மறக்க முடியாத சில நினைவுகள் –1967-ஆம் ஆண்டு…மார்ச் மாதம்…
ஜபல்பூரிலிருந்து திருச்சிக்கு பணிமாற்றம் பெற்று
புதிய பொறுப்பில் சேர்ந்த இரண்டாம் நாள்…

புதிய தொழிற்சாலை மிகவும் துவக்க நிலையில் இருந்தது.
ஒரு பக்கம் கட்டிட வேலைகள் இன்னமும் தொடர்ந்து
கொண்டிருந்தன…இயந்திரங்கள் வந்து இறங்கிக்கொண்டிருந்தன. மறுபக்கம் தொழிலாளர்கள் புதிதாக வேலைக்கு சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள்…ITI -களில் பயிற்சியை முடித்த, புதிய இளைஞர்கள்.

அவன் பணியாற்ற அனுப்பப்பட்டது நிர்வாகத்தின்
ஒரு பகுதிக்கு.. அவன் அப்போது ஒரு junior clerk தான்.
( All India Competitive Examination – எழுதி, நேர்முகத்தேர்விலும்
வெற்றி பெற்று அதிகாரியானது சில ஆண்டுகளுக்குப் பிறகு
தான்…! ) அப்போது அவனுக்கு வயது – 24 – இள ரத்தம்.
வேகம்…துடிப்பு…தைரியம்… அநீதியை கண்டால் பொங்கி
எழுவது – இதெல்லாம் அவனது இயல்பு…!!!

தன் இளம் வயதை பெரும்பாலும், வடநாட்டிலேயே
கழித்தவன். தமிழ்நாட்டிற்கு, இந்த சூழ்நிலைக்கு முற்றிலும்
புதியவன்…

3000 பேர் பணியாற்றக்கூடிய தொழிற்சாலையில் அப்போது
வரை சுமார் 600 பேர் தான் பணிக்கு எடுக்கப்பட்டிருந்தார்கள்.
தொடர்ந்து எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
அந்த தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகப்பணிகளை
கவனிக்கும் ஒரு நிர்வாகப் பிரிவிற்கு தான் இவன் பணிபுரிய
அனுப்பப்பட்டான்

அந்த செக்ஷனில் அவனுக்கு முன்னரே 6 பேர் இருந்தனர்.
ராமச்சந்திரன், ஜோஜையா, ராஜகோபாலன், மத்தாய்,
பத்மனாபன் – ஆகியோர் அவனைப்போன்றே clerical பணியில்..
அவர்களுக்கு மேலே ஒரு மேலாளர் –
திருவாளர்.எஸ்.வி.எஸ்.

எஸ்.வி.எஸ். அதிபுத்திசாலி…
நிர்வாகம் சம்பந்தப்பட்ட அனைத்து rules & regulations-உம்
அவருக்கு அத்துப்படி.. அதாரிட்டி… தன்னுடைய ஒரு
பக்கமான அதீத புத்திசாலித்தனத்தை மட்டும் காட்டி,
உயர் அதிகாரிகளிடம் மிகுந்த செல்வாக்கை ஏற்படுத்திக்
கொண்டிருந்தார்.

ஆனால் வக்கிரபுத்தி…அடுத்தவரை துன்பப்படுத்தி அதில்
சந்தோஷம் காண்பவர்… தன் செக்ஷனில் பணி புரிபவர்களை
மிரட்டி, ஒடுக்கி அடிமைகள் மாதிரி தன் கட்டுப்பாட்டில்
வைத்திருந்தார்…எல்லாருமே இளைஞர்கள்… அரசு பணிக்கு
புதியவர்கள்…கிடைத்த வேலையை தக்க வைத்துகொள்ள
வேண்டுமே என்கிற தவிப்பில் இருந்தவர்கள்.

எல்லாரையும் எதாவது ஒரு சட்டப்பிரிவை காட்டி, ஒழுங்கு
நடவடிக்கை என்று சொல்லி அடிக்கடி பயமுறுத்திக்கொண்டே
இருப்பார். அவர்கள் நிம்மதியின்றி தவிப்பார்கள்…. இது 50 வருடங்களுக்கு முன் – 1967-ல் நடந்தது என்பதை நினைவுகொள்ள வேண்டும்….

அவனுக்கு பக்கத்து இருக்கையில் இருந்தவன் பத்மனாபன்.
மிகவும் பயந்த சுபாவம். probationary period- ல் இருந்தான்.
வீட்டில் அவன் ஒருவன் சம்பளத்தை நம்பி ஒரு பெரிய
குடும்பம் இருந்தது. வயதான அம்மா, அப்பா, பாட்டி,
பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் தம்பிகள் 2 பேர்,
தங்கைகள் 2 பேர்….

அவன் பணியில் சேர்ந்த முதல்நாளே சக ஊழியர்கள்
அனைவரிடமும் பேசினான்… சூழ்நிலையை புரிந்து
கொண்டான். அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்
கொண்டான்.

மதியம் 12 முதல் 1 மணி வரை சாப்பாட்டு நேரம்.
12 மணிக்கு ஒரு முறையும் 1 மணிக்கு ஒரு முறையும்
தொழிற்சாலையில் சங்கு ( hooter ) ஊதும்.

பத்மனாபன் மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு செல்ல வேண்டும்.
அதற்கு கொஞ்ச தூரம் நடந்து செல்ல வேண்டும். 15 நிமிடம்
பிடிக்கும்.

இவன் தொழிற்சாலைக்கு வெளியே இருந்த ஓட்டலுக்கு
போனான். ஒரு மணிக்கு கொஞ்சம் முன்னதாகவே வந்தவன்
– பக்கத்து சீட்டில் பத்மனாபன் கையில் ஒரு பேப்பரை
வைத்துக்கொண்டு மிரண்ட தோற்றத்துடன் இருந்ததை
பார்த்தான்…. எஸ்விஎஸ் இன்னும் வரவில்லை.

என்ன விஷயம்.. ஏன் இப்படி இருக்கிறாய்… கையில் என்ன
பேப்பர் என்று இவன் கேட்க பத்மனாபன் அந்த பேப்பரை
இவனிடம் கொடுத்தான். அதில் –

———————-

Today at noon – You have left the Office much before the Lunch
Hooter…. Missing from the Workspot tantamounts to gross
misconduct.

You are hereby directed to explain why disciplinary action should
not be initiated against you for your Gross Misconduct.

Your written explanation should be submitted, on this note itself,
to the undersigned before 2 pm.

To
Mr.M.Padmanabhan
————————

என்று டைப் செய்யப்பட்டு, அதில் கீழே எஸ்விஎஸ்
கையெழுத்திட்டிருந்தார். ( இந்த நிகழ்வு இன்றும் என் மனதை விட்டு அகலவில்லை…)

( அந்த “அவன்” நான் தான் என்பதை
இதற்குள்ளாக புரிந்து கொண்டிருப்பீர்கள்… )

என்ன விஷயம் என்று பத்மனாபனை கேட்டேன்.
சாப்பாட்டிற்கு வீடு வரை நடந்துபோய் வர நேரமாகி
விடுகிறது. அதனால் ஹூட்டருக்கு 3 நிமிடம் முன்னதாக
கிளம்பி gate-க்கு போய் விட்டேன்.. அதற்காக மெமோ
கொடுத்திருக்கிறார் என்று சோகமாக சொன்னான்.

பயங்கர கடுப்பானேன் நான்….
அந்த பேப்பரை நானே வைத்துக் கொண்டேன்…

“எஸ்விஎஸ் வந்த பிறகு, அவர் என்ன
கேட்டாலும் நீ வாயே திறக்காதே… நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றேன். அவன் பயந்தான்…
“இல்லை அவர் ஆபிசரிடம் கம்ப்ளெயிண்ட் பண்ணுவார் –
அவரைப்பற்றி உனக்கு தெரியாது” என்றான்.

“என்ன நடந்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
நீ மட்டும் வாயே திறக்காதே” என்று சொல்லி விட்டு, அந்த மெமோவை கையில் வைத்துக்கொண்டு என் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

சிறிது நேரத்தில் எஸ்விஎஸ் வந்தார். அவர் இருக்கைக்கும்
எங்கள் இருக்கைக்கும் இடையே சுமார் 10 அடி இடைவெளி
இருக்கும். அங்கிருந்தே, அந்த மெமொ பேப்பர் என் கையில்
இருந்ததை பார்த்து விட்டு, ” Mr.Padmanabhan, where is your
explanation ..? ” என்றார்.

பத்மனாபன் பரிதாபமாக என்னை பார்த்தான்.
என்னால் அதை சகித்துக்கொள்ள முடியவில்லை…

பிரச்சினையை அவனிடமிருந்து திசைதிருப்பி என் மேல்
சுமந்து கொள்ள நான் தயாரானேன்.

நான் எஸ்விஎஸ்ஸிடம் சொன்னேன்..”என்ன சார் இது
3 நிமிடம் முன்னதாக gate-க்கு போனதற்காக மெமோவா…?
சாயங்காலம் ஒரு மணி நேரம் லேட்டாக தானே
போகிறோம்… இது ஒரு பெரிய தவறா…?” என்றேன்.

எஸ்விஎஸ் கோபமாக ” Mister K… you are new to this place.
You don’t interfere in Office discipline. Otherwise I will have
to complain against you also” என்றார்.

மீண்டும் பத்மனாபனை பார்த்து ” Mr.Padmanaban,
I want your explanation immeditely” என்றார்.

இதற்காகத்தான் நானும் காத்திருந்தேன்.

“Come on Mr.SVS – have your explanation man” என்று
எஸ்விஎஸ்-ஐ நோக்கி சொல்லி விட்டு,
அவர் கண்ணெதிரே அந்த மெமோவை நான்காக,
எட்டாக கிழித்து, சுருட்டி என் கால் அருகே இருந்த
dust bin- ல் எறிந்தேன். எதிர்பார்த்த மாதிரியே அவர் கோபம்
என் மீது திசை திரும்பியது.

அப்போதெல்லாம் எனக்கு கோபம் வந்தால் ஆங்கிலத்தில்
வேகமாகப் பேசுவேன்…(வட இந்திய பழக்கம்…)

“Mr.SVS – This is a Govt. Office and we are all Govt.staff.
Don’t try to treat us like your slaves..” என்றேன்.

அங்கு அவரை முதல் முதலாக பெயர் சொல்லி
கூப்பிட்டவனும் எதிர்த்து பேசியவனும் நான் தான்.

“You are spoiling Office discipline. I am going to lodge a complaint against you ” என்றார்…

” this is a silly issue, you are unnecessarily magnifying it…
if you want to make it big with a complaint OK do it …
do as you like – but you cannot threaten me like this ” என்றேன்.

உடனே கோபமாக சேரை இழுத்து தள்ளி விட்டு, அங்கிருந்து
நூறடி தூரத்தில் இருந்த Admin.Officer ரூமுக்கு போனார்…
எங்கள் செக்ஷனில் எல்லாரும் டென்ஷனாகி விட்டார்கள்.
“என்னப்பா …அந்த ஆளை பகைச்சுக்கிட்டே… ரொம்ப
பொல்லாதவர் அவர்” என்றார்கள்.

“விடுங்க… நீங்க யாரும் வாயே திறக்காதீங்க – இதை
நான் தனியா டீல் பண்ணிக்கறேன்…. எவ்வளவு தூரம்
போறார் பார்ப்போம்” என்றேன்.

ஐந்து நிமிடம் கழித்து திரும்ப வந்த எஸ்விஎஸ் –
கதவருகே நின்றுகொண்டு, “Mr.K., Admin. Officer calls you”
என்றார்….

நான் கூலாக “When did you become his Peon..?”
என்று கேட்டேன்.
அவர் மிக கோபமாக “what do you mean..?” என்றார்.

நான் இன்னும் நிதானமாக –

“Admin. Officer has got his own Peon and
if he wants me in his Office, either he will
send his Peon or he will call me over phone –
and you need not trouble yourself for this ” என்றேன்.

கோபத்துடன் மீண்டும் அட்மின் ஆபிசர் ரூமை நோக்கி
சென்றார். இரண்டு நிமிடங்கள் கழித்து அட்மின் ஆபிசரின்
பியூன் வந்து என்ன அட்மின் ஆபிசர் வரச்சொன்னதாக
சொன்னார்.

அப்போது Admin.Officer ஆக இருந்தவர் ஒரு Anglo Indian…
Mr.M.J.Morris … அதற்கு முந்திய நாள் பணிமாற்றத்தில்
வந்து சேர்ந்தபோது அவரைத்தான் முதலில் சந்தித்தேன்.

அவர் குரல் rough ஆக கரகரவென்று அதிகார தொனியில்
இருக்கும். இவ்வளவு தான் அவரைப்பற்றி எனக்கு
தெரியும்….அதற்கு மேல் அவர் குணாதிசயங்களை பற்றி
நான் ஒன்றுமே அறியேன்.

என்ன தான் நடக்கிறது பார்ப்போமே.. என்று நான்
எழுந்து அவர் ரூமுக்கு போனேன்.

ஒரு விஷயத்தை இங்கு கூற வேண்டும்.
நான் என்றைக்கு மத்திய அரசு வேலையில் சேர்ந்தேனோ,
அதற்கு அடுத்த நாளிலிருந்தே, முக்கியமான service regulations
(Central Civil Services Rules ) அனைத்தையும் ஒன்றன் பின்
ஒன்றாக நூலகத்திலிருந்து எடுத்துக்கொண்டு போய்,
படித்து, ஓரளவு என்னை எந்தவித பணியில்
ஈடுபடுத்தினாலும், செய்ய தகுதி உடையவனாக்கி கொண்டு
விட்டேன்.

எனவே, discipline சமாச்சாரங்களில் எஸ்விஎஸ் -ன் அதிகார
வரம்புகள் எத்தனை தூரம் செல்லும் என்பதையும் அதை எப்படி எதிர்கொள்வது என்பதையும் நான் உணர்ந்து தான் இருந்தேன்.

Admin.Officer ரூமுக்குள் நுழைந்தேன்.
நடுநாயகமாக அமர்ந்திருந்த அவருக்கு வணக்கம் சொன்னேன்.

எதிரே ஒரு பக்கம் எஸ்விஎஸ் நின்றிருந்தார். அட்மின் ஆபிசர்
அவரை உட்காரச்சொல்லவில்லை என்பதிலிருந்தே அவர்
இந்த விஷயத்திற்கு அதிகம் முக்கியத்துவம்
கொடுக்கவில்லை என்பதை நான் யூகிக்க முடிந்தது.

” Youngman.. You joined here only yesterday .. right…?
What is your problem .? ” என்றார்.

நான் ரொம்ப கூலாக ” I have no problem Sir ” என்றேன்.

உடனே எஸ்விஎஸ் ” He is spoiling Office discipline Sir”என்றார்.

உடனே நான் நடந்தது அனைத்தையும் அட்மின்.ஆபிசரிடம்
விவரித்தேன். உள்ளதை உள்ளபடியே கூறினேன்.
3 நிமிடம் முன்னதாக போனதற்காக பத்மனாபனுக்கு மெமோ
கொடுத்ததையும், Staff-ஐ கொஞ்சம் கௌரவமாக நடத்துங்கள்
என்று சொன்னதற்கு, disciplinary action எடுப்பதாக என்னை
மிரட்டி விட்டு, இப்போது உங்களிடம் வந்து புகார்
சொல்கிறார் என்றேன். அவரது மெமோவை நான் கிழித்து
குப்பைத்தொட்டியில் போட்டதையும் சொல்லத் தவறவில்லை…

கூடவே நான் தொடர்ந்தேன்…

” I am just 24 year old. All my collegues in the section are
almost of the same age… We are prepared to do any amount of
hardwork. we sit late hours in the evening because of
pressure of work…We have no regret and We are happy to work…

But we expect a reasonable treatment in the Office.
We are Central Govt. Staff… Government is supposed to be
a Model Employer…. But we are being treated like Slaves here..
Probably these things have not come to your knowledge so far
because my colleagues are threatened and they are afraid of talking.

If you are not convinced and still feel I am Wrong..
I apologise to you….

But at the same time I request you to please advise Mr.SVS also
not to treat his Staff like Slaves Sir ” என்றேன்.

கொஞ்ச நேரம் என்னையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார்
அட்மின் ஆபிசர் Mr.Morris….. பிறகு….

சுத்தமாக எதிர்பார்க்கவே இல்லை நான்.
என்னைப்பார்த்து “ஹா ஹா ஹா ” என்று கம்பீரமாகச்
சிரித்தார்…

மிக பெருந்தன்மையுடன் என் வார்த்தைகளை
ஏற்றுக் கொண்டு….

” What SVS … See what an energetic youngman he is…
You should be happy to work with such dynamic people –
they are all young…..understand them… appreciate them,
Pat them, bring out the best out of them ” என்று சொன்னவர்…

என்னைப்பார்த்து –
” Go youngman – go back to your Office –
Don’t get angry for small matters –
Reserve your Anger for still bigger events…
Go.. get adjusted with your Seniors -. ” என்றார்.

முகம் கொள்ளாத மகிழ்ச்சி எனக்கு…
“Thank you Sir” என்று அவருக்கு நன்றி சொல்லி விட்டு
எஸ்விஎஸ் முகத்தைக்கூட பார்க்காமல் வெளியேறி
நேராக செக்ஷனுக்கு வந்து விட்டேன் நான்.

மகா டென்ஷனுடன் செக்ஷனில் காத்திருந்த நண்பர்கள்,
முகத்தில் சிரிப்புடன் உள்ளே நுழைந்த என்னை ஆச்சரியமாக
பார்த்தார்கள்….. விஷயத்தை விவரித்ததும், அனைவரின்
முகத்திலும், முக்கியமாக பத்மனாபனின் முகத்தில் ஏற்பட்ட
பிரகாசத்தை பார்த்தபோது –

அப்போது, அந்த நிமிடத்தில் எனக்கு ஏற்பட்ட பெருமிதமும்,
சந்தோஷமும் –

” அடுத்தவருக்காக போராடுவதில், உழைப்பதில் – நமக்கு
கிடைக்கும் திருப்தியும், சந்தோஷமும் எத்தகையவை ”
என்பதை முதல் முதலாக உணர்த்தியது….

அதற்கு முந்திய நாள் வரை பத்மனாபன் யாரோ,
நான் யாரோ –
எங்கேயோ இருந்தவர்கள்…
அவன் எனக்கு உறவில்லை…சிநேகிதம் இல்லை…
அதற்கு முன்னால் நாங்கள் அறிந்தவர்கள் இல்லை.
ஆனாலும் சக மனிதனுக்கு பிர்ச்சினை என்றதும்
உள்ளுணர்வு விழித்துகொண்டு போராடியது….

பிறர் நலனில், சமூக நலன் சம்பந்தப்பட்ட விஷயங்களில்
இதற்கு பிற்பட்ட காலங்களில், நான் பெரும் ஈடுபாடு கொள்ள இந்த நிகழ்ச்சி முதல் துவக்கமாக இருந்தது என்று
சொல்ல வேண்டும்.

அன்று பத்மனாபனுடன் ஏற்பட்ட நட்பு அடுத்த 47 ஆண்டுகளுக்கு
( அண்மையில் அவன் மறைந்த நாள் வரை) நீடித்தது. நான் எவ்வளவோ ஊர்களுக்கு மாற்றலாகிச் சென்றாலும், எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டே இருந்தது.

————————————————————

பின் குறிப்பு –

// சொல்வது சுலபம். சக மனிதனின்மீது
அன்புகொள்வது ரொம்பக் கடினம் //

-என்று நேற்று நண்பர் ஒருவர் எனக்கு எழுதிய
வார்த்தைகள் தான் நேற்றிரவு நீண்ட நேரம்
உட்கார்ந்து இந்த அனுபவத்தை எழுதியதற்கான
அடிப்படை. நண்பருக்கு என் நன்றிகள்.

இனி அடிக்கடி என் பொது வாழ்விலான
அனுபவங்களை எழுதலாமென்று தோன்றுகிறது.
இதை நண்பர்களும் வரவேற்றால் …… செய்கிறேன்…!!!

————————————————————————————————————–

மறக்க முடியாத சில நினைவுகள் – அடுத்த பகுதி- (பகுதி-2)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to மறக்க முடியாத சில நினைவுகள் –

 1. இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

  ஒரு நல்ல அழகான சிறுகதை படித்த திருப்தி உள்ளது காமை ஐயா. நீங்கள் சுமார் 50 ஆண்டுகள் முன்னர் நடந்தவற்றை அன்றேய் வந்து நண்பர்களிடம் சொன்னது போல் உள்ளது இந்த இடுகை.

 2. N.Rathna Vel சொல்கிறார்:

  மறக்க முடியாத சில நினைவுகள் – எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு
  vimarisanam – kavirimainthan

 3. rathnavelnatarajan சொல்கிறார்:

  மறக்க முடியாத சில நினைவுகள் – எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு
  vimarisanam – kavirimainthan

  2017-07-04 10:16 GMT+05:30 வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் :

  > vimarisanam – kavirimainthan posted: “… … … 1967-ஆம் ஆண்டு…மார்ச்
  > மாதம்… ஜபல்பூரிலிருந்து திருச்சிக்கு பணிமாற்றம் பெற்று புதிய பொறுப்பில்
  > சேர்ந்த இரண்டாம் நாள்… புதிய தொழிற்சாலை மிகவும் துவக்க நிலையில் இருந்தது.
  > ஒரு பக்கம் கட்டிட வேலைகள் இன்னமும் தொடர்ந்து கொண”
  >

 4. சைதைஅஜீஸ் சொல்கிறார்:

  பிறகு Mr SVS-வுடனான உறவு எப்படி இருந்தது என்று சொல்லாமல் விட்டுவிட்டீரே ஐயா!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அஜீஸ்,

   நல்ல கேள்வி கேட்டீர்கள்…
   கட்டுரை எழுதும்போது வராத நினைவு எல்லாம்
   உங்கள் பின்னூட்டத்தை பார்த்ததும் வந்து விட்டது.

   அடேயப்பா… அதன் பிறகு நான் Mr.SVS -யிடம் மாட்டிக் கொண்டு தவித்தது, என் கடைசி மூச்சு வரை மறக்க
   முடியாதது. அவர் ஒரு முற்றிலும் வேறுபட்ட,
   தனி கேரக்டர். அதற்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி –
   அவரைப்போன்ற ஒரு கேரக்டரை நான் வாழ்க்கையில்
   சந்திக்கவே இல்லை.

   அந்த incident – க்கு பிறகு, என்னிடமும் சரி, மற்ற
   Staff -இடமும் சரி, வெளியில் சாதாரணமாக, சகஜமாக பழகினார். ஒன்றையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. பத்மனாபனை அத்துடன் விட்டு விட்டார். ஆனால், என்னை படுத்தியபாடு இருக்கிறதே…! பயங்கரமான அனுபவங்கள்….!

   அதற்குப் பிறகும் சில ஆண்டுகள் நான் அவருடன், அவரது மேற்பார்வைக்கு கீழ் தான் பணியாற்ற வேண்டியிருந்தது.

   திடீர் திடீரென்று என் மேஜையின் மேல் இருக்கும் files காணாமல் போகும்.. நான் தேடி தவிப்பேன். எங்கெங்கோ தேடுவேன்… இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் என் side rack-ல் தானாகவே கிடைக்கும்.

   அடிக்கடி, என்னிடம் கொடுக்கப்பட்ட கடிதங்களுக்கு ( HQrs, ministry letters…)பதில் எழுத ஏன் தாமதம் ஆகிறது என்று கேட்டு மெமோ கொடுப்பார்.. உண்மையில் கடிதம் வந்து பல நாட்களுக்கு பிறகு தான் அவரே அதை என்னிடம் கொடுத்திருப்பார்…
   இந்த மாதிரி அடிக்கடி என்னை டென்ஷன் ஆக்கி, அவருடன் நான் மோத வேண்டியிருக்கும்…

   செக்ஷனில் ஒரு போன் இணைப்பு தான் இருக்கும்…
   அது அவரது மேஜையின் மேல் இருக்கும்… சில சமயங்களில், உயர் அதிகாரிகள் என்னை போனில் கூப்பிடச் சொன்னால், அவர்களிடம் நான் இருக்கையில் இல்லை என்று சொல்லி விடுவார். அரை மணி நேரமாக சீட்டில் இல்லை… எங்கே போனாரோ தெரியாது என்று கூடுதல் தகவல்களை இவராகவே கொடுப்பார். உண்மையில் நான் அப்போது என் இருக்கையில் தான் இருப்பேன்…
   இடையில் சிறிது தூரம் இடைவெளி இருக்கும் என்பதால்,
   அவர் என்ன பேசுகிறார், யாரிடம் பேசுகிறார் என்பது நமக்கு தெரியாது.

   அடுத்த தடவை அந்த அதிகாரியை நேரில் பார்க்கும்போது,
   நான் காலையிலேயே உங்களை தேடினேன்.. நீங்கள்
   சீட்டில் இல்லை என்று எஸ்விஎஸ் சொன்னார் என்று
   சொல்லும்போது தான் எனக்கு இந்த விவரம் தெரிய வரும்.

   அவரை பதிலுக்கு நான் வேறு விதத்தில் வதைத்திருக்க முடியும்.
   இருந்தாலும் என் மனசாட்சி ஒப்பவில்லை. காலம் மாறும்…
   பொறுத்துக் கொள் என்றது.

   அவர் திருப்பதி பாலாஜியின் தீவிர பக்தர்….
   இந்த தொல்லைகள் தாங்கமுடியாத அளவிற்கு போனபோது,
   ஒரு தடவை அவர் எதிரே போய் நாற்காலியில் உட்கார்ந்து
   கொண்டு, ” நான் உங்களுக்கு எந்தவித துரோகமும் செய்யவில்லை.. ஆனால், நீங்கள் மறைமுகமாக எனக்கு
   பலவிதங்களில் கேடு விளைவிக்கிறீர்கள்.. பதிலுக்கு நான் உங்களை எதுவும் செய்யப்போவதில்லை….ஆனால், நீங்கள்
   தினமும் கும்பிடும் அந்த பாலாஜியே இதை விரும்ப மாட்டார். அவர் பார்த்துக் கொள்ளட்டும் உங்களை…” என்று சொல்லி விட்டு வந்து விட்டேன்…

   ஒரு மாதம் கடந்திருக்கும்…
   எதேச்சையாக நடந்ததோ, செய்த பாவமோ தெரியவில்லை…
   ஒருநாள், ஏதோ திமிரில் – எங்களுக்கு தொடர்பில்லாத ஆனால் உயர் பதவியிலிருக்கும் ஒரு அதிகாரியிடம் – ஏதோ சண்டை போட்டு விட்டார்… அவர் நேராக general manager- ரிடம் போய் சொல்ல, அடுத்த இரண்டு மணி நேரத்தில், இவர்
   முக்கியத்துவமே இல்லாத ஒரு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டு விட்டார்….

   3-4 வருடங்களுக்கு பிறகு நிம்மதியாக தூங்கியது அன்று தான்…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. Lakshmi Mohan சொல்கிறார்:

  அன்புள்ள ஐயா அவர்களுக்கு,

  அருமையான பதிவு.
  இளம் வயதிற்கே உண்டான வேகம் மற்றும் விவேகம் …
  பல இடங்களில் உயர் அதிகாரியிடம் பேசவோ பழகவோ பெரும்பாலானோர் முன்வருவதில்லை …முயற்சி செய்வதுமில்லை..
  பல தருணங்களில் உயர் அதிகாரிகளுக்கு நாம் சொன்ன பிறகுதான் என்ன நடந்தது என்பதே தெரிய வரும்..
  அவர்களின் வேலைப்பளு அவ்விதம்..
  தங்களின் உயர் அதிகாரி இதை கையாண்ட விதமும் அருமை..
  தங்களின் துணிவு மற்றும் நேர்மை பாராட்டுதலுக்குரியது.
  இன்றைய இளம் தலை முறைக்கு எடுத்துக்காட்டு..

  இன்னும் இது போன்ற பதிவுகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்..

  அன்புடன்
  – இலக்குமி மோகன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி இலக்குமி மோகன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. Ganpat சொல்கிறார்:

  என்னே ஒரு நகை முரண்!
  ரீல் வாழ்க்கையில் சமுதாயத்தை காப்பாற்றுபவர் போல நடித்து,ரியல் வாழ்வில் பயங்கொள்ளியாக, தான் உண்டு தன் வேலை உண்டு என வாழ்பவர்கள் நமக்கு சூப்பர் ஸ்டார்கள்.ஆனால் 75 வயதிலும் கணினி முன் அமர்ந்து சமுதாய குற்றங்களை தட்டி கேட்டு, இளைஞர்களுக்கு வழிகாட்டியாக வாழ்பவர்கள் நமக்கு வெறும் வலைப்பதிவாளர்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்,,

   அத்தி பூத்தது போல் வருகிறீர்கள்…!

   நீங்கள் சொல்வது போல் நான் எதுவும்
   பெரிதாகச் செய்வதாக உணரவில்லை.
   ஆனாலும், உங்கள் பாராட்டு எனக்கு டானிக். நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. Paiya சொல்கிறார்:

  Super. Even union leaders never do .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி நண்பரே….!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 8. குலாம் ரசூல் சொல்கிறார்:

  ஐயா,

  ஒருத்தரையும் காணுமே. இந்தமாதரி ஆண்மகன்களாக இருப்பதிலெல்லாம் அவர்களுக்கு பிடித்தமில்லையோ.

  ஒருத்தருக்கு உதவி அதனால் அவர் அடையும் சந்தோசத்தை பார்க்க கிடைக்கும் சந்தோசம் இருக்கே அதை அனுபவிப்பவர்களால் மட்டுமே உணரமுடியும். அது ஒரு கொடிப்பினை. அப்படி உதவும் பொழுது வரும் இன்னல்களை எதிர்கொள்வதற்கு பெரும் மனத்துனிவுவேண்டும். அது அப்போதே தங்களிடம் இருந்திருப்பதற்கு இப்போது தங்களை படிக்கும் யாருக்கும் ஆச்சரியமூட்டுவனவல்ல.

  போக, அந்த மனத்துனிவு இல்லாமையே பலரை கண்டும் காணாமல் போகும் கோழைகளாக்குவது.

  பிறருக்கு உதவுவதால் ஏற்படும் இன்னல்களுக்கு, இழப்புகளுக்கு இறைவன் பிற்பாடு நாம் அறியாத புறத்திலிருந்து நமக்கு வெகுமதியளிக்கின்றான் என்று நம்பிக்கை எங்களுகுண்டு. அறிந்தவர் வெகுசொற்பமே.

  அற்புதமான நடை ஐயா. ‘சுஜாதா’வை அதிகம் விரும்பி படிப்பீர்களோ. ஒரு நிகல்வை சுவையாகவும் suspence-ஐ இறுதிவரை நகர்த்தி செல்லும் உத்தியும் தங்களுக்கு நன்றாகவே வருகிறது.

  நன்று ஐயா.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மிக்க நன்றி திரு.குலாம் ரசூல்

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • இளங்கோ சொல்கிறார்:

   காவிரிமைந்தன் சாருக்கு,

   உங்கள் அனுபவமும் அற்புதம். அதை நீங்கள் சொல்லி இருக்கும் விதம்
   அதைவிட அற்புதம். 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு விஷயத்தை
   அதே பின்னணியுடன் அழகாக சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் உங்கள்
   அனுபவங்களைப்பற்றி இன்னும் நிறைய எழுதவேண்டும் என்று
   கேட்டுக்கொள்கீறேன்.

   திரு.குலாம் ரசூல் அவர்களுக்கு,

   நீங்கள் எதிர்பார்ப்பவர்கள் எல்லாரும் இதையும் படிப்பார்கள்.
   ஆனால் கே.எம். பாஜக பற்றியோ, மோடிஜி பற்றியோ எழுதும்போது
   மட்டும் தான் அவர்கள் ஓடோடி வருவார்கள். தங்கள் தலைவரை
   பாதுகாக்க.

 9. புதியவன் சொல்கிறார்:

  உங்கள் அனுபவத்தை அன்றே ரசித்தேன். பொதுவாக ஆபீசில் இதுபோல் தைரியம் காட்டுவதற்கும் ஒரு ஆண்மை வேண்டும். எல்லோராலும் முடிந்தது, ‘காத்திருப்போம் நம் காலம் வரும்வரை’ என்பதுதான். ஆனால் நீங்கள் செய்தது, இயல்பான ‘தலைவர்’ செய்யும் செயலை (Leader). பாராட்டுகள்.

  நான் உங்கள் மேலாளரின் இடத்தில் இருந்திருந்தாலும், அவரைவிட மேம்பட்டதாகச் செய்திருப்பேனா என்று தோன்றவில்லை. ஆனால், காலம் அப்படிப்பட்டவர்களுக்கு சரியான பதிலைக் கொடுக்காமல் இருக்காது.

  நாம் செய்யும் நல்லனவை எல்லாம் நிலத்தில் தூவும் விதைகள்போல. அது நமக்கோ அல்லது பிறருக்கோ நிச்சயம் தேவையானபோது பயன்படும். வாழ்த்துகிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி புதியவன்.

   “அந்த மேலாளர்” ரிடையராகி போகும்போது அவருக்கு
   உரிய முறையில் பென்ஷன் கிடைக்கவில்லை… அந்த சமயத்தில் நான் அந்த ஊரில் இல்லை என்றாலும், அலுவலக தொடர்பு மூலம் கிடைத்த தகவல்…

   ஏதோ காரணங்களுக்காக, அவர் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு முடிவடையாமல் இருந்தது. இரண்டு ஆண்டுகள்
   கழித்து தான் பென்ஷன் கிடைத்ததாம்.

   வினை …….!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.