ஆசிரியர் சோ எழுதிய ” தர்மத்தின் சாரம் ” ….

துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் தன்னுடைய இளம் மற்றும் நடுத்தர வயதில் – அரசியல், நடிப்பு, நாடகம், கதை,வசனம், திரைப்படம், டைரக்ஷன், எழுத்து ஆகியவற்றில் எந்த அளவிற்கு ஆர்வத்துடன் உழைத்து வந்தாரோ –

அதைவிட பன்மடங்கு அதிகமாக, அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில்,ஆன்மிக தேடலிலும் ஈடுபட்டிருந்தார்…

அவரது பல வருட தேடல்களின் விளைவுகள் தான் அவர் எழுதிய – “வால்மிகி ராமாயணம்”, “மஹாபாரதம் பேசுகிறது”, “எங்கே பிராமணன்” மற்றும் “ஹிந்து மஹா சமுத்திரம்” ஆகிய பொக்கிஷங்கள்…

இந்த காலத்திலும் ஜாதிகள் தொடர்வது, நமது சமுதாயத்தில், பலருக்கு – ஒரு வித சமூக அவசியமாகிப் போய் விட்டது.

ஆனால், ஜாதிகளை அடிப்படையாக வைத்து ஒருவரை உயர்வாகவோ, தாழ்வாகவோ எடைபோடுவது – என்னைப் பொருத்த வரையில் முற்றிலுமாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விஷயம்.

மனிதர்கள் யாரும் பிறப்பால் – உயர்ந்தவரும் இல்லை – தாழ்ந்தவரும் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதனால் தான் ஜாதி அடிப்படையில் எழும் விவாதங்கள் எதையும் நான் விமரிசனம் வலைத்தளத்தில் அனுமதிப்பதில்லை….

ஆசிரியர் சோ அவர்கள் எங்கே பிராமணன் என்கிற தலைப்பில் ஒரு நாடகத்தின் இடையிடையே எழுதி வந்த விளக்கங்களை தகுந்த முறையில் தொகுத்து, துக்ளக் வார இதழில் “தர்மத்தின் சாரம்” என்கிற தலைப்பில் வெளியிட்டு வருகிறார்கள்.

நடைமுறை சாத்தியமான, எளிமையான விளக்கங்களை, ஆசிரியர் சோ அவர்கள் அருமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். நமது எண்ணங்களை மேலும் விசாலப்படுத்திக்கொள்ள இந்த கட்டுரைகள் உதவும் என்று நான் நம்புகிறேன்.

சோ அவர்களின் “தர்மத்தின் சாரம்” கட்டுரையின் பொருத்தமான பகுதிகளை, அவ்வப்போது, இந்த விமரிசனம் தளத்திலும் வெளியிடலாம் என்றிருக்கிறேன்…

ஆசிரியர் அமரர் “சோ” அவர்களுக்கு நமது நன்றியுடன் –

இன்று முதல் பகுதி –

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to ஆசிரியர் சோ எழுதிய ” தர்மத்தின் சாரம் ” ….

 1. தமிழன் சொல்கிறார்:

  சோ அவர்கள் தொடரையும், குறிப்பாக அவரது விளக்கங்களுக்காகப் பார்த்திருக்கிறேன். அவர் எப்போதும் அறிவுறுத்தும் விஷயம், ‘குலத்தினால் ஒருவன் பிராமணனாக முடியாது”,”பிறந்த சாதியினால் ஒருவன் தாழ்வானவனாக ஆகமுடியாது”

  “ஜாதிகள் தொடர்வது சமூக அவசியமாகிப்” – இது நிச்சயம் வருங்காலங்களில் மறைந்துவிடும். படிப்பு, வேலை என்ற காரணிகள்தான் இருவர் சேருவதற்குக் காரணியாக இருக்கும். மும்பையி, தில்லியில் சாதியின் தாக்கம் குறைவு என்றே நினைக்கிறேன். என்ன, மாறுவதற்கு ஒரு 100-200 வருடங்களாகலாம். (இந்தச் சாதிக்கட்சிகள் ஒழிந்தால், இன்னும் விரைவாக நடக்கலாம்).

  வேதமும், அதனை ஓதுபவர்களும் பெரும்பாலும் அர்த்தம் புரிந்து ஓதுவதில்லை என்று நினைக்கிறேன். (சமஸ்க்ருதம் தெரிந்து, அர்த்தம் புரிந்து ஓதுபவர்களும் உண்டு, ஆனால் பெரும்பாலும் அர்த்தம் தெரியாதவர்கள்தான்). பிராமண ஜாதியிலும், மேலே குறிப்பிட்ட மந்திரங்கள் ஓரளவு எல்லோருக்கும் (60%) தெரியும். ஆனால், 99% பேருக்கு அர்த்தம் தெரியாது. ஏனென்றால், சமஸ்கிருதம் வழக்கொழிந்த மொழி.

  வேதங்களுக்கான அர்த்தம் என்ன என்று ஒரு புத்தகத்தை விரைவாகப் புரட்டிப்பார்த்தேன்.. ரொம்ப எக்சைடிங் ஆக இல்லை. (முக்கியமானவற்றைவிட எல்லாவற்றிர்க்கும் அர்த்தம் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதும் அவசியமில்லை. அதாவது மருந்து சாப்பிடுவதற்கு, அதன் ingredients etc. பற்றி முழு அறிவும் அவசியமில்லை. நமக்கு மருத்துவர் prescribe செய்தாலே போதுமானது என்பதைப் போன்றது. அதேசமயம், எல்லா மந்திரங்களுக்கும் ரொம்ப அர்த்தம் தெரிந்துகொள்வதும் அதனுடைய mythஐக் குறைத்துவிடும் என்று நான் நினைக்கிறேன். இதை வேறு ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கலாம். ஆனால் இந்த இடத்திற்குப் பொருத்தமில்லாமல் இருக்கும்) ஆனாலும், இப்படிச் சிந்தித்து அனாதி காலத்தில் எழுதிவைத்திருக்கிறார்களே, இந்த மாதிரியெல்லாம் சிந்தித்திருக்கிறார்களே என்பதே மிகுந்த ஆச்சர்யமும் பெருமிதமும் தரக்கூடியது.

  பிறப்பால் ஒருவன் உயர்ந்தவன் என்று கருதுவதே, இறையை அவமதிக்கும் செயல் என்று நினைக்கிறேன். இதனால்தான் பக்தி இலக்கியங்களிலும், வரலாறுகளிலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும் இதனை மையப்படுத்தி (அதாவது பிறப்பினால் ஒருவன் உயர்ந்தவனல்ல) நிறைய உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கீழே கொடுத்ததை, வெறும் பக்தி இலக்கியமாகக் கருதாமல் (இது வைணவர்களுக்கு வேதம் போன்றது. மற்றவர்கள் 4ம் நூற்றாண்டிலேயே இந்த மாதிரி authorityயாக எழுதியிருக்கிறார்கள் என்று வியந்துகொள்ளலாம். வைணவர்களின் குருக்களான ஆழ்வார்கள், பல்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு வைணவனுக்கும் தலையான ஆச்சாரியரான நம்மாழ்வார் என்று அழைக்கப்படுபவர் வேளாளர் குலம் என்று நினைக்கிறேன். அவர் வாழ்ந்த ஊரில் பிறந்தவர்தான் நல்லக்கண்ணு-இ.கம்யூ)

  “பழுதிலா ஒழுகலாற்றுப் பலசதுப்பேதிமார்கள், இழிகுலத்தவர்களேனும்
  எம் அடியார்கள் என்றால், தொழுமினீர், கொடுமின், கொள்மின்” (இங்கு இழிகுலம் என்பது ஒரு விளக்கம். அதாவது சமூகத்தில் அடித்தட்டில் இருக்கும் குலம், அதை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை வைத்துச் சொல்லியிருப்பது). இதன் அர்த்தம், குலத்தில் தாழ்ந்திருந்தாலும், வைணவர் என்றால், அவரைத் தொழுங்கள். அவரோடு உறவு வைத்துக்கொள்ளுங்கள்-அதாவது அவர் இல்லத்திற்குச் செல்லுதல், உணவு மற்ற உறவு பேதம் பார்க்கக்கூடாது)

  “அமரவோர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதி தமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேனும்
  நுமர்களைப் பழிப்பராகில் நொடிப்பதோர் அளவில் ஆங்கே அவர்கள்தாம் புலையர்போலும்” – அதாவது வைணவராக இருப்பவரை, சாதி அல்லது வேறு காரணத்திற்காக அந்தணன் ஒருவன் இழிவுபடுத்தினால், அந்த நொடியே அந்த அந்தணன் இழிகுலத்தவனாகிவிடுகிறான்.

  பிறப்பு என்பது ஒருவனின் தகுதியைத் தீர்மானிக்காது. கா.மைக்குப் பிடித்தவருடைய வரிகள்,

  ‘குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம். .. அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்”

  “சீலம் அறிவு தருமம் இவை
  சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்”

  ஆனாலும், ஒருவன் நல்ல பெற்றோர்களுக்கு, நல்ல சூழலில் பிறக்கும்போது, அவனது சூழலே நல்லதாக அமைகிறது, அவனும் நல்லவனாக இருப்பதற்கு மிகுந்த வாய்ப்பு இருக்கிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   மிகப் பொருத்தமாகவும், தெளிவாகவும் எழுதி இருக்கிறீர்கள்….

   வேதம் சாதி பற்றி எதுவும் கூறவில்லை. வேத காலத்தில் சாதி இல்லை – என்பது தான் உண்மை.
   இடையில் வந்தது தான் சாதி.

   பிறப்பின் காரணமாக ஏற்படும் பிரிவுகளைப் பாரதி அடியோடு வெறுத்தார்.

   ” சாதிகள் இல்லையடி பாப்பா !- குலத்
   தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;

   நீதி உயர்ந்த மதி, கல்வி – அன்பு
   நிறைய உடையவர்கள் மேலோர்.

   சாதிப் பிரிவுகள் சொல்லி அதில்
   தாழ்வென்றும் மேலென்றும் சொல்வார்
   நீதிப் பிரிவுகள் செய்வார் அங்கு
   நித்தமும் சண்டைகள் செய்வார்

   சாதிக் கொடுமைகள் வேண்டா அன்பு
   தன்னில் செழித்திடும் வையம். ”

   எனக்குத் தெரிந்த வரையில், நான் உணர்வது – பிராம்மணர்களில் பெரும்பாலானோர், தங்களைப்பற்றிய, தங்கள் சாதியைப்பற்றிய கர்வத்தை விட்டு விட்டனர்…
   ஆனால், அதை caste hindus என சொல்லப்படுவோர் take over செய்து கொண்டு விட்டனர்…

   தங்கள் சுயநலத்திற்காக சாதிப் பிரிவுகளை மேன்மேலும் உரம் போட்டு வளர்க்கின்றன அரசியல் கட்சிகள்….

   சாதிக்கட்சிகளை அரசியலிலிருந்து விலக்கி விட்டால், தேர்தலில் போட்டியிடுவதை
   தடை செய்தால் – பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும்…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. குலாம் ரசூல் சொல்கிறார்:

  கா.மை. ஐயா,

  //மனிதர்கள் யாரும் பிறப்பால் – உயர்ந்தவரும் இல்லை – தாழ்ந்தவரும் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.//

  ரொம்ப நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.

  தமிழன் அவர்களும் புராணங்களிலிருந்தும் மற்ற சில உதாரணங்களையும் கொடுத்திருக்கிறார். படிக்க ரொம்ப சந்தோசமாயிருக்கு.

  ஆனால் சாதிப்பிரிவினைகள் தீண்டாமை கொடுவினைகள் எங்கிருந்து எப்போதிருந்து தோன்றியது, அதன் வேர் எது. இதற்கு விடை கண்டால் அதை நோக்கிய நகர்வை முன்னெடுக்க ஏதுவாக இருக்கும் என்று கருதுகிறேன்.

  வரலாற்றின் பின்னோக்கின், இதை களைய பல பெறியவர்கள் பெரு முயற்ச்சி எடுத்திருப்பதை அறியலாம். ஏன் அவர்களால் அதிக வெற்றி பெறமுடியவில்லை. எது தடுக்கின்றது.

  நான் வேதங்களை புராணங்களை அறிந்தவனல்ல. அதனால் சகோதரரர்களிடம் தகவல் வேண்டி ஒரு கேள்வி.

  ‘வேதங்கள், புராணங்கள் முந்திவந்ததா? வர்ணாசிரம கொள்கையா?’

  இந்த தேடலில் தீர்விருக்கும் என்று கருதுகிறேன்.

  தமிழன் அவர்கள் குறிப்பிட்டுள்ள வேத, புராண மேற்கோள்கள் அவைகள் ஆரம்ப வெளிப்பாடு என்று கொள்ள இடமேற்படுகிறது.

  இது சரியாக இருக்கும் பட்சத்தில்,

  தாங்கள் குறிப்பிட்ட மிகவும் உயரிய‌ வரிகளை இஙகு நியாபகம் கொள்வொம். பிறப்பால் உயர்வு தாழ்வில்லை என்ற அற்புதமான‌ நிலையை எது சம்மட்டி கொண்டு நிர்மூலமாக்குகிறது.

  சகோதரர்கள் ஏன் இங்கிருந்து இந்த கொடுமைகளை களைய முயற்சிகள் எடுக்க கூடாது.

  ஓட்டுக் கட்சிகளுக்கு சாதிகள் அவசியமாக இருக்கலாம். இதில் எந்த கட்சியும் விதிவிலக்கில்லை. இன்றைய நடுவன் அரசிலிருக்கும் கட்சியும் அதை பின்னாலிருந்து இயக்கும் சங்கமும் உட்பட. இன்னும் அவர்கள் தான் வர்ணாசிரமத்தை அதிகம் தூக்கிப் பிடிப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை.

  ஒன்றை அவசியம் நினைவில்கொள்ள வேண்டும். ஓட்டுக் கட்சிகள் இன்று 60 70 ஆண்டுகளாகத்தானே இருக்கு. சாதி தீண்டாமை வண் கொடுமைகள் காலங்காலமாக இருக்கு.

  பி.கு.:

  ஐயா,

  இந்த என் பிண்ணூட்டம் மதக்கண்ணோட்டமாக தாங்கள் கருதினால் எடுத்துவிடலாம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   நண்பர் குலாம் ரசூல் அவர்களின் எண்ணங்களைப்பற்றி உங்கள் கருத்தை சொல்லுங்களேன்.
   பிறகு நானும் சேர்ந்து கொள்கிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. தமிழன் சொல்கிறார்:

  எனக்கு இதற்கு பதில் எழுதவேண்டும் என்று தோன்றியது. அதனால் எழுதுகிறேன். இதில் அரசியல் கருத்துக்களைச் சேர்க்கவில்லை. தமிழன் வந்து அவர் கருத்தைக் கூறட்டும்.

  குலாம் ரசூல் கேட்கிறார்.
  1. எங்கிருந்து எப்போதிருந்து தோன்றியது, அதன் வேர் எது.
  2. வேதங்கள், புராணங்கள் முந்திவந்ததா? வர்ணாசிரம கொள்கையா?’
  3. அவர்கள் தான் வர்ணாசிரமத்தை அதிகம் தூக்கிப் பிடிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்
  4. சாதி தீண்டாமை வண் கொடுமைகள் காலங்காலமாக இருக்கு.

  2,. வர்ணாசிரம கொள்கைதான் முதலின் வந்திருக்கும். நமக்குத் தெரிந்து மனுவைத்தான் (அவர் எழுதிய நூல் இருந்ததால்) சொல்கிறார்கள். நான் நினைக்கிறேன்.. இது அனாதி காலத்தது. இவைகளையும் உள்ளடக்கியதுதான் வேதம். புராணங்கள், இதிகாசங்கள் போன்றவை, என் கருத்தின்படி, நடந்த வரலாறு, ஆனால் குறைந்த அளவு சிதைவோ அல்லது கொஞ்சம் அதீதமாக எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் நிகழ்ந்தவைகள் என்றே நான் தீவிரமாக நம்புகிறேன். நமக்குத் தெரிந்த மகாபாரத நிகழ்வுகளைப் பார்த்தால், வர்ணாசிரமக் கொள்கைகள் கடைபிடிக்கப்பட்டிருப்பது தெரியும். கோபத்தில் சிலர், சில வர்ணத்தை இகழ்ந்திருக்கலாம் (‘தேரோட்டி மகன் தானே நீ’-கர்ணனைப் பார்த்துச் சொன்ன சுடுசொல், ‘வேலைக்காரிக்குப் பிறந்த கீழ்மகன் தானே நீர்’-இது துரியோதனன் தன் சித்தப்பாவைப் பார்த்துச் சொன்னது, முனிவர்கள் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் என்று வெளிப்படையாக இதிகாசங்கள் கூறுகின்றன – ராஜ குலத்தைச் சேர்ந்தவர் பின்பு ப்ரம்ஹ ரிஷியானவர். நிறைய ப்ரம்ஹ ரிஷிகள்/முனிவர்கள். அவர்களும் மாபெரும் தவறுகளைச் செய்கிறார்கள். ஆனாலும், வர்ணாசிரமம் என்பது வெறுக்கத்தக்கதல்ல. அது மனித குலத்தின் தொழில்/இயற்கை வைத்துப் பிரிக்கப்பட்டது. இதில் எந்த வர்ணத்தைச் சார்ந்தவனும், தன்னுடைய சாகசத்தால், முயற்சியால் இன்னொரு வர்ணத்தை எளிதில் சேர்ந்துவிடமுடியும். மனிதகுலம் வாழ, 4 வகையான மனிதர்கள் தேவை. (அ) உழைப்பவர்கள் (ஆ) வியாபாரம், பொருட்களை எல்லோருக்கும் சேர்ப்பவர்கள் (இ) மக்களைக் காப்பவர்கள்-இவர்கள் வலிமையும் போர்க்குணமும் கொண்டவர்கள் (ஈ) இவர்கள் அனைவரும் வாழப் ப்ரார்த்தனை செய்பவர்கள், நீதி நேர்மையை வலியுறுத்துபவர்கள். இதில் யார் உயர்ந்தவர்கள் என்று பேதம் பார்ப்பது அறிவுடைமையன்று. வேதம் இதனைச் செய்யவில்லை, அதாவது இவர்கள் உயர்ந்தவர், இவர்கள் மோசமானவர்கள் என்று சொல்வது. (நம் உடம்பிலேயே, தலை, மார்பு/கை, கால்கள், பாதங்கள், கழிவை வெளியேற்றும் உறுப்புகள் இருக்கின்றன. எல்லாம் சேர்ந்தது மனிதன். ஒன்று ஒன்றின்மேல் பெரும்பாலும் படாமல் இருப்பதுதான் நாம் சுத்தம் என்று கருதுகிறோம். அதற்காக, கழிவு உறுப்புகளை வெறுத்து வெட்டிவிடமுடியுமா? கால்கள் வீண் என்று சொல்லமுடியுமா? தலை, தான் உயரத்தில் இருப்பதால் நான் பெரியவன் என்று சொல்லுவது மடமையல்லவா? மார்பு, கைகள், தாங்கள்தான் உடலையே காக்கிறோம் என்று பெருமை பேச முடியுமா?)

  1. அதன் வேர் எது? – இவைகளை ரிஷிகள் (பிராமணர்கள் அல்லர்) தங்கள் தெய்வீகத் தியானத்தில் உணர்ந்தது என்று எழுதியிருக்கிறது. இந்த நான்கு வர்ணங்களும், காலப்போக்கில் பல பிரிவுகளாயின (அதுவும் இடங்களையும் வாழும் முறையையும், உணவுக்கான வழியையும், சிலரிடத்தில் வழிபாட்டு முறையையும் பொறுத்து சாதிகளாயின. அதிலும் பலப் பல கிளைகளாயின. இது வளர்ந்துகொண்டே போகிறது)

  3. இந்தக் கருத்து தவறான புரிதல் என்று நினைக்கிறேன் (Biased Opinion. காமாலைக் கண்ணணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பதுபோல). வர்ணாசிரமத்தைத் தூக்கிப்பிடிப்பது மக்கள். மக்கள் மட்டுமே. அதிலிருந்து அவர்களேதான் மீண்டு வர முடியும். ‘வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்’ என்று யார் கூறுகிறார்கள். ஏன் அவர்களுக்கு, மீனவர்களும், ப-ர்களும், ப-யர்களும், தோட்டிகளும் மனிதர்களாகத் தோன்றவில்லை? ஏன் தேவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அடிக்கடி உரசல் ஏற்படுகிறது? வைணவர்களிடையே கடுமையான உரசல்கள் இல்லையா? பிராமணர்களிடையே 5-6 சாதிகள் இல்லையா? அவர்களுக்குள்ளேயே பெண்கொடுக்கல் வாங்கல் அவ்வளவாகக் கிடையாது என்பது தெரியுமா? சைவர்களிடையேயும் பலப் பல பிரிவுகள் இருக்கின்றன. திரு’நெல்வேலி சைவப் பிள்ளைமார் என்பது ஒரு தனிப் பிரிவு. அவர்கள் மற்ற பிள்ளைமார்களோடு திருமண உறவு வைத்துக்கொள்வது அபூர்வம். இது எல்லாம் இடத்தையும், வழக்கத்தையும் பொறுத்தது. அது தவறா தவறில்லையா என்பது அவரவர் முடிவு. இதற்கும் சங்கப் பரிவாரங்களுக்கும் என்ன சம்பந்தம்?

  என்னைப் பொருத்தவரையில், ‘யாரும் யாருக்கும் குறைவல்ல’, ‘அவரவர் பழக்கம், அடுத்தவர்களைத் துன்புறுத்தாத வரையில், அடுத்தவர்களை அவமதிக்காத வரையில்’ தவறில்லை.

  4. சாதித் தீண்டாமை, வன்கொடுமைகள் காலம் காலமாக இருக்கு. – ‘காலம் காலமாக’ என்பது ஓரளவு உண்மை. ஆனால், அந்தக் கொடுமைகள் மிக மிகக் குறைவு. அது தவறு என்பதை இந்துப் புராணங்களும், இதிகாசங்களும், பக்தி இலக்கியங்களும் பலப் பலதடவை சொல்லியிருக்கின்றன. (ஆதிசங்கரர், குளித்துவிட்டு வரும்போது நாயுடன் வந்த புலையனைப் பார்த்து ஒதுங்கிப்போ என்று சொல்ல, சிவபெருமானே புலையராக வந்ததாகக் காட்சி கொடுத்து அறிவுரை சொல்கிறார். வைணவர்களின் தலைவர்களான ஆழ்வார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜாதியைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலரை கோவிலில் அனுமதிக்காமல் இருந்ததற்காக இறைவனே அர்ச்சகர்களை அவரிடம் போய் மன்னிப்புக்கேட்டு கோவிலுக்குக் கூட்டிவரச் சொன்னதெல்லாம் வரலாறாக இருக்கிறது. வைணவத் தலைவரனான ராமானுசரைக் கொல்வதற்கு இன்னொரு பிராமணர்தான் அவர் உணவில் விஷத்தை வைத்தார். வைணவத் தலைவர் ராமானுசருடைய ஆசாரியர்கள் பலர் பிராமணர்கள் கிடையாது. இதுபோல ஏகப்பட்ட நிகழ்வுகளைக் கூறலாம். அதுவே பலப் பல இடுகைகளாகிவிடும். உங்கள் புரிதலுக்காகச் சொல்லுகிறேன். இத்தகைய பிரிவுகள், எல்லா மனித இனத்திலும் உண்டு, இஸ்லாமியர்கள் முதற்கொண்டு. அதனைப் பற்றியும் மிகவும் நீளமான கட்டுரையாக எழுதமுடியும். கிறிஸ்துவர்களிடமும் மிக அதிகப் பிரிவுகள் உண்டு. என்னுடைய அனுமானம். இந்து மதம் அனாதியானது. அதனால் பலப் பல பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. கிறித்துவம் 2000ம் ஆண்டுகளுக்கு முந்தையது. அதனால் அதில் வழிபடப்படும் தெய்வங்களும், பிரிவுகளும் அதிகமாக இருந்தாலும், அதாவது 100 பிரிவுகள், இந்துமதம் போல் கிடையாது. இஸ்லாம் வந்து 1400 ஆண்டுகள்தான் ஆயிருந்தபோதும், அதிலும் 8 பிரிவுகளாவது எனக்குத் தெரிந்து உண்டு. தமிழகத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், கேரளாவில் 10-20 கிறித்துவப் பிரிவுகளும், தமிழகத்தில் மட்டும் 6க்கு மேல்-சுன்னி, ஷியா, சூஃபி, வஹாபி, உருது முஸ்லீம், தமிழ் முஸ்லீம் போன்று- இஸ்லாம் பிரிவுகளும் உண்டு. ஒருவர் இன்னொருவரோடு திருமண உறவு கொள்ளமாட்டார்கள்).

  அப்படீன்னா என்ன அர்த்தம்? மக்களிடையே, அவர்களுடைய கர்வத்துக்காகவும், அகம்பாவத்துக்காகவும், வெட்டிப் பெருமைக்காகவும் இந்த வர்ணத்தை வைத்துத் தொங்குகிறார்கள். அந்த வர்ணமும் அவர்களுக்குப் போதவில்லை. வர்ணத்துக்குள்ளேயே சில பல ஜாதிகளை உருவாக்குகிறார்கள். அதன் மூலம், அவர்களுக்குள்ளேயே பேதங்களைக் கற்பித்துக்கொண்டு, நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்று சொல்லுகிறார்கள். அதுவும் அவர்களுக்குப் போதவில்லை. அந்த ஜாதிகளுக்குள்ளேயும் பலப் பல கிளைகளைப் பெருக்கி, ஒவ்வொரு கிளையும் தனித் தனியாக இருக்கிறார்கள். இது வர்ணத்தின் தவறா, மனித இனத்தின் தவறா?

  இந்த எண்ணத்தைக் களைவது மதத் தலைவர்களிடமும், மக்களிடமும்தான் இருக்கிறது. குறிப்பாக மக்களிடம்தான் இருக்கிறது. இதற்கு அரசு மிகவும் உதவ வேண்டும். ஆனால் நம் அரசு (1947ல் இருந்தே) இதனைப் பற்றிச் சிந்திப்பதில்லை. இப்போ, பிரிட்டிஷ் பள்ளிகளில், மனித உரிமை, வழிபாட்டு உரிமை, அடுத்தவரை இன்னொரு உயிராக நினைப்பது போன்றவற்றை 1ம் வகுப்பிலிருந்து கற்றுத்தருகிறார்கள். அதனால் அவர்களால் இயல்பாக ஒரு கிறித்துவனிடமோ, இஸ்லாமியனிடமோ அல்லது இந்துவிடமோ, மனிதனாகப் பழக முடிகிறது.

  எப்போது வெறுப்பு வளர்கிறது? எப்போது ஒருவன் தான், தன்னுடைய வழிமுறை, தன்னுடைய மதம் உயர்ந்தது என்று சொல்கிறானோ அப்போதுதான். என் தாய் நல்லவள் என்று சொல்வது என் உரிமை, அது உண்மையாகவும் இருக்கும். ஆனால், அவள் உன்னுடைய தாயைவிட உசத்தி என்று சொல்லி யாரையும் நம்பவைக்கமுடியாது. என்னைப் பொறுத்தவரையில், மத வழிபாடு என்பது ஒருவனின் தனிப்பட்ட உரிமை. அதனைப் பற்றிப் பொது வெளியில் பேசும்போதோ, அதற்கு ஊறு விளைக்கும் கருத்து வெளிப்படும்போதோ, மத வெறி என்ற பொறி அங்கு பறக்கிறது. அது விரைவில் அணையாது. இது அரசியல்வாதிகளுக்கு உதவுவதால் (காங்கிரஸிலிருந்து எல்லாக் கட்சிகளுக்கும்), அவர்கள் அந்த எண்ணத்தைப் போக்கும் செயல்களில் ஈடுபட மறுக்கிறார்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப குலாம் ரசூல்,

   நண்பர் தமிழன் மிக அழகாக, விரிவாக விளக்கி விட்டார்…
   தமிழனுக்கு என் நன்றிகள்.

   வர்ணங்கள் தொழில் சார்ந்து பிரிக்கப்பட்டவை.
   ஜாதிகளைப் போல் – உயர்வு, தாழ்வு கூறி அல்ல.

   வர்ணங்கள் வேத காலத்தில் விவரிக்கப்பட்டவை.
   ஆனால், ஜாதிகள் – பிற்காலங்களில், பலவேறு காலகட்டங்களில்,
   பலவேறு சமூகங்களால், தங்கள் வசதிக்காகவும், சுயநலத்தின் அடிப்படையிலும்
   உருவாக்கப்பட்டவை.

   தமிழன் கூறியுள்ள இந்த கருத்துகளை நான் முற்றிலுமாக ஏற்கிறேன் –

   // மக்களிடையே, அவர்களுடைய கர்வத்துக்காகவும், அகம்பாவத்துக்காகவும், வெட்டிப் பெருமைக்காகவும் இந்த வர்ணத்தை வைத்துத் தொங்குகிறார்கள். அந்த வர்ணமும் அவர்களுக்குப் போதவில்லை. வர்ணத்துக்குள்ளேயே சில பல ஜாதிகளை உருவாக்குகிறார்கள். அதன் மூலம், அவர்களுக்குள்ளேயே பேதங்களைக் கற்பித்துக்கொண்டு, நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்று சொல்லுகிறார்கள். அதுவும் அவர்களுக்குப் போதவில்லை. அந்த ஜாதிகளுக்குள்ளேயும் பலப் பல கிளைகளைப் பெருக்கி, ஒவ்வொரு கிளையும் தனித் தனியாக இருக்கிறார்கள்.

   இந்த எண்ணத்தைக் களைவது மதத் தலைவர்களிடமும், மக்களிடமும்தான் இருக்கிறது. குறிப்பாக மக்களிடம்தான் இருக்கிறது. //

   // எப்போது வெறுப்பு வளர்கிறது? எப்போது ஒருவன் தான், தன்னுடைய வழிமுறை, தன்னுடைய மதம் உயர்ந்தது என்று சொல்கிறானோ அப்போதுதான்.

   என் தாய் நல்லவள் என்று சொல்வது என் உரிமை, அது உண்மையாகவும் இருக்கும். ஆனால், அவள் உன்னுடைய தாயைவிட உசத்தி என்று சொல்லி யாரையும் நம்பவைக்கமுடியாது.

   என்னைப் பொறுத்தவரையில், மத வழிபாடு என்பது ஒருவனின் தனிப்பட்ட உரிமை. அதனைப் பற்றிப் பொது வெளியில் பேசும்போதோ, அதற்கு ஊறு விளைக்கும் கருத்து வெளிப்படும்போதோ, மத வெறி என்ற பொறி அங்கு பிறக்கிறது. அது விரைவில் அணையாது. இது அரசியல்வாதிகளுக்கு உதவுவதால் (காங்கிரஸிலிருந்து எல்லாக் கட்சிகளுக்கும்), அவர்கள் அந்த எண்ணத்தைப் போக்கும் செயல்களில் ஈடுபட மறுக்கிறார்கள்.//

   முன்னதாக நான் எழுதியிருந்த சில ஆன்மிகம் சம்பந்தப்பட்ட இடுகைகளில்
   இது போன்ற கருத்துகளைத்தான் கூறி இருப்பேன்.

   – நண்ப குலாம் ரசூல்,

   நீங்கள் எழுப்பிய வினா, ஒரு விதத்தில் சில விஷயங்களை விரிவாகப்பேச,
   விவாதிக்க உதவியது.

   ஜாதி, மதம் போன்ற விஷயங்கள் உணர்வுபூர்வமானவை. சட்டென்று பிரச்சினையை
   பூதாகாரமாக வளர்த்து விடும். இவற்றைப்பற்றி பேசும்போதும், எழுதும்போதும் –
   மிக எச்சரிக்கையாக, பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

   அதனால் தான் நான் இந்த வலைத்தளத்தில், ஜாதி, மத வேறுபாடுகளை
   வளர்க்கக்கூடிய, கிளறக்கூடிய எந்த விஷயங்களையும் எழுதுவதுமில்லை,
   பிறரை எழுத அனுமதிப்பதும் இல்லை.

   நம்மால் முடிந்த வரை அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாக சகோதர உணர்வுடன்
   வாழக்கூடிய சூழலை உண்டாக்க பாடுபட வேண்டும்.

   உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • தமிழன் சொல்கிறார்:

    “ஜாதி, மதம் போன்ற விஷயங்கள் உணர்வுபூர்வமானவை” – இது எனக்கு ஒன்றை நினைவுபடுத்தியது.

    14 ஆண்டுகளுக்கு முன்பு, லண்டனில் ஒரு வழக்கறிஞர் Firmல், எங்களது கம்பெனியின், ஒர் பிரச்சனையை ஹேண்டில் செய்த வழக்கறிஞரைச் சந்தித்தேன். வழக்கைப் பற்றி நிறையப் பேசிக்கொண்டிருந்தபின், எனக்கு முழு வெஜிடேரியன் உணவுதான் வேணும் என்றேன். லஞ்சின்போது, small talk ஆரம்பித்தபோது, அப்போது டோனி ப்ளேர் செய்த ஒரு விஷயத்தை ஆரம்பித்தேன். அப்போது அவர் சொன்னார்… ‘எப்போதும் அரசியலும் மதமும் பேசக்கூடாது. அது கருத்து வேறுபாடுகளில் கொண்டுவந்துவிடும். இந்த இரண்டிலும் ஒவ்வொருவர் பார்வையும் வேறு. அதனான் நான் யாரிடமும் இந்த இரண்டு குறித்துப் பேசுவதில்லை’ என்றார். அதுதான் என் நினைவுக்கு வந்தது.

 4. புதியவன் சொல்கிறார்:

  @தமிழன் – ‘புதியவன்’ என்று எழுதுவதற்குப் பதிலாக ‘தமிழன்’ என்று எழுதிவிட்டீர்களா? இல்லை வேறு யாராகிலும் ‘தமிழன்’ என்ற பேரில் எழுதுகிறார்களா உங்களைத்தவிர? நானே சில இடுகைகளில் வெவ்வேறு ‘தமிழன்’ லேபிளை இந்த பிளாக்கில் பார்த்திருக்கிறேன்.

  எல்லா மதங்களும் இறைவன் ஒருவனே என்றுதான் கூறுகின்றன. என் புரிதலின்படி, இந்து மதமும் இறைவன் ஒருவனே என்றுதான் சொல்கிறது. இஸ்லாம் மதமும் அப்படித்தான். கிறிஸ்தவத்தில், கிறிஸ்து, ‘ஏலி ஏலி லேமா சபக்தானி’ என்று சிலுவையில் அவரை அறையும்போது சொல்கிறார். அதன் அர்த்தம் என்ன, கண்ணதாசன் வார்த்தையில், ‘இறைவா இறைவா என்னை ஏனோ கைவிட்டாயே கைவிட்டாயே’. அதற்கு முந்தைய மலைப்பிரசங்கத்தின் முன்பும், அவர், ‘பரமண்டலத்தில் இருக்கும் பரமபிதாவே’ என்றுதான் தொழுகிறார். (மற்ற மதங்கள் பெரும்பான்மையில் வரவில்லை என்பதால் அதனை எழுதவில்லை).

  இஸ்லாமியர்களுக்கு உருவ வழிபாடு Strictஆகக் கிடையாது. ஆனால் அதன் ஒரு வடிவமான சூஃபி வழிபாடில் (பெர்ஷியா ஈரான் Origin) இறைவனைக் காதலியாக எண்ணி, அவரைச் சேரவேண்டும் என்ற ஆசையில், அவனை நினைத்து உருகுவதுபோல் வழிபாடுகள் உண்டு.(குலாம் ரஷீத்-இதனை வைத்து கருத்தாக்கம் வேண்டாம்.).

  கிறிஸ்துவர்களுக்கு, இயேசு கிறிஸ்து, பரமபிதா, பரிசுத்த ஆவி – மூன்றும் ஒருவரே என்ற நம்பிக்கை. அதிலும் இயேசுவைப் பெற்றதால், அன்னை மரியாளையும் தொழுவார்கள். அப்போஸ்தலர்களையும் தொழுவார்கள். அது இன்னும் விரிவடைந்துகொண்டே வந்து, எல்லாப் புனிதர்களையும் (வாடிகன் அங்கீகரித்த) தொழுவார்கள்.

  இந்துக்களிடையே, இறைவனை பல விதங்களில் பல ரூபங்களில் எண்ணி வழிபாடு நடக்கிறது. நான் படித்து அறிந்த வரையில், பலவித நம்பிக்கைகள் கலந்து கட்டி, எது முன்னோர் வழிபாடு, எது இறைவன் வழிபாடு, எது அவ தூதர்கள்/அவதாரங்களின் வழிபாடு, எது ஆச்சாரியர்களின்/குருக்களின்/ஆசிரியர்களின் வழிபாடு என்று பிரித்தரியமுடியாதபடி பலரின் நம்பிக்கைகள் ஒன்று சேர்ந்துவிட்டன. காலப்போக்கில் பல புனைவுகள், வரலாறு, கதைகள் போன்ற பலவும் சேர்ந்துவிட்டன. அதனால் என்ன. அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு.

  மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட மதங்களில், அதன் வழிபாடுகளில், மத சம்பந்தப்பட்ட புத்தகங்களில் எவைகளைத்தான் கேள்வி கேட்க முடியாது? அதனால் தேவையற்ற கேள்விகளை விட்டுவிட்டு, புரிந்துகொள்வதற்காக அவைகளைப் படித்தறிவது நமக்கு நல்லது.

  நீங்கள் சொன்னதில் எனக்குப் பிடித்தது, ‘என்னுடையது உசந்தது’ என்று யார் சொன்னாலும், அங்கு பிரிவுதான் வரும். கருத்து மோதல்கள் அல்ல, வெறுப்பு மோதல்கள்தான் வரும். அதனால்தான் காவிரிமைந்தன் அவர்கள் பலமுறை, சாதி, மதக் கருத்துக்களைத் தீவிரமாக வெளியிட வேண்டாம் என்று சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

  இன்று காலையில் பழைய கல்கியில் இந்த நகைச்சுவையைப் பார்த்தேன்.

  ‘குருவே.. நாம் செத்த பிறகு நம் ஆன்மா எங்கு போகிறது’
  ‘சிஷ்யா. அது நாம செத்தாத்தானே தெரியும்’

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்ப புதியவன்,

  நல்ல, பயனுள்ள கருத்துகளைக் கூறுபவர்கள், தமிழனாக இருந்தாலும்,
  புதியவனாக இருந்தாலும் வரவேற்கப்பட வேண்டியவர்களே.

  இடுகைக்கு கூடுதல் வலு சேர்க்கும் உங்கள் பின்னூட்டங்களை
  வரவேற்கிறேன்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 6. குலாம் ரசூல் சொல்கிறார்:

  காமை ஐயா அவர்களுக்கு, நன்றி ஐயா,

  நன்பர் தமிழன் அவர்களின் நீண்ட பதிலுக்கும் நன்பர் புதியவன் அவர்களுக்கும் நன்றி.

  தங்க‌ளின் பிறப்பால் உயர்வு தாழ்வில்லை என்ற வரிகளை தான் நான் முன்னெடுத்தேன். உங்கள் மூவரின் கண்ணியமான பதில்கள் கண்டு சந்தோசம்.

  ஆனாலும் தமிழன் அவர்களின் இஸ்லாம் சம்பந்தபட்ட வரிகளுக்கு எனக்கு தெறிந்த சில விளக்கங்கள்.

  தமிழன் அவர்கள் சில உதாரணங்களில் குரிப்பிட்டுள்ளது போல் தவறுகளை தவறுகள் என்று அறியும்போது அதனை களைவது தான் எந்த மனிதனுக்கும் இயக்கத்துக்கும் மதத்திற்கும் நல்லது.

  யாரும் எதுவும் சுயபரிசோதனை இல்லாமல் சரி செய்துகொள்ள முடியாது. தவறுகள் தான் இருந்துவிட்டு போகட்டுமென்று விட்டோமானால் புறையேறிப் போய்விடும்.

  இஸ்லாத்தை பொறுத்தவறை அதன் அடிப்படை இரண்டு. குர்ஆன், ஹதீஸ்.

  அந்த இரண்டையும் புரிந்துகொண்டவகையில் மக்கள் அதன் அனுஷ்டானங்களில் குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமாக‌ புகுந்துவிட்ட சில நூதனங்களை அந்தந்த காலகட்டங்களில் அறிஞர் பலர் தோன்றி மார்க்கத்தை செம்மைபடுத்தியே வந்துள்ளார்கள். ஏனென்றால் மனிதர்கள் தவறிழைப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

  அந்த அறிஞகளில் முக்கியமானவர் சவுதியில் தோன்றிய அப்துல் வஹ்ஹாப் என்பார். இவர் பேரில் தான் இன்று அதிக அவதூறுகளும் கட்டுக்கதைகளும் வஹ்ஹாபிகள் என்ற தூற்றல்களும். இவர் ஒன்றும் அதிகம் செய்துவிடவில்லை. இஸ்லாத்தில் புகுந்துவிட்ட குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமான நூதனங்களையும் இறை இணைவைப்புகளையும் களையெடுத்தார். அவ்வளவே.

  அதுபோல் தமிழகத்தில் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக சில இயக்கங்கள் அந்த காரியங்களை செய்துவ‌ருகின்றன.

  மனிதர்கள் தவறிழைப்பவர்களாகவே படைக்கப்பட்டுள்ளார்கள்.

  இஸ்லாதில் பிரிவுகள் கிடையாது ஐயா. அதை புரிந்துகொள்ளாமல் பிரிந்துபோனவர்களை நாம் இஸ்லாமிய பிரிவாக ஏற்கமுடியாது. எங்கள் நபி அன்றே சொல்லி சென்றது தான். இஸ்லாத்தில் 72 பிரிவினைகள் ஏற்படும். அதில் ஒன்று தான் நேர்வழியில் இருக்கும் என்று. அது குர்ஆன், ஹதீஸ் போதிக்கும் வழி.

  மேலும், இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்பு தோற்றுவிக்கப் பட்டதல்ல. அது 1400 வருடங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்து.

  முதல் மனிதர் ஆதம் அவர்கள் தொட்டு இறுதி நபி முகமது அவர்கள் வரை ஓரிறைக் கொள்கையை போதிக்க கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்கள் என்பது இஸ்லாமிய கொள்கை.

  ஒவ்வொரு தூதர்களும் வாழ்ந்து அவர்களின் மறைவிற்கு பிறகு அந்தந்த காலங்களில் வாழ்ந்த மக்களால் அந்தந்த தூதர்கள் கொண்டு வந்த வேதங்களையும் நற்போதனைகளயும் விட்டுவிலகி அவைகளை பொய்படுத்தி தன் தேவைக்கு ஏற்ப மாற்றி மக்கள் வழிகெட்டு போன காலங்களில் எல்லாம் கடவுளால் இன்னொரு தூதரை அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டு அந்த மக்களுக்கு அனுப்பப்பட்ட நீண்ட தொடரில் வந்த முக்கியமான இறை தூதர்களில் நபி ஆதம், நபி நூஹ்(நோவா), நபி இப்றாஹீம்(ஆப்ரஹாம்), நபி மூஸா(மோசஸ்), நபி ஈஸா(கிறிஸ்து, இதை கிறிஸ்தவர்கள் ஏற்கமட்டார்கள்), இறுதியாக நபி முகமது. இவர்கள் அனைவ்ரும் போதித்தது ஓரிறைக் கொள்கையை தான்.

  இறை தூதர்கள் உலகின் அணைத்து மொழி பேசக்கூடிய மக்களுக்கும் பகுதிகளுக்கும் அனுப்பப் ப‌ட்டதாக குர்ஆன் சொல்கிறது. குர்ஆன் இறைவாக்கு.

  இங்கு புதியவன் அவர்களின் பதிலில் ஆரம்ப வரிகளை நினவுகூர்வோம்.

  //எல்லா மதங்களும் இறைவன் ஒருவனே என்றுதான் கூறுகின்றன. என் புரிதலின்படி, இந்து மதமும் இறைவன் ஒருவனே என்றுதான் சொல்கிறது. இஸ்லாம் மதமும் அப்படித்தான். கிறிஸ்தவத்தில், கிறிஸ்து, ‘ஏலி ஏலி லேமா சபக்தானி’ என்று சிலுவையில் அவரை அறையும்போது சொல்கிறார். அதன் அர்த்தம் என்ன, கண்ணதாசன் வார்த்தையில், ‘இறைவா இறைவா என்னை ஏனோ கைவிட்டாயே கைவிட்டாயே’. அதற்கு முந்தைய மலைப்பிரசங்கத்தின் முன்பும், அவர், ‘பரமண்டலத்தில் இருக்கும் பரமபிதாவே’ என்றுதான் தொழுகிறார். (மற்ற மதங்கள் பெரும்பான்மையில் வரவில்லை என்பதால் அதனை எழுதவில்லை).//

  அந்த ஓரிறையை தெரிந்து அறிந்து வணங்க நம் அனைவருக்கும் கடவுள் அருள்பாளிக்கட்டும்.

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நன்றி நண்ப குலாம் ரசூல்.

  ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது என்கிற மன திருப்தியுடன் இந்த விஷயத்தை இப்போதைக்கு நிறைவு செய்வோம்.. மற்ற பல நண்பர்களுக்கும் இந்த விளக்கங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.