துக்ளக் ஆசிரியர் சோ -“பாரதிக்குப் பிறகு கண்ணதாசன் தான்”


நேற்றைய தினம் கவிஞர் கண்ணதாசன் அவர்களின்
பிறந்த நாளையொட்டி, ஒரு சிறு இடுகை எழுதியிருந்தேன்.

– ஞாபகசக்தி குறைந்து கொண்டே வருகிறது….!!!

முன்பொரு தடவை கண்ணதாசன் அவர்கள் குறித்து,
இதே தளத்தில் நான் எழுதியிருந்த இடுகை என் நினைவில்
சுத்தமாக இல்லை.

ஆனால் இரவு wordpress -dash board – ஐ பார்த்தபோது,
சில நண்பர்கள் அந்த கட்டுரையை எடுத்து பார்த்திருப்பது
தெரிய வந்தது. அவர்கள் எப்படி நினைவு வைத்துக்கொண்டு
எடுத்து பார்த்தார்களோ தெரியவில்லை…..!

நான்கு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட அந்த
இடுகையை இப்போது படித்துப் பார்த்தபோது சுவாரஸ்யமாக
இருந்தது. விமரிசனம் தளத்திற்கு புதிது புதிதாக நிறைய
வாசக நண்பர்கள் வந்துகொண்டே இருப்பதால், அவர்களும்
அவசியம் இதை படிக்க வேண்டும் என்று தோன்றியது.
எனவே, அந்த இடுகையை மீண்டும் கீழே பதிப்பிக்கிறேன்.

——————————————————————-

துக்ளக் ஆசிரியர் சோ
-“பாரதிக்குப் பிறகு 
கண்ணதாசன் தான்”

kannadasan -1

எனக்கு புரட்சிக்கவி பாரதியை ரொம்பப் பிடிக்கும்.
அதே போல் தான் கவிஞர் கண்ணதாசனையும்…!

அந்தக் காலத்தில், மகாகவி சுப்ரமணிய பாரதியுடன்
“சுதேசமித்திரன்” நாளிதழ் அலுவலகத்தில்,
ஒன்றாக ஒரே அறையில் ,அமர்ந்து பணிபுரியக்கூடிய
வாய்ப்பு என் தந்தைக்கு கிடைத்திருந்தது.

(அப்போதெல்லாம், சுதந்திரப் போராட்டத்தில்
ஈடுபட்டிருந்தவர்களுக்கு ‘சுதேசமித்திரன்’ ஒரு புகலிடமாக
இருந்தது !)

என் சிறு வயதில்,பாரதியாரைப் பற்றி என் தந்தை கூறும்போதெல்லாம் எனக்கு பிரமிப்பாகவே இருக்கும். இளைஞனான பிறகு,
முழு ஈடுபாட்டுடன் பாரதியின் எழுத்துக்களை
எல்லாம் படித்தபோது மேலும் மேலும் அவர் மீதான
பிரமிப்பு அதிகரித்தது.

அதே போல், தொலைவில் இருந்து பார்த்த நமக்கு
கவிஞர் கண்ணதாசன் ஒரு பிரமிப்பாக இருந்ததில் ஒரு
ஆச்சரியமுமில்லை.

ஆனால் அவருடன் மிகவும் நெருங்கிப் பழகும்
வாய்ப்பைப் பெற்ற துக்ளக் ஆசிரியர் சோவும் அதே பிரமிப்புடன் இருப்பது கண்ணதாசனை விரும்பும் உள்ளங்களுக்கு மிகவும் மகிழ்வைக் கொடுக்கும்.

அண்மையில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள்
ஒரு பேட்டியில் கவிஞர் கண்ணதாசனுடனான
தன் நினைவுகளைப் பரிமாறிக்கொள்ளும்போது,
“பாரதியாருக்குப் பிறகு சிறந்த கவிஞர் கண்ணதாசன்
தான்” என்று கூறுகிறார்.

மிகவும் சுவையான பேட்டி என்பதாலும், நிறைய பேர்
இதைப்படித்திருக்கக்கூடிய வாய்ப்பு இல்லை
என்பதாலும்,
நண்பர்கள் ரசிக்க – ஆசிரியர் சோவின்
பேட்டியிலிருந்து சில பகுதிகளை கீழே தந்திருக்கிறேன்

—————————-

கவிஞருடன் நெருங்கிப் பழகுகிற வாய்ப்பு
எனக்கு சினிமாவாலும், துக்ளக்கினாலும் கிடைத்தது.

சினிமாவில் சீக்கிரமாகவே அவர் நெருக்கமாகி
விட்டார்.

நான் சந்தித்த மனிதர்களில் கண்ணதாசன் ஒரு
மேதாவி.

அவர் கடும் முயற்சி செய்து கவிதைகளை
எல்லாம் எழுதினார் என்று நான் சொல்ல மாட்டேன்.
எந்த முயற்சியும் எடுக்காமல் கவிதை அவருக்கு
மிக இயல்பாகவே வந்தது.

பாடல் எழுத வந்து உட்கார்ந்தாரென்றால் –
பாடல் வரிகள் அருவி மாதிரி கொட்டும்.
எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இல்லாமல்,
மனதில் தோன்றியதை, அற்புதமான மொழி
நடையில்
எழுதக்கூடிய கவிஞர் அவர்.

சில சமயம் எரிமலை மாதிரி இருக்கும்.
சில சமயம் புயல் மாதிரி இருக்கும்.
சில சமயம் தென்றலைப்போல இருக்கும்.
அத்தனை பல்லவிகளும் சரளமாக வந்து விழும்.
அது அவருக்கு கிடைத்த வரம் !

எதையும் மிகவும் ‘லைட்’டாக எடுத்துக்
கொள்ளும் இயல்பு அவருடையது.

இந்திரா காந்தி ஆட்சியின்போது
சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகளை சீனியாரிட்டி எல்லாம் பார்க்காமல் தனக்கு வேண்டியவர் என்பதற்காக ஒருவரைத் தலைமைப் பொறுப்பில் நியமித்தார்கள்.
அதைப்பற்றி விமர்சித்து நான்
எழுதிக்கொண்டிருந்தேன்.

“நீங்க எழுதற கருத்துக்களை எல்லாம் படிச்சுக்கிட்டிருக்கேன்.
எனக்கு அதில் மாற்றுக் கருத்து இருக்கு. அதை உங்க
பத்திரிகையிலேயே எழுதலாமா?”

என்று கேட்டார் கண்ணதாசன்.

“சார், இது சட்டம் சம்பந்தப்பட்ட விஷயமாச்சே?”

“அதைப்பற்றி உங்களுக்கென்ன? நான் எழுதறேன்.”

சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகள் நியமனத்தில்
தலையீடு இருப்பதை நியாயப்படுத்தி அவர்
எழுதினார் பாருங்கள்.
அவ்வளவு அருமையான கட்டுரை.
சுப்ரீம் கோர்ட்டில் பிராக்டீஸ் பண்ணுகிற
வழக்கறிஞர்கள் கூட அந்த மாதிரி திறமையாக
தன்னுடைய வாதத்தை எடுத்து வைத்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அருமையாக எழுதி இருந்தார் கவிஞர்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் இந்திரா காங்கிரசில்
இருந்து கவிஞர் விலகிய நேரம்.

“ஏன் சார் மாறினீங்க?” அவரிடம் கேட்டேன்.
“அதை விளக்கி உனக்கு ஒரு கட்டுரை அனுப்பறேன்” என்றவர் உடனே எழுதி அனுப்பி வைத்தார்.

அந்த கட்டுரை இப்படித் துவங்கி இருக்கும் –
“காலி மைதானங்களிடம் பேசிப் பேசி
எனக்கு அலுத்து விட்டது”

காங்கிரஸ் கூட்டம் போட்டால், கூட்டமே வருவதில்லை.
இதில் போய்ப்பேசி என்ன பிரயோஜனம் ?
என்று நினைத்து அதை வெளிப்படையாகப் பேசவும்,
எழுதவும் செய்தார். மற்றவர்களைப் போல்
‘கொள்கையில் வித்தியாசம்’ என்றெல்லாம்
போலித்தனமாகப் பேசத் தெரியாதவர்.

கவிஞர் நடத்தி வந்த பத்திரிகையில் ஒரு முறை
என்னைப்பற்றி ‘கன்னாபின்னா’வென்று ஒரு
கட்டுரை
வெளியிடப்பட்டிருந்தது. அதைப்பார்த்து
விட்டு அவருக்கு நான் போன் பண்ணினேன்.

“என்ன சார்.. இப்படி எழுதியிருக்கீங்க. என்னை
‘கிரிட்டிசைஸ்’ பண்ணுங்க. ஆனால் அதில் ஒரு

நாகரிகம் இருக்க வேண்டாமா?”

அவர் வேறு எதையும் பேசவில்லை.
“நாளைக்குப் பாருங்க..பத்திரிகையை.. “ என்று
சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார்.

மறுநாள் அதே பத்திரிகையில்’அந்தக் கட்டுரையை
எழுதியது ஒரு பைத்தியக்காரன்’ என்று
தன்னைத்தானே மட்டம்தட்டி ஒரு செய்தியையும்
மறுநாளே அவரால்

வெளியிட முடிந்தது.

அதை எழுதிவிட்டு “பார்த்தீங்களா.. இப்போ என்ன
சொல்றீங்க?” என்று அவரே போன் பண்ணினார்.

எதையும் லைட்டாக எடுத்துக் கொள்கிற சுபாவம்
அவருக்கு இருப்பதை திரும்பவும் அப்போது
நான் உணர்ந்தேன்.

இவரும், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனும்
சேர்ந்து தமிழ் சினிமாவுக்கு செய்திருக்கிற பணி
அசாத்தியமானது.
தன்னைத் தானே பாராட்டிப்
பெருமை பேசுகிற வழக்கம் அவரிடம் இல்லை.

காலாகாலத்திற்கு நிலைத்து நிற்கிற மாதிரியான
காவியம் ஒன்றைப் படைக்க வேண்டும் என்கிற எண்ணம்
அவருக்கு இருந்தது. ஆனால் அவரால் அதை நிறைவேற்ற
முடியவில்லை.

தான் சில கட்சிகளுக்குப் போய் வந்ததைப்பற்றி
ஒருசமயம் இப்படிச் சொன்னார்.
“நான் சில கட்சிகளுக்கு மாறியதைச் சிலர்
விமர்சனம் பண்ணி இருக்காங்க.
நான் மாறத்தான் செய்வேன்.
மாறாமல் இருக்க நான் என்ன மரமா ? மட்டையா ?”

ஒரு தடவை ஒரு பத்திரிக்கையில் என்னைப் புகழ்ந்து
பேசி இருந்தார். என்னைப்பற்றி அவர் எழுதியதை
ஒருமுறை படித்து விட்டு அவருக்கு ஒரு பேப்பரில்
எழுதி அனுப்பி இருந்தேன்.

“வீடு வரை விஸ்கி.
வீதி வரை பஞ்சு (அருணாசலம்)
காடு வரை கவிதை
கடைசி வரை ‘சோ'” –

என்று எழுதி அனுப்பியிருந்தேன்.
அப்போதைக்கு அதைப்படித்து விட்டு”என்னைக் காப்பி
அடிச்சு நல்லா எழுதியிருக்கீங்க” என்று ஜாலியாகச்
சொன்னார்.

ஆனால் – அவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு
ஆனந்த விகடனில் கவிஞருடைய வாரிசு ஒருவர் –


“கவிஞர் இதைப் பாதுகாத்து வைச்சிருந்தார்”
என்று சொல்லி நான் எழுதிய இந்த வரிகளை
வெளியிட்டிருந்தார்கள்.

மனசில் வெகுளித்தனம் நிறைந்த கவிஞர் எழுதிய
“அர்த்தமுள்ள இந்துமதத்”தைப் படித்து பிரமித்திருக்கிறேன்.

குழந்தைத்தனமான மனம், அற்புதமான படைப்பாற்றல்
– இரண்டும் இணைந்த அற்புதமான மனிதர் கண்ணதாசன்.
தன்னைப்பற்றியே வெளிப்படையாக எழுதிய மனிதர் அவர்.

இப்படி பல விஷயங்களில் மிகவும் வெளிப்படைத்
தன்மையுடன் இருந்ததால், அரசியலில் அவர்
முக்கியமான இடத்தைப்பெற முடியவில்லை.
தனிப்பட்ட முறையிலும் சரி –
பொதுக்கூட்டத்திலும் சரி – தான் நினைத்ததைப்
பேசக்கூடியவராக இருந்ததால் எந்தக் கட்சியிலும்
அவரால் நிலைத்து இருக்க முடியவில்லை.

பாரதிக்குப் பிறகு சிறந்த கவிஞர் கண்ணதாசன் தான்.

கல்லூரிப் படிப்பு, புலவர் படிப்பு எதுவும் இல்லாமல்
தமிழில் அவர் அளவுக்கு சொல்வளத்துடன்,
எளிமையாகவும், வேகத்துடனும் இயங்கிய
வேறு ஒரு கவிஞரைப் பார்க்க முடியாது.

————————————————

பின்குறிப்பு – இவ்வளவு தூரம் வந்து விட்டு
ஒரு பாட்டு கேட்காமல் போனால் எப்படி ?

எனக்குப் பிடித்த ஒரு பாரதி பாட்டும் –
இரண்டு கண்ணதாசன் பாடல்களும்…

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to துக்ளக் ஆசிரியர் சோ -“பாரதிக்குப் பிறகு கண்ணதாசன் தான்”

 1. தமிழன் சொல்கிறார்:

  கண்ணதாசன் அவர்களைப் பற்றி நிறைய எழுதலாம். அவர் எல்லோராலும் விரும்பப்பட்டவர். அவரே எழுதியிருந்தபடி அவர் யோக்க்கார்ர். பணம் வந்துகொண்டே இருந்தது, போய்க்கொண்டும் இருந்தது. தெய்வானுக்கிரகம் பெற்றவர். பரமாச்சாரியார் சொன்னபடி பக்தியும் கடவுளுக்கென்று பக்தியோடு கோவில்கள் கட்டிய பரம்பரையில் பிறந்தவர். தங்கத்தட்டு சகதியில் புரண்டபோதும் காலம் அவரைதல் துலக்கி ஒளிரச்செய்தது. குழந்தையுள்ளம் கொண்டவர். நேரமில்லாத்தால் ஒரு நிகழ்ச்சிமாத்திரம் சொல்கிறேன்.

  டிஎம்எஸ் தான் அந்தக்காட்சியில் நடிக்கவேண்டும் என்று திட்டமிட்டு அருமையாகப் பாடியது, “பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்யமா”. இது கவிஞர் எழுதியது. விசுவிடம் அப்போது உள்ள சூழல் காரணமாக, நானே படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லி படத்தில் அவரே பாடுவதைப்போல் நடித்தார் கண்ணதாசன் அவர்கள். அவரையும் பாடலையும் காலமெல்லாம் நினைவுகொள்ளத்தக்க பாடல்.

 2. shiva சொல்கிறார்:

  “பாவமன்னிப்பு” படத்தில் “நடிகர் திலகம்” சிவாஜி கணேசன் அவர்கள் முதன்முதலாக
  படத்தில் தோன்றும் காட்சியில் ஒரு அற்புதமான பாடலை வைத்தால் நன்றாக இருக்கும்
  என்று விரும்பினார் படத்தின் இயக்குனர் ஏ.பீம்சிங்.

  “மெல்லிசை மன்னர்கள்”
  விஸ்வநாதன் – ராமமூர்த்தி, “கவியரசு” கண்ணதாசன் ஆகியோரோடு அந்த அற்புதமான
  சூழ்நிலைக்கு அமர்ந்தார்கள்.

  படத்தின் கதைப்படி சிவாஜி கணேசன் அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும், பிறப்பால் ஒரு இந்து வீட்டில் எம்.ஆர். ராதாவுக்கு மகனாக பிறந்திருப்பார்.

  அதன்படி, அந்த
  நுட்பத்தை வெளிப்படுத்தும் விதமாக பாட்டு அமைய வேண்டும் என்று விரும்பி
  இயக்குனர் ஏ.பீம்சிங் இதை கண்ணதாசன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி அவர்களிடம்
  தெரிவித்தார்.

  வழக்கம்போல், “மெல்லிசை மன்னர்கள்” மெட்டமைக்க, கண்ணதாசன் பாட்டு
  எழுதிக் கொடுத்தார்.

  பாடலை படித்துப் பார்த்த ஏ.பீம்சிங்கிற்கும், விஸ்வநாதனுக்கும் முதலில் ஒன்றும்
  விளங்கவில்லை. “இதில் என்ன புதுமை இருக்கிறது, நுட்பம் உள்ளது” என
  குழம்பினார்கள்.

  திரும்ப, திரும்ப படித்துப் பார்த்துவிட்டு கண்ணதாசனிடம்
  தயங்கிக் கேட்டார்கள்.

  கண்ணதாசன் வழக்கமான தன்னுடைய குழந்தைப் புன்னகையை உதிர்த்துக் கொண்டே “பாடலைப் படித்துக் காட்டுங்கள்” என்றார்.

  எம்.எஸ்.வி. உடனே,” எல்லோரும் கொண்டாடுவோம்… எல்லோரும்
  கொண்டாடுவோம். அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும்
  கொண்டாடுவோம்” என்று மெட்டில் பாடினார்.

  கண்ணதாசன், “இன்னுமா புரியலை, பிறப்பால்
  இந்துவாக பிறந்து வாலிப வயதை எட்டிப் பிடித்தவன் ஒரு முஸ்லீமாக
  வளர்ந்திருந்தாலும், அவனை அறியாமல் இந்து மத தத்துவமான “ஓம்” என்ற நாத மந்திரம் அவன் வாயினில் இருந்து வருவதுபோல் பாடலை அமைத்துள்ளேன்.

  இப்பொழுது பாருங்கள்” என்று பாடிக் காட்டினார்.

  எல்லோரும் கொண்டாடு ” ஓம் ”

  எல்லோரும் கொண்டாடு “ஓம் ”

  அல்லாவின் பெயரைச் சொல்லி

  நல்லோர்கள் வாழ்வை எண்ணி

  எல்லோரும் கொண்டாடு “ஓம் ”

  வருவதை வரவில் வைப்போ ” ஓம் ”

  செய்வதை செலவில் வைப்போ “ஓம் ”

  முதலுக்கு அன்னை என்போ ” ஓம் ”

  முடிவுக்கு தந்தை என்போ ” ஓம் ”

  மண்ணிலே விண்ணை கண்டு

  இன்பம் காணு ” ஓம் ”

  எடுத்தவன் கொடுக்க வைப் “ஓம் ”

  கொடுத்தவன் எடுக்க. வைப் ” ஓம் ”

  இன்று போல் என்றும் இங்கே

  ஒன்றாய் கூடு ” ஓம் ”

  என்று
  முடித்ததுமே, “மெல்லிசை மன்னர்” அவரைக் கட்டிப்பிடித்து “கவிஞரே… இந்த உலகத்தில் உம்மை
  ஜெயிக்க யாரய்யா இருக்கிறார்” என்று உச்சி முகர்ந்தார்..

  கூடவே இயக்குனர்
  ஏ.பீம்சிங்கும் தமக்கு வேண்டியது கிடைத்து விட்டது என்று சந்தோஷக் கடலில்
  ஆழ்ந்தார்.

  அதே போல இந்தப் பாடல் முழுக்க
  ” ஓம் ” என வார்த்தை விளையாட்டு தொடர்ந்து நிகழ்ந்து நம்மை திக்கு
  முக்காட வைக்கும்.
  அந்தப் பாடல்.

  தி கிரேட் கண்ணதாசன்!⁠⁠⁠⁠

  • தமிழன் சொல்கிறார்:

   ‘நன்றி சிவா. இதுவரை படித்ததில்லை இந்த நிகழ்ச்சியை.

   கண்ணதாசனின் சிறப்பு, முழுப் பாட்டையும் வரிக்கு வரி அப்போதே சொல்லுவார், பஞ்சு அவர்கள் எழுதுவார் (இசையமைப்பாளர் முன்பு). கடைசி வரிக்கும் முதல் வரிக்கும் நல்ல தொடர்பு இருக்கும். அவர் ‘வர கவி’. நல்ல மனிதன். தன் நல்லது கெட்டதுகளை அப்படியே பகிர்ந்துகொண்டவர் (‘நெஞ்சுக்கு நீதி என்று புளுகுமூட்டைகளை அவிழ்க்காமல்). அவரது வனவாசம், மனவாசம், அவரது சிறப்புகளைக் கூறும்.

   அவருடைய மாண்பு, பிறர் நல்ல வரிகளை எழுதினால் பாராட்டுவது. வாலியை நிறைய தடவை பாராட்டியிருக்கிறார். கண்ணதாசனே, சில பாடல்களை தான் எழுதியிருக்கிறோமா என்று சந்தேகப்படும்படி சில வாலி பாடல்கள் இருக்கின்றன என்று சொல்லியிருக்கிறார். கண்ணதாசனின் நேசனான எம்.எஸ்.வி வாலிக்கும் நிறைய சந்தர்ப்பங்கள் கொடுத்திருக்கிறார் என்று எண்ணும்போது எம்.எஸ்.வியின் மாண்பு தெரியும்.

   வாலி தனக்கு அணுக்கராக இருந்தும், திமுகவை விட்டு வந்தபின், கண்ணதாசனை மட்டும் நம்பியிருக்காதபடி, திறமையாளரான வாலி தனக்கு அமைந்து நிறைய பாடல்களைப் புனைந்து தன் இமேஜுக்கு கூடுதல் பலம் சேர்த்தபோதும், தான் முதலமைச்சராக ஆனவுடன், அரசுக்கவி என்ற பதவியை எம்ஜியார் அவர்கள், கண்ணதாசனுக்கே வழங்கினார். ‘தன் வாயால் பலரைச் சாட்டிப் பேசியபோதும்’ கண்ணதாசனது குழந்தை மனதையும், சரஸ்வதி கடாட்சம் நிரம்பப்பெற்றவர் என்பதையும் எல்லோரும் அறிந்திருந்தனர்.

   அவருடைய இயேசு காவியம் (அவர் கடைசியாக எழுதியது), கண்ணதாசனின் எழுத்துவன்மையைச் சொல்லும் (அது, பொங்குமாங்கடல் புகுந்தளவெடுக்கப் போயினன் வெற்றி பெற்றேனா’ என்று தொடங்கும். இதனை அவர் எழுதுமாறு செய்தவர்கள் திருச்சி கலைக்காவிரி குழுவினர்.

 3. Pingback: துக்ளக் ஆசிரியர் சோ -“பாரதிக்குப் பிறகு கண்ணதாசன் தான்” — வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் – தமி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.