பெண்கள், சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்களா …?

– “taking the law into their own hands” – ( சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வது ) என்று சொல்வார்கள்… எப்போது…? சாதாரணமாக யாராவது சட்டத்தை மீறி அடாவடியாக நடந்து கொண்டால் அதைச் சொல்ல இந்த வார்த்தைகளை பயன்படுத்துவார்கள்.

தமிழகத்தில் இன்றைய தினம் பல ஊர்களில் பெண்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ககிறார்கள்…. ஆனால், எதற்காக…?

மேலே சொல்லப்பட்ட காரணத்திற்கு முற்றிலும் மாறாக, சட்டத்தை, நீதிமன்ற உத்திரவை – நிறைவேற்றவே பெண்கள் இதைச்செய்கிறார்கள்.

உயர்நீதிமன்றம் உத்திரவு போட்டிருக்கிறது…
” மது, உடல்நலத்திற்கு கேடு ” என்று சொல்லி விட்டு, அரசாங்கமே கணக்கு வழக்கில்லாமல் சாராயக்கடைகளை திறப்பது சரி அல்ல. மக்கள் விரும்பாத இடங்களில் சாராயக்கடைகளை திறக்கக்கூடாது ” என்று.

ஆனால், இந்த உத்திரவை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே, மீறுவதற்கு துணை போனால், என்ன செய்வது…? பாதிக்கப்பட்டவர்கள், நீதிமன்ற உத்திரவு மீறப்படுவதையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா…?

அந்த, சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பினை பெண்களே தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளும் காட்சியை இன்று தமிழகத்தில் தினந்தோறும் பல ஊர்களிலும் பார்த்து வருகிறோம்.

அரசியல்வாதிகளை நம்பி பயன் இல்லை… சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பில் இருப்பவர்களை நம்பியும் பயன் இல்லை. தமிழக பெண்கள், களத்தில் இறங்கி போராடுவதன் மூலமே, இந்த விஷயத்திற்கு ஒரு முடிவு, விடிவு ஏற்படும் என்று நான் நம்புகிறேன்.

தமிழகத்தின் தாய்க்குலத்திற்கு நமது பாராட்டுகளும், வெற்றி பெற வாழ்த்துகளும்….!!!

——————————————————

– இந்த இடத்தில், இதே விமரிசனம் வலைத்தளத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியிருந்த –

” பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி … (மார்ச் 7, 2014)

என்கிற இடுகையிலிருந்து சம்பந்தப்பட்ட ஒரு பகுதியை (மட்டும்) கீழே மீண்டும் பதிய விரும்புகிறேன் –

// இன்றைய தினம் பெரும்பாலும் திருமணமான பெண்களின் முக்கியப் பிரச்சினையே – குடிகாரக் கணவன்கள் தான்.
சம்பாதிப்பதில் பெரும்பகுதியை மதுக்கடையில் இழந்து, தீராத ஆரோக்கியக் கேட்டை விலைக்கு வாங்கிக்கொள்வதோடு
குடும்பத்தில் பெண்களின் நிம்மதியை நிரந்தரமாகப் பறிக்கிறது குடிப்பழக்கம்.

இதிலிருந்து அவர்களுக்கு விடிவு கிடைக்கச் செய்யும் பொறுப்பு நம் அனைவருக்குமே இருக்கிறது.

இந்த சாராயக்கடைகளை தொலைக்க நாம் என்ன செய்தாலும் தகும். இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் எதையும் நம்பிப்
பயனில்லை. //

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to பெண்கள், சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்களா …?

 1. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  நீங்கள் எழுதி இருப்பது முற்றிலும் உண்மை.
  எந்த அரசியல்வாதிகளை நம்பியும் பயன் இல்லை.
  சாராயக்கடைகளால் உண்மையில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் தான்.
  இந்த பெண்கள், யார் பேச்சையும் நம்பி இராமல் தொடர்ந்து இது போல்
  சாராயக்கடைகளை துவம்சம் செய்ய வேண்டும். இந்த் சாராயக்கடைகளின் சாவு பெண்களால் தான் நிகழப்போகிறது. நீதிமன்றத்தின் துணை அவர்களுக்கு நிச்சயம் உண்டு.
  போராடும் பெண்களுக்கு நமது வாழ்த்துக்களையும், நமது முழு ஆதரவையும் தெரிவிப்போம்.

 2. Ramesh சொல்கிறார்:

  Yes Sir.
  You are 100 % correct.
  Let the women force of Tamilnadu bring an end to this menace.

 3. Balaji சொல்கிறார்:

  தப்பே கிடையாது. இன்றைய செய்தி : பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவு செய்துவந்த சாமியாரின் ஆணுறுப்பை இளம்பெண் ஒருவர் அறுத்துவீசிய சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  காவல் துறையில் புகார் தொடுத்து, நீதி மன்ற வழக்கு பதிவாகி, அந்த சாமியாருக்கு தண்டனை விரைவில் கிடைத்துதான் விடுமா அல்லது அல்லது அந்த இளம் பெண்ணின் துயர் நீங்கி விடுமா ?

 4. புதியவன் சொல்கிறார்:

  காவிரி மைந்தன் சார்… பெண்கள் இப்படிச் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வது நியாயப்படுத்த முடியாது. யாரும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது. அப்புறம் அங்கு அமைதி இருக்காது.

  அதே சமயம், குடியால், நேரடியாக, குடிகாரன்/குடிகாரியின் குடும்பம்தான் பாதிக்கப்படுகிறது. அவங்களுக்குத்தான் அந்தப் பிரச்சனையின் விசுவரூபம் தெரியும். பெண்களின் குடும்பம் பாதிக்கப்படுகிறது என்பதை வெளிப்படையாக உணர்ந்தும், அவர்கள் அந்த அந்த இடங்களில் சாராயக் கடைகள் வரக்கூடாது என்று போராட்டம் நடத்தியும் அரசு அதிகாரிகள், அதனைக் கண்டுகொள்ளாமல் கடைகளைக் கொண்டுவர முயற்சிக்கும்போது, அதனைப் பெண்கள் வேறு வழியில்லாமல் நேரடியாக தங்கள் எதிர்ப்பைக் காண்பிக்கிறார்கள். அதனால்தான் அந்தப் பெண்கள் செய்வது, தவறு என்றாலும், தவறில்லை என்றே மனதுக்குப் படுகிறது.

  குடிகாரனால்/குடிகாரியால் அவர்களுடைய குடும்பம்தான் நாசமாகப் போகிறது. போய்த்தொலையட்டும். சிகரெட் குடிப்பவர்களால், அப்பாவி பொதுஜனங்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களும், குடிகாரர்களைவிட கேவலமான ஜந்துக்கள்தான் என்பது என் எண்ணம்.

  குடிகாரனும், சிகரெட் குடிக்கும் ஜந்துக்களும் (வீட்டுக்குள்ளேயே சிகரெட் குடிப்பவர்களும், அவர்கள் குழந்தைகளோடு வீட்டிற்குள்ளேயே சிகரெட் குடித்து மகிழ்பவர்களும் இந்த லிஸ்டில் வரமாட்டார்கள். பொது இடங்களில் சிகரெட் குடிப்பவர்களைத்தான் நான் ஜந்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளேன். அப்படிப்பட்டவர்கள், குடிப்பழக்கத்தைப் பற்றிப் பேசவும் அருகதையற்றவர்கள்) சமூகத்தின் விஷங்கள். அவர்களை, கருவேலமரங்களைக் களைவதுபோல சமூகத்திலிருந்து களையவேண்டும். சிகரெட்டை விற்பதற்குத் துணை நிற்கும் வை.கோ, துரைமுருகன் போன்ற ஏஜெண்டுகளுக்கும் இந்தக் கும்பலில் உண்டு. அவர்கள், ‘குடி’யைப் பற்றிப்பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவதைவிட மோசமானது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.