ரெய்டு, தேர்தல் ரத்து – தொப்பி வில்லன்களை வேறேன்ன செய்ய முடியும் தேர்தல் கமிஷனால்…?

அமைச்சர் வீட்டிலும், மற்ற இடங்களிலும் வருமானவரி
பிரிவினரின் திடீர் சோதனை நடந்தது…. கிடைத்த
தகவல்கள், ஆவணங்கள் பற்றி ஆராய்ந்து, ஓட்டு வாங்க
பணம் கொடுக்கப்பட்டது உறுதியானதாக தீர்மானித்து,
தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து விட்டது தேர்தல்
ஆணையம்…..

இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் தேர்தல் அறிவிப்பு
வரும்… இதே திருடர்கள் மீண்டும் போட்டி போடுவார்கள்…
வாக்காளர்களுக்கு போனசாக இன்னொரு முறை பணம்
கிடைக்கும் – வெட்கமின்றி அவர்களும் வாங்கிக்கொண்டு
சந்தோஷமாக இதே திருடர்களுக்கு ஓட்டு போடுவார்கள்….!

கேவலமாக இல்லை நமது நடைமுறைகள்…?
ஒரு வேட்பாளர் செய்யும் அத்தனை முறைகேடுகளும்
வெட்டவெளிச்சமாக தெரிந்தாலும், ஆதாரம் கிடைத்தாலும் –
அவரை போட்டியிடாமல் தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு
அதிகாரம் கிடையாது…
அதற்கான சட்டங்கள் இல்லை…!!!

எரிச்சல் வந்தாலும், தேர்தல் ஆணையத்தை குறைகூறி
என்ன பயன்….? முறைகேடுகளில் ஈடுபடும் வேட்பாளரை
தகுதி நீக்கம் செய்ய,
தடை விதிக்க –
உரிய சட்டங்களை உருவாக்காதது,
தேர்தல் கமிஷனுக்கு உரிய அதிகாரங்களை கொடுக்காதது –
யார் தவறு….?

எந்த அரசியல்வாதிக்கு, இத்தகைய சட்டங்களை
உருவாக்க வேண்டும் என்கிற அக்கறை இருக்கிறது…?
தனக்கு தானே வினை தேடிக்கொள்ளும் அளவிற்கு
முட்டாள்களா அல்லது அப்பாவிகளா …
நமது அரசியல்வாதிகள்..?

இப்போதைக்கு என்ன செய்ய முடியும்…?
இந்த அசிங்க மூஞ்சிக்காரர்கள் இனியும் அரசாட்சி செய்ய
அனுமதிக்கக் கூடாது.

உடனடியாக தேர்தல் கமிஷனும், வருமான வரி இலாகாவும்,
தங்கள் வசம் இருக்கும் ஆவணங்களையும், தகவல்களையும்
Enforcement Department மற்றும் Central Vigilance Commission-க்கு
அனுப்பி, உடனடி மேல் நடவடிக்கைகளை கோர வேண்டும்.

CVCயின் மேற்பார்வையில், CBI உடனடியாக முதல்
தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்து, பட்டியலில்
இடம்பெற்ற முதலமைச்சர் உட்பட அத்தனை
அமைச்சர்களையும் கைது செய்ய வேண்டும்…..

கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட
எவரும் அமைச்சராகவோ, முதலமைச்சராகவோ தொடர
முடியாது. கவர்னர் முதல் நடவடிக்கையாக அரசை
பதவிநீக்கம் – டிஸ்மிஸ் – செய்ய வேண்டும்…

அதற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை
பின்னர் பார்த்துக் கொள்ளலாம். முதலில் எந்தவித
தாமதமும் இன்றி, இந்த அரசு டிஸ்மிஸ்
செய்யப்படவேண்டியது அவசியம். இல்லையேல் –
இவர்கள் இன்னும் யார் யாரை விலைக்கு வாங்குவார்கள்
என்றே சொல்ல முடியாது….

செயின்ட் ஜார்ஜ் கோட்டை,
உயர்நீதி மன்றம் எதுவுமே அவர்களுக்கு பொருட்டில்லை…!
மொத்தமாக விலைக்கு வாங்கி விடுவார்கள் –
அவ்வளவு சாமர்த்தியசாலிகள்…

ராஜ்பவன் கூட பத்திரமில்லை என்பதால் –
கவர்னர் பெருமான் கூட, இதையெல்லாம் –
தமிழ்நாட்டுக்கு வெளியே
இருந்துகொண்டே செய்வது நல்லது….
அவருக்கும் – நமக்கும்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ரெய்டு, தேர்தல் ரத்து – தொப்பி வில்லன்களை வேறேன்ன செய்ய முடியும் தேர்தல் கமிஷனால்…?

 1. Bagawan சொல்கிறார்:

  Dear Sir,
  I agree 100% of your views. But the evidence collected will stand the scrutiny of the Supreme court as it it already rejected the evidence of diary noting in Shahara and Birla diaries against payments to political leaders.
  Your earlier post in this regard
  https://vimarisanam.wordpress.com/2017/01/06/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பகவான்,

   இந்த இரண்டு வழக்குகளுக்கும் நிறைய வித்தியாசங்கள்
   இருக்கின்றன என்று நினைக்கிறேன்.
   இந்த வழக்கில், ஆவணங்கள் நம்பத்தகுந்தவை என்பதற்கான
   (ஒன்றுக்கு மேற்பட்ட ) ஆதாரங்கள் இருக்கின்றன.
   மந்திரியுடைய ஆள், காகித ஆவணத்தை கையில் எடுத்துக்கொண்டு, காவல்காரர் துரத்துவதையும் மீறி ஓடிப்போவதை வீடியோவில் பார்க்க முடிந்ததே…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. mathu சொல்கிறார்:

  so sad

 3. selvarajan சொல்கிறார்:

  // ‘தமிழகத்தில் இடைத்தேர்தல் அல்ல; பொதுத்தேர்தலே வரும்!’ – அமித் ஷா-வின் அடுத்த ஆபரேஷன் // http://www.vikatan.com/news/tamilnadu/85971-tn-will-soon-face-general-election-says-sources-from-delhi.html?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=10329 இவ்வாறு ஒரு செய்தி …. // செயின்ட் ஜார்ஜ் கோட்டை,
  உயர்நீதி மன்றம் எதுவுமே அவர்களுக்கு பொருட்டில்லை…!
  மொத்தமாக விலைக்கு வாங்கி விடுவார்கள் –
  அவ்வளவு சாமர்த்தியசாலிகள்… // தமிழகத்தை ….. ? —- யார் தொப்பி வில்லன்களா …? துண்டு போட்ட கதாநாயகனா … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   ஆகஸ்ட் மாதம் வரையில் (ஜனாதிபதி தேர்தல்)
   இந்த விளையாட்டுகள் எல்லாம் தொடர்ந்துகொண்டே
   இருக்கும் என்று தோன்றுகிறது.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. புதியவன் சொல்கிறார்:

  தொப்பிக்காரர்களைப் பற்றி நீங்கள் எழுதியுள்ளதைப் புரிந்துகொள்கிறேன். எல்லோருக்கும் இந்த ஆதங்கம் இருக்கிறது. ஆனால், இந்த மாதிரி அயோக்கியத்தனங்களுக்கெல்லாம் மூலகாரண கர்த்தா திமுக, கருணானிதி மற்றும் அவர் குடும்பம். தினகரன் கும்பலைக் குற்றம் சொல்லும் யோக்கியதையை கம்யூனிஸ்டுகள் மற்றும் உதிரிக் கட்சிகளைத் தவிர (அதாவது திமுகவுடன் கூட்டணி வைக்காத ஆதரிக்காத கட்சிகள்) வேறு எந்தக் கட்சியும் பெறவில்லை.

  விஜயபாஸ்கருக்கு இருக்கும் தொழில்கள் சொத்துகள் மலைக்க வைக்கின்றன. திமுக குடும்ப உறுப்பினர்களுடன் போட்டி போடும் அளவிற்கு சொத்து சேர்த்திருக்கிறார். இவராவது அடிப்படையாக ‘டாக்டர்’ தொழில் கற்றிருக்கிறார். அழகிரி, உதயனிதி, தயானிதி, கேடி சகோதரர்கள், கனிமொழி முகவின் மற்ற மைந்தர்கள், மறுமகள்கள், பேரன்’கள் ஆகியோர் என்ன தொழில் செய்து இத்தனை கோடிகளை ஈட்டினார்கள்? நேற்று ப.சி அவர்கள் யோக்கியர்போல் பேசுகிறார். என்ன தொழில் செய்து பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அவருக்கும் அவருடைய பையனுக்கும் வந்தன?

  80 சதவிகித மக்கள் ஒரு நாளுக்கு 25 ரூபாய் சம்பாதிக்கும் திறமை/வாய்ப்பு இல்லாமல் அல்லல் படுகிறார்கள். வெட்கம் கெட்டு, தங்களுடைய மாதச் சம்பளத்தைப் பலமடங்கு உயர்த்திக்கொள்கிறார்கள் இந்த அரசியல்வாதிகளும் மற்றவர்களும்.

  அதற்காக இந்த அரசை டிஸ்மிஸ் செய்தால் யாருக்கு என்ன நன்மை? அரசு, தமிழகத்தை ஆளும் வல்லமையை வெளி நாட்டு ‘CORPORATE OFFICERS’க்கு அளிக்கட்டும். ஏற்றுக்கொள்ளலாம். அல்லது, தேர்தலில் நிற்கத் தேவையில்லாமல், சமூக ஆர்வலர்களின் குழு, தமிழக அரசை நடத்தலாம் (சுகாதாரத்துறைக்கு மணிமாறன் போன்ற்வர்களை TRAIN செய்யலாம்). இல்லையா… கம்யூனிஸ்ட் கட்சிகளில் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் ஊழலற்ற நல்லக்கண்ணு போன்ற பலரை வைத்து குழுவை அமைத்து அவர்களை தமிழக அரசை நடத்தச் சொல்லலாம். அதைவிட்டு விட்டு, இந்தக் கொள்ளையர்கள் போனால், (தொப்பி), தொந்திக் கொள்ளையர்கள் வந்துவிடுவார்களே. கருணானிதி ஸ்டாலின் குடும்பத்தைக் காட்டிலும் பெரிய கொள்ளையர்களை தமிழகத்தில் கண்டுபிடிக்க இயலுமா? அதனால்தானே, ‘கருத்துக்கணிப்புகளில்’, மூன்று அதிமுக அணிகளின் வாக்குகளைக் கூட்டினால், திமுக+காங்கிரஸ் கூட்டணியைவிட மிக அதிக வாக்குகளைப் பெறுகிறது.

  இதனை (பணத்திற்கு வாக்கு வாங்கி, தனக்குச் சொத்து சேர்க்கும் அயோக்கியத்தனத்தை) தடுக்கும் யோக்கியதையை யார் பெற்றிருக்கிறார்கள்? பொது மக்கள். அவர்களையும், அயோக்கியர்கள் லிஸ்டில் இந்த அரசியல்வாதிகள் சேர்த்துவிடுகிறார்கள். காசுக்குப் பணம் பெற்றுக்கொண்டு வாக்களிப்பதும் ஒன்று, தன்னுடைய வீட்டுக்கு நெருப்பு வைத்துக் குளிர்காய்வதும் ஒன்று என்பது எப்போது இவர்களுக்குப் புரியும்?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.