திரு. ஸ்டாலின் ….. வாருவது (தான்) …. தூரா…….?


வரலாறு காணாத வறட்சி என்று சொல்கின்ற அளவிற்கு தமிழகத்தில் வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. விவசாயத்திற்கு நீர் வேண்டுவது போய், குடிக்கவே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு முக்கியமான காரணம் கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை 19 சதவீதமும், வடகிழக்கு பருவமழை 62 சதவீதமும் குறைவாக பெய்ததே என்றும் சொல்லலாம்.

தண்ணீர் பிரச்சினையை தமிழ்நாடு ஒவ்வொரு வருடமும் சந்தித்து வருகிறது.. இந்த பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்கும் முயற்சியில், தமிழகம் முழுவதுமே ஈடுபாடு காட்ட வேண்டும்….

தமிழகத்தில் ஓடும் அனத்து ஆறுகளிலும் தகுந்த இடைவெளிகளில் நிறைய அளவில் தடுப்பணைகள் கட்டுவதன் மூலமும்,
கண்மாய்கள், குளங்கள், ஏரிகளை, வாய்க்கால்களை தூர்வாருதலை இந்த கோடைக்காலத்திலேயே மிக வேகமாக, தீவிரமாக – நிறைவேற்றுவதன் மூலமும் மட்டுமே , வருகின்ற மழைக்காலத்தில் தண்ணீரை சேமிப்பதோடு,நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்களையும் நிறைவேற்ற முடியும்…..

புதிதாக எதையும் செய்யா விட்டாலும், முதலில் குறைந்த பட்சம் நமது முன்னோர்கள் விட்டுச்சென்றுள்ள நீர் ஆதாரங்களையாவது மீட்டெடுத்து, புதுப்பிக்க வேண்டும்.

குடிமராமத்துக்காக என்று பட்ஜெட்டில் தமிழக அரசு கொஞ்சம் பணம் ஒதுக்கினாலும், இதனை செயல்படுத்துவதில் அரசு போதிய அக்கறை, கவனம் செலுத்தவில்லை. நிலைமையின் தீவிரத்தை தமிழக அரசு உணர்ந்ததாக தெரியவில்லை… இருக்கின்ற குறைந்த கால ஆட்சியில் எந்த அளவிற்கு சுருட்ட முடியும் என்பதே ஆள்பவர்களின் முக்கிய நோக்கமாகவும், லட்சியமாகவும், குறிக்கோளாகவும் இருக்கும்போது – இதிலெல்லால் அவர்கள் கவனம் செலுத்துவார்கள் என்று நம்பி விட முடியாது.

தமிழகத்தின் இளைஞர் பட்டாளம், கிராமங்களில் கோடைக்காலத்தில் விவசாயப்பணி இன்றி சும்மா இருப்பவர்கள், சமுதாய ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் – இவை அனைத்தும், அந்தந்த பகுதியில் தங்களால் இயன்றதை செய்வதில் உடனடியாக ஈடுபட வேண்டும்..

ஏற்கெனவே, துவங்கி விட்ட இந்த நடவடிக்கைகளில் ஒன்றிரண்டைப்பற்றி கீழே விவரிப்பதன் மூலம் மற்ற ஊர்களிலும், மக்கள் ஈடுபாட்டுடன் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்கிற எண்ணத்தில் சில விவரங்களை
கீழே தருகிறேன்….

இங்கே குறிப்பிட்டிருக்கும் ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமல்ல…. தமிழகத்தின் பல பகுதிகளில், தன்னார்வ தொண்டர்கள்
ஏற்கெனவே இந்த முயற்சியை துவங்கி விட்டார்கள்.

————–

பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் புதுகுறிச்சி, குளத்தூர், வரகூர்,அனூக்கூர் போன்ற பகுதிகளில் இளைஞர்களே முன்னின்று ஏரியை தூர்வாரி கொண்டிருக்கிறார்கள். மாற்றத்துக்கான விதையை விதைக்க தொடங்கியுள்ளார்கள் இளைஞர்கள்.

பெரம்பலூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புதுகுறிச்சி கிராமம். 50 ஆண்டுகளாக ஏரியை தூர்வாராமல் விட்டதால் ஏரி தூர்ந்து போய் சமதளமாக மாறியிருந்தது. இதை நம்மாழ்வார் இளைஞர் நற்பணிமன்றத்தினர் கட்டாந்தரையாக கிடந்த ஏரியை கடல்போல் மாற்றி காட்டியிருக்கிறார்கள்.

அந்த நற்பணி மன்றத்தினர் தரும் தகவல் –

புதுகுறிச்சி ஏரி 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியால் 700 ஏக்கருக்கும் மேல் விளைநிலங்கள் பாசன வசதி பெற்றது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்துக்கு இந்த ஏரியால் தண்ணீர் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால், இப்போது கடும் வறட்சி நிலவுகிறது. வற்றாமல் நீர் கொடுத்துக்கொண்டிருந்த ஏரியில் சீமைகருவேல
மரங்கள்தான் மண்டிபோய் கிடக்கின்றன. ஏரி இருந்தற்கான தடமே தெரியாமல் அழிந்து போய்விட்டது. எங்கள் ஏரியை மீட்க போகிறோம் என்று கலெக்டர் நந்தகுமாரிடம் மனு கொடுத்தோம். அவரும் க்ரீன் சிக்னல் கொடுத்தார். முதலில் ஏரியில் வளர்ந்து கிடந்த சீமைகருவேல மரங்களை அகற்றுவதற்காக குறைந்த விலையில் ஜேசிபி வாகனத்தை வாடகைக்கு எடுத்துமகொண்டு எங்கள் வேலையை தொடங்கினோம்.

எங்களுடைய முயற்சியை பார்த்துவிட்டு கிராம மக்களே எங்களுக்கு கைகொடுக்க தொடங்கினார்கள். அந்த வகையில் சீமைகருவேல மரங்களை வெட்டி விறகுகளை கடைகளில் விற்றோம். அதிலிருந்து கொஞ்சம் பணம் கிடைத்தது. எங்களுடைய முயற்சியை பார்த்துவிட்டு கலெக்டரும் ஏரியை தூர்வாரும் திட்டத்துக்கு ஒரு லட்சம் கொடுத்தார்.

ஏரியில் உள்ள வண்டல் மண்களையும் விவசாயிகள் எங்களிடம் பணத்தை கொடுத்து வாங்கினார்கள். அந்த பணத்தை வைத்து கொண்டு ஏரிக்கு வரும் வரத்து வாய்க்கால்களை சரிசெய்தோம். பின்பு ஏரியின் மையப்பகுதியில் ஏழு ஏக்கர் அளவுக்கு ஐந்து அடி தூரத்துக்கு ஆழப்படுத்தியுள்ளோம். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பெய்த மழையால் இப்பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது.

———————-

இவர்களை பின்பற்றி குளத்தூர் நண்பர்களும் ஏரியை தூர்வார களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இது குறித்த விவரங்களை தந்த இளைஞர் கூறியது –

“எங்களை குளத்தூர் நண்பர்கள் குழு என்று அறிமுகப்படுத்திக் கொள்வதே சரியானதாக இருக்கும். எங்கள் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குளங்கள் இருந்ததால் இந்த ஊரை குளத்தூர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். ஆனால்,
இப்போது ஐந்து குளங்கள்தான் இருக்கிறது. அதுவும் தூர்ந்து போய் பயன்பாட்டுக்கு இல்லாமல் இருந்துவருகிறது.

அதேபோல் குப்பன் ஏரி 90 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மூன்று கிராமத்து மக்களும் இதை நம்பிதான் விவசாயம் செய்திருக்கிறார்கள். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது.

சீமைகருவேல மரங்களை அகற்றிவிட்டு, ஏரியை தூர்வார போகிறோம் என்று கலெக்டர் நந்தகுமாரிடம் மனுக்கொடுத்தோம். அதற்கு அவர் ஏரியை தூர்வார கோட்டா முடிந்துவிட்டது; எங்களிடம் பணம் இல்லையென்று சொன்னார். நாங்களே செலவு
செய்துகொள்கிறோம், நீங்கள் அனுமதி மட்டும் கொடுத்தால் போதும் சார் என்று சொல்ல, அவர் ஆச்சர்யமாய் பார்த்து எங்களுக்கு அனுமதி வழங்கினார்.

வெளிநாடுகளிலிருந்த எங்களது நண்பர்களிடம் உதவிக்கோரினோம். அவர்களும் அவர்களது நண்பர்களிடம் உதவிக்கேட்டார்கள். வெளிநாட்டு நண்பர்கள் மூலமாக எங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் அனுப்பினார்கள். பின்பு குப்பன் ஏரியை மீட்க போகிறோம். இளைஞர்கள் உதவி தேவை என்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் செய்திகளை பதிவு செய்திருந்தோம்.

150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைகொடுத்தார்கள். முதலில் சீமைகருவேல மரங்களை அகற்றினோம். பின்பு ஏரிக்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்கள் சரிசெய்தோம். இப்போது ஒன்பது ஏக்கருக்கும் மேல் ஏரியை தூர்வாரியுள்ளோம்.

இன்னும் எங்கள் வேலை முடியவில்லை. அதேபோல் ஏரியில் உள்ள வண்டல்மண் எடுக்க பல கலெக்டர்கள் அனுமதி கொடுப்பதில்லை. ஆனால், நம்ம கலெக்டர் எந்த தடையும் இல்லாமல் அனுமதி வழங்கினார். எங்கள் மீது நம்பிக்கை வைத்த கலெக்டருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம். இது எங்களுக்கு கிடைத்த முதல்வெற்றி”

பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் புதுகுறிச்சி, குளத்தூர், வரகூர்,அனூக்கூர் போன்ற பகுதிகளில் இளைஞர்களே முன்னின்று ஏரியை தூர்வாரி கொண்டிருக்கிறார்கள்.

——————————————————————-

நிலைமை இவ்வாறிருக்க –

” சில கோவில் குளங்களை தூர்வாரி செப்பனிட்டால், விரைவில் முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு கிட்டும் ” என்று ஜோசியர் சொன்னதாக, கூறிய மனைவி சொல்லை மந்திரமாக மேற்கொண்டு – சில குறிப்பிட்ட கோவில் குளங்களை மட்டும் தேடிச்சென்று

தொண்டர்கள் தூர்வாருவதை, தானும் மண்வெட்டி தூக்கி துவக்கி வைத்து – தொலைகாட்சிகளுக்கு போட்டோ-ஷூட் கொடுத்துக் கொண்டிருப்பவரால் –

தமிழகத்தின் தண்ணீர் தாகம் தீர்ந்து விடுமா என்ன…?

தமிழகத்தின் இளைஞர்களே, விவசாயப் பெருமக்களே, சமூக ஆர்வலர்களே – தொண்டு நிறுவனங்களே – – அரசு உதவிகள் வரும் என்று எதிர்பார்த்து, காத்திருந்து ஏமாந்து போகாமல்,

உடனடியாக துவக்குங்கள் நமது தாகம் தீர்க்கும் தண்ணீர் வேள்வியை….!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to திரு. ஸ்டாலின் ….. வாருவது (தான்) …. தூரா…….?

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இடுகையில் சொல்ல மறந்து விட்டேன்…

  நண்பர்கள் இயன்ற வரையில், இந்த செய்தி அதிக அளவில், பரவலாக
  வாட்ஸ்-அப், ஃபேஸ் புக் நண்பர்களுக்கு சென்று சேர உதவுங்களேன்.
  சிந்தனை பரவ, நம்மால் இயன்ற சிறு உதவி…!

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 2. Sundar Raman சொல்கிறார்:

  நல்ல முயற்சி , வரவேற்கத்தக்கது .

  நான் ஒரு 10,000 அனுப்புகிறேன் , அது போல உங்களுக்கு சில நண்பர்கள் பணம் அனுப்பின்னால் நாமும் அவர்களுக்கு நல்ல தொகையை கொடுக்கலாம் ( ஒரு லட்சம் இலக்கு வைக்கலாம் ) .. இந்த இலக்கை நாம் சுலபமாக அடையலாம் என நினைக்கிறேன் .

  அதை விட முக்க்கியம் , நல்ல பெரிய உள்ளம் , பணம் உள்ளவர்களிடம் இதை கொண்டு சேர்க்க வேண்டும் . எனக்கு தெரிந்த நாலு நல்ல பேரிடம் கொண்டு செல்கிறேன் .

  என்னுடைய ஈமெயில் sundar _vs @hotmail .com

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சுந்தர ராமன்,

   உங்கள் உதவும் உள்ளத்தை, POSITIVE APPROACH – ஐ வரவேற்கிறேன்.

   ஆனால் – மன்னிக்கவும்… பண விஷயங்களில் நான் ஈடுபட விரும்பவில்லை.. கையாளவும் விரும்பவில்லை. நீங்களே விசாரித்தறிந்து உண்மையான நபர்கள் / குழுக்களுக்கு அனுப்புவது சிறந்தது. இந்த தகவலை முடிந்த வரையில் பரவச்செய்வது நிச்சயம் பலனளிக்கும். இன்றைய இளைஞர்கள் இதிலெல்லாம் ஆர்வமாக இருக்கிறார்கள். அரசியல்வாதிகளை தான் நம்ப முடியவில்லை…. சமூக அக்கரையுள்ள இளைஞர்களை தாராளமாக நம்பலாம்.

   நான் இன்னமும் நிறைய கேள்விப்பட்டேன்… எல்லாவற்றையும் இங்கு எழுத முடியவில்லை. காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரு இளைஞர் குழு, கிருஷ்ணமூர்த்தி என்பவரின் முனைப்பில் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்றும் அறிந்தேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. புதியவன் சொல்கிறார்:

  அந்த அந்த ஊரில் உள்ளவர்கள் அங்கிருக்கும் சமூக சேவகர்கள் துணையோடு, ஊரின் நன்மைக்காக இந்த ஏரிகளையும், வாய்க்கால் வழிகளையும் தூர் வாரினால், மழைத்தண்ணீர் தேங்கியிருந்து, நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க ஏதுவாகும். நல்ல முயற்சி. இந்த மாதிரிச் செய்திகளை அவ்வப்போது வெளியிடுவது, மற்றவர்களையும் உத்வேகப்படுத்தும்.

  “வண்டல் மண்களையும் விவசாயிகள் எங்களிடம் பணத்தை கொடுத்து வாங்கினார்கள்” – நல்லவேளை… இவர்கள் நற்பணி மன்றத்தினர். இதைப் படிக்கும் உள்ளூர் கான்டிராக்டர்கள், மணல் கொள்ளையர்கள், ஏரியிலும் மணல் இருக்கிறது என்று திருட வராமல் இருந்தால் சரி.

  ஸ்டாலின் அவர்களைப் பற்றி நீங்கள் எழுதியது வியப்புக்குரியது அல்ல. ஸ்டாலின், கருணானிதி ஆடிய நாடகங்களைத் தானும் ஆடினால், பெரிய தலைவராகிவிடலாம் என்று பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார். மக்கள் நாடகக் காலம், சினிமாக் காலம் எல்லாவற்றையும் தாண்டி, மொபைல், வாட்ஸ்ஸப் காலத்துக்கு வந்துவிட்டார்கள் என்று யார்தான் அவருக்கு நினைவுபடுத்துவது? இந்த நாடகங்க வேஷங்களினால்தான், இளைய தலைமுறையிடம் அவர் ஒரு தலைவர் என்ற நன் மதிப்பைப் பெறமுடியவில்லை.

  அவர், ஷூவும், பட்டு வேட்டியும் கட்டிக்கொண்டு, பட்டுச் சேலை உடுத்திய விவசாயப் பெருங்குடி மக்களோடு சேர்ந்து நிலத்தில் போஸ் கொடுத்தவர்தானே. டிபன் கேரியரில் சாப்பாடு எடுத்துக்கொண்டு போய், கிராமத்து ஹோட்டல்களில், மற்றவர்கள் ஹோட்டல் சாப்பாடு சாப்பிட, இவர், டிபன் கேரியரிலிருந்து சாப்பாடை இலையில் போட்டுச் சாப்பிட்டுவிட்டு, தொண்டர்களோடு தொண்டராய் உணவருந்தினார் என்று பெயர் வாங்கியவர்தானே. மிகச் சமீபத்தில், சட்டசபையிலிருந்து வெளியே வந்தபிறகு, வேனுக்குள் போய்விட்டு, ரெண்டு பட்டனை கழட்டிவிட்டு, என் சட்டையைக் கிழித்துவிட்டார்கள் என்று மற்றவர்கள் கேலியாகப் பார்க்கும் வண்ணம் நாடகம் ஆடியவர்தானே. இப்போது காலம் போன காலத்தில், அவன் அவன் வெயில் கடுமையா இருக்கே, தண்ணீரைக் காணோமே என்று தவித்துக்கொண்டிருக்கும்போது, சட்டசபையைக் கூட்டச்சொல்லி அழுத்தம் கொடுத்து, சட்டசபையிலே, கருணானிதியைப் பற்றிப் பேசி, சட்டசபைக் குறிப்பில் ஏற்றவைக்கலாம், கருணானிதியில் அரசியல் 60 ஆண்டுகால நிறைவை ஒட்டி, தானும் இந்திய எதிர்க்கட்சிகளை கருணானிதிபோல் ஒன்று திரட்டலாம் என்று கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்க முயற்சிக்கிறாரே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.