நமது கருத்தை தமிழ்.இந்து தலையங்கமும் வலியுறுத்துகிறது ….!!!

ஏப்ரல் 28-ந்தேதி, சுப்ரீம் கோர்ட் உத்திரவு வந்தவுடன் விமரிசனம் வலைத்தளத்தில் –
” பாஜக அரசு லோக்பால் விவகாரத்தில் பயப்படுவது ஏன்..? ”
என்கிற தலைப்பில் நாம் ஒரு இடுகை பதிவிட்டிருந்தோம் ….


அப்போது மனதில் ஒரு வருத்தம் – மத்திய அரசின் போக்கை கடுமையாக கண்டிக்க வேண்டிய செய்தித்தளங்களும், எதிர்க்கட்சிகளும் தூங்கிக்கொண்டிருக்கின்றனவே என்று…

இன்று நமக்கு ஒரு ஓரளவு நிறைவு, மகிழ்ச்சி… காரணம்…

இன்றைய தினம் அதே கருத்தை வலியுறுத்தி தமிழ் இந்து நாளிதழ் தலையங்கம் வெளியிட்டிருக்கிறது….

இந்து தலையங்கம் கீழே –

—————————————–

ஊழலை ஒழிக்க மத்திய அரசு தயங்குவதேன்?

Published: May 4, 2017 09:09 IST
Updated: May 4, 2017 09:09 IST

ஊழலைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்காது என்றே தொடர்ந்து சொல்லப்பட்டுவருகிறது. ஆனால், ஊழலைத் தடுக்கும் அமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதை லோக்பால் தொடர்பாக
உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்திருக்கும் தீர்ப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஏற்கெனவே இருக்கும் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் (2013), மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் சட்டத்திருத்தங்கள் செய்யப்படாமலே தன்னளவில் முழுமையாக இயங்கத்தக்கது என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம்
தீர்ப்பளித்திருக்கிறது. லோக்பால் அமைப்பை உருவாக்குவதில் தாமதம் காட்டப்படுவதையும் நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.

‘தேர்வுக் குழுவை அமைப்பதற்கான சட்டத் திருத்தங்கள் பற்றிய நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கை பரிசீலனையில் உள்ளது’ எனும் மத்திய அரசின் விளக்கத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. லோக்பால் அமைப்புக்கான
தேர்வுக் குழுவானது பிரதமர், மக்களவையின் சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர் மற்றும் மேற்கண்ட அனை வராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மதிப்புவாய்ந்த
சட்டவியல் நிபுணர் ஆகியோரை உள்ளடக்கியது. தேர்வுக் குழுவில் ஓர் உறுப்பினரின் இடம் நிரப்பப்படாமல் இருந்தாலும்கூட, அக்குழுவுக்கு லோக்பால் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தைச் சட்டம் வழங்குகிறது. இதை உச்ச நீதிமன்றம்
சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராக யாரும் அங்கீகரிக்கப்படாதபோது, எதிர்க்கட்சிகளில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரை எதிர்க்கட்சித் தலைவராகக் கொள்ளும்வகையில் தலைமைத் தகவல் ஆணையர், மத்தியப் புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான சட்டப் பிரிவுகள் திருத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், லோக்பால் விஷயத்தில் மட்டும் இந்த எளிமையான சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதில் ஏன் இத்தனை தாமதம் என்று புரியவில்லை.

மக்களவையின் காங்கிரஸ் கட்சித் தலைவரை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிப்பதுதான் இதற்கு ஒரே தீர்வு. மக்களவையின் 10% இடங்களைப் பெற முடிந்த கட்சிக்கு மட்டுமே எதிர்க்கட்சி தலைவர் என்ற அங்கீகாரத்தை
அளிக்க முடியும் என்று ஜி.வி.மவ்லேங்கர் மக்களவை சபாநாயகராக இருந்தபோது உத்தரவிட்டதைத் தவிர, இது தொடர்பாக வேறு எந்தச் சட்டமும் இல்லை.

அதேசமயம், எதிர்க்கட்சித் தலைவர் என்பவர், எதிர்க்கட்சிகளில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் என்றும் எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகரால் அங்கீகரிக்கப்பட்டவர் என்றும் எதிர்க்கட்சித் தலைவரின் ஊதியத்தைப்
பற்றிய சட்டம் (1977) வரையறை செய்வது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றித்தொடர்ந்து பேசிவந்த பாஜக, ஆளுங் கட்சியான பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில்,
இவ்விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், ஊழல் ஒழிப்பு தொடர்பான பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழிகள் வெற்று வார்த்தைகள் என்றே கருதப்படும்!

—————————–

நமது இடுகையின் கடைசி பாரா சொல்லி இருப்பது –

” லோக்பால் அமைப்பதை இனியும் தவிர்த்தால், தாமதித்தால் – அதனால் மோடிஜி அரசின் மீதான நம்பிக்கை மக்களுக்கு வெகுவாகவே குறையும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்…. விரைவில் லோக்பால் அமைப்பை உருவாக்க வேண்டும்…”

 

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to நமது கருத்தை தமிழ்.இந்து தலையங்கமும் வலியுறுத்துகிறது ….!!!

 1. தமிழன் சொல்கிறார்:

  காங்கிரஸ் கொண்டுவந்த RTI யினால் நிறைய உபயோகம். நிறைய ஊழல்கள் நடப்பதை அது வெளிச்சமிடும். அதேபோல் லோக்பாலினால் ஜனனாயகத்துக்குத்தான் நல்லது. RTI போல், இதனையும் சிலர் மிஸ் யூஸ் செய்யலாம், ஆனால் பொதுவாக CHECK & BALANCE இருக்கவேண்டும்.

  ‘எதிர்க்கட்சித் தலைவர்’ என்பதைப் பொறுத்தமட்டில், பாஜக செய்வதைக் குற்றம்சொல்ல இயலவில்லை. காங்கிரஸ் எத்தனை எத்தனை அட்டூழியங்கள் செய்தது. எத்தனை அனியாயமாக நடந்துகொண்டது. எல்லா விஷயங்களிலும் அரசியல் செய்தது. திமுகவின் பேச்சைக் கேட்டு, தமிழ் நாட்டுக்கு, அதிமுக ஆட்சியின்போது எத்தனை கெடுதல்களைச் செய்தது (மின்சாரம் தராதது, கேபிள் கனெக்ஷனுக்கு அலைவரிசை ஒதுக்காதது போன்று). இப்போது மக்களால் விரட்டியடிக்கப்பட்ட சூழலில், அவர்களுக்கு எதற்கு ‘எதிர்க்கட்சித் தலைவர்’ பதவி? காங்கிரஸ் இன்னமும் 6 வருடங்களுக்கு அவமானப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் செய்த அராஜகத்திற்குத் தகுந்த தண்டனையாக இருக்கும்.

 2. சிவம் சொல்கிறார்:

  Sorry தமிழன். இந்த தண்டனை காங்கிரசுக்கு அல்ல – மக்களுக்கு தான்.
  அதாவது உங்களுக்கும் எனக்கும் தான். காங்கிரசுக்கு ஒரு அவமானமும் இல்லை.
  அதெல்லாம் மான ரோஷம் உள்ளவர்களுக்கு தான். இந்த விஷயத்தில் அது
  துடைத்து போட்டுவிட்டு போய்க்கொண்டே இருக்கும்.

  • தமிழன் சொல்கிறார்:

   அப்படியல்ல சிவம். மத்திய அரசில் காங்கிரஸ் இருந்ததால், சோனியா, ராகுல், பிரியங்கா/வதேரா போன்றவர்கள் எவ்வளவு செல்வாக்குடன் இருந்தார்கள். இந்திய இறையாண்மைக்கு எதிராக குவத்ரோட்சி தப்பிக்க எப்படி வழி செய்தார்கள். சம்பந்தமே இல்லாத ராபர்ட் வதேராவுக்கு ஏர்போர்ட்டில் எந்த செக்கிங்கும் கிடையாது. அப்படி ஆடியவர்கள்…. இன்றைக்கு, காங்கிரஸில் சிறியவர்களும் அவர்களை மதிக்காமல், கட்சி மாறும்போது அது அவமானமா இல்லையா? ராகுலை கட்சியின் தலைவராக யாரும் மதிப்பதுபோல் தெரியவில்லை. இந்த நிலைமை இன்னும் 6 ஆண்டுகள் இருந்தால், காங்கிரசின், பணம் பண்ணும் வழிகள் அனைத்தும் அடைபட்டுவிடும். ‘அதிகாரம்’ போகும்போது அது ‘அவமானத்தை’ விட்டுச்செல்லும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.