” மோடி அரசா இப்படி…? ” என்று தினமணி வியக்க வேண்டாம்……!!!

13- தேதி தினமணி நாளிதழ் “மோடி அரசா இப்படி…? ”
என்று வியந்து, வருத்தத்துடன் ஒரு தலையங்கம்
எழுதி இருக்கிறது.

“மோடிஜி அரசு இப்படி” இருப்பது நமக்கு ஆச்சரியமாக
இல்லை… ஆனால், வழக்கமாக மோடிஜிக்கு ஆதரவாகவே
செயல்படும் தினமணி நாளிதழே இப்படி நொந்துக் கொள்ள
வேண்டிய அளவிற்கு மோடிஜி அரசின் செயல்பாடு
பொறுக்க முடியாமல் போய் விட்டதே என்பது தான்
வியப்பாக இருக்கிறது.

தினமணி தலையங்கத்தை கீழே தந்திருக்கிறேன்.
அங்கங்கே நமது கருத்துக்களும் கூடவே ( அடைப்புக்
குறிக்குள்ளாக ….)

———————————————————

மோடி அரசா இப்படி…?
By ஆசிரியர் |

பொதுவாக நிதிநிலை அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டு,
விவாதிக்கப்பட்ட பிறகு அதில் மாற்றங்கள் செய்வதும்,
திருத்தங்கள் கொண்டு வருவதும் வழக்கமில்லை.
அதேபோல, நிதி மசோதாக்களில் திருத்தம் கொண்டு
வரவோ, மாற்றங்கள் செய்யவோ மாநிலங்களவைக்கு
அதிகாரம் இல்லை என்றாலும்கூட, மாநிலங்களவையிலும்
முழுமையாக விவாதிக்கப்பட்ட பிறகுதான் நிதிநிலை
அறிக்கைகள் நிறைவேற்றப்படும்.

இதுவரை இல்லாத ஒரு புதிய நடைமுறையை 2017-18
நிதிநிலை அறிக்கையை நிறைவேற்றும்போது நரேந்திர மோடி
அரசு கடைப்பிடித்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம்
நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த நிதிநிலை
அறிக்கை, சென்ற மாதம் 22-ஆம் தேதி நாடாளுமன்றத்தால்
நிறைவேற்றப்பட்டபோது, அதில் ஒன்று இரண்டல்ல, 40
திருத்தங்களைக் கொண்டு வந்திருந்தது அரசு. அதுகுறித்து
நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை.

————–

( மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் முன்னரே
விரிவாக பலமுறை ஆராய்ந்து, திருத்தங்கள் செய்து,
இறுதியாக, கேபினட் ஒப்புதலை பெற்ற பிறகு தான்
அது, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இதற்குப் பின்னால், திருத்தங்கள் எப்போது வரும் என்றால்,
விவாதத்தின்போது உறுப்பினர்கள் உபயோகமான, அவசியமான

ஆலோசனைகளை தரும்போது, அரசும் அவற்றை
ஏற்றுக் கொண்டால் – மசோதாவிற்கு திருத்தங்கள் வரும்.
ஆனால், தான் கொண்டு வந்த மசோதாவிற்கு, அரசே தானே
திருத்தங்கள் – அதுவும் ஒன்றிரண்டல்ல – 40 திருத்தங்கள்
கொண்டு வருகிறது என்றால் – முன் யோசனை, சரியான
புரிதல் இல்லாமலே, அவசர கோலத்தில் மசோதா
சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்று தான் அர்த்தம்…)

————-

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை
அறிக்கையில் இப்படி புதிதாக 40 திருத்தங்கள்
நுழைக்கப்படுவது என்பதும், அவை எந்தவித விவாதமும்
இல்லாமல் நிறைவேற்றப்படுவது என்பதும்,
நிதித்துறை சாராத திருத்தங்களும் சட்டங்களும் நிதி
மசோதாவில் இணைக்கப்பட்டு நிறைவேற்றப்படுவது
என்பதும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும்
என்பது மட்டுமல்ல, சர்வாதிகாரப் போக்குக்கும் வழிகோலும்.

—————–

( மத்திய அரசுக்கு, ராஜ்ய சபாவில் மெஜாரிடி இல்லை
என்பதால், இப்படித்தான் பல சட்டங்களை திருட்டுத்தனமாக
– மீண்டும் சொல்ல வேண்டும் -திருட்டுத்தனமாக –
கொண்டு வருகிறது. நிதி மசோதா என்றால் அது ராஜ்ய
சபாவின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை
என்பதால், நிதி அல்லாத பிற விஷயங்கள் கூட

திருட்டுத்தனமாக நிதி மசோதவுக்குள் ஒளிந்து கொண்டு
உள்ளே நுழைந்து விடுகின்றன… இது மோடிஜி அரசு
கண்டு பிடித்த, மெஜாரிடி அனுமதி இல்லாமலே
சட்டங்களை உருவாக்கும் ராஜதந்திரம்…..!!! )

——————–

எல்லா விவாதங்களும் முடிந்த பிறகு தந்திரமாக கடைசி
நேரத்தில் பல திருத்தங்களையும் மாற்றங்களையும் நுழைத்து
மசோதாவை நிறைவேற்றிக் கொள்வது என்பது அரசியல்
ரீதியாக வேண்டுமானால் வெற்றியாக இருக்கலாம், ஆனால்
அது நரேந்திர மோடி அரசுக்குப் பெருமை சேர்க்காது.

கடைசி நிமிடத் திருத்தங்களில் ஒன்று, வருமான வரி
அதிகாரிகளுக்கு வானளாவிய அதிகாரத்தை வாரி வழங்கி
இருக்கிறது. அவர்கள் இனிமேல், யாரையும், யாருடைய
இடத்தையும் சந்தேகத்திற்கு இடமிருக்கிறது என்கிற ஒரே
காரணத்துக்காக சோதனையிடவும், சொத்துகளையும்
ஆவணங்களையும் பறிமுதல் செய்யவும் முடியும்.

சோதனையிட்டதற்கான காரணத்தை மேல்முறையீட்டுத்
தீர்ப்பாயம் உள்பட யாருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம்
இல்லை.

————-

( மேல் முறையீட்டு தீர்ப்பாயம் உள்பட யாருக்குமே பதில்
சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது எந்தவித
சந்தேகமும் இன்றி, எதேச்சாதிகாரம் தான். அதிக வருமானம்
ஈட்டும் நடிகர்கள், டாக்டர்கள், வக்கீல்கள், தொழிலதிபர்கள்
ஆகியோரை பயமுறுத்த இது ஆளும் கட்சிக்கு மிகவும்
உதவியாக இருக்கும்… இந்த மசோதாவின் நோக்கமே
அதாகத்தான் இருக்கும்…! )

——————-

இந்தத் திருத்தம், நிதியமைச்சக, வருமான வரி அலுவலர்கள்
வரம்பில்லாமல் முறைகேடுகளில் ஈடுபட வழிவகுக்கப்
போவதுடன் எதிர்க்கட்சியினரையும், அரசுக்கு
வேண்டாதவர்களையும் பழிவாங்கவும் பயன்படுத்தப்படலாம்
என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இன்னொரு திருத்தம், மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களைக்
கலைத்து விடவும், இரண்டு மூன்று தீர்ப்பாயங்களை
இணைக்கவும், மாற்றியமைக்கவும் வழிகோலுகிறது.

தீர்ப்பாயங்கள் நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றப்பட்டு,
இயங்குபவை. அவை உச்சநீதிமன்றம் முன்பு கையாண்ட
செயல்பாடுகளை செய்கின்ற அதிகாரம் படைத்தவை.

இனிமேல் இவை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில்
இருக்கும். தன்னிச்சையாக இயங்கும் சக்தியை இவை
இழக்கும்.

நிதிநிலை அறிக்கையில் கொண்டு வரப்பட்டிருக்கும் ஏற்றுக்
கொள்ளவே முடியாத ஒரு மாற்றம், அரசியல் கட்சிகளுக்கு
கார்ப்பரேட் நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைகள்
தொடர்பானது. இதுவரை, எந்தவொரு நிறுவனமும் மூன்று
ஆண்டுகளின் நிகர சராசரி லாபத்தில் 7.5 விழுக்காடு
மட்டும்தான் அரசியல் கட்சிகளுக்கு
நன்கொடையாக வழங்க முடியும். அவர்கள் தங்களது வரவு
செலவுக் கணக்கில் நன்கொடை வழங்கிய தொகை குறித்தும்,
அது எந்தக் கட்சிக்கு வழங்கப்பட்டது என்பது குறித்தும்
குறிப்பிட்டாக வேண்டும்.
இப்போது இந்த 7.5 விழுக்காடு வரம்பு விலக்கிக்
கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு நிறுவனம் லாபம்
சம்பாதித்தாலும், நஷ்டத்தில் இயங்கினாலும் எவ்வளவு
வேண்டுமானாலும் அரசியல் நன்கொடையை வழங்கலாம்.

அவர்கள் எவ்வளவு நன்கொடை வழங்கினார்கள் என்பது
குறிப்பிடப்பட வேண்டுமே தவிர, எந்தக் கட்சிக்கு
வழங்கினார்கள் என்பது குறித்து வெளியிட வேண்டியதில்லை.

போலி நிறுவனங்களின் பேரில் அரசியல் கட்சிகள்- முக்கியமாக
ஆளும் கட்சிகள்- நன்கொடை பெற்றுக் கொள்ளலாம் என்றால்,
ஆட்சியாளர்களின் லஞ்சப் பணம் போலி நிறுவனங்களின்
பெயரில் கட்சி நன்கொடையாகி விடும்.

——————–

( தலையங்கமே இந்த மசோதாவின் நோக்கம் மற்றும்
செயல்பாடு குறித்து மிகத்தெளிவாக விளக்கி இருக்கிறது
என்பதால், நமக்கு எதுவும் சொல்ல வேண்டியதில்லை… )

—————-

அதுமட்டுமல்ல, உரிமம் வழக்குவதற்கும், அரசின் உதவி
பெறுவதற்கும் நிறுவனங்கள் ஆளும் கட்சிக்கு நன்கொடை
வழங்க வற்புறுத்தப்பட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

அரசாங்கத்தின் அனுமதி பெறவும், வங்கிகளில் வாங்கிய
கடனைத் தள்ளுபடி செய்யவும் இனிமேல் கையூட்டுப் பெற
மாட்டார்கள். துணிசலாகக் கட்சிக்கு நன்கொடை பெறுவார்கள்.

அதனால்தான், இந்தியாவில் தொழில் அமைப்புகளும்
கார்ப்பரேட் நிறுவனங்களும் இதுகுறித்து மெளனம் காக்கின்றன.

————

( அதே தான். கம்பெனிகளிடமிருந்து இனி லஞ்சமாக
கருப்புப்பணத்தை பெற்று கணக்கு காட்ட முடியாமல்
தவிக்க வேண்டிய அவசியமே இல்லை. லஞ்சம் பூராவும்,
ஆளும்கட்சிக்கு நன்கொடை என்கிற பெயரில் – வரம்பு
எதுவுமின்றி எவ்வளவு தொகை வேண்டுமானாலும் –
பெற்றுக் கொள்ளப்படும்…. எந்த கட்சிக்கு நன்கொடை
கொடுத்தோம் என்று கம்பெனிகளின் balance sheet-ல்
தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால்,
லஞ்சம் பெறுவது – இனி, சட்டபூர்வமாக்கப்பட்டு விடுகிறது…)

லஞ்சம், கருப்புப்பணம் இரண்டையுமே
மோடிஜி இதன் மூலம் ஒழித்து விட்டார் என்று
பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்… )

—————-

நிதி மசோதாவாக இருந்தால், மாநிலங்களவையில்
ஒப்புதல் தேவையில்லை என்பதுதான், பல நிதித்துறை
சாராத திருத்தங்களை நிதி மசோதாவில் நுழைத்திருப்பது
கண்டனத்துக்குரியது.

மாநிலங்களவையைத் தவிர்க்க வேண்டும் என்கிற அரசின்
முனைப்பு, வருங்காலத்தில் மிகப்பெரிய தவறுகளுக்கு
வழிகோலப்போகிறது.

———–

( பாஜகவுக்கு மாநிலங்கள் அவையில் மெஜாரிடி
கொடுக்காதவர்களுக்கு அந்த கட்சி கொடுக்கும் தண்டனை
இது….)

————

ஜனநாயகத்தின் மீது இதுவரை இல்லாத மிகப் பெரிய
தாக்குதல் நடந்திருக்கிறது. நாமெல்லாம், என்ன நடக்கிறது
என்பதுகூடத் தெரியாமல் இருக்கிறோம். பெரும்பாலான
நாடாளுமன்ற உறுப்பினர்களே கவலைப்படவில்லை
எனும்போது, பாவம் பொதுஜனம் என்னதான் செய்துவிட
முடியும்?

———–

( பொது மக்களை விடுங்கள்…
மீடியா மக்கள் எப்போது சமுதாயத்துக்கு
உண்மையாக இருக்கப்போகிறீர்கள்…?

இந்த தலையங்கம் வெறும் விதிவிலக்கு தானா…?

அல்லது இனியாவது ஆளும் கட்சிக்கு அஞ்சாமல்
மக்களுக்கு உண்மையாக செயல்படுவோம்
என்று சொல்லும் மீடியாக்களின் துவக்கமாக இருக்கும்
என்று நம்பலாமா…? )

——————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ” மோடி அரசா இப்படி…? ” என்று தினமணி வியக்க வேண்டாம்……!!!

 1. GVS சொல்கிறார்:

  ந.மோ. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, வரிசையாக
  மீடியாக்கள் அனைத்தும் அவரது செல்வாக்கை
  கண்டோ, அரசை எதிர்க்க துணிவின்றியோ,
  அல்லது விலை கொடுத்து வாங்கப்பட்டோ
  ந.மோ.அரசுக்கு ஜால்ரா போடத்துவங்கி விட்டன.
  கொஞ்சம் கொஞ்சமாக துவங்கி, ஆங்கில சேனல்க்ள்
  அத்தனையும் பாஜக வசம் வந்து விட்டன.
  பெஸ்ட் ஜால்ராவாக டைம்ஸ் நவ் தேர்ந்தெடுக்கப்படலாம்.
  அதே மாதிரி செய்தித்தாள்களும்.
  பயமுருத்தியோ, influence செய்தோ, ஆசை காட்டியோ
  எதாவது ஒரு வழியில் மீடியாக்கள் ஒட்டுமொத்தமாக
  ந.மோ.வசம் வந்து விட்டன.
  எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமான நிலையில்
  புலம்பிக் கொண்டிருக்கின்றன. ந.மோ.விற்கு எதிராக
  சக்தி வாய்ந்த தலைமையோ, கட்சியோ இல்லாததால்
  ந.மோ.ஆட்சி இனி இப்படித்தான் இருக்கும்.
  தினமணி துணிந்து தலையங்கம் எழுதியதே ஒரு ஆச்சரியம்தான். சீக்கிரமே ஆசிரியர் வெளியேற்றப்படலாம்.

 2. Sundar Raman சொல்கிறார்:

  இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் எந்தப்பக்கம் என்று எல்லாருக்கும் தெரியும் , சீதாராம் யச்சூரியின் , மனைவி டெல்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் ஒரு பெரிய பொறுப்பில் இருக்கிறார், பழைய ஆசிரியர் சேகர் குப்தா எப்படின்னு விளக்க வேண்டிய அவசியமில்லை .( please read TOI, ET, The Hindu, HT to know the line they take ..and these are widely circulated English dailies )

  எனக்கு தெரிஞ்ச ஆங்கில பிரபல ஆங்கில டிவி நிறுவனங்கள் , NDTV , இந்தியா டுடே , டைம்ஸ் நௌ ,… இந்த டிவி கம்பனிகள் என்ன செய்கின்றன , எப்படி விவாதிக்கின்றன , யாரை ஆதரிக்கின்றது என்று நீங்களே முடிவு செய்து கொள்ளவும்.

  என்ன முடிவுகள் , எந்த சட்டங்கள் – நிதி மசோதாவில் என்ன மாற்றங்கள் என்று தனி தனியாக பார்த்தல் தான் தெரியம் , வருமான வரி ஏய்ப்பு நாட்டில் பெருமளவு உள்ளதால் தான் , வருமான வரி ஏய்ப்பை தடுக்க , எல்லாரும் வரி கட்ட , வரிகட்டுபவர்கள் சுமை குறைய … சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது ..இது காலம் காலமாக நடக்கிறது , ஒரு வேளை இதனால், சிதம்பரத்திற்கு அசௌகரியம் ஏற்படலாம், இது போன்ற சட்டங்கள் அவசியமே .

  நன்கொடை பற்றிய மசோதா கண்டனத்துக்குரியதே , ஆனால் நஷ்டம் உள்ள கம்பெனி எப்படி நன்கொடை கொடுக்குமோ?

  அப்படிதான் ..தினமணியில் உள்ள செய்தி என்று CVC அலுவலகத்தில் மத்திய அரசுக்கு எதிராக சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிக புகார் … யாருமே சொல்லாத , பார்க்காத ஒரு புள்ளி விவரம் . ( from your comment section )

  ஒரு சிறிய ஊழல் கூட இல்லாது ஆட்சி செய்தி வருகிறது மத்திய அரசு . எங்காவது சின்ன புள்ளி கிடைத்தாலே கோலம் போட்டு விடுவார்கள் இப்போதைய டிவி க்கள் . இன்னும் மல்லையா , லலித் மோடி ன்னு சொல்ல முடியவில்லை . ( இரண்டு ஊழல்களும் முந்தய UPA சர்காரில் நடந்து முடிந்த ஊழல் ) … அந்த புள்ளி விவரம் சொன்ன ஊழல் புகார்கள் என்ன ஊழலோ ,தினமணிக்கே வெளிச்சம் ( உங்களுக்கும் தெரிந்தால் எழுதுங்கள் )

 3. T.Thiruvengadam சொல்கிறார்:

  The problem was the opposition groups in the loksabha did not unitedly oppose some of the moves surreptiously introduced and may even try to find out the constitutional validity on the basis the changes introduced post facto Andy not discussed by the loksabha.The media is thrown crumbs and bones to divert them from projecting these really important decisions affecting the democratic safeguards.Thiruvengadam

 4. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! நிதிநிலை அறிக்கை — மசோதா – திருத்தங்கள் — வருமான வரிஅதிகாரிகளுக்கு வானளாவிய அதிகாரம் — அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் என்று பல விவரங்கள் … ? அதற்கு நடுவே மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களும் நடக்கின்றன …. அதில் ஒன்று :–

  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் யமுனை நதிக்கரையில், ‘உலகக் கலாசாரத் திருவிழா’ என்று ஒன்று நடத்தியதும் — அது அப்போதே பல சர்ச்சைகளை கிளம்பியதும் — சுற்றுசூழல் பாதிப்பும் — தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த நால்வர் குழு, வாழும் கலை கம்பெனியிடம் யமுனை பழுது பணிகளுக்காக 100 கோடி ரூபாயை இழப்பீடாக கேட்டதும் — பழைய கதை …..

  2016-ம் ஆண்டில் கார்ப்பரேட் சாமியார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கம்பெனியார், யமுனைக் கரையில் நடத்திய வாழும் கலை மேளாவின் ‘சாதனை’ தற்போது வெளி வந்திருக்கிறது…. அதில்
  ” பாதிப்பால் அழிந்து போன சுற்றுச்சூழலை மீட்டெடுக்க பத்தாண்டும், 42 கோடி ரூபாய் செலவும் ஆகும் ” என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது … Will take 10 years to restore river bank hit by Sri Ravi Shankar event, panel tells NGT … http://indianexpress.com/article/india/rs-42-cr-10-yrs-to-save-yamuna-banks-after-aol-event-panel-to-ngt-4610832/ எது – எப்படியோ ” மூன்று நாள் ” கொண்டாட்டம் — பல ஆண்டுகளுக்கு திண்டாட்டம் … வாழ்க ” வாழும் ?கலை ” …. ? தினமணி ஆசிரியர் ” கண்களுக்கு மட்டும் ”
  சில விவரங்கள் தெரிய வருகிறது போலும் … ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.