சரித்திரப் புதையல்கள்….( பகுதி-2 ) -டெல்லியின் முதல் உருது பத்திரிகை…!!!மொகலாய மன்னர்களின் வரிசையில் கடைசியானவரான
பகதூர் ஷா-2 ( 1775 – 1862 ) தனது 62-வது வயதில்,
1837-ஆம் ஆண்டு தான் ஆட்சிக் கட்டிலில் அமர முடிந்தது.

அவரது தந்தையான 2-வது அக்பர் ஷா 1837-ல் இறந்தபோது,
மூத்த மகன் உயிரோடு இல்லை என்பதால்,
2-வது மகனான பகதூர் ஷா-2 ஆட்சியில் அமர ஆங்கிலேய
ஆட்சி பெரிய மனது பண்ணி ஒப்புதல் கொடுத்தது.

இந்தியாவின் பெரும்பாலான ராஜ்ஜியங்கள் ஏற்கெனவே
ஆங்கிலேயர் வசம் வந்திருந்தன. பகதூர் ஷாவிற்கு
ஆங்கிலேயர் பென்ஷன் கொடுத்து விட்டு, ராஜ்ஜியத்தின்
நிர்வாகத்தை தங்கள் வசம் எடுத்துக் கொண்டு விட்டனர்.
ஒரு சிறு பகுதியில் மட்டும் பெயருக்கு வசூல்
பண்ணிக்கொள்ளவும், தனது சொந்த பாதுகாப்பிற்கென
ஒரு சிறுபடையை வைத்துக் கொள்ளவும் பகதூர் ஷாவிற்கு
அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

சாதாரணமாக மாமன்னருக்கு உள்ள பணிச்சுமை எதுவும்
இல்லாததால், பகதூர் ஷா, இசை, கலைகள், கவிதை,
இலக்கியம் என்று இலக்கியவாதிகளுடனும்,
கலைஞர்களுடனும் தன் நேரத்தை செலவிட்டுக்
கொண்டிருந்தார். அவர் காலத்து கவிஞரான ‘மிர்சா காலிப்’
-யிடமிருந்து கவிதைகள் எழுத கற்றுக் கொண்ட அவர்
தானே நிறைய கவிதைகளும் இயற்றினார். தனக்கு “ஸாஃபர்”
என்று ஒரு புனைப்பெயரையும் வைத்துக் கொண்டார்…
(Bahadur Shah Zafar )

பகதூர் ஷாவிடம் இருந்த ஒரு சிறப்பான குணம்…
மாமன்னர் அக்பருக்குப் பிறகு, இந்துக்களோடு மிகுந்த
நல்லுறவு பாராட்டினார்….இந்து பண்டிகைகளை கூட மன்னர்
மக்களோடு சேர்ந்து கொண்டாடினார்.

1857, மே, 10-ல் மீரட்டில் துவங்கியது சிப்பாய்கலகம் என்று
அழைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போர். பசு, பன்றி
மாமிசத்தின் கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்களை
பயன்படுத்த மாட்டோம் என்று – இந்து மற்றும் முஸ்லிம்
சிப்பாய்கள் ஒன்றிணைந்து கலகத்தில் இறங்கினர்.

இது முக்கிய காரணமாக சொல்லப்பட்டாலும், கிழக்கிந்திய
கம்பெனியில் இருந்த இந்திய சிப்பாய்களுக்கு உரிய
மரியாதை கொடுக்கப்படாமல் மிகவும் கேவலமாக
நடத்தப்பட்டதும், பல்வேறு கொடுமைகளுக்கு அவர்கள்
ஆளானதும், மிகக்குறைந்த சம்பளமே கொடுக்கப்பட்டதும்
போன்ற இதர பல காரணங்கள் இந்தக் குமுறலின்
பின்னணியில் இருந்தன. ஒழுக்கமின்மையை ( Indiscipline in
the army ) காரணமாக காட்டி, சில சிப்பாய்களுக்கு மரண
தண்டனை கொடுக்கப்பட்டதும் ஒரு முக்கிய காரணம்.

இந்த சிப்பாய் கலகம் என்றழைக்கப்பட்ட முதல் சுதந்திர
போரில் மங்கள் பாண்டே, ராணி லட்சுமி பாய், தாத்தியா
தோபே, நானா சாகேப் ஆகியோர் முன்னணியில் நின்றனர்.

இந்த போருக்கு தலைமையேற்று தளபதியாகும் பொறுப்பு
டெல்லி மொகலாய மன்னர் பகதூர் ஷாவின் தோள்களில்
சுமத்தப்பட்டது…

மீரட்டில் துவங்கிய கலகம், உத்திர பிரதேசம், மத்திய
பிரதேசம், டெல்லி, குர்கான் என்று பல ராஜ்ஜியங்களுக்கும்,
மிலிடரி கன்டோன்மெண்ட்களுக்கும் பரவியது. பிரிட்டிஷாரின்
கொடுமையில் கொதித்துப் போயிருந்த பொது மக்களும்,
லட்சக்கணக்கில் இதில் சேர்ந்து கொண்டனர்.

—————

இந்த கலகம் துவங்கிய காலத்தில் டெல்லி எப்படி இருந்தது ?

மௌல்வி மொஹம்மத் பஃகர், (1790 – 1857 ) டெல்லியில்
வசித்து வந்த ஒரு மதத்தலைவர். மன்னர் பகதூர் ஷாவின்
சபையில் அவருக்கும் ஒரு இடம் இருந்தது. அவரது
தந்தையான மௌலானா மொஹம்மத் அக்பர் அவர்களிடம்
துவக்க கல்வியை கற்று, பின்னர் டெல்லி கல்லூரியில்
உயர்கல்விபெற்று, பெர்சியன், அரபி மற்றும் உருது
மொழிகளில் சிறந்த புலமை பெற்ற எழுத்தாளராக
உருவெடுத்தார்.

துவக்கத்தில் சில வருடங்கள் டெல்லி காலேஜில்
ஆசிரியராகவும், பின்னர் பிரிட்டிஷாரிடமும் பணியாற்றிய
பின்னர், தானே சொந்தமாக 1934-ல் ஒரு லித்தோகிராபி அச்சு
எந்திரத்தை வாங்கி, 1836-37-ல் – ” டெல்லி உருது அக்பர் ”
என்கிற பெயரில் ஒரு பத்திரிகையை துவக்கினார்.

டெல்லியின் முதல் உருது மொழி பத்திரிகையான இதன்
சந்தா கட்டணம் அப்போது மாதத்திற்கு 2 ரூபாய்.
ஆறு மாத சந்தா கட்டணம் 11 ரூபாயாகவும், ஒரு வருட
சந்தா 20 ரூபாயாகவும் இருந்தது. அதற்கு முன்பாகவே
டெல்லியில் இயங்கி வந்த Sultanul Akhbar, the Sirajul Akhbar
and the Sadiqul Akhbar – ஆகிய பத்திரிகைகள் பெர்சிய
மொழியில் தான் வெளிவந்தன…

( 1822, மார்ச், 27-ல் கல்கத்தாவில் துவங்கப்பட்ட
‘ஜானே ஜஹான்னுமா’ ( Jam-e-Jahan Numa ), என்னும்
உருது பத்திரிகை இந்தியாவின் முதல் செய்தி பத்திரிகை
என்கிற பெருமையை பெற்றாலும், டெல்லியின் முதல் உருது
பத்திரிகை என்கிற பெருமையை ‘டெல்லி உருது அக்பர்’
பெற்றது….)

டெல்லியில், துவக்கத்தில் பிரிட்டிஷார் கடுமையான
பின்னடைவை சந்தித்தனர். அருகிலிருந்த மீரட்டிலிருந்து
கிளம்பிய கலகப்படை சிப்பாய்கள், டெல்லியை நோக்கி
முன்னேறினர்….தாங்கள் வரும் வழியில் இருந்த சிறைகளை
எல்லாம் உடைத்து, கைதிகளை விடுவித்தனர்.

பிரிட்டிஷாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சிப்பாய்களும்,
விடுதலை பெற்ற சிறைக்கைதிகளும்,
பொதுமக்களுமாக சேர்ந்து ஒரு பெரும் கூட்டம்
ஆவேசத்துடன் அனைத்தையும் துவம்சம் செய்யத்
துவங்கியது. பிரிட்டிஷார் பின்வாங்கி ஓடத்துவங்கினர்.

போர் துவங்கிய பிறகு , மௌல்வி பஃகர்,
ஜூலை 12,1857 -ஆம் தேதியிலிருந்து செய்தி
பத்திரிகையின் பெயரை ” Akhbar-uz Zafar ”
என்று மாற்றினார். டெல்லி மொகலாய மன்னர்
பகதூர் ஷாவின் புனைப்பெயர் “Zafar” என்பதால்,
புரட்சிக்கு தலைமை தாங்கிய மன்னரை கௌரவிக்கும்
விதமாக பத்திரிகையின் பெயர் மாற்றப்பட்டது.

(இந்த பத்திரிகையின் ஒரு பக்கத்தின் ஒளிநகல் கீழே…
இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு எனக்கு கிடைக்கவில்லை…
உருது மொழி தெரிந்த வாசக நண்பர்கள் யாராவது
இதனை புரிந்துகொள்ள முடியுமென்றால், அதன் சுருக்கத்தை
தமிழில், பின்னூட்டத்தில், தருமாறு கேட்டுக்கொள்கிறேன்..)


அக்கம் பக்கத்து ஊர்கள், ராஜ்ஜியங்களிடமிருந்து
புரட்சி பற்றிய தகவல்கள் பெறப்பட்டு, அதில் அச்சிட்டு
வெளியிடப்பட்டன. பல பிரதிகள் இனாமாகவே
விநியோகம் செய்யப்பட்டன. பிரிட்டிஷ் ஆதிக்கத்தை
எதிர்த்து கட்டுரைகள் வெளியிடப்பட்டன. பிரிட்டிஷ்
ஆதிக்கத்தை எதிர்த்து போரில் இறங்குமாறு மக்கள்
தூண்டப்பட்டனர்….

அதுவரை சனிக்கிழமைகளில் வெளியிடப்பட்டு வந்த
பத்திரிகையை மௌல்வி பஃகர், பிரிட்டிஷாரை அவமதிக்கும்
விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில்
வெளியிடத்துவங்கினார்….!!! ( ஞாயிற்றுக் கிழமைகளில்
வேலை நடப்பது பிரிட்டிஷாருக்கு ஒத்து வராத விஷயம்..!)

மார்ச் 8, 1857 தொடங்கி, செப்டம்பர் 13, 1857 வரையிலான
‘டெல்லி உருது அக்பர்’ பத்திரிகையின் பிரதிகள்,
சேகரிக்கப்பட்டு இப்போதும் டெல்லி National Archives -ல்
வைத்து பாதுகாக்கப்படுகின்றன.

ஆனால், புரட்சி அதிக நாட்கள் தாக்குப் பிடிக்கவில்லை.
பக்கத்து ராஜ்ஜியங்களிடமிருந்து உதவி வரவில்லை…
சீக்கியர்கள் போரில் கலந்து கொள்ளவில்லை…
ஒருங்கிணைந்த தலைமை உருவாகவில்லை…
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது…
போராட்டக்காரர்களிடம் ஆயுதங்கள் இல்லை…
பிரிட்டிஷாரின் துப்பாக்கிகள், பீரங்கிகளுக்கு முன்னே –
கத்தியுடன் திரிந்த புரட்சிக்காரர்களால் தாக்குப்பிடிக்க
முடியவில்லை….

நிலைமை தலைகீழாக மாறியது. இதற்குள்ளாக,
கூடுதல் பிரிட்டிஷ் துருப்புகள் பர்மாவிலிருந்து
வரவழைக்கப்பட்டன….

(தொடர்கிறது – பகுதி – 3-ல் )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சரித்திரப் புதையல்கள்….( பகுதி-2 ) -டெல்லியின் முதல் உருது பத்திரிகை…!!!

  1. இளங்கோ சொல்கிறார்:

    சுவாரஸ்யமாக இருக்கிறது.
    நீங்கள் சொல்வது போல், இதையெல்லாம் பள்ளியிலோ,
    கல்லூரியிலோ படிக்க சான்ஸ் இல்லை தான்.

  2. Tamilian சொல்கிறார்:

    நாம என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆண்டவரகள நினைத்தாரகளோ அவையே நமக்கு பாடமாக வைத்தார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.