எழுத்தறிவித்தவன் இறைவன் ….???


அரசாங்கத்திடமிருந்து சம்பளம் பெறுகிறார் என்பதால்,
ஆசிரியர் ஒருவர் தன்னை சாதாரண அரசு ஊழியர் மட்டுமே
என்று கருதிக்கொள்ளலாமா…?

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்போது,
அதில் ஆசிரியர்களும் கலந்து கொண்டு தங்கள் கற்பித்தல்
பணியை நிறுத்தலாமா…?

அண்மையில் நிகழ்ந்த போராட்டங்களில் கலந்துகொண்ட
சில ஆசிரியர்கள் ( பெண் ஆசிரியர்கள் உட்பட ) ஆவேசமாக
கூச்சல்களில் ஈடுபட்டதும், எதிர்ப்பு கோஷங்களை
கிளப்பியதும், தொலைக்காட்சி கேமராக்கள் தங்களை படம்
பிடிக்கின்றன என்று தெரிந்தும் குத்தாட்டங்களில் ஈடுபட்டதும்

மிக மிக வேதனை அளிக்கும் நிகழ்வுகள்…!

மனித வாழ்க்கையில் மிக உயர்ந்த பணிகள் இரண்டு –

மருத்துவப் பணியும், ஆசிரியப்பணியும்…
இந்த பணிகளைச் செய்யும் பாக்கியம் கிடைத்தவர்கள்
உண்மையில் கொடுத்து வைத்தவர்கள். இந்த இரண்டு
பணிகளிலும், சமூகநலனில் அக்கறை, சேவையில் ஆர்வம்,
அர்ப்பணிப்பு உணர்வு உள்ளவர்கள் மட்டுமே ஈடுபட முன்வர
வேண்டும்.

இந்த எண்ணமோ, பார்வையோ, சமூக நோக்கமோ
இல்லாதவர்கள் வேறு எந்த பணியையாவது
தேர்ந்தெடுப்பது –

அவர்களுக்கு மட்டுமல்ல –
இந்த சமுதாயத்திற்கும் நல்லது.

கணிசமான ஊதியத்துடன், சமூகப்பணி ஆற்றும் வாய்ப்பும்
கிடைப்பவர்கள், நிச்சயமாக இந்த சமுதாயத்திற்கு கடன்
பட்டவர்கள்.

இன்று பாழ்பட்டுக் கிடக்கும் நமது சமுதாயம்,
நாளையாவது மாறும் என்று நாம் காத்திருப்பது எதை நம்பி..?

இன்று பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கும் இளம்
பிஞ்சுகளை நம்பித்தானே…?

புகைப்படங்களுக்காக – திரு.வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி….

புகைப்படங்களுக்காக – திரு.வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி….

இந்த சமுதாயத்தின் நாளையை நிர்ணயிக்கப்
போகிறவர்கள் இன்றைய மாணவர்கள். அந்த மாணவர்களை
உருவாக்கும் பணியையும், பொறுப்பையும் யாரிடம்
ஒப்படைத்திருக்கிறோமோ –

அவர்களே – சமுதாயச் சீரழிவில் ஈடுபட்டால், அவர்களால்
உருவாகும் எதிர்கால சமுதாயம் என்ன செய்யும் …?

தங்கள் ஆசிரியை தெருப்போராட்டத்தில் இறங்கி குத்தாட்டம்
போடுவதை தொலைக்காட்சியில் பார்க்கும் மாணவர்கள்
அந்த ஆசிரியை மீது எத்தகைய மதிப்பை, மரியாதையை
கொண்டிருப்பார்கள்….? அவர்களிடமிருந்து எதை
கற்றுக் கொள்வார்கள்…? அதே குத்தாட்டத்தைத் தானே
அவர்களும் அரங்கேற்றுவார்கள்…?

அந்த ஆசிரியர்கள் இதை உணரக்கூட பக்குவம்
இல்லாதவர்களாகி விட்டார்களா…?

நான் மிகவும் மதிக்கும் பணி ஆசிரியப்பணி.
நான் மிகவும் விரும்பினாலும் கூட,
பத்தாவது படித்தவுடனேயே வேலைக்கு சென்று சம்பாதிக்க
வேண்டிய நிலையில் எங்கள் குடும்பம் இருந்ததால்,
நான் ஆசிரியர் பணிக்கு படிக்க முடியவில்லை…
( பிற்பாடு நான் சேர்த்துக் கொண்ட பட்டங்கள் எல்லாம்,
பணியில் இருந்துகொண்டே படித்ததன் மூலம் பெற்றவை…! )

இருந்தாலும், இந்த ஆர்வம் காரணமாகவே,
அரசு குடியிருப்பை விட்டு – வெளியேறி வசித்த
சில ஆண்டுகள் –

எனது வீட்டின் பின் பக்கம் (வீடு மிகவும் சிறியதாக
இருந்ததால் …) சிறிய ஓலைக்குடிசை ஒன்றை
போட்டுக்கொண்டு, என் வீட்டிலிருந்தே ஒரு extension wire
மூலம் மின்வசதி ஏற்படுத்தி, மாலை நேரங்களில் இலவச
இரவுப்பள்ளி ஒன்றை நடத்தி வந்தேன்.

மாலை 6 மணி முதல் இரவு எட்டரை மணி வரை
அக்கம் பக்கத்தில் உள்ள சிறுவர் சிறுமிகள் (அரசு மற்றும் பஞ்சாயத்து பள்ளிகளில் 4-வது முதல் 9-வது வரை படிப்பவர்கள்) அங்கே வந்து படிக்கலாம்….ஹோம் ஒர்க் செய்யலாம்… பள்ளியில் நடந்த பாடங்கள் புரியாமல், அவர்களுக்கு எழும் எந்த சந்தேகத்தையும், எந்தவித தயக்கமும் இன்றி கேட்டு தெளிவு செய்து கொள்ளலாம்.

அவர்களுக்கு உதவுவதும்,
சில சமயங்களில் பொது அறிவு பாடங்கள் எடுப்பதும்,
முக்கியமாக நல்ல பழக்க,வழக்கங்களை சொல்லிக்
கொடுப்பதும் என் பணியாக இருந்தது.

என் வாழ்க்கையின் மிகச்சிறந்த நாட்களில் இவையும்
அடங்கும்… இது நான் பெற்ற பெரும் பாக்கியம் என்று
அந்த காலகட்டத்தை இப்போதும் நினைத்துக் கொள்கிறேன்.

அற்புதமான, அற்பணிப்பு குணம் கொண்ட பல ஆசிரியர்களை
நான் சொந்த முறையில் அறிவேன். நேரம், காலம்
பார்க்காமல், தங்கள் மாணவர்கள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு
பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்

என்று மிகுந்த அக்கறையுடன் பணி புரியும்
பல ஆசிரியர்கள் குறித்து எனக்கு நன்கு தெரியும்.
அவர்கள் அனவருக்கும் ஒரு BIG SALUTE
சொல்லிக்கொள்ளும் இந்த நேரத்தில்,

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்று
துவக்கப்பள்ளியிலேயே படித்தவர்கள் தானே நாம்…
அந்த வார்த்தையை காப்பாற்றும் பொறுப்பு நமக்கில்லையா…?

“மாதா, பிதா, குரு, தெய்வம்” என்று தெய்வத்திற்கும்
உயர்வாக ஆசிரியரைச் சொல்கிறதே நமது சமூகம்…
இந்த வார்த்தை பொய்யாகலாமா…? என்று நமது
ஆசிரியப் பெருமக்களை கேட்க விரும்புகிறேன்.

தமிழகத்தில் ஆசிரியப்பணியில் ஈடுபட்டிருப்பவர்கள்
அனைவருமே அதை ஒரு மாத வருமானம் தரும் சாதாரண
வேலையாக கருதாமல்,

தாங்கள் ஈடுபட்டிருப்பது ஒரு சமுதாயப்பணி;
உன்னதமான ஒரு எதிர்காலத்தை உருவாக்கவிருக்கும்
மாணவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்
என்பதை உணர்ந்து செயல்பட வேண்டுமென்று
வேண்டுகிறேன்…..

இந்த சமயத்தில், எடுத்துக்காட்டாக – அண்மையில் புதிய
தலைமுறை தொலைக்காட்சியின் சார்பில் வழங்கப்பட்ட
சிறப்பான ஆசிரியர் விருதுகளைப் பெற்ற இரண்டு
ஆசிரியர்களை பற்றிய காணொளியை கீழே
பதிவிடுகிறேன்….

இதைப்போல் பல்வேறு பிரிவுகளிலும் சிறந்த ஆசிரியர்களை
கண்டறிந்து, அவர்களை கௌரவித்த புதிய தலைமுறை
தொலைக்காட்சி நிறுவனத்தை நன்றியுடன் பாராட்டுவோம்.

இந்த இடுகையை படிப்பவர்களின் நேர வசதி கருதி,
இரண்டு நிமிட வீடியோக்கள் இரண்டை மட்டும் இங்கு
பதிப்பித்திக்கிறேன்.

மகா கலைஞன் தெருவிளக்கு கோபிநாத்துக்கு
புதுமைகளுக்கான ஆசிரியர் விருது –

நவீன அரசுப் பள்ளியை உருவாக்கிய இரா.
செல்வக்கண்ணனுக்கு கிராம சேவைக்கான ஆசிரியர் விருது-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to எழுத்தறிவித்தவன் இறைவன் ….???

 1. paamaranselvarajan சொல்கிறார்:

  //ஆச்சரியப் பள்ளி `க்யூ ஆர்’ கோடு மூலம் ஆன்லைன் தேர்வு – ஆச்சரியங்களை நிகழ்த்தும் சுண்டக்காம்பாளையம் நடுநிலைப் பள்ளி //
  tamil.thehindu.com/tamilnadu/article19707799.ece. அய்யா…! இது பாேன்ற அரசுப் பள்ளிகளும் … ஆசிரிய பெருமக்களும் இருப்பது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது … அர்ப்பணிப்பு மிக்க தலைமை ஆசிரியர் திரு . காளியப்பன் மற்றும் ஆசிரியர் திரு.நேசமணி … மற்ற இப்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் தலை தாழ்ந்த வணக்கங்களை தெரிவிப்பதாேடு ….

  பாேராட்டப் பேர்வழிகள் இவர்கள் அளவுக்கு தாெண்டு செய்ய முடியாவிட்டாலும் … ” குத்தாட்டம் ” பாேட்டு மகா புனிதமான ஆசிரிய்ர் பணியை களங்கப்படுத்தாமல் இருந்தாலே … மாணவர்கள் செய்த பாக்கியம் … !!!

  • Sundar Raman சொல்கிறார்:

   I do have the same opinion like ..now a days teachers are well paid , they have too many holidays , and lots of side income ( like business, shop, private tuition ) . However when I see the video’s , I salute them . As you have said and experienced , a place where all students can revise the portions , do the home work , talk between them about studies , their experiences is wonderful idea – I hope many people will take it forward.

 2. N S. Raman சொல்கிறார்:

  In earlier best candidates used to opt teaching. Due to highly political influence and corruption involved in teachers appointment now reflected in todays quality of teachers.

  One of the best scheme introduced by Jaya is TET to get some talent out of crowd.

  But same time TN government is partly responsible. It is shocking to know TN government not deposited new pension scheme contributions to pension funds

 3. chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

  They r instigated by some vested interest politicians.MATHA PITHA GURU DEIVAM

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.