யாரை ஏமாற்ற முயல்கிறது தமிழக அரசு….?


யாரை ஏமாற்ற முயல்கிறது தமிழக அரசு….?

மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டிய சாராயக்கடைகளை
மூடச்சொல்லி சுப்ரீம் கோர்ட் போட்ட உத்திரவின் காரணமாக –
தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில்அமைக்கப்பட்டிருந்த 3321 கடைகளை
மூட வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது…

இது அகில இந்தியாவுக்குமான உத்திரவு என்றாலும், சாராயம் மாநில
அதிகாரத்துக்குள் ( ? ) வருகிறபடியால், தமிழக அரசு இதற்கான மாற்று
வழிகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

2016 தேர்தலுக்கு முன்னர் ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில்
டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவது தனது குறிக்கோள் என்பதை
உறுதிபடக் கூறி இருந்தார். அதே போல், தேர்தலில் வெற்றி பெற்று
ஆட்சியமைத்தவுடன், முதல் தவணையாக 500 கடைகளை மூடச்செய்தார்.

இப்போது ஆட்சியில் இருப்பவர் – அம்மாவோ, சின்னம்மாவோ, தினகரனோ –

எவருக்கு விசுவாசமாக இருந்தாலும், ஜெயலலிதா அவர்களின் வாக்குறுதியை
நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கின்றனர்.

கடவுளாக பார்த்து அனுப்பிய வரமாக சுப்ரீம் கோர்ட் உத்திரவை தமிழக மக்கள் –
குறிப்பாக தாய்மார்கள் கருதுகின்றனர்… மூடப்படும் இந்த கடைகளுக்கு
பதிலாக மீண்டும் ஊருக்குள்ளாக கடைகளை திறக்கும் முயற்சிகளை
தாய்மார்கள் கடுமையாக, மிகக்கடுமையாக எதிர்க்கின்றனர். பல இடங்களிலும்
புதிய கடைகளை திறப்பதை எதிர்த்து தாய்மார்களும், சிறுவர் சிறுமிகளுமாக
சேர்ந்துகொண்டு எதிர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். உண்மையில்
பாதிக்கப்படுவது அவர்கள் தான் என்பதால், அவர்களது போராட்டம்
நூற்றுக்கு நூறு நியாயமானது. இதை போலீசாரைக் கொண்டு அடக்க நினைப்பது
முட்டாள்தனம்.

மூடப்படும் கடைகளை தொடர்ந்து நடத்த ஏதுவாக நெடுஞ்சாலைகளை
மாவட்ட, மாநகர சாலைகளாக மாற்றும் முயற்சியில் தமிழக அரசு
ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இது தமிழக மக்களை, முக்கியமாக தாய்மார்களை
மட்டும் அல்லாது சுப்ரீம் கோர்ட்டையே ஏமாற்றும் முயற்சியே என்பதில்
எந்தவித சந்தேகமும் இல்லை.

தமிழக அரசு, தமிழ்நாடு முழுவதும் நகரப்பகுதிகளில் உள்ள தேசிய, மாநில
நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கியச் சாலைகள் மற்றும் இதர மாவட்ட
சாலைகளை மாநகராட்சி/ நகராட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து தீர்மானம்
நிறைவேற்றி, அதை நாளை மறுநாள் 25ஆம் தேதிக்குள் நகராட்சி நிர்வாக
ஆணையருக்கு அனுப்பி வைக்கும்படி மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு
அறிவுறுத்தியுள்ளது. இதற்காக கூறப்படும் காரணங்கள் அபத்தமானவை,
உள்நோக்கமுடையவை.

தமிழக அரசின் இந்த முயற்சிகளுக்குப் பின்னால் இருப்பது, டாஸ்மாக்
கடைகளின் மூலம் அரசுக்கு வரும் வரும்படி குறையும் என்பதை விட,

தனிப்பட்ட சாராய தொழிற்சாலைகளின் உற்பத்தியும், விற்பனையும்
பாதிக்கப்படும்… சாராய முதலாளிகளின் வருமானம் சரியும்….

அவர்கள் மூலம் ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளுக்கு தனிப்பட்ட
முறையில் கிடைக்கும் மாமூல் வருமானம் குறையும் என்பது தான் முக்கிய
காரணமாக இருக்க முடியும்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்திரவை குறுக்கு வழியில் மீறி, சாராயக்கடைகளை
தொடர்ந்து அதே இடங்களில் நடத்த எடுக்கப்படும் தமிழக அரசின்
இந்த முயற்சி இப்போதைக்கு வெற்றி கிடைக்கும்போல் தோன்றினாலும்,
மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு எடுத்துச் செல்லப்படுமேயானால் –
நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்கு தமிழக அரசு உள்ளாகும் என்பதில்
எந்தவித சந்தேகமும் இல்லை. தமிழக அரசின் முயற்சிகளுக்கு பின்னால்
இருக்கும் நோக்கத்தை புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு நீதிமன்றத்தில்
இருப்பவர்கள் இளிச்சவாயர்கள் அல்ல…

இந்த விஷயத்தில், பாமக எடுத்து வரும் சட்டபூர்வமான நடவடிக்கைகள்
மிகுந்த பாராட்டிற்குரியவை. தமிழக அரசின் இந்த குறுக்கு வழி முயற்சியை
எதிர்த்து மீண்டும் பாமக வழக்கறிஞர் பாலு இதை அவசர வழக்காக
சுப்ரீம் கோர்ட் முன்னர் எடுத்துச் செல்ல வேண்டும்….

என்ன – வழக்கம்போல், நம் நாட்டில் நீதி கிடைக்க சில மாதங்களோ,
சில வருடங்களோ காத்திருக்க வேண்டும். அதற்குள் பலர் உயிரை
விட்டிருப்பர். பல தாய்மார்களின் தாலிகள் அறுக்கப்பட்டிருக்கும்.
பல குழந்தைகள் அநாதைகளாக தெருக்களில் அலைந்து கொண்டிருப்பார்கள்.

மேலும், தமிழக அரசும் – குறுக்கு வழியிலான தனது நோக்கத்தை,
நிறைவேற்றிக் கொள்ள – தமிழக மக்கள் அவ்வளவு சுலபமாக அனுமதித்துவிட
மாட்டார்கள்.

நாள்தோறும் மக்களை போராட்டங்களில் ஈடுபடத்தூண்டினாலும்
பரவாயில்லை, தங்களது தனிப்பட்ட மாமூல் வசூல் தான் முக்கியம் என்று
ஆட்சியில் உள்ளோர் கருதுவார்களேயானால் –

அவர்கள் ஆட்சி தூக்கி எறியப்படும் நாள் அதிக தூரத்தில் இல்லை…!!!


Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to யாரை ஏமாற்ற முயல்கிறது தமிழக அரசு….?

 1. புதியவன் சொல்கிறார்:

  இன்றைய REALITY பலர் குடிக்கு அடிமையாகி உள்ள நிலைமையும், அரசுக்கு வருமானமும், அரசுக்குத் தேவையானவர்களுக்கு நிறைய பண வரவும் (டி.ஆர்.பாலு, மன்னார்குடி கும்பல் போன்று) அதன் மூலம் ஆளும் கட்சிக்கு நிறைய வரவும், டாஸ்மாக்கில் பணிபுரிபவர்கள் செய்யும் கோல்மால்களும், அதனுடன் ஒட்டிய பார் மூலம் வரும் பணம் அங்கிருக்கும் ஆளுங்கட்சி ஆட்களுக்கும் என்று பலரது வாழ்வை ஒட்டிய CYCLE இது.

  டாஸ்மாக்கில் ஊற்றிக்கொடுப்பவர்கள் ஏதோ அரசு வேலை செய்வதாகக் கற்பனையில் மிதக்கிறார்கள். குடிகாரர்கள் ஏதோ அவர்களால்தான் அரசு இயந்திரம் நடைபெறுவதாக எண்ணுகிறார்கள்.

  என்னைக்கேட்டால், ஏன் கடைகளை ஊரை விட்டு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைக்கக்கூடாது? குடிகாரன், எப்படியும் தேடிவந்து குடிப்பான். அதை ஏன் ஊருக்கு உள்ளே வைத்து இன்னும் பலரைக் குடிக்கு அடிமையாக்குகிறார்கள்? கம்ப்யூட்டரில் வேலை பார்க்கிறவன், ஏழைத் தொழிலாளி போன்ற பலதரப்பட்ட மக்கள் ஊரின் நடுவே வெட்கமில்லாமல் டாஸ்மாக்கில் நிற்பதைப் பார்ப்பதற்கே கேவலமாக இருக்கிறது. இதுலவேறு, ஐ.டி. அல்லது மற்ற படித்த நடுத்தர மக்களிடையே டிரிங்க்ஸ் பார்ட்டி இல்லைனா கேவலமாக நினைக்கிறார்கள்.

  நீங்கள் எழுதியிருப்பதைப்போல், உச்ச நீதிமன்றம் அரசுக்கு ஒரு நல்ல EXCUSE (சாக்கு) கொடுத்துள்ளது.

  பாமக கட்சியின் நிலைப்பாட்டை இந்த விஷயத்தில் பாராட்டவேண்டும் (அவர்கள் தொண்டர்களும் – including காடுவெட்டி, குடிக்கு அடிமை என்றாலும்..) அவர்கள்தான் பல வருடங்களாக தொடர்ந்து குடிக்கு எதிராக எழுதியும் பேசியும் வருபவர்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.