கொஞ்சம் தேடல் – கொஞ்சம் ஞானம் ….( 3 )

(முந்திய பகுதிக்கு செல்ல…. )

இதே தலைப்பிலான இடுகையின் 2-ஆம் பகுதியில்
விவேகானந்தர் விளக்கிய ராஜயோகத்தில் – இயமம், நியமம்,
ஆசனம், பிராணாயாமம் ஆகிய நான்கு முறைகளை பற்றிய
விளக்கங்களை பார்த்தோம். இந்த நான்கு முறைகளை,
எந்த வயதிலும், யாரும் சுலபமாக மேற்கொள்ளலாம்….
அதற்குண்டான நல்ல பலன்களை நிச்சயம் உணரலாம்.

ஆனால், அடுத்து வருகின்ற பிரத்தியாகாரம், தாரணை,
தியானம், சமாதி போன்ற யோக நிலைகள்
வித்தியாசமானவை…

“பிரத்தியாகாரம்” என்பது மந்திர ஜபத்தை குறிக்கிறது.
குருவின் மூலம் “மந்திரோபதேசம்” பெற்று, இடையறாது
தொடர்ந்து அந்த மந்திரத்தை உச்சரிப்பது… அதிலேயே
ஈடுபடுவது. இடையறாது ஒரு மந்திரத்திலேயே மனதை
நிலைநிறுத்தச்செய்து, அலைபாயும் மனதை அடக்குவது.

“தாரணை” என்பது அலைகின்ற மனதை மெல்ல கட்டுக்குள்
கொண்டு வந்த பிறகு எண்ண ஓட்டத்தை ஒரே இடத்தில்
குவித்து உள்ளேயே அடக்குவது. பயிற்சி கைவரப்பெற்றவர்கள், ஒரே இடத்தில் ஆடாது அசையாது அமர்ந்திருந்து 3 மணி நேரம், 4 மணி நேரம் கூட தங்களுக்குள்ளேயே ஆழ்ந்து கிடப்பார்கள். இத்தகைய பயிற்சி கைவரப்பெற்றவர்களுக்கு அற்புதமான அனுபவங்கள் கிட்டும்…

தாரணையை தொடர்ந்து வருவது “தியானம் “.
தாரணை மூலம் மனம் ஒரு புள்ளியில் நிலைத்து
நிற்கும்போது ஏற்படுகிற விகசிப்பே தியானம்.
வருடக்கணக்கில் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது,
ஒரு சமயத்தில் சட்டென்று நான் யார் என்பது புரிகிற
அந்த அனுபவம் கிட்டும். மனம் வேறு, உடல் வேறு –
என்கிற அனுபவம் ஏற்படும். மனம் உடலை விட்டு
வெளியில் நின்று உடலின் இயக்கங்களை உணரக்கூடிய
அனுபவம் கைகூடும். இதற்கு ஆண்டுக்கணக்கில்
பயிற்சி தேவைப்படும்.

இந்த முயற்சியில், எனக்கான தனிப்பட்ட சில அனுபவங்கள்
உண்டு. ஆனால், அவற்றைப்பற்றி இங்கு சொல்லக்கூடிய
மனநிலையிலோ, பக்குவத்திலோ – இப்போது நான் இல்லை.

எட்டாவதாக சொல்லப்படுகிற “சமாதி” – சொல்லில்
அடக்க முடியாத சூட்சுமமான ஒரு நிலை…

“நான்” அற்ற நிலை –
” நான்” என்பதையே மறந்த நிலை…
இந்த நிலையை விளக்குவதற்கான அருகதை எனக்கில்லை
என்பதால், நான் இதற்கு மேல் போகவில்லை.

—————————————

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை சொல்லி விட்டு,
நாம் வேறு பக்கம் போகலாமென்று நினைக்கிறேன்.

சாதாரணமாக, இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள்
நான்காம் நிலையான பிராணாயாமம் வரை பயிற்சி
எடுத்துக் கொண்டு, தினமும் சில நிமிடங்கள் எந்தவித
எண்ணங்களும் இல்லாமல், அமைதியாக அமர்ந்து
சாதாரணமாக சொல்லப்படுகிற meditation-ல் ஈடுபட்டால்
போதுமானது என்பது என் அபிப்பிராயம்.

ஒரு நல்ல மனிதனாக உருவாக, இந்த பயிற்சிகளே
போதுமானவை.

இதற்கு மேலான பயிற்சிகளில், தேடல்களில் –
இல்லற வாழ்விலிருந்து வெளிவந்து விட்டவர்கள் மட்டும் முயன்றால் போதுமானது என்பது என் கருத்து….!

————————————————-

ஒருவருக்கு “ஆன்மிகம்” குறித்த தேடல் எந்த அளவிற்கு
அவசியமோ, அதே அளவிற்கு அல்லது அதைவிட சற்று
கூடுதலாகவே –

” தனக்கும், தன் குடும்பத்திற்கும்,
தான் வாழும் இந்த சமூகத்திற்கும் –
உபயோகமாக, பயனுள்ள வகையில்
நடந்து கொள்வது எப்படி…? ”

என்பது குறித்த புரிதல் ஒவ்வொரு மனிதருக்கும் அவசியம்
என்று நான் கருதுகிறேன்…..

எனவே, இங்கு தேடல் என்கிற தலைப்பில் அடுத்து
நாம் இந்த திசையில் பயணிக்கலாம் என்று நினைக்கிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to கொஞ்சம் தேடல் – கொஞ்சம் ஞானம் ….( 3 )

 1. தமிழன் சொல்கிறார்:

  நல்ல எழுதியிருக்கீங்க கா.மை. சார். ரொம்பவும் விவரிக்காமலும், அதே சமயம் படிகள் புரியும்படியும் எழுதியிருக்கீங்க.

  “இல்லற வாழ்வில் உள்ளவர்கள் ‘சாதாரண தியானத்தில் ஈடுபட்டால் போதுமானது” – இதைப் பற்றி கொஞ்சம் விளக்கமுடியுமா? நான் நினைத்திருப்பது சரியா என்று அறிவதற்காக.

  ஒரு யோகியின் குரு சொல்கிறார். ஒரு எளியவன் வழி கேட்டு நிற்கும்போது அதற்கு உதவ மனமில்லாமல் கோபிப்பது, 500 ஆண்டுகள் செய்த தியானத்தின் பலனைக் குலைத்துவிடும். அப்போ, தான் வாழும் சமூகத்திற்கான சேவையே, சொந்த அனுபவத்திற்காகச் செய்யப்படும் தியானத்தைவிட மேலானதல்லவா? தொடருங்கள், படிக்கக் காத்திருக்கிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   // “இல்லற வாழ்வில் உள்ளவர்கள் ‘சாதாரண தியானத்தில் ஈடுபட்டால் போதுமானது” – இதைப் பற்றி கொஞ்சம் விளக்கமுடியுமா? //

   முதலில் இதைப்பற்றி விவரமாக எழுதத்தான் நினைத்தேன்.
   இருந்தாலும், சில விஷயங்களை சரியாக புரியும்படி
   எழுதாவிட்டால், எதிர்மறையாகி விடும்….என்று நினைத்து
   அப்படியே விட்டு விட்டேன்.

   நீங்கள் கேட்டு விட்டதால், சுருக்கமாக கூற முயல்கிறேன்…

   இளம் வயதிலிருந்தே நான் என்னாலியன்ற சமுதாயப்பணிகளில் ஈடுபட்டிருந்தேன். என் குடும்பத்திலும், சுற்றியுள்ள உறவினர்களிடையேயும், நான் வாழும் சமூகத்திலும் எனக்கான ஆர்வமும், பணியும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

   அறுபது வயதை கடக்கிறபோது, இல்லறம் மற்றும் பொதுவாழ்வு போதும்…இனி முழுவதுமாக ஆன்மிகத்தில் முடுவதுமாக ஈடுபடலாமே என்று தீர்மானித்து, அந்த வழியில் தீவிரமாக என்னை செலுத்திக் கொண்டிருந்தேன். சில அனுபவங்களுக்குப்பிறகு ஒரு நாள் திடீரென்று தோன்றியது…. இதற்கு அடுத்த நிலையை விரைவில் அடைந்து விடுவோம்…. அதற்குப்பிறகு… ?

   அடுத்த நிலை என்ன என்பது எனக்கு தெளிவாகப் புரிந்தது. அங்கு சென்று விட்டால், குடும்பத்தோடு, சமூகத்தோடு, உலகத்தோடு, என் தொடர்புகள் அறுபட்டு விடும். அதன் பிறகு நான் எத்தனை காலம் இருக்கப்போகிறேனோ ….அதே நிலையில் தான் இருப்பேன். என்னால் யாருக்கும் எந்த விதத்திலும் எந்த பயனும் இல்லாமல் போய் விடும் என்று தோன்றியது.

   என்னை நம்பித்தான் குடும்பமோ, என்ன சுற்றியுள்ள உலகமோ இல்லை என்பது உண்மை தான் என்றாலும், அவர்கள் என்னை விட்டுப்பிரிய தயாரில்லை. நான் இருப்பது பல விஷயங்களிலும், அவர்களுக்கு உதவியாக இருக்கிறது.

   மற்றவர்களுக்கு இன்னமும் என் தேவை இருக்கும்போது பலவந்தமாக என்னை அவர்களிடமிருந்து கத்தரித்துக் கொண்டு போவது ஒரு விதத்தில் எனக்கு சுயநலமாக பட்டது. நிறைய யோசித்தேன்…

   சுற்றியுள்ளவர்கள் அனைவரையும் ஏமாற்றமும் வருத்தமும்
   அடையச்செய்து, நான் ஆன்மிகத்தில் உயர்வடைந்து என்ன
   சாதிக்கப் போகிறேன்..? மற்றவர்களை ஆனந்தமடையச் செய்து அதன் மூலம் கிடைக்கும் சந்தோஷத்தை விட சொந்த ஆன்மிக உயர்வு சிறப்பானதா…? என்று தோன்றியது….

   சில நாட்கள் அமைதியாக இருந்தேன். என் பழக்கங்களை மாற்றிக்கொண்டேன். மீண்டும் கீழே இறங்கி வந்து விட்டேன்.

   இப்போது, எனக்கான தேவைகள் மிக மிகக்குறைவு.
   இருக்க இடமும், சாப்பாட்டுக்கு பென்ஷனும் இருக்கிறது.
   என்னால் இயன்ற வரை என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு உடலால், உள்ளத்தால் – உதவியாக, உபயோகமாக,
   ஆறுதலாக இருக்க முயல்கிறேன்…. அது அவர்களுக்கும்,
   கூடவே எனக்கும் மன நிறைவை கொடுக்கிறது.

   “இல்லறத்தில் இருப்பவர்கள், ஆன்மிக விஷயங்களில்
   ஓரளவிற்கு மேல் நாட்டம் கொள்வது அவசியம் இல்லை.
   மனிதர்க்கு செய்யும் சேவையே, இறைக்கு செய்யும் சேவை ”
   என்பது அனுபவம் எனக்கு உணர்த்திய பாடம்…

   மற்றவர்கள் இதிலிருந்து மாறுபடக்கூடும். வாழ்க்கை
   அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி அல்லவா…?

   இது குறித்து உங்கள் கருத்தையும் தெரிந்து கொள்வதில்
   ஆர்வமாக இருக்கிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • தமிழன் சொல்கிறார்:

    “இல்லறத்தில் இருப்பவர்கள், ஆன்மிக விஷயங்களில்
    ஓரளவிற்கு மேல் நாட்டம் கொள்வது அவசியம் இல்லை.” – இதைப் புரிந்துகொள்வதற்காகத்தான் கேட்டேன்.

    சாதாரண தியானம் (ஒரு நாளைக்கு உட்கார முடிந்தால் 1 மணி நேரம் ஒரே சமயத்தில்) வரை ஓகே. அதற்கு மேல் என்றால், நம் கடமைகள் முடியவேண்டும். (குழந்தைகள் வேலை, திருமணம்).

    இவைகள் முடிந்துவிட்டால், நிச்சயம் பந்தத்திலிருந்து கொஞ்சம் விலகவேண்டிய தருணம் என்றுதான் எனக்குப் படுகிறது. கடமை, வேலை என்பதற்கு ஒரு அளவு, எல்லை வாழ்க்கையில் கிடையாது. நம் முதல் கடமை, குழந்தைகள் வேலைக்குச் செல்லவேண்டும், அவர்கள் திருமணம். அத்துடன் நம் எல்லை முடியவேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். (அதுக்கு அப்புறம், ஒரு குழந்தை பிறந்துடட்டும், அதுக்கு அன்னப்ராசனம் முடியட்டும் என்று நீட்டினால் அதற்கு வரையறை இல்லை).

    நாம் என்பது நம் ஆன்மா. அது, இந்த உலக சந்ததிப் பெருக்கம் என்ற பெரிய செயலை உத்தேசித்து இன்னொரு ஆன்மாவைச் சந்தித்து சந்ததிகளைப் பெருக்குகிறது, அவர்கள் ஒரு நிலைக்கு வர உழைக்கிறது. அதற்குமேல் அது தன்னைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

    இது இரண்டு வகையால் நடக்கலாம். ஒன்று, சமூகத்துக்கு உதவும் வகையில் நம் கவனத்தை முழுமையாகத் திருப்புவது ( நம் குடும்பம் என்ற பந்தத்திலிருந்து நம் நோக்கம் 70%க்கு மேல் சமூகத்தின்பால் திருப்புவது). இரண்டாவது, ஆன்மீகப் பாதையில் முன்னேறுவது. இரண்டும் PARALLEL ACTIVITIES. இதைப் பொதுவா (ரெண்டையும்) குடும்பம் ஆதரிக்காது. காரணம் என்னன்னா, இது வேறு வழி, இதுனால குடும்பத்தைவிட்டு கணவர் விலகிவிடுவார், It is not normal என்பதுபோன்ற கவலை/பயம். அதனால் அவர்கள் இதற்கு முட்டுக்கட்டை போடுவார்கள். நாமும், சரி.. எதற்கு அவர்களது எதிர்ப்பைமீறி போவது என்று தோன்றிவிடும் ( நம்முடைய குடும்ப, உறுப்பினர்களின்மீது உள்ள பந்தம் ஆகியவற்றால்). நம் குடும்பத்திலேயே கவனம் வைத்துக்கொள்வது, நம் உலக வாழ்க்கை என்னும் வாய்ப்பைப் பயன்படுத்துவது, அணுகுண்டு தயாரிக்கும் மூளையுள்ள விஞ்ஞானியை, தீபாவளி பட்டாஸ் செய்ய உபயோகப்படுத்துவதுபோல.

    இதுல ஒன்று பகிர்ந்துக்கலாம் என்று நினைக்கிறேன் (இது ஒருவரின் நம்பிக்கையின்பாற் பட்டது. Means, others may have different opinion according to what they have learnt or how they were brought up). எனக்குச் சொன்னது, எனக்கு அனுபவம் கிடையாது. (அதைப் பற்றி கீழே சொல்லியிருக்கிறேன்.. அடுத்த நிலை…. பகுதி)

    தியானத்தின் பாதை நெடிய பாதை. அது தன் நலம் மட்டும் சார்ந்ததல்ல. அந்தப் பாதையில் ஒரு அளவுதான் ஒருவன் அவன் வாழ்’நாளில் போகமுடியும். அதன் தொடர்ச்சி அவனுக்கு அடுத்த பிறவியில் அமையும். இந்தப் பாதையில் போகலாம் என்ற மனதே எல்லோருக்கும் வராது. 30 நிமிடங்கள், ‘தியானம்’ என்ற பெயரிலாவது ஒருவன் உட்காருவதே அவனுக்கு இந்தப் பாதையில் போகும் வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான அடையாளம். இதை ஆரம்பித்தால்தான், அது தொடர்ச்சியாக பல பிறவிகளில் நம்மை அடுத்த அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும். ஆனால் தியானம் நமக்கு உடனே கைவரப் பெறாது. 50 ஆண்டுகள் முயற்சி செய்தும் ஒரு பயனும் விளையாமல் போனவர்கள் அனேகம் (வாழ்க்கையை வீணாக்கிவிட்டோமே என்று எண்ணுவார்கள்). ஆனாலும் இந்தப் பாதை நமக்கு வாழ்க்கைபற்றிய தெளிவை உண்டாக்கும்.

    “இதற்கு அடுத்த நிலையை விரைவில் அடைந்து விடுவோம்…. அதற்குப்பிறகு” – தியானத்தின் மூலம் உங்களுக்கு ஒரு அனுபவம் கிட்டியிருந்தால், அது போன பிறவியின் தொடர்ச்சியாகத்தான் இருக்கமுடியும். முதன் முறையாக முதல் பிறவியில் இது கிட்டாது. என் தனிப்பட்ட எண்ணம், அந்தப் பாதையில் நீங்கள் தொடரணும். அது வீட்டிற்கு எந்த கெடுதலும் செய்யாது (அதாவது வீடு, குடும்பம் சம்பந்தமான வேலைகளுக்கு). ஏனென்றால், தினம் 1 மணி நேரம் அல்லது 2 சிட்டிங்ல 2 மணி நேரம்தான் அதற்கு ஒதுக்கினாலே, அது நம்மைத் தொடர்ந்து வரும். நான் ஓரளவு முயன்றும் புருவ மத்தியில் ஒன்றும் காண்கிலேன். எனக்குச் சொல்லப்பட்டது, தொடர்ந்து செல், தொடர்ந்து செல், எதைக்கண்டும் மயங்கி நில்லாதே. ஆனாலும் அதைத் தொடர்ந்து செல்லவில்லை.

    “இறைக்குச் செய்யும் சேவை” – ஆமாம். சக மனிதனின்மீது அன்பு செலுத்தி, அவனுடைய கஷ்டத்தில் கோடியில் ஒரு பங்கு நம்மால் குறைக்க முயன்றால், அது கோவிலுக்குச் சென்று இறையைத் தரிசித்துக் காலம் கழிப்பதைவிடச் சிறந்தது. ஏனென்றால், அடுத்த ஆத்மாவும் இறைதான். இந்த இறையைப் புறக்கணித்து இறையின் சன்னிதியில் போய், நம் சொந்த நலனுக்கு வேண்டுவதை இறைவன் எப்படி விரும்புவார்? (ஆனாலும், சொல்வது சுலபம். சக மனிதனின்மீது அன்புகொள்வது ரொம்பக் கடினம்-எனக்கும்தான் சொல்லிக்கொள்கிறேன்)

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     தமிழன்,

     உங்கள் கருத்து விளக்கத்துக்கு நன்றி. நீங்கள் சொல்வது
     இல்லறத்தில் இருந்துகொண்டே ஆன்மிகத்தில் நாட்டம் கொள்வது. ஆனால் நான் சொல்வது, முழுவதுமாக
     பற்று அறுத்து விட்டு போய் விடுவது…

     ஒரு முக்கியமான தருணத்தில் என் முன்னர் இரண்டு options மட்டுமே இருந்தன…

     ஆன்மிகமா அல்லது பிறர் நலனா…?
     அவசியம் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டத்தில் நான் இருந்தேன்… ஆன்மிகத்தை தொடர்வது
     சுயநலமாகி விடுமோ என்கிற எண்ணம் ஏற்பட்டது ….
     – பிறர் நலன் தான் முக்கியம் என்கிற முடிவிற்கு நான் வந்தேன்…

     என் ஆன்மிக அனுபவங்களைப்பற்றி, இப்போதைக்கு, மேலே சொன்னதற்கு மேல் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை. அதை பகிர்ந்து கொள்வது உசிதமல்ல என்று இப்போதைக்கு தோன்றுகிறது… எதிர்காலத்தில் இந்த எண்ணம் மாறினால், தெரிவிக்கிறேன்.

     —————–

     // சொல்வது சுலபம். சக மனிதனின்மீது அன்புகொள்வது ரொம்பக் கடினம் //

     இது எனக்கு மிகவும்
     இயல்பான,
     இயற்கையான ஒரு விஷயம்….

     துன்பப்படுபவரை பார்க்கும்போதெல்லாம் என் மனம் வருந்துகிறது. அவர் எனக்கு எந்த விதத்திலும் சொந்தம்
     இல்லாவிட்டாலும் கூட…. இவர் கஷ்டத்தை குறைக்க நம்மால் என்ன செய்ய முடியும் என்று உடனே யோசிக்க துவங்கி விடுகிறேன். இது இன்று நேற்றைய பழக்கமல்ல. சிறு வயதிலிருந்தே நான் இப்படித்தான் இருக்கிறேன். இதனால் சில சமயங்களில் துன்பப்பட நேர்ந்த போதும் கூட என் போக்கில் மாற்றம் இல்லை.

     இது அவரவர் வளர்ந்த, வாழ்ந்த பின்னணியை பொறுத்தது
     என்று நினைக்கிறேன். கொடிதிலும் கொடிது “இளமையில்
     வறுமை” என்பார்களே… அது போல், இளமையில் மிக கொடுமையான வறுமையில் வளர்ந்தவன் நான். இதைச்
     சொல்ல எனக்கு எந்தவித வெட்கமும் இல்லை. ஒருவேளை
     அது காரணமாக இருக்கலாம்.

     Anyway – இப்போதைக்கு, நான் வாழும் விதம் குறித்த எந்த மனக் குறையும் எனக்கு இல்லை…. நான் எனக்கும், என்னை
     சுற்றியுள்ளவர்களுக்கும், சமூகத்திற்கும் – பயனுடையவனாக
     இருக்கிறேன் என்றே நம்புகிறேன்…. கடைசி மூச்சு வரை
     இதுபோல் இயங்கிக் கொண்டே இருக்க விரும்புகிறேன்…

     இன்ஷா அல்லா….!!!

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

     • தமிழன் சொல்கிறார்:

      நன்றி கா.மை.சார். உங்கள் பதிலுக்கு.

      ஆன்மாவின் குவாலிட்டியைப் பொறுத்துத்தான் இறை அனுபவம் கிட்டும். உங்களுக்கு இந்தத் தேடலில் வளர்ச்சி இருந்தது என்று சொல்லும்போதே எனக்குப் புரிந்துவிட்டது. உங்கள் இயல்பான சக மனிதர்கள் மீது தோன்றும் அக்கறையைப் பாராட்டுகிறேன், அந்த எண்ணம் உங்களுக்கு இயல்பாக இருக்கிறது என்பதை அறியும்போதே மிகுந்த மதிப்பு எழுகிறது. ஆரோக்கியமாக உங்கள் பயணம் தொடரட்டும்.

      உங்கள் அனுபவத்தையும் (வேலை சம்பந்தமான) ரசித்துப்படித்தேன். தொடர்ந்து அதையும் வாரம் ஒரு இடுகையாவது எழுதுங்கள்.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி தமிழன்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

 2. selvarajan சொல்கிறார்:

  திருமூலர் – திருமந்திரத்தில் – ” மூன்றாம் தந்திரத்தில் ” இது பற்றி விளக்கமாக — விரிவாக பாடல்கள் மூலம் எளிய தமிழில் விளக்கியுள்ளார் … பிராணாயாமம் என்பது மூச்சை இடது – வலது நாசித்துவாரங்கள் வழியாக உள்ளிழுத்து – அடக்கி பின் வெளியிடுவதை — காலக் கணக்கின் மூலம் சிறப்பாக கூறியுள்ளது பயிற்சியை எளிதாக செய்ய வழி வகுக்கிறது ….

  அட்டாங்க யோகம் என்பதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள பல நிலைகளையும் – செய்யும் முறைகளையும் விவரித்ததுடன் அதனதன் பலன்களையும் கூறியிருப்பது வியக்க வைக்கும் … பாடல்கள் கடுமையாக புரிந்துக் கொள்ள சிரமமாக இருக்குமோ என்று நினைப்பவர்களுக்காக ” அட்டாங்க யோகம் ” என்பதை பற்றிய பாடல் :—

  ” இயமம் நியமமே எண்ணிலா ஆதனம் … நயமுறு பிராணாயாமம் பிரத்தியாகாரம் … சயமிகு தாரணை தியானம் சமாதி … அயமுறும் அட்டாங்கம் ஆவதும் ஆமே …! ” —
  என்று அனைவரும் எளிமையாக விளங்கிக்கொள்ளும் தமிழில் பாடியிருக்கிறார் … மூன்றாம் தந்திரத்தில் ” அட்டாங்க யோகம் என்பதில் ஆரம்பித்து — சந்திர யோகம் ” என்பதில் முடித்திருப்பார் ….

  தமிழன் எதையும் தேடி எங்கேயும் ஓட வேண்டாம் என்றும் — இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைய வேண்டாம் என்றும் — நமது
  நாயன்மார்கள் என்ற மெய்யன்பர்களும் — சித்தர்களும் — மகான்களும் முன்னோர்களும் — நமக்கு பல நல்ல நூல்களை விட்டு சென்றிருக்கிறார்கள் — அவைகளில் மிக முக்கியமான பொக்கிஷம் திருமந்திரம் — இதில் கூறப்படாத விஷயங்களே இல்லை என்பதை அறுதியிட்டுக் கூறலாம் — படியுங்கள் — பலனடையுங்கள் ….!!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நீங்கள் கூறுவது உண்மை. கொஞ்சம் ஆர்வம் இருந்தால்,
   இதனையும் புரிந்து கொள்ளலாம். துவக்கத்தில் கொஞ்சம்
   துணை தேவைப்படும்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.