மக்களிடம் அரசே கொள்ளை அடிக்கலாமா…?Welfare State என்று பெயர் வாங்க முடியா விட்டாலும்,
“Looting State” என்று ஒரு அரசு பெயர் வாங்கலாமா…?

மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்கிற நம்பிக்கையில் தான்
மக்கள் ஒரு அரசை தேர்ந்தெடுக்கிறார்கள்…
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்கள் நலனை கவனிப்பதற்கு
பதிலாக, மக்கள் தலையிலேயே மிளகாய் அரைக்கிறது
என்றால், மக்களின் இளிச்சவாய்த்தனத்தில் ஆளும் கட்சிக்கு
இருக்கும் நம்பிக்கையை தான் இது தெரிவிக்கிறது.

அடுத்த தேர்தல் வருவதற்குள் மக்கள் இதையெல்லாம் மறந்து
விடுவார்கள் என்று ஆளும் கட்சி நினைப்பதாகத் தானே
அர்த்தம்….?

பாஜக அரசு மத்தியில் நிர்வாகத்தை ஏற்றதும், ரயில்வே
துறைக்கு திரு.சுரேஷ் பிரபு பொறுப்பேற்றதும், துவக்கத்தில்
மிகுந்த நம்பிக்கையை அளித்தன.

ஆனால், போகப்போக நடக்கும் நிகழ்வுகள் – மக்களுக்கு
வசதிகளை அதிகரிப்பதற்கு பதிலாக, ரயில்வே துறைக்கு
வரும்படியை அதிகரிக்கக்கூடிய வழிகளில் தான் அதிக கவனம்
செலுத்தப்படுகிறது என்பதை வெட்டவெளிச்சமாக்குகிறது.

ரயில்வே சேவைக் கட்டணங்கள் அனைத்திலும், ஏற்கெனவே
நேரடியாகவும், மறைமுகமாகவும் பல தவணைகளில்
ஏற்றங்கள் கொண்டு வரப்பட்டு விட்டன.

முக்கியமாக, “தத்கல் – ப்ரிமீயம்” முறையில் தற்போது
கொண்டு வரப்பட்டுள்ள கட்டணங்களை எந்த காரணத்தைச்
சொல்லியும் அரசால் நியாயப்படுத்த முடியாது.

இந்த “தத்கல்-ப்ரிமீயம்” கொள்ளையைப்பற்றி நேற்றைய
தினமணி நாளிதழில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரை இதை
விவரமாக விளக்குகிறது. அதை கீழே பதிந்திருக்கிறேன்.

பண்டிகை சமயங்களில், மக்களின் பலகீனத்தையும், அவசர
தேவையையும் பயன்படுத்தி, ப்ரைவேட் வீடியோ பஸ்கள்
அடிக்கும் கொள்ளைக்கும், இதற்கும் எந்த வித்தியாசமும்
தெரியவில்லை…. அது சட்டவிரோதம், இது சட்டபூர்வம்
என்பதைத்தவிர…!

பயண கட்டணங்களை உயர்த்துவதற்கு பதிலாக, வேறு
எத்தனையோ வழிகளில் ரயில்வேயின் வருமானத்தை
அதிகரிக்க வழிகள் உள்ளன என்பது அவர்களுக்கு தெரியாதா
என்ன…?

மக்களின் கொதிப்பு, அரசின் மீதும், ஆளும் கட்சியின் மீதுமான
நிரந்தர வெறுப்பாக மாறும் முன்னர், அரசு விழித்துக் கொண்டு
செயல்படுவது (அவர்களுக்கும்….) நல்லது.

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to மக்களிடம் அரசே கொள்ளை அடிக்கலாமா…?

 1. Sundar Raman சொல்கிறார்:

  தமிழ் நாட்டில் , சின்ன சின்ன ஊர்களில் ( கும்பகோணம் , சிதம்பரம்) .. சாதாரண நாட்களில் கூட , சின்ன லாட்ஜ்களில் , ஒரு நாள் வாடகை 1000 க்கு மேல் . பண்டிகை என்றால் பல மடங்கு …கேரளாவில் ஒரு நாள் கூலி 500. தமிழ் நாட்டில் ஒரு நாள் கூலி 500 யில்லை என்றாலும் 300 ஆவது இருக்கும். அரசு நல்ல சேவை செய்ய வேண்டும் , அதாவது சுத்தமான ரயில் , ஸ்டேஷன் , படுக்கை ஆனால் காசு மட்டும் கேட்கக்கூடாது . ரயில்வே ஊழியர்களுக்கு சம்பளம் , உயர்வு எல்லாம் கொடுக்க வேண்டும் . இது எப்படி சாத்தியம் … முன்பதிவு செய்வதில் , இடை தரகர்களின் தொந்தரவு இப்போது பெரும்பாலும் இல்லை . சாதாரண சின்ன ஆட்டோவுக்கு 50 அல்லது 100 கொடுக்கும் மக்கள் , ஓர் இரவுக்கு , படுக்கை வசதியடன் போக 1000 கொடுப்பதில் தவறேதும் இல்லை . விலை வாசியை பாருங்கள் , வருமானத்தை பாருங்கள் ..காலம் மாறுகிறது .

  • Sridhar சொல்கிறார்:

   Dear SundarRaman,

   Sorry to say that this is an ABSURD justification. The government cannot compare the private players for justifying its action. The Government has the responsibility to question the unjust fleecing of its Citizens by the Private Players, instead using them as the shield for increasing the Governments revenues is the highest disregard any Government can do to its Citizens.
   You may say that the affordable will buy, but each seat the affordable buys, the unaffordable loses.

   Your last words “காலம் மாறுகிறது” will become true soon if such acts are not corrected in time. Such unthoughtful justification will not stand in the People’s Forum and we have many examples of the same.
   Thanks.

   • Sundar Raman சொல்கிறார்:

    I have not only quoted the prices in other sectors , but also the improvement in earning capacity of the people . Any cut off point will have affordable s and un-affordable s … so what point you stop .BJP continue to do well in peoples forum – because it is pro poor . Pro poor does not mean giving it at a free, people ready to pay for a standard as long as it is reasonable. Recently Railway introduced TEJA express with posh seats , screen,, big glass window – what happened in the first day – vandals broke the glass, dirtied the train beyond a limit. Railways works under lots of constraints – to bring about the change , they need funds , big budgets and vision . where as what does the media does ( even see this blog – used a very in appropriate picture ) for conveying a different message . We all need to cooperate , and contribute – then Railway changes , Nation changes . .

  • Sanmath AK சொல்கிறார்:

   Dear Sundar Raman,

   I would accept increasing the fair marginally for SL class. Let the percentage increase of rates shall be high & higher as the comfort level increases. But this “premium tatkal” scheme is a kind of looting. There is nothing called “ethics” in business – the only ethics for a business is profit. But here, the service provider is a government organization to serve people. For this, they dont require to go in loss. Let them follow the ethics of “service”.

   One important thing to point out here, is “முன்பதிவு செய்வதில் , இடை தரகர்களின் தொந்தரவு இப்போது பெரும்பாலும் இல்லை”, how do you say this ? By saying this what are you trying to portray ?

 2. அரசைக் குற்றம் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
  மக்களில் பெரும்பாலானோர் அறியாமைவாதிகளாகவே இருக்கின்றோம்.

 3. புதியவன் சொல்கிறார்:

  What you pay is what you get. அரசு எதையும் இலவசமாகக் கொடுக்க முடியாது, கல்வியையும் அது சம்பந்தமான உதவியையும் தவிர. நமது இரயில்வேயின் தாழ்ந்த நிலைக்குக் காரணம், சேவைக்கு உரிய விலையை மக்களிடமிருந்து பெறாததுதான் என்று நினைக்கிறேன்.

  “மக்களின் பலகீனத்தையும், அவசர தேவையையும் பயன்படுத்தி” – இதை எப்படி ஏற்றுக்கொள்வது? மக்கள் முதலில் அறியாமை என்ற நோயைத் தவிர்க்கட்டும். அரசும் எல்லா ஏமாற்றுவழிகளையும் அடைக்கட்டும் (ஏஜெண்ட் என்ற பெயரில் கொள்ளையர்கள் டிக்கெட்டுகளை பிளாக் செய்துகொள்வதை. இதற்குப் பெயர், டிராவல் ஏஜென்சி இல்லை. டிராவல் கொள்ளையர்கள் கம்பெனி). இன்னொன்று, இரயில்வே, உணவு அளிப்பதையும் நிறுத்திவிடலாம். அதில் எந்த வித குவாலிட்டியும் இல்லை. இதில் ஒரே ஒரு நன்மை, இரயில் பெட்டிகளில் மக்கள் குப்பை உணவுகளைத் தூக்கிப்போடாமல் இருப்பதுதான்.

  நான் இரயில்வே மந்திரியானால், எனது முதல் கடமை, இரயில்வேயில் தேவையில்லாத மக்களைப் பணியிலிருந்து விலக்குவது, அதை ஒரு சரியான நிறுவனமாக ஆக்குவது. அதாவது, சென்னை-திருச்சி ரயில், நடத்த, 10,000 ரூ வருமானம் ஒரு டிரிப்புக்கு வேண்டுமென்றால், ரிஸ்க், இன்ஷ்யூரன்ஸ், பராமரிப்பு எல்லாச் செலவுகளும் சேர்ந்து அதை PROFIT CENTERஆக மாற்றுவதுதான். தனியார் எப்படி இலாபம் அள்ள முடிகிறது? அரசு, கொள்ளையடிக்கவேண்டாம், ஆனால் சேவைக்கேற்ற பணத்தை பயனீட்டாளர்களிடமிருந்து வாங்கத்தான் வேண்டும். அதுபோல, ஓசி டிக்கெட், பணி சம்பந்தமாகப் பயணம் செய்யும் பணியாளர்களைத் தவிர வேறு யாருக்கும் குடுக்கக்கூடாது. நாசிக் ல வேலை பார்க்கிற பிரின்டர்களுக்கு, அரசு என்ன ஒவ்வொரு வருடமும் 10 ரோல் பணம் பிரின்ட் அவுட் இலவசமாகக் கொடுக்குதா? கோலார் தங்க வயல் பணியாளர்களுக்கு ஆளுக்கு 5 கிலோ தங்கம் இலவசமா? எதற்கு பணியாளர்களுக்கும் அவர் குடும்பங்களுக்கும் இலவச பிரயாணம் (அடுத்தவன் காசில்)

  மக்கள் இதற்கெல்லாம் கொதித்தால், அவர்கள் உடல் நலத்துக்குத்தான் கேடு.

  • பாமரன் சொல்கிறார்:

   இத்தகைய “கொள்ளை”களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள்
   இரண்டே ரகத்தைச் சேர்ந்தவர்கள். ஒன்று – தீவிர பாஜக ஆதரவு கூட்டம்.
   இரண்டு – இந்தியாவில் இல்லாமல், ஆஸ்திரேலியாவிலேயோ,
   அமெரிக்காவிலோ உட்கார்ந்து கொண்டு “மோதி” – “மோதி”
   என்று கூக்குரல் இடுபவர்கள்.
   சென்னையில் பத்து மாதமும் அடிக்கும் வெய்யிலில்
   மாங்கு மாங்கென்று வேலை செய்துகொண்டு, மாதம் இரண்டு முறையாவது ஊர்சென்று பிள்ளை குட்டிகளை, குடும்பத்தை பார்க்க வேண்டிய அவசியத்தில் இருப்பவர் எவராவது சொல்வார்களா இதை ?
   “தினமணி” கட்டுரையை எழுதியவவரும், வெளியிட்ட ஆசிரியரும் முட்டாளா ? நீங்கள் சொல்லும் justification எல்லாம் யோசிக்கத்தெரியாதவர்களா ? ஆட்சிக்கு வந்து 3 வருடம் ஆயிற்று. என்ன செய்திருக்கிறார்கள் இதுவரை ரயில்வேயில் ? அஹமதாபாதுக்கு “புல்லட்” ரயில் விட்டால் போதுமா? அதற்காகத்தான் மக்கள் இவர்களை தேர்ந்தெடுத்தார்களா ? 15 நாட்களுக்கு ஒரு தடவை பயணம் செய்து அனுபவிப்பவனுக்கு தான் தெரியும் இந்த அவஸ்தைகள் எல்லாம். தத்துவம் பேசுவது, ஊருக்கு உபதேசம் பேசுவது எல்லாம் ரொம்ப சுலபம்.
   இந்த விளக்கங்களை கொடுக்கும் உங்களைப் போன்றவர்கள்
   ஆகாயத்திலோ, ரோட்டிலோ பறப்பவர்களாக இருக்கும். வேறு வக்கு வசதி எதுவும் இல்லாமல் கடைசி நேரத்தில் ரயிலைப்பிடித்து போகும் இந்த நாட்டின் சராரசி மனிதன் படும் பாடுபற்றி உங்களுக்கென்ன தெரியும் ? உங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான் “மோதி,மொதி”.
   இந்த வலையில் நீங்கள் எழுதுவதை, செண்டிரலிலோ,
   எக்மோரிலோ இத்தகைய ரயில்களை பிடிக்க காத்திருப்பவர்
   மத்தியில் சொல்லி பாருங்கள். பிறகு புரியும்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    டிக்கெட் மற்றும் சேவைகளின் விலையை உயர்த்தி தான்
    ரயில்வேயை சீர்திருத்த வேண்டுமென்றால் அதற்கு மோடிஜி அரசு தேவையே இல்லை. சுரேஷ் பிரபு என்கிற ஒரு ஆடிட்டரை ரயில்வே அமைச்சராக்க வேண்டிய அவசியமே இல்லை. இருக்கின்ற ரயில்வே நிர்வாகமே, அதிகாரிகளின் கூட்டமே போதும்.

    மக்களை பாதிக்காத வகையில் கொண்டு வருவது தான்
    உண்மையான சீர்திருத்தம். 50-100 ரூபாய் டிக்கெட் விலையை
    ஏற்றுவதை நான் குறை சொல்லவில்லை. 350 ரூபாய்
    டிக்கெட்டை 950 ரூபாய்க்கு விற்கும் கொள்ளையை தான்
    குறை கூறுகிறேன்.

    ஏன் – பாசஞ்சர் கட்டணங்களை உயர்த்தாமல் வசதிகளை
    அதிகரிக்க முடியாதா…? முடியாது என்று சொன்னால் –
    முடியாது என்று சொல்லும் அரசாங்கமே எங்களுக்கு தேவை இல்லை என்றே நான் சொல்லுவேன்.

    ஏற்கெனவே, ஏகப்பட்ட யோசனைகள் கூறப்பட்டுள்ளன…
    எத்தனை வருடங்கள் யோசித்துக் கொண்டே இருக்கப்
    போகிறார்கள்..?

    சரக்கு ஏற்றிச் செல்லும் விதங்களில், நேரங்களில், முறைகளில் மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம், ரயில்வே துறை வசம் இருக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை தகுந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம், விளம்பரங்கள் செய்யும் இடங்களை மாற்றியும், அதிகரித்தும் – என்று பல்வேறு விதங்களில் வருவாயை திரட்ட முடியும்.

    இங்கே விலையுயர்வுக்கு ஆதரவாக எழுதுபவர்களிடம்
    நான் கேட்கிறேன்…

    மோடிஜி பதவிக்கு வந்த மூன்று வருடங்களில் இதுவரை
    ரயில்வே துறையில் சாதித்தது என்ன…?

    எதைக்கேட்டாலும், அந்த திட்டம் இந்த திட்டம் என்று
    அடுக்கிக்கொண்டு போகிறார்களே தவிர – நடைமுறையில்
    இந்த துறையில் இதுவரை வந்திருப்பது என்ன ?

    நான் தொடர்ந்து அடிக்கடி ரயிலில் பயணிப்பவன். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நீண்ட தூரங்கள் பயணிப்பவன். என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்…. சொல்லிக்கொள்ளும்
    அளவிற்கு ரயில்வேயில் எந்த முன்னேற்றமும் இல்லை.
    ( ஆன்லைன் ரிசர்வேஷன் செய்யும் முறைகளில் டெக்னிகலாக
    செய்யப்பட்டுள்ள சில வசதிகளைத் தவிர…)

    இன்னமும், கம்பார்ட்மெண்டில் (2 டயர், 3 டயர் உட்பட)பகலில் கரப்பான் பூச்சிகள் ஓடுகின்றன.. இரவில் எலிகள் ஓடுகின்றன. பர்த்தில் படுக்கவே அருவருப்பாக இருக்கிறது.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


     தயவுசெய்து, பாஜக அரசு செய்யும் தவறுகளை கண்களை மூடிக்கொண்டு
     நியாயப்படுத்தாதீர்கள். கண்டிக்கிற விஷயங்களை கண்டித்து தான் ஆக வேண்டும்.

     “தினமணி” நாளிதழ், பாஜகவுக்கு எதிரான பத்திரிகை இல்லை.
     அதிலேயே ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக குரல் எழுப்பப்படுகிறது என்றால்,
     அதில் உள்ள நியாயங்களை, அவலத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 4. புதியவன் சொல்கிறார்:

  ஐயா பாமரன்… யாரையும் STAMP செய்யாதீர்கள். ரயில் கட்டண உயர்வை நான் ஆதரிப்பது, பாஜக ஆதரிப்பதாகாது. நானும் ஐந்து நாள் முன்பு சதாப்தியில் பயணித்தேன். 1000+ ரூ டிக்கெட்டுக்குக் கொடுத்தேன். அதுக்கு ஏத்த சர்வீஸ் இல்லைதான். கொடுக்கும் உணவு தரமாக இல்லை. நமது ரயில்களும் சுத்தமாக இல்லை. அவன் அவன், கிடைத்த இடத்தில் (இரயில் நிலையத்தில்) படுத்துக்கொண்டிருக்கிறான். ஒரே சுத்தமின்மை. கண்ட இடத்திலும் லக்கேஜை வைத்து எல்லாருக்கும் இடஞ்சலாக பயணிகள் இருக்கின்றனர். இதுக்கு கலெக்டிவ் எஃபர்ட் தேவைப்படுகிறது. சரி… மோதி அவர்கள் மோசம், பாஜக கட்சி மோசம். விட்டுவிடுவோம். பாஜக, காங்கிரஸ், அரசியல்வாதிகள் அனைவரும் மிக மோசம். பொது மக்கள், சராசரி மக்கள்தான், உங்களைப் போன்றவர்கள்தான் மிக நல்லவர்கள். சரி..

  நம் சராசரி மனிதர்களை மட்டும் பேசுவோம். அவர்கள் எந்த விதத்தில் பொது இடங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்கிறார்கள். பொதுச் சொத்து தன்னுடையது என்ற எண்ணம் இருக்கிறதா? ஏதேனும் ஒரு வீட்டை, தெருவை அவர்கள் ஒழுங்காக வைத்துக்கொள்கிறார்களா? குடித்துவிட்டு பயணம் செய்யக்கூடாது என்று அந்த மாக்களுக்குத் தெரியாதா? ஏன் லஞ்சம் கொடுக்கிறார்கள்/வாங்குகிறார்கள்? யார் ‘வரிசையை’ ஃபாலோ செய்கிறார்கள்? முதலில் ஏன் பலர், ரயில்வே லைனை கிராஸ் செய்கிறார்கள்? ஏன் தனி மனித ஒழுக்கம்கூட இல்லாதவர்கள் மனிதனாகப் பிறந்திருக்கிறார்கள்? இவர்கள் அத்தனைபேரையும் யாரை வைத்துக் கண்காணிப்பது? ஏன் புத்தியை உபயோகப்படுத்தாமல் வாக்களிக்கிறார்கள் அல்லது வாக்களிக்கப்போவது இல்லை? நாங்கள்லாம் மட்டமாக இருப்போம். ஆனால் தேவதூதன் வந்து, ஒரே நாளில் எங்களுக்கு எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுப்பார்கள், சுத்தமாக்கிவிடுவார்கள் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள், மீண்டும் 2000 வருடங்கள் கழித்துப் பிறந்தால் ஒருவேளை கொஞ்சம் முன்னேறியிருக்கலாம்.

  நான் இதற்காகத்தான் இந்தக் கட்சிக்கு ஓட்டுப்போட்டேன் என்ற தெளிவு, ஒருவேளை 0.0000006 சதவிகித இந்திய மக்களுக்கு இருக்கலாம். கேள்வி கேட்பது அறிவுடைமையாகாது. ஏன் வங்கிகளைத் திறக்கத்தான் ப.சியை மக்கள் தேர்ந்தெடுத்தார்களா? அல்லது காமன்வெல்த் ஊழல் செய்ய, 2 ஜி கொள்ளை இவற்றிற்க்காகத் தேர்ந்தெடுத்தார்களா? மோடியோ பாஜகவோ நினைத்த அளவு செயல்படவில்லையானால், அடுத்த தேர்தலில் மாற்றிவிடவேண்டியதுதான். நம்முடைய பிரச்சனை, நம் மக்களின் அறிவீனம், வேறு மாற்று அரசியல்வாதிகள் இல்லாததுதான்.

  • பாமரன் சொல்கிறார்:

   ரயில் டிக்கெட் விலையை ஏற்றி கொள்ளையடிப்பதை பற்றி
   குறைகூரினால், சம்பந்தமே இல்லாத விஷயங்களைப்பற்றி பேசுகிறீர்கள். சுத்தம் பற்றியா இங்கு விவாதம் ? சரியான பதில் சொல்ல வழியில்லை என்றால் diversionary tactics ?
   // கேள்வி கேட்பது அறிவுடைமையாகாது //
   இதுக்கு என்ன சார் அர்த்தம் ? அப்ப எல்லாத்துக்கும்
   ஜால்ரா போடறது தான் அறிவுடைமையா ?

   • புதியவன் சொல்கிறார்:

    எந்த நாட்டில் அரசு இத்தகைய வசதிகளைச் செய்துதருகிறது? இதைக் கொள்ளை என்று நான் கருதவில்லை. கடைசி நேரத்தில் பிரயாணம் செய்ய முடிவு செய்தால், அதற்குள்ள விலையைக் கொடுக்கவேண்டியதுதான். இதிலெல்லாம் ‘சாமானியன்’ என்று பேசுபவர்கள், அந்த சாமானியன் ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கு மேல் குடிக்க செலவழிக்கிறான், 50 ரூக்கு புகை பிடித்து, பக்கத்தில் இருப்பவர்களுக்கும் பாரமாகிவிடுகிறான் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

    ‘ஜால்ரா போடுவது’ – மோடி அரசு எது செய்தாலும் இவர்கள் எதிர்கருத்து சொல்பவர்கள், வாய்ச்சொல் வீரர்கள் என்று உங்களைச் சொல்லமுடியுமா? கருத்தை ஆதரித்ததாலேயே, ‘மோடி ஜால்ரா’, ‘வெளி’நாட்டில் இருப்பவர்கள் என்று STAMP பண்ணுவது சரியான பதிலா? மக்கள் ஒழுங்காக நடந்துகொண்டு அரசுக்கு செலவைக் குறைத்தால், தேவையில்லாத கட்டணச் சுமை ஏற்றவேண்டியிருக்காது.

    இரயில்வே, சர்வீஸ் செக்டார் கிடையாது. அது PROFIT CENTER. அதற்கு ஏற்றபடி அரசு கொள்கை வகுப்பது, செயல்படுவது ஆதரிக்கத் தக்கது. பிரயாணம் செய்யும் தேதி அருகில்வர அருகில்வர, கட்டணத்தை அதிகமாக்குவது சரியான முடிவு. இரயில்வே அமைச்சகம், ‘100 ரூ அதிகம் கொடுத்தால் உணவு’ என்பதையும் அமல்படுத்தலாம். இப்போது சில ரயில்களில் அது கட்டாயம். ஆனால், மக்கள் இரயிலைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாமல், அதற்கு இன்னும் அதிகம் அரசு செலவழிக்கவேண்டும், கேடரிங் வேலை வாய்ப்பு போகும் என்று எண்ணலாம்.

 5. Sundar Raman சொல்கிறார்:

  வந்து மூன்று ஆண்டுகள் தான் ஆகின்றன …யாரவது உயர் அதிகாரியிடம் பேசி பாருங்கள் , துறை சார்ந்த வல்லுனர்களிடம் பேசி பாருங்கள்அவருடைய அனுமானம் என்ன சொல்கிறது என்று ?. இதற்க்கு முன் இருந்த அமைச்சர் , உறவினர் மூலம் என்ன ஊழல் செய்தார் என்று பாருங்கள் . இப்பொழுது அமைச்சரின் செயல்பாடு எப்படின்னு பாருங்கள் . எத்தனையோ சிறிய முயற்சிகள் , சில சில பெரிய முயற்சிகள் … எல்லாம் கூடிவர கொஞ்சம் சமயம் கொடுங்கள் . கடைசி நிமிடத்தில் பயணம் செய்ய துடிக்கும் மக்களிடம் , கூட பணம் வாங்குவது ….இப்போது பெரிய பெரிய விமான கம்பெனிகளிடம் கூட உள்ளது . சீசன் பார்த்து விலை அதிகம் . அவர்களே ஆட்கள் இல்லாத பொழுது டிஸ்கவுண்டில் டிக்கெட் விற்பார்கள் . இது ஒரு வர்த்தகம் சேவை அல்ல. ஏன் சில சமயம் தக்காளி 50 ரூபாய் அல்லது 100 ரூபாய் …இருப்பது கொஞ்சம் , வாங்குபவர்கள் அதிகம் .
  ஆக்க பூர்வமான யோசனைகள் இருந்தால் நேரிடையாக , ரயில்வே அமைச்சரிடம் கொண்ண்டு செல்லுங்கள், இரு கரம் கூப்பி ஏற்று கொள்வார்கள்

  • பாமரன் சொல்கிறார்:

   இவர் செய்யறது சரி இல்லை என்று சொன்னால், அவர் செஞ்சது சரியா என்று கேட்கறீங்க. அவர் செஞ்சது சரி இல்லைன்னு தான் தண்டனை கொடுத்தாங்க. அப்ப இவருக்கும் அதையே கொடுங்க என்கிறீர்களா ?
   விமான கம்பெனி கொள்ளை அடிச்சான் என்றால், அவன் தனிப்பட்ட முதலாளி வியாபாரம் செய்கிறான்.
   மக்களுக்காக இயங்க வேண்டிய அரசும், தனிப்பட்ட முதலாளி மாதிரி கொள்ளையடித்தால் அப்புறம் அவனுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு ?
   //வந்து மூன்று ஆண்டுகள் தான் ஆகின்றன//
   மூன்று வருட காலம் அவ்வளவு சிறியதா ?
   //ஆக்க பூர்வமான யோசனைகள் இருந்தால் நேரிடையாக , ரயில்வே அமைச்சரிடம் கொண்ண்டு செல்லுங்கள், இரு கரம் கூப்பி ஏற்று கொள்வார்கள்// இதுவரை சொல்லப்பட்ட யோசனைகள் எல்லாம் என்ன ஆனது? டிக்கெட் விலை ஏற்றியதை தவிர வேறு எதையும்
   ‘ஏற்றதாக’ தெரியவில்லையே ?

 6. N.Rathna Vel சொல்கிறார்:

  மக்களிடம் அரசே கொள்ளை அடிக்கலாமா…? – பண்டிகை சமயங்களில், மக்களின் பலகீனத்தையும், அவசர
  தேவையையும் பயன்படுத்தி, ப்ரைவேட் வீடியோ பஸ்கள்
  அடிக்கும் கொள்ளைக்கும், இதற்கும் எந்த வித்தியாசமும்
  தெரியவில்லை…. அது சட்டவிரோதம், இது சட்டபூர்வம்
  என்பதைத்தவிர…! – எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

 7. rathnavelnatarajan சொல்கிறார்:

  மக்களிடம் அரசே கொள்ளை அடிக்கலாமா…? – பண்டிகை சமயங்களில், மக்களின்
  பலகீனத்தையும், அவசர
  தேவையையும் பயன்படுத்தி, ப்ரைவேட் வீடியோ பஸ்கள்
  அடிக்கும் கொள்ளைக்கும், இதற்கும் எந்த வித்தியாசமும்
  தெரியவில்லை…. அது சட்டவிரோதம், இது சட்டபூர்வம்
  என்பதைத்தவிர…! – எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு வி ம ரி ச ன ம் –
  காவிரிமைந்தன்

  2017-06-08 11:00 GMT+05:30 வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் :

  > vimarisanam – kavirimainthan posted: “… … … Welfare State என்று
  > பெயர் வாங்க முடியா விட்டாலும், “Looting State” என்று ஒரு அரசு பெயர்
  > வாங்கலாமா…? மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்கிற நம்பிக்கையில் தான்
  > மக்கள் ஒரு அரசை தேர்ந்தெடுக்கிறார்கள்… தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு,”
  >

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.