மாநில அரசுக்கு மண்டையில் குட்டு ….!!!

நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக்கடைகளை மூடும்படி சுப்ரீம் கோர்ட் போட்ட
உத்திரவை குறுக்கு வழியில் முடக்க – மாநில அரசு செய்த முயற்சிகளுக்கு
குட்டு வைத்திருக்கிறது சென்னை உயர்நீதி மன்றம்.

நெடுஞ்சாலைகளை, ஏப்ரல் 25-ந்தேதிக்குள் மாநகர சாலைகளாகவும்,
முனிசிபாலிடி சாலைகளாகவும் மாற்றும்படி தமிழக அரசு போட்ட
உத்திரவை, செல்லுமா செல்லாதா என்று விசாரிக்கும் முன்னர் – மூடப்பட்ட
சாராயக்கடைகளையோ, புதிதாக எதையுமோ –
அடுத்த மூன்று மாதங்கள் வரை ( வேறு இடங்களில் கூட )திறக்கக் கூடாது
என்று செவ்வாயன்று, நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்திருக்கிறது.

தமிழக அரசின் குறுக்கு வழியை எதிர்த்து, பாமக வழக்கறிஞர் பாலு
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு போட்டபோது, ஏற்கெனவே
சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் பாமக நல்ல பெயர் வாங்கி விட்டது போல்
இந்த தடவை தாம் ஏமாந்து விடக்கூடாது என்று நினைத்தோ என்னவோ –
திமுக ஆலந்தூர் பாரதியும் இந்த தடவை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.

அந்த மனுக்களின் மீதான இடைக்கால உத்திரவு தான் மேற்கூறி இருப்பது…

மீண்டும் மீண்டும் டாஸ்மாக் கடைகளை எப்படி திறப்பது என்று யோசிப்பதை
விட்டு விட்டு, தமிழக அரசு – பீகாரின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள
முயற்சிக்க வேண்டும்.

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பாக, ஏப்ரல் 2016-ல், பீகாரில் சாராயக்கடைகளை
ஒட்டுமொத்தமாக மூடும் உத்திரவை பிறப்பித்தார் முதல்வர் நிதிஷ்குமார்.
அன்றைய தேதியில் மாநில அரசுக்கு ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய் இழப்பு
நேரிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சாராயக்கடைகள் இருந்த இடங்களை எல்லாம் பால்கடைகளாக மாற்றி
விட்டார்கள்.

சாராயக்கடைகள் மூடப்பட்ட கடந்த ஓராண்டில் நிகழ்ந்தவை பற்றிய
சில புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன….

– மதுவிலக்கு அமலான ஓராண்டில் பீகார் முழுவதுமாக 2,16,595 ரெய்டுகள்
நிகழ்ந்துள்ளன. 40,078 வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. 44,594 பேர்
கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

– கள்ளத்தனமாக விற்க முயன்ற மதுபானங்கள் 5,14,639 லிட்டர்,
பீர் 12,000 லிட்டர், கள் 10,000 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டு
அழிக்கப்பட்டிருக்கிறது.

– பீகாரில் கள்ளத்துப்பாக்கிகள் கடத்திக் கொண்டிருந்தவர்கள் பலரும்
இப்போது சாராயம் கடத்தும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள்…!!!

– மதுவிலக்கை அமல்படுத்தும்போது சுமார் 44 லட்சம் பேர் மதுவிற்கு
அடிமையாக இருந்தார்கள். இப்போது தானாகவே அந்த தொகை
வெகுவாக குறைந்து விட்டது.

– குடிக்கா விட்டால் செத்துப்போய் விடுவேன் என்று நினைத்தவர்கள்
எல்லாரும் இன்னமும் உயிரோடு தான் இருக்கிறார்கள்…

– Asian Development Research Institute (ARDI )
என்கிற அமைப்பு பொருளாதார மாற்றங்கள் சிலவற்றைப்பற்றிய
புள்ளி விவரங்களை திரட்டி வெளியிட்டிருக்கிறது….

– மதுவிலக்கு அமலான பிறகு பால் விற்பனை 11 % கூடி இருக்கிறது….

– இதர பால் பொருட்களின் விற்பனை 17.5% அதிகரித்திருக்கிறது.
ஸ்டேஷனரி பொருட்களின் விற்பனை 30 %,
எலெக்ட்ரிகல் பொருட்களின் விற்பனை 51 %
ஆட்டோமொபைல் விற்பனை 30 % அதிகரித்து இருக்கின்றதாம்…

சாராயத்தில் மறைமுகமாக புழங்கிவந்த பணம் – ஒரு நல்ல
மாற்றமாக சமூகத்திற்கு அவசியமான விதங்களில் செலவிடப்படப்பட்டுள்ளது….
இத்தனை நாட்களும், இந்த பணம் சாராய முதலாளிகளுக்கு
சென்று கொண்டிருந்திருக்கிறது…

Jagjivanram Institute of Parliamentary Studies and
Political Research என்ற நிறுவனம், பீகாரின் தலைநகரம் பாட்னாவில்
குடிசைப்பகுதிகளில் வாழும் 600 குடும்பங்களிடையே ஒரு ஆய்வு
நடத்தி இருக்கிறது….

– இந்த குடும்பங்களில் எல்லாம் மதுவிலக்கு அமலாவதற்கு முன்னர்,
ஒருவரோ, பலரோ குடித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அவர்கள்
குடியை விட்டு விட்டதால் இனிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன…

– குடும்ப உறுப்பினர்களுக்குள் நடக்கும் சண்டைகள் 87 சதவீதம்
குறைந்திருக்கின்றன. வீதியில் நின்று வேறு நபர்களுடன் சண்டை
போடுவது 93 சதவீதம் குறைந்திருக்கிறது. இதனால் வாழ்க்கையில்
நிம்மதியை உணர முடிகிறது என்று பெரும்பாலோர் மனம்விட்டு
சொல்கிறார்களாம்.

மதுவிலக்கை அமல்படுத்துவதால், மக்களின் வாழ்க்கைத்தரத்தில்
இந்த அளவிற்கு மாற்றம், முன்னேற்றம் – ஏற்படுமேயானால் –
அதை செய்வதைவிட பெரிய கடமை ஒரு அரசுக்கு
வேறு என்னவாக இருக்க முடியும்…?

இனியும் தமிழகத்தில் சாராயக்கடைகளைத் தொடர தமிழக அரசு
விரும்புமேயானால், முயற்சி செய்யுமேயானால் –
அதற்கு ஒரே ஒரு அர்த்தம் தான், ஒரே ஒரு காரணம் தான்
இருக்க முடியும்….

சாராயக்கடை முதலாளிகள் பணம் சம்பாதிக்கவும் –
அவர்கள் போடும் மாமூல் பிச்சையில் தங்கள் பிழைப்பை தொடரவும் –
தமிழ் மக்களின் வாழ்க்கையை பலி கொடுக்க
அரசியல்வாதிகள் தயாராக இருக்கிறார்கள் என்பதே அது….!!!

ஆனால், அந்த பிழைப்பை அவர்கள் தாமாக கைவிடாவிட்டால் –
அவர்களை வழிக்கு கொண்டு வர –
தாய்மார்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை
அவர்கள் உணர வேண்டும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to மாநில அரசுக்கு மண்டையில் குட்டு ….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  உங்கள் ஆதங்கம் புரிகிறது கா.மை.சார்.

  இந்தக் குடி, பெரிய பெரிய ஆளுமைகளின் உயிரைப் பறித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், நண்பர்கள் என்ற பெயரில் ஆளுமைகளுடன் இருக்கும் அல்லக்கைகள், கயவர்கள். இந்தக் கள்வர்கள்தான், ஏழைகளின் குடிப் பழக்கத்திற்கும் காரணம்.

  நிற்க… ஏன் மக்கள் முதலில் திருந்தக்கூடாது? ஏன் டாஸ்மாக் நோக்கி பிச்சைக்காரர்களைப்போல், மானம் இழந்து மதி கெட்டு போகவேண்டும்? டாஸ்மாக்கில் வரிசையில் நிற்பவர்களைப் பார்த்தால், பிச்சைக்காரனைவிட மோசமான ஏக்கத்தோடு இருக்கிறார்கள். இதற்கு அரசை மட்டும் எதற்குக் காரணமாகச் சொல்லுவது? படித்தவனுக்கு மட்டும், எவ்வளவு குடிக்கவேண்டும் என்ற அறிவு அதுவாக வந்துவிடுமா? எத்தனை மது பார்டிகள் பல industryயில் நடக்கின்றன. அதற்கு முதலில் ஃபுல்ஸ்டாப் வைக்கக்கூடாதா?

  மக்கள், காசு வாங்கறாங்க (ஓட்டளிக்க). மக்கள் ஒழுங்குமுறையைக் கடைபிடிக்க மாட்டேன் என்கிறார்கள். மக்கள் சுத்தமா இருக்கமாட்டேன் என்கிறார்கள் (கண்ட இடத்தில் துப்புவது போன்றது) எல்லா பொது இடங்களிலும் சிகரெட் புகைக்கிறாங்க, வெட்கமில்லாமல். (ஏன் சிகரெட்டை புகைத்து அவங்க அவங்க குழந்தை, பேரன்/பேத்தி வாயில ஊதவேண்டியதுதானே இந்த கழிசடைகள்), வெட்கமில்லாமல் டாஸ்மாக்குக்குப் போறாங்க.. ஏழைகள் மட்டுமல்ல, இந்த ஒயிட் காலர் வேலைல இருக்கறவங்களும் (குறிப்பா கணிணித் துறைல, தேவைக்கு அதிகமாக சம்பளம் பெரும் எல்லோரும்தான்) இந்த மதுவுக்கு அடிமையாயிருக்காங்க. கொஞ்சம்கூட வெட்கமில்லாக் கூட்டம். இதுக்கெல்லாம் நாம அரசாங்கத்தைக் குறை சொல்கிறோம். (எனக்கு இது எப்படி இருக்குன்னா, தெருல பெண்கள் போறாங்க.. அதனால நாங்க கையைப் பிடிச்சு இழுத்தோம்னு சொல்றமாதிரி இருக்கு. அதுனால, பெண்களை வெளில அனுப்பாதீங்கன்னு சொன்னா எவ்வளவு ஏளனமாகப் பார்ப்பாங்களோ அதுமாதிரி, அரசாங்கம் மதுவிலக்கைக் கொண்டுவந்தால் இந்த மது அடிமைகள், சிகரெட் புகைத்து அப்பாவிகளில் உயிரைப் பறிக்கும் கயவர்கள் திருந்திவிடுவார்கள் என்று நினைப்பது போன்றது)

  அரசாங்கமும், மதுவை, பணம் கொழிக்கும் ஒரு தொழிலாக நினைத்து கண்ட இடத்திலெல்லாம் திறந்து, அதை மளிகைக்கடை ரேஞ்சுக்குக் கொண்டுவந்துட்டாங்க. மதுக்கடை வைப்பதால ரெண்டு ஆதாயம் அரசாங்கத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும். (1) சாராய முதலாளிகளிடம் இருந்து வரும் கள்ளப்பணம் (2) போதைக்கு அடிமையாயிருக்கிற மக்களுக்கு அரசாங்கத்தை எதிர்க்கும் முதுகெலும்பு இருக்காது.

  திருந்த வேண்டியது, அரசாங்கமும், குறிப்பா மக்களும்தான்.

  • R KARTHIK சொல்கிறார்:

   //குறிப்பா கணிணித் துறைல, தேவைக்கு அதிகமாக சம்பளம் பெரும் எல்லோரும்தான்

   Strongly object above comments. Remember no one will give money just like that.

   • புதியவன் சொல்கிறார்:

    இதைப்பற்றி விளக்கமாக எழுதமுடியும். அதற்கான இடம் இதுவல்ல. Demand & Supply, Foreign money இவைகளை வைத்து 20 வருடங்களாக, கணிணித்துறையில் சம்பளம் வெகுவாக வழங்கப்பட்டுவந்தது (இன்னும்தான்). அது, சமூகத்தின் balanceஐ அசைத்துவிட்டது. சினிமா மற்றும் தொலைக்காட்சியில் வேலை பார்ப்பவர்களுக்கும் (காட்சி ஊடகம் என்பதால்), சம்பளம் அதிகம் ஆனால் அதன் ஆயுள் குறைவு. அதுவும்தவிர சமூகத்தின் negligible சதவிகிதம்தான் அந்தத் துறைகளில். கணிணித்துறையில் பெரும்பாலும் Professional அல்லாதவர்கள் நிறைந்திருக்கின்றனர் (இப்போது கொஞ்சம் மாற்றம் இருக்கலாம்). நாம, simpleஆ, எங்க முதலாளிக்கு டாலர்ல காசு வருது, அதுல எங்களுக்கும் போடுகிறான் என்று பெருமையடித்துக்கொள்ளலாம். அது, சமூகத்தின் imbalanceக்கு முக்கியக் காரணம். அதிக வருமானம், அதிக பிரச்சனையையும் பலவித சமூகப் பிரச்சனைகளுக்கும் காரணமாகிவிட்டது.

    அதே ஆயுதத்தை வைத்துத்தான் கம்பெனிகள், சிறிது அனுபவம் உள்ளவர்களை விலக்கிவிட்டு, அனுபவம் இல்லாத புது ஆனால் energetic இளைஞர்களை வேலைக்கு எடுக்கிறது (1க்கு 3 என்ற விகிதத்தில். அதாவது 1 அனுபவம் உள்ளவரை விலக்கிவிட்டு அந்த இடத்தில் 3 பேரைக் குறைந்த சம்பளத்தில் எடுக்கிறது).

 2. NS RAMAN சொல்கிறார்:

  Good article

  I can see a good change from your earlier stand on total prohibition.

  MK MGR JJ are fully responsible for this social disaster in Tamil Nadu. Hope to see liquor free India very soon.

  • தமிழன் சொல்கிறார்:

   அன்புள்ள ராமன்,

   இது சாத்தியமற்றது. இன்றைக்கு எல்லா ஃபீல்டுகளிலும் லிக்கர் பார்ட்டி, நாம் எல்லோரும் (பெரும்பாலும்) உண்பது சுதேசி உணவல்ல, அந்த உணவுப் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவருகிறது. இளைய சமுதாயத்தில் கலாச்சாரமே, மேலைக் கலாச்சாரத்தோடு போகிறது. நம்முடைய உண்மையான கலாச்சாரம், ‘போதும் என்ற மனம், உழைப்பு, கிராமம் சார்ந்த வாழ்க்கை’, ‘கூட்டுக்குடும்பம்’. இவை எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு அன்னியமாகிக்கொண்டிருக்கின்றன.

   அதனால், சாராயம் இல்லாத இந்தியா என்பது நினைத்துப்பார்க்க இயலாதது. இது பொதுப்பெண்டிர் அற்ற இந்தியா என்ற கனவினைப்போன்றது.

   உங்கள் எதிர்பார்ப்பு தெரிகிறது. அது நிறைவேறாது என்றே நினைக்கிறேன்.

   • NS RAMAN சொல்கிறார்:

    Nothing impossible

    You should treat consuming alcohol is similar to using any drugs.

    No body going to die with out liquor so shut all the liquor shops. All we need is political will.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    தமிழன்,

    // அதனால், சாராயம் இல்லாத இந்தியா என்பது நினைத்துப்பார்க்க இயலாதது. //

    உங்கள் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை…

    தமிழ்நாட்டிலும், இந்தியாவில் பல மாநிலங்களிலும்
    பல பத்தாண்டுகள் தீவிரமான மதுவிலக்கு அமலில் இருந்தது
    என்பதை மறந்து விட்டீர்களா…?

    மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்தும்போது – துவக்கத்தில்
    பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்… ஆனால் நிச்சயமாக
    இது இயலாத காரியம் அல்ல.

    மனம் வேண்டும்….
    அரசியல்வாதிகளுக்கு….

    இதில் மக்களை குறைகூறிப்பயன் இல்லை…
    குடிப்பழக்கம் ஒரு நோய்…
    அந்த நோயால் பீடிக்கப்பட்டவர்கள், வேறு எதைப்பற்றியும்
    யோசிப்பதில்லை….

    பல கோடி குடும்பங்களை, பெண்களை, குழந்தைகளை
    நினைத்து நாம் இதை செயல்படுத்தியே தீர வேண்டும்.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.