வெகு சுவாரஸ்யமான பாஜக பற்றிய விமரிசனம்…. கருத்துக்கு சொந்தக்காரர் யார்…?


தமிழக பாஜகவைப் பற்றிய, மிக சுவாரஸ்யமான ஒரு மதிப்பீடு கீழே –

இந்த கருத்துகளுக்கு சொந்தக்காரர் யார், இது எந்த
பத்திரிகையில் வெளிவந்தது … என்கிற விவரத்தை சரியாக
கணித்துச் சொல்லும் வாசக நண்பருக்கு –

என் “அசையா சொத்துக்கள் அனைத்தையும்” கொடுத்து விடுகிறேன்… 🙂 🙂 🙂

கண்டு பிடித்து எழுதுங்கள் பார்க்கலாம்… !!!

( இதன் சரியான விடையை, முதல் பத்து பின்னூட்டங்கள்
பதிவானவுடன், நான் கூறி விடுகிறேன்….)

ஆனால் ஒரு விஷயம் – நீங்கள் என்ன பதில் எழுதி
இருந்தாலும், என் விளக்கம் உங்களை நிச்சயம் வியப்பில்
ஆழ்த்தும் என்று நினைக்கிறேன்….!!!

இதை எழுதியது நான் தானோ என்று சந்தேகப்படுபவர்களுக்கு இப்போதே கூறி விடுகிறேன்…
நான் இல்லை…!!!

——————————————————-

( இந்த கட்டுரையில், சில சிறு சம்பந்தமில்லாத
பகுதிகளை மட்டும் நீக்கி இருக்கிறேன்…)

………….

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரும் ஆளுமைகளின்
இறுக்கமான பிடியிலிருந்த தமிழக அரசியல் தளம், அந்த
பிடியிலிருந்துவிடுபட்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை
பயன்படுத்தி, தான் வளர்வதற்கான வாய்ப்பை, காங்கிரஸ்
கட்சியின் அகில இந்தியத் தலைமை நிராகரித்துள்ளது.

அதே சமயம், பாஜகவின் அகில இந்தியத் தலைமை, தமிழக
அரசியலில் தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்புகிறது.
தலைமையின் விருப்பத்தை நிறைவேற்றுகிற நிலையில்
தமிழக பாஜக இருக்கிறதா..?

தமிழகத்தில் காங்கிரஸ் செயல்படும் விதத்திற்கும்,
பாஜக செயல்படும் விதத்திற்கும் பெரிய வித்தியாசம்
இல்லை.

காங்கிரஸ் கட்சியின் அடையாளம் கோஷ்டிச்சண்டை.
பாஜகவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ‘தமிழிசை தான்
மாநிலத் தலைவர்” என்கிறார்கள். ஆனால், பத்து, இருபது
பேர் அவரை விடத் தாங்களே பெரிய தலைவர் என்று
காட்டிக் கொள்கிறார்கள்.

ஒரே பிரச்சினைக்கு வெவ்வேறு கருத்துக்களை
ஆளாளுக்கு அள்ளி வீசுகிறார்கள். இவர்களது முரண்பட்ட
கருத்துக்களே முக்கியச் செய்திகள் ஆகின்றன.
பாஜகவுக்கு வாக்களிக்க விரும்புபவர்களைக்கூட, முகம்
சுளிக்க வைக்கும் வீர வசனங்களை பேசுகிறார்கள்…
….
…..
திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு எதிராக தாக்குதல் அரசியல்
தான் இன்றைய தேவை. ஆனால், மத்திய அரசுக்கு எதிராக
தனி நபர்களும், சிறிய குழுக்களும் நடத்தும் தாக்குதல்களை
எதிர்கொள்ளும் தற்காப்பு அரசியலில் தான் இவர்களது
அக்கறை இருக்கிறது.

யாரை எதிர்க்கிறோம் என்பதில் காட்டுகிற அக்கறையை
போலவே, யாரை புறக்கணிக்கிறோம் என்பதும் தேர்தல்
அரசியலின் பால பாடங்கள். பாஜகவின் தமிழகத்
தலைவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை
சொல்லத் தேவை இல்லை…

ஹிந்துக்களை ஒரு அணியாகத் திரட்டி தேசாபிமானத்தை
போதிக்கிற வேலையை ஆர்.எஸ்.எஸ். செய்து
கொண்டிருக்கிறது.

ஹிந்துக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் இடையிலான
மோதலில், ஹிந்துக்களின் தரப்பைப்பற்றி பேச ஹிந்து
முன்னணி இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டுமே
பாஜகவின் வேலை அல்ல.

தேர்தல் அரசியல் தான் அதன் நோக்கம்.தேர்தல் அரசியலில்
வெற்றி பெறுவதன் மூலம், பெரும்பான்மை மக்களின்
வாழ்க்கையையும், பாதுகாப்பையும் மேம்படுத்துவது தான்
பாஜகவின் இலக்காக சொல்லப்படுகிறது. இந்த
வேறுபாடுகளை உணராத வரை, நடைமுறைப்படுத்தாத
வரை, பாஜக தனது எல்லைகளை விரிவாக்கி கொள்ள
முடியாது.

ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருப்பவர்கள், ஹிந்து முன்னணியில்
இருப்பவர்கள் பாஜகவில் இருக்கிறார்கள்… ஆனால்,
பாஜகவில் இருக்க விரும்பும் எல்லாரும் ஆர்.எஸ்.எஸ்.ஸில்
இருந்திருக்க வேண்டும் என்பதில்லை.

இது தான் அகில இந்திய அளவில் எல்லா மாநிலங்களிலும்
இருக்கும் நடைமுறை. இந்த நடைமுறையால் தான் பாஜக
தனது அரசியல் வெற்றிகளை தொடர்ந்து பெற்று வருகிறது.

ஆர்.எஸ்.எஸ்.ஸில் முக்கிய பொறுப்பு வகித்த ராம் மாதவ்
தான், ஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முஃப்தியின் மக்கள்
ஜனநாயக கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையிலான கூட்டணி
ஆட்சியின் உந்துசக்தியாக இருக்கிறார்.

கோவாவில் – தீவிர ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட
மனோகர் பரிக்கர் தான், கிறிஸ்தவ சர்ச்சுகளின் இணக்கமான
உறவோடு பாஜக கட்சி ஆட்சி அமைய அங்கு வழி வகுத்தார்.

உத்திரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக
ஆட்சி அமைந்திருக்கிறது. வெற்றி பெற்ற பாஜக சட்டமன்ற
உறுப்பினர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் காங்கிரஸ்,
சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளிலிருந்து வந்தவர்கள்..
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அல்ல.

ஆனால், அந்த ஆட்சி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்
என்கிற ஆர்.எஸ்.எஸ்.ஸின் நோக்கத்திற்காக, யோகி
ஆதித்யநாத் முதலமைச்சராக்கப்பட்டிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்.
தனது இலக்கில் கவனமாக இருக்கிறது.

இதேபோல் பாஜகவின் அகில இந்தியத்தலைமையும் தனது
குறிக்கோளில் தெளிவாக இருக்கிறது. தலைமையின்
குறிக்கோளை வெற்றியடையச் செய்கிற அக்கறை தமிழக
பாஜகவுக்கு தேவை.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவின் ஆட்சி
அமைந்ததை தமிழக பாஜகவினர் பெருமையாக
உணர்கிறார்கள். ‘ தங்கள் அரசு அமைந்து விட்டது ‘ என்கிற
கொண்டாட்ட மனநிலையிலிருந்து இவர்கள் இன்னமும்
வெளியே வரவில்லை. இந்த பெருமையும், கொண்டாட்டமும்
தவறில்லை.

ஆனால், மோடி அரசு அமைந்ததில் தங்களின் பங்கு என்ன
என்று இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
அது பூஜ்ஜியமே என்ற உண்மை இவர்களுக்குத் தெரிய
வேண்டும்.

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக தலைமையில்
அமைந்த கூட்டணி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது.

ஆனால், அந்த கூட்டணி அமைந்ததும் கூட,
அகில இந்தியத் தலைமையின் முயற்சியால் தான்
என்பதையும், நரேந்திர மோடி என்கிற தனி மனிதனின் மீது
உண்டான நம்பிக்கையும் தான் என்பதை தமிழக பாஜகவினர்
உணர வேண்டும்.

டெலிவிஷன் சேனல்கள் நடத்தும் விவாதங்களில் கலந்து
கொண்டு காரசாரமாகப் பேசுவதன் மூலம் கட்சியை வளர்த்து
விட முடியும், அல்லது வளர்த்து விட்டதாக காட்ட முடியும்
என்று இவர்கள் நினைத்தால், அதைவிட பெரிய ஏமாற்று
எதுவும் இருக்க முடியாது.

தமிழில் ஆறேழு செய்தி சேனல்கள் வந்து விட்டன.
செய்திகளில் ஆர்வம் குறைந்த இந்த மாநிலத்திற்கு இந்த
எண்ணிக்கை அதிகமே. அதனால், தங்களது சேனலை பார்க்க
வைக்கும் முயற்சியில் சேனல்கள் கடுமையாக போட்டி
போடுகின்றன. தங்களது சேனல் கவனிக்கப்பட வேண்டும்
என்றால், விபரீதமான சர்ச்சைகளை உருவாக்க வேண்டும்.

இதற்காக விரிக்கப்பட்ட வலையில் விரும்பிப் போய்
விழுகிற இரைகளாகவே பாஜக பிரமுகர்கள் இருக்கிறார்கள்….


கட்சியின் வளர்ச்சி என்பது, அதன் கட்டமைப்பு பலத்தில்
இருக்கிறது. கட்டமைப்பின் சக்தியாக இருக்கிற
தொண்டர்களுக்கு “தலைவன்” என்கிற உந்துசக்தி தேவையாக
இருக்கிறது.

தொடர் தோல்விகளிலும் கூட திமுகவின்
உந்துசக்தியாக கருணாநிதி திகழ்ந்தார். எம்.ஜி.ஆர்.
காலத்திற்கு பிறகும், அதிமுகவை பலமான கட்சியாக
வைத்திருக்கும் உந்துசக்தியாக ஜெயலலிதா இருந்தார்.

பாஜகவின் உந்துசக்தி மோடி தான். 2014-க்கு முன்பு
தமிழ்நாட்டில் நிலவிய தொய்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
ஆனால், 2014-க்குப் பிறகும் அக்கட்சியில் தொடரும் தேக்க
நிலைக்கு, தமிழக வாக்காளர்களை காரணமாக கூற
முடியாது.

———————————————————————————————————

நாட்டுப்பற்று மிக்க நண்பர்களே,

எந்த காரணத்தை முன்னிட்டும், சீனாவிலிருந்து
இறக்குமதியாகும் பொருட்களை வாங்காதீர்கள்…
பயன்படுத்தாதீர்கள்…

நம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழப்பதற்கும்,
நம் பாதுகாப்பு கேள்விக்குறியாவதற்கும் நாமே காரணமாக
இருக்கலாமா …??

தயவுசெய்து இந்த செய்தியை உங்களுக்கு வேண்டியவர்கள்
அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்…

———————————————————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

21 Responses to வெகு சுவாரஸ்யமான பாஜக பற்றிய விமரிசனம்…. கருத்துக்கு சொந்தக்காரர் யார்…?

 1. Sundar Raman சொல்கிறார்:

  இல . கணேசன்

 2. SAKTHIVEL சொல்கிறார்:

  NELLAI.KANNAN

 3. Ramanathan சொல்கிறார்:

  Thuglak Editorial

 4. தமிழன் சொல்கிறார்:

  சரியாகச் சொல்ல இயலவில்லை. அமித் ஷாவாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ‘அரசியல் அல்லாத தனிப்பட்ட பாஜக மேலிடக் கூட்டத்தில்’ இல கணேசன் இப்படிச் சொல்லியிருந்தாலும் ஆச்சரியமில்லை.

  தமிழக பாஜகவின் செயல்கள் பாஜகவை வளர்க்கும் நோக்கில் இல்லை. இவர்களெல்லாம் காங்கிரசின் பாடம் படித்தவர்கள். மத்தியில் பாஜக பதவியில் இருப்பதனால், இந்தக் குப்பைகள், கோபுரத்தின்மீது உட்கார்ந்து நியாயம் பேசுகின்றன. இது பாஜகவை எப்போதும் வளர்க்காது.

  இவர்கள் கடுமையாக திமுக, அதிமுக எதிர்ப்பு அரசியல் நிலை எடுக்கவேண்டும். ஆளுக்கொரு கருத்தைச் சொல்வதைத் தடை செய்யவேண்டும். மத்திய அமைச்சர் பதவி பொன்.ராவின் கேபபிளிட்டிக்கு வழங்கப்படவில்லை, அது பிச்சையிடப்பட்டிருக்கிறது. இதைப்போன்ற பதவியை தமிழகத்தில் நிறையப்பேர் அனுபவித்திருக்கிறார்கள், திரு’நாவுக்கரசர் முதற்கொண்டு. அதனால் அவர்கள் மட்டுமே வளர்ந்திருக்கிறார்கள். கட்சி வளர்ந்ததில்லை. பாஜக தமிழகத்துக்கு ஒரே ஒரு வாய்ஸ்தான் இருக்கவேண்டும். ஹெச் ராஜா கருத்து தமிழக பாஜக கருத்தல்ல என்று உடனே சொல்லும் துணிபு பாஜக தமிழக தலைவருக்கு இருக்கவேண்டும். வெறும்ன முகப்பூச்சு போட்டுள்ளவர்களின் காலில் விழுந்துகொண்டிருந்தால் (ரஜினி, கஜினி, கங்கை என்று) கட்சி வளராது, அதன் மதிப்பு அதல பாதாளத்துக்குச் செல்லும்.

  உங்களுடைய அசையாச் சொத்து இந்த தளம்தான். நியாயமாக பணி முழுவதும் இருந்த மத்திய தர வர்க்கத்துக்கு, இந்த வயதில் வேறு என்ன இருக்கப்போகிறது.

 5. LVISS சொல்கிறார்:

  I remember reading this article but I cannot recollect –I think it is Ila Ganesan –Or is it Gurumoorthy —

 6. Palaniappan சொல்கிறார்:

  Gurumoorthi

  • இளங்கோ சொல்கிறார்:

   கே.எம்.சார்,

   யார் என்று எனக்கு தெரியும். ஆனால் உங்கள் சொத்தை பறிக்கும்
   பாவத்தை நான் செய்ய விரும்பவில்லை. ஆகையால், நீங்களே
   அறிவித்த பிறகு நான் சொல்கிறேன் 🙂

 7. சேதுராமன் சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  இந்த கட்டுரையில் பாஜக தலைமைக்கு எதிராக எதுவும் இல்லை.
  தமிழக பாஜகவை மட்டும் தான் குறை கூறுகிறது.
  சு.சுவாமிக்கு இந்த அளவிற்கு பொறுமையாக analyse பண்ண வராது.
  வேறு யாரோ தமிழகத்தை சேர்ந்த intellectual தான்.
  குருமூர்த்தி அவர்களாக இருக்குமோ என்று பார்த்தால், அவர் இப்படி
  பாஜகவை விட்டுக் கொடுத்து எழுதுவாரா ?
  ஆச்சு என்னோடு ஒன்பது பேர். நீங்களே சொல்லி விடுங்களேன் சார்.

 8. Justin Robers சொல்கிறார்:

  வானதி சீனிவாசன்

 9. Dhamodharan Subramaniam சொல்கிறார்:

  thirumavalavan

 10. Ganpat சொல்கிறார்:

  ரஜினிகாந்த்? 🙂

 11. குலாம் ரசூல் சொல்கிறார்:

  நானில்லை ஐயா.

 12. Sridhar சொல்கிறார்:

  CROSSED 10 🙂

 13. R.Gopalakrishnan சொல்கிறார்:

  vasanthan perumal. thuglak

 14. R.Gopalakrishnan சொல்கிறார்:

  I saw your article just now. I am 15th in the order. I have no intention to get your immovabIe property.I am already late..I read that article many a times and I phoned to Thuglak office and conveyed my
  greetings to Vasanthan Perumal. Not only this article, there are other articles also..

 15. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ஆர்வத்துடன் பதிலளித்த அனைத்து நண்பர்களுக்கும்
  என் நன்றிகள்… சில நண்பர்கள், கிட்டத்தட்ட சரியான இடத்தை தொட்டு விட்டனர்…இத்தனைக்கும் சம்பந்தப்பட்ட இதழை படிக்காமலே…பாராட்டுகள்.

  துக்ளக் இதழை படித்திருந்ததால், ( பலமுறை… 🙂 )
  திரு.கோபாலகிருஷ்ணன், சரியாகச் சொல்லி விட்டார்.

  இந்த கட்டுரையைப்பற்றி என் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், துக்ளக் ஆசிரியர் திரு.எஸ். குருமூர்த்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, திரு.வசந்தன்
  பெருமாள் இந்த கட்டுரையை எழுதி இருப்பாரென்று தான் சொல்வேன்..

  பாஜக ஆதரவு பத்திரிகையாக துக்ளக் இருந்தாலும் கூட, இந்த கட்டுரை தமிழக பாஜகவைப்பற்றி மிக நேர்மையாக விமரிசித்திருக்கிறது என்றே நான் எண்ணுகிறேன்.
  தமிழக பாஜகவை பொருத்தவரை திரு.எஸ்.குருமூர்த்தி அவர்களின் பார்வை மிகச்சரியானது என்பதே என் கருத்து.

  இந்த கட்டுரை மூலம் திரு.குருமூர்த்தி அவர்களின் அகில இந்திய பாஜகவின் செயல்பாடுகளை பற்றிய பார்வையும் வெளிப்படுகிறது… உள்கட்சி விவகாரங்களை விவரமாக அலசி இருக்கிறார் என்கிற வரையில் அதுவும் பாராட்டிற்குரியதே….!!!

  ( பொதுவாக ” பாஜக ” என்கிற கட்சியை பற்றியும், அதன் அகில இந்திய தலைமையை பற்றியும், நம்முடைய மதிப்பீடு வேறு என்பதையும் இங்கே நான் அவசியம் சொல்லி விட விரும்புகிறேன்…!!! )

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 16. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ஒரு முக்கியமான விஷயத்தை ( 🙂 ) சொல்ல மறந்து விட்டேன்.

  “அசையா சொத்து அனைத்தையும் கொடுத்து விடுவது” பற்றியது….

  அதைப்பற்றி நான் சொன்னது வேடிக்கைக்காகத்தான் என்பதை உணர்ந்து – நண்பர்கள் அனைவரும் என் மீது கருணை கூர்ந்து என் சொத்து என்னிடமே இருக்கட்டும் என்று சொல்லி விட்டமைக்கு மிக்க நன்றி…!!!

  40 ஆண்டுக்கால அரசு பணிக்குப்பிறகு, நான் வாங்க முடிந்த ஒரே ஒரு 2 BHK குடியிருப்பையும், நான் வாங்கும்போதே, என் பெண்ணின் பெயரிலேயே பதிவு செய்து விட்டேன்…
  ( நான் போன பிறகு, உரிமையாளர் பெயரை மாற்ற குடும்பம்
  அநாவசியமாக அலைய வேண்டாமே என்று….! )
  எனவே, என் பெயரில் “அசையா சொத்துக்கள்” எதுவும் இல்லை என்பதையும் தெரிவித்து விடுகிறேன்..!

  பி.கு.
  // உங்களுடைய அசையாச் சொத்து இந்த தளம்தான். நியாயமாக பணி முழுவதும் இருந்த மத்திய தர வர்க்கத்துக்கு, இந்த வயதில் வேறு என்ன இருக்கப்போகிறது.//

  -என்று சொன்ன நண்பர் தமிழனுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.