மோடிஜி – பாஜக வின் – “சப் கா சாத் – சப் கா விகாஸ்”

நேற்றைய இடுகையின் தொடர் சிந்தனையாக இதனை வைத்துக் கொள்ளலாம். சமஸ் அவர்களின் கட்டுரையில் கொள்ளத் தக்கதும் இருக்கின்றன – தள்ளத் தக்கதும் இருக்கின்றன… அதன் மீதான பின்னூட்டங்களும் அவ்வாறே.

மோடிஜி, பிரதமராக பொறுப்பேற்று கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகின்றன…

பாஜக வை பற்றிய பார்வை இப்போதெல்லாம் இரண்டு வகைப்படுகிறது… மோடிஜி பிரதமர் ஆவதற்கு முன் – மோடிஜி பிரதமர் ஆன பின் … என்று.

மோடிஜி பிரதமர் ஆன பிறகு, மோடிஜி தான் பாஜக என்றாகி விட்டது. எனவே, ஆட்சி, கட்சி – இரண்டிற்குமே அவர் தான் முழு பொறுப்பும்.

———————

நான் மோடிஜிக்கோ, பாஜக விற்கோ – விரோதமானவன் அல்ல. அதே போல், ஆதரவாளனும் அல்ல.
மோடிஜியையும், பாஜக வையும் எதிர்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது என் கொள்கையும் அல்ல.

மோடிஜியின் சில positive குணங்களை கண்டு நான் பிரமிக்கிறேன். அவரது நாட்டுப்பற்று, தலைமைப்பண்பு,
( இந்தி தெரிந்த…….) மக்களைக்கவரும் பேச்சுத்திறன், தன்னம்பிக்கை, விடாமுயற்சி ….என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
அவர் தனக்காக லஞ்சம் வாங்குவார் என்று கனவிலும் நான் நினைக்க மாட்டேன்.
( கட்சிக்காக party fund பெற எடுக்கப்படும் முயற்சிகள்……தனி…! )

ஆனால், அதற்காக அவரது negative தரப்பை என்னால் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. கட்சிக்காரர்களால் அல்லது அபிமானிகளால் இதனைச் செய்ய முடியாது – செய்பவர்களை அவர்களால் பொறுத்துக் கொள்ளவும் முடிவதில்லை…!

தன் கூட இருக்கும் சகாக்களை கட்டுப்படுத்தும் திறனோ, நம்பிக்கையோ, ஆர்வமோ அவருக்கு இல்லை என்றே தோன்றுகிறது…. அது ஒரு விதத்தில் அவரது சுயநலம் காரணமாகவும் இருக்கலாம். தன்னை கட்சியிலும், ஆட்சியிலும் நிரந்தரமாக நிலை நிறுத்திக் கொள்ள அவருக்கு சில உபாயங்கள் தேவைப்படுகின்றன… அதற்கு அவர்கள்
பயன்படுகிறார்கள். ( குறிப்பாக திருவாளர்கள் அருண் ஜெட்லி, கட்காரி, ராஜ்நாத் சிங் ஆகியோரை அவர் என்றும் விரோதித்துக் கொள்ள மாட்டார்….!!! )

“நா காவூங்கா – நா கானே தூங்கா” என்று சொல்லி விட்டு தான் பதவியேற்றார். (அதாவது நானும் சாப்பிட மாட்டேன் – மற்றவர்களையும் சாப்பிட விட மாட்டேன்)

ஆனால், இதில் முதல் பாதி மட்டுமே நம்பகமாக இருக்கிறது…. மத்திய அரசின் 3 முக்கிய துறைகளில், அரசல் புரசலாக பேச்சு வரத்துவங்கி விட்டது.

தன்னுடைய சகாக்களின் மீது மோடிஜிக்கே நம்பிக்கை இல்லை என்பதால் தானே, மோடிஜி விடாப்பிடியாக “லோக் பால்” சட்டத்தை தவிர்த்துக் கொண்டே இருக்கிறார்…??

ஆனால், இந்த காலத்தில், அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் உஷாராகி விட்டார்கள். மாட்டிக்கொள்ளக்கூடாது என்று மிக ஜாக்கிரதையாக செயல்படுகிறார்கள்…! எனவே, அவர்கள் செய்யும் தவறுகள் அவ்வளவு சுலபமாக வெளிவராது,
வெளிவந்தாலும் – நிரூபிக்க எந்த தடயத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள்….

சொந்த கட்சியின் சகாக்கள் மட்டுமல்ல, வெளியிலும் கூட – தவறு செய்யும் பலர், தீவிரமான நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டிய பலர், எந்தவித பயமும் இல்லாமல் சுற்றி வருகின்றனர். சிபிஐ, மற்ற புலனாய்வு நிறுவனங்கள் எல்லாம் – சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி, கட்டுக்குள் வைத்துக்கொள்ள மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

——————–

ஆட்சியில், அதிகாரத்தில் இருப்பவர்களை ஆதரிப்பதால் – பல ஆதாயங்கள் உண்டு… எதிர்ப்பதால், பல நஷ்டங்களும் உண்டு.

எனவே, பெரும்பாலான பத்திரிகைகளும், தொலைகாட்சி மீடியாக்களும், பாஜக ஆட்சியை எதிர்க்க துணிவதில்லை.
அரசின் குற்றம் குறைகளை, தட்டிக்கேட்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. நாட்டில் பிரதான எதிர்க்கட்சிகளோ, தன்னம்பிக்கை இழந்து, நிலைகுலைந்து முடங்கிப் போய் கிடக்கின்றன. எல்லாம் அவர்கள் முன்பு செய்த ஊழல்களின் விளைவு…

ஒரு ஜனநாயகத்தில், நேர்மையான எதிர்க்கட்சிகள் என்ன செய்யுமோ, என்ன செய்ய வேண்டுமோ – அதில் சிலவற்றைத்தான் நான் அவ்வப்போது செய்ய முயன்று கொண்டிருக்கிறேன்…

அற்பனாகிய நான் எழுதுவதால், எதுவும் நடந்து விடப்போவதில்லை என்பதை நான் நன்கு அறிவேன்….
இருந்தாலும் நம் மனசாட்சி சொல்கிற கடமையை செய்கிறோம் என்கிற திருப்தி எனக்கு…. எனவே, பின்னூட்டங்களில் எவ்வளவு தாக்குதல் வந்தாலும், என் பணியை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன்.

இதனால் நான் பெறப்போவதும் ஒன்றுமில்லை – இழக்கப்போவதும் ஒன்றுமில்லை…என் மனசாட்சிக்கு திருப்தியாக நான் நடந்து கொள்கிறேன் – அவ்வளவே…!!!

மோடிஜி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டதும் சொன்ன வார்த்தை தான் இந்த இடுகையின் தலைப்பு

“sabka saath sabka vikas ”

( இந்த நாட்டின் “தேசிய மொழி”யில் சொல்லப்பட்டிருப்பதால், பலருக்கு இதன் அர்த்தம் தெரியாமல் இருக்கலாம்… எனவே அர்த்தம் – ” எல்லாருடனும், எல்லா வளங்களும் ” )

‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்

‘ஒரே நாடு.. ஒரே வரி’,
‘ஒரே நாடு.. ஒரே சந்தை’,
‘ஒரே நாடு.. ஒரே தேர்வு’,
‘ஒரே நாடு.. ஒரே தேர்தல்’

என்பது அண்மைக்காலங்களில் ஆளும் கட்சியினரின் மந்திரமொழியாகி விட்டது என்பது உண்மையே.

இதில் எந்தெந்த வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் வித்தியாசம் இருக்கிறது.

வரி, சந்தை, தேர்வு, தேர்தல் – இவற்றை விட,

மொழியும், மதமும் – முன்னுரிமை பெறுகின்றன.

மோடிஜி ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ச்சியாக இந்தியை பிரதானப்படுத்தும் போக்கு மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

பல தடவை சொல்லப்பட்டதை நான் இங்கு மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தி இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி அல்ல. வெறும் 26 சதவீத மக்களின் மொழி மட்டுமே. அதனை மீதியுள்ள 74 சதவீத மக்களின் தலையில் சுமத்தும் பணியில் மோடிஜியின் அரசு அதி தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் மொழிப்போராட்டம் வந்து நாடு பற்றி எரிந்தபோது, நேருஜி வாக்குறுதி கொடுத்து, பின்னர் சட்டவடிவமும் பெற்றது –

“இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் மத்திய அரசின்
ஆட்சி மொழியாக தொடரும்…”

மோடிஜியும், பாஜகவும் இதை காற்றில் பறக்க விட்டுக்கொண்டிருக்கிறார்கள். எங்கும் இந்தி… எதிலும் இந்தி….
சொல்லி சொல்லி ஆங்கிலம் அடிக்கப்படுகிறது… இன்னும் கொஞ்ச நாட்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளில்
ஆங்கிலம் சுத்தமாக மறைந்து விடக்கூடும்….

ஒரு சின்ன உதாரணம் –
பாஜக நண்பர்களுக்கு ஒரு பரீக்ஷை என்று கூட வைத்துக் கொள்ளலாம். மோடிஜி அரசுக்கட்டிலில் அமர்ந்த பிறகு அறிமுகப்படுத்திய திட்டங்களில் சிலவற்றின் பெயர்களை கீழே தந்திருக்கிறேன்… நமக்கு ஏற்கெனவே பழக்கமாகி விட்ட
ஜன் தன் – போன்றவற்றை இதில் சேர்க்கவில்லை. இந்த அத்தனை திட்டப்பெயர்களுக்குமான அர்த்தத்தை
விளக்குபவர்களுக்கு என் சொத்தில் பாதியை தந்து விடுகிறேன் என்று கூட தைரியமாக சவால் விடலாம்….

எங்கே முயன்று பாருங்கள் பார்க்கலாம்…
இவற்றிற்கான அர்த்தம் என்ன….?

இவை அனைத்தும் மத்திய அரசின் – மோடிஜி உருவாக்கிய திட்டங்கள்…. இவற்றின் பெயர்களை எல்லாருக்கும் சுலபமாக புரியும்படி ஏன் வைக்கவில்லை…?

Saansad Adarsh Gram yojana
Awas Yojana
jeevan jyothi bhima yojana
Suraksha bhima yojana
Krishi sinchai yojana
kushal vikas yojana
Garib kalyan yojana
Sukanya Smriddhi yojana
Ebasta yojana
Unnat bharat abhiyaan
Dhanalakshmi yojana
pm surakshit matriva abhiyan
Vidyanjali yojana
Gram Uday se bharat uday abhiyan
Samajit adhikarrita shivir
Swayam Prabha
pm surakshit sadak yojana
Shala ashmitha yojana
pm gram parivahan yojana
Udey desk ka aam nagrik
Urja ganga
Saur sujala yojana
Ek bharat shreshtha bharat
pm yuva yojana
lucky grahak yojana
digidhan mela
pravasi kushal vikas yojana
pm rojgar protsahan yojana
varishta pension bhima yojana
nayi manjil yojana
————————————–

அடுத்தது மதம் …
“மதச்சார்பின்மை” என்கிற வார்த்தையை, அதன் பொருளை தொடர்ந்து பல ஆண்டுகளாக – காங்கிரஸ் கட்சியும், இதர சில கட்சிகளும் “இந்து மதத்திற்கு எதிராக ” என்கிற விதத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட்டதன் விளைவு –

இந்த நாட்டின் பெரும்பான்மையினராகிய இந்து மக்களுக்கு – பாஜக ஒன்று தான் தங்களுக்கு பாதுகாப்பானது என்கிற கருத்து உருவானது… கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றிக்கான காரணங்களில் ஒன்று.

காங்கிரஸ் கட்சியும், இதர சில கட்சிகளும் எப்படி “போலி மதச்சார்பின்மை”யை வளர்த்தனவோ –

அதே போல் இப்போது பாஜக ” நிஜ மத சார்பை ” கடைபிடிக்கிறது… மைனாரிடி மக்களிடையே அச்சத்தையும், பாதுகாப்பின்மையையும் உருவாக்கி, அதன் மூலம் மெஜாரிடி மக்களின் ஓட்டு வங்கியை பெறுவதை பாஜக ஒரு தந்திரமாகவும், மூலமந்திரமாகவும் மேற்கொண்டிருக்கிறது.

ஒரு சுதந்திர நாட்டில், ஜனநாயக நாட்டில் – இந்த அரசு நமக்கும் சொந்தமானது தான் என்கிற எண்ணம், பாதுகாப்பு உணர்வு
அனைத்து பிரிவினரிடையேயும் எப்போதும் இருப்பது அவசியம்…

அனைவரையும் அரவணைத்துக் கொண்டு போக வேண்டும் என்பது “சப் கா சாத்” என்கிற வார்த்தைகளில் இல்லை – நிஜ உணர்வில் இருக்கிறது…

இன்னும் சொல்ல வேண்டியவை நிறைய இருக்கின்றன… இடுகை நீண்டு விட்டது.

ஒரு முக்கியமான விஷயத்தை மட்டும் சொல்லி இப்போதைக்கு முடித்து விடுகிறேன்…

ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகி விட்டாலும், ஏகப்பட்ட திட்டங்களை அறிவித்தாலும் – நிஜ நிலவரம் என்ன…?

உருப்படியாக எவ்வளவு திட்டங்கள் நிறைவேறி இருக்கின்றன…? மக்கள் நடைமுறையில் எந்தெந்த பலன்களை பெற்றிருக்கிறார்கள்…?

திட்டங்கள் அறிவிப்போடு நிற்பதற்கு முக்கியமான காரணம் -?

மோடிஜி நாட்டின் வளர்ச்சியில், மக்களின் நலனில் – அக்கரை செலுத்துவதை விட, கட்சியின் வளர்ச்சியில், கட்சியின் நலனில் தான் அதிக அக்கரை செலுத்துகிறார். அசைக்க முடியாத, தொட முடியாத உயரத்தில் தன்னை கொண்டு போய்
நிலை நிறுத்திக் கொள்வதிலேயே அவர் கவனம் முழுவதும் இருக்கிறது.

நாட்டில் பாஜக பரவாத இடங்களில் எல்லாம், பாஜகவை வளர்க்கவும், ஆட்சியில் அமர்த்தவுமே முனைப்பு காட்டப்படுகிறது… மத்திய அரசும் பயன்படுத்தப்படுகிறது. பிரதமர் அநேகமாக எப்போதுமே election mode -ல் இருக்கிறார்.
வளர்ச்சிப்பணிகள், அவ்வப்போது பேசுவதற்கும், விளம்பரங்களுக்கும் மட்டுமே…!

அந்த காலத்தில், பேரரசர்கள் தங்கள் ஆட்சியை, ராஜ்ஜியத்தின் எல்லையை விஸ்தரிப்பதில் எப்படி ஆர்வம் கொண்டு செயல்படுவார்களோ அதே போல், இப்போது மோடிஜியும், பாஜகவும், தங்கள் எல்லையை, தங்கள் அதிகாரத்தை
நாடு முழுவதற்கும் விஸ்தரிக்க வேண்டும் என்கிற முயற்சியிலேயே தீவிரமாக ஈடுபட்டிருப்பதால் –

வளர்ச்சிப்பணிகளில் கவனம் செல்லவில்லை…
மக்கள் 3 வருடங்களில் என்ன நன்மை கிடைத்தது என்று கணக்கு பார்த்தால் – புதிதாக இன்னும் ஏழெட்டு மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வந்தது என்று மட்டுமே விடை கிடைக்கிறது…..

அடுத்த ஒரு மிகப்பெரிய அவலம் –

பாஜக ஆட்சியில் இல்லாத அல்லது பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லாத மாநிலங்களை சுத்தமாக அலட்சியம் செய்வது….
அவற்றிற்கு முடிந்த அளவிற்கு தொல்லை கொடுப்பது. அங்கு ஆளும் கட்சிகளை வளைப்பது…. அல்லது உடைத்து ஒரு பிரிவை தன் வசப்படுத்திக் கொள்வது….

மோடிஜி மீது அபிமானம் என்கிற பார்வையை விலக்கி ஒதுக்கி விட்டு – நான் மேலே கூறி இருப்பவற்றை திறந்த மனதோடு படிப்பவர்களுக்கு –

நான் சொல்வது அனைத்தும் ஏற்பில்லை என்றாலும் கூட, ஓரளவு உண்மை இருக்கிறது என்றாவது தோன்றும்.

– பேசுவோமே – பின்னூட்டங்களின் ஊடே –
———————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

36 Responses to மோடிஜி – பாஜக வின் – “சப் கா சாத் – சப் கா விகாஸ்”

 1. Ganpat சொல்கிறார்:

  மோடிக்கு சரியான மாற்று நபர் ஒருவர் கிடைக்கும் வரை மோடிதான் நமக்கு கதி.மேலும் இரு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு பெரிய தேர்தல் ஏதாவது ஒரு மாநில அளவில் நடை பெறும்,90% ஏதுமறியா எளிய ஏழை மக்கள் (read மக்குகள்) நிறைந்த ஒரு நாட்டில் வளர்ச்சி மிக மிக மிக மந்தமாகவே இருக்கும்.இம்மக்களை மாற்றுவதை விட ஏமாற்றுவது மிக எளிது என்பதால் தேர்தல் என்று ஒன்று இருக்கும்வரை எந்த கட்சி தலைவரும் இருத்தலுக்கே முக்கியத்துவம் அளிப்பர்/முலாயம்,சரத்பவார்,கருணா,லல்லு,வை மனதி நிறுத்தி மோடியை எடை போடுதல் நல்லது.

  • இளங்கோ சொல்கிறார்:

   கண்பத்ஜி,

   ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை என்கிறீர்கள்.
   அது இலுப்பைப் பூ தான் என்று ஒத்துக் கொண்டீர்களே அது போதும்.

   • Ganpat சொல்கிறார்:

    நமக்கு இருக்கும் வாக்காளர் அறிவிற்கும், அரசியல் சாசன அமைப்பிற்கும்,குற்றவியல் சட்டங்களுக்கும்,தேர்தல் விதிமுறைகளுக்கும்,இலுப்பைப்பூ கிடைத்தாலே அதிகம்.

  • சிவம் சொல்கிறார்:

   மாற்று நபர் இல்லையென்பதால்,
   இவர் செய்வது எல்லாம் சரியாகி விடுமா ?
   இந்தி திணிப்பை தொடர்ந்து கொண்டே இருப்பார்களா ?
   ஊழல்வாதிகளை (மாறன் பிரதர்ஸ், ப.சி.அண்ட் சன்)
   பாதுகாப்பது ஏன் ? ஆபத்துக்கு பயன்படுவார்கள் என்பதாலா ?
   எத்தனை காலம் தமிழ்நாட்டை எல்லா வகையிலும் ஏமாற்றூவார்கள் ?
   தமிழ்நாட்டின் எந்த கோரிக்கையையும் கவனிக்காமலே இருப்பது ஏன் ?
   பாஜக இங்கு ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்று தானே ?
   மக்கள் விருப்பத்தையும் மீறி தொடர்ந்து ஹைற்றஜன் வாயு
   எடுப்பதற்கு அனுமதி அளித்தது ஏன் ?
   யார் இவர்களை கேட்க முடியும் என்கிற ஆணவம் தானே ?

   • Ganpat சொல்கிறார்:

    இவர்கள் செய்வது தவறே! ஆனால் இதற்கு முன் இருந்தவர்கள் இதை விட மோசமாக நடந்து கொண்டனரே! நம் மாநிலத்தை பொறுத்தவரை நாம் மத்திய அரசின் வேலையை எளிதாக்குகிறோம்.திமுக அல்லது அதிமுக ஆகிய இருகட்சிகளை தவிர வேறுயாரையும் தேர்ந்தெடுப்பதே இல்லை.இந்த இரு கட்சியினரும் ஊழலுக்கு பேர் போனவர்கள்.மத்தியில் யார் ஆட்சியிலிருந்தாலும் அவர்களுக்கு காவடி தூக்க தயாராக இருப்பவர்கள்.எனவே தாங்களே நேரடியாக ஆள்வதை விட இந்த இரண்டு அடிமைகளில் ஒருவர் மூலம் மாநிலத்தை ஆள்வதை எந்த கட்சிதான் விரும்பாது?

    • Sanmath AK சொல்கிறார்:

     Hello Ganpat,

     Yes you are right – both dmk & admk are highly corrupted parties as I have friends who are office bearers in both the parties. This is the first time a dravidian party has been elected again to rule consecutive second year. (67 rule of dmk and its continuance was an cant be put as two consecutive terms).

     One small comparison – let us take the case of Madya Pradesh where Shivraj Singh Chouhan is in power for more than 10yrs and Gujarat where BJP is in power for a long time. Can you please list out the big changes or developments taken place there ??…… Let us compare Tamil Nadu and these states under following criteria — the quality of education(thinking ability & employability), boundaries of developmental activity, local job creation, medical facilities(both public & private), public distribution system, infrastructure, commutation/accessibility to even remote locations, charges for transport, availability of essential/luxury items etc.

     Tamil Nadu has always been ahead compared to other Indian states in everything(of course in corruption too). Most of the developments have been done only during dravidian parties rule. If anyone would quote Kamaraj, accepted, but sadly his rule was over in 67 itself, for your kind consideration.

     We need an alternative, a good and constructive thinking+working alternative. If anyone says BJP as that alternative, I can only laugh inside me, at those “anyone” as the second paragraph of my comment to be read again.

     //90% ஏதுமறியா எளிய ஏழை மக்கள் (read மக்குகள்) நிறைந்த ஒரு நாட்டில் வளர்ச்சி மிக மிக மிக மந்தமாகவே இருக்கும்.இம்மக்களை மாற்றுவதை விட ஏமாற்றுவது மிக எளிது//….. You are right Mr.Ganpat and so BJP won in Delhi civic polls.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக சன்மத் ( நீண்ட நாட்களுக்குப் பிறகு….!!!).

      உங்கள் கருத்துகள், பெரும்பாலும் ஏற்கத்தக்கவையே..

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    சிவம்,

    நீங்கள் சொல்வதை நான் ஏற்கிறேன்.

    ” இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பா ரிலானுங் கெடும்.”

    என்று வள்ளுவர் சொல்லி விட்டுப்போனது இவர் விஷயத்தில் மிகவும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  • இளங்கோ சொல்கிறார்:

   கண்பத் சார்,

   //முலாயம்,சரத்பவார்,கருணா,லல்லு,வை மனதி நிறுத்தி மோடியை எடை போடுதல் நல்லது //

   ஏன்- உருப்படியான எந்த அரசியல்வாதிகளும் உங்கள் கண்களில்
   படவில்லையா ? இவரை விட சிறந்தவர் யாரும் அரசியலில் இல்லையா ?

   • Ganpat சொல்கிறார்:

    இன்றைக்கு எனக்குத்தெரிந்து இல்லை.நீங்கள் சந்திரபாபு நாயுடு ,நிதேஷ் குமார்,நவீன் பட்நாயக் என்று சொல்லலாம்..ஆனால் அவர்கள் பிரதமருக்கான பந்தயத்திலேயே இல்லை.ராகுலை சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்.

    • இளங்கோ சொல்கிறார்:

     கண்பத் சார்,

     ஆகையால் மோடிஜியை குறை சொல்லவே கூடாது
     என்று சொல்கிறீர்களா ?

    • தமிழன். சொல்கிறார்:

     இந்தமாதிரி சிந்திப்பது ஆபத்து. மோடி அவர்கள் நல்லவராயிருக்கலாம். ஆனால் அவருக்கும் நம்மிடத்தில் மாற்று இல்லையென்றால் அது நாட்டுக்கு ஆபத்து. நிதீஷ் அவர்கள் ரேசில் இல்லை என்று சொல்லுவதைவிட அவருக்கும் அல்லது மம்தா பானர்ஜி அவர்களால் வங்காளத்தை விட்டு மற்ற மாநிலங்களையும் கவனிக்க முடியுமென்றால் அவருக்கு ஆதரவு கொடுத்து (பாஜக பிடிக்காதவர்கள், ஓட்டை ராகுலுக்குச் சிதறடிக்காமல்) வளர்த்துவிட வேண்டும். அதைவிட்டு வாக்குகளைப் பல கட்சிகளுக்கும் அளித்தால் கட்டுச் சோத்தில் வைத்த பெருச்சாளிகளைப் போல் (கருணாநிதி கும்பல் புகுந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணிபோல்) இந்தியாவில் தாங்கமுடியாத ஊழல்மயமாகிவிடும்.

     • தமிழன். சொல்கிறார்:

      மேலே உள்ளது கணபதி அவர்களின் கருத்துக்கானது

     • Ganpat சொல்கிறார்:

      நான் வேண்டாமென்று சொல்லவில்லை.முதலில் நிதேஷ் தேசிய அரசியலுக்கு வரட்டும்.பிறகு அவரை தேர்ந்தெடுப்பது பற்றி பேசலாம்.இப்போதைக்கு நமக்கு தேர்வு மோடியா ராகுலா என்பதே!.

 2. புதியவன். சொல்கிறார்:

  உங்கள் இடுகையில் மூன்று பிரதான விஷயங்களைச் சுட்டிக்காண்பித்துள்ளீர்கள். 1. எல்லாத் திட்டங்களும் எல்ஐசி திட்டங்கள்போல் இந்தியிலேயே இருப்பது. 2. நிஜ மதசார்பு. 3. சில மாநிலங்களைப் புறக்கணிப்பது. இந்த மூன்று குற்றச்சாட்டுகளும் இல்லை என்று மறுக்க இயலாது.

  இந்தி 26 சதவிகித மக்கள் மொழி என்பது சரியான செய்தி இல்லை. 75-80 சதவிகித மக்கள் புரிந்துகொள்ளும் மொழி. தமிழகத்தில் கழகங்களால் குறிப்பாக கருணாநிதியால் ஹிந்தி வெறுப்பு அவர்களின் சொந்த ஆதாயத்துக்காக மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு அணுவளவு தாங்கள் சொல்வதை (தமிழை) நம்பியிருந்தால் மெட்ரோ பள்ளிகளை நடத்திக்கொண்டிருக்க மாட்டார்கள், தொலைக்காட்சிகளில் தமிழ் கொலை நடந்திருக்காது, ஹிந்தி தெரியும் என்பதற்காக மாறனை அமைச்சராக்கியிருக்க மாட்டார்கள். நிற்க, பாஜக திட்டங்களின் பெயர்கள் மட்டுமல்ல, தமிழகத்தில் இந்தியில் அவர்கள் கொடுக்கும் விளம்பரங்களும் எனக்கு அந்நியமாகத்தான் தெரிகிறது. இது நம்ம நாடுதானா என்றும் வருத்தம் வருகிறது. இந்தி இந்தியாவின் தேசிய மொழியாக இருத்தல் ஏற்புடையது, ஆனால் அந்த அந்தப் பிரதேச மொழியும் வளரவேண்டும். மத்திய அரசின் எந்த விளம்பரமும் இந்தி மற்றும் அந்த அந்த பிரதேச மொழியில் இருக்கவேண்டும். அந்நிய மொழியான ஆங்கிலத்தில் இருக்கவேண்டிய அவசியமில்லை. இதைச் செய்யாமல் “மன் கீ பாத்” என்று தமிழகத்தில் ஒலிபரப்பினால் கேட்டுப் புரிந்துகொள்ள யாரும் இருக்கமாட்டார்கள், பாஜக என்பது யாருக்கோ நடத்தும் கட்சி என்றுதான் தோன்றும். They can not connect with Tamilians. இதை represent செய்யத்தெரியாத பொன்.ரா, இல்கணேசன், எச்.ராஜா (இவர் கருத்துக்கள் extremism) போன்றவர்களைக் கண்டிக்கிறேன். கட்சிக்கும் மக்களுக்கும் எது நல்லது என்று பிரதமரிடத்தில் சொல்லத்தெரியாமல் பதவியில் இருந்து என்ன பயன்? கா.மை சார் குற்றச்சாட்டை ஆமோதிக்கிறேன்.

  நிஜ மதசார்பு – எனக்கு இது ஏற்புடையதுதான். கருணாநிதி மாஃபியாவும் அல்லக்கை வீரமணியும் இந்துக்களையும் அவர்களின் சென்டிமென்டையும் எப்படி எள்ளிநகையாடினார்கள். அரசியல் காரணங்களுக்காகவும் பணம் கொள்ளையடிக்கவும், சிறுபான்மையினரின் காலை எப்படி வருடி பெரும்பான்மை இந்துக்களின் வயித்தெரிச்சலை வாங்கிக்கொண்டார்கள். இப்போது, “மடையர்களே இது இந்துக்களின் பிரதான தேசம். அவர்களைக் காக்கும் தலையாய கடமை எங்களுக்கு இருக்கிறது” என்பதை பாஜக செயலில் காண்பிக்கிறது. சோனியா போன்ற வஞ்சகர்களைப் பற்றியும் எழுதலாம். ஆனால் எழுதவில்லை. பாஜகவின் ‘நிஜ மதசார்பை’ இருகரம் நீட்டி வரவேற்கிறேன்.

  தமிழகம் பெரிய மாநிலம் மட்டுமல்ல. மற்ற எந்த மாநிலங்கள், மொழிகள் இவற்றைவிட நெடிய வரலாறு கொண்டது. உலகின் ஆதி 4-5 நாகரிகங்களில் காலத்தை விஞ்சி நிற்கும் நாகரீகம் தமிழ்நாகரீகம், தமிழ் மொழி. இந்த மாநிலத்துக்கு “பொறுப்பு கவர்னர்” கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேல். வெட்கம். வெட்கம். கருணாநிதி பாதையில் அதிமுக அமைச்சர்கள், எம்பிக்கள் போன்றவர்கள் ஊழல்வாதிகளாக இருப்பதால் வாயைத்திறந்து பேசும் வலிமையற்றவர்களாக இருக்கிறார்கள். இங்குதான் தமிழகம் ஜெ.வை மிஸ் செய்கிறது. தமிழர் உரிமைகளில், காவிரி போன்றவற்றில் பாஜக நியாயமாக நடக்கவில்லை (ஓட்டு அரசியல். ஆனால் இதைக் குறைகூறும் அருகதை திமுகவுக்குக் கிடையாது). அதேசமயம் ஜல்லிக்கட்டு என்ற பிரச்சனையில் மோடி அவர்களின் ஆதரவு இருந்தது. தான் ஆட்சிக்கு வர இயலாத மாநிலங்களில் புறக்கணிப்பு, அரசியல் செய்யும் வித்த்தில் காங்கிரஸைப்போல் பாஜக நடக்கக்கூடாது என்றே விரும்புகிறேன். நியாயமாக நடந்துகொண்டால் மட்டுமே காலம் மோடி அவர்களை ஸ்டேட்ஸ்மேன் என்று கொண்டாடும். காலம் இருக்கிறது திருத்திக்கொள்ள.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   மொழி விஷயத்தில் நீங்கள் இன்னும் கொஞ்சம் மாறுதலாக யோசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
   இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக ஏற்றால் ஏற்படக்கூடிய நெகடிவ் விளைவுகளை நீங்கள் யோசிக்கவில்லை என்று தோன்றுகிறது.

   26 % சதவீத மக்களுக்கு மட்டும் தாய்மொழியான ( நிச்சயமாக 26 % தான் – புரிந்து கொள்வார்கள் என்பது வேறு – தாய்மொழி என்பது வேறு…) இந்தியை ஆட்சி மொழியாக்கினால், மற்ற அனைத்து மொழிக்காரர்களும் சொந்த நாட்டிலேயே இரண்டாந்தர குடிமகனாகி விடுவார்கள்…

   இந்தியை வைத்துக் கொள்ளட்டும். …ஆனால் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சிமொழியாக தொடரும் என்று பாராளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட உறுதிமொழியை மீறுவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

   200 ஆண்டுகள் நமது ஆட்சி மொழியாக இருந்த ஆங்கிலத்தை அவ்வளவு சுலபமாக அந்நிய மொழி என்று
   ஒதுக்கி விட முடியாது.

   தமிழ் உட்பட 4 மொழிகளையும் ஆட்சிமொழியாக ஏற்று சிங்கப்பூரில் எந்தவித சிக்கலுமின்றி அமர்க்களமாக ஆட்சி நடக்கிறபோது இந்தி, ஆங்கிலம் என்கிற இரண்டு மொழிகளையும ஆட்சிமொழிகளாக தொடர்வதில் இங்கு, இவர்களுக்கு என்ன சிக்கல்…?
   இது இவர்களின் மனச்சிக்கல் மட்டுமே…!

   உங்களுக்கு இன்னும் அனுபவம் ஏற்படவில்லை என்று நினைக்கிறேன். தமிழ்நாடு மட்டுமல்ல – கொல்கத்தாவிற்கு சென்று இந்தியில் பேசி பாருங்கள்…பிறகு உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள். வங்காளிகள் நம்மை விட மொழிப்பற்று மிக்கவர்கள்….!

   ஒரு விஷயத்தை திரும்பவும் நான் இங்கே சொல்லியாக வேண்டும். இந்தி கற்றுக்கொள்ள வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பதை நானும் ஏற்கிறேன். ஆனால், படித்து தான் தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை… அது மஹாத்மா காந்தியாக இருந்தாலும் கூட….!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • NS RAMAN சொல்கிறார்:

    ஒரு விஷயத்தை திரும்பவும் நான் இங்கே சொல்லியாக வேண்டும். இந்தி கற்றுக்கொள்ள வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பதை நானும் ஏற்கிறேன். ஆனால், படித்து தான் தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை… அது மஹாத்மா காந்தியாக இருந்தாலும் கூட….!

    Well said

    Prior to 1967 Hindi was offered even in Government schools. Why this option was stopped for common man while so called tamil scholors admitted their family in private Hindi class

   • புதியவன் சொல்கிறார்:

    இந்தித் திணிப்பு வெறுப்பை உண்டாக்கும். உங்கள் தலைப்பே புரியவில்லை. பகாளாபாத் தெரியும். சப் கா சாத் என்றால் என்ன எழவு? கிசான் விகாஸ் பத்திரம் கேள்விப்பட்டுருக்கேன். சப் கா விகாஸ்னா என்ன.

    உங்களுக்குத்தெரியுமா .. சுதந்திரத்தின்போது, பொது மொழியாக தமிழ் இருக்கட்டும் என்று காந்திமுதல்கொண்டு சொல்ல ஆரம்பிக்க உடனே, இந்தி எனப் பிரகடனம் செய்யப்பட்டது. அதற்கப்புறம் ஆங்கிலமும் நீடிக்கும் என்ற உறுதியைப் பெற்றாலும் சர்க்காரியாவை வைத்து, இந்திரா நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் முழுவதுமாக இந்தி கொண்டுவந்திருக்கமுடியும். அதற்கேற்றவாறு கருணாநிதி அடிமையாகச் சிக்கியிருந்தார்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


     புதியவன்,

     // உங்கள் தலைப்பே புரியவில்லை. பகாளாபாத் தெரியும். சப் கா சாத் என்றால் என்ன எழவு? //

     புரியவில்லை என்றால் எரிச்சல் வருகின்றதல்லவா…? அந்த எரிச்சலை நீங்களும், உங்களைப் போன்ற இந்தி தெரியாத மற்ற நண்பர்களும் உணர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தலைப்பையே வைத்தேன்.

     நான் கொடுத்திருக்கிறேனே சுமார் 30 மத்திய அரசின் திட்டப்பெயர்கள். நானும் இந்தியன்… நீங்களும் இந்தியர் … நமக்கே புரியாதவாறு திட்டங்களுக்கு பெயர் வைப்பது ஏன்..? அது தான் இந்தி வெறி…

     இதைத்தான் நான் வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். கூடவே ஆங்கிலத்திலும் பெயர் வைத்திருந்தால் நாம் எரிச்சல் பட தேவை இருக்காது அல்லவா…?

     4 ஆட்சி மொழிகளுடன் சிங்கப்பூர் வளர முடியுமென்றால் – இரண்டு ஆட்சி மொழிகளுடன் இந்தியாவும் வளர முடியும்.
     இந்தி பேசாத மக்களுக்கும் இது “தங்கள் நாடு” என்கிற எண்ணம் இயல்பாகவே இருக்க வேண்டும் என்றால்
     இது மிக மிக அவசியம்.

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 3. புதியவன். சொல்கிறார்:

  இன்னொன்று… மோடி அவர்கள் ஊழலற்றவர் என்றுதான் நம்புகிறேன். ஜெட்லி போன்றவர்கள் பிஸினஸ்மென். கிரிக்கெட்டுனா அதுல ஜெட்லி, மாறன், சரத்பவார் போன்ற ஊழல் நெட்ஒர்க் இருக்கு. இப்படி பிஸினஸ்மென்களை அமைச்சரவையில் வைத்திருந்தால் கூட்டு ஊழல் மட்டுமல்ல, உன்னை இப்போது காக்கிறேன், நாளை என்னை நீ காப்பாற்று என்பதுதான் நடக்கும், நடக்கிறது. தமிழக உதாரணம் மிடாஸ் மற்றும் திமுக சாராய ஆலை, டிஆர் பாலு சாராய பிஸினஸ்.

 4. Sundar Raman சொல்கிறார்:

  நீங்கள் சொன்ன அந்த negatives …இப்படியும் பார்க்கலாம் , டெல்லி புதிய இடம் , ப்ரோக்கர்கள் நிறைந்த இடம் ,எந்த பாதையில் எந்த கன்னி வெடிகுண்டு என்று யாருக்கும் தெரியாத இடம் , வெளிநாட்டு சதிகார்களின் கூடாரம் , ஊழலின் ஊற்று பெருக்கு , எல்லாவற்றுக்கும் மேல் நான்காவது தூண் என சொல்லப்படும் ஊடகங்களின் தலை நகர். இவர்களை எல்லாம் டீல் செய்யவேண்டும் எனில் , இவர்கள் போலவே உள்ள , தம் ஆட்களில் யாரவது ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் மூலம் டீல் செய்ய வேண்டும் , அப்படி வந்தவர் தான் ஜெட்லீ போல இருக்கு . ஊழல் பெருமளவுக்கு, அல்ல , அதற்கும் மேல், ஊழல் இல்லாத அளவுக்கு தான் மத்திய ஆட்சி நடை பெறுகிறது .

  அப்பறம் கோர்ட்டின் இடையூறுகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது , ஒரே ஒரு செவ்வன் புஜ்பல் மாட்டும் தான் தண்டனை பெற்றார். மல்லையா வழக்கில் கூட , முன்பே கோர்ட் ஒத்துழைக்கவில்லை .. மாறனுக்கு ஜாமீன் கொடுத்தது ..NPA எவ்வளவு பெரிய பிரச்சனையோ அதை விட பெரிய விஷயம் நம்முடைய கோர்ட் , நீதிபதிகள் , வக்கீல்கள் …இதை யாரும் இன்னும் கண்டுகொள்ளவில்லை .

  மந்திரிசபையில் ராஜ்நாத் , நவால்க்கர் , வெங்கய்யா நாய்டு, ரவி ஷங்கர் பிரசாத் , மேனகா , ஆனந்தகுமார் …இன்னும் சிலபேர் , இவர்கள் எல்லோருமே சும்மா டம்மி , உருப்படியா ஒண்ணுமே செய்யல , அதே சமயம் பியூஸ் கோயல் , ஸ்மிதா இராணி , நிர்மலா சீதாராம், போன்றவர்களின் உழைப்பு , பங்களிப்பு அபிரிதமானது .

  மொழி பிரச்சனை இந்த திராவிடர் கழகங்கள் கிளப்பியது என தான் நம்புகிறேன் , மொழி திணிப்பு நடப்பதாக தெரியவில்லை, சமஸ்கிருதத்தை தூக்கி பிடிக்க நினைக்கிறார்கள் , தமிழும் சமஸ்க்ரிதமும் மிகவும் தொன்மையான மொழி , எத்தனையோ காவியங்கள் இருக்கிறது , அதை தெரிந்து கொண்டால் தவறேதும் இல்லை . அதை யாரும் திணிக்க வில்லை ,

  ஒரே மதம் …. காஷ்மீரில் மாட்டும் தான் இந்த கோஷம், மற்ற பாகங்களில் எல்லாரும் அவரவர்களின் கடவுளை வேண்டும் மட்டும் வணங்கி வருகிறார்கள் , நீங்கள் சொன்ன அந்த பெங்காலில் , ராமநவமி கொண்டாடத்தான் தடை, அடிதடி எல்லாம் .

  வெறும் பேச்சு மாட்டும் இருந்தால் , வை.கோ இந்நேரம் சி.ம் ஆகி இருப்பார் . மோடி நன்றாக பேசுகிறார் , அதை விட அதிகமாக உழைக்கிறார் , நிறய இளைஞ்சர்களை சேர்த்து கொள்ள வேண்டும் , இப்போதைக்கு வேண்டியது , மக்களின் ஆதரவு , பங்களிப்பு . ஆதரவு நிறைய இருக்கு, பங்களிப்பு என்றால் வரி ஒழுங்காக கட்ட வேண்டும் , சின்ன சின்ன விஷயங்களுக்கு , பெரிய விஷயங்களுக்கு ஊழலின் துணை போகவேண்டாம் . முடிந்த அளவு சுத்தத்தை பாதுகாக்கலாம் , மரம் வளர்க்கலாம் , எறும்புக்கு , பறவைகளுக்கு உணவு கொடுக்கலாம் . நம் தேசம் நன்றாகும் என நம்பலாம் , அதற்காக பிரார்த்தனை செய்யலாம் .

  • புதியவன் சொல்கிறார்:

   இந்தத் தளத்தை வாசித்து, பிறரின் கருத்துக்களையும் படித்து மனதில் ஏற்றி, கொள்ளத்தக்கதா என்று சிந்திக்கும் வாய்ப்பு தருகிறது. கண்ணைக் கட்டிக்கொண்டு ஒரே கருத்தைப் பிடித்துத் தொங்குவதால் சிந்தனையில் வளர்ச்சி ஏற்படாது. கா.மை சாருக்கு நன்றி.

   @சுந்தர்ராமன் – பெங்காலில் ராமநவமி – எனக்கு இதில் மாற்றுக்கருத்து உண்டு. ம்ம்தா, வங்காளிகள் என்ற குடைக்கீழ் மக்களை ஒன்றுதிரட்ட நினைக்கிறார். பாஜக, இந்துக்கள் என்று ஒன்றுதிரட்ட நினைக்கிறது. வங்காளிகள் என்று பங்களாதேசத்திலிருந்து ஊடுருவிய மக்களையும் (லட்சக்கணக்கான) ஒன்றுதிரட்டுகிறார். பாஜக, அந்த முஸ்லீம்களால் நாட்டுக்குக் கேடு வரும் என்று இந்துத்வா நிலையை எடுக்கிறது. நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள். தமிழகத்துக்கு அந்நியமான பிள்ளையார் சதுர்த்தி கலாச்சாரம், அந்நியமான கோவில்கள் (கன்யாகுமரியிலிருந்து, ஜக்கிசிவா, வேலூர் தங்கக்கோவில் போன்று) பெருகுகின்றன. அதேபோல் முஸ்லீம் இனமும் புதிய கலாச்சாரத்தைத் தமிழ்நாட்டில் பரப்புகிறது. தமிழ்நாட்டில் சாதியால் மக்களிடையே பிரிவினை செய்வதில் திமுகவும் அவர்களின் அல்லக்கைகளும் ஈடுபட்டதால் இனத்தால் ஒன்றுபடுத்த இயலவில்லை. அந்நிய கலாச்சாரம் புகுதல் (பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலம் முதல்கொண்டு) அந்த அந்த மாநிலங்களுக்கு நல்லதல்ல.

   மற்றபடி இந்திய அரசுக்கு மக்களும் தங்களால் ஆன பங்களிப்பைச் செய்யவேண்டும்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    // இந்தத் தளத்தை வாசித்து, பிறரின் கருத்துக்களையும் படித்து மனதில் ஏற்றி, கொள்ளத்தக்கதா என்று சிந்திக்கும் வாய்ப்பு தருகிறது. கண்ணைக் கட்டிக்கொண்டு ஒரே கருத்தைப் பிடித்துத் தொங்குவதால் சிந்தனையில் வளர்ச்சி ஏற்படாது. கா.மை சாருக்கு நன்றி.//

    உங்களுக்கு என் நன்றிகள் புதியவன்
    இந்த விமரிசனம் தளத்தின் முக்கிய நோக்கமே – கருத்து பரிமாற்றம் தான்.
    இது சாத்தியப்படுவது இந்த விவாதங்களில் நாகரிகமான முறையில் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் நண்பர்களால்
    தானே தவிர என்னால் அல்ல- என்பதே என் கருத்து.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

   • Sundar Raman சொல்கிறார்:

    மேற்கு வங்கத்தில் , பைத்தியங்கள் ஜாஸ்தி, ( கேரளாவிலும் ) , நான் கேள்வி பட்டது பத்திரிக்கை அல்லது சோசியல் மீடியா மூலம் அறிந்தது , அங்கு சில பல இடங்களில் , சிறிய பண்டிகையோ அல்லது பெரிய பண்டிகையோ – சிறுபான்மையினர் , பெரும்பான்மை உள்ள இடத்தில் நிறைய பிரச்சனை மற்றும் வன்முறை என செய்திகள் சொல்கிறது . ( டிராக்டர் போட்டு உழுது பாப்பி பயிர் செய்தார்கள் ) .

    நம்முடைய IT துறையில் இந்த வளர்ச்சிக்கு காரணம் என்ன என்று நாராயணமூர்த்தியிடம் கேட்ட பொழுது , அவர் சொன்ன பதில் , எங்களை பிரிட்டிஷ் 200 வருஷம் ஆண்டார்கள் , அவர்கள் கொடுத்த கோடை ஆங்கிலம் , அதை நன்றாக கற்றதால் , எங்களுக்கு இந்த வாய்ப்பு , என்று சிலாகித்து பதில் சொன்னார். என்ன சொல்லியிருக்க வேண்டும் , எத்தனையோ ஆண்டுகளாக , நாம் கல்வி அறிவு இருந்ததால் , நம்முடைய logic ,(எதை எப்பொழுது , எப்படி செய்ய வேண்டும், யார் மூலம் செய்ய வேண்டும் ) மேலும் தர்க்க அறிவு , மன கணக்கு , …இதெல்லாம் கூட ஆங்கில அறிவும் கிடைத்ததால் முன்னேறினோம் என சொல்லியிருக்கலாம்

    • யார் லூசு ? சொல்கிறார்:

     Sundar Raman

     உங்கள் பின்னூட்டத்தை படித்து விட்டு தமிழ்நாட்டில் எல்லாரும்
     இப்படித்தான் லூசுத்தனமாக பிதற்றுவார்கள் போலிருக்கிறது என்று
     யாராவது தீர்மானத்திற்கு வந்தால் அது எப்படி இருக்குமோ அப்படித்தான்
     இருக்கிறது நீங்கள் மேற்கு வங்கத்தினர் பைத்தியங்கள் என்று சொல்வது.
     உங்கள் இதய தெய்வம், மோடிக்கு ஓட்டு போடாத மாநிலங்கள் எல்லாம்
     உங்களுக்கு லூசு மாநிலமா ? இப்படி லூசுத்தனமாக எழுதுவதால் தான்
     நீங்கள் சொல்லும் ஒன்றிரண்டு உண்மையான காரணங்கள் கூட
     எடுபடாமல் போகின்றன. Please Control your language.

     • Sundar Raman சொல்கிறார்:

      மேற்கு வங்கத்தில் , பைத்தியங்கள் ஜாஸ்தி, ( கேரளாவிலும் )…. மறுபடியும் படிக்கவும், எல்லாரும் என்று சொல்லவில்லை , ஒப்பிட்டு நோக்கும் பொழுது அங்கு ஜாஸ்தி என்று சொன்னேன். தற்பொழுது வாசம் , கேரளாவில் – தற்கொலையும் , மன நோயும் அங்கு அதிகம் என புள்ளி விவரங்கள் சொல்கிறது .

      நன்றி , நான் சொல்வதில் ஓன்று அல்லது இரண்டு நல்ல செய்திகளாவது இருக்குன்னு சொன்னதற்கு.

    • இளங்கோ சொல்கிறார்:

     ஆமாம். எத்தனையோ ஆண்டுகளாக நமக்கு கல்வி அறிவு இருந்ததால்,
     நம்முடைய logic எதை, எப்பொழுது, எப்படி, யார் மூலம் செய்ய வேண்டும்
     மேலும் தர்க்க அறிவு ஆகிய அத்தனையும் நம்மிடம் கொட்டிக்கிடந்ததால்
     தான் வெறும் 15,000 பிரிட்டிஷ்காரர்களிடம் 30 கோடி இந்தியர்கள்
     200 வருஷங்கள் அடிமைப்பட்டு கிடந்தோமாக்கும் ?
     போங்க சார் நீங்களும் உங்கள் மோடி மோகமும்.

 5. இளங்கோ சொல்கிறார்:

  Sundararaman,

  நாராயணமூர்த்திக்கு இருந்த திறமை, மூளை, உழைப்பில் –
  லட்சத்தில் ஒரு பங்கு உங்களுக்கு இருந்தால் கூட
  இப்படி குண்டுசட்டியில் உட்கார்ந்து கொண்டு குதிரை ஓட்டிக்கொண்டிருக்க
  மாட்டீர்கள்.
  நாராயணமூர்த்தியை குறை சொல்லும் முன்னர் அவர் உண்டாக்கிய வேலை வாய்ப்பில் ஆயிரத்தில் ஒரு பகுதியையாவது உண்டாக்கும் தகுதி உமக்கு
  உள்ளதா என்று சுயபரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
  மோடி பஜனை பாடுவதை தவிர வேறு எதாவது qualification ?

 6. Sundar Raman சொல்கிறார்:

  வணக்கம் , நாராயணமூர்த்தியின் திறமையோ , அவர் ஆற்றிய யாரும் பணி , அவர் உருவாக்கிய தொழிலாளி மில்லியனர்கள் பற்றியோ நான் பேசுவதற்கு அருகதை கிடையாது, நான் பேசவும் இல்லை .

  ஆங்கிலேயர்கள் பற்றி அவர் அவ்வ்ளவு சிலாகித்து சொன்னது பற்றி தான் பேச்சு. பெரியார் அவர்களும், ஆங்கிலேயர்களை நீங்கள் போக வேண்டாம் , இங்கேயே எங்களை ஆளுங்கள் என்று சொன்னதாக வரலாறு… இந்த விஷயத்தில் , நாராயணமூர்த்தி சில படிகள் தான கீழே , கிட்ட தட்ட பெரியாரின் கருத்து தான் அது.

  தாய் , தாய் மொழி , தாய் நாடு மீது பக்தியும், நன்றியும் , பரவசமும் இருப்பது அப்படி ஒன்றும் கெட்ட செயல் இல்லை .

  நாராயணமுத்தியின் மகன் ரோஹன் , நிறைய பணம் செலவழித்து … புஸ்தகம் போடப் போகிறார் , அதன் முக்கிய ஆசிரியர் அல்லது ப்ராஜெக்ட் லீடர் – Mr .Pollack …அவர் பற்றி

  Pollock says that Sanskrit was used to Oppress people and Ramayana was a cooked up story to build enmity against Muslims during the Islamic invasion period. Should I state anything more? How can someone who views Ramayana like this be considered fit to head a panel that translates our works. What will be the translation result in? That is the concern to raise this issue now.

  இப்போவாவது புரிகிறதா ? ..ஏன் இந்த தி.க பார்வை ?

 7. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  Sorry for a delayed comment.

  Having worked with our country men almost from all of Indian states, English of Tamils is better(in a larger sense + larger crowd + ability to communicate to the other person to make him understand what she/he tries to say). Next stand our Telugu sis/bros, in using English. A Tamil girl/guy studied through English medium from govt. school can very well express her/his thoughts and can communicate. This English ability or the ability to learn English faster is the reason for us to excel in ITES & in IT sector.

  I think we should thank dravidian parties here, who diversified English language to all caste from Brahmins & Saiva Pillai(comparatively smaller than brahmins).

  Let the North Indian(Hindu) mafia, do whatever they can. Let us learn hindi too. But let us sharpen, enhance and intensify our English skills and become stronger in that. BJP requires hindi throughout India for their politics. Similarly global business environment want a single language, “English” for their easy business. You know who run the world. Let us be the people to be selected.

  When we become strong in English and North become weak in English, is a good sign for us. By god’s grace, if we get at least “a working govt” in the state, then obviously the state will prosper.

  I am saying above for two reasons – BJP is becoming very powerful as they are kindling the “majority” feeling in the minds of middle class Hindus and there is no proper opposition to communicate to the people, in a proper way about BJP’s politics and its ills effects. Second, let us view very pressure as challenge and every tough situation as an opportunity.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Sanmath,

   Excellent View…
   I welcome and fully endorse your views.

   -with all best wishes,
   Kavirimainthan

  • தமிழன் சொல்கிறார்:

   சன்மத்… உங்கள் கருத்து ரொம்ப நல்லா இருக்கு. லாஜிக்கலாவும் இருக்கு. நான் நிறைய மாநிலத்தவர்களைப் பார்த்துள்ளேன். நம்ம ஆங்கிலம் (கேரளாவை விட, மற்ற தென்னிந்தியர்களைவிட) பெட்டர். அதுவும்தவிர, நீங்கள் சொன்னதுபோல், தமிழர்கள் கற்றுக்கொள்வதில் விரைவானவர்கள்.

   “dravidian parties here, who diversified English language to all caste” – இது மாத்திரம் எனக்கு அவ்வளவு சரி என்று தோன்றவில்லை. உங்கள் பார்வையில், கல்வி எல்லோருக்கும் கிடைத்ததால் என்ற அர்த்தம் இருந்தால், அது சரியான கருத்துதான். அதைவிட, கிறித்துவ கல்லூரி, கல்வி நிலையங்களும் தமிழர்களின் ஆங்கிலப் புலமைக்கு ஒரு காரணம். (அதிலும் கிறித்துவர்களின், ஏனென்றால் அவர்களில் பெரும்பான்மை, அதாவது 2 தலைமுறைக்கு முன்பு, கல்விக்கு வாய்ப்பில்லாத சூழலில் இருந்தவர்கள், மீனவர்கள் போன்று)

   தமிழ்ல எழுதுனீங்கன்னா இன்னும் ரசித்துப் படிக்கலாம்.

   • Sanmath AK சொல்கிறார்:

    Yes தமிழன், I meant educational opportunities to all…..//கிறித்துவ கல்லூரி, கல்வி நிலையங்களும் தமிழர்களின் ஆங்கிலப் புலமைக்கு ஒரு காரணம். (அதிலும் கிறித்துவர்களின், ஏனென்றால் அவர்களில் பெரும்பான்மை, அதாவது 2 தலைமுறைக்கு முன்பு, கல்விக்கு வாய்ப்பில்லாத சூழலில் இருந்தவர்கள், மீனவர்கள் போன்று)///…….I totally agree to your point. Though I dont belong to those 2 generations, I have seen the realizations, as I did my schooling in a Jesuit institute.

    //தமிழ்ல எழுதுனீங்கன்னா இன்னும் ரசித்துப் படிக்கலாம்//….. Thanks for that and will try that…. actually not well verse with Tamil typing and moreover, மன்னிக்கவும், சோம்பேரித்தனம்….

    • தமிழன் சொல்கிறார்:

     இன்னொன்று சன்மத். எல்லோரும் என்ன நினைக்கறாங்கன்னா, திராவிடக் கட்சிகள்தான் எல்லோருக்கும் கல்வியைக் கொடுத்தது என்று. இதுல உண்மை இல்லை. நான் கொஞ்சம் வரலாற்றுப் புத்தகங்களை ஆர்வத்துடன் படிப்பவன். நான் எழுதியது சாதி என்ற கோணத்தில் பார்க்காமல், தமிழ்ச் சமூகத்தின் நிலைமை என்று பாருங்கள்.

     உ.வே.சா வின் தன் வரலாறு, நாமக்கல் கவிஞரின் வரலாற்று நிகழ்வுகள் போன்றவை 1850-1930 வரையிலாக காலகட்டத்தை நன்றாகக் காண்பிக்கும். அதில் ஆங்கிலம் கற்றவர்கள் என்று ஒரு குறிப்பிட்ட சாதி கிடையாது. அறிவுப் புலமை பெற்றவர்களில் பெரும்பாலும், தேவர்கள், வேளாளர்கள், ரெட்டியார்கள், கோனார்கள், பிள்ளைமார்கள், செட்டியார்கள், கிறித்துவர்கள் போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். பிராமணர்கள் கல்வியறிவு பெற்றவர்கள் என்று பொதுவாகக் குறிப்பிடப்படவில்லை. (அவர்களது குலத் தொழிலுக்கான சாத்திரங்களில் மற்றும் அவர்களுக்குத் தேர்ச்சி உண்டு என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது). அதேபோல், பொறியாளர்கள் என்ற லிஸ்டிலும் பிராமணர்கள் இல்லை (பிள்ளைமார்கள் போன்றோர் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்). வக்கீல்களிலும் பார்த்தால், நமக்குத் தெரிந்தே, வ.வு.சி போன்ற பலர் பிராமணர்கள் அல்லர். உ.வே.சாமிநாதய்யர் (சாதி தெரியவேண்டும் என்பதற்காகக் குறிப்பிடுகிறேன்) அவர்கள், தமிழ் கற்றுக்கொண்டது ஆரம்பத்தில் ஒரு ஐயங்காரிடம், பின்பு முழுவதுமாத தமிழ் இலக்கியங்களைக் கற்றுக்கொண்டது பிள்ளைமார்களிடம். அவருடைய ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள். 1900களில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு பலர் ஆசிரியர்களாக இருந்தபோதிலும், ஆங்கிலேய ஆசிரியர்களையும் (வெள்ளைக்காரர்கள்), கோவையில் பிராமண சமூக ஆசிரியரையும் குறிப்பிடுகிறார்.

     பொதுவாக கல்வி வளர்ச்சிக்கு, ஏசு திருச்சபையினர் நிறைய செய்துள்ளனர். அவர்கள் கிறித்துவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தாலும், ஆரம்ப காலத்தில் எல்லோருக்கும் வாய்ப்பளித்தனர். மிகவும் அடித்தட்டில் இருந்த நாடார் சமூகம், கல்வி என்ற விளக்கை அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் ஏற்றியதால்தான் (நிறைய பள்ளிகள், கல்லூரிகள்) அந்தச் சமூகம் பெருமளவு முன்னேறியிருக்கிறது. காமராஜ் அவர்கள் எல்லா இடங்களிலும் பள்ளிகளை நிறுவுவதற்கு முன்னுரிமை கொடுத்ததனாலும், அதனைத் தொடர்ந்துவந்த சத்துணவாலும், கல்வியறிவினால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையாலும், எல்லா சமூகத்தவர்களும் கல்வியின் அருமையை உணர்ந்து கற்க ஆரம்பித்தனர்.

     திமுக ஆட்சியில் இருந்தபோது (1967-1976), நிறைய மற்றைய சமூகத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள் முக்கியப் பொறுப்பு வகித்தனர். அவர்கள் அனைவரும் திமுகவுக்கு முன்னாலேயே அரசு ஆசிரியப் பணியில் இருந்தவர்கள் என்பதும் நினைவுகூறத் தக்கது (தெ.பொ.மீனாட்சி சுந்தரம் பிள்ளை, வா.செ.கு போன்ற பல்வேறு அறிஞர்கள் பிராமண சமூகமல்ல. அதே சமயம் திமுகவால் கல்வியறிவு பெற்றவர்கள் அல்லர்)

     எம்ஜியார் காலத்தில் நிறைய தனியார் பொறியியல் கல்லூரிகள் வர ஆரம்பித்ததனால், நிறைய பொறியாளர்கள் (தமிழர்) வெளிவர ஆரம்பித்தனர். அதற்கப்புறம் புற்றீசல்போல் பொறியியல் கல்லூரிகள் பெருகியதனால், கணிணி (மென், வன்), எல்லாவித பொறியாளர்கள் என்று கல்வியறிவு மேம்பட்டுவிட்டது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.