கொஞ்சம் தேடல் – கொஞ்சம் ஞானம் ….( 1 )

இந்த தலைப்பில் எனக்கு தெரிந்ததை, புரிந்ததை, எனக்கு
பழக்கமான விதத்தில், என்னுடைய நடையில், இங்கு
எழுதப்போகிறேனே தவிர இதில் வரும் கருத்துகளை
சுயமாகக் கூறும் அளவிற்கு எனக்கு பெரிய ஞானமோ,
அருகதையோ கிடையாது.

பெரிய பெரிய ஞானிகளும், துறவிகளும், ஆன்மிக நூல்களும்
வழங்கிய சிந்தனைத் துளிகளை, எனக்குள்ள புரிதலில்,
நான் உணர்ந்து கொண்ட அளவில் எழுதப்படும்
இடுகைகளாகவே இவை இருக்கும்.

இதை நான் இங்கு எழுதுவதற்கான நோக்கம் – என்
அனுபவங்களை, எனக்கு தெரியவந்ததை எளிமையான
முறையில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும்,
அவர்களது எண்ணோட்டங்களை அறிந்து கொள்வதும் தான்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் –

இந்த வலைத்தளத்தின் பல இடுகைகளில், விவாதங்களினூடே
ஆழ்ந்த ஆன்மிக சிந்தனைகள் உடைய சில நண்பர்களை
என்னால் அடையாளம் காண முடிகிறது. இந்த தலைப்பிலான
இடுகைத் தொடரில் அவர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தங்களது
சிந்தனையோட்டங்களை, அனுபவங்களை, உணர்தல்களை
அவர்களும் இங்கு பகிர்ந்து கொள்ளலாம். கருத்து சிறியதாக
இருப்பின் பின்னூட்டங்களில் எழுதலாம்.

பெரியதாக இருப்பின், அவர்கள் அதை தனியே எனது ஈமெயில் விலாசத்திற்கு ( kavirimainthan@gmail.com )
அனுப்பினால், தனி இடுகையாகவும் பதிப்பிக்க
சித்தமாக இருக்கிறேன்.

——————————————————-

அநேகமாக, 40 வயதைக் கடக்கின்ற காலங்களில்
எல்லாருக்குமே ஒரு வித தேடல் உணர்வு துவங்கி இருக்கும்…. அவை வழக்கமான நடைமுறை பொருளாதாரத்தை தாண்டிய தேடல்கள்…

உண்பதும், வேலை செய்வதும், உறங்குவதும் மட்டும் தான்
வாழ்க்கையா…?

இளமைக் காலத்தை படிப்பதிலும், விளையாட்டிலும் கழிப்பது…
அதன் பிறகு வாலிப பருவத்தில் வேலை தேடல்…
சம்பாத்தியம், திருமணம், பிள்ளை குட்டிகள், என்று
குடும்பத்தோடு வாழ்வது, குடும்பத்தை பேணுவது ….

ஒரு கால கட்டத்திற்குப் பிறகு –

இதற்குப் பிறகு என்ன…?
என்கிற கேள்வி பலரிடம் முளைக்கிறது….!

( இந்த கேள்வி இறுதிவரை தோன்றாத சிலரையும் கூட
பார்க்க முடிகிறது தான்…!!! )

அப்போது துவங்குவது தான் இந்த தேடல்…ஆன்மிக தேடல்..!

ஆன்மிக ஞானம் பெற வேண்டுமானால் ஒருவன் சந்நியாசி
ஆனால் தான் முடியும் என்பது அவசியம் இல்லை.

குடும்பத்தில் இருந்துகொண்டே அன்மிக ஞானம் பெறுவதும்,
அதனால் நிம்மதி பெறுவதும் கூடுமானதே.

அறுபது வயதுக்கு மேல் தான் ஆன்மிகம் என்றிருந்தது
அந்தக்காலம்…. கூட்டுக்குடும்ப காலம்.

நடுவயதிலேயே வாழ்க்கையின் உண்மை என்ன என்பதை
புரிந்து கொள்ள துவங்கினால், எஞ்சியுள்ள வாழ்க்கை
பயணத்தை அமைதியாகவும், ஆனந்தமாகவும் நடத்திச்செல்ல
அது உதவும் என்பது தான் இன்றைய உண்மை.

முதலில் “நான்” என்கிற உணர்வை புரிந்து கொள்ள முடிந்தால், பாதி விஷயங்கள் புரிந்த மாதிரி தான்.

மகரிஷி ரமணர் கேட்ட கேள்வி இது – “நான்” -யார்…?

நமக்கு “நான்” என்கிற உணர்வு இருக்கும் வரை நல்லதும்
கெட்டதும் உணர முடிகிறது. மற்றவர்கள் நமக்குச் செய்வதை
நல்லது என்றோ கெட்டது என்றோ நமது மனதைக் கொண்டே
முடிவு செய்கிறோம்… நமக்கு கெட்டதாகத் தோன்றும் ஒன்று,
அடுத்தவருக்கு நல்லதாகத் தோன்றுவதற்கான காரணம்…
நம்முடைய “நான்” வேறு – அவருடைய “நான” வேறு.

இந்த “நான்” என்கிற உணர்வு அழிந்து விட்டால்,
நான், நீ, அவன், அது – என்று சகலஜீவராசிகளும் ஒன்றாகவே
தோன்றும். “நான்” இல்லை என்கிற பட்சத்தில் “எனக்கு”
ஏற்படும் இன்பங்களும் இல்லை, துன்பங்களும் இல்லை.
ஆனால், இது நடைமுறை சாத்தியமா…?

நாம் அனுபவிக்கும் எல்லா சுகங்களும் – சில நிபந்தனைகளுக்கு உட்பட்டவை…பின்விளைவுகளுக்கு உட்பட்டவையே.

நடைமுறை வாழ்க்கையில் பார்த்தால் – நாம் எப்போது மிகுந்த
சுகானுபவம் பெறுகிறோம்….?

எந்த அனுபவம் நமக்கு எந்தவித பின்விளைவுகளையோ
வருத்தங்களையோ உண்டாக்காமல் –
நிம்மதியையும், ஆனந்தத்தையும் மட்டும் தருகிறது….?

கொஞ்சம் யோசித்தால் –
அது “தூக்கம்” மட்டும் தான் என்கிற தெளிவு பிறக்கும்….!!!

கனவுகள் இல்லாத தூக்கத்தில் ஒருவர் பெறும் நிம்மதியும்,
ஆனந்தமும் – வேறு எதனுடனும் ஒப்பிட முடியாதது என்பது
தெரியவரும்.

அந்த நிம்மதி, ஆனந்தம்… எப்படி சாத்தியமாகிறது…?

உறங்கும்போது மட்டும் தான், நாம் “நான்” என்கிற அந்த
உணர்வை விட்டு விலகி இருக்கிறோம். “நான்” அகன்று
விட்டதால், அந்த உறக்கம் நமக்கு நிம்மதியையும்,
ஆனந்தத்தையும் தருகிறது.

இந்த “நான்”, “எனது” என்கிற உணர்வை நம்மிடமிருந்து
அகற்றிவிட முடியுமானால் – விழித்திருக்கும் நேரங்களில் கூட
நிம்மதியாகவும், ஆனந்தமாகவும் இருப்போம்.

ஆனால், அவ்வளவு சுலபமா அது…?

இந்த “நான்” என்கிற உணர்வு நம்முள் எங்கிருந்து
கிளம்புகிறது…?

மூளையிலிருந்தா…? – இல்லை…!

இதயத்திலிருந்தா…? – இல்லை…!

பின் வேறு எங்கிருந்து….?

எங்கே நமது “மனம்” இருப்பதாக உணர்கிறோம்…?
இதயத்திற்கு அருகே, வலப்புறத்தில் –

ஆம்… அந்த “மனம்” தான் – “நான்” என்கிற உணர்வு
தோன்றும் இடம்…

எனவே, “நான்” – ஐ, கட்டுப்படுத்த வேண்டுமானால்,
அடக்க வேண்டுமானால்,
“மனதை” அடக்க, கட்டுப்படுத்த – பழக வேண்டும்…

அதை எப்படி செய்யலாம் …? யோசிப்போமே…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to கொஞ்சம் தேடல் – கொஞ்சம் ஞானம் ….( 1 )

 1. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  எனக்கு புரிந்த வரை நமது சிந்தனை ஓட்டத்தை அலைபாயவிடாமல் ஒருமுகப்படுத்தி அதனுள் பயணம் செய்வதுதான்.
  ஆனால் அவ்வளவு சுலபமானதல்ல.
  மிகுந்த முயற்சியும்,ஆர்வமும் வேண்டும்.
  இந்த செயல்பாட்டடுக்கு நேரம்,காலம்
  எதுவும் இல்லை.
  சிந்தனை ஓட்டத்தை நமது கட்டுபாட்டுக்கு கொண்டுவந்த பிறகு
  அதிகாலையிலும்,இரவு தூங்குவதற்கு
  முன்பும் செய்வதும் நன்று.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக கொச்சின் தேவதாஸ்,

   நீங்கள் திரு.வேதாத்ரி மகரிஷி அவர்களை ஆசானாக கொண்டவர்
   என்பதை உங்கள் பின்னூட்டத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது.

   அற்புதமான, நடைமுறைச் சிந்தனையாளர் அவர்.
   பல வருடங்களுக்கு முன்னர், இரண்டு முறை அவரது உரையே நேரில் கேட்கவும், அருகில் இருக்கவும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு.
   மறக்க முடியாத அனுபவம்.

   -வாழ்க வளமுடன்,
   காவிரிமைந்தன்

   • கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

    மன்னிக்கவும்.
    மகரிஷி என்பவரைப்பற்றி எனக்கு எந்த விதமான அறிமுகமும் இல்லை.
    எனது புரிதல் அர்த்தமுள்ள இந்துமதம் கண்ணதாசன் அவர்கள் இது விசயமாக தெளிவாக சுலபமாக புரிந்துகொள்ளும்படி எழுதி உள்ளார்.
    “உனது மனது எதை வேண்டுமானாலும் நினைக்கட்டும். அது குரங்காக கூட இருக்கலாம்.ஆனால் அதைப் பற்றிகொண்டு குரங்கைப்பற்றியே உனது மனது
    விடாப்பிடியாக ஒரு முகமாக இருக்குமானால் போதும்.”
    அதனை அனுபவபூர்மாக உணர்ந்துதான் தங்களுக்குத் தகவலாகத் தந்தேன்.
    நமது எண்ண ஓட்டங்களை நமது
    கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால் போதும்.
    நான்,எனது போன்ற அகந்தைகள்
    தானாக நம்மைவிட்டு விலகிவிடும்.
    மனதைக்கட்டுபடுத்தும் நேரத்தை அதிகமாக்கிக்கொண்டே போனால் நமது முகத்தில் சாந்தமும்,அமைதியும் பொலிவாகத்தெரியும்.
    வாழ்க வளமுடன்

 2. Sundar Raman சொல்கிறார்:

  எனக்கு தெரிந்த வரை … வாழ்க்கையில் எப்பொழுதுமே குரு பார்வை இருக்க வேண்டும், அந்த ஒளி நிச்சயமாக நம் தேடல்களை ஒரு வழி காட்டும் . இந்த குரு கிடைப்பதும் , ஒரு விதத்தில் அமைவது தான் , தேடல் இருந்தால் சரியான குருவிடம் கொண்டு சேர்க்கும் , மானசீகமாக கூட இருக்கலாம் . நல்ல நண்பர்கள் – முக்கியமானது ..

  உங்களோட இந்த பதிவை இனி ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சுந்தர் ராமன்,

   நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரி தான்…
   குருவின் துணை நல்வழி காட்டும் என்பது உண்மை தான்.

   ஆனால், காஞ்சி பெரியவர் மறைந்த பிறகு,
   வாழும் எவர் ஒருவரையும் குருவாக ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை.
   ஆனால், அதை ஒரு குறையாகவும் எடுத்துக் கொள்ளவில்லை.

   நானறிந்த அனைத்து ஆன்மிகவாதிகளிடமிருந்தும்-
   எனக்குப் பிடித்த விஷயங்களை மட்டும் ஏற்றுக் கொண்டு,
   அடுத்த படிக்கு நகர முயற்சிக்கிறேன்.

   -உங்களோடு, நானும் சேர்ந்து “இந்த பதிவை” இனி ஆவலுடன்
   எதிர்பார்ப்பேன்…!!!
   நண்பர்கள் துணையோடு, நாம் அனைவரும் சேர்ந்து இதை ஒரு நல்ல
   கருத்தரங்கமாக உருவாக்க முயற்சிப்போம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • தமிழன் சொல்கிறார்:

    “வாழும் எவர் ஒருவரையும் குருவாக ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை.” – தேடல் என்பது ஒரு யக்ஞம். அது பொதுவாக தியானத்தில் கொண்டுபோய் விடும். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ‘எனக்கு அது வேண்டும்’ என்று நினைத்தால், அதற்கேற்ற குரு கிடைப்பார்.

    அதுக்கு நம்ம உடம்புல (முதுகுத்தண்டு) இருக்கற சக்கரத்தைத் தூண்டவைக்கவேண்டும். என் யோகா குரு சொன்னது, சிலருக்கு 1 வாரத்தில் நடக்கும், சிலருக்கு காலம் பூராவும் நடக்காது. ஆனால் அது ஹைதிராபாதிலிருந்து தில்லிக்குச் செல்வது போன்றது. நடந்துக்கிட்டே இரு. அது உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். ஒவ்வொரு அடிக்கும், வந்துடுச்சான்னு தேடாதே என்றார். இன்னொரு உதாரணமாக, மனசும் புத்தியும் ஒருமுகப் படுத்துவதுதான் தியானம். அழுக்குக் கண்ணாடியைத் துடைப்பதுபோன்றது. எவ்வளவு அழுக்கு ஒருவருக்கு இருக்கிறது என்று யாரே அறிவர்? சிலர், பல நூறு பிறப்பெடுத்தும் கைவரப் பெறாமல் இருக்கின்றனர், சிலருக்கு உடனே சித்திக்கும். அதனால் அந்தப் பாதையில் போய்க்கொண்டே இரு என்றார்.

    சகஜ யோகாவுக்கும் சென்றேன் (சில நாட்கள்). இந்தப் பாதை, இன்ஸ்டன்ட் காஃபி மாதிரி இல்லை. நாளாகும். பொறுமை அவசியம். முன்னேறியிருக்கிறோமா என்பதே தெரியாது. ஆனால் ஒரு சில மாதங்களிலோ அல்லது ஒரு வருடத்திலோ, ஏதோ முன்னேற்றம் இருப்பதுபோல் தோன்றும். சிலருக்கு உடனேயே முன்னேற்றம் தெரியும். அதற்கு யோகா மாஸ்டரின் விளக்கம், அவர்கள் பூர்வ ஜன்ம வாசனையினால் உடனே சித்திக்கிறது.

    தியானத்தின் நோக்கம் மனதும் புத்தியும் ஒரு புள்ளியில் சந்திப்பது. பரமாச்சாரியார் இது எல்லோருக்கும் சாத்தியமல்ல, இந்தத் திசையில் பயணிக்கவேண்டாம் என்று கூறியிருப்பதை நான் ஒரு இடுகையில் படித்தேன். அவர் பக்தி செய்வதைத்தான் மற்றவர்களுக்குச் சொல்லியிருக்கிறார். தியானம் செய்வதை அவருடைய அடியவர்களுக்கு அவர் சொன்னதில்லை.

 3. sridhar சொல்கிறார்:

  I was informed in a recent discussion that, the thought of Suffering is one that the Human mind is afraid of, which occupies the Mind in all our actions and discussions,

  One of the ways to conquer this thought is if i keep on asking the question “am i suffering this moment”, every moment, then i can understand that suffering is either a past event or a future event and is never in the moment. This helps me to live in the moment without the suffering.

  Trying to practice living the moment. Thanks

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உண்மை ஸ்ரீதர்.

   நான் என்றோ படித்த ஒரு வாசகம் நினைவிற்கு வருகிறது…

   “கடந்த காலம் … உடைந்து போன பானை…
   எதிர்காலமோ … மதில் மேல் பூனை…
   நிகழ்காலம் தான் கையிலிருக்கும் மீட்டப்படாத வீணை…”

   இதை உணர்ந்து, நிகழ்காலத்தை செம்மையாக அமைத்துக் கொண்டால்,
   வாழ்வு சிறப்பாக அமையும் என்பதும் உண்மை தான்.

   இன்னும் நிறைய பேசலாம்…!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்
   .

 4. paamaranselvarajan சொல்கிறார்:

  மிக சரியான காலத்திற்கேற்ற ஒரு நுனுக்கமான விஷயத்தில் இறங்க ஒரு அசாத்திய பயிறசிவேண்டும்… அது தங்களிடத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்த பலரில் ஒருவன் என்கிற எண்ணத்தில் ” ஜமாயுங்கள் ” என்றும்…தங்கள் பாணியில் பதிவாக வந்தால் பலரின் ” அகங்காரம் ” குறைய ஒரு வாய்ப்பு ஏற்படும்…..
  ரமணரின்”ஐயே!அதிசுலபம்..ஐயே!அதிசுலபம்”என்று ஆன்ம வித்தை என்ற அற்புதமான பாடலில் கூறியுள்ளதை பாேல் உள்ளார்ந்த உணரவாேடு படித்தால் ” நான் ” என்பதின் அர்த்தமும் ..அதிலிருந்து விடுபட வழிகளும் கிடைக்கும்தானே…..?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   இந்த தலைப்பில் வரக்கூடிய இடுகைகளுக்கு வலுவூட்ட வேண்டிய பொறுப்பும், பணியும் மற்ற சில நண்பர்களோடு, உங்களையும் சார்ந்திருக்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

   -நிறைய எதிர்பார்க்கிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களுக்கு,

  நாம் வாரம் ஒரு நாள் ( ஞாயிற்றுக்கிழமைகளில்….? )
  இந்த தலைப்பில் சந்திக்கலாமென்று நினைக்கிறேன்.
  ஒரு விஷயத்தை இங்கு மீண்டும் கூற விரும்புகிறேன்..
  நான் யாருக்கும் எதையும் advice செய்வதற்காக இந்த தலைப்பில்
  எழுதவில்லை….அதற்கான தகுதி எனக்கு இல்லை.
  நான் தெரிந்து கொண்டதை, உணர்ந்து கொண்டதை
  மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியே எழுதுகிறேன்.
  அதே போல், இந்த தலைப்பில் மற்ற நண்பர்களின் எண்ண ஓட்டங்களையும், அனுபவங்களையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இது ஒரு
  ஆன்மிக கருத்தரங்கமாக இருக்கட்டும்…

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 6. DeathBirthRaceR சொல்கிறார்:

  நாம் ~ ஆண் ~ பெண் என சொல்லி தேடலின் விடையறியா ஞானத்தீயை உயிரின் காரணம் கருணை என பரிபூரண சுக துக்கமும் கால சக்கரம் சுழலும் யுகமாயை புரிய முயற்சிக்க வித்திட்ட வலைபக்க அரசன் கா.மை அவர்களுக்கு நன்றி ……………
  திருத்தவோ துணியவோ மதம் ஏறும் மனிதம் படைத்த சாராம்சம் புரிய ஞானம் சித்தம் ஆன்மா புரிந்த உள்ளங்கள் இன்றும் உள்ளனவா …..! தேடி கிட்டா ஆன்மா கடைந்தேறும் உடலிறக்கம் பூமி தாங்கும் என நம்பும் மதம் கடந்த பற்றற்ற மனிதமா ……!
  இன்றைய சூழல் புரிய ஏதும் காலத்தின் கோலமே என அந்நியனாய் அசுத்தத்தின் பரிசுத்தம் தேடுவதே புரிய மனசஞ்சலமில்லா நிற்குணம் சூட்டி காட்டி தொழ உயிரின் ஆதாரம் யார் என மார்தட்ட உயிரின் அறிவே மனிதம் என ஆண் / பெண் இயலுமா? இருந்தும் தங்களின் தலைப்பு தேடலின் ஞானம் இறக்கா தீர்க்கம் தீர்ப்பாகுமோ …..! எதை யார் அசைக்க பஞ்சபூதம் ஏற்கும் உடற் கூறு : அக்கூறே பிரபஞ்ச சித்தர் போற்றி சூத்திர ஞானம் இயற்றிய அனைத்துக்கும் மூலக்கூறு யார்தான் நான் எனும் மாயபின்னல் மறக்க துணியும் கூறு சான்று உரைக்க துகள் கூறு இப்போது தேடும் மனித மூளை எனும் போது மதமேறிய “நான்” எனும் மமதை கூறு புணராய இறப்பு தேடுமே பின் ஞானம் சுழலும் வலையில் விஞ்ஞானக்கூறு விளக்க மனுடம் ஆணெண்ணெ பெண்ணெண்ண சிந்திக்க காலமே தவமிருக்கும் பிறப்பிறப்பு பூரணம் விடை தெரிவிக்கா நிலையினில் உருவெடுக்கும் சித்த கூறு மதமின்றி உயிர்போற்றும் ஆன்மா உணர்த்த முயலுமாயின் பித்து பிடித்த பாமரனென தூற்ற துணியும் உயிரியல் சுழற்சி ~ இன்று ~ நேற்று ~ நாளை எதுவும் மாயை புரிய உலகபல்லுயிர் தினமே நாம் ஏதோ சுயமாய் வாழ சான்று …..

  உயிர் அனைத்தின் காரணம் நாம் உணரா கூட்டமே மெஜாரிட்டி என இறைவன் சூத்திரம் ஏற்கா மனிதமே ஜாஸ்தி உலகம் அதில் பூபந்து பால்வெளியோ பெரும் புதிர் பந்து ~ படைத்த திருவருள் பணி புதிரான அந்தமில்லா கருணை தீபமே ஏற்காத மனிதம் ஏது………………… வாழ்க தங்கள் தேடலின் விடியா ஞான தீபம் வணக்கத்துடன் நானும் மனிதமே என எடுத்தியம்ப சுய லாப நோக்கில்லா ஏழைக்கு வாய்ப்பளித்த தூய தலைப்புக்கு நீடிக்க சிவார்ப்பண நல்வாழ்த்து திருச்சிற்றம்பல புகழ் வாழ்த்து நீடூழி தொடரட்டும் மூடு பனி நிலையில்லா தலைப்பாக …..

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  என் தனி விலாசத்திற்கு Koovilan World -இடமிருந்து
  வந்த பின்னூட்டத்தை இங்கு பதிகிறேன்.

  Koovilan World

  வணக்கம் நான் யார் தேட வித்திட்ட விலையில்லா வலைபதிவினில் விலைபோகா தூயவரே!
  நான் அறிமுகபடுத்த பின்னூட்டம் என் மனதால் இதுவரை யாருக்கும் அறிவிக்க
  வில்லை இருந்தும் கேள்வி பதில் வாயிலாக சொல்கிறேன் இயற்கை அறிவிக்குமா
  நான் யார் என்பதை ……………!
  இதயம் ரோஜா என பூப்போம் ஆனால் பூத்த செடியை மறப்போமா நான் யார் என்பதை
  தாங்கள் அறிவித்த நான் யார் என்பதை உணரும் மனிதமா இன்றுள்ள பாசாங்கில்லா
  மனிதம் …..

  உதாரண உண்மை மனக்கண் இருத்தி திருத்தா தேடல் கதை சொல்கிறேன் …..

  நீர் சொன்னது ரோஜாவே நீ தான் என்னால் பூத்தாய் பூரித்தாய் என மமதை
  எண்ணாது கணிவுல மனத்துக்கண் மாசிலா நிலை எடுத்தியம்பியது உடனே ரோஜா நீ
  தந்த கொடியை நான் தான் உனக்கு தகிக்காது கிட்டாது செடியென நான்
  உதிர்க்காது (ரோஜா சொல்லியது பொருந்தா விதி மதி என ஆராயா நீர்
  சிலாகிக்காது காது கொடுத்து கேட்டது நிரந்தரம் ஏதுமில்லை என நீர்
  பாய்ச்சி செடி தாங்கிய ரோஜா உணராததால்) தாங்கி என் வலியால்
  வழியிடைமறித்து நானெனும் மமதை அறிவிக்காது நீரே நீ என மறக்காது காது
  கொடுத்து கேட்காது நான் ரோஜா வீழ்வேனா என ஏதோ பூத்தது நீரால் மறந்த ஈந்த
  செடியை சாறாக்க துடிக்கிறது கேட்டால் நீர் நீ என எனக்கு தெரியும் தெரியாத
  செடிக்கோ என் நிலைக்கோ நானே என மமதை எண்ணா மண்ணிண் பிறப்பை (தகப்பனின்
  துளி பெற்ற குருட்டு குதர்க்கத்தை) ஏற்றி தலைகீழ் பூவாய் பேசாதிருக்கம்
  செய்வது செடி அறியாது ரோஜா பூத்தது பூரிப்பதோ ஆனால் நீர் அறியுமே
  அறிவிக்குமா அதுதான் நீரின் தன்னலமில்லா மரபு ~ ஆண் என்ற நீர் நான் செடி
  அது அடுத்துள்ள ரோஜாபூக்க துணையிருந்து தன்னை மாய்த்த ரோஜாவுக்கா
  நீருக்கா அறியா சுழி சுமக்கும் இயற்கை அழுகுரல் ரோஜாவுக்கா செடிக்கா
  போட்டி இருவருக்கும் நீருக்கோ கண்ணீர் தெரிவிக்காது தூய நிலை ரோஜாவும்
  செடியும் அறியாது என அழுது புழம்பாது ஏதோ பிடறிய ரோஜா தடுத்தது செடியை என
  வெட்டாது நீரே கண்ணீர் வடிக்கும் நிலைதான் இன்றைய நிலை~ நீர் நான் ~
  பாசம் ரோஜா ~ செடி நீரின் துணையாகுமா காலத்தின் கணக்கு ரோஜாவின் மமதை
  இல்லாத போக்கே…..

  ரோஜாவின் போக்கு நீரறியும் செடி அறியாதே ~ நீருக்கு அளித்த சூக்குமம்
  செடிக்கோ பூவுக்கோ அறிவித்தவன் மனத்துக்கண் புரிவிக்கவில்லையே பதில் நான்
  நீர் ~ உதிரும் ரோஜா செடி தாங்கா மமதை பேர் வழி ~ வலி நீருக்கு புரிய
  செடிக்கு வாய்ப்பில்லை ~ அறிவிக்க ரோஜா மண்ணிண் தந்தை இரத்த பாச வேசம்
  மறக்க விதி விடுவதாயில்லை ~ நீரோ அநாதை ~ செடியோ அநாதையின் கண்ணீர்
  துடைக்க விடாத ரோஜாவின் கைப்பாவை உணருமா ரோஜா தொடருமா செடி ~ நீர்
  சுயநலம் கடந்தது என தெரிவிக்க ~ கோழை என்றுமே ஊமை ரோஜாவை போல என உணர்ந்தே
  செடியை தேடா ரோஜாவை உதிர்க்க நினைக்காத வீர வாக்கியம் எதிலுமே ஆணவ
  உணர்வல்ல என தெளிந்து ஏதோ காட்டி கொடுக்காது துயில்பவன் இழந்தவன் யார்
  பொறுத்தது நீர் போல அறிவிக்க மனம் உண்ணாதே ஏதையும் செடிக்கு மமதை பூவின்
  மேல் பூவுக்கோ குருட்டு மமதை நீராதாரம் தாண்டிய தாண்டவிடா செடியின் மேல்
  அகப்பட்டது புரிந்துணர்ந்து இழந்தது நீரே அனைத்திலும் வயதால்
  வளர்ச்சிக்கு வித்திட்டதால் இயக்கம் நீர் மறப்பதில்லை மறுப்பதுமில்லை
  துணிவால் ஏதும் எதிலுமே நானென்னும் மமதையோ போதையோ நீருகௌகில்லை ~ ரோஜா ~
  ரோஜா சுமக்க கொடுத்த செடி இரண்டும் நான் என வீழ துடிப்பதை நான் யார் என
  உணருமா அதுவே நீராதாரத்தின் நிலையில்லா தாமரையிலை நீர் …..

  பக்திக்கு ~ முக்திக்கு ~ ……………?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Koovilan World,

   மன்னிக்கவும். நீங்கள் எழுதியதை புரிந்துகொள்ளும் சக்தி எனக்கில்லை.
   நண்பர்கள் யாரேனும் புரிந்து விளக்கம் எழுதினால், பின்னால், அதன் மீது
   நான் என் கருத்தை கூறுகிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 8. தமிழன் சொல்கிறார்:

  இதில் என் கருத்து எழுதணும்னு நினைத்தேன். பிரயாணத்தினால் எழுதவில்லை. அப்புறம் விட்டுப்போய்விட்டது. இரண்டாவது பகுதியில் முடிந்தால் எழுதுகிறேன்.

 9. Pingback: கொஞ்சம் தேடல் – கொஞ்சம் ஞானம் ….( 2 ) | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.