மோடிஜி ஆட்சி பற்றி பாஜக தலைவர் திரு.அருண் ஷோரி விமரிசனம் …!!!

மோடிஜி ஆட்சி பற்றி பாஜக தலைவர் திரு.அருண் ஷோரி
விமரிசனம் …!!!

பாஜக வின் மூத்த தலைவர்…
வாஜ்பாய் காலத்தில் செய்தி மற்றும் தொலை தொடர்பு
அமைச்சராக இருந்தவர், மூத்த பத்திரிக்கையாளர் –
இன்னமும் பாஜக வில் தான் இருக்கிறார்…!!!
திரு.அருண் ஷோரி அவர்கள் அண்மையில் டெல்லியில்
மோடிஜியின் 3 ஆண்டுக்கால ஆட்சியைப்பற்றி அலசி,
விவரமாகப் பேசினார்.

முக்கியமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது
NDTV -மற்றும் அதன் உரிமையாளர் திரு.பிரனாய் ராய்
ஆகியோருக்கு மத்திய அரசால் ஏற்பட்டிருக்கும் இக்கட்டுகளை
பற்றி எடுத்துரைக்க ….

என்னைப் பொருத்த வரை, NDTV -யை ஆதரித்துப் பேசும்
வாதங்களை நான் ஏற்கவில்லை. இந்த தொலைக்காட்சியின்
நிர்வாகத்தினர் மீது பலதரப்பட்ட ஊழல்கள் மற்றும் தவறான
பணப்பரிமாற்றங்களில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகள்
சுமத்தப்பட்டிருக்கின்றன… இந்த குற்றச்சாட்டுகளில், ஓரளவு
உண்மை இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். ஊடகங்கள் மீது மத்திய அரசின் அடக்குமுறை என்கிற போர்வைக்குள் NDTV மறைந்து கொள்வது நமக்கு ஏற்புடையதல்ல.

நீண்ட நாட்களாகவே, இந்த நிறுவனம் money laundering
நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது பற்றி நிறைய செய்திகள்
வெளிவந்தன…அவற்றிற்கான நிறைய ஆதாரங்களும்
பொதுவெளியில் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே, NDTV -க்கு ஆதரவாக திரு.அருண் ஷோரி அவர்கள்
பேசியிருப்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால், மத்திய பாஜக அரசைப்பற்றி அருண் ஷோரி
முன்வைத்துள்ள பல குற்றச்சாட்டுகளில் சாரம் இருக்கிறது
என்றே நான் கருதுகிறேன்…. பல குற்றச்சாட்டுகளை
தகுந்த முறையில், தெளிவாக விளக்குகிறார் அருண் ஷோரி.
இதில் சிலவற்றை நாம் ஏற்கெனவே இந்த விமரிசனம்
தளத்திலேயே கூட முன்வைத்து விவாதித்திருக்கிறோம்.

நண்பர்களின் பார்வைக்காக –
அருண் ஷோரி அவர்களின் உரையின் சுருக்கத்தை
கீழே தந்திருக்கிறேன். அருண் ஷோரியின் முழு
உரையையும் கேட்க, பார்க்க விரும்புபவர்கள் கீழேயுள்ள
வீடியோவை காணலாம்.
—————————————–

“மரபணுக்களில் நிறைந்திருக்கும் சர்வாதிகாரம் … !”

‘‘என் இனிய நண்பர்களே, நரேந்திர மோடிக்கு முதலில்
நான் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்ள
விரும்புகிறேன். அவர் நிறைய நண்பர்களை இங்கு
ஒன்று சேர வைத்திருக்கிறார்.

அதற்கு நன்றிக்கடனாக, குல்தீப் நய்யார் நம்மிடம்
சொல்லுகின்ற, ‘உங்களுக்கு முன்பாக இந்த அரியணையை
அலங்கரித்தவர், உங்களைப் போலவே தன்னை ஒரு
கடவுளாக நம்பினார்’ என்ற கவிதையை நான் உங்களிடம்
வாசிக்க விரும்புகிறேன்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பத்திரிகையாளர் நிஹால் சிங்
சாகிப் முன்மொழிந்த, ‘நாம் என்னசெய்ய வேண்டும்?’ என்ற
கேள்வியை நான் விவாதிக்க விரும்புகிறேன். குல்தீப் நய்யார்
கூறியது போல், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இந்தக்
கேள்விக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனாலும் நிஜம் என்னவென்றால் – ஒவ்வொரு
தலைமுறையினருக்கும் சுதந்திரத்தின் பாடம் என்பது
மீண்டும் மீண்டும் கற்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
இந்த முறை, இந்த தலைமுறைக்கும், அந்தப் பாடம் மீண்டும்
ஆரம்பித்துவிட்டது. ஒரு புதிய திருப்பம் தொடங்கியிருப்பதை
முதலில் உணர வேண்டியிருக்கிறது.

இதுவரையிலும் அரசாங்கம் இரண்டு வித உத்திகளை
பயன்படுத்தி வந்திருக்கிறது.

விளம்பரங்கள் என்ற லஞ்சத்தின் ஊடாக ஊடகங்களின்
வாயை அடைத்துவைப்பது ஒரு விதம்.
வாயில் எலும்பை வைத்திருக்கும் நாய் குரைக்காது என்று
ஜூலு பழமொழி ஒன்று இருக்கிறது. வாயில் விளம்பரங்களை
வைத்திருக்கும் நாய்களாக அவர்கள் செய்தி ஊடகங்களை
மாற்றிவிடுவதால், அந்த நாய்களால் அவர்களைப் பார்த்து
குரைக்க முடியாது….

இரண்டாவதாக, மறைமுகமாக அச்சத்தைப் பரப்புவதன் மூலம்
அவர்கள் ஊடகங்களைக் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வருகின்றனர்.

அந்த இரண்டு வழிமுறைகளிலிருந்தும் அவர்களுக்கு என்ன
கிடைத்திருக்கிறது என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும்.

இப்போது, அவர்கள் மூன்றாவது வழிமுறையையும்
பயன்படுத்துகின்றனர்,

இந்த மூன்றாவது வழி – வெளிப்படையாகவே தரப்படுகின்ற
ஒரு அழுத்தம்…. அதற்கு என்.டி.டி.வி-யை ஒரு
எடுத்துக்காட்டாக்கி இருக்கின்றனர். வரவிருக்கும் மாதங்களில்
இது இன்னும் தீவிரமடையும் என்றே நான் நம்புகிறேன்.

இந்த ஆட்சியின் தன்மையிலேயே, அதன் மரபணுக்களிலேயே
சர்வாதிகாரம் நிறைந்திருக்கிறது. இந்த ஆட்சிகொண்டிருக்கும்
இத்தகைய தன்மையின் காரணமாகவே இந்த நிலைமை
மேலும் தீவிரமடையும் என்று நான் நம்புகிறேன்.

இந்தியாவின் முழுப்பரப்பிலும், தனிப்பட்டவர்களின்
வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் தங்களது
மேலாதிக்கத்தைச் செலுத்தி, அனைத்து பொதுவிடங்களிலும்
அவர்களது மேலாதிக்கம் நிறுவப்பட வேண்டும் என்பதே
சர்வாதிகாரம்.

நீங்கள் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் கொஞ்சம்
உற்று கவனித்தால், அதைப் படிப்படியாக அவர்கள்
விரிவாக்கிக்கொள்கிறார்கள் என்பதைக் காண முடியும்.

இனி, அவர்கள் எதிர்ப்புக் குரலை நசுக்குவதோடு மட்டும்
நிறுத்திக்கொள்ளப் போவதில்லை என்பதை முதலில் நாம்
உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவில் பத்திரிகைகளுக்கு எதிராக தங்களது கைகளை
உயர்த்திய எவரும் தங்கள் கைகளைச் சுட்டுக்கொண்டு
மீண்டும் அவற்றைத் திரும்பப் பெற வேண்டியிருந்தது
என்பதை பாலி நாரிமன் பேசுகையில், நமக்கு
நினைவூட்டியிருக்கிறார்.

தனது வாழ்க்கையை முன்வைத்து, தன்னுடைய வாழ்நாள்
முழுவதும் இதனை குல்தீப் நய்யார் நமக்கு நிரூபித்துக்
காட்டியிருக்கிறார். இதனைக் கணக்கில்கொண்டு முழு
நம்பிக்கையுடன் நமது பணியினை நாம் தொடர வேண்டும்.

ஜகன்னாத் மிஸ்ரா கொண்டு வந்த பத்திரிகை மசோதா,
பிறகு ராஜீவ் காந்தி கொண்டுவந்த மசோதா,
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் உரிமையாளர் ராம்நாத்
கோயங்கா அவர்களை நீக்கிவிட்டு, ஒரு போலி பலகையை
அங்கு வைத்துவிட்டு பத்திரிகையை எடுத்துக்கொண்ட இந்திரா
காந்தி…

அன்று ஊடகங்களுக்கு எதிராக தங்கள் கைகளை உயர்த்திய
அனைவரும், பிற்காலத்தில், தங்கள் கைகளைச்
சுட்டுக்கொண்டு பின்வாங்க வேண்டியிருந்தது.

அவதூறு மசோதா கொண்டுவரப்பட்ட காலங்களில், நாம்
இங்கே ஒரு கூட்டத்தினை நடத்தியதை துவா நமக்கு
நினைவூட்டினார். ஆனாலும் நீங்களும் நானும் நன்றாக
அறிந்திருக்கிறோம், இன்றைய தினத்தில் கூடியிருப்பதைப்
போன்று அதிக அளவிலான நபர்கள் அப்போது
கூடியிருக்கவில்லை.

இரண்டாவதாக நான் சொல்ல விரும்புவது, உண்மைகள் மிகத்
தெளிவாக இருக்கின்றன. நாரிமன் அவற்றை வெளிக்
கொணர்ந்துள்ளார். என்.டி.டி.வி-யும் அவற்றை
வெளிக்கொணர்ந்துள்ளது. சி.பி.ஐ-யால் அந்த உண்மைகளுக்குப்
பதிலளிக்க முடியவில்லை. இன்று அது குறித்து தி வயர்
பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

வருவாய் நுண்ணறிவு இயக்குநரகத்தின் மூலம் இரு பெரிய
நிறுவனங்களுக்கு எதிராக, நாட்டுக்கு ரூ.30,000 கோடி ரூபாய்
இழப்பினை ஏற்படுத்தியிருப்பதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகார் தனிநபர்களால் கொடுக்கப்பட்டது அல்ல,
ஆனாலும் சி.பி.ஐ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உண்மைகளை யாரும் மறுக்க முடியாது.
நான் வேறோன்றைப் பரிந்துரைக்க விரும்புகிறேன்.
இது ஒருவருக்கொருவர் தீர்ப்பினை
வழங்கிக்கொள்ளுவதற்கான நேரம் இல்லை.
நீங்கள் சேவை செய்யவேண்டிய அவசியம் ஏற்படும்போது,
உங்களது சேவை முற்றிலும் சுயதீர்ப்புக்கு அப்பாற்பட்டதாக
இருக்க வேண்டும்.

‘வாழ்நாளெல்லாம் அவர் சிகரெட் புகைத்து வந்தார். எனவே,
அவருக்கு புற்றுநோய் வந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை,
ஆகவே, அவர் கஷ்டப்படட்டும்’ என்பது போல், ஒருவருக்கு
உதவக்கூடாது என்பதற்கான பல காரணங்களை நமது மனம்
பரிந்துரைக்கும்.

ஆனால், அது போல வெற்று நியாயம் குறித்து பேசுவதற்கான
நேரம் இது இல்லை. உங்களது நண்பருக்கு முழுமையான
உதவியையும் சேவையையும் அளித்து அவரை நீங்கள்
ஆதரிக்க வேண்டும். ஏனென்றால், இத்தகைய
விவகாரங்களைப் பயன்படுத்தி பத்திரிகையாளர்களைப்
பிரித்தாளுவதற்கு அவர்கள் முயலுவார்கள்.

அதற்கு அவர்கள் உங்களைப் பயன்படுத்துவார்கள்,
ஊடகங்களின் நற்பெயரைக் கெடுப்பதற்கு ஊடகங்களையே
அவர்கள் பயன்படுத்துவார்கள்.

எனவே, தயவுசெய்து நீங்கள் அதற்கான கருவியாகி
விடாதீர்கள். இரண்டாவது விஷயம், ஒருவருக்கொருவர்
தோள் கொடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், சகமனிதர்கள்
தங்களோடு நிற்கவில்லை என்பதை அறிந்துகொள்ளுகின்ற
நபரின் மன உறுதியானது சீர்குலைந்துவிடும்.

தேவாலயங்களை ஒருங்கிணைப்பதாக ஹிட்லர் கூறியதை
எதிர்த்து ஜெர்மனியில் இருந்த லுத்தரன் போதகர் ஒருவர்
கூறிய மிகவும் பிரபலமான வரிகளை ஃபாலி நாரிமன்
மேற்கோள் காட்டினார்.

அதைவிட மிகப் பழமையான, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முந்தைய ஹில்லால் அவர்களின் கூற்று ‘‘எனக்காக நானே
இருக்காவிட்டால், எனக்கென்று வேறு யார் இருப்பார்கள்?

எனக்கென்று நான் போராடவில்லை என்றால்,
எனக்காக யார் போராடுவார்கள்? எனக்காக மட்டுமானவாகவே
நான் இருக்கிறேன் என்றால், நான் யார்?
இப்போது இல்லையென்றால் – எப்போது’’ என்பதாக
இருக்கிறது.

இதைப் பற்றிய விழிப்புணர்வு பத்திரிகைத் துறையில்
என்னுடன் பணியாற்றுபவர்களிடம் இல்லை என்ற வருத்தம்
என்னிடம் இருக்கிறது.

கடந்த வருடம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள்
சந்திப்பு நிகழ்விற்கு நான் தற்செயலாக
அழைக்கப்பட்டிருந்தேன். அப்போது ராஜஸ்தான் பத்திரிகை
மீது தொடுக்கப்பட்ட தொல்லைகள், ஏற்படுத்தப்பட்ட நிதி
இழப்பு ஆகியவற்றைப் பற்றி என்னால் அறிந்துகொள்ள
முடிந்தது. புதுதில்லி மற்றும் தில்லியிலிருந்து வருகின்ற
பத்திரிகைகளை மட்டும் படித்து வரும் சராசரி வாசகனான
எனக்கு அது பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.

எனவே, நாம் இவ்வாறான எந்தவொரு முயற்சியையும், அது
மிகப் பிரபலமான என்.டி.டி.வி நிறுவனர் பிரணாய் ராய்
என்பதற்காக மட்டுமல்லாது, நாட்டின் எந்தப் பகுதியில்
இவ்வாறான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அதனைத் தடுத்து
நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

நமது முயற்சிகளுக்கான தேவை என்னவென்றால்,
அரசாங்கங்கள் நமது எதிர்வினையாற்றல்களைக் கவனித்து
வருகின்றன. இங்கு அதிக அளவில் ஊடகவியலாளர்கள்
கூடியிருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் கவனித்துப்
பார்த்துக்கொண்டிருக்கிறது என்பது உண்மைதான்.

சமூக ஊடகங்களில் வரும் செய்திகளுக்கும்கூட அவர்கள்
மிகுந்த முக்கியத்துவம் தருவதாக என்னால் சொல்ல முடியும்.
டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றில் என்ன நடக்கிறது
என்பதைக் கவனிப்பதற்கான குழுவினை வைத்திருக்கிறார்கள்.
எனவே, இங்கே இவ்வளவு பேர் கூடியிருக்கிறார்கள்
என்பதைக் காணும்போது, தாங்கள் தவறானதொரு முடிவினை
எடுத்துவிட்டதாக நிச்சயம் உணர்வார்கள். இதிலிருந்து
மீள்வதற்கான வழியினை அவர்கள் கண்டுபிடிக்க
வேண்டியிருக்கும்.

ஆனாலும் அரசாங்கங்களுக்கு உதவுவதற்கான வழியினையும்
நாம் வைத்திருக்கிறோம். நிகழ்வின் இரு பக்கங்களையும்
சொல்லுவது என்பது பத்திரிகையாளர்களுக்கு இருக்கக் கூடிய
மிக எளிமையான வழி.

முதலில் பிரணாய் ராயிடம் சென்று அவரைப் பார்த்து, ‘‘ஐயா,
நடந்த உண்மைகள் என்ன?’’ என்று கேளுங்கள். பிறகு
சி.பி.ஐ-யிடம் சென்று, ‘‘ஐயா, நடந்த உண்மைகள் என்ன?’’
என்று கேளுங்கள்.

இத்தகைய நடுநிலை, தீ வைப்பவருக்கும், தீயணைப்பு
வீரர்களுக்கும் இடையே கடைப்பிடிக்கும் நடுநிலைமை –

இதுதான் அரசாங்கங்கள் உங்களைப் பயன்படுத்துகின்ற
முறையாகும்,

எனவே நீங்கள் அதை எதிர்த்து நிற்க வேண்டும். எனவே,
இதனைத் தாண்டிச்சென்று, தகவல்களைத் தடுப்பதற்காக
எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியையும் நன்கு கவனியுங்கள்.

தகவல் அறியும் உரிமையின் குரல்வளை நெரிக்கப்படுவதை
எதிர்த்து ஒரு சமூகமாக நாம் எதிர்வினையாற்றவில்லை
என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.

குல்தீப் நய்யார் மற்றும் நிஹால் சிங் ஆகியோர் நன்றாக
வேலை செய்கிறார்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸின்
ஆசிரியர் ராஜ் கமல் ஜா என்னிடம் சொன்னார். குல்தீப்
மற்றும் நிஹால் ஆகிய இருவரும் அங்கே ஆசிரியர்களாக
இருக்கிறார்கள். அரசாங்கத்திடமிருந்து தகவல்களைப்
பெறுவதற்காக தகவல் அறியும் உரிமையைப்
பயன்படுத்துவதில் அவர்கள் சிறப்பாக வேலை செய்கின்றனர்.

ஆனாலும் இவர்களது ஒவ்வொரு கோரிக்கையும் முதல்
சுற்றில் நிராகரிக்கப்படுவதாக ராஜ் என்னிடம் சொன்னார்.

மேல்முறையீடு செய்யப்பட்டு, பல மாதங்கள் ஆனபிறகு
சிதைக்கப்பட்ட அல்லது முழுமையில்லாத பகுதித் தகவல்கள்
மட்டுமே தரப்படுகின்றன. ஆனால், நாம் இந்த உண்மைகளை
பத்திரிகைகளில் வெளியிடுவதில்லை.

தகவல் அறியும் உரிமை என்பது நமக்கு கிடைத்திருக்கும்
மிகுந்த மதிப்புக்குரிய உரிமைகளில் ஒன்றாகும். எனவே,
தகவலைப் பெறும் உரிமையின் மீது செலுத்தப்படும்
அத்துமீறல் என்பது பேச்சுரிமையின் மீதான அத்துமீறலைப்
போன்றதாகவே இருக்கும் என்றே நான் கூறுவேன்.

‘‘தகவல் இருந்தால் மட்டுமே என்னால் பேச முடியும்’’ என்று
நீதியரசர் பகவதி கூறியதாக ஃபாலி அடிக்கடி எங்களிடம்
நினைவூட்டுவார். எனவே, தகவல்களை அடைவதற்கான,
பெறுவதற்கான உரிமை என்பது பேச்சுரிமையில் இருந்தே
பெறப்படுவதாக இருக்கிறது.

சமூக ஊடகங்களில் இயங்குங்கள் –

அரசாங்கம் சமூக ஊடகங்களின் மூலம் பொய்களைப் பரப்பி,
எல்லோருக்கு எதிராகவும் துஷ்பிரயோகம் செய்வதை
என்னால் உணர முடிகிறது. சமூக ஊடகங்களில் தீவிரமாகச்
செயல்பட்டு உங்களில் சிலர் அதனை எதிர்கொள்ள வேண்டும்.

ஏனெனில் பிரதமர் அலுவலகத்தில் மோடி வைத்திருக்கும்
குழுவுக்கு கிரண் ஜோஷி என்பவர் தலைமை தாங்குகிறார்.
உங்களில் பலரும் அவரைச் சந்தித்திருப்பீர்கள். சமூக
ஊடகங்களைக் கவனித்து அதனைப் பிரதமருக்குத் தெரிவிக்க
வேண்டியது மட்டுமே அவரது ஒரே வேலை.
எனவே, அவர் அதன் முக்கியத்துவத்தை உணருகிறார்;

அதுவே அவருடைய பலவீனம். குறிப்பாக, வெளிநாட்டு செய்தி
ஊடகங்களில் என்ன நடக்கிறது என்பது குறித்து கவனம்
செலுத்தப்படுவதால், இங்கு நடக்கும் அனைத்தையும் பற்றி
வெளிநாட்டு ஊடகங்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

இரண்டாவதாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன்
மூலம் நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பதை நாங்களும் கவனித்து
வருகிறோம் என்பதை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துங்கள்.

கொத்தடிமைகளால் உங்களுக்கு உதவ முடியாது

அமைச்சர்கள் சிலரின் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம்
அளித்தால், அவர்களுக்கு தொலைக்காட்சியில் நேரத்தை
ஒதுக்கினால், அவர்கள் உங்களுக்கு நெருக்கடி காலத்தில்
உதவுவார்கள் என்று உங்களில் பலரும் கருதுகிறீர்கள்.

வெங்கய்யா நாயுடு என்னுடைய நண்பர், எங்களது தி
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் முக்கால் பக்கத்துக்கு
ஒரு கட்டுரையை அவர் எழுதுகிறார். அதே வெங்கய்யா
நாயுடுவை ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்தில் ஒரு பக்கம்
கோர்வையாக எதையாவது எழுதச் சொன்னால் . . .
உங்களுக்குத் தெரியும் அவரால் எழுத முடியாது என்று.

இருந்தாலும், அவரது கட்டுரையைப் பிரசுரிக்கின்றீர்கள். அந்த
இடத்தை அவருக்கு வழங்கி, இவரைப் போன்றவர்களுக்கு
அதிக நேரத்தை ஒதுக்கி சமாதானமாகப் போகலாம் என்று
நீங்கள் நினைக்கிறீர்கள்.

அது உண்மையில்லை. உங்கள் மீது தாக்குதல்
நடத்தப்படும்போது, உங்களுக்கு அவர்கள் யாராலும் உதவ
முடியாது.

உண்மையில் இன்றைக்கு அமைச்சர் என்று யாரும் இல்லை,
இது வெறும் இரண்டரை ஆட்கள் சேர்ந்து நடத்துகின்ற
அரசாங்கமாகும்.

இந்த அமைச்சர்கள் எல்லாம் கொத்தடிமைகள் போன்றவர்கள்.
அவர்களால் உங்களுக்கு உதவ முடியாது. உண்மையில்,
அவர்கள் செய்வது என்னவென்றால், அவர்களில் ஒருவருக்கு
பிரணாய் ராய் நண்பர் என்றால், தான் பிரணாய் ராயின்
நண்பன் என்று மோடி நினைத்து விடக் கூடாது என்று
பயப்படுபவராகவே அவர் இருப்பார். எனவே அவரை
விட்டுவிலகி நிற்கவே விரும்புவார்.

எனவே சில சிறிய சலுகைகளைப் பெறுவதன் மூலம்
சமாதானமாகப் போய்விட முடியும் என்று மட்டும்
நினைக்காதீர்கள். அதற்கு ஒத்துழையாமை, புறக்கணிப்பு
ஆகியவற்றையே நான் பரிந்துரைப்பேன்.

அவதூறு மசோதா பற்றி துவா நினைவூட்டினார். நாடெங்கிலும்
உள்ள பத்திரிகையாசிரியர்களைத் தொலைபேசி மூலம்
அழைத்துப் பேசுவது என்பது அந்தக் காலகட்டத்தில் நாம்
பயன்படுத்திய மிகச் சிறந்த வழிமுறையாக இருந்தது.

‘‘தயவுசெய்து இவ்வாறு செய்யுங்கள். உங்கள் நகரத்துக்கு
ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்
யாராவது வந்தால், பத்திரிகையாளர் சந்திப்பின்போது, அவர்
அவதூறு மசோதாவுக்கு ஆதரவானவரா அல்லது எதிரானவரா
என்று முதலில் கேளுங்கள். அவர் பதிலளிக்காவிட்டாலோ
அல்லது தெளிவற்ற பதிலை அளித்தாலோ, அல்லது அவர்
‘ஆம்’ என்று சொன்னாலோ நீங்கள் எழுந்து வெளியே
வந்துவிடுங்கள்’’ என்று நாங்கள் அவர்களிடம் சொல்லுவோம்.

விளம்பரமே பயங்கரவாதிகளுக்கு ஆக்சிஜன் போன்று
இருக்கிறது என்று மறைந்த முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்
மார்கரெட் தாட்சர் கூறுவார். இந்தக் கொத்தடிமைகளுக்கும்
அதுவே ஆக்சிஜனைப் போன்று இருக்கிறது.

தங்களுக்கு கிடைக்கும் விளம்பரங்கள், அரசின்
கொள்கைகளுக்கு ஆதரவாக அவர்கள் முன்வைக்கும்
வாதங்கள் ஆகியவற்றை மோடியிடம் காட்டுவதற்கு இந்தக்
கொத்தடிமை அமைச்சர்கள் விரும்புவார்கள்.

எனவே, அவர்களுக்கு கிடைக்கும் ஆக்சிஜனை மறுக்கும்
வகையில், அவர்கள் நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்புகளைப்
புறக்கணியுங்கள்.

உங்கள் சந்திப்புகளுக்கோ அல்லது உங்களது நிகழ்ச்சிகளுக்கோ
நீங்கள் அழைக்க விரும்பாத ஒருவரை அவர் அமைச்சர்
என்பதற்காக அழைக்காதீர்கள், அவ்வாறான
ஒத்துழையாமையைச் செயல்படுத்திப் பாருங்கள். அதன்
விளைவுகளைப் பார்க்கலாம்.

எது செய்தி?

அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்குத் தரப்படும் முக்கியத்துவம்
இந்தியாவைப் போன்று வேறு எந்த நாட்டிலும்
வழங்கப்படுவதில்லை. அங்கெல்லாம் நீங்கள் அவற்றை
விளம்பரம்தான் செய்ய வேண்டும்.

மாறாக, அரசாங்கத்தின் கூற்றுக்களை உண்மைகளைத்
தோண்டியெடுத்து ஒப்பு நோக்கி மறுபதிப்பு செய்யும்
ஆல்ட்-நியூஸ், எஸ்எம் ஹோக்ஸ்-ஸ்லேயர்ஸ், வாட் ஃபேக்ட்
செக்கர்ஸ் போன்ற தளங்களைப் போன்று நீங்கள் செயல்பட
வேண்டும்.

நரேந்திர மோடி, சரத் யாதவ் போன்றவர்களின் டுவிட்டுகளை
பத்திரிகைகள் இன்று மறுபதிப்பு செய்து தங்களது
பத்திரிகைகளில் வெளியிட்டு வருகின்றன. அவர்களின்
டுவிட்டுகள் எந்த விதத்தில் அறிவுநுட்பம் கொண்டவையாக
இருக்கின்றன?

அவர்களது செய்தியை வெளியிடும் அதே இடத்தில், இன்று
ஆல்ட்-நியூஸ் வெளியிட்டிருக்கும் செய்தியை நீங்கள்
வெளியிடலாம். அதன் மூலம் உண்மையை
அம்பலப்படுத்தலாம்.

இப்போது அவர்களின், அரசாங்கத்தின் நுட்பங்கள் உங்களுக்குத்
தெரிந்திருக்கும். சிரமத்துக்குள்ளாக்கும் விஷயம் ஏதாவது
இன்று நடந்தது என்றால்,

அவர்கள் உடனே வேறொரு
கதையைத் தொடங்கி விடுவார்கள். இது அவர்களின்
உத்திகளில் ஒன்றாக இருக்கிறது…

உங்கள் பார்வையாளர்களையும், உங்கள் வாசகர்களையும்
திசை திருப்பும் கருவிகளாக நீங்கள் மாற வேண்டாம்.

முக்கியமான விஷயங்களின் மீது அவர்களது கவனம்
இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களது வேலையை
நீங்கள் செய்யாமலிருப்பது என்பது மிகவும்
முக்கியமானதாகும்.

நீங்கள் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறீர்கள்
என்பதற்கான சிறந்த உத்தரவாதம், உங்கள் செயல்பாடுகளின்
மீது அரசாங்கம் கோபமடைவதுதான். அரசாங்கத்துக்கு
எரிச்சலூட்டும் பணியை இருமடங்கு அதிகமாகச் செய்ய
வேண்டும்.

‘அரசாங்கம் மறைக்க விரும்புவது மட்டுமே செய்தி,
மற்றவையெல்லாம் விளம்பரங்களே’ என்று அருண் பூரி
முழக்கமிடுவதாகவே நான் கருதுகிறேன். நீங்கள் அவற்றைத்
தோண்டி வெளியே எடுத்துக்கொண்டு வர வேண்டும்.

வாழ்வா-சாவா பிரச்னை

இறுதியாக, நமக்கு மூன்று வகையான பாதுகாப்புகள் மட்டுமே
உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஒன்று நம்முடைய ஒற்றுமை.
இரண்டாவது நீதிமன்றம்.
எனவே, நீதித்துறையை குறைத்து மதிப்பீடுசெய்யும்
வகையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பெரும்
முக்கியத்துவம் கொடுங்கள். இது மிகவும் அவசியம்.

மூன்றாவது நமது வாசகர்கள், பார்வையாளர்கள்
ஆகியோருக்கு பாதுகாப்பினைத் தருவது.

எனவே, நான் சொன்னது போல, அரசாங்கத்துக்குத்
தெரிவிப்பதற்காக டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றைப்
பயன்படுத்த வேண்டும். ஆனால், அது டுவிட்டர் உங்களைக்
கையாளுவதாக இருக்கக் கூடாது.

வாசகர்களுக்கான வாழ்வா, சாவா பிரச்னைகளில் உண்மைத்
தகவல்களின் அடியாழத்துக்கு நீங்கள் செல்ல வேண்டும்.

அப்போதுதான், உங்களுக்கெதிராக கைகள்
உயர்த்தப்படும்போது, அந்த கைகள் தனக்கெதிராக
உயர்த்தப்பட்டதாக வாசகர் கருதுவார்.

முக்கிய சேனல்கள் அல்லது ஊடகங்கள் மூலம் தகவல்களைப்
பெறுவது, பரப்புவது ஆகியவை இன்னும் ஓராண்டுக்குள்
இயலாமல் போய்விடும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.
எனவே ஹேக்கிங் செய்வது, அரசாங்கம் மேற்கொள்ளும்
தணிக்கைகளைத் தவிர்ப்பது, இணையதளத்தைப் பயன்படுத்தி
தகவல்களைச் சேகரித்தல், பரப்புதல் போன்றவற்றில்
நிபுணத்துவம் உள்ளவர்களாக நமது இளைஞர்களை
மாற்றுவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக
இருக்கிறது.

ஏனென்றால், ஊடகங்களை அவர்கள் முழுமையாக
கட்டுப்படுத்தும்போது, ஊடகங்கள் மூலமாக தங்கள்
வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைக் காண்பதற்கும்,

உண்மையில் தங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது
என்பதை உணர்வதற்குமான வித்தியாசத்தை மக்கள்
பார்ப்பார்கள்.

( மொழிபெயர்ப்பில் உதவிய – முனைவர் தா.சந்திரகுரு,
விருதுநகர் – அவர்களுக்கு நன்றி…)

——————————————————————-

திரு.அருண் ஷோரியின் உரை அடங்கிய வீடியோ –

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to மோடிஜி ஆட்சி பற்றி பாஜக தலைவர் திரு.அருண் ஷோரி விமரிசனம் …!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  அருண்ஷோரி அவர்களின் பேச்சில் முக்கியமான விஷயங்களாக கீழ்க்கண்டவற்றைக் காண்கிறேன்.

  1. வாயில் விளம்பரங்களை வைத்திருக்கும் நாய்களாக அவர்கள் செய்தி ஊடகங்களை மாற்றிவிடுவதால்
  2. அதே வெங்கய்யா நாயுடுவை ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்தில் ஒரு பக்கம் கோர்வையாக எதையாவது எழுதச் சொன்னால் . . .உங்களுக்குத் தெரியும் அவரால் எழுத முடியாது என்று
  3. இது வெறும் இரண்டரை ஆட்கள் சேர்ந்து நடத்துகின்ற அரசாங்கமாகும்.
  4. வாழ்நாளெல்லாம் அவர் சிகரெட் புகைத்து வந்தார். எனவே, அவருக்கு புற்றுநோய் வந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை, ஆகவே, அவர் கஷ்டப்படட்டும்’ என்பது போல், ஒருவருக்கு உதவக்கூடாது என்பதற்கான பல காரணங்களை நமது மனம் பரிந்துரைக்கும்.
  5. சிரமத்துக்குள்ளாக்கும் விஷயம் ஏதாவது இன்று நடந்தது என்றால்,
  அவர்கள் உடனே வேறொரு கதையைத் தொடங்கி விடுவார்கள். இது அவர்களின் உத்திகளில் ஒன்றாக இருக்கிறது…

  இதில் (1), (2), (5) – எல்லா கடந்த அரசாங்கங்களுக்கும் (மொரார்ஜி தேசாய் ஆட்சி தவிர) பொருந்தும். தற்போதைய அரசாங்கத்துக்கும் பொருந்துகிறது.

  (3) – இந்திராகாந்தியின் ஆட்சியை நினைவுபடுத்துகிறது. கடுமையான சர்வாதிகாரம், பாதிக்கப்படும் ஒரு தரப்பை மிகுந்த கோபத்துக்குள்ளாக்கும். அது ஒட்டுமொத்த நாட்டிற்கும் நல்லதல்ல என்பதைத்தான் கடந்த வரலாறு காட்டியிருக்கிறது. ஆனாலும் மோடி அவர்கள் நல்லதைச் செய்வார், நாடு என்பதுதான் அவருக்கு முதன்மையாக இருக்கும் என்றுதான் நம்புகிறேன்.

  (4) – எனக்குள்ள அறிவுரையாக எடுத்துக்கொள்கிறேன்.

  பகிர்ந்ததற்கு நன்றி கா.மை. சார்.

 2. Sundar Raman சொல்கிறார்:

  எந்த பத்திரிக்கை முடக்கப்பட்டது … எல்லா பத்திரிகையும் முன்பை விட , மிக அதிகமாக மோதியை தாக்கி தான் எழுதுகிறார்கள், ஆனந்த விகடனை பார்த்தால் , தப்பாக நக்கீரன் படிக்கிறோமோ என்றளவுக்கு எழுதுகிறார்கள் . டீவியிலோ வரம்பு முறை இல்லாமல் எது நடந்தாலும் மோடியை தொடர்பு பண்ணி என்னவெல்லாமோ பேசுகிறார்கள் . குஜராத்தில் 6 அல்லது 7 மாவட்டங்களில் , நர்மதா அணை மூலம் புதிதாக விவசாயத்திற்கு வந்த நிலங்கள் சில லட்சம் ஹெக்ட்டார்கள் , ஏதாவது டிவியில் பார்த்தீர்களா ..நாட்டில் எத்தனியோ நல்ல காரியங்கள் நடக்கின்றன . குஜராத்தில், எழுத படிக்க தெரியாத , தலித் சமூகத்தை சேர்ந்த , வயதான ஒரு பெண்மணி , தனது முயற்சியால் , வியாபாரத்தில் தொடங்கி தற்பொழுது உற்பத்தி , ஏற்றுமதி என்று பெரிய கோடீஸ்வரி , அவரிடம் இருப்பது ஆடி , BMW …தலித் சமூகத்தில் பெரிய புரட்சியே நடக்கிறது , நிறய தொழில் அதிபர்கள் வென்று வருகின்றனர் .

  பதவி கிடைக்கலைன்னு பிதற்றுகிறார் , சமீப காலமாக ரமணரையும் , ராமகிருஷ்ண பரமஹம்ஷரையும் விடவில்லை , அது பற்றிய அவர் எழுதிய புத்தகம் இன்னும் படிக்க வில்லை ( விருப்பமும் இல்லை ) , ஆனால் அதுபற்றி அவர் உளறியது ( டிவியில்) கொஞ்சம் ஓவர்.

  NDTV பற்றி நீங்களே சொல்லிவிட்டீர்கள் , டெல்லி ரேப் நடந்த பொழுது , அதற்கப்பறம் அவர்கள் நடந்த முறை கொஞ்சம் கூட சரி கிடையாது , இங்கிலாந்தில் இருந்து வந்த யாரோ ஒருவர் மூலம் சிறையில் உள்ளவர்களை எல்லாம் , தொடர்பு மூலம் , நேர்காணல் செய்து ஒரு டாகுமெண்டரி செய்து -பின்பு அது தடை செய்யப்பட்டது . ஓரினசேர்க்கை , வாடகை தாய் , ஒற்றை பெற்றோருக்கு தத்து …இது போல அவர்களுக்கென்று தனி வழி. அது இந்தியாவை மட்டம் தட்டுவது தான் நோக்கு .

 3. Ganpat சொல்கிறார்:

  அருமையான மொழிபெயர்ப்பு.முனைவர் தா.சந்திரகுரு,
  விருதுநகர் மற்றும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி கண்பத்.

   நீங்கள் நிறைய எழுத வேண்டும் என்பது என் விருப்பம்…
   ஆனால், நான் விருப்பப்பட்டால் மட்டும் போதுமா… 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. jksm raja சொல்கிறார்:

  ” குஜராத்தில் 6 அல்லது 7 மாவட்டங்களில் , நர்மதா அணை மூலம் புதிதாக விவசாயத்திற்கு வந்த நிலங்கள் சில லட்சம் ஹெக்ட்டார்கள் , ஏதாவது டிவியில் பார்த்தீர்களா ..நாட்டில் எத்தனியோ நல்ல காரியங்கள் நடக்கின்றன . குஜராத்தில், எழுத படிக்க தெரியாத , தலித் சமூகத்தை சேர்ந்த , வயதான ஒரு பெண்மணி , தனது முயற்சியால் , வியாபாரத்தில் தொடங்கி தற்பொழுது உற்பத்தி , ஏற்றுமதி என்று பெரிய கோடீஸ்வரி , அவரிடம் இருப்பது ஆடி , BMW ”

  எவ்வளவு நாட்கள்தான் குஜராத் பெயரை சொல்லி ஏமாற்ற போகிறார்கள் என்று தெரியவில்லை. மோடிக்கும் நர்மதா அணைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. நர்மதா அணைக்கு அடிக்கல் நேரு அவர்களால் 1950 இல் நாட்டப்பட்டு பல இழுபறிக்குப்பின் 1990 இல் மோடி முதலமைச்சர் ஆவதற்கு15 ஆண்டுகளுக்கு முன்பே குஜராத்திற்கு தேவையான வேலைகள் முடிந்துவிட்டது. கோர்ட் கேஸினால் பாதிக்கப்பட்டது மத்திய பிரதேசம் தான். நர்மதா அணையில் உள்ள தண்ணீர் குஜராத்திற்கும் உற்பத்தியாகும் மின்சாரம் மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவிற்கும் என்பதுதான் அவர்களின் ஒப்பந்தம். விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் தேக்கும் அளவு அணையின் உயரமும் தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாயின் வேலையும் 1990 இல் முடிந்துவிட்டது . நான் 1994 வரை நர்மதா அணையில் வேலை செய்தவன். தலித் பெண்மணி தனது முயற்சியை கண்டிப்பாக மோடி முதல்வர் ஆவதற்கு முன்பு தொடங்கியிருக்கவேண்டும் Mr சுந்தர் ராமன்.

  • Sundar Raman சொல்கிறார்:

   மூன்று முறை தொடர்ச்சியாக முதல்வராக வென்றவரை , ஒன்றுமே செய்ய வில்லை என்கிறீர்கள் . என்ன சொல்வது , குஜராத் வெற்றி கதை ஒரு பொய் என்கிறீர்கள் , என்ன சொல்வது , இதில் நீங்கள் நர்மதா அணைக்கட்டில் வேலை செய்தவர் – அந்த அணைக்கட்டின் பயன்பாடு , குஜராத் மாநிலத்துக்கு எப்போது கிட்டியது , நேருவே தொடங்கியது என்றால் , மேதா பட்கர் போன்றவர்கள் போராட்டங்கள் ஏன் பி.ஜே .பி . ஆட்சியின் பொது தொடங்கி உடனே உச்சத்தை எட்டியது .

   நான் எத்தனையோ முறை சொன்னது போல் , மூன்று ஆண்டுகள் தான் ஆகின்றன , ஊழல் நிச்சயமாக இல்லை , வீண் செலவுகள் இல்லை ( நிறய விளம்பரம் இருக்கு – ஆனால் முன்பை விட எவ்வளோவோ குறைவு ) , யாருக்கும் உபயோகம் இல்லாத திட்டம் ஏதும் இல்லை , அரசு ஊழியர்கள் வேலை செய்யும் முறை எவ்வளோவோ மேல் , செகிரேட்டரி போன்ற உயர் பதிவுகளில் உள்ளவர்கள் , சரியாக பணிக்கு வருவது , கோல்ப் விளையாட நேரமில்லை , சுத்தம் பற்றி குறைந்த பட்சம் பேசுகிறார்கள்.

   நிச்சயமாக சில சில பசு கொலைகள் நடந்தன , கண்டிக்கத்தக்கது , நடவடிக்கை வேண்டும் . இந்த மாநிலங்களில் பசு வதை சட்டம் இருக்கு , யாரும் அமல் படுத்த வில்லை .

   இந்தியா முழுவதும் மின்சார உற்பத்தியில் , பெரிய மாற்றம் . நிறைய சூரிய ஒளி மின்சார திட்டம் வந்து கொண்டே இருக்கிறது . நிச்சயமாக உள்ள பெருச்சாளிகளை உள்ளே தள்ளவில்லை . இப்ப தான் கொஞ்சம் சத்தம் கேட்கிறது . அரசின் , பெரும்பாலான அமைச்சர்கள் சக்திக்கு மீறிய பங்களிப்பு செய்கிறார்கள் , சில அமைச்சர்கள் மற்றும் அவர்களின் செயல் திருப்திகரமாக இல்லை ( வெங்கையா நாய்டு , உமா பாரதி , ராதா மோகன் , மேனகா காந்தி , துரதிர்ஷ்ட வசமாக இந்த பட்டியலில் அருண் ஜெட்லே பேரும் வருகிறது ) . இனி வரும் காலங்களில் இளைய தலைமுறை வரும் என எதிர்பார்ப்போம் .

   நீங்கள் சொல்றா மாதிரி அந்த லேடி முன்பே தொழில் தொடங்கி இருக்கலாம் , ET யில் படித்தது ஆனால் அது போல் நிறைய பேர் வரணும்ன்னு கொண்டு வந்த திட்டம் தான் முத்ரா , இதில் நிறைய தலித்துக்கு , பெண்களுக்கு கடன் குறைந்த வட்டியில் கொடுத்திருக்கிறார்கள் . NPA – வாரா கடன் ஒரு பெரிய தலை வலி , ஆனால் மோதி வந்து கொடுக்க வில்லை .

   • புதியவன் சொல்கிறார்:

    சுந்தர் ராமன் – குஜராத் வளர்ச்சி பெறவில்லை என்று சொல்பவர்கள் எல்லோரும் BIASED OPINION. இதைப் பற்றி குஜராத்திற்குச் சென்ற கல்கி குழுவினர் பல படங்களையும் (தண்ணீர் Management, சூரிய ஒளி மின்சாரம் போன்ற பல) போட்டிருந்தனர். இப்போ, அமெரிக்கா வளர்ந்த நாடு என்று யார் உண்மையைச் சொன்னாலும், அதை எதிர்த்து ஆயிரக்கணக்கான உதாரணங்கள் சொல்லமுடியும். (அங்கு ஏழ்மை இருக்கிறது, வீடில்லாதவர்கள் இருக்கின்றனர், குற்றச் செயல்கள் இருக்கிறது, RACISM இருக்கிறது போன்று பல உண்மை உதாரணங்கள்) ஆனால் உண்மை என்ன? அமெரிக்கா வளர்ந்த நாடு. அதனால், குஜராத் வளரவில்லை என்றும் ஆயிரம் உதாரணங்கள் கொடுக்கலாம். குஜராத் வளர்ந்தது என்பதை யார் சொல்லணும்? அங்க உள்ள மக்கள் சொல்லணும். அவங்க என்ன பண்ணினாங்க? மோடி அவர்களை மூன்று முறை முதல்வராகத் தொடர்ந்து தேர்ந்தெடுத்தாங்க. இன்னும் தேர்ந்தெடுப்பாங்க. உள்ளங்கை நெல்லிக்கனியா இருக்கிற இந்த உண்மைக்கு எதுக்கு வீணா எதிர்ப்பு, ஆதரவு கருத்துக்கள்?

    மோடி நாட்டின் தலைவரான பிறகு, நிறைய செயல்கள் நடந்துவருகின்றன. ஆனால் OBVIOUS ஆகத் தெரியும்படி வளர்ச்சியைப் பார்க்க முடியவில்லை. திருடர்கள் மீதான நடவடிக்கை விரையவில்லை (இதுக்கு நிறைய காரணங்கள் சொல்லமுடியும். ஒரு SYSTEM மாறுவதற்கு காலம் பிடிக்கும். பாஜக பதவிக்கு வந்து அவர்களுடைய ஆள் ஒருவரை ஜனாதிபதியாக ஆக்குவதற்கே, எத்தனை எத்தனை சட்டங்களை ராஜ்ஜியசபையில் PASS செய்வதற்கே எத்தனை தடங்கல்கள். அதேபோல் காங்கிரஸ் அவர்களுடைய 60 ஆண்டுகால ஆட்சியில் எத்தனை எத்தனை அனுதாபிகளை எல்லா இடங்களிலும் வைத்திருப்பார்கள். அவர்கள் எத்தனை எத்தனை முட்டுக்கட்டை போடலாம்? 2000 ரூ புது நோட்டுகளிலேயே எத்தனை குளறுபடி-வெளிவரும் முன் படம் வந்தது, சிலருக்கு கோடி கோடியாகச் சென்றது, வங்கிகள் சிலருக்கு தவறாக பழைய நோட்டை மாற்றிக்கொடுத்தது போன்று பல நிகழ்வுகள்). இதுக்கெல்லாம் கண்ணைமூடிக்கொண்டு, மோடி அவர்கள்தான் காரணம் என்று சொல்பவர்களைத் திருத்த, யாராலும் முடியாது. அவர்கள் இரவில் சூரியன் மறைந்ததற்கும் மோடிதான் காரணம் என்று சொல்லக்கூடியவர்கள்.

    நான் என்ன பார்க்கிறேன் என்றால், OBVIOUS திருடர்கள் (ராசா, கனிமொழி, ராஜாத்தி, கேடி பிரதர்ஸ், டி.ஆர்.பாலு, கார்த்தி சிதம்பரம், நளினி, குலாம் நபி, வதோரா, கல்மாடி போன்ற பலப் பல திமிங்கிலங்கள்) அரசில் இல்லை. கையை முறுக்கி கொள்ளையடிக்கும் கருணானிதி போன்ற கும்பல்கள் பாஜக அரசில் இல்லை. தலைமைதாங்குபவர் உழைக்கிறார். ஊழல் கிடையாது (ஊழல் முற்றிலும் ஒழியவேண்டுமானால், 80% இந்தியர்கள் மறைந்தால்தான் முடியும்).

    ஆனாலும், பொதுவாக மக்கள் MENTALITYபடி, உடனே தெரியும்படி சில மாற்றங்களை எதிர்பார்க்கிறோம். கண்ணுக்குத் தெரியும்படியான மாற்றங்கள், தின வாழ்வில் வரும் மாற்றங்கள். அதனை இன்னும் பாஜக அரசு செய்யவில்லை. நாட்டில் பயங்கரவாதச் செயல்கள் நடந்தால் பாஜக இரும்புக்கரம் கொண்டு அடக்கும், நாட்டின் பெரும்பான்மையான மக்களுடைய நம்பிக்கைக்கு மாறாக எதையும் நடக்கவிடாது, பாகிஸ்தான் பயங்கரவாதிகளை அனுப்பமுயற்சிக்கும்போது பாஜக தீவிர எதிர்வினையாற்றும், என்பதில் நிச்சயம் பாஜக மீது நம்பிக்கை உண்டு. ஆனால், OBVIOUS CHANGES வந்தால்தான் மக்களின் நம்பிக்கையை இன்னும் பெறமுடியும்.

 5. இளங்கோ சொல்கிறார்:

  இதனால் எல்லாம் சுந்தர்ராமன் மாறி விடுவாரா என்ன ?
  அவரைப் படைத்த தெய்வமே சொன்னாலும், அவர் மோடிஜியை விட மாட்டார்.
  அடிமை விலங்கை பிறர் பூட்டினால், அவிழ்க்கலாம் அல்லது உடைக்கலாம்.
  தானே விரும்பி பூட்டிக்கொண்டால் ?

 6. குலாம் ரசூல் சொல்கிறார்:

  நான் சொன்னால் முஸ்லிம், உள்னோக்கம். சகோதரர் jksm raja அவர்களுக்கு என்ன பதில். பொய்யே உன் பெயர்தான் RSS-BJPஆ?

  //அரசாங்கம் சமூக ஊடகங்களின் மூலம் பொய்களைப் பரப்பி,
  எல்லோருக்கு எதிராகவும் துஷ்பிரயோகம் செய்வதை
  என்னால் உணர முடிகிறது. சமூக ஊடகங்களில் தீவிரமாகச்
  செயல்பட்டு உங்களில் சிலர் அதனை எதிர்கொள்ள வேண்டும். – அருண்ஷோரி அவர்கள்//

  இப்பொழுது பெரும் ஊடக நெறியாளர்கள் ஒன்று சேர்ந்து மோடி அரசுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்கள். சில நாட்கள் முன்பு ஓய்வுபெற்ற பல அதிகாரிகள் ஒன்று சேர்ந்து அரசமைப்பு சட்டத்தை காப்பாற்றுங்கள் என்று பகிரங்க கடிதம் எழுதியது சகோதரர்கள் அறிந்திருக்க கூடும். இந்த நிகழ்வுகள் சாதாரனமானது அல்ல.

  நாட்டுக்கு ரூ.30,000 கோடி ரூபாய் இழப்பினை ஏற்படுத்தியிருப்பதான ஒன்று வெளிவந்துள்ளது. இன்னும் வெளிவராதது எத்தனையோ.

  வாயில் எலும்பை வைத்திருக்கும் நாய் அந்த‌ எலும்பை துப்பி தூர எறியும்பொழுது எல்லாம் வெளிவரக்கூடும்.

 7. இளங்கோ சொல்கிறார்:

  குலாம் ரசூல்,

  // வாயில் எலும்பை வைத்திருக்கும் நாய் //

  – ஒருமை அல்ல – பன்மை

  ” வாயில் எலும்பை வைத்திருக்கும் நாய்கள் “

 8. தமிழன் சொல்கிறார்:

  அருண்ஷோரி கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. அதே சமயம், நிறைய கட்சித் தலைவர்கள், நல்லது செய்தாலும் குறை கூறுவதும் கெட்டது நடந்தால் இன்னும் குறை கூறுவதும், அதே சமயம் தான் ஆதரிக்கும் அல்லது கூட்டணி வைத்திருக்கும் கட்சியானால், சமாளிப்புகளை அவிழ்த்துவிடுவதும்தான், கட்சிக்காரர்கள் சொல்லுவதை மக்கள் நம்பாதது. அதனால்தான் பத்திரிகைகளையும் மக்கள் நம்புவதில்லை. இப்போது பார்த்தீர்களானால், முரசொலி, நக்கீரன் போன்ற திமுக கட்சிப் பத்திரிகைகள், விகடன் போன்ற திமுக அனேகமாக மொத்தமாக வாங்கிவிட்ட, அல்லது தொலைக்காட்சி உறவால் கழுத்தில் கத்திவைத்திருக்கிற பத்திரிகைகள் என்னதான் நடு நிலை, கருத்துக்கணிப்பு ஆகியவற்றை எழுதினாலும் அவற்றின் நோக்கம் பல்லை இளிக்கச் செய்கிறது. இதனால்தான் இவர்களால் மக்கள் மனதில் தாக்கம் உண்டாக்க முடிவதில்லை.

  இன்னொன்று, மோடி என்றதும் எதிர்ப்புக் குரல் கொடுக்க ஓடிவருபவர்கள் (அதாவது கண்ணைமூடிக்கொண்டு எதிர்ப்புப் பின்னூட்டம் எழுதியபின்பு, இடுகையைப் படிப்பவர்கள், யார் என்பதுதான் பெயர்களைப் பார்த்தாலே தெரியுமே), காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள், திமுக, மற்ற கட்சிகள் செய்த அநியாயங்களை, வேறு பயங்கரவாதச் செயல்கள் போன்றவைகளைப் பார்த்து வாலைச் சுருட்டிக்கொண்டு மூலையில் அமைதியாக இருந்ததால், அவர்கள் என்ன எதிர்ப்புக்குரல் எழுப்பினாலும் அதனால் ஒரு தாக்கமும் இருக்காது. இவர்கள் எதிர்க்கிறார்களா? அப்படி என்றால், மோடியோ பாஜகவோ ஏதேனும் நல்லதுதான் செய்திருக்கவேண்டும் என்றுதான் பொதுமக்கள் எண்ணுவார்கள்.

 9. jksm raja சொல்கிறார்:

  Mr சுந்தர் ராமன் அவர்களே,
  மேதா பாட்கர் அவர்களின் போராட்டம் உச்சநிலையில் இருந்தது 1985 முதல் 1992 வரைதான். அவரின் உச்சகட்ட நீரில் மூழ்கி சாகும் போராட்டம் நடந்தது 1992 என்பதை நினைவில் வையுங்கள். கட்டுமான பணியை கோர்ட் ஆர்டர் வந்த பிறகு சுத்தமாக நிறுத்தி விட்டார்கள். படிப்படியாக அங்கு வேலை பார்த்தவர்கள் எல்லோரும் 1994 யில் வெளியேறிவிட்டார்கள். எனக்கு தெரிந்து மேதா பாட்கர் அவர்கள் அதன்பின் பெரிய போராட்டம் நடத்தவேயில்லை. மோடி முதல்வர் ஆவதற்கு முன்பு விளம்பரம் இல்லாமல் செய்யப்பட்ட வளர்ச்சி பணிகளை எல்லாம் மோடி முதல்வர் ஆன பின்பு தான் செய்தது என்று தம்பட்டம் அடித்து விளம்பரப்படுத்திக்கொண்டார். ” குஜராத்திற்குச் சென்ற கல்கி குழுவினர் பல படங்களையும் (தண்ணீர் Management, சூரிய ஒளி மின்சாரம் போன்ற பல) போட்டிருந்தனர் “. அந்த படங்கள் உண்மையாக இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் மோடி வந்தபின் அவர்போட்ட திடடத்தினால் வந்தது என்று உங்களால் உறுதியாக சொல்லமுடியுமா.

 10. Sundar Raman சொல்கிறார்:

  ஓகே சார் , மோதி அவர்கள் விளம்பரம் இல்லாமல் செய்த பணியெல்லாம் தானே செய்ததாக சொல்லி , மூன்று முறை முதல்வரானார் , நான்காவது முறை பிரதமரானார். அவர் வாய்க்காலே கட்டவில்லை , அவர் ஆட்சியில் குஜராத்தில் விவசாயம் முன்னேறவே யில்லை ஆனால் மக்கள் அவரை மீண்டும் மீண்டும் தேர்ந்து எடுத்தார்கள் . தற்பொழுது கூட , அவர் எல்லா கிராமங்களுக்கும் மின்சாரம் இணைப்பு கொடுக்க முயற்சிக்க வில்லை , மின்சாரம் எல்லாம் முன்பே வந்தாச்சு , அவர் பேர் மாத்திரம் தட்டிக்கொண்டு போகிறார். சாலை எங்கேயுமே போடலை …போன ஆட்சியில் …T.R .பாலு அவர்கள் எல்லாமே செய்து விட்டு போய்ட்டார் , துறைமுகம் வேலையெல்லாம் முன்பே முடிஞ்சாச்சு , FDI investments , எல்லாம் எப்போவோ வந்தாச்சு , மோதி காலத்தில் ஒரு நயா பைசா கூட வரலை . ஆதார் திட்டம் காங்கிரஸ் கொண்டுவந்தது , மோடி ஒண்ணுமே பண்ணலை . மோடி ஆளும் சமயத்தில் குஜராத்தில் இன்வெஸ்ட்மென்ட் ஒரு ருபாய் கூட கிடையாது . FICCI , CFI , போன்ற அமைப்புகள் எல்லாம் ஜால்ரா , பொய் சொன்னார்கள் .

  அட போங்க சார் , உங்களுக்கு ரசூல் எவ்வளோவோ தேவலை .

  கொஞ்சம் அவர் அம்மா , அண்ணா , அண்ணி , அவர்கள் வீடு எப்படி இருக்குன்னு பாருங்க , என்ன உடை உடுத்துகிறார்கள் , என்ன வண்டி இருக்கு – கொஞ்சமாவது மனச்சாட்சியோட எழுதுங்க , பேசுங்க . எந்த அரசியில்வாதியாவது 20 வருட பதிவுக்கு பின் இப்படி இருக்கிறார்களா என்று பாருங்கள் .

  கா .மை சார் கொஞ்சமாவது நடுநிலை பாருங்கள்

 11. குலாம் ரசூல் சொல்கிறார்:

  நன்றி இளங்கோ. Spelling mistake..

  ஒன்று கவனித்தீர்களா. இங்கு பின்னூட்டம் இட்டிருப்பவர்கள் யாரும் நாட்டுக்கு ரூ.30,000 கோடி ரூபாய் இழப்பினை CBI கண்டுகொள்ளாதது போலவே இவர்களும் கண்டுகொள்ளாததை. இவர்களுக்கு என்ன selective amnesia வா?

  இந்த 3 வருடங்களில் என்ன நடந்திருக்கு. காங்கிரஸ் கொண்டுவந்த‌ பெரும்பாலான திட்டங்களை பெயர்மாற்றி அறிவித்திருப்பதை தவிர. அதாவது எவனோ பெற்ற பிள்ளைக்கு தான் சொந்தம் கொண்டாடுவதற்கு கிராமபுறங்களில் வேறு பெயர் சொல்லுவார்கள். அதிலும் பல திட்டங்கள் படாடோபமான அறிவிப்புகளோடு சரி.

  மத்திய மாநில அரசுகளில் பனியாற்றிய‌ ஓய்வுபெற்ற 65 அரசு அதிகாரிகள், அவர்களில் பல IAS அதிகாரிகள், என்ன சாதாரனர்களா. இவர்கள் கூட்டாக சேர்ந்து கையெழுத்து போட்டு ”அரசமைப்பு சட்டத்தை காப்பாற்றுங்கள்” என்று பகிரங்க கடிதம் எழுதுவது என்ன காழ்ப்புணர்வு கொண்டா?

  பதிலில்லை என்றால் தூற்றுவது இவர்களுக்கு சொல்லிக் கொடுத்த பாலபாடம்.

  அருண்ஷோரி அவர்களுக்கு பதவிகிடைக்கவில்லை, அதனால் அவர் குறைகாண்கிறார். வேறு என்ன‌ சொல்லமுடியும் பதிலில்லையென்றால். சரி. குல்தீப் நய்யார்,நிஹால் சிங்,நாரிமன் press club-ல் கலந்து கொண்ட மற்றும் பலரை பற்றி என்ன சொல்லபோகிறார்கள்.

  சமீபத்தில் நடந்த obiviousஆன ஒரு விசயம். பலகோடிகள் செலவு செய்து 3 வருட சாதனைகள் என்று சொல்லிக்கொண்டு நடந்த விளம்பரங்கள். மக்களிடம் எடுபட்டதா? நடந்திருந்தால் தானே மக்களிடம் ஆர்வம் ஏற்படும். எமெர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி செய்த 20 அம்ச திட்ட விளம்பரங்களுக்கு என்ன மறியாதை கொடுத்தார்களோ அதே மறியாதை தான் இப்பொழுது கொடுத்துள்ளார்கள். இது தான் obivious.

  அந்த‌ எமெர்ஜென்சி காலத்தைவிட மோசமான காலத்தில் நாடு இப்பொழுது இருக்கிறது என்பதை தான் முன்னால் அரசு அதிகாரிகள், அருண்ஷோரி, குல்தீப் நய்யார் போன்றோர் எச்சரிப்பது.

  மக்கள் சமயத்தில் விழித்துக்கொள்வார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s