திரு.லாலு குடும்ப சொத்து பறிமுதல் – மத்திய அரசின் வரவேற்கத்தக்க நடவடிக்கை ….

திருவாளர் லாலு பிரசாத் யாதவ், மத்தியில் ரெயில்வே
அமைச்சராக இருந்தபோதும், அவரது மனைவி ரப்ரி தேவி,
பீஹார் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தபோதும்,

இப்போது எம்.பி.யாக இருக்கும் அவர்களது மகள், பீஹார்
துணை முதலமைச்சராக இருக்கும் மகன் ஆகியோர் பெயரில்

லஞ்சமாக வாங்கப்பட்ட பினாமி சொத்துக்கள் என்று
சிலவற்றை இப்போது அடையாளம் கண்டு, மத்திய அரசின்
அமலாக்கப்பிரிவு முடக்கி வைத்துள்ளதாக செய்தி வெளி
வந்துள்ளது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னதாக
அவர்கள் பினாமி பெயர்களில் வாங்கிய சொத்துக்கள்,

தற்போது பினாமி சட்டம் அமலுக்கு வந்ததையொட்டி
அமலாக்கப்பிரிவினரால் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டு
முடக்கப்பட்டுள்ளன.

அப்போது, இவ்வளவு எளிமையாக இருந்த குடும்பம் தான் …….

இப்போது இப்படி வளர்ந்திருக்கிறது….
இதே போல், தமிழ்நாட்டில் “வளர்ந்த” குடும்பங்களை உங்களுக்கு தெரியாதா என்ன…!!!


மத்திய அரசு Benami Transactions (Prohibition) Amendment Act,
2016 என்கிற (பழைய சட்டத்திற்கான ) புதிய விதிகளை
கடந்த நவம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்ததன்
மூலம், ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்யவும்,
முடக்கவும் – கூடுதலாக புதிய அதிகாரங்களைப்
பெற்றிருக்கிறது.

பினாமி சொத்து என்று கண்டறியப்படும் எந்த சொத்தையும்,
சிம்பிளாக ஒரு நோட்டீஸ் கொடுத்து விட்டு, மத்திய அரசு
முடக்கி விட முடியும். அதன் பின் அது நேர்மையான
முறையில் வாங்கப்பட்ட சொத்து தான் என்று நிரூபிப்பது
சொத்துக்களின் சொந்தக்காரர்களின் பொறுப்பாகி விடுகிறது.

இந்த புதிய விதிகளை சரியாக, தீவிரமாக செயல்படுத்தினால்
நாட்டிலுள்ள பினாமி சொத்துக்களில் பெரும்பாலானவற்றை
சுலபமாக மத்தியஅரசு வெளிக்கொண்டு வந்து விட முடியும்.

இந்த புதிய சட்ட விதிகளை பயன்படுத்தி மத்திய அரசு
எடுத்த இந்த முதல் பெரிய நடவடிக்கையை நாம் முழு
மனதுடன் வரவேற்கிறோம்.

நாடு முழுவதும், பல மாநிலங்களில் அரசியல்வாதிகளும்,
திரைப்பட துறையினரும், பெரும் வர்த்தகர்களும், பெரிய
பெரிய தொழில் அதிபர்களும், புகழ்பெற்ற வக்கீல்களும்,
தாங்கள் ஈட்டிய கருப்புப்பணத்தில், எக்கச்சக்கமான
சொத்துக்களை இம்மாதிரி பினாமி பெயர்களில் வாங்கி
குவித்துள்ளனர்.

அகில இந்திய அளவில் நம்மால் உடனடியாக அடையாளம்
சொல்ல முடியவில்லை என்றாலும் குறைந்த பட்சம்
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் உங்களைப்போல்,
என்னைப்போல் – சாதாரண மக்களில் பலரும் இத்தகைய
நபர்களில் பெரும்பாலானவரை நன்கு அறிவர்.

15-20 ஆண்டுகளுக்கு முன்னர் மிகச்சாதாரண நிலையிலிருந்த
பலர் இன்று கோடீஸ்வரர்களாக நம் கண்ணெதிரேயே உலா
வருவதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

கப்பல் மந்திரியாக இருந்தவர், இன்று பல கப்பல்களுக்கும்
சாராய தொழிற்சாலைகளுக்கும் சொந்தக்காரராக
இருப்பதையும்,
வர்த்தக துறை அமைச்சராக இருந்தவர் சொந்தமாக மருத்துவ
கல்லூரியையும், சாராய தொழிற்சாலையும்
வைத்திருப்பதையும்,
வெறும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக இருந்தவர் இன்று பல
எஞ்ஜினீரிங் மற்றும் மருத்துவ கல்லூரிகளையும் –
தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகத்தையும், பல தொலைக்காட்சி சேனல்களையும் கூட வைத்திருப்பதையும்,
அரசியல்வாதிகளுக்கு குறிசொல்லி வந்தவர் இன்று மிகப்பெரிய ஆன்மிகவாதியாகவும், டஜன் கணக்கில் கல்விநிலையங்களுக்கும், மருத்துவ, எஞ்ஜினீரிங் கல்லூரிகளுக்கும் சொந்தக்காரராக இருப்பதையும்,
20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆடுமேய்த்துக் கொண்டிருந்ததாக
சொல்லப்படுபவர் இன்று 1500 கிலோ சொக்கத்தங்கத்தில்
கோயில் கட்டியிருப்பதையும்,
பிறந்ததிலிருந்தே எந்த தொழிலும் செய்தறியாத –
மகன்களும், மகளும், தந்தை அரசியல் தலைவராக,
முதல்வராக இருந்தார் என்கிற ஒரே தகுதியில்,
கோடிக்கணக்கில் பணம், சொத்துக்கள் வைத்திருப்பதையும்,
நாம் கண்ணெதிரே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

இதைப்படிக்கும்போதே, இங்கு யார் யார்
குறிப்பிடப்படுகிறார்கள் என்று உங்களால் அறிய முடிந்தால்,
கருப்பு பணக்காரர்களை நீங்களும் நன்கு உணர்கிறீர்கள்
என்றே பொருள். இவர்களில், எத்தனை பேர் நேர்மையாக,
ஒழுங்கான முறையில் சம்பாதித்து, கணக்கு காட்டி
இருப்பார்கள்…? இவர்களில் பினாமி சொத்து இல்லாதவர்
யாராவது உண்டா…?

இது வெறும் சாம்பிள் தான். இதைப்போல் நூற்றுக்கணக்கான
பினாமிகளை தமிழகத்திலேயே அடையாளம் காண முடியும்
என்றால், அகில இந்தியாவிலும் எத்தனை பேர் இருப்பார்கள்….?

கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தக்காரர்களாக
இருக்கும் இவர்களது, மனைவி, மகன், மகள், உறவினர்கள்
எல்லாரும் அவர்கள் சொந்தம் கொண்டாடும் சொத்துக்கள்
உண்மையில் அவர்கள் சம்பாதித்து வாங்கிய
சொத்துக்களா..?

சாதாரண மக்களாகிய நமக்கு தெரிய வரும் இந்த தகவல்கள்,
வருமான வரி இலாகாவிற்கும், அமலாக்கப் பிரிவிற்கும்,
அவற்றை இயக்கும் மத்திய அரசுக்கும் தெரியாமலா இருக்கும்..?

லாலு குடும்பத்தோடு இந்த நடவடிக்கைகள் நின்று விடாமல்,
லாலு குடும்பத்தை ஒரு துவக்கமாக வைத்துக்கொண்டு,
இன்று நாட்டில் இருக்கும் அத்தனை பினாமி சொத்துக்களையும் கைப்பற்ற மத்திய அரசு மிக வேகமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நமக்கு தெரிய வருவனவற்றில், வெறும் பத்து சதவீத
பினாமி சொத்தை மத்திய அரசு கைப்பற்றினால் கூட போதும்,
மோடிஜி – அடுத்த தேர்தலில் மட்டுமல்ல – இன்னும் பல
தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி வாகை சூடலாம்…

குறைந்த பட்சம் அதை மனதில் வைத்துக்கொண்டாவது
மோடிஜி அரசு செயல்படுமா…?

அல்லாமல், இது லாலு மற்றும் சில எதிர்க்கட்சித்தலைவர்களை மட்டும் வெளிச்சப்படுத்தி காட்டுவதாக அமையுமானால், மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை மக்கள் வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பது தவிர்க்க முடியாததாகி விடும்.

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to திரு.லாலு குடும்ப சொத்து பறிமுதல் – மத்திய அரசின் வரவேற்கத்தக்க நடவடிக்கை ….

 1. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  அப்பாடா!
  கடந்த மூன்று வருடங்களில்
  இப்போதுதான் முதன்முறையாக மத்திய அரசை வரவேற்றுள்ளீர்கள்.
  வாழ்க வளமுடன்

 2. சிவம் சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  உங்களது மிகச்சிறந்த எழுத்துக்களில் இதுவும் ஒன்று.
  வரவேற்க வேண்டியதை வரவேற்றும், எச்சரிக்க வேண்டியதை எச்சரித்தும், மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள். இத்தகைய கட்டுரைகள் இன்னமும்
  அதிகமான வாசகர்களை சென்றடைய வேண்டும். நீங்கள்
  அதிக சர்குலேஷன் இருக்கக்கூடிய வார இதழ்களிலும் எழுத முயற்சியுங்களேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.