பாஜக அரசு லோக்பால் விவகாரத்தில் பயப்படுவது ஏன்…?

பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன.
இது வரை மத்திய அரசின் மீது பெரிய அளவிலான ஊழல் புகார்கள்
எதுவும் வெளிவரவில்லை…. எனவே மோடிஜியும், பாஜகவும் இதைப்பற்றி
பெருமைப்பட்டுக் கொள்வது நியாயமே…

ஆனால், மோடிஜிக்கு தன் மீது இருக்கும் நம்பிக்கை தன் சக மந்திரிகள்
மீது இல்லை என்றே தோன்றுகிறது.

இல்லையெனில், லோக்பால் சட்டம் அமலுக்கு வருவதை தொடர்ந்து
தவிர்த்துக் கொண்டே இருப்பது ஏன்…?

மோடிஜி ஊழல் செய்ய மாட்டார் … என்கிற நம்பிக்கை நமக்கும் இருக்கிறது…
( ஊழல் செய்வது வேறு – தவறான முடிவுகளை எடுப்பது வேறு….! )

ஆனால், அவரது மந்திரிகள் சிலர் ஏற்கெனவே ஊழல் புகார்களுக்கு
உள்ளானது உண்டு….இப்போது அவர்களில் சிலர் ஈடுபட்டிருக்கும் நடவடிக்கைகள்
காரணமாக, எதிர்காலத்தில் அவர்கள் மீதும் ஊழல் புகார் வர வாய்ப்பிருக்கிறது.

அவர்கள் மீதுள்ள பயம், அவநம்பிக்கை காரணமாகவே மோடிஜி அரசு
லோக்பால் அமைப்பதை தவிர்த்து வருகிறது என்று தோன்றுகிறது.

நேற்றைய தினம் சுப்ரீம் கோர்ட்டில் நிகழ்ந்த வாதங்கள் பாஜக அரசின்
நெகடிவ் மனப்பான்மையை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

கடந்த 2013ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு 2014ம் ஆண்டு அமலுக்கு வந்த
லோக்பால் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து அதற்குரிய நிர்வாகிகளை
நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த்
பூஷன் சார்பில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது மத்திய அரசு
சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி,
மசோதாவை அப்போதைய சூழ்நிலையில் அமல்படுத்தச் சாத்தியம் இல்லை என்றும்,
அடுத்து நடைபெறும் கூட்டத்தொடரில் லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்கு
முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மத்திய அரசின்
அப்போதைய விளக்கத்தை அடுத்து உச்சநீதிமன்றம் தனது வழக்கை ஒத்திவைத்தது.

2014 பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்ற எதிர்க்கட்சி அந்தஸ்தைப்
பெறும் அளவுக்கு எந்தக் கட்சியும் இடங்களைப் பெறவில்லை என்பது உண்மைதான்.

ஆயினும் இருப்பதற்குள் அதிக உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியை,
அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாகக் கருதக் கூடாது என்பதாக சட்டம் ஒன்றும் இல்லை.
லோக்பால், லோக் ஆயுக்த தலைவர்களை நியமிக்க அங்கீகரிக்கப்பட்ட
எதிர்க்கட்சித் தலைவரையும் சேர்த்து குழு அமைக்கப்பட வேண்டும் என்று
லோக்பால் சட்ட அமைப்பு விதிகள் கூறுகின்றன. அப்படியொரு தலைவர்
இல்லாததால் நியமிக்க முடியவில்லை என்று பாஜக அரசு வேண்டுமென்றே
பதில் தருகிறது.

மத்தியப் புலனாய்வுக் கழகத்தின்(சிபிஐ) தலைவர் பதவிக்கு ஒருவரைத்
தேர்ந்தெடுக்கவும் இதே போன்ற விதிகள்தான் நடைமுறையில் உள்ளன.
ஆனால், அந்தச் சட்டத்துக்கு மட்டும், அதிக உறுப்பினர்களைக் கொண்ட
எதிர்க்கட்சித்தலைவரையும் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளலாம் என்ற
திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றி, சிபிஐ இயக்குநரை நியமித்தது
மத்திய அரசு. அதே நடைமுறையை லோக்பால், லோக் ஆயுக்த நியமனத்துக்குப்
பின்பற்றத் தயாரில்லை என்பது அதன் விருப்பமின்மையை தான் காட்டுகிறது.

நேற்று மீண்டும் வழக்கு சுப்ரீம் கோர்ட் முன் விசாரணைக்கு வந்தபோது –
“லோக்பால், லோக் ஆயுக்த பதவிகளை உருவாக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றி
மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் அதை ஏன் அமலுக்குக் கொண்டுவரவில்லை?”
என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது –

“இந்தச் சட்டத்தை எப்போது, எப்படி அமல் செய்ய வேண்டும் என்று
கட்டளையிடும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்குக் கிடையாது” என்று
அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி அதற்குப் பதில் அளித்துள்ளார்.

மத்திய அரசின் விருப்பமின்மையை மீண்டும் பட்டவர்த்தனமாக
தெரிவிப்பதாகவே இந்த வாதம் இருக்கிறது….

“ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம்” என்று மக்களவைப் பொதுத்
தேர்தலின்போது வாக்களித்துத்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது.
நானும் சாப்பிட மாட்டேன் – மற்றவர்களையும் சாப்பிட விட மாட்டேன் என்று
மோடிஜி பொதுக்கூட்டங்களில் உறுதியாக கூறினார்.
( ன காவூங்கா – ன கானே தூங்கா…!!!)

ஊழல் செய்யும் பொது ஊழியர்கள் குறித்து சாதாரண குடிமகன் புகார்
அளித்தால்கூட அது தொடர்பாக விசாரணை நடத்தி தண்டிக்க தேவையான
அதிகாரம் லோக்பால், லோக் ஆயுக்த ஆகிய அமைப்புகளுக்கு உண்டு.
இந்த அமைப்புகளுக்குத் தலைவர்கள் நியமிக்கப்படவில்லை.
மாற்றி மாற்றி எதாவது விதண்டாவாதம் செய்து வழக்கை இழுத்தடிப்பதிலேயே
மத்திய அரசு குறியாக இருக்கிறது.

இந்நிலையில், லோக்பால் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி
ரஞ்சன் கோகோய் தலைமையிலான பெஞ்ச் நேற்று ( 27.4,2017 அன்று )
இறுதியாக ஒரு உத்திரவை பிறப்பித்திருக்கிறது.

நியமனத்தை தாமதப்படுத்த அரசு முன்வைத்த காரணங்களை
நீதிமன்றம் நிராகரித்து விட்டது. 16-வது லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர்
இல்லை என்பதை காரணமாக வைத்து லோக்பால் நியமனம் தாமதமாகி
விட்டது என்று மத்திய அரசு கூறிய வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.

16-வது மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லையென்றாலும் பிரதமரின்
தலைமையிலான உயர் மட்ட குழு லோக்பால் அமைப்பை தேர்ந்தெடுக்கலாம்
என்று நீதிமன்றம் நேற்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. லோக்பால் சட்டம்
அதன் தற்போதைய வடிவத்தில் செயல்படக்கூடியதுதான் என்றும் உச்ச நீதிமன்றம்
கூறி இருக்கிறது.

மோடிஜிக்கு தன் மீது நம்பிக்கை இருந்தாலும்,
தன் சக மந்திரிகள் மீது நம்பிக்கை இல்லை போலும் –
அதனால் தான் தொடர்ந்து லோக்பால் அமைப்பதை தவிர்க்கிறார்…
என்கிற ஒரு எண்ணமே எழுகிறது….

அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தபோதும் இதே போன்று தான்
கடைசி வரை குஜராத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதை
தவிர்த்து வந்தார்….

லோக்பால் அமைப்பதை இனியும் தவிர்த்தால், தாமதித்தால் – அதனால்
மோடிஜி அரசின் மீதான நம்பிக்கை மக்களுக்கு வெகுவாகவே குறையும்
என்பதை மத்திய அரசு உணர வேண்டும்….
விரைவில் லோக்பால் அமைப்பை உருவாக்க வேண்டும்…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to பாஜக அரசு லோக்பால் விவகாரத்தில் பயப்படுவது ஏன்…?

 1. இளங்கோ சொல்கிறார்:

  தன்னைப்பற்றி, தன் அமைச்சர்களைப்பற்றி
  குற்றம் சாட்டுவது, லோக்பால் வந்தால் சுலபமாகி விடும்
  என்பது தான் அவர் பயம்.
  மோடிஜி குஜராத் முதலமைச்சராக இருந்த வரையில்,
  கவர்னருடன் மோதல் என்கிற பின்னணியை காட்டி,
  லோக் ஆயுக்தா அமைக்காலமே முழு காலத்தையும் ஓட்டி விட்டார்.
  இங்கேயும் நீங்கள் சொன்னது போல் சில மத்திய அமைச்சர்கள்
  ஆடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் சாமர்த்தியமாக ஆடுகிறார்கள்.
  வெளியே வர கொஞ்சம் காலம் பிடிக்கும். இப்போதெல்லாம் எல்லாரும்
  மிகவும் உஷாராகி விட்டார்கள். மாட்டிக்கொள்ளாமல் தப்பு செய்ய
  கற்றுக்கொண்டு விட்டார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.