ளன் மாதிரி
கையும் களவுமாக பிடிபடுவது….?

செட்டில்மெண்ட் கமிஷனின் உத்திரவு கையில் கிடைத்த
மறு விநாடியே, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு போய்,
ஒரு ஸ்டே ஆர்டர் வாங்கி விட்டார் மனுஷர்…

அப்புறம் என்ன….?

திருவாளர் தினகரனுக்கு பொருத்தமான லாயர் தானே…?

ஆர்.கே.நகர் வாக்காளர்கள் ….
சும்மா சொல்லக்கூடாது –
கொடுத்து வைத்தவர்கள்….!!! 🙂 🙂 🙂

—————————————————

பின் குறிப்பு –
ஜனநாயகம் சிறப்பாக செயல்பட பத்திரிகைளின் பங்கு
மிக முக்கியமானது…..
இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் ஏன் எந்த
செய்திப் பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுத்து
போடுவதில்லை – விவாதிப்பதில்லை…?
செய்தி தொலைக்காட்சிகள் கூடத்தான்…?

கழுகு, ஆந்தை என்று சுற்றி வரும் புலனாய்வு
பத்திரிகைகள் கூட இந்த மாதிரி செய்திகளை
போடுவதில்லையே – ஏன்…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to திரு.தினகரனின் லாயர்…!!! புலனாய்வு பத்திரிகைகள், மீடியா – மௌனம் – ஏன்..?

 1. சைதைஅஜீஸ் சொல்கிறார்:

  இந்த ஊடக நண்பர்களை பார்த்து விஜகாந்த் துப்புனது சரிதானே!?

 2. புதியவன் சொல்கிறார்:

  “உன் லாயர் யார் என்று சொல்…உன் லாயக்கு” – இல்லை இல்லை உன் “லாயர் யார் என்று சொல்… நீ எவ்வளவு பெரிய லையர் என்று நான் சொல்கிறேன்” என்றிருக்கவேண்டும்.

  வெறும் அபிஷேக் சிங்கைப்பற்றி எழுதினால் (தமிழில்) யாருக்குப் புரியும். அதுவும் தவிர, காங்கிரசில், அதன் அரசியல்வாதிகளில் கொள்ளை (இல்லை சமூக சேவை) அடிக்காதவர்கள் யார்? இப்போ தினகரன், அவரைப் பிடித்ததனால் ஒருவேளை ஜூ.வி. போன்ற பத்திரிகைகள் (திமுக சார்பான செய்திகளை மட்டும் பிரசுரம் செய்பவை) இனி அபிஷேக் சிங்வியைப் பற்றி எழுதும். அதற்கு முன்பே நீங்கள் முந்திக்கொண்டீர்கள்.

  அதுவும் தவிர, தினகரனுக்கு இவரை விட்டா சூப்பர் வக்கீல் யாரிருக்கா? புதுசா வக்கீல், தினகரனோட பிரச்சனைகளையெல்லாம் அறிந்துகொள்ளவேண்டாம். எல்லாத் தில்லு முல்லுகளையும் அவரே முன்பு பண்ணிய அனுபவம் இருக்கிறதே.

  பொதுவா ஊடகத்தில் இரண்டு வகையானவர்கள் உண்டு. தனக்கு வேண்டப்பட்டவர்களைப் பற்றி வரும் மோசமான செய்திகளைப் போடாமல் தவிர்த்துவிடுவார்கள். எழுதாமலேயே விட்டுவிட்டால் அது OBVIOUS கறை ஆகிவிடும் என்று தெரிந்தால் மயிலிறகினால் வருடிவிடுவதுபோல எழுதுவார்கள் (ஜூவி, மாறன் சகோதரர்கள் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் கடைபிடிப்பதுபோல, நக்கீரன், திமுக மேலிடங்கள் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் கடைபிடிப்பதுபோல). அத்தகைய ஊடகங்கள், தனக்கென்று ஆட்கள் அரசியல் கட்சித் தொடர்பாளர்கள்போல் (புரோக்கர்) வைத்திருப்பார்கள். அவர்களைப் பற்றி, அவர்கள் வீட்டு நாய், புதிதாக உணவு சாப்பிட்டது முதற்கொண்டு அவ்வப்போது எழுதுவார்கள் (உதாரணம் ஜூவி போடும் வைரமுத்து பற்றிய கட்டுரைக்கதைகள், நக்கீரன் போடும் ஜெகத் கஸ்பர் கட்டுரைகள்). இரண்டாவது வகை, எதற்கு வம்பு என்று எல்லாவற்றையும் சாதாரணமாகவும், சினிமா/கில்மா செய்திகளை அதிகமாகவும் போடுவார்கள்.

  நம்ம ஊர் தொலைக்காட்சிகள், விவாதிப்பது எல்லாமே, சும்மா பாவலாவுக்குத்தான். அவர்கள், யாரையுமே விரோதித்துக்கொள்வது போல், எந்த உண்மையையும் விவாதிக்கமாட்டார்கள். வம்பில்லாத வெட்டி அரட்டைகள்தான் இவர்கள் பெரும்பாலும் செய்யும் விவாதங்கள். பாண்டேவின் பேட்டிகள் ஓரளவு குவாலிட்டியோடு இருக்கின்றன. அவருக்கும் நிறைய CONSTRAINTS இருக்கும்.

 3. Sundar Raman சொல்கிறார்:

  நம்ப பத்திரிகைகள் பற்றி …சொல்லாமல் இருப்பதே மேல் . கொஞ்சூண்டு வயர் திருடினாலே லாக் அப்பில் வைத்து பெண்டு நிமித்தி விடுவார்கள் … மாறன் அவர்கள் , ஒரு பெரிய தொலை தொடர்பு exchange களவாடி , கோடி கணக்கில் ஊழல் செய்து , அரசின் கண்களில் சுண்ணாம்பு தடவி ….. அவரகள் ஹாய்யாக இருக்காங்க … அதற்க்கு கோர்ட்டு பாதுகாப்பு .

  இந்த அபிஷேக் …..அந்த சம்மந்தப்படாத பெண்மணியிடம் , நீதிபதி பதவி வாங்கித்தருகிறேன் என்று சொல்லி வேறு எதோ கொடுக்கும் பொழுது , அவரோட டிரைவர் அதை படம் எடுத்து விட்டார் . இவருடைய பண்புக்கு இது ஒரு எடுத்து காட்டு.

  இவர் , கபில் சிபல் , ஆனந்த் குரோவர் , …இவர்கள் தான் சுப்ரீம் கோர்ட்டின் தலை சிறந்த வக்கீல்கள் . இவர்கள் ஆஜர் ஆன கேஸ்களை பார்த்தாலே போதும் … யார் குற்றவாளி என்று . அதே டெல்லியில் NDTV . இந்தியா டுடே போன்ற டிவி முதலைகள். சத்தியமாக என் அறிவுக்கு எட்டாத பெரிய புதிர் ஏன் இவர்கள் மீது நடவடிக்கை இல்லை ? இதில் NDTV மற்றும் CNN IBN இரண்டுக்கும் முதலாளி அம்பானியாம் . இப்போ நம்ப சிதம்பரம் மற்றும் கார்த்திக் வேற ….

  கோர்ட் ஒரு பெரிய சிலந்தி வலை தான் போல இருக்கு.

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இடுகையில் சொல்ல நினைத்து – மறந்து விட்டேன்…
  இப்போது தான் மீண்டும் நினைவு வந்தது…

  -திருவாளர் அபிஷேக் சிங்க்வி அண்மையில்
  தமிழ்நாடு சம்பந்தமுடைய இரண்டு
  முக்கிய வழக்குகளில் ஆஜராகி இருந்தார்…
  இந்த ஆளுடைய ” தரத்தை ”
  தீர்மானிக்க அதுவே போதும்….

  1) ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழ்நாட்டில் கொந்தளித்துக்
  கொண்டிருந்தபோது, தமிழக அரசு பெரும்பாடுபட்டு,
  மத்திய அரசின் சம்மதத்தோடு – ஒரு அவசர சட்டத்தை
  சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றி, போராட்டத்தை
  முடிவிற்கு கொண்டு வர முயன்றது.

  அந்த மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேறிய
  மறுநாள் காலையே, இவர் சுப்ரீம் கோர்ட்டில்,
  அதற்கு எதிராக வழக்கு போட்டார்…( பீட்டாவிடம்
  காசு….!!!) பிற்பாடு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
  அவரிடம் தொலைபேசியில் பேசி – தமிழ்நாட்டில்
  காங்கிரசுக்கு எதிராக அது பெரும் விளைவுகளை
  ஏற்படுத்தும் என்று சொன்னபிறகு, இவர் அதிலிருந்து
  ஒதுங்கி, மற்றவர்களை தொடரச் செய்தார்.

  2) நம்ம ஊர் மணல் கொள்ளையர் – (மொட்டை ரெட்டி)
  ஜாமீன் வழக்கில் வாதாடியவரும் இவரே.
  விசேஷ நீதிமன்றம் வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தபோது, அதனை கடுமையாக எதிர்த்து,
  என் கட்சிக்காரர் வசதியாக வாழ்ந்து பழகியவர்…..(!)
  எனவே, குறைந்த பட்சம் அவருக்கு
  உடனடியாக சிறையில் “A” கிளாஸாவது
  கொடுக்க உத்திரவிட வேண்டும் என்று வாதாடினார்….!!!

  -காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.