” தொப்பி ” – செய்த பாவம் …?

இங்கிலாந்து பர்க்கிலி வங்கி வழக்கு… 1995-96 ஆம்
ஆண்டு காலத்தில் ‘டிப்பர் இன்வெஸ்ஸ்ட்மெண்ட்ஸ்
ஆப் வர்ஜின் இண்டியா’ என்னும் இந்திய நிறுவனம்
இங்கிலாந்திலுள்ள பர்க்கிலி வங்கியில் தி.கரன்
அக்கவுண்ட்டில் பெரிய தொகை ஒன்றை வரவு வைத்தது.
பின்னர் டிப்பர் நிறுவனம் யாருடையது என்பதை
சோதனையிட்டபோது, அது ஒரு போலி நிறுவனம்
என்பது தெரிய வந்திருக்கிறது…. இது குறித்து, அயல்நாடு
பணப்பரிமாற்ற ஒழுங்குமுறை சட்டத்தின் ( Foreign
Exchange Regulations Act ) கீழ் மத்திய அமலாக்கத் துறை
வழக்கு ஒன்றை பதிவு செய்திருக்கிறது.

அந்த வழக்கில்1998-ஆம் வருடத்திலேயே தி.கரனுக்கு
31 கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது அமலாக்கத்துறை.

அதை எதிர்த்து அயல்நாட்டு பணப்பரிமாற்ற ஒழுங்குமுறை
மேல்முறையீட்டு வாரியத்தில் தி.கரனால் மேல்முறையீடு
செய்யப்பட்டிருக்கிறது.

இந்த அப்பீலை விசாரித்த மேல்முறையீட்டு வாரியம்,
அபராதத்தொகையை 28 கோடியாக குறைத்து
2000-ஆம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி இறுதி உத்தரவு
வெளியிட்டிருக்கிறது.

திரு.தி.கரன் – இந்த அபராதத்தை ஏற்க மறுத்து,
சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருக்கிறார்.
அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அப்பீலை நிராகரித்து,
28 கோடி ரூபாய் அபராதத்தை ஊர்ஜிதம் செய்திருக்கிறது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
செய்யப்போவதாக சொல்லி இருக்கிறார்…
ஆனால் இதுவரை செய்யவில்லை…
தீர்ப்புக்கு எதிராக தடையும் பெறவில்லை…

அபராத தொகையை செலுத்த தவறியதால், அமலாக்கத்துறை
சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியாக ஒரு மனுவை
தாக்கல் செய்திருக்கிறது…. அதில், அபராதத்தை செலுத்தாமல்
இழுத்தடிப்பதால், அவரை “திவால் ஆனவர்” என்று
அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறது. இந்த வழக்கு
இப்போது நிலுவையில் இருக்கிறது….

இதேபோல் இன்னொரு வழக்கு…
ஜெயா தொலைக்காட்சி துவங்கியபோது, ஜெ.ஜெ.டிவி
என்கிற பெயரில் இயங்கி இருக்கிறது. அதன் நிர்வாக
பொறுப்பில் திருமதி சசிகலா இருந்திருக்கிறார்…
அவருடன் தி.கரனும் இருந்திருக்கிறார்…
அந்த நேரத்தில் ஜெ.ஜெ.டிவிக்கு “அப்-லிங்க்” வசதிகளை
ஏற்படுத்தவும், மற்ற தொழில்நுட்ப தேவைகளுக்கும்
பல கருவிகளை வாடகைக்கு எடுத்திருக்கின்றனர்.

அதற்காக வெளிநாட்டு நிறுவனங்களான, ரிட்சாட்,
சுபிக்பேக் என்கிற நிறுவனங்களில் 5 லட்சம் அமெரிக்க
டாலர்களை முதலீடு செய்திருக்கின்றனர். அதில் பல
விதிமுறைகள் மீறப்பட்டதாக அமலாக்கத்துறை –
திருமதி சசிகலா, தி.கரன் உள்ளிட்ட சிலர் மீது தனியாக
வழக்கை பதிவு செய்திருக்கிறது. இதில் தி.கரன் மீது
மட்டும் தனியாக இரண்டு வழக்குகள் நடந்து

கொண்டிருக்கின்றன. (இருபது ஆண்டுகளுக்கும் மேலாக…? )
இன்னமும் ந ட ந் து கொ ண் டே இருக்கின்றன…!

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
என்னென்னென்ன…?

fixed deposit-ல் போடப்படும் பணம் 8 ஆண்டுகளில்
இரட்டிப்பாகி விடுகிறது.
இந்த 28 கோடி ரூபாய் அபராதம் மே, 2000-த்திலேயே
மேல் முறையீட்டு வாரியத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
எனவே, அன்றே வசூலிக்கப்பட்டிருந்தால் –
இந்த பணத்தின் இன்றைய மதிப்பு குறைந்த பட்சம்
112 கோடி ரூபாயாக இருக்கும்.

இப்போது 28 கோடி அபராத தொகையை வசூலித்தால் கூட –
இதனால் அரசுக்கு ஏற்படப்போகும் இழப்பு – 84 கோடி ரூபாய்.
(112-28 கோடி )…. அபராத தொகையை வட்டியுடன்
வசூலிப்பது குறித்து எங்கும் கூறப்பட்டிருப்பதாக
தெரியவில்லை.

தேர்தல் சமயத்தில், அவர் பெயரிலும், அவரது குடும்பத்தார்
பெயரிலும் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் சொத்துக்களின்
மொத்த மதிப்பு 6 கோடியை தாண்டவில்லை…
எனவே அத்தனை சொத்துக்களையும் விற்றாலும்,
அரசுக்கு 28 கோடி தேறாது என்பதால், அவர் “திவால் ஆனவர்”
என்று அறிவிக்கப்படுவார்.

தேர்தல் சட்டங்களின்படி ” திவால் ஆனவர்கள் ” தேர்தலில்
வேட்பாளராக நிற்க தகுதியற்றவர்கள்…..

எனவே, உரிய நேரத்தில், இந்த வழக்கு நடந்து தீர்ப்பும்
வந்திருந்தால், இவர் தேர்தலில் நிற்கவே தகுதியற்றவர்
ஆகி இருப்பார்.

ஃபெரா வழக்கில் போடப்பட்ட அப்பீலை காரணம் காட்டி,
16 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் அபராதத் தொகையை
கட்டாமல் இழுத்தடித்ததன் விளைவாக அரசுக்கு 84 கோடி
ரூபாய் நஷ்டம்….

– வழக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்
என்கிற எந்தவித கட்டாயமும் இந்த நாட்டின்
நீதிமன்றங்களுக்கு இல்லையென்பதாலும்,

– நீதி கிடைப்பதில் தாமதம் என்பது இந்த நாட்டின்
ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவிதி என்பதாலும்,

– இந்த வழக்கை அவ்வப்போது துரிதப்படுத்தாமல்,
16 ஆண்டுகளுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட இலாகா
தூங்கி வழிந்ததாலும் – ( அப்படி “தூங்கி வழிவதற்காக” என்றே
சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய “கப்பம்”
செலுத்தப்பட்டிருக்கலாம்….! )

– இந்த அவலங்களின் மொத்த சுமையையும்
இன்று ஆர்.கே.நகரின் “சில” மக்கள் ” தலையில் ”
சுமந்து கொண்டிருக்கிறார்கள்…!!!

“என் அன்னை செய்த பாவம்..
நான் மண்ணில் வந்தது ” –
என்று அற்புதமான சோகப்பாடல் ஒன்று உண்டு
ஸ்ரீதரின் “சுமைதாங்கி”யில்…

அது தான் நினைவிற்கு வந்தது…
இந்த “தொப்பி” செய்த பாவம் –
இவர் தலையில் அமர்ந்தது…!

வாழ்க ஜனநாயகம்…
வாழ்க இந்நாட்டின் சட்ட திட்டங்கள்…
என்றும் “வளம்” பெற்று வாழ்க –
நமது அரசின் பொறுப்பற்ற இலாகாக்கள் …!

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to ” தொப்பி ” – செய்த பாவம் …?

 1. புதியவன் சொல்கிறார்:

  “நமது அரசின் பொறுப்பற்ற இலாகாக்கள் …” – உண்மைதான். பெரும்பான்மையான அதிகாரிகள், ‘வெட்டிகள்தான்’ என்று நான் நினைக்கிறேன். அதாவது எங்கேயாவது வேலை பார்த்து, சம்பளம் வாங்கிப் பிழைப்பை ஓட்டுபவர்கள். தன் மூளையினால் பெரிய பதவிக்கு வந்தும் அதனால் நாட்டுக்கு ஒரு பிரயோசனமும் இல்லாமல் இருப்பவர்கள்.

  ஆனால் இந்த எண்ணத்திற்கு ஒரு மாற்றுக்கருத்தும் இருக்கிறது. ‘முனைந்து’ செயல்படுகிற சகாயம் அவர்கள், எத்தனை இட மாற்றுதல்களைப் பெற்றிருக்கிறார். எத்தனை நியாயமான வாய்ப்புகளை இழந்திருப்பார். அவர் கொஞ்சம் அபூர்வம். அதாவது, தன்னுடைய குழந்தைகள் கஷ்டப்பட்டாலும், தானும் ஒவ்வொரு இடமாக மூட்டை முடிச்சுடன் கிளம்பவேண்டிவந்தாலும், வேண்டுமென்றே முக்கியத்துவம் இல்லாத பதவியில் டம்மியாக அமர்த்தினாலும், முடிந்த வரை நேர்மையாக இருப்பது என்று நினைக்கிறார் (என்றே நம்புகிறேன். யாரையும் PERMANENTஆ கணிக்க முடியவில்லை. உமாசங்கர் மாதிரி இருந்துட்டார்னா?) இப்படி இருப்பது எத்தனை பேருக்கு இயலும்? அப்படிப்பட்ட அதிகாரிக்கு ஏதேனும் கஷ்டம் வரும்போது பொதுமக்கள் எத்தனைபேர் அவருக்காகப் போராடுவார்கள்? நாளைக்கு அவரே, ‘கவுன்சிலர்’ பதவிக்கு வந்தால், 10 பேராவது அவருக்கு வாக்களிப்பார்களா?

  நாம பொதுமக்கள் சிறுபான்மையினர், நியாயமா, சட்டங்களை மதித்து நடக்கணும்னுதான் நினைக்கிறோம். ஒரு கியூவில் எல்லோரும் முண்டியடிக்கும்போது, நாமும் வேறு வழியில்லாமல் முண்டியடிக்கவேண்டிவருகிறதல்லவா? நிறைய இடங்களில் சட்டத்தை மீறவேண்டிவருகிறதல்லவா (மீறாவிட்டால் வரும் தாமதத்தையும் கஷ்டத்தையும் பொறுத்துக்கொள்ளும் இயல்பு எல்லோரிடமும் இருக்காதல்லவா?). இதேபோல், இந்த அதிகாரிகளும், தான் ஏதேனும் செய்ய ஆரம்பித்தால், ‘பழி’ வந்து, தன்னுடைய எதிர்காலத்தையும், பணியையும் பாதிக்கும் என்று நினைப்பதால்தான் நல்லவர்கள்கூட, தன்னளவில் நல்லவனாயிருப்போம் என்று நினைக்கிறார்களே தவிர, அதிகாரத்தைப் பயன்படுத்தி தூய்மையாக்குவோம் என்று எண்ணுவதில்லை. டி.என்.சேஷன் அவர்கள் தன் அதிகாரத்தை நியாயமாகப் பயன்படுத்தியதைப் பார்த்து பயந்துவிட்ட அரசியல்வாதிகள், தேர்தல் கமிஷனர் பதவியையே மூன்று பேர் கொண்ட குழுவாக மாற்றி, டம்மியாக்கிவிட்டனர். இப்படி சிறுபான்மையான (அல்லது பெரும்பான்மையான) அதிகாரிகள், நமக்கு ஏன் வீண்வேலை என்று நினைப்பதால், எல்லா அதிகாரிகளும் ஊழல் பெருச்சாளிகள் என்று நினைக்கவேண்டியதாகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   i) ஒரு அரசு ஊழியர் அல்லது அதிகாரியாக இருந்துகொண்டு
   ஒருவர் என்ன செய்ய முடியும் என்பதைப்பற்றி நான் பலமுறை
   யோசித்திருக்கிறேன்…மத்திய அரசின் ஒரு இலாகாவில்,
   மிக மிக கீழ்மட்டத்தில் இருந்த என்னால் – என்ன செய்ய முடிந்தது
   என்பதைப் பற்றியும் நினைத்துப் பார்க்கிறேன்…

   என் கதை முடியும் முன்னர் –
   சில விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து
   கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.
   – நேரம் வரும்போது, அவ்வப்போது, சிறுசிறு பகுதிகளாக
   சுவாரஸ்யமான அல்லது பயனுள்ள சில விஷயங்களைப்பற்றி
   மட்டும் எழுதலாமென்று தோன்றுகிறது.

   ii) திரு.சகாயம் அவர்களின் நிகழ்ச்சிகள் சிலவற்றில் சூழ்நிலையை
   அவதானிக்கும் பொருட்டு நான் நேரில் சென்று கலந்து கொண்டதுண்டு.
   அவர், நீங்கள் நினைப்பது போல் அப்பாவி அல்ல, தனி நபரும் அல்ல…
   அவர் கூடவும் ஒரு குழு இருக்கிறது…

   அதைப்பற்றி எல்லாம் நான் இப்போது சொல்வது சரியாக இருக்காது.
   முழுமையாகத் தெரிந்த நண்பர்களே யாராவது சொல்லட்டும்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. தமிழன் சொல்கிறார்:

  http://tamil.oneindia.com/news/india/supreme-court-rules-abatement-jayalalithaa-278888.html

  இன்றைய செய்தி. நான் இதைத்தான் எதிர்பார்த்தேன். ஒருவர், வாதாடும் வாய்ப்பு இல்லாதபோது, அவர்மீது எப்படி குற்றம் சாட்டித் தீர்ப்பளிக்க இயலும்? இப்படிச் செய்தது சரியல்ல என்பதே என் எண்ணம். அதை உறுதிப்படுத்தும்விதமாக இன்றைய தீர்ப்பு வந்துள்ளது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகு கூட
   அவர் மீதான வன்மத்துடன் சிலர் அவரை மீண்டும் மீண்டும்
   அவமானப்படுத்த முயன்றதை, உச்சநீதிமன்றத்தின்
   இந்த தீர்ப்பு தகர்த்து விட்டது…

   இன்றைய தீர்ப்பு –
   உண்மையில் யார் தண்டிக்கப்பட வேண்டுமோ,
   அவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்…
   என்று கூறுவதாக எனக்கு தோன்றுகிறது.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    அந்தச் சிலர், ‘ஸ்டாலின் வகையறா’, ‘ராமதாஸ் வகையறா’, ‘பாஜக வகையறா’. இதில் பாஜகவுக்கு, கடைசிவரை ஜெ. இடம் கொடுக்காததால் ஏற்பட்டிருந்த கடுப்பு. ‘ஸ்டாலின் அவர்கள், ‘ஜெ குற்றவாளி’ என்று சொன்னதைக் கேட்டவுடன், எனக்கு வந்த ஆத்திரம் சொல்லிமாளாது. ‘குற்றவாளி’ என்று சொல்வதனால், முதலில் தன் தந்தையிடம் ஆரம்பித்து அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் சொல்லிவிட்டு, கடைசியில் தான் அவருக்கு ‘ஜெ’வைப் பற்றிச் சொல்ல அருகதை உண்டு. ‘ராமதாஸ் – ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை. அன்புமணி மேல் உள்ள வழக்கை முதலில் முடிக்கப்பார்க்கட்டும். அப்புறம் மக்களிடம் வாக்கு கேட்டு வரட்டும். ஜெ.வுக்கு இருந்த மக்கள் செல்வாக்கைப் பார்த்து மிகுந்த பொறாமையில் இருந்த இவர்கள்தான், ‘ஜெ’ மறைந்தபின், ‘வீரத்தை’க் காண்பிக்க வருகிறார்கள்.

    • புதியவன் சொல்கிறார்:

     இப்போது, திமுக+காங்கிரஸ், அதிமுக 1, 2,3 ஆகிய 4 கட்சிகள் ஆர்கே நகர் தேர்தலில் நிற்கின்றன. தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணியபிறகு நான் வருகிறேன். அப்போது தெரியும் மறைந்த மக்கள் முதல்வரின் செல்வாக்கு.

 3. srinivasanmurugesan சொல்கிறார்:

  கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஊதியம்குறித்த வழக்கொன்று கடந்த 25ஆண்டுகளுக்கு மேல் உயர் நீதி மன்றத்தில் நடை பெற்று வருகின்றது.ஊழியர்களில் ஓர் இருவரை தவிர அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர் அல்லது பணிகாலத்திலேயே இறந்து விட்டனர்.இனி சாதகமாக தீர்ப்பு வந்தாலும் என்ன பயன்?

  • தமிழன் சொல்கிறார்:

   இதன் முழுப் பின்னணியும் தெரியவில்லை. ஆனால், மக்கள் VS அரசு என்று வரும்போது, மிக மிக SENSITIVE வழக்குகளைத் தவிர, அரசு மேல்முறையீடு செய்வதை அனுமதிக்கக்கூடாது. ‘அரசு’ என்பதன் முதல் கடமை, மக்களுக்கு நன்மை செய்வது. அதுபோல, தொழிலாளர்கள் VS முதலாளிகள் என்று வரும்போது, நீதிமன்றங்கள், (for eg. Bonus or some facility) தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் கொடுக்கச்சொல்லி வற்புறுத்தவேண்டும். .வெறும்ன முதலாளிகளின் மேல் முறையீட்டை அனுமதிக்கக்கூடாது.

   இந்த வழக்கில், வங்கி ஊழியர்களுக்குச் சாதகமாக இப்போது தீர்ப்புவந்தாலும், ஊழியர்களுக்கு என்ன நிவாரணம்? வருத்தமாகத்தான் இருக்கிறது நமது நீதி பரிபாலனம் செய்யும் அழகைப் பார்த்து.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.