சில ஆயிரம் கோடி வருமானம் …. வெள்ளையும் – கருப்பும் – (பகுதி-2)

இது இடுகையின் முதல் பகுதியில் போட நினைத்து,
விடுபட்டுப்போன ஒரு வீடியோ –

a luxurious, heated, self-cleaning pool that was converted from an old limestone rock quarry…at Berkshires (Massachusetts)

………………………….

முதல் பகுதியை முடித்து பதிவேற்றியவுடனேயே இரண்டாவது பகுதியையும் எழுதி விட்டேன்…. ஆனால், அதற்குள்ளாக குஜராத்
ராஜ்ய சபா தேர்தல் பற்றி சூட்டோடு சூடாக எழுத வேண்டிய
அவசியம் வந்து விட்டதால் நேற்று அதைப்பற்றிய ஒரு இடுகையை எழுதி பதிவு செய்தேன்.

இடையில், நண்பர் தமிழனிடமிருந்து தனிப்பட ஒரு மடல்
வந்தது. நான் சொல்ல வந்ததில் சிலவற்றை அவரும் எழுதி
இருக்கிறார்…. கருத்தொற்றுமை….!!! சில விஷயங்கள்
நான் முயற்சிக்காததையும் எழுதி இருக்கிறார்…

அவரது ஆர்வத்தை பிரதிபலிக்கும் வண்ணம் நண்பர்
தமிழனின் மடலிலிருந்து சில பகுதிகளை இங்கே தர
விரும்பினேன். எனவே பகுதி-2 ஐ கொஞ்சம் மாற்றி
இருக்கிறேன்.

————————
நண்பர் தமிழனின் மடலிலிருந்து –

உங்கள் முதல் இடுகையைப் பார்த்தவுடனேயே எனக்குத்
தோன்றியது இதுதான். அங்கும் பளிங்கு மலைகள்
இருக்கின்றன. அதனையும் காட்டியுள்ளீர்கள். அதிலிருந்து
தேவைக்கான பளிங்கு மட்டும் எடுக்கப்பட்டு அவை
சிலையாகவோ அல்லது மற்றவையாகவோ
கலைப்பொருட்களாக உருவாக்கப்படுகின்றன. They have that
responsibility to nature.

ஆனால் இங்கு, கற்கள், அதே காரணத்துக்காக வகை தொகை இல்லாமல் வெட்டி எடுக்கப்பட்டு பிற தேசங்களுக்கு விற்பனை
செய்யப்படுகின்றன. ஒரு சில வருடங்களில் அங்கு மலை
இருந்த இடமே தெரியாமல் எல்லாவற்றையும் பேராசையால்
விற்றுவிடுகின்றனர். தேசச் சொத்தை மூடர்களாக இப்படி
விற்கின்றனரே என்று அதைப்பற்றி எழுதப்போகிறீர்கள் என்று
நான் நினைத்தேன்.

நாம பொதுவா கல்லிலே கலைவண்ணம் கண்டது தமிழினம்
என்று சொல்லுவோம். நம்மிடம் அதற்கான கற்கள் இருந்தன.

அதுபோல், கிரேக்கத்தில் மார்பிள் கொண்டு ஏராளமான
சிலைகள் செய்யப்பட்டுள்ளன (கிறித்து பிறப்பதற்கு
முன்பிருந்தே). நம் சிலைகளில் ஒரு பெரிய குறை
என்னவென்றால், ஒருவர் எப்படி இருந்தாரோ அதேபோன்ற
சிலை நம்மிடம் செய்யும் மரபு இல்லை (அனேகமாக).

அதனால்தான் சோழ அரசர்களோ, ஏனைய அரசர்களோ
அல்லது ஆழ்வார் நாயன்மார்களோ எப்படி இருந்திருப்பார்
என்பதற்கான சரியான சிலைகள் நம்மிடம் கிடையாது.

கிரேக்க மரபு, அரசர்களை, ஞானிகளை சரியான உருவ
அமைப்பு தெரியும்படி சிலை வடிப்பது. அப்படிப்பட்ட
சிலைகள் ஏராளமாக இருக்கின்றன.

நம்முடைய கிருஷ்ணாபுர சிலைகளில், குதிரையின்
வாயினுள், உருண்டையான கல் இருப்பது, சிலையின் ஒரு
பாகத்தில் நூல் விட்டால் இன்னொரு பாகத்தில் வருவது
போன்ற திறமைகள் காட்டப்பட்டிருக்கின்றன. அதேபோல்
பளிங்கிலும் ஏராளமான திறமைகளை அந்தச் சிற்பிகள்
வடித்திருக்கின்றனர்.

———————————————————

இங்கு கடந்த சுமார் 25 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு
வந்த இரண்டு கட்சிகளையும் சேர்ந்த முன்னாள்
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டங்கள், அவர்களுடன்
கூட்டு சேர்ந்த பல ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், இதர துறை
அதிகாரிகள் ஆகியோர் சேர்ந்து நிகழ்த்திய பல ஆயிரம்
கோடி கூட்டுக் கொள்ளையின் விளைவாக –

தமிழ்நாட்டின் கனிம வளம் சுரண்டப்பட்டதும்,
கடந்த பல ஆண்டுகளாக கிரானைட் சுரங்கங்களில்
நடைபெற்ற சட்டவிரோத நடவடிக்கைகள், கள்ளத்தனமான
பரிமாற்றங்கள் குறித்து எந்தவித உருப்படியான
நடவடிக்கைகளும் இல்லாமல் இருந்ததும் அனைவரும்
அறிந்ததே….

கடைசியாக, திரு.சகாயம் அவர்களின் பொறுப்பில், (லீகல்
கமிஷனராக) சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட
குழு, கடந்த பல வருடங்களில் சுமார் ஒரு லட்சம் கோடி
ரூபாய் அளவிற்கு இதனால் நாட்டுக்கு நஷ்டம்
ஏற்பட்டிருக்கிறது என்று தனது இறுதி அறிக்கையில் கூறி
இருந்தது.

இது ஏற்கெனவே நடந்து விட்ட நிகழ்வு….

சம்பந்தப்பட்டவர்கள் உரிய முறையில் அடையாளம்
கண்டுகொள்ளப்பட்டு, அவர்கள் மீது சட்டபூர்வமான
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வழக்குகள் தொடரப்பட்டு,
தண்டனை வாங்கித்தருவது – நடக்கும் என்கிற நம்பிக்கை
போய் விட்டது.

பல முறைகேடுகள் வெளிப்படுத்தப்பட்டதன் விளைவாக,
கிரானைட் வெட்டி எடுக்கவும், ஏற்றுமதி செய்யவும் –
சில தொழில் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட லைசென்சை
தமிழக அரசு ரத்து செய்ததுடன் அவர்களால் தமிழகத்தின்
பல பகுதிகளில், முக்கியமாக மதுரையை சுற்றியுள்ள
பகுதிகளில், வெட்டி குவிக்கப்பட்டுள்ள கிரானைட்
கற்களையும் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது….

கடந்த சுமார் 5 ஆண்டுகள், இவை வெட்டப்பட்ட
இடங்களிலேயே – போட்டது போட்டபடி கிடக்கின்றன.

பல்வேறு முறைகேடுகள் குறித்த வழக்குகளில் இதன்
உரிமையாளர்கள் சிக்கி இருக்கிறார்கள். இது குறித்த
நூற்றுக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கி
இருக்கின்றன. ஏற்கெனவே பல ஆண்டுகள் கழிந்துவிட்ட
நிலையில், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாமல், இனி
இன்னும் எத்தனை ஆண்டுகள் இப்படியே கழியும் என்பது
யாருக்கும் தெரியாமல், அரசுக்கும் இதில் எந்தவித
அக்கறையும் காட்டாமல் காலம் கடந்து கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட கடந்த ஐந்து ஆண்டுகளாக –
கிரானைட் வெட்டி எடுக்கும் தொழில் முற்றிலுமாக நின்று
விட்டது. அந்த துறையில் வேலை செய்து வந்த பலருக்கும்
பணி வாய்ப்பு பறிபோய் விட்டது. அதைச் சார்ந்து நடந்து
வந்த பணிகளில் ஈடுபட்டோரும் வருமானத்தை இழந்து
விட்டனர்.

இந்த நிலையில் இனியும் தாமதமின்றி –

1) இந்த கிரானைட் கற்களை உரிய தொழில் வல்லுநர்களின்
ஆலோசனையுடன், தரம் பிரிக்கப்பட்டு, அவை
வெளிப்படையான, கணினி ஏல முறையில் ஆன்லைன்
மூலம் உலக அளவில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டால் –
தமிழக அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம்
கிட்டும். தமிழக அரசின் கடன்சுமையும் கொஞ்சம் குறையும்.

2) தொடர்ந்து கிரானைட் எடுக்கும் தொழில், உரிய
முறையில், அவசியமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு,
வெளிப்படையான அரசு டெண்டர்கள் மூலம் இயங்க
அனுமதிக்கப்பட்டால், அதன் மூலம் அரசுக்கு தொடர்ச்சியான
வருமானம் கிட்டும். ஆனால், கண்மண் தெரியாமல், கண்ட
இடத்திலெல்லாம் ( கண்மாய், நீர் வரத்து கால்வாய்களை
எல்லாம் கூட தகர்த்து ) வெட்டுவது சுத்தமாக தவிர்க்கப்பட வேண்டும்

3) சில ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும், வருமானமும்
கிட்டும். இது பொதுவாக தமிழக பொருளாதாரத்தில் சிறிய
அளவிலேனும் முன்னேற்றத்தை கொண்டு வரும்…

இந்த பிரச்சினையை, சுத்தமாக கண்டுகொள்ளாமலே
இருப்பதை விட –

எந்த முறையில் விரைவாக முடிவுக்கு கொண்டு வரலாம்
என்று தமிழக அரசு யோசித்து, பயனுள்ள முடிவுகளை
எடுப்பது அவசியம்… அவசரமும் கூட…!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to சில ஆயிரம் கோடி வருமானம் …. வெள்ளையும் – கருப்பும் – (பகுதி-2)

 1. தமிழன் சொல்கிறார்:

  நன்றி கா.மை. சார். நான், உங்கள் பதிவின் நோக்கத்தைத் திசை திருப்பிவிட்டேனோ என்ற சந்தேகம் எழுந்துவிட்டது. ஆனாலும், எதுவும் அரசியல் விஷயத்தில் முடிவதும் ஒரு வகையில் நல்லதுதான்.

  நான் சில பல நாடுகளைச் சுற்றிப்பார்த்தவன் (வேலை விஷயமாகப் போகும்போது ஏதாவது சிலவற்றையாவது பார்த்துவிடுவேன்). பாரிசில், 400 வருடங்களுக்கு முந்தைய சுவரின் ஒரு பகுதி, ஒரு கட்டிடத்தின் இடையில் உள்ளது. அரசு அதை மாற்றுவதற்கோ, இடிப்பதற்கோ அனுமதி தரவேயில்லை. அந்தக் கட்டிடம் பலர் கைமாறி இப்போது ஒரு ஃபர்னிசர் கான்செப்டிடம் உள்ளது. ஆனால் அந்தச் சுவர் பகுதியை மட்டும் ஒரு ‘அறிவிப்போடு’ அப்படியே வைத்திருக்கிறார்கள். (அதன் படத்தை உங்களிடம் பிறகு பகிர்கிறேன்). எதற்கு எழுதுகிறேன் என்றால், வரலாற்றுச் சின்னங்களை அப்படியே வைத்திருக்கும் கலாச்சாரம், அதையும் ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் ஆக மாற்றி, அதனைப் பராமரிக்கும் செலவுக்கும், அதன் மூலமாக நாட்டுக்கு வருமானத்துக்கும் வழி செய்துகொள்கிறார்கள். வெளி நாட்டுப் பயணிகள் வருவது, பலவித தொழில்கள் வளர வழிவகுக்கும். அதற்கு, மக்களிடம் முதலில் அதைப்பற்றிய விழிப்புணர்வு வேண்டும். இதுதான் பாடப்புத்தகங்களில் சொல்லித்தரப்படவேண்டும். பல நாடுகளில், 2 வருடங்கள் கட்டாய மிலிட்டரி சேவை உண்டு. அதன் காரணம், போர் அல்ல. கட்டுப்பாடு, தேச பக்தி மக்கள் மனதில் வரும் என்பதுதான். நம்ம நாட்டில் இது இல்லாததுனால, எல்லாவற்றையும் குறுகிய கால நோக்குடன் அணுகுகின்றனர். அதனால்தான் யாரேனும் வெளி நாட்டினரோ அல்லது வெளி ஊர் ஆட்களோ வந்தால், தங்க முட்டையிடும் வாத்தை அறுப்பதுபோல, உடனே அவர்களை ஏய்த்து 10 ரூ அதிகமாக சம்பாதிக்க நினைக்கின்றனர் (சம்பாதித்து அதனால் அவர்கள் குடும்பம் உருப்படுமா என்றால் அது இல்லை, உடனே அது டாஸ்மாக்குக்குச் சென்றுவிடுகிறது). இதனை நிச்சயமாக ஒரு நல்ல அரசுதான் சரிசெய்ய முடியும்.

  மேலே உள்ள காணொளியில், எதேச்சயாக அமைந்த குவாரியில், ஒரு நீச்சல் குளம்போல் செய்து, சுற்றிவர அழகுற அமைத்து, அதனையும் ஒரு சுற்றுலாத் தளமாக மாற்றி, நாட்டுக்கு காசு வர வைத்துவிடுவர் (பணப் புழக்கத்துக்கு வழி செய்துவிடுவர்).

  நான் எதிர்மறையாகச் சிந்திக்கிறேன் என்று நினைக்காதீர்கள்.
  1. எத்தனை தங்கம், பணம், கஞ்சா/போதை வஸ்துக்கள் போன்ற பல பொருட்களை கஸ்டம்ஸ், போலீஸ் போன்றவர்கள் கைப்பற்றுகின்றனர். அதனை ஆடிட் செய்தால் எத்தனை அபேஸ் ஆகிவிட்டது என்று தெரியும். போலீஸ் ஸ்டேஷங்களில் கணக்குக்காகப் பிடித்துவைக்கப்பட்ட வாகனங்களில் எல்லா முக்கிய பாகங்களும் காணாமல்போய்விடும்.
  2. இந்த கிரானைட் பிரச்சனையே அரசியலுக்காக உருவாக்கப்பட்டது. இன்னும் சில வருடங்களில் எல்லோரும் மறந்துவிடுவோம். கைப்பற்றப்பட்ட அனேகமான எல்லா கற்களும் காணாமல்போயிருக்கும்.
  3. பிரகஸ்பதிகள் (இந்த வெட்டி அதிகாரிகள்தான்), சென்னை சில்க்ஸ் தீப்பிடித்தபின், அதற்கு 7 மாடி அனுமதி இல்லை, 4 மாடி அனுமதிதான் உண்டு என்று சொன்னார்கள். நான் கேட்கிறேன், இவர்களெல்லாம் கண்தெரியாத கபோதிகளா? ஏன்னா, வேலையில் அலட்சியம், காசு வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பது (இவர்கள் மட்டுமல்ல போலீசும்தான்). பிரச்சனை வந்தால், அப்போது குற்றம் சுமத்துவது. போலீசுக்குத் தெரியாதா குட்கா விற்கிறார்கள் என்று. அதிகாரிகள், அதிகார வர்க்கம் செய்யும் வேலையில் அலட்சியம் காண்பிக்கிறார்கள்.

  எனக்கு கிரானைட் என்ற பகுதியைப் படித்தபின்புதான் இதெல்லாம் தோன்றியது. பொதுவாக, நல்ல கல்வி கற்ற புத்திசாலிகளின் குழந்தைகள்தான் புத்திசாலிகளாக இருக்கும் (கல்வி கற்றிருக்கவேண்டும் என்று அவசியமில்லை). அத்தகைய புத்திசாலிகள் பெரும்பாலும் சாதாரண வேலையிலேயே வாழ்வைக் கழித்து, அதிருஷ்டமிருந்தால் ஒரு வீடு மற்றும் சாதாரண ஓய்வூதியம் சம்பாதித்திருப்பார்கள். ஆனால், ஒரு டிகிரி கூட முடிக்கத் தெரியாத அதி புத்திசாலிகளான ஸ்டாலின், உதயனிதி, அழகிரி, அவரோட நிதி, அப்புறம் குடும்பத்தில் மற்ற நிதிகள் போன்றவர்கள், கல்லூரி நடத்தும் அளவு, குவாரிகள் நடத்தும் அளவு, நிறைய பிஸினெஸ் நடத்தும் அளவு பல்லாயிரம் கோடி பணக்காரர்களாகிவிடுகின்றனர். அப்புறம் நம்ம நாடு எப்படி முன்னேறும்?

 2. selvarajan சொல்கிறார்:

  // a luxurious, heated, self-cleaning pool that was converted from an old limestone rock quarry…at Berkshires //. .. இது அங்கே ஆக்கபூர்வமான செயல் .. ஆனால் இங்கே …. //சிதைக்கப்பட்ட தொல்லியல் சின்னங்கள்

  கிரானைட் கற்களை அகழ்வதற்காக விவசாய நிலங்களைத் தோண்டிப்போட்டனர். குளம், குட்டை, ஏரி, நீர்வரத்து வாய்க்கால் போன்றவற்றை நாசமாக்கினர். அரிய கற்சிற்பங்களும் கல்வெட்டுகளும் நிரம்பிய தொல்லியல் சின்னங்கள் வெடிமருந்து வைத்துச் சிதற வைத்துச் சின்னாபின்னமாக்கப்பட்டன. ஆலயங்களையும் உடைத்தனர். பல்லுயிரிகளின் வாழிடங்களை நாசப்படுத்தினர். சுற்றுச்சூழலை மாசுபடுத்தினர். வெடிவைத்துத் தகர்த்ததில் பலருடைய வீடுகள் சேதம் அடைந்தன. அவர்கள் இழப்பீடு கேட்டபோது தர மறுத்ததுடன் இனி குடியிருப்பதே ஆபத்து என்ற நிலையிலிருந்த வீடுகளை அடிமாட்டு விலைக்கு வாங்கிச் சேர்த்துக்கொண்டனர். விவசாய நிலங்களையும் இப்படிக் கையகப்படுத்தினர் என்கிறது சகாயம் அறிக்கை.

  திருவாதவூர், கீழத்தூர், கீழவளவு, அரிட்டிப் பட்டி, சமணர் குகைகள், கல் படுக்கைகள், தமிழ் பிராமிக் கல்வெட்டு எழுத்துகள் போன்றவை,// நாசமாக்கப்பட்டன … என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது வேதனையான செய்தி ….

  வெட்டியவனுக்கும் — ஆள்பவனுக்கும் — இவ்வளவு கொள்ளை நடந்தும் – பல பாரம்பரிய சின்னங்களும் — மற்றவைகளும் அழிக்கப்படுகின்ற வரை வேடிக்கைபார்த்த மக்களுக்கும் ஒரு உணர்வே இல்லாமல் போனது ஏனோ .. ? காசே குறி என்பதால் தானே … ?

  திரு சகாயம் அவர்களை இதற்காக பணியமர்த்தி அறிக்கை அளிக்க சொன்ன நீதிமன்றம் — அறிக்கை சமர்ப்பித்து இதுநாள்வரை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எந்தவித தண்டனையும் தராமல் இருப்பதின் மர்மம் என்ன … சகாயம் மற்றும் அவரோடு பணிபுரிந்தவர்களுக்கு வரும் கொலை மிரட்டல்களும் — அவரது குழுவில் இருந்த பார்த்தசாரதி என்பவர் உயிரிழந்ததில் சந்தேகம் உள்ளதாகவும் சகாயம் தற்போது தெரிவித்துள்ளதையும் பார்க்கும் போது ” கிரானைட் கொள்ளை ஆசாமிகள் எப்பேர்பட்டவர்கள் என்பதும் — அரசு — மற்றதுறைகளும் அவர்களை சார்ந்தே இருப்பதும் நிதர்சனமான உண்மைதானே … விடிவு எப்போது ….?

 3. avudaiappannav சொல்கிறார்:

  diravida katchikkal thaan karanam enpathai een maraikkirkal

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அய்யா ஆவுடையப்பனாரே,

   கருத்து கூறும் முன்னர் இடுகையை ஒழுங்காக படிப்பது அவசியம்.

   மேலே இடுகையில் நான் எழுதியிருப்பதை, நீங்கள் ஒழுங்காக பார்ப்பதற்காக மீண்டும் ஒருமுறை கீழே தருகிறேன் –

   //இங்கு கடந்த சுமார் 25 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு
   வந்த இரண்டு கட்சிகளையும் சேர்ந்த முன்னாள்
   அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டங்கள், அவர்களுடன்
   கூட்டு சேர்ந்த பல ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், இதர துறை
   அதிகாரிகள் ஆகியோர் சேர்ந்து நிகழ்த்திய பல ஆயிரம்
   கோடி கூட்டுக் கொள்ளையின் விளைவாக – //

   இதில் மறைப்பு எங்கே வந்தது…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.