தப்பு தப்பாக மார்க் போட்ட ஆசிரியர்களை என்ன செய்யலாம்…?


CBSE என்கிற மத்திய அரசின் கல்விப் பிரிவு அண்மையில்அறிவித்த 12-ஆம் வகுப்புக்கான முடிவுகளில்,
பல பாடப்பிரிவுகளில், மார்க்குகளை கூட்டும்போது ஏற்பட்ட
பிழைகள் காரணமாக – மாணவர்களும், பெற்றோர்களும்
பெரும் குழப்பத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இது குறித்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளிதழ்
60 மாணவர்களிடம் நடத்திய சாம்பிள் ஆய்வில் இந்தக்
குளறுபடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மற்ற பாடங்களில்
80 சதவிகிதப் மதிப்பெண் எடுத்த நிலையில் கணிதப்
பாடத்தில் மட்டும் 50 மதிப்பெண் எடுத்திருந்தது அதிர்ச்சியை
ஏற்படுத்தியது. ஆனால், மறு கூட்டலுக்குப் பிறகு அவர்
கணிதத்தில் 90 மதிப்பெண் எடுத்தது தெரியவந்துள்ளது.

இதுபோன்று மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த பலருக்கும்,
குறைந்த மதிப்பெண் போடப்பட்டது தெரியவந்துள்ளது.

சி.பி.எஸ்.இ. தேர்வு கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர்,
மதிப்பெண் கூட்டல் செயல்முறைகளில் தவறுகள் இருப்பதாக
ஒப்புக்கொண்டுள்ளார்…

மொத்த மார்க்குகளில்( total marks ) ஏற்பட்டுள்ள கோளாறுகள்
காரணமாக, மேற்படிப்புக்காக மாணவர்கள் கல்லூரிகளை
தேர்ந்தெடுப்பதிலும், கல்லூரிகள் அவர்களை சேர்த்துக்
கொள்வதிலும் – பெரும் குழப்பங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

தாங்கள் விருப்பப்பட்ட பிரிவுகளிலோ, கல்லூரிகளிலோ – பல
மாணவர்களால் சேர முடியவில்லை.

CBSE மீது பெரும் நம்பிக்கையும், மதிப்பும் வைத்திருந்த
பலருக்கும், இது பெருத்த கவலையை கொடுத்திருக்கிறது.

இந்த ஆண்டு, நாடு முழுவதும் 3503 தேர்வு மையங்களில்,
சுமார் 10 லட்சத்து 98 ஆயிரம் மாணவர்கள் 12-வது வகுப்பு
தேர்வை எழுதியிருக்கிறார்கள். இதில் பெரும்பாலான
மாணவர்களும், பெற்றோர்களும் இப்போது கலக்கத்திற்கு
உள்ளாகி இருக்கிறார்கள்.

நேர்ந்து விட்ட இந்த தவறுகளை சரி செய்ய CBSE தலைமை
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக அளவில்
நம்பிக்கையான, பொறுப்பான, நபர்களை அமர்த்தி அனைத்து
மார்க் ஷீட்களையும் மிக விரைவாக மறுபரிசீலனைக்கு
உட்படுத்த வேண்டும்.

குறிப்பிட்ட கால கெடுவுக்குள் இதை செய்து முடித்து,
மாணவர்களிடையேயும், பெற்றோரிடையேயும் –
நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்.

இது முழுக்க முழுக்க, விடை திருத்திய ஆசிரியர்களில்
சிலரின் அலட்சிய மனோபாவத்தாலும், சோம்பேறித்தனத்தாலும் நிகழ்ந்து விட்ட அவலம்.

சிலரின் அலட்சியம், அத்தனை லட்சம் பேரையும் இப்போது தவிக்க விட்டிருக்கிறது.

நடந்து விட்ட தவறுகளை சரி செய்வதோடு நிற்காமல்,
எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நிகழாமல் இருக்க
வேண்டுமானால் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சில கடுமையான
நிலைகளை மேற்கொள்ள வேண்டும்.

தேர்வு தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு
அந்த பணிக்காக, கூடுதல் ஊதியமும், படிகளும்
கொடுக்கப்படுகின்றன.

இவர்கள் மீது இலாகா ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை என்று
எடுக்க ஆரம்பித்தால் அது இப்போதைக்கு முடியாது….
இதிலுள்ள formalities -களை நான் நன்கு அறிவேன். கடைசியில்
மைனர் பெனால்டி கூட கிடைக்காது… ஒரு பதிவுசெய்யப்பட்ட
எச்சரிக்கை ( recorded warning) -யுடன் முடிந்து விடும்….

யார் யார் மீதெல்லாம் தவறு கண்டுபிடிக்கப்படுகிறதோ,
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊதியம், படிகளை திரும்ப
பெறுவதோடு, அவர்களது அடிப்படை சம்பளத்தில் ஒரு
கணிசமான பகுதியை, அபராதமாக விதிக்க வேண்டும்.
( இப்போதெல்லாம் இந்த ஆசிரியர்கள் சுமார் 60,000 ரூபாய்க்கு
மேல் சம்பளம் பெறுகிறார்கள் ) ஒரு show cause notice மட்டும்
கொடுத்து, விளக்கம் கேட்டு விட்டு, இதைச்செய்ய முடியும்…
சட்டத்தில் இதற்கு இடம் இருக்கிறது.

கணிசமான பண இழப்பு மட்டும் தான் அவர்களிடையே ஒரு
பயத்தையும், நிரந்தர பொறுப்புணர்ச்சியையும், உருவாக்கும்.

ஒரு விஷயத்தை இங்கு தெளிவாக்கி விட விரும்புகிறேன்.
ஆசிரியர்கள் அனைவரையும் இதுவிஷயத்தில் நாம் குறை
கூறி விட முடியாது. எவ்வளவோ சிரமங்களுக்கிடையில்
பல நாட்கள் வெளியூர்களுக்கெல்லாம் சென்று தங்கியிருந்து
இந்த பணியில் பலர் சிரத்தையுடன் ஈடுபடுகிறார்கள்.
அவர்களுக்கு நம் மரியாதை எப்போதும் உண்டு.

நமது புகார்கள் எல்லாம் சற்றும் பொறுப்போ, அக்கறையோ
இன்றி, அலட்சியமாக செயல்பட்டு, பெரும் பதட்டங்களையும்
குழப்பங்களையும் உருவாக்கியவர்களைப்பற்றி மட்டும் தான்.

இந்த தவறு காரணமாக, மிகமோசமான முறையில்
மாணவர்களோ, பெற்றோர்களோ யாராவது
பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு CBSE ஆணையம் தகுந்த
உதவிகளை (நிதியுதவி உட்பட) உடனடியாக செய்ய வேண்டும்.

லட்சக்கணக்கான மாணவர்கள், மற்றும் பெற்றோர்களின்
உணர்வுகள் மற்றும் எதிர்காலம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது
என்பதை இந்த பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் உணர்ந்து
கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

பல மாணவர்களின், பெற்றோர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்
இந்த அதிமுக்கியமான விஷயத்தில் – அலட்சியமாகவும், பொறுப்பின்றியும் செயல்பட்டவர்கள் அவசியம் தண்டிக்கப்பட வேண்டும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to தப்பு தப்பாக மார்க் போட்ட ஆசிரியர்களை என்ன செய்யலாம்…?

 1. தமிழன் சொல்கிறார்:

  கா.மை சார்… இதைப் பற்றி நீண்டதாக எழுதவேண்டியிருக்கிறது.

  சி.பி.எஸ்.ஸி டைரக்டர் முதற்கொண்டு சட்டத்தின்முன்பாகக் கொண்டுவரவேண்டும். நம் கல்வி முறை இவ்வளவு கேவலமாகச் செல்லுகிறதே என்று வருத்தமும் கோபமும் வருகிறது. சி.பி.எஸ்.ஸி டைரக்டர், படித்தவரா அல்லது கை நாட்டு ஆளை அந்தப் பதவிக்குக் கொண்டுவந்துவிட்டார்களா (அதாவது அது அரசியல் பதவியா, இல்லை எவனோ எழுதிய தீசீசை SUBMIT செய்து டாக்டரேட் வாங்கினவரா?), அல்லது அவர் கீழ் வேலைபார்க்கும் முக்கிய அதிகாரிகள் மடையர்களா என்றே எனக்கு சந்தேகம்.

  1. மதிப்புக்கூட்டும் முறை – இது காலம் காலமாக நடைமுறையில் இருந்துவருகிறது. இதை நம்பித்தான், PROJECTED SCORES பல பள்ளிகளில் கிட்டத்தட்ட பாதி TERMபோது கொடுப்பார்கள். இதனை வைத்து பல பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் APPLY செய்வார்கள். நம்ம முட்டாள் சி.பி.எஸ்.ஸி டைரக்டர் (முட்டாளேதான்), கடைசி நேரத்தில் முழித்துக்கொண்டு, இந்த முறை மதிப்புக்கூட்டல் கிடையாது என்று சொன்னார். இந்தக் குழப்பத்தில், ரிசல்ட் மிகவும் தாமதமாகியது. (கோர்ட்டுக்குச் சென்றதால்). கடைசி நேரத்தில் கல்வி மந்திரியைப் பார்த்து என்ன சொன்னாரோ, ரிசல்ட் வெளியிடப்பட்டது. பலவித மார்க் குளறுபடிகள். இதில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தால் எந்த விதமாக ரியாக்ட் செய்வார்கள் என்பதெல்லாம் ஒரே குழப்பம். எனக்குத் தெரிந்த பையனுக்கு மிகவும் குறைந்த மதிப்பெண்கள். இதற்குக் காரணமான சி.பி.எஸ்.ஸி டைரக்டரும் அந்தக் குழுவினரும் டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும். மாணவர்கள் கல்வி விஷயத்தில் விளையாடி விளையாடித்தான், இந்தியக் கல்விமுறை அகில உலகத்தில் கடைக்கோடியில் இருக்கிறது. அவனுடைய சொந்தப் பிள்ளைகளுக்கு இந்தமாதிரி அவன் செய்வானா?

  2. மாணவர்களின் விடைத்தாள், அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. இந்த அடிப்படை அறிவு இல்லாத ஆசிரியர்கள், அந்தப் பணிக்குத் தகுதி உடையவர்களா? 8ம் வகுப்புப் படித்தவனுக்குத் தெரியும் கூட்டல்கூட இந்த ஆசிரியர்களுக்குத் தெரியவில்லையானால், இவர்கள் உயிரோடு இருந்து என்ன பிரயோசனம்? இந்த ஆசிரியர்களை IDENTIFYசெய்து அந்த அந்த மா’நகராட்சி குப்பை கூட்டும் வேலைக்கு உடனே பணி நியமனம் செய்யவேண்டும் (ஆசிரியர்களை எதற்கு டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்ற காரணத்தால்). இதனால்தான், எல்லா ஆசிரியர்களுக்கும் 3 வருடத்துக்கு ஒரு முறை பொதுத் தேர்வு வைத்து, 75%க்குக் குறைவாக மதிப்பெண் பெறுபவர்களுக்கு, எவ்வளவு குறைவோ அதை 10ஆல் பெருக்கி அவர்களது சம்பளத்தைக் குறைக்கவேண்டும்.

  3. இந்த அரசு ஆசிரியர்களுக்கெல்லாம், தனியார் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணி எவ்வளவு கடினம், அதற்கு அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் என்ன என்பதெல்லாம் தெரியாது போலிருக்கிறது. இந்த வெட்டி ஆசிரியர்களை (தவறு செய்தவர்களை) இந்தத் தனியார் பள்ளிகளில் 5 ஆண்டுகளுக்கு பணிபுரியச் சொன்னால்தான் ஆசிரியர் தொழில்னா என்ன என்பதே இந்தக் கழிசடைகளுக்குத் தெரியும். தனியார் பள்ளி, கல்லூரிகளில், ஆள்பிடிக்கும் வேலை மட்டுமல்லாது, 8000 ரூக்கும் குறைவான சம்பளம். இந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களும்ம் தேவையில்லாமல் 60,000 சம்பளம். கூட்டத் தெரியாதவனுக்கு, மாநகராட்சி ஊழியர்களைவிட அதிகச் சம்பளம் கொடுக்கலாமா?

  4. இதை எழுதும்போதே, எனக்கு இருந்த சில நல்ல ஆசிரியர்களை நினைத்துப்பார்க்கிறேன். இப்போதும் அத்தகைய மாணிக்கங்கள் பணியில் இருக்கக்கூடும். அவர்களைச் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். கூட்டலில் தவறு செய்தவர்களை திகார் சிறையில் வாழ்னாள் முழுவதும் வைத்தால்கூட என் ஆத்திரம் குறையாது. ‘சிரைக்கத் தெரியாதவனுக்கு கத்தி எதற்கு’ – கூட்டல் கூடப் போடத் தெரியாத முண்டங்கள் எதற்கு விடைத்தாள் திருத்தப் போகவேண்டும்? ஓசில காசு கிடைக்கிறது என்றா? அதற்கு பிட் நோட்டீஸ் ஒட்டி காசு புரட்டலாமே? இவர்கள் செய்த ஒவ்வொரு கூட்டல் பிழையும், அவர்களின் பையன்/பெண்ணின் வாழ்வை அழிக்காது என்ற எண்ணமா? மாணவர்களின் வயத்தெரிச்சல் அவர்களின் குலத்தை நிச்சயமாக அழிக்கும்.

  5. இதை ஒட்டி ஒன்றை எழுத நினைக்கிறேன். மிகப் பழைய காலத்தில் தமிழ் வாத்தியார்களுக்கு குறைந்த சம்பளம்தான். மற்ற ஆசிரியர்களைப்போல் (கணக்கு, விஞ்ஞானம் போன்று) சம்பளம் கிடையாது. பின்பு அவர்களுக்கும் மற்றவர்களைப்போல் சம்பளம் கொடுக்கப்பட்டது. தமிழாசிரியர்கள் மற்ற ஆசிரியர்களைவிட மிகவும் உயர்வானவர்கள் என்பது என் கருத்து. அவர்கள்தான் மொழியறிவையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் தமிழனின் பழம்பெருமையையும் மாணவர்களுக்குச் சொல்லி அவர்களின் வரலாறை அவர்களுக்கு எடுத்துச் சொல்பவர்கள். பெரும்பாலானவர்களை, எந்த ஆசிரியர்களை உங்களுக்கு நினைவு இருக்கிறது என்று கேட்டால், தமிழ் எடுத்த ஆசிரியர்கள்தான் அவர்கள் மனதில் வரும். தமிழாசிரியர்களில் பலர், தமிழுக்குக் கெடுதி செய்தார்கள். அதாவது தமிழ் பேப்பரில் மார்க் போடமாட்டார்கள். மிக மிஞ்சிப்போனால் 80,85 என்று போடுவார்கள். அவர்கள் மாணவனின் அறிவுத் திறமையை தொல்காப்பியர்களோடு ஒப்பிடுகிறார்களாம். அதனால்தான் வாய்ப்பு கிடைப்பவர்கள், FRENCH, HINDI என்று மாற்று மொழியை SELECT செய்தார்கள். ஏனென்றால் அந்த சப்ஜெக்டில் 98,100 வாங்குவது சுலபம். தன்னை அறியாமலேயே தமிழுக்குக் கெடுதல் செய்த அந்த ஆசிரியர்களை நினைத்தால் எனக்கு வருத்தமே மேலிடுகிறது. எனக்கு பள்ளியில் புலவர் கிரகோரி என்பவர் தமிழாசிரியர். அவர், எந்தக் கேள்விக்கும் அதற்குரிய பாடலையும் (செய்யுள்) எழுதினால், கூட 1/2 அல்லது 1 மார்க் போடுவார்கள். அவர் சொல்லும்போதே, பாடலையும் படி, அதன் அர்த்தத்தையும் உணர்ந்துகொள் என்று சொல்வார். அவர் வகுப்பில் எப்போதும் ஸ்கேலுடந்தான் இருப்பார் (78-79). இலக்கணம் சொல்லி அதைப் புரிந்துகொள்ள நேரம் கொடுப்பார், அப்புறம் கேள்வி கேட்டு பதில் தெரியாது என்றால் ஸ்கேல் அடிதான். அவர் பாடத்தில் கடுமையாக நடந்துகொள்வார்கள். ஆனால், பள்ளி நாடகம் போன்ற கலைகளின்போது எங்களுக்கெல்லாம் நண்பர்போல்தான் அவர். அவரே சிறந்த நடிப்புத் திறமை உள்ளவர். கல்லூரியில் பாண்டியன் என்ற தமிழ்பேராசிரியர் இருந்தார். அவரும் அவ்வளவு அருமையாகச் சொல்லித்தருவார்.அதுமட்டுமல்ல, வியாழன் விருந்து என்று வியாழக்கிழமைகளில், மதிய உணவு நேரம், யாரையாவது வெளியில் இருப்பவர்களை (any industry, including circus) அழைத்துப் பேசச் சொல்லுவார். இதெல்லாம் மாணவர்களுக்கு உலகத்தைப் புரியவைக்கும் நிகழ்ச்சி. இப்படிப்பட்ட ஆசிரியர்களும் இல்லாமல் இல்லை. ஆனால் நெற்பயிரில் களைகள் போலில்லாமல், களைப் பயிரில் நெல் மணிகள் போல் இப்போது ஆசிரியர்கள் மாறிவிட்டனரோ என்ற ஆதங்கம்தான்.

  6. சமீபத்தில் இரண்டு நிகழ்வு. ஒன்று, சதாப்தியில் நான் சந்தித்த கணிணி பேராசிரியர். என்ன என்ன மாணவர்களின் எதிர்காலம் கருதிச் செய்கிறோம், எப்படி எப்படி அவர்களை INTERN ஆக பிற கம்பெனிகளுக்கு அனுப்பு INDUSTRY KNOWLEDGE பெற தாங்களாக உழைக்கிறோம் என்றெல்லாம் சொன்னார். இன்னொன்று, பெங்களூர் கல்லூரி ஒன்றில் பேராசிரியர், என்ன என்ன செய்து, பொறியியல் மாணவர்களை INDUSTRYக்கு உகந்தவராக, உடனே வேலைவாய்ப்பு கிடைக்கும்படியான முயற்சிகளெல்லாம் செய்கிறோம் என்று விளக்கினார். இத்தகைய பெரும் சான்றோர்களான ஆசிரியர்களாகப் பெற்ற மாணவர்கள் தவம் செய்தவர்கள்தான். அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.