திரு.பாலகுமாரன் “அன்று” எழுதிய எனக்குப் பிடித்த ஒரு கட்டுரை …..


அப்பாவை எப்படி தகனம் பண்ணியிருப்பார்கள், நெருப்பு மூட்டி
எரித்தால் வலிக்காதா, ஏன் வலிக்காமல் போயிற்று, எது
இருந்தால் வலி, எது இழந்தால் மரணம். எது இருந்தால்..?
என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான்.

எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான்.இறந்து
போதல் என்றால் எது வெளியே போகவேண்டும் என்று
மறுபடியும் ஆராய்ந்தான். இப்படி உட்கார்ந்து பார்த்தால்
தெரியுமா, இறந்து போனால் தானே தெரியும்.’

இறந்து போனது என்றால் நீட்டி படுக்க வேண்டும். அவன்
சட்டென்று கால் நீட்டி படுத்துக் கொண்டான். உடம்பை
விறைப்பாக்கினான்.

“இப்ப உடம்பு செத்துவிட்டது. இந்த உடம்புக்கு மரணம்
வந்துவிட்டது. நான் இறந்து விட்டேன். இப்பொழுது கொண்டு
போய் தகனம் செய்ய போகிறார்கள். அண்ணா தான்
மறுபடியும் நெருப்பு சட்டி தூக்கிக் கொண்டு போகவேண்டும்.

ஆடி ஆடி தூக்கிக் கொண்டு போய், சுடுகாட்டில் வைத்து
விறகு அடுக்கி, கொளுத்தி விடுவார்கள். இந்த உடம்பு
மெல்ல மெல்ல நெருப்புபட்டு சாம்பலாகிவிடும்.. ஒன்றுமே
இருக்காது. உடம்பு காணாமல் போய்விடும்.

எது இருப்பதால் நான் இருக்கிறேன், எது இருப்பதால்
நான் படுத்து இருக்கிறேன். எது இல்லாது போனால் நான்
இறந்து விடுவேன் “. வேங்கடராமன் உற்று ஆழ்ந்து எது
இருக்கிறது என்று பார்த்தான்.

வேங்கடராமனின் மூச்சில் மாறுதல் ஏற்பட்டது.
மனம் அடங்க, முச்சும் அடங்கும்,
மூக்கில் இருந்து ஓரடி தூரம் வெளிவருகின்ற காற்று
மெல்ல சுருங்கிற்று. மனதில் உள்ளுக்குள் ஆழ்ந்து
எது இருக்கிறதோ என்று பார்க்க,
மூச்சு விடுவது மூக்கின் எல்லைவரை இருந்தது.
இன்னும் ஆழ்ந்து எது இருக்கிறது, எது இழந்தால்
மரணம் என்று உற்று பார்க்க மூச்சானது
மேல்மூக்கு வரை நின்றது.

‘ அட இதோ, இந்த இடத்தில்தான், இந்த இடத்தில்தான்
ஏதோ இருக்கிறது. அதனுடைய இருப்பால்தான்

உடம்பினுடைய எல்லா விஷயங்களும் ஆடுகின்றன.’
இன்னும் உற்று பார்க்க, மூச்சானது வெளியே போகாமல்,
தொண்டைக் குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று.

நுரையீரலிலிருந்து தொண்டைக்குழிக்கு வந்தது.
தொண்டைக்குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று.

இன்னும் உற்றுப் ஆழ்ந்து பார்க்க வேங்கடராமன் உடம்பு
வேகமாக விறைத்தது. உடம்பினுள்ள மற்ற புலன்களுடைய
ஆதிக்கங்கள் தானாய் இழந்தன. இரத்த ஓட்டம் வேறு
மாதிரியான கதிக்கு போயிற்று. இறந்த போது உடம்பு
விறைக்குமே, அந்த விறைப்புத்தன்மை உடம்பில்
சட்டென்று ஏற்பட்டது.

அவன் அந்நியமாய் நின்று வேடிக்கை பார்த்தான்.
மூச்சானது இப்பொழுது மெல்ல நுரையீரலில் இருந்து
சிறிது தூரம் வெளிப்பட்டு மறுபடியும் நுரையீரலுக்கு
போயிற்று. மூக்கு அருகே, தொண்டை அருகே வராது,
மூச்சு குழாய் அருகே கொஞ்சம் தூரம் போய்விட்டு
மறுபடியும் பின் திரும்பியது.

மூச்சு இருந்தது. ஆனால் முழுவதுமாக இல்லாது,
ஒரு காளை கொம்பு போல அதே அளவோடு சிறிது
வளைவோடு மூச்சு எகிறி வெளியே போய் மறுபடியும்
நுரையீரலுக்கு வந்தது.

மனம் அடங்க, மூச்சும் அடங்கும். மூச்சு அடங்க,
மனமும் அடங்கும். இரண்டு காளை கொம்புகளாய்
மூச்சு அசைந்து கொண்டிருந்த பொழுது, சட்டென்று
உள்ளுக்குள்ளே ஒரு பேரொளி தோன்றியது.

தாங்க முடியாத அதிர்ச்சி வந்தது. இரண்டு மூச்சுக்கு
நடுவேயும், இரண்டு காளைக் கொம்புகளுக்கு நடுவேயும்,
ஏதோ ஒன்று பிரகாசமாக ஆடியும், ஆடாமலும், அசைந்தும்,
அசையாமலும் மிக பொலிவோடு நின்று கொண்டு இருந்தது.
எண்ண ஓட்டங்கள் சில்லென்று நின்றன.

அது, அந்த பேரொளி , எண்ணத்தை விழுங்கியது.
எண்ணம் விழுங்கப்பட, ‘நான்’ என்ற அகந்தையும்
உள்ளே விழுங்கப்பட்டது.

‘ நான்’ என்கிற எண்ணம் காணாமற் போக , பேரொளியே
தானாகி வேங்கடராமன் கிடந்தான். சகல உயிர்களையும்
விழுங்கி நிற்பது என்பது தெரிந்தது. இதுவே நிரந்தரம்.
இதுவே முழுமை. இதுவே இங்கு இருப்பு. இதுவே
இங்கு எல்லாமும். இதுவே முதன்மை, இதுவே சுதந்திரம்,

இதுவே பரமானந்தம், இதுவே பூமி, இதுவே பிரபஞ்சம்,
இதுவே அன்பு, இதுவே கருணை, இதுவே அறிவு.
இதுவே ஆரோக்கியம். அனைத்து இடங்களிலும் நீக்கமற
நிற்கின்ற அற்புதம் . இதுவே எல்லா உயிர்களிலும் நீக்கமற
நிறைந்து இருக்கிறது.

மூடிய கண்களில் பெரிய வெளிச்சம்,
மூடாத காதுகளில் ரீங்காரம்,
உடம்பு முழுவதும் புல்லரிக்க வைக்கும் தகதகப்பு,
புத்தியில் ஒரு திகைப்பு, உள்ளங்காலில் ஒரு சுகவேதனை,
ஆசனவாய் இழுத்து சுருங்கி கொண்டு கழுத்து வரை
ஒரு சக்தியை தள்ளி அனுப்புகிறது.

முதுகு தண்டில் ஒரு குடையல்,
நெஞ்சு துடிப்பு நிதானம்,
இருதயத்தில் அழுத்திய கனம்,
தொண்டையில் ஒரு சுழல்,
நெற்றியில் ஒரு குறு குறுப்பு,
உச்சி மண்டையில் ஒரு அக்னி,
ஆஹா ஆஹா எல்லா இடமும் நீக்கமற நிறைந்திருக்கிறதே.

அதுவே அதுவே, வேங்கடராமனின் மனம் மெல்ல விழித்து
கொண்டு அலறியது.

திரும்பி எழுந்திருக்க அரைமணி நேரம் ஆயிற்று.
வேங்கடராமன் எழுந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான்.
எதிரே இருந்த சுவர் பார்த்து வெறுமே அழுதான். பிறகு
காரணமின்றி சிரித்தான். மீண்டும் அழுதான். எழுந்து நின்று
சுவர் மூலையில் சாய்ந்து கொண்டான்.

தள்ளாடி வாசல் நோக்கி நகர்ந்தான். வேகமாக தாவி ஏறும்
மாடிப்படி அன்று பார்க்க பயமாக இருந்தது. உருண்டு
விழுந்து விடுவோமோ என்று தோன்றியது.

‘என்ன நடந்தது எனக்கு, என்ன நடந்தது எனக்கு’
ஒவ்வொரு படியாய் மெல்ல இறங்கி வந்தான்.

‘ உள்ளே இருப்பது நான். அதுதான் நான்’
ஒருபடி இறங்கினான்.

‘இந்த உடம்பு நான் அல்ல,
இந்த புத்தி நானல்ல,
என் சக்தி நானல்ல,
என் மனம் நானல்ல’
ஒவ்வொரு படி இறங்கும் போதும் அவனுக்குள்
தெள்ளத்தெளிவாய் விஷயம் புரிந்தது.

‘உள்ளே பேரொளியாய், சுடராய் இருந்து இருக்கிற அதுவே
நான். அதுவே எல்லாருள்ளும். எனக்குள் இருப்பதே
எல்லா இடத்திலும் இருக்கிறது. நான் தான் அது,
நான் தான் சித்தி, நான் தான் சித்தப்பா, நான் தான் அண்ணா,
நான் தான் தெரு நாய், நான் தான் வண்டு, நான் தான்
பசுமாடு, நான் தான் மாடப்புறா, நான் தான் எல்லாமும்.

ஒருமை எப்படி பன்மையாகும். இது மிகப் பெரிய தவறு.
‘நான்’ என்பது எல்லாவிதமாகவும் விளங்கியிருக்கிறபோது,

எல்லாமுமாய் பிறந்து இருக்கிற போது,
என்னிலும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்.
என்ன வேறுபாடு. ஒருமை எப்படி பன்மையாகும்..? ‘
பத்தாவது படியில் இறங்கி நின்றான்.
மாடிப்படி திரும்பினான். சிரித்தான்.

‘ இதை யாரிடம் போய் சொல்வது, இப்படி நடந்தால்
என்ன அர்த்தம் என்று விளக்கம் கேட்பது, நான் சரியாக
புரிந்து கொண்டு இருக்கிறேனா, எனக்கு ஏதோ நடந்தது,
அது சரியாக நிகழ்ந்ததா, தூக்கமா, பிரமையா அல்லது
உள்ளுக்குள் இருப்பது தான் வெளிப்பட்டதா’

அவன் இறங்கி நடந்து கோயிலுக்குள் போனான்.
மதுரை சுந்தரரேஸ்வரரை பார்த்து கைகூப்பினான்.
அந்த கைகூப்பலில் நன்றி இருந்தது, நெகிழ்வு இருந்தது,

சந்தோஷம் இருந்தது, அமைதி இருந்தது, அன்பு இருந்தது,
ஒரு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடிற்று. எல்லாம் கரைந்து
மனம் முழுவதும் ஒன்றாகி அவன் மறுபடியும் சுவாமியை
நமஸ்கரித்தான்.

மறுபடியும் போய் அவ்விதமே ஆழ்ந்து உட்கார்ந்து கொள்ள
வேண்டும் அல்லது படுத்து அந்த அனுபவத்தை மறுபடியும்
அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது. மீண்டும் நீங்க
வரணும் என்று மதுரை சுந்தரரேஸ்வரரை கைகூப்பி
இறைஞ்சினான்.

ஊர் முழுவதும் சுற்றி விட்டு வீடு திரும்பும் போது ஒரு
காலியான பாத்திரம் போல வேங்கடராமன் நடந்தான். அந்த
பாத்திரத்தை நிரம்ப இறையருள் காத்திருந்தது. தன்னை
சுத்தம் செய்து கொள்வது என்பது எல்லோருக்கும் நடப்பது
இல்லை, வெகு சிலருக்கே நடக்கிறது. அப்படி
நடந்தவர்களுக்குத்தான் ஞானியர் என்றும்,
மகான் என்றும் பெயர்.

வேங்கடராமன் என்கிற அந்த பதினாறு வயது இளைஞன்
பிற்பாடு ஸ்ரீ ரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டார்.
பகவான் என்று பலர் அவரை வணங்கினார்கள்.
வேங்கடராமன் பிறந்த ஊர் திருச்சுழி.. இராமனாதபுர
சமஸ்தானத்திற்கு அடங்கிய சிறிய ஊர், சுற்றிலும்
பொட்டல் காடு. மானம் பார்த்த பூமி. ஆனால் அங்கு
அழகான சிவன் கோயில் இருந்தது. உலகில் பிரளயம்
ஏற்பட்டபோது சிவன் சூலத்தால் ஒரு பள்ளம் ஏற்படுத்த
பிரளயம் அழித்துக்கொண்டு அப்பள்ளத்தில் மறைந்தது.

பிரளயம் அழிந்து மறைந்ததால் அது திருச்சுழி.

வெகு காலத்திற்கு பிறகு அந்த சுழியிலிருந்து
ஒரு பிரளயம் உண்டாயிற்று. பொங்கி எழுந்து உலகம்
எல்லாம் நனைத்தது.

——————————————————————-

கருணையின் வடிவம் –

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to திரு.பாலகுமாரன் “அன்று” எழுதிய எனக்குப் பிடித்த ஒரு கட்டுரை …..

 1. Srini சொல்கிறார்:

  Dear KM Sir,
  Pranams. Thanks for this post. Its a very good one from Mr. Balakumaran.

 2. R KARTHIK சொல்கிறார்:

  இந்த இடுகைக்கு நன்றி.

 3. தமிழன் சொல்கிறார்:

  இது பகவான் ரமண மஹரிஷியின் வாழ்க்கையைப் பற்றி பாலகுமாரன் அவர்கள் எழுதிய புத்தகத்தில் வருகிறது. தன்னுடைய அனுபவத்தினாலும், இப்படித்தான் இது நடந்திருக்கவேண்டும் என்று நிறைவாக பாலகுமாரன் அவர்கள் DRAMATIZE செய்திருக்கிறார். எழுத்து வன்மைதான் இதன் காரணம்.

  இந்த தியானம் என்பது எல்லோருக்கும் சித்திக்காது. அது வெகு சிலருக்கே சித்திக்கும். 17 வயதினில் இந்த மாதிரி சிந்தனையும் செயலும் வரவேண்டுமானால், பலப் பலப் பிற்ப்பினில் தொடர்ந்த ‘உள் அறிதல்’ என்ற பாதையினால்தான் இருக்கவேண்டும்.

  நிறைய புத்தகங்கள் படித்ததனால் எனக்குத் தோன்றியது. மஹான்கள் அவதரித்து நமக்கு ஒரு நல் பாதையைக் காட்டுகிறார்கள். அந்தப் பாதையை நினைந்து நினைந்து நாமும் அதன் உண்மையை உணர்ந்து நடைபோடுவதற்குப் பதிலாக, அவர்களைக் கோவில் கட்டிக் கும்பிட்டு (அதில் தவறல்ல. ஏனென்றால் அவர்கள் ‘குரு’வின் ஸ்தானம்), அவர்கள் சொன்ன பாதையைக் கடைபிடிக்காமல் இருந்துவிடுகிறோம் (பெரும்பாலும்). இதுக்குமேல் இதனை எழுதுவது வேண்டாம் என்று தோன்றுகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   ஒரு தேடுதல் உணர்வும், முயற்சியும் உருவானால் போதும்…
   மற்றவை எல்லாம் தானே தொடரும்……
   சிலருக்கு சீக்கிரத்தில் உதவி கிடைக்கும்…
   சிலருக்கு நாள் செல்லும்…
   அவரவர் கொடுப்பினைக்கு தகுந்தாற்போல்….

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! பாலகுமாரன் அன்று எழுதினர் … அதன் மூலாதாரம் திரு ரமணரின் ” உபதேச உந்தியார் ” என்னும் நூலில் ” உதித்த இடத்தில் ஒடுங்கியிருத்தல் ” என்று பகவான் விளக்கமாக கூறுகிறார் …

  பகவானின் //‘‘நான்… நான்… நான்… என்ற சொல்லுக்கு விளக்கம் கூறும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி ….

  பகவான் எல்லோருடைய பிரச்னைகளையும் தீர்த்தாரா?

  ஆமாம், பிரச்னை என்று யார் சொல்வது என்று கேட்டார்.

  ‘‘நான்தான் சொல்கிறேன்’’ என்று பதில் வந்தது.

  ‘‘அந்த நான் யார் என்று பார்’’ என்று திருப்பிக் கேட்டு மடக்கினார்.

  ஒரு கணம் இந்த பதிலைக் கேட்டவர்கள் திகைத்தார்கள். என்ன இது? நான் யார் என்று எப்படி என்னையே கேட்டுக் கொள்வது என்று குழம்பினார்கள். மீண்டும் பகவானை பார்த்தார்கள்.

  ‘‘பகவானே, நான் யார் என்று எப்படி கேட்டுக் கொள்வது’’ என்று புரியாது கேட்டபோது அழகாக பகவான் விளக்கினார்.

  ‘‘நான்… நான்… நான்… என்று சொல்கிறாய் அல்லவா. அந்த நான் யார்? என்று சற்று உள்ளே பாரேன். இந்த நான் எனும் எண்ண விருத்தி எங்கிருந்து வருகிறது என்று கவனத்தை உள்முகமாகத் திருப்பேன். இந்த உடலை நான் என்று சொன்னால் தூக்கத்தில் உடலைக் குறித்த நினைவு இல்லையே. ஆனால், சுகமாகத் தூங்கினேன் என்று மறுநாள் சொல்கிறாய். அப்போது இந்த தூக்கத்தை யார் அனுபவித்தது. விழித்திருக்கும்போதும் இந்த நான் உள்ளது. உடலும், உலகமும் மறைந்த தூக்கத்திலும் இந்த நான் என்பது இருக்கிறது. எனவே, இந்த நான் எனும் உணர்வு எங்கு உற்பத்தியாகிறது என்று தேடினால் மெல்ல இந்த நான் தன்னுடைய பிறப்பிடமான ஆத்மாவிற்குள் சென்று ஒடுங்கும்’’ என்று விளக்கினார்.

  பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் மார்க்கம் ராஜ மார்க்கம். எங்கேயோ கடவுள் இருக்கிறார். அவரை காண்பது மிகவும் கடினம். அது யாருக்கோ சிலருக்குத்தான் முடியும். வீட்டைத் துறக்க வேண்டும். குடும்பத்தை விட்டு ஓடிவிட வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்தவே இல்லை.

  ‘‘பகவானே, கடவுளை அறிவது எப்படி‘‘

  ‘‘கடவுளை அறிவது இருக்கட்டும். உன்னை நீ யார் என்று தெரிந்து கொண்டு விட்டு அதற்கு அன்னியமாக, அதற்கு அப்பால் கடவுள் என்கிற விஷயம் தனியே இருக்கிறதா என்று பார். இந்த கேள்வியை கேட்பவன் யார் என்று தன்னையே ஏன் கேட்டுக் கொள்ளக் கூடாது‘‘ என்று ஞான மார்க்கத்தை போதித்தார்.

  மீண்டும், மீண்டும் பகவானிடம் நான் யார் என்கிற ஆத்ம விசாரத்தை எப்படி செய்வது என்று கேட்கப் பட்டது. மகரிஷிகளும், பொறுமையாக ‘‘அப்பா… ஓர் இருட்டு அறையில் இருக்கிறாய். இருட்டில் எதுவும் தெரியவில்லை. ஆனால், நான் இருக்கிறேனா என்று யாரிடமாவது கேட்பாயா. நான் எங்கே என்று இருட்டில் தேடுவாயா. கண்கள் இருட்டில் தவித்தாலும் நான் என்கிற உணர்வு. இருக்கிறேன் என்கிற நிச்சய உணர்வு அதாவது உன்னுடைய இருப்பு உனக்கு தெள்ளத் தெளிவாக தெரிகிறதல்லவா. நீ இருக்கிறாய் என்பதை யாரேனும் சொல்ல வேண்டுமா என்ன? அந்த நான் இருக்கிறேன் என்கிற உணர்வின் மீது உன் கவனத்தை செலுத்து. மெல்ல அந்த நான் என்கிற உணர்வு எங்கு உற்பத்தியாகிறதோ அங்கு சென்று ஒடுங்கும். அந்த இடம்தான் அருணாசலம். அதுவே ஆத்ம ஸ்தானம்’’ என்று மிக எளிமையான மார்க்கத்தை கூறினார். நான் எனும் எண்ணம் தோன்றிய பிறகுதான் மற்ற எல்லா எண்ணங்களும் தோன்றுகின்றன. எனவே, இந்த மனதின் உற்பத்தி ஸ்தானத்திற்குச் செல்லுங்கள். அப்போதுதான் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பதை பார்ப்பீர்கள். இதைத்தான் உபதேச உந்தியார் எனும் நூலில் ‘‘உதித்த இடத்தில் ஒடுங்கியிருத்தல்‘‘ என்று அழகாக கூறுகிறார்.// http://swasthiktv.com/naan-naan-naan-endra-soluku-vilakam-koorum-bhakavaan-sri-ramana-maharishi/ ….

  இதையே ” சிவவாக்கியர் ” இவ்வாறு கூறுகிறார்
  ” என்னகத்து ளென்னைநா னெங்கும்நாடி யோடினேன்
  என்னகத்து ளென்னைநா னறிந்திலாத தன்மையால்
  என்னகத்து ளென்னைநா னறிந்துமே தெரிந்தபின்
  என்னகத்து ளென்னையன்றி யாதுமொன்று மில்லையே ” …. ஆனால் இன்று ” நான் ” என்பதை அறிய யாருமே தயாராக இல்லை …. அப்படித்தானே … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   அற்புதமான விளக்கத்தை சொல்லி இருக்கிறீர்கள்…

   கூடவே ஒரு ஆன்மிக தேடலுக்கும் வழி
   காட்டி இருக்ககிறீர்கள்…..
   மிக்க நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • DeathBirthRaceR சொல்கிறார்:

   அற்புதம்…..

   இதே வழி மனம் உடலில் எங்குள்ளது…..?
   ஒன்றும் தெரியாத மனம் வைத்து மனிதம் மனமாயை பிடியில் கட்டுண்டு இல்லாத ஆனால் இருக்கிற மனதை அடக்க வழியறியாது அடங்கி பஞ்சபூத சிறு மூலக்கூறு நாம் ~ பிரபஞ்ச முழுக்கூறில் அடங்கி போகின்றது…..!

   அனைத்துக்கும் மேலான இறைவனை சிறிது மனம் என்பதை நம் சித்தபடி சுத்த படுத்தி நீ படைத்த என்னை எங்களை ஏதோ சுத்த பக்தி வழி மனக்குப்பை தாண்டி பணிந்து வணங்குகிறேன் என்போர் எத்தனையோ …..

 5. selvarajan சொல்கிறார்:

  // ஹைட்ரோகார்பன் திட்ட பணிகளில் நாளை மத்திய அரசு கையெழுத்து! தமிழர் முதுகில் குத்துவதில் மும்முரம்!! //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/centre-sign-hydrocarbon-projects-278002.html // என்ன போராட்டம் செய்து என்ன பண்ணுவது — தமிழகத்தை ஒரு வழியாக்காமல் ஓயமாட்டார்கள் … ! விவசாயிகளின் டெல்லி போராட்டத்தைப் பற்றியோ — வறட்சி நிவாரண தொகை கேட்டதில் அரை சதவீதம் கூட கொடுக்க மனமில்லாத மத்திய அரசு — தமிழ்நாட்டின் வளத்தை சுரண்டி ” லாபம் ” காணுவதில் மட்டும் விடாப்பிடியாக கண்ணும் – கருத்துமாக செயல் வேகம் காட்டுவதை வேடிக்கைப்பார்க்கும் — தமிழக ” கையாலாகாத அரசும் — மற்ற கட்சிகளும் — ஒரு பிரிவு மக்களும் ” இருப்பது வேதனையானது ….

  டெல்டா பகுதி என்று ஒன்று இருந்ததாக கூட அடையாளம் காண முடியாத அளவுக்கு ” மீத்தேன் — கெயில் — ஹைடிரோகார்பன் ” போன்ற பாலைவன திட்டங்களை புகுத்தி சுடுகாடாக்க மும்முரமாக முனைப்பு காட்டுவது ஏன் … ?

  மக்கள் விரும்பாத வரையில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என உறுதிமொழி அளித்த பாஜக — மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற அமைச்சர்கள் — தமிழக பா.ஜ .க. வெட்டி பேச்சாளர்கள் எல்லோரும் பசப்பு வார்த்தைகள் பேசி முதுகில் குத்தியது தான் மிச்சமோ …. ?

 6. appannaswamy சொல்கிறார்:

  அன்பார்ந்தவர்க்கு, என்னுடைய பிறந்த நாளன்று ரமண மகரிஷி அவர்கள் உங்கள் மனதில் புகுந்து என்னுடைய மனதைப் பரிசுத்தமாக்குவதற்கு (பிறப்பின் நோக்கம் ஆத்மாவைப் பரிசுத்தமாக்குவது) தங்களின் மூலம் அனுப்பிய இடுகை அளவிலா ஆனந்தத்தைத் தந்தது. மிகவும் நன்றி. -அப்பண்ணஸ்வாமி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப அப்பண்ணஸ்வாமி,

   ” உங்களுக்கு எனது உள்ளம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்..”

   -என்னையும் அறியாமல் இயல்பாகவே நடந்த இந்த நல்ல நிகழ்வுக்கு
   நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.