துக்ளக் “சோ” சொல்கிறார் – கால நேரம் நம்மை என்ன செய்யும் …?இந்த வயதில் கூட வாரத்தின் 7 நாட்களிலும், தினமும்
ராகு காலம், எமகண்டம் எப்போது என்பது எனக்கு தெரியாது.
பெரும்பாலும், பலரும் இதை மனப்பாடமாக சொல்வார்கள்.

Deliberately, நான் அதை நினைவில் வைத்துக் கொள்ள
விரும்பவில்லை….!!! காரணம்…? அது நம்மை எப்போதும்
பயமுருத்திக் கொண்டே இருக்கும்… ஒரு discouraging factor…!

ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாலை 4.30 முதல் 6.00 மணி
வரை ராகு காலம் என்பது மண்டையில் ஆணி அடித்தாற்போல் இறங்கி இருக்கிறது… அதுவும் எப்படி…?

ஏற்கெனவே முன்பொரு முறை இந்த தளத்தில் விவரமாக
சொல்லி இருக்கிறேன் – எம்ஜிஆர் அவர்கள் கலந்து கொண்ட
ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும்போது ராகு காலம் என்னை
படுத்திய பாடு குறித்து…!!!

சோ அவர்களின் கட்டுரைக்கு போகும் முன்னர், இது குறித்த
என் பார்வையை சொல்லி விட விரும்புகிறேன்.

நம்மிடையே இது ஒரு ஊறிப்போன வழக்கம். பிறந்தது முதலே, வீட்டில் பெரியவர்கள் சொல்லி சொல்லி, பேசி பேசி,
இது ஒரு அவசியமான விஷயம் என்கிற கருத்து நம் அறியாத
பருவத்திலேயே நம் ரத்தத்தில் கலந்து விட்டது.
இது அழுத்தமாக பதிந்து விட்டவர்கள் விஷயத்தில் பின்னர்
மாற்றிக்கொள்வது மிகவும் கடினம்.

என்னைப் பொருத்தவரை, நான் பொதுவாக ராகு காலம்,
எமகண்டம் எல்லாம் பார்ப்பது இல்லை. காரணம், நான்
“பெரிய கடவுளை” நம்புபவன். எந்த ஒரு முக்கியமான
செயலிலும் ஈடுபடும் முன்னர், ஒரு நிமிடம் கண்களை
மூடிக்கொண்டு, பிரார்த்தனையில் ஈடுபடுவேன். “இறைவா,
இது நல்லபடியாக நடந்தேற அருள் புரி” என்று வேண்டுவேன்.
அவ்வளவு தான்… பிறகு அது நல்லபடி நடந்தாலும், வேறு
மாதிரி முடிந்தாலும் – நான் சீரியசாக கவலைப்படுவதில்லை.
எது நடக்க வேண்டுமோ அது நடந்திருக்கிறது… இதைப்பற்றி
மேற்கொண்டு கவலைப்பட்டு பயனில்லை… அடுத்த வழியை
பார்ப்போம் என்று நகர்ந்து விடுவேன்.

இது நான் மட்டும் முடிவெடுக்கிற சமயங்களில் தான்.
எப்போது, மற்றவர்களும் அதில் ஈடுபட்டிருக்கிறார்களோ –
அப்போது நான் மற்றவர்களின் உணர்வுகளுக்கு எதிராக
எதையும் செய்ய மாட்டேன்… அவர்கள் கால,நேரம் பார்க்க
விரும்பினால், அதன்படியே நடப்பேன். வீட்டில் கல்யாணம்,
வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்போது,
இதையெல்லாம் மற்றவர்களின் விருப்பத்திற்கு விட்டு விடுவது என் வழக்கம்.

கால, நேரம் – மனிதரை என்ன செய்யும் …?
என்பது குறித்து ஆசிரியர் “சோ” அவர்கள் எழுதிய சுவாரஸ்யமான கட்டுரை ஒன்று கீழே –

படித்து விட்டு, உங்கள் கருத்தையும் கூறுங்களேன்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to துக்ளக் “சோ” சொல்கிறார் – கால நேரம் நம்மை என்ன செய்யும் …?

 1. selvarajan சொல்கிறார்:

  அய்யா …! ஞானசம்பந்தர் ” கோளறு பதிகம் ” பாடி அப்பருக்கு ஆறுதல் அளித்துவிட்டு சென்றாலும் — ஒரு வயதில் மூத்தவரின் சொல்லுக்கு மதிப்பளித்து — அவர் மேற்கொண்ட செயலை நாம் உற்று நோக்கவேண்டும் …

  சம்பந்தர் இப்பதிகத்தில் கோள்களை மட்டும் திருப்திப்படுத்த முயலாமல் — நட்சத்திரங்களையும் — திசைத் தெய்வங்களையும் — எமன் – எம தூதர்கள் — அக்கினி –காலன் –இடி மின்னல் — பூதங்கள் — கொடிய விலங்குகள் — வெப்பம் – குளிர் — ஆழ்கடல் — கெட்ட காலங்கள் — அலை கடல் — மேரு போன்றவைகளும் — கூட என் மனதில் குடிகொண்டுள்ள சிவன் ஊமத்தை மலர் – பிறைநிலா -பாம்பு போன்றவற்றை அணிந்து என்னுள்ளத்தில் நிறைந்துள்ள காரணத்தினால் — அமணர் – புத்த மதத்தை சார்ந்தவர்களும் என்னிடம் தோற்று ஓடி விடுவார்கள் — என்று விளக்கமாக கூறி ஒருவருக்கு பல விதங்களில் ஏற்படக்கூடிய அனைத்து துன்பங்களையும் — துயரங்களையும் ” ஒன்றுமே செய்யாது ” என்று ஆணித்தரமாக கூறியதின் உட்கருத்து என்னவென்றால் …

  இவைகள் அனைத்தும் இறைவனானால் படைக்கப்பட்டவை — ஆகவே அவைகள் நல்லவைகளாகத்தான் இருக்கணும் — இருக்கும் — இருந்தே தீரும் என்று முழு நம்பிக்கையுடன் கூறியது — நமக்கெல்லாம் நல்லது செய்ய மட்டுமின்றி — எல்லா உயிர்களையும் இறை உருவாக நினைத்து காரியமாற்றுங்கள் என்று உணர்த்தவே … கோள் அறுப்பது ஒன்று மட்டும் அவரது எண்ணமில்லை என்பதையும் நாம் உணர்ந்து — விதியை மதிகொண்டு இறை நம்பிக்கையோடு வெல்ல வேண்டும் …. அது தானே நன்மையில் முடியும் … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உண்மை தான் செல்வராஜன்.

   ஆனால், நம்மை நிலைப்படுத்திக்கொள்ள, அடிக்கடி
   இந்த மாதிரி செய்திகளை எல்லாம்
   நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது – இல்லையா..?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. புதியவன் சொல்கிறார்:

  ‘நாளென் செய்யும் கோள் என் செய்யும்’ – இது யாருக்கு – இறைவன்மீது 100% நம்பிக்கையும் பற்றும் வைத்திருப்பவர்களுக்கு. எத்தனைபேருக்கு இது இருக்கிறது? அதுவும்தவிர ராகுகாலம் பார்ப்பதோ அல்லது நல்ல நேரம் பார்ப்பதோ (எல்லா மதத்திலும் இது இருக்கிறது) செய்யும் காரியம் தடை இல்லாமல் முடியவேண்டும் என்ற நினைப்பில்தால். சோ மிக நன்றாக எழுதியிருக்கிறார். பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

  ராகு காலத்தை எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்ள – Mother Saw Father Wearing The Turban On Sunday – முதல் எழுத்து கிழமைக்குரியது (On தவர). 7.30க்கு ஆரம்பிக்கும் ராகுகாலம் மாலை 6 மணிக்கு முடியும்.

  கோள்கள் நமக்குக் கெடுதலைச் செய்வதற்காகப் படைக்கப்பட்டவை அல்ல. அவைகள் அவைகளுக்குரிய கடமைகளைச் செய்யப் பணிக்கப்பட்டவை. அந்தக் கடமைகளைச் செய்யும்போது தங்களுக்கு பாதிப்பு அகலவேண்டும், அந்த வீச்சு குறையவேண்டும் என்பதற்குத்தான் நல்ல நேரமோ அல்லது இறை பிரார்த்தனையோ.

  பொதுவாக நமக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்வது அவ்வளவு சிறப்புடையது அன்று. செய்த தவறுகளுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கோரலாம். ஆனால் எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்று வேண்டிக்கொள்வது சரியானது அல்ல. இறை பக்தியை வெளிப்படுத்தலாம். இறையைப் பற்றிக்கொள் என்று நமக்கு நாமே REMIND செய்துகொள்ள இறை தரிசனம் செய்யலாம். ஆனால் அவனுக்குக் கெடுதல் செய், எனக்கு இதைச் செய்துகொடு என்று கேட்பது நம் முதிர்ந்த அறிவைக் காட்டாது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   ராகு காலம், எமகண்டம் ஆகியவற்றை நினைவில் வைத்துக் கொள்ளாமல்
   இருப்பதே நன்று என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில்,
   அதை மறந்து விடாமல் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென்றே
   ஒரு சூத்திரம் சொல்லிக்கொடுக்கிறீர்களே – இது நியாயமா… 🙂 🙂

   // எனக்கு இதைச் செய்துகொடு என்று கேட்பது நம் முதிர்ந்த அறிவைக் காட்டாது //

   “நான் துவக்கும் முயற்சியில் / செயலில், எனக்கு துணையிருந்து அது நல்லபடியாக
   நடந்தேற அருள்புரி ஆண்டவனே” என்று பிரார்த்தித்துக் கொள்வது
   உங்கள் definition -க்குள் வராது என்றே நம்புகிறேன்…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    // எனக்கு இதைச் செய்துகொடு என்று கேட்பது நம் முதிர்ந்த அறிவைக் காட்டாது // – நான் சொல்ல எண்ணினது, இறைவனிடம் பேரம் பேசுவது, இதுதான் எனக்கு வேண்டும் என்று சொந்த நலனுக்காக வற்புறுத்துவது.

    ‘எல்லோருக்கும் அமைதியைக் கொடு’, ‘ஏழைகளுக்கு இரங்க மாட்டாயா’, ‘இவருடைய உடல் நலம் சீராக்கு’ என்றெல்லாம் உரிமையோடு கேட்பது இதில் சேராது. பொதுவாக மற்றவர்களுக்கு நாம் என்ன பிரார்த்தனை செய்தாலும், இறைவன் அதனைக் கேட்கிறான்.

  • குலாம் ரசூல் சொல்கிறார்:

   நன்ப புதியவன்,

   ராகு காலம் நல்ல நேரம் பார்ப்பது எல்லாமதத்திலும் உண்டு என்று பொதுப்படையாக சொல்லியுள்ளீர். எல்லாமதத்தையும் பற்றி உமக்கு எந்த அளவிற்கு தெரியும் என்று தெரியாது. ஆனால் இஸ்லாத்தைப் பற்றி அதிகம் தெரியவில்லை என்பதை உமது கூற்றிலிருந்து விளங்கமுடிகின்றது. பொதுவாகவே சகுனம் பார்ப்பது இஸ்லாத்தில் தடைசெய்யபட்டுள்ளது. அது இணைவைக்கும் குற்றத்தில் சேரும் என்று இஸ்லாம் கடுமையாகவே எச்சரிக்கின்றது.

   யார் நல்ல நேரம் கெட்ட நேரம், சோதிடம் பார்ப்பரோ அவர் இணைவத்த குற்றத்தை செய்து இஸ்லாத்தைவிட்டே வெளியேறிவிடுவார் என்று அகிலத்தின் தூதர் முகமது (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். இதையறியாத சில முஸ்லிம்கள் இந்த தீய காரியத்தை செய்கிறார்கள் என்பது உண்மை. அவர்கள் செய்வதைவைத்து இஸ்லாத்தில் இருப்பதாக நீங்கள் கருதியிருக்ககூடும். அது தவறு.

   இஸ்லாத்தில் அணைத்தையும் இறைவனிடமே(அல்லாஹ்விடமே) இறைஞ்சவேண்டும் என்பது இறைக்கட்டளை. இறைவனையல்லாது படைக்கப்பட்ட எந்த ஒன்றுக்கும் நன்மை தீமை செய்யும் வல்லமையோ பாவபுன்னியங்களை அளிக்கும் தகுதியோ இல்லை என்பது அடிப்படை நம்பிக்கை.

   விதியை பற்றி ‘சோ’ நன்றாகவே விளக்கியுள்ளார். முயற்ச்சி முடிவு சம்பந்தமான மழை உதாரணம் விதியைவிளக்க போதுமானது.

   இங்கு முக்கியமான கேள்வி விதியை உருவாக்கியது எது அல்லது யார்?

   நிச்சயம் இறைவன்(அல்லாஹ்). அல்லாஹ்வை குறிப்பிட காரணம் ஓரிறையை தெளிவுபடுத்தவே.

   இங்கிருந்து நம் சிந்தனையை கொஞ்சம் ஆல செலுத்துவோம். மனிதன் முயற்ச்சிக்கின்றான். அவன் விரும்பியவாரோ அல்லது அதற்கு எதிராகவோ நடக்கின்றது. அதாவது விதிப்படி, இறைவன் தீர்மானித்த விதிப்படி நடக்கின்றது. எனில், படைக்கப்பட்டவைகளான மனிதனோ அல்ல கோள்களோ அல்ல இன்னபிறவோ விதியைமீறி அதாவது இறையை மீறி என்ன செய்துவிடமுடியும். இறையைவிட்டு படைக்கப்பட்டவைகளிடம் இறைஞ்சினால் இறைவனால் மன்னிக்கமுடியாத குற்றமாக கருதுவதில் என்ன தவ‌று. இறைவனே அணைத்தும் அறிந்தவன்.

 3. தமிழன் சொல்கிறார்:

  கா.மை. சார்… சிபிஎஸ்ஸி ரிசல்ட் இந்தத் தடவை சரியாக இல்லை. 15%விகிதத்துக்குமேல், கூட்டலில் தவறு விட்டிருக்கின்றனர் இந்த ஆசிரியர்கள். இதனால் எத்தனை எத்தனை மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பர். ஸ்டேட் போர்டு என்பது ஒரு பம்மாத்து. அங்கே குவாலிட்டி இரண்டாம் பட்சம்தான். 12ம் வகுப்பு தேர்வு மட்டுமே முதல் பட்சம். அதைத்தான் 11ம் வகுப்பிலிருந்து ஆரம்பித்துச் சொல்லிக்கொடுக்கின்றனர். இந்த சி.பி.எஸ்.ஸிக்கு என்ன வந்தது கேடு.

  இப்படி கூட்டல் கூடத் தெரியாத 8 வது ஃபெயில் ஆன மாணவனைவிடக் கேவலமான இந்த ஆசிரியர்களைப் பற்றி எழுதக்கூடாதா? மற்றவர்களின் வாழ்க்கையில் விளையாடும் இந்த ஆசிரியர்கள் உயிரோடு இருப்பது எவ்வளவு கேடு. காசுக்கு கூலி வேலைபார்க்கும் இந்தக் கழிசடைகளை பணியிலிருந்து துரத்த ஒரு சட்டம் வராதா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   நீங்கள் சொல்வது மிகவும் சரி.
   CBSE பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்.
   நாளை காலையில் அவசியம் பதிவிடுகிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. இளங்கோ சொல்கிறார்:

  //காசுக்கு கூலி வேலைபார்க்கும் இந்தக் கழிசடைகளை
  பணியிலிருந்து துரத்த ஒரு சட்டம் வராதா?//

  மோடிஜி அவர்கள் அவசியம் செய்வார். அவராகச் செய்யவில்லை
  என்றாலும், இங்கே திரு.ராஜமாணிக்கம் வீரா, சுந்தர்ராமன் போன்ற
  மோடிஜியின் விசுவாசிகள் இருக்கின்றனர். அவர்கள் அவசியம்
  இதற்கு ஏற்பாடு செய்வர். கவலை வேண்டாம் தமிழரே.

 5. paamaranselvarajan சொல்கிறார்:

  பிளாஸ்டிக் அரிசி…? ஏன் இந்த மாய்மாலம் தற்பாேது….?

  • சிவம் சொல்கிறார்:

   இது எங்கே முதலில் கிளம்பியது ?
   மூலத்தை ஆராய்ந்தால் தெரிந்து விடும் கதை:
   தமிழ்நாடு அரசு போக்குவரத்து கேண்டீனில்,
   திமுக யூனியன் துவக்கி வைத்த வதந்தி தான் இது;
   எனவே மாய்மாலம் ஏன் என்பதை புரிந்து கொள்ளலாமே.

 6. appannaswamy சொல்கிறார்:

  சுவாமி சித்பவானந்தரின் தெளிவிப்பு:

  ஒவ்வொரு நாளிலும் சுபமுகூர்த்தம், அசுப முகூர்த்தம் ஆகிய இரண்டு பகுதிகளும் அமைந்திருக்கின்றன என்னும் கொள்கை ஐதிகமாக வந்துள்ளது. குளிகை காலத்தை சுபமுகூர்த்தம் என்றும், இராகு காலத்தை அசுப முகூர்த்தம் என்றும் நாம் நம்பி வருகிறோம். இதில் ஒரு சிலர் மிகைப்படக் கருத்தைச் செலுத்துகின்றனர். வேறுசிலர் ஏதோ சில வேளைகளில் கருத்தைச் செலுத்துகின்றனர். பெரும்பாலோர் ராகு காலம், குளிகை காலம் ஆகிய இவைகளைப்பற்றி நினைப்பதே இல்லை. தம் போக்கில் அவர்கள் வினையாற்றிக்கொண்டு போகிறார்கள், அப்படிச் செய்கின்றவர்கள் பெரும்பாலும் முன்னேற்றமடைந்து வருகின்றனர். நல்லநேரம் பார்த்து ஒரு காரியத்தில் இறங்கவேண்டும் என்னும் கருத்துடையவர்கள் பெரும்பாலும் சந்தேகப் பெயர்வழிகள் ஆகின்றனர். அவர்களுக்கு மன உறுதி படிப்படியாகக் குறைந்துபோய் விடுகிறது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது கேள்வி. நேர்மையான முறையில் வாழ்க்கை நடத்துகின்றவர்கள், கணப்பொழுதும் காலத்தை வீண்போக்காது காரியங்களைச் செய்துகொண்டு வருபவர்கள், சுசுறுப்பாகத் தமக்கு ஏற்பட்ட கடமையைச் செய்துகொண்டிருப்பவர்கள்– ஆகிய இத்தகைய கர்ம வீரர்களுக்கு நல்லகாலம், கெட்டகாலம் ஆகியவைகளைப்பற்றி எண்ணிப்பார்க்க நேரமில்லை. முறையாகத் தம் கடமைகளை அவர்கள் செய்துகொண்டு போகின்றனர். அத்தகையவர்கள் பெரிதும் வெற்றியடைகின்றனர். ஏதோ சில சமயங்களில் துவக்குகின்ற சத்கர்மங்கள் இருக்கின்றன.வீடுகட்டுதல், குடிபுகுதல்,மணம்புரிதல், தீர்த்தயாத்திரை போதல் இதுபோன்ற அசாதாரணமான விசேஷ கர்மங்களுக்கு சுபமுகூர்த்தங்களை நாடுதல் நலம். ஆனால் சுபமுகூர்தத்தில் செய்யும் கர்மங்கள் அனைத்தும் வெற்றிகரமாகவோ நலம் தருபவைகளாகவோ அமைந்துவிடும் என்று உறுதிகூற முடியாது. நல்லநேரத்தின் ஆதிக்கம் ஓரளவு நல்வினைக்குச் சகாயம் செய்கிறது. ஆனால் நல்ல நேரத்தைவிட மேலானது நல்ல மனப்பான்மையும், நல்ல செயலும். ஆதலால் மனிதன் எக்கர்மத்தைச் செய்தாலும் அதை எந்த நேரத்தில் செய்கிறான் என்பதை பொருள்படுத்தாது, என்ன எண்ணத்துடன் செய்கிறான் என்பதையே கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.நல்வாழ்வு வாழ்கின்றவர்களுக்கு எல்லா நேரங்களும் நல்ல நேரங்கள் என்று முடிவுகட்டலாம். தீவிரமாக வினையாற்றுபவர்கள் காலத்தில் கருத்தைச் செலுத்துவதில்லை.

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்ப அப்பண்ணசுவாமி,

  நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வருகையை காண்கிறேன்.
  கிட்டத்தட்ட நீங்கள் தெரிவித்திருக்கும் கருத்தினையொட்டி தான்
  நானும் எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
  உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.