பாஜக ஆட்சி – தீவிரமாக யோசிக்கப்பட வேண்டிய சில கருத்துகள் …

இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழ் ஹிந்து செய்தி தளத்தில் – ” மோடிக்கு தேசியவாதக் களம் அமைத்துக் கொடுத்தது யார் ..? ” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. சமஸ் எழுதி இருக்கிறார்….

அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் தீவிரமாக யோசிக்கப்பட வேண்டியவை, விவாதிக்கப்பட வேண்டியவை என்று நான் கருதுகிறேன். எனக்கும் இது குறித்து சொல்ல சில செய்திகள் இருக்கின்றன.

முதலில் சமஸ் அவர்களின் கட்டுரையை (கீழே தந்திருக்கிறேன்) படியுங்கள்.

இது குறித்து நண்பர்களின் கருத்துக்களை வரவேற்கிறேன். அதன் பின்னர் நான் சொல்ல நினைப்பதையும் சொல்கிறேன்….

—————————–

மோடிக்கு தேசியவாதக் களம் அமைத்துக் கொடுத்தது யார்?
Published: May 8, 2017 09:21 IST

– சமஸ்

——


கொல்கத்தா சென்றிருந்த சமயத்தில்தான் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ‘ஞான சங்க’ மாநாடு அங்கு நடந்திருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், அவர்களில் 51 பேர் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பங்கேற்ற நிகழ்வு இது. இந்தியாவின் கல்வி, கலாச்சாரத் துறையை, முக்கியமாக வரலாற்றை மாற்றியமைப்பது இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம்.

‘’இதுவரை வேட்டைக்காரர்கள் பார்வையிலிருந்து கூறுவதாக இந்திய வரலாறு இருந்தது; இனி அது சிங்கம் சொல்லும் வரலாறாக மாற்றப்படும்’’ என்று பேட்டி அளித்திருந்தார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்.

இனி யாரெல்லாம் தேசத்தின் நாயகர்களாகவும் வில்லன்களாகவும் மாற்றப்படுவார்கள் என்றும் இந்தியாவின் தேசியவாதம் எப்படிப்பட்டதாக வடிவமைக்கப்படும் என்றும் மனதில் ஓட ஆரம்பித்தபோது எதிர்காலம் அச்சமூட்டுவதாக மாறத் தொடங்கியது.

தேசியவாதத்தை ஒரு கூர் ஈட்டியாக சர்வாதிகாரிகள் பயன்படுத்துவது உலகெங்கிலும் இயல்பு. இங்கே சங்கப் பரிவாரமும் மோடியும் அதைக் கையில் எடுத்திருப்பதில் ஆச்சரியமில்லை. வளர்ச்சியையும் மதத்தையும் ஒரு பிரகடனம்போலப்
பயன்படுத்தினாலும் மோடி தன் கூர் ஈட்டியாக தேசியவாதத்தையே பயன்படுத்துகிறார்.

தன்னை நோக்கி வரும் எல்லாப் பெரிய விமர்சனங்களையும் அவர் தேசியவாதத்தின் மூலமே எதிர்கொள்கிறார்.

வரலாற்று நடவடிக்கையான பணமதிப்பு நீக்கம் மக்களைக் கடுமையான வதைக்குள் தள்ளியது. இரண்டு மாதங்களுக்கும் மேல் அன்றாடம் ரூ.2,000 தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து எடுப்பதற்காக வங்கி ஏடிஎம்களின் முன் கால் கடுக்க நின்றார்கள்
மக்கள். இந்நடவடிக்கையின் மூலம் அரசு சாதித்தது என்னவென்று இன்று வரை நாட்டுக்குத் தெரியாது. ஆனால், தன்னுடைய நடவடிக்கை நாட்டுக்கு நல்லது என்று மக்களை மோடியால் நம்ப வைக்க முடிகிறது.

ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்தும்,
‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’
கனவைக் கொண்ட மோடி அரசு தன்னுடைய செயல்திட்டத்துக்கு முன்னோட்டம்போல,

‘ஒரே நாடு.. ஒரே வரி’,
‘ஒரே நாடு.. ஒரே சந்தை’,
‘ஒரே நாடு.. ஒரே தேர்வு’,
‘ஒரே நாடு.. ஒரே தேர்தல்’

-என்று இந்த அரசு அடுத்தடுத்து அடியெடுத்துவைக்கும் செயல்திட்டங்கள் ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் எவரையும் நடுங்கவைக்கின்றன. ஏனென்றால், கூட்டாட்சித் தத்துவப்படி அமைக்கப்பட்ட இந்த நாடு அடிப்படையிலேயே அதன்
பல்வேறு வண்ணங்கள், அடையாளங்களாலேயே தனித்துவம் பெறுகிறது.

ஆனால், பொதுத் தளத்திலோ பெரிய தாக்கங்களை இவை ஏற்படுத்தவில்லை. எதிர்க்கட்சிகள் கவலையோடு பேசினாலும்கூட சமூகம் அப்படியே கடக்கிறது. எதிர்க்கட்சிகள் இன்னும் கொஞ்சம் அழுத்திப் பேசினால், விமர்சிப்பவர்களை ‘தேச
விரோதிகள்’ ஆக்கிவிடுகிறார்கள். ஆனால், இன்று மோடி ஆடுவதற்கேற்ப இந்தியாவின் தேசியவாதக் களத்தை அமைத்துக் கொடுத்ததற்காக, காங்கிரஸும் இடதுசாரிகளுமே முக்கியமான பொறுப்பேற்க வேண்டும் என்று கருதுகிறேன்.

தேசியவாதம் எனும் கருத்தாக்கம் இந்தியாவுக்குப் புதிது. இந்தியாவைப் பொறுத்தவரையில் – அதன் இன்றைய வடிவில் அது ஒரு தேசமாக இருந்ததே இல்லை. இங்குள்ள மக்கள் ஒரே இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ எந்த வகையிலும் ஒரு வகைமைக்குள் கொண்டுவரப்பட முடியாதவர்கள். இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பல அடையாளங்கள் இருக்கின்றன.

ஒருவர் இங்கே பிராந்தியம், தான் சார்ந்திருக்கும் மாநிலம் சார்ந்து ஒரு தருணத்தில் அடையாளப்படுத்தப்படுகிறார்.
மதம் சார்ந்து ஒரு தருணத்தில் அடையாளப்படுத்தப்படுகிறார். மொழி சார்ந்து ஒரு தருணத்தில் அடையாளப்படுத்தப்படுகிறார். இன்னும் இனம் சார்ந்து, சாதி சார்ந்து என்று பல வகைமைகளில் மக்கள் இப்படி தனித்தனி அடையாளத்தையும் ஒருமித்த உணர்வையும் வெவ்வேறு தருணங்களில் அடைகிறார்கள். இப்படிப்பட்ட மக்கள்
பொதுவான ஒரு தருணத்தில் அடையாளமற்ற மனநிலையில் இருக்க, இங்கிருக்கும் பன்மைத்துவச் சூழலும், அவர்களுக்கான சம உரிமையுமே காரணமாக இருக்கின்றன.

ஆக, சம உரிமை அளிக்கும் ஒன்றியமாகவே இந்தியா எனும் தேசம் உருப்பெருகிறது. அதன் மீதே இன்றைய தேசியமும் தேசியவாதமும் கட்டமைக்கப்பட்டிருகின்றன.

ஆனால், சுதந்திரத்துக்குப் பின், ஆழ ஊன்றி வளர்க்கப்பட்ட நம்முடைய தேசியமானது, அதன் உள்ளடக்கத்தில் எந்தத் தன்மையை மேலோங்கிப் பெற்றிருக்கிறது? கூட்டாட்சித் தத்துவப்படி அமைக்கப்பட்ட பல இனங்களின் ஒன்றியம் இந்த நாடு என்ற உணர்வையா நடைமுறையிலிருக்கும் நம்முடைய தேசியமும் தேசியவாதமும் இன்று பிரதிபலிக்கின்றன? கிடையவே கிடையாது!

பிரிட்டிஷாரால் கொண்டுவரப்பட்ட, மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை முன்னிறுத்தும் எந்த அரசியலமைப்புச் சட்டத்தை முன்னதாக எதிர்த்தார்களோ, அதே அரசியலமைப்புச் சட்டத் தன்மையைப் பெருமளவில் உள்வாங்கிக்கொண்டதாக இந்நாட்டின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் முடிவுக்கு காங்கிரஸார் வந்தபோதே இந்நாட்டின் உண்மையான பன்மைத்துவம் பல்வேறு இனங்களின், மாநிலங்களின் உரிமைகள் – பின்னுக்குப் போய்விட்டது. நேருவில் தொடங்கி அம்பேத்கர் வரை எல்லோருமே மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தையே விரும்பினர்.

ஒரே ஒரு மனிதர், அதை ஏமாற்றத்துடன் பார்த்தார்.
அபாயத்தைச் சுட்டிக்காட்டினார்.

“காங்கிரஸாரிடமும்கூட சுதந்திரம் குறித்த உட்பொருளில் ஒருமித்த கருத்து இல்லை… அதிகாரப்பரவலாக்கலில் எத்தனைப் பேர் உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளனர் என்று தெரியவில்லை. இதற்கு மாறாக, இந்தியாவை முதல் தரமான
ராணுவ சக்தியாகவும் வலிமையான மைய அரசாகவும் அதை ஒட்டியதாகவே மொத்த அமைப்பையும் உருவாக்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள் என்று எனக்குத் தெரியும்” என்றார் காந்தி.

இந்தியாவில் மாநிலங்களின் சுயாட்சி என்பது வெறுமனே பிராந்திய அடிப்படையிலான பிரநிதித்துவம் மட்டும் அல்ல. மாறாக, பல்வேறு இனங்களின் மொழி, கலாச்சாரம், வரலாற்று உரிமைகளோடு தொடர்புடையது அது. மேலும், உண்மையான அதிகாரப் பரவாக்கலும் பலதரப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவ உரிமையும் அங்கிருந்தே
தொடங்குகின்றன.

சுதந்திரத்துக்குப் பிந்தைய கடந்த 70 ஆண்டுகளில் 49 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த காங்கிரஸ், ஏற்கெனவே அரசியலமைப்புச் சட்டம் கொடுத்திருந்த அதிகாரங்களையும் மாநிலங்களிடமிருந்து படிப்படியாகப் பறித்து, மேலும் மேலும் அதிகாரத்தை மையத்தில் குவிப்பதிலேயே குறியாக இருந்தது; பாஜக தன் பங்குக்குப் பறித்தது, பறித்துக்கொண்டிருக்கிறது. ஆக, இந்நாட்டின் ஆன்மாவான ‘இது பல இனங்களின் ஒன்றியம்’ எனும் உண்மை நம்முடைய தேசியத்தில் திரையிடப்பட்டது.

இந்தியா அடிப்படையில் ஒரு தேசமா, பல இனங்களின் ஒன்றியமா; இந்த இரண்டில் எதைப் பிரதானமாக மக்கள் மனதில் நிலைநிறுத்துவதாக நம்முடைய தேசியம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது எனும் நுட்பமான ஒரு விஷயத்தில் அடங்கிவிடுகிறது
இன்றைய தேசியத்தின் அரசியல்.

இன்று எத்தனை மாணவர்களுக்கு இங்குள்ள பல்வேறு இனங்களின் வரலாறு, அவற்றின் மொழி- கலாச்சாரச் செழுமைகள், உரிமைகள் தெரியும்? பெரும்பான்மைக் காலம் ஆட்சியிலிருந்த காங்கிரஸுக்கும் நாடு முழுவதும் கல்வி, ஆய்வு, கலாச்சாரத்
துறையில் செல்வாக்கு செலுத்திய கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இதில் பங்கிருக்கிறதா இல்லையா?

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எதிர்மறையாக நடந்துகொள்ள அதன் அதிகார வேட்கையும், கட்சிக்குள் மேலோங்கியிருந்த இந்தி தேசியவாதிகளும் முக்கியமான காரணம் என்றால், கம்யூனிஸ்ட்டுகளிடமோ எப்போதுமே இதுகுறித்து ஒரு தயக்கம்
இருந்துவருகிறது. மாநிலங்களின் உரிமைகள் தொடர்பாக வெளியே உரக்கப் பேசுபவர்கள் அதுவே இனங்களின் உரிமைக் குரல்களாக மாறும்போது, மௌனமாகிவிடுவதை ஒரு வரலாறாகவே அவர்கள் வைத்திருக்கிறார்கள்.

சோவியத் ஒன்றியத்தின் பார்வையோடு இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகளின் பார்வையை இந்த இடத்தில் ஒப்பிடலாம். தமிழ்நாட்டையே எடுத்துக்கொண்டால், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தொடங்கி, ஜல்லிக்கட்டுப் போராட்டம் வரையில் தொடரும் தயக்கத்துக்கு ஒரு வரலாற்று நீட்சி இருக்கிறது அல்லவா?

இந்த மனநிலையே நம் கல்வித் துறையிலும் எதிரொலித்தது.
இன்று நாம் எதிர்கொள்ளும் மேலோட்டமான, ஆழமான அரசியலுணர்வற்ற இளைய தலைமுறையின் உருவாக்கத்தில் இதற்கும் ஒரு பங்கிருக்கிறது. நாம் வளர்த்தெடுக்கும் தேசியம் ஒரு சர்வாதிகாரியின் கைகளில் போனால் என்னவாகும் என்ற பிரக்ஞையோடு இந்த விஷயம் அணுகப்பட்டதாகவே தெரியவில்லை.

ஆக, யார் பன்மைத்துவத்தை உள்ளடக்கமாகக் கொண்டதாக இந்த தேசியம் உருவாகக் காரணமாக இருந்திருக்க வேண்டுமோ, அவர்கள் அந்த இடத்தில் தவறிவிட்டார்கள்.

விளைவாக, இன்றைய தேசியவாதமும் அரசியலற்றதன்மையோடு வெற்று முழக்கமாகவே எஞ்சி நிற்கிறது. அரசியலற்றதன்மை இயல்பாக வலதுசாரித்தன்மையோடு சேர்ந்துகொள்கிறது.

தேசியவாதம் ஆபத்தானது என்றால், உள்ளீடற்ற தேசியவாதம் அதைக் காட்டிலும் ஆபத்தானது. ஒரு சாமானிய இளைஞரிடத்தில் தேசியத்தின் பெயரால் முன்வைக்கப்படும் ஒற்றைக் கலாச்சாரத்தை எதிர்த்து யாரேனும் கேள்வி எழுப்பினால்,

அந்த இளைஞர் ஏன் தொந்தரவுக்குள்ளாகிறார் அல்லது இன்றைய மோடி அரசாங்கத்தின் ‘தேச பக்த’ படையின் ஒரு அங்கமாகி, தேச விரோத முத்திரை குத்தும் ஆளாக மாறுகிறார் என்றால், அதற்கான காரணம் அரசியலற்றதன்மையைக்
கொண்ட இன்றைய தேசியத்தின் ஒற்றைத்தன்மை உருவாக்கத்தில் இருக்கிறது!

இன்றைக்கு யாரெல்லாம் ஒற்றைத்தன்மையை எதிர்க்கும் இடத்தில் நிற்கிறார்களோ அவர்கள் எல்லாம் முதலில் தேசியம் தொடர்பிலான தங்கள் பார்வையை முதலில் பன்மைத்துவமிக்கதாக உருமாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால்,

உள்ளீடற்ற பன்மைத்துவ வாளால், தேசியவாதக் கூர் ஈட்டியை எதிர்கொள்ள முடியாது!

——————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to பாஜக ஆட்சி – தீவிரமாக யோசிக்கப்பட வேண்டிய சில கருத்துகள் …

 1. Sundar Raman சொல்கிறார்:

  மோடி வருவதற்கு முன் 100 அல்லது 150 பேரோ , பெரிய விளம்பரம் மூலம் நாங்கள் மோடியை ஆதரிக்க மாட்டோம் என்றார்கள் , பின் ஒரு 100 பேர் ( அதில் நிறய MP ) , அமெரிக்காவுக்கு கடிதம் எழுதி மோடிக்கு விசா கொடுக்க கூடாது என்றார்கள் . மோடி வந்தவுடன் ரணகளம் தான் , என்றார்கள் ( காஷ்மீரில் கல்லெறி கும்பலால் நம் வீரர்கள் தான் ரணமானார்கள் , பிணமானார்கள்). எந்த சிறு பான்மையினர் , எங்கு கஷ்டப்படுகிறார்கள் . எப்போதும் இல்லாமல் இப்போது தொப்பியும், மீசை இல்லா தாடியும் , புர்க்காவும் நிறைய தென் படுகிறது. அது அவர்கள் விருப்பம் , அவர்களுக்கான அடையாளத்தை தீவிரமாக பின்பற்றுகிறார்கள் , அதில் தவறும் இல்லை.

  தீபாவளிக்கு வெடி கூடாது , ஹோலிக்கு தண்ணீர் கூடாது , பொங்கலுக்கு மாடு பிடி கூடாது , இன்னும் என்னவெல்லாம் சொன்னார்கள் . வன் கொடுமை செய்த பாதிரியார்கள் யாரவது கம்பி எண்ணுகிறார்களா , எனக்கு தெரியவில்லை . ஆனால் அங்கிருந்து வந்த கன்னிகாஸ்திரீகள் சொன்னது யாருக்கும் தெரியவில்லை. இதெல்லாம் சும்மா சார் , குஜராத் இல் இருந்து எத்தனை ராணுவ வீரர்கள் இறந்தார்கள் என்று கேட்பது போல ? அதை நீங்களும் – ஆமாம் அதில் உண்மை இருக்கிறது என்று சொல்கிறீர்கள் . ( இங்கு சில வார்த்தைகளை நான் நாகரிகம் கருதி நீக்கி இருக்கிறேன்…. கா.மை..)

  நிச்சயமாக மோடி ஊழல் செய்தவர்களை தண்டிக்க வேண்டும் , மோடி மௌனமாய் இருந்தால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் . என்ன தான் ரோடு , வீடு , மின்சாரம் , முத்ரா கடன் , கழிப்பறை , போன்ற சௌகரியங்கள் செய்தாலும் , தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் ( மாறன், ஜெகன் ரெட்டி , பவார், பி.சிதம்பரம் , கார்த்தி ), ஆனால் அதற்க்கு கோர்ட்டின் உதவியும் வேண்டும் , டிவி , பத்திரிக்கை போன்றவர்களின் உதவியும் வேண்டும், அவர்கள் வில்லனாக சித்தரிக்க படவேண்டும் , புத்திசாலியாக அல்ல , துளி கூட தயை வேண்டாம். அ தி மு க அமைர்ச்சர்களை மட்டும் ரைடு செய்தால் போதாது . சசிகலா சொத்தை ஜப்தி செய்ய வேண்டும் .

 2. புதியவன் சொல்கிறார்:

  சமஸ் கட்டுரையையும் அவருடைய சிந்தனைகளையும் அவர் தளத்தில் படித்தே வந்திருக்கிறேன்.

  எது இந்தியாவுக்கு நல்லது என்று அவர் கருதுகிறாரோ அது தமிழ்நாட்டுக்கு நல்லதா இல்லையா? அது தஞ்சை, நெல்லைக்கு நல்லதா இல்லையா? தமிழ்நாட்டில், சாதியின் பெயரால் பன்முகத் தன்மையை ஒடுக்கியது யார்? இன்றைக்கும் இட ஒதுக்கீடு என்ற பெயரில் சிலர் மட்டும் (அதுவும் அந்த அந்த சாதியில் பணக்காரர்கள் மட்டும்) முன்னுரிமை பெறுவது மட்டும் ஏற்புடையதா? தமிழ் நாட்டில், ‘பிற்படுத்தப்பட்டவர்கள்’ என்றெல்லாம் அரசியல் கோஷம் எழுப்பி மற்றவர்களை நசுக்கலாம்.. ஒரு பிரிவினர் கடைபிடிக்கும் வழக்கங்களையும் எள்ளி நகையாடலாம், நசுக்கலாம். (உதாரணமாக, தெலுங்கர், பளியர், பிராமணர் போன்றோர்) ஆனால் ‘தேசியவாதம்’ என்று சொல்லும்போது மட்டும் இவர்களுக்குப் பிரச்சனைவந்துவிடும். உடனே, ‘பன்முகத் தன்மை.. அது இது என்று பேச வந்துவிடுவார்கள்’.

  சமஸுக்கு மோடி காய்ச்சல். இவர்களெல்லாம், சமூகத்தின் முற்படுத்தப்பட்ட சாதிகள் ஒடுக்கப்பட்டபோது எங்கிருந்தார்கள்? இன்றைக்கு வேதம் ஓதும் சமஸ் போன்றவர்கள் அடித்தளத்தில் இருக்கின்ற சாதியில் பிறந்ததனாலேயே அவர்கள் எல்லா முன்னுரிமையும் பெறக்கூடிய (எங்கிருந்து? மொத்த வருமானத்திலிருந்து) உரிமை இருக்கிறது என்று கருதுபவர்கள், முற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்ததனாலேயே, ஏழைகளாக இருந்தாலும் அவர்களுக்கு உரிமை இல்லை என்று கருதுகிறவர்கள், பழையகாலத்தில் கீழ்த்தள (வேறு யாரும் ஒடுக்கப்படவில்லை. தலித் சகோதரர்களைத் தவிர) மக்கள், அந்தச் சாதியில் பிறந்ததனாலேயே ஒடுக்கப்பட்டனர் என்று அவர்களுக்கு அ’நீதி வந்துவிட்டதாகக் கூவுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? அப்படிப் பேசும் சமஸ் வகையறாக்கள் வேஷதாரிகள்தான். சாதியில், இரண்டே பிரிவுதான் உண்டு. ஒன்று ஒடுக்கப்பட்ட தலித், மற்ற எல்லோரும் தலித்தை ஒடுக்கியவர்கள்.

  இந்தியாவின் 1940ல் இருந்த பன்முகத் தன்மைக்கும் தற்போதைய பன்முகத் தன்மைக்கும் வித்தியாசம் உண்டு. அவரே ஒரு இடுகையில் எழுதியுள்ளதுபோல, இப்போது தவ்ஹீத் ஜமாத் கொண்டுவருகின்ற (அவருடைய வார்த்தைகளில், வஹாபிகள்) அரபி கலாச்சாரம், அரபி வாழ்க்கைமுறை என்று வெளி நாட்டு கலாச்சாரம் பரவும்போது, உள் நாட்டில் பாரம்பரியமாக இருக்கிற இந்துக் கலாச்சாரத்தை மோடியோ பாஜகவோ தூக்கிப்பிடிக்கிறது. காங்கிரஸ் பன்முகத் தன்மையை வளர்க்காமல், சிறுபான்மையினருக்கு அவர்களின் வாக்குக்காக கூஜா தூக்கியதால், இன்றைக்கு மோடியோ பாஜகவோ செய்யும்போது, அது நியாயமாகவே படுகிறது.

  மோடி, இந்தியை இந்தியாவின் ஆட்சிமொழியாக (ஒரே) கொண்டுவர முயல்கிறார். அதாவது, இந்தியா என்ற தேசத்தின் அடையாளமாக இதுபோன்று நிறையச் செய்ய முனைகிறார். அப்படிச் செய்வதற்கு ‘இந்து’ என்ற கலாச்சாரத்தை முன்மொழிகிறார். ஆனால் மொழியைத் திணிக்க முயல்வது சரியல்ல. சிறுபான்மையினரிடம், கடவுள் என்ற பெயரால் கலாச்சாரத்தை மாற்றுவது இப்போது அவர்களால் (சிறுபான்மையினரால்) ஏற்றுக்கொள்ளப்படலாம் (இன்னும் கொஞ்ச வருடங்களில் அரபிதான் அவர்கள் மொழி என்றும் ஆகிவிடும்). ஆனால் இந்துக்களிடையே, அதுவும் பல்வேறு மொழிகளால் பிணைக்கப்பட்ட மக்களிடையே மொழித் திணிப்பு ஏற்றுக்கொள்ளப்படாது. ஆனால், அனைவருக்கும் ஹிந்தி கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும் (அதாவது 2வது மொழி, அதற்கு அப்புறம்தான் ஆங்கிலம்) என்பதில் எனக்கும் ஏற்பு உண்டு.

  “ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் எவரையும் நடுங்கவைக்கின்றன” – இது கொஞ்சம்கூட ஏற்றுக்கொள்ளமுடியாத கருத்து. சமஸ் என்ன நினைக்கிறார் என்றால், அந்த அந்தப் பிராந்தியத்தில் பெரும்பான்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ன அட்டூழியம் செய்தாலும் யாரும் கண்டுகொள்ளக்கூடாது. இந்தியா ஒரே நாடாக, எல்லோருக்கும் ஒரே சட்டமாக, எல்லோருக்கும் ஒரே மதிப்பாக இருந்துவிடக்கூடாது. இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. மொழியின் பெயரால் ஆட்சிக்கு வந்த கருணானிதி கும்பல் செய்த அட்டூழியங்களைவிடவா சங்கப்பரிவார் செய்துவிடப்போகிறது?

 3. ravikumar சொல்கிறார்:

  Mr.Pudhiyavan reply is acceptable and valid too

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.