“சிஸ்டமே கெட்டுபோயிருக்கிறது” – மிகச்சரி… ஆனால் ரஜினியால் மாற்ற முடியுமா…?

இன்று காலை தனது ரசிகர்களுடனான சந்திப்பில் இரண்டாவது தடவையாக திரு.ரஜினிகாந்த் பேசியது, அவர் அரசியலுக்கு வருவதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

தான் அரசியலுக்கு வருவதை எதிர்த்தவர்களில், திருவாளர் சுப்பிரமணியன் சுவாமிக்கு மட்டுமே அவர் நேரடியாக பதில் கொடுத்திருக்கிறார். “பங்களூருவில் இருந்து வந்த மராட்டியனை தமிழ்நாடு ஏற்காது ” என்று தாக்குதல் நிகழ்த்திய
சு.சுவாமிக்கு மட்டும் தான் எந்தவிதத்தில் தமிழன் என்பதை விளக்கி இருக்கிறார் –

” ரஜினிகாந்த் தமிழரா என்ற கேள்வி வருகிறது. எனக்கு இப்போது 67 வயதாகிறது. 23 ஆண்டுகள் மட்டும் தான் கர்நாடகாவில் இருந்தேன். மீதம் 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன். உங்க கூடவே வளர்ந்தேன். மராட்டியக்காரனாகவோ, கன்னடக்காரனாகவோ வந்திருந்தால் கூட என்னை ஆதரித்து பெயர், புகழ், பணம் என அள்ளிக்
கொடுத்து, நீங்கள் தான் என்னை தமிழனாக ஆக்கிவிட்டீர்கள். ஆகவே, நான் பச்சைத்தமிழன்.

என்னுடைய மூதாதையர்கள் கிருஷ்ணகிரி நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்களை என்பதை சொல்லியிருக்கிறேன். இங்கியிருந்து வெளியே போ என்று சொல்லித் தூக்கிப் போட்டால் நான் இமயமலையில் தான் போய் விழுவேனே தவிர, வேறு எந்தவொரு
மாநிலத்துக்கும் போய் விழமாட்டேன். தமிழ் மக்கள், நல்ல மக்கள், நல்ல உள்ளங்கள் இருக்கிற பூமியில் இருந்தால் இருக்க வேண்டும். இல்லையென்றால் சித்தர்கள் இருக்கின்ற இமயமலையில் இருக்க வேண்டும். ”

திருவாளர்கள் ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் ஆகியோரை உயர்த்தி பேசிய ரஜினி, இத்தனை பேர் இருக்கும்போது தான் அரசியலுக்கு வரவேண்டிய அவசியம் என்ன என்பதை விளக்கும்போது –

” ஆனால் சிஸ்டம் கெட்டுபோயிருக்கிறது. ஜனநாயகமே கெட்டுப்போயிருக்கிறது. அரசியல் பற்றி, ஜனநாயகம் பற்றி மக்களின் மனமே மாறியிருக்கிறது. எனவே சிஸ்டத்தை மாற்ற வேண்டும். மன ரீதியாக, சிந்தனையை மாற்ற வேண்டும். ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும்.”

” சிஸ்டம் ” என்று ரஜினி கூறுவதை “அரசியல்”, “ஆட்சி” இரண்டுக்கும் சேர்த்தே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

அடிப்படையில், இன்று மக்களின் மனோபாவம் – கிட்டத்தட்ட ” அரசியல்வாதிகள் என்றாலே ஊழல்வாதிகள்,கொள்ளை அடிப்பதற்காகவே அரசியலுக்கு வருபவர்கள், தேர்தலில் அவர்கள் செலவழிப்பது பின்னால் அதிகாரத்துக்கு வந்தபின்
சம்பாதிப்பதற்கான முதலீடு; அரசாங்கத்தில் என்ன வேலை நடக்க வேண்டுமானாலும் பணம் இருந்தால் போதும்.. பணத்தை வைத்துக் கொண்டு எதை வேண்டுமானாலும் சாதித்துக் கொள்ளலாம் ” – என்பது தான்.

அரசியல்வாதிகளின் இந்த லட்சணத்தை, நோக்கத்தை – புரிந்து கொண்டதனால் தான், பொதுமக்களும், அவர்களுக்கு ஓட்டு போடுவதற்கு பணம் வாங்குவதில் எந்த தவறும் இல்லை என்று நினைக்கிறார்கள்.

” அவன் தான் சம்பாதிக்கப்போகிறானே – பிறகென்ன – செலவழிக்கட்டுமே… கொடுக்கட்டுமே…” என்று கொஞ்சமும்
தயங்காமல் ஓட்டு போடுவதற்கு பணம் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்களின் மனசாட்சி இதற்காக கூசுவதோ, வெட்கப்படுவதோ இல்லை;

” என்னால் அவன் சம்பாதிக்கப் போகிறான் … எனவே கொடுக்கட்டுமே…” இது தான் மக்களின் மனோபாவம்.

மக்களின் இந்த மனோபாவத்தை –
பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடும் வழக்கத்தை,

அரசு இயந்திரத்தின்
” பணம் கொடுத்தால் – எதுவும் செய்துகொள்ளலாம் ” என்கிற சிஸ்டத்தை –

ரஜினியால் மாற்ற முடியுமா….?
மாற்ற முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா…? மக்கள் நம்புவார்களா…?
எப்படி …?

நண்பர்களின் கருத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்…
நானும் என் கருத்தை பின்னூட்டத்தில் தெரிவிக்கிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to “சிஸ்டமே கெட்டுபோயிருக்கிறது” – மிகச்சரி… ஆனால் ரஜினியால் மாற்ற முடியுமா…?

 1. இளங்கோ சொல்கிறார்:

  மேலே இருப்பவர்கள் ஒழுங்காக இருந்தால், நேர்மையாக இருந்தால்,
  லஞ்சம் வாங்காமல் இருந்தால், கீழே இருப்பவர்களும் ஒழுங்காக, நேற்மையாக,
  வெளிப்படையாக இருக்க முடியும்.

  ரஜினி லஞ்சம் வாங்குவார் என்று எதிர்பார்க்கிறீர்களா ?
  ஊழல் செய்து பணம் சம்பாதிப்பார் என்று எதிர்பார்க்கிறீர்களா ?
  ஆட்சி அதிகாரத்தை சுவைக்க வேண்டுமென்று தான்
  அவர் அரசியலுக்கு வருகிறாரா ? அதிகாரத்திற்கு கிடைக்கும்
  மரியாதைகளை எதிர்பார்த்து தான் அவர் அரசியலுக்கு வருகிறார்
  என்று நினைக்கிறீர்களா ?

 2. இளங்கோ சொல்கிறார்:

  இந்த கேள்விகளுக்கு கிடைக்கும் பதிலை வைத்து தான்
  ரஜினியால் மக்களின் மனோபாவத்தை மாற்ற முடியுமா- முடியாதா
  என்பதை தீர்மானிக்க முடியும்.

 3. Justin சொல்கிறார்:

  ரஜினி பொதுவாக நல்லவர்தான். ஆனால் அவரது குடும்பத்தினர், அதிகாரத்தை தவறாக வழிநடத்த வாய்ப்பு உள்ளது என்பதாக பல நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள். நான் ரசிகர்களைப் பற்றி சொல்லவில்லை.எந்த கட்சியையும் சாராத நடுநிலை மக்களைப் பற்றி.

  “என் அரசியலில் என் குடும்பத்தினர் தலையிட மாட்டார்கள். நான் சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகளை வைத்துக் கொண்டு, அவர்கள் துணையுடன் நல்லாட்சி தருவேன்” என ரஜினி ஒரு வாக்குறுதி கொடுத்தால், பெரும்பாலான நடுநிலையாளர்களின் வாக்குகள் அவருக்கு விழ வாய்ப்பு உள்ளது.

  • srinivasanmurugesan சொல்கிறார்:

   எப்படி….”நானோ எனது குடும்பத்தாரோ அரசியலுக்கு வந்தால் முச்சந்தியில் நிற்கவைத்து அடியுங்கள்” என்பது போன்றா…..

 4. சந்திரசேகரன். வெ.க சொல்கிறார்:

  அரசியலுக்கு வருவதை பற்றி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மதில் மேல் பூனையாக இருந்திருந்தே அவர் மீதான நம்பகத்தன்மையை இழந்து விட்டார். விஜயகாந்த் பலவிதங்களில் தோல்வியடைந்த தலைவராயிருந்தும் களத்தில் இருப்பதாலேயே அவருக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளார். ஆனால் தூக்கத்தில் கனவு காண்பது போல் திடீர் திடீரென கருத்து தெரிவிப்பதாலேயே ரஜினி ஒரு அரசியல் அமைப்பை கட்டி இழுத்துவிட முடியாது. இதையும் விஜயகாந்த்தின் தோல்விகளிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும்.

 5. இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

  ரஜினி என்பது ஒரு கருவி. கருவி எப்படி நடுநிலையோடு செயல்படுமோ அது போல செயல்பட மிகுதியான அரசியல் அறிவு என்பதை விட எதிரிகளை (மக்களின் எதிரிகளை) இருக்கும் அரசியல்வாதிகளை ஒதுக்கத் தெரிய வேண்டும். அதற்கு ஒரு சிறந்த குழு அமைய வேண்டும் பிஜேபி போன்ற தேசிய கட்சியின் பாவையாக இருந்தாலும் மக்கள் சேர மாட்டார்கள்.
  அந்த குழுவில் நல்லகண்ணு ஐயா , தமிழருவிமணியன் ஐயா , சகாயம் ஐயா மேலும் பல சுயநலமற்ற முற்றிய தலைவர்களை முன்னிறுத்தி ஒரு பலமான சுவர் கட்டி ஆட்சி செய்ய முயற்சி மேற்கொள்ளவேண்டும். அது அவ்வளவு சுலபமில்லை இதை செய்ய பிஜேபி அனுமதிக்காது. ஒரு நல்ல குடிமகன் , நல்ல மக்கள் தலைவனால் மட்டுமே இது சாத்தியம். காமராஜர் போன்ற முற்றிய தலைவர்கள் இருந்த இந்த தமிழ்நாட்டில் இப்பொழுது இதற்கும் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு வகையில் நம் காமை ஐயா போன்ற நல்ல மனிதர்களையும் தேர்ந்தெடுத்து மாவட்டம் வாரியாக பிரித்து இயற்கையை காப்பாற்றி மனிதத்தை மேம்படுத்தி தமிழகத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்.
  நடக்குமா? செய்ய விடுவார்களா நம் திராவிட தருதலைகள்? செய்ய விடுவார்களா நம் காவி யோகிகள்? செய்ய விடுவார்களா நம் புலிகள் , சிறுத்தைகள் , நரிகள் , குரங்குகள், பச்சோந்திகள் , கரையான்கள்?
  பொறுத்திருந்து பார்ப்போம்!!!
  இன்றில்லாவிட்டாலும் !!!!????

 6. Woraiyur Pugal சொல்கிறார்:

  ரஜினியால் அவரின் மகள் மனைவி போக்கையே மாற்ற இயலாத போது அவரால் எப்படி தமிழக மக்களின் மனங்களை மாற்ற முடியும்..இவரின் பேச்சு கூடிய ரசிகர்களை உசுப்பேற்ற பேசிய பேச்சே…நிச்சயம் வரமாட்டார் அரசியலுக்கு,..இவரின் நெருங்கிய நண்பர் சோ அவர்கள் இருந்த போதே வராதவர் அவரின் மறைவுக்கு பின்பு தனக்கான ஆலோசகர் இல்லாத போது வருவது சாத்தியமில்லை…

  • நிமித்திகன் சொல்கிறார்:

   முற்றிலும் உண்மை. தனது திரைப்படம் வரும்போதெல்லாம், தன்னை “லைம் லைட்டில்” காட்டிக் கொள்வது திரு ரஜினி அவர்களின் வாடிக்கை. முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். எம்ஜிஆர் ரசிகர்கள் என்பது வேறு ரஜினி ரசிகர்கள் என்பது வேறு. வெறும் ரசிகர்களின் ஆதரவை (அல்லது கூச்சலை) வைத்துக் கொண்டு மட்டும் அரசியலில் வெற்றி பெற முடியாது. தற்போது இவரின் கருத்தை வரவேற்கும் அரசியல் தலவர்கள்கூட எதற்கும் கொஞ்சம் இடம் போட்டு வைப்போம் எனும் எண்ணத்தில்தான் ‘வந்தால் வரவேற்போம்’ என்கிறார்கள். காசு செலவழிக்க விரும்பாத திருமதி லதா ரஜினிகாந்த், இவரை அரசியலில் இறங்க அனுமதிக்க மாட்டார் என்பதே என் கருத்து. அப்படியே அரசியலில் இறங்க அனுமதித்தால், காசு சம்பாதிக்க வழி இருக்கிறதா என்பதை அந்த அம்மையார் நிச்சயம் எதிர்பார்ப்பார். 2.0 எனும் படம் வந்தபின், ரஜினி மீண்டும் மௌன சாமியார் ஆகிவிடுவார், அதற்கு அடுத்த படம் வரும்வரையில்.
   அன்புடன்
   நிமித்திகன்

 7. Woraiyur Pugal சொல்கிறார்:

  சிஸ்டம் தவறு என சொல்பவர் முதலில் சரி செய்ய தன் படத்திலிருந்து ஆரம்பிக்கலாம்..தியேட்டர் விலை என்னவோ அது மட்டுமே எனது அடுத்த படத்தின் விலை ஆயிரம் இரண்டாயிரம் தந்து யாரும் என் படத்தை பார்கக வேண்டாம் என்றோ அதிக விலை கொடுத்தோ என் படத்தை பார்க்க வேண்டாம் ..நியாயமான விலையில் மட்டுமே இனி வரும். படங்களை பாருங்க என அறிவித்தால் சிஸ்டத்தை மிக சரியாக இந்த பெரியவர் கடைபிடிக்கிறார் என கொள்ளலாம்.,இல்லை என்றால் சூப்பரின் பேச்சு ஊருக்கு உபதேசமே…

 8. Ganpat சொல்கிறார்:

  நாட்டில் தேர்தல் என்று ஒன்று இருக்கும்வரை வாக்காளர்கள் இவ்வளவு முட்டாள்களாக இருக்கும்வரை ரஜினியை படைத்தவர் வந்தால் கூட எதையும் மாற்ற முடியாது.ரஜினி நல்லவரா இல்லையா என்பதை நானறியேன்..ஆனால் அவர் ஒரு மாநிலத்தை ஆள்வதற்கான எந்த திறமையுமற்றவர் என்பதை அறிவேன்.And last but not the least…shame on you Mr.S.Swamy.for stooping to such a low level.

 9. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  என் கருத்து –

  – திரு.ரஜினிகாந்த் – பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வருகிறார் என்று நான் நினைக்கவில்லை…. எனவே, அவர் அரசியலுக்கு வந்தால் – நிச்சயம் ஊழலில் ஈடுபட மாட்டாரென்று நம்பலாம்.

  – அதே போல், பதவி, அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு அரசியலுக்கு வருகிறார் என்றும் நான் நினைக்கவில்லை. ஏனென்றால், பல வருடங்களாக, பலர் வற்புறுத்தியும், அரசியலுக்கு வந்தால் தனக்கு இப்போது இருக்கும் நல்ல பெயர் கெட்டு விடும்….இப்போது இருப்பதைப்போல் எல்லாருக்கும் பிடித்தவராக இருக்க முடியாது…. பலரின் விரோதத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டியிருக்கும்… என்பதெல்லாம் கூட அவர் இது நாள் வரை அரசியலுக்கு வராததற்கான
  காரணங்கள்.

  – கலைஞர் அவர்களும், ஜெயலலிதா அவர்களும் இருக்கும் வரையில் – தனக்கான இடம் இல்லை என்றும், தான் அரசியலுக்கு வருவதற்கு போதுமான காரணங்கள் இல்லையென்றும் நினைத்தார். அவர்கள் இருவரையும் எதிர்த்து
  அரசியல் பண்ண அவர் விரும்பவில்லை.

  இப்போது – தமிழகத்தில் கலைஞர், ஜெயலலிதா ஆகிய இருவரும் இல்லாத நிலையில் நிச்சயமாக ஒரு வெற்றிடம் ஏற்பட்டு தான் இருக்கிறது.

  இன்று தமிழக அரசும், ஆளும் கட்சியும் இருக்கின்ற நிலை படு கேவலமாக இருப்பதுடன், மற்ற மாநிலத்தினரும், டெல்லி அரசியலும் தமிழகத்தை படுமட்டமாக பார்ப்பது வெளிப்படையாக தெரிகிறது.

  இந்த நிலை தொடரக்கூடாது என்பதே பெரும்பாலானோரின் விருப்பம்.

  திரு.ஸ்டாலின் (திமுக ) -ஆட்சிக்கு வருவதை விரும்பாதவர்கள் இந்த வெற்றிடத்தை மிகவும் உணர்கிறார்கள். இந்த இடத்தில் பாஜக வந்து உட்கார்ந்து கொள்வது தமிழகத்தின் நலனுக்கு நல்லது அல்ல என்பதும் அவர்களின் எண்ணம்…
  என் எண்ணமும் இது தான்.

  இத்தகைய சூழ்நிலையில் – நாளையே தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வந்தால் – களத்தில் யார் யார் இருப்பார்கள் என்று யோசித்தால் – இருக்கின்ற முகங்கள் எதுவுமே நம்பிக்கை தருவதாக இல்லை.

  மக்கள் நேசிக்கக்கூடிய ஒரு ஆளுமை தமிழக அரசியலில் இன்று இல்லை….!

  இந்த சூழ்நிலை தான் திரு.ரஜினிகாந்தைப்பற்றி யோசிக்க வைக்கிறது…

  ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், தமிழகத்தின் பெரிய கட்சிகள் அனைத்துமே பாதிக்கப்படும். எனவே,
  நேரடியாகவோ, மறைமுகமாகவோ – அந்த கட்சிகள் ரஜினி வருவதை எதிர்க்கும்.

  சில சிறிய கட்சிகள் ரஜினியுடன் சேரக்கூடும். முக்கியமாக திரு.திருமாவளவன் ரஜினியுடன் சேருபவர்களில்
  முதல் நபராக இருப்பார்.

  இன்னும் பல நிகழ்வுகள் ஏற்படக்கூடும்.

  ஆனால்……………………………

  திரு.ரஜினிகாந்தின் நேர்மையை பற்றியோ, ஆளுமையை பற்றியோ அல்லாத – வேறு பல கேள்விகளும் எழுகின்றன.

  அந்த கேள்விகள் நாளாவட்டத்தில் பொதுவெளிக்கு வரும்… வரவேண்டும்…. அவை பற்றி மக்கள் விவரமாக யோசிக்க வேண்டும்…

  பொறுத்திருந்து பார்ப்போம்…

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • Woraiyur Pugal சொல்கிறார்:

   நீங்க சொன்ன எல்லாம் சரி…ஆனால் ரஜினி இதற்க்கு தயாராக இல்லையே..கிளப்பி விட்டு விட்டு ஒதுங்கி செல்லும் ஆளாக தானே இருக்கிறார்..

 10. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Even Mahathma Gandhi couldn’t establish RAMA RAJYAM Person like Indian -Thatha is required

 11. புதியவன் சொல்கிறார்:

  தன்னுடைய தவறினால் குடித்துக் குடல் கெட்டுப்போன மக்கள், இந்த மருத்துவராவது தங்களைக் காக்க மாட்டாரா என்று எண்ணுவதுபோல, மக்களுக்கு நம்பிக்கைதரும் தலைவர்கள் தேவை. ஜெ.வை அப்படிப்பட்ட ஒரு தலைவராகத்தான் மக்கள் எண்ணினர். மோடி அவர்களையும் அப்படிப்பட்ட தலைவராகத்தான் பெரும்பான்மையான மக்கள் எண்ணுகின்றனர். ரஜினி மற்றும் அஜித், அந்த லிஸ்டில் வருவார்கள்.

  அவர்களால் முடியுமா, செய்வார்களா, அவர்களுக்கு நல்ல உடல் நிலை உண்டா, செய்யவேண்டும் என்ற உழைக்கும் எண்ணம் உண்டா – தெரியவில்லை. காலம்தான் சொல்லவேண்டும்.

  எல்லோருக்கும் நல்லவனாக இருக்கவேண்டும் என்று எண்ணும் யாரும், தலைவனாக முடியாது. தலைவன் என்பவன், சரியோ தவறோ, தான் சரி என்று எண்ணும் முடிவை, யாரைப்பற்றியும் கவலைப்படாமல் எடுக்கவேண்டும். அதனைப் பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ளவில்லையா, தான் தவறாக முடிவெடுத்தோம் என்று நம்புகிற சமயம், அதனை மாற்றுவதற்கும் தயங்கக்கூடாது.

  தலைவனாக உருவாகும் சமயம், அவர் தனது மன நிம்மதி, மகிழ்ச்சி போன்றவற்றை இழக்கவேண்டியிருக்கும் (ஜெ. இழந்ததுபோல).

  எனக்கென்னவோ ரஜினி, இதற்கெல்லாம் தயாராக இருப்பார் என்று நம்பிக்கை வரவில்லை. எந்திரன் 2.0 பட ப்ரமோஷன் போல்தான் எனக்குத் தோன்றுகிறது.

 12. இளங்கோ சொல்கிறார்:

  புதியவன் சார்,

  எல்லாத்தையும் சந்தேகப்படாதீங்க.
  “எந்திரன் 2.0” – 2018 ஜனவரி தான் ரிலீஸ்னு சொல்லி இருக்காங்க.
  அதுக்கு இப்பவே ப்ரமோஷன் ஆரம்பிக்க மாட்டாங்க.

  • Amudhan சொல்கிறார்:

   Enthiran 2019 vanthaalum Promotion enru thaan solluvaargal.

   • புதியவன் சொல்கிறார்:

    வெறும், பட ப்ரமோஷன் என்று மட்டும் சொல்லவில்லை. ரஜினி மிகவும் யோசிக்கிறார், தயங்குகிறார், காலமும் அவர் பக்கம் இல்லை (உடல் நிலை). அவருக்கு ஏற்பட்ட கட்டாயத்தின்பேரில்தான் ரசிகர்கள் சந்திப்பில் இது வெளிப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

    அரசியலுக்கு வருவது என்பது ரொம்ப சுலபம், அது ஒரு பெரிய கௌரவம் என்று நினைக்கிறீர்கள். அப்படி அல்ல. அது பெரிய சுமை. அவர், இந்த வயதில், நட்புகள், சொந்த வாழ்க்கை, சௌகரியம் போன்றவற்றை இழக்கவேண்டிவரும். அவருடைய குடும்பம் அவரைப்போன்றதல்ல. பெரும்பாலும், ரஜினியை உபயோகப்படுத்தியவர்கள் அவர்கள்.

    ரஜினி அவர்கள் கெட்டவரல்லர். நிச்சயம் கொள்ளையடிக்கவோ அல்லது சட்டத்திற்குப் புறம்பானவற்றை ஆதரிக்கவோ செய்யமாட்டார். ஆனால் அவருடைய டெம்பெரெமென்ட் அரசியலுக்கு உதவாது.

    ரஜினி வருவார் என்று எனக்குத் தோன்றவில்லை.

 13. Amudhan சொல்கிறார்:

  ரஜினியின் அறிவு தளம் மிகவும் உயர்ந்தது. தர்ம சிந்தனையிலும் அவர் உயர்ந்தவர். சாமான்ய தமிழ் மக்களுக்கு இது புரியாது. இப்போது அவரை திட்டி கொண்டு இருப்பார்கள். இருந்தாலும் அவர் தமிழக மக்களை கை விட்டு விட மாட்டார். பின்னாளில் இந்த நல்ல மனிதனை இப்படியெல்லாம் பேசி விட்டோமே என்று வருத்த படுவார்கள்.

 14. D. Chandramouli சொல்கிறார்:

  There might be two reasons for Rajini to consider entering politics. One, there is a definite vacuum for a charismatic and popular leader in the political arena. Two, Rajini genuinely feels he should repay his debt of gratitude to Tamils in this hour. He talks about the rotten political system. Electoral politics run on money power, and corruption goes hand in hand. A political party can’t function without huge funds. Again, when we talk about system, the people who operate the system are also part of the problem, thus the need for a clean leadership at the top. For administration, Rajini could manage to get able and corrupt-free persons. But he would face a great challenge to look for clean politicians in his party, if he ever starts one.

 15. vimal சொல்கிறார்:

  அரசியலமைப்பு சட்டத்தை திருத்தம் செய்தாலே போதும் சிஸ்டெம் தானாக சரியாகிவிடும் இதற்கு ரஜினி தேவை இல்லை கோடிக்கணக்கில் ஊழல் செய்தவன் என்று தெரிந்தும் அவனை சிறையில் இருந்து வெளிவர ஜாமீன் கொடுக்கும் அரசியல் சட்டம் எந்த வகையில் சிறந்த சட்டமாக இருக்க முடியும் ? தமிழக மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்காத ஒருவர் எப்படி தமிழகத்தின் பிரச்சனைகளை எப்படி தீர்த்துவைப்பார் என்கிற சந்தேகமே மேலெழுகிறது

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.