மார்க்சிஸ்ட் யூனியன் செயலாளருடன் பேசியதால் வந்த விளைவுகள்…..!!! ( மறக்க முடியாத சில நினைவுகள் -2 )இது வேறு ஒரு கால கட்டம் …
அவனுக்கு இப்போது வயது 37-38 இருக்கும்…
கொஞ்சம் கூடுதல் அனுபவம், கொஞ்சம் கூடுதல் தன்னம்பிக்கை,
இன்னும் கொஞ்சம் அதிகமாக தன்மான உணர்வும் கூட …!!!

இதற்குள்ளாக அவன் வடக்கே உள்ள வேறோரு தொழிற்சாலைக்கு
பணி மாற்றலில் சென்று விட்டு, சில காலம் கழித்து
மீண்டும் திருச்சிக்கே திரும்ப வந்து விட்டான்.

தொழிற்சாலை நிர்வாகத்தில் ஐந்து, ஆறு பிரிவுகள் இருக்கும். இவன் பொதுவான ஒரு பிரிவில் இருந்தான். அந்த பிரிவில் அவன் நிர்வாகிக்கு அடுத்த நிலையில் இருந்தான்.

ஜெனரல் மேனேஜர் பொறுப்பில் இருப்பவர்கள் அதிக பட்சம் ஒரு இடத்தில் மூன்று வருடங்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள். எனவே ஒவ்வொரு தடவையும் ஜி.எம். மாறும்போதெல்லாம், பிரிவு நிர்வாகிகளுக்கு புதிய ஜி.எம்.உடன் பழகி ஒரு புரிதலுக்கு வருவதற்கு கொஞ்ச கால அவகாசம் தேவைப்படும். புதிதாக வருபவர்கள் கொஞ்சம் ரிசர்வ்டு டைப் – ஆக இருந்தால், பழகுவதே மிகவும் கடினம். அதே சமயம் பணி-பொறுப்புகள் காரணமாக அவர்களை சந்திப்பதை தவிர்க்கவும் இயலாது….

தொழிற்சாலை நிர்வாகத்தில் மிகுந்த முக்கியத்துவம்
வாய்ந்த பிரிவு “விஜிலன்ஸ் பிரிவு”.

“விஜிலன்ஸ்” பல விதங்களில் முக்கியத்துவம் பெற்றது. அதிகாரிகள், நிர்வாகிகள் ஆகியோரது பதவி உயர்வு, பணிமாற்றம், அவர்களைப்பற்றிய ரகசிய குறிப்புகள், தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களின் மீதுமான ஒழுங்கு நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட கோப்புகள் (disciplinary action, vigilance cases),
பாதுகாப்பு அமைச்சகம், தலைமை அலுவலகத்துடனான தகவல் பரிமாற்றங்கள் மற்றும்
நீதிமன்ற வழக்குகள், தொழிலாளர் யூனியன்கள் சம்பந்தப்பட்ட நிர்வாக நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்த பிரிவு தான் கவனிக்க வேண்டும்….!

அந்த கால கட்டத்தில், விஜிலன்ஸ் பிரிவுக்கு நிர்வாகியாக இருந்தவர் பணி ஓய்வு பெற்று சென்று விட்டார்.

அப்போது இருந்த ஜி.எம். பணிமாற்றத்தில் கல்கத்தா செல்லவிருந்தார்… இவனுக்கு அந்த ஜி.எம்.உடன் நல்ல அறிமுகம், புரிதல் உண்டு. இவனது பின்ன்ணிகளை நன்கு அறிந்தவர், ஊக்குவித்தவர் அவர். இவன் மீது அவருக்கு மிகுந்த அன்பும், அக்கறையும் உண்டு.

அவர் போவதற்கு முன்னதாக, இவனை கூப்பிட்டு, “கே.எம்.” – நீ விஜிலன்ஸ் பிரிவின் நிர்வாகியாக பொறுப்பேற்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்……இது நிர்வாகத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பது ஒரு பக்கம் என்றாலும் உன் எதிர்கால பணி, பதவி உயர்வுகளுக்கும் – இந்த அனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

பொதுவாக, விஜிலன்ஸ் – அதிகார முக்கியத்துவம் உள்ள பொறுப்பு, தொழிற்சாலை நிர்வாக ரகசியங்கள் அனைத்தும் அங்கு தெரிய வரும் என்பதால், அங்கே வருவதற்கு, நிர்வாகத்தில் உள்ள பல பிரிவுகளின் பொறுப்பாளர்களும் மிகவும் விரும்புவார்கள்.

ஆனால் இவனுக்கு அதில் விருப்பமில்லை….காரணம் – இவனது இயல்பு,
எதிர்பார்ப்புகள் முற்றிலும் வேறானது….
சமுதாயத்தோடு நெருங்கி வாழ,
தன்னால் இயன்றதை அதன் நன்மைக்காக செய்ய ஆர்வம் கொண்டவன்..!

இவன் ஏற்கெனவே தொழிற்சாலை மற்றும் அதன் குடியிருப்பு பகுதியில், பல விதங்களிலும், சமுதாயப்பணிகளில் ஈடுபட்டு வந்தான். தொழிற்சாலை ஊழியர்களுக்கான நல மன்றத்தில் பல ஆண்டுகள்
செயலாளர் பொறுப்பேற்று, ஒரு நல்ல நூலகம், உள்ளரங்க விளையாட்டு வசதிகள், திறந்தவெளி திரையரங்கம், என்று பல வசதிகளை உருவாக்கி – ஆர்வத்துடன் செயல்பட்டு வந்த காரணத்தால் –

அப்போது அவன் மன்ற பொறுப்பில் இல்லையென்றாலும் கூட – இயல்பாகவே, அந்த பகுதியில் நடக்கும் எந்த நிகழ்விலும், அவனுக்கு ஒரு பங்கும், பொறுப்பும் இருக்கும். எனவே, அவன் அனைவருக்கும் தெரிந்தவனாக, எல்லாருடனும் சகஜமாக பழகக்கூடியவனாக இருந்தான்.

அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்துவந்த சுமார் 2500 பேர்களில், 1000 பேரையாவது பெயரைச் சொல்லி அழைக்கும் அளவிற்கு அவர்களுடன் பழக்கம் உள்ளவன். மேலும் தொழிலாளர் யூனியனைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இவனுக்கு நெருங்கிய பழக்கம் உண்டு… பல விதங்களிலும் இவன் அவர்களுக்கு உதவி செய்துகொண்டும் இருந்தான்.

அவர்களுடனான, இவனது நெருக்கம் – நிர்வாகத்திற்கு எதிரானது அல்ல…
ஆனால் கொஞ்சம் வித்தியாசமானது.

நிர்வாகம், அதன் மூத்த அதிகாரிகள் – எப்போதும் சட்டம் என்ன சொல்கிறது என்கிற நோக்கிலேயே எந்த பிரச்சினையையும் அணுகுவார்கள். இவன், சட்டத்தின் எந்த நெளிவு,சுளிவுகளை, ஓட்டைகளை
எப்படி பயன்படுத்தினால் –

தொழிலாளர்களுக்கு உதவி செய்ய முடியும் என்கிற பார்வையில் அணுகுவான். அவனது ஆலோசனை யூனியன் நிர்வாகிகளுக்கு மிகவும் உதவியாக இருந்தது என்பதால், அவர்கள் இவன் மீது மிகுந்த நம்பிக்கையும், அன்பும்
கொண்டிருந்தார்கள்.

விஜிலன்ஸ் நிர்வாகி என்பவர் பல ரகசிய கோப்புகளை கையாள வேண்டிய பொறுப்பில் இருப்பதால், பொதுவாக வெளியுலக தொடர்பு இல்லாதவராக இருக்க வேண்டும். நண்பர்களுடன் பேசுவது தவிர்க்கப்பட வேண்டும். பொது, சமுதாய நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

இவன் ஜி.எம். மிடம் தன் நிலையை விளக்கினான்.
தனக்கிருந்த வெளியுலக,
சமூக நல அமைப்புகளுடன் இருந்த தொடர்புகள் காரணமாக தான்
விஜிலன்ஸ் பிரிவின் பொறுப்பை ஏற்க நேர்ந்தால் –
தன் வெளியுலக தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துக் கொள்ள நேரிடும்..
தனக்கு அதில் விருப்பமில்லை என்பதால்,
தன்னை மன்னித்து, தற்போதைய இடத்திலேயே தொடர்ந்து
பணியாற்ற அனுமதிக்கும்படி வேண்டினான்.

அவர் நீண்ட நேர யோசனைக்கு பிறகு – தற்போதைக்கு நான் இதை தள்ளிப் போடுகிறேன். ஆனால் நீ மீண்டும் இது குறித்து யோசி என்று கூறினார்.

இரண்டு வாரங்களில் அவர் கல்கத்தாவுக்கு சென்று விட்டார். அதற்குள்ளாக விஜிலன்ஸ் பிரிவில் மிகுந்த அனுபவம் பெற்ற ஒரு நிர்வாகி ஊட்டியிலிருந்த தொழிற்சாலையிலிருந்து பணிமாற்றம் பெற்று இங்கு வந்தார். அதோடு, இவன் அந்த விஷயம் முடிவுக்கு வந்து விட்டதென்று நினைத்தான்.

புதிய ஜி.எம். (இவரை வி.ஒய். என்று அழைக்கலாம்…) வந்து பதவியேற்றுக் கொண்டார். இந்த தொழிற்சாலைக்கு வரும் முன்னர் அவர் 8 ஆண்டுகள் லண்டனில் பாதுகாப்பு துறையிலேயே வேறு ஒரு பொறுப்பில் இருந்திருக்கிறார். வந்தவர் மிகவும் கண்டிப்பானவர் என்று தெரிந்தது. ரிசர்வ்டு டைப்….

அனைத்திலும் ஒரு ஒழுங்கை கடைபிடிப்பார். நேரந்தவறாமை, டிசிப்ளின், வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசுவது – ஒளிவு மறைவு இன்றி எதையும் முகத்திற்கு எதிரிலேயே கூறுவது –
இறுக்கமான முகபாவம், தோற்றம் – எளிதில் யாரும் நெருங்க முடியாதவராக இருந்தது –
ஆகியவை அவரது முக்கிய குணாதிசயங்கள்.

இவனுக்கு – அவருடன் இன்னும் சரியான அறிமுகம் ஆகவில்லை.

அவர் வந்த அடுத்த வாரம் இவனை விஜிலன்ஸ் பிரிவு நிர்வாகியாக பொறுப்பேற்கச் சொல்லி ஜி.எம். அலுவலகத்திலிருந்து உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. முந்தைய ஜி.எம்.மிடம் இவன் சொன்ன விஷயத்தை புதிய ஜி.எம்.மிடம் சொல்ல முடியாத சூழ்நிலை.

ஜி.எம்.க்கு அடுத்த பொறுப்பில் இருந்த அடிஷனல் ஜி.எம்.ஐ சந்தித்து நிலையை விளக்கினான். அவர் சம்பந்தப்பட்ட கோப்புகளை பார்த்து விட்டு அவனிடம் பேசுவதாக தெரிவித்தார்.

சில மணி நேரம் கழித்து அவனை கூப்பிட்டு, தான் கோப்புகளை பார்த்ததாகவும், முன்னாலிருந்த ஜி.எம். அதில் இவனை விஜிலன்ஸ் பிரிவுக்கு மாற்றுவது பொருத்தமாக இருக்கும் என்றும், ஆனால் இன்னொரு விஜிலன்ஸ் அனுபவம் பெற்ற நபர் மாற்றலில் வருவதால், அவர் வந்த பிறகு புதிய ஜி.எம்.
இது குறித்து இறுதி முடிவு எடுக்கலாம் என்றும் எழுதி இருப்பதாகவும், எல்லா விஷயங்களையும் பரிசீலித்த பிறகு புதிய ஜி.எம். இவனை விஜில்ன்ஸ் பிரிவுக்கு பொறுப்பேற்கும்படி உத்திரவிட்டிருப்பதாகவும்,
இதில் மேற்கொண்டு செய்யக்கூடியது எதுவும் இல்லையென்றும் கூறி விட்டார்.

இவனும் – வேறு வழியின்றி, புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டான்.

மற்றவர்களின் பார்வை, அணுகுதல் இல்லாமல் இருக்க வேண்டும் என்கிற காரணங்களால், விஜிலன்ஸ் பிரிவின் அலுவலகம் (ஒரு பெரிய அறை மட்டுமே…), ஜி.எம். அலுவலகத்தை ஒட்டியே இருக்கும்.

அந்த அறையின் ஜன்னல்களுக்கும், வாசல் கதவிற்கும் திரைகள் போட்டு எப்போதும் மூடியே இருக்கும்.
உள்ளே யார் இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை வெளியிலிருந்து அறிய முடியாது. அந்த அறையின் வாசலில் பளிச்சென்று சிவப்பு நிறத்தில் ஒரு பலகை தொங்கும்…
“VIGILANCE SECTION – OUTSIDERS ARE NOT PERMITTED” என்று.

அவனுக்கு எப்போதுமே இயற்கையான காற்றோட்டம் மிகவும் அவசியம். எந்த அலுவலகத்திற்கு போனாலும், ஜன்னலை ஒட்டியே தன் இருக்கையை அமைத்துக் கொள்வான்.

அவனால் காற்றோட்டம் ( ventilation ) இல்லாத இடத்தில் இருக்கவே முடியாது. அவன் அங்கு போனவுடன் முதல் காரியமாக அந்த திரைச்சீலைகளை எல்லாம் மடக்கி, சுருட்டி வைத்தான். கதவு திறந்தே இருக்கட்டும் என்று தன் சகாக்களிடம் சொல்லி விட்டான் ( அங்கே அவனைத்தவிர இன்னும் 6 பேர் அவன் மேற்பார்வையில் பணி புரிந்து கொண்டிருந்தார்கள்…)

அங்கே அவன் வந்த 3-வது நாள். உணவு இடைவேளைக்கு பிறகு, தொழிற்சாலையின் மார்க்சிஸ்ட் யூனியனின் பொதுச்செயலாளர் நாராயணன் (அவருடன் அவனுக்கு நல்ல நட்பு உண்டு…) அவன் அலுவலகத்தின் வாசலில், கதவருகே வந்து நின்றார்….
மிக நேர்மையான, உண்மையான – தொழிலாளர் தலைவர் அவர்.
தொழிலாளர்கள் மத்தியில் அவருக்கு நல்ல மதிப்பு உண்டு. எதாவது முக்கியமான விஷயங்களில் அவனது ஆலோசனைக்காக, அவனது முந்தைய அலுவலகத்திற்கு அவர் வந்து போவது உண்டு.

இவன் உள்ளே தன் இருக்கையிலிருந்தே அவரை பார்த்தவன் – “என்ன நாராயணன், இவ்வளவு தூரம்..? ” என்று கேட்டான்.

அவர் தயங்கியபடியே, “கே.எம் சார் ஒரு விஷயம் பேசணும்” என்றார். இவன் தன் பழைய வழக்கப்படியே, எந்தவித வித்தியாச உணர்வும் இல்லாமல், கூலாக “உள்ளே வாங்க நாராயண்” என்று கூப்பிட்டு, அவரை தன் முன்னால் இருந்த நாற்காலியில் அமரச்செய்து பேசிக்கொண்டிருந்தான். கூட இருந்த சகாக்கள் கொஞ்சம் வித்தியாசமாக அதை பார்த்தபோது தான் அவனுக்கு உள்ளே அந்த சங்கடம் உறைத்தது….

அதே சமயம், ஜி.எம். உணவு நேரம் முடிந்து, corridor வழியே தன் அலுவலகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தவர், திறந்திருந்த விஜிலன்ஸ் பிரிவின் ஜன்னல், கதவுகளின் வழியே – யூனியன் செயலாளரை தன் எதிரே உட்கார வைத்து அவன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டே சென்றார்….

இரண்டு நிமிடங்களில் அவனுக்கு ஜி.எம். அவர்களின் P.A.விடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது…. “சார் – ஜி.எம். உங்களை கூப்பிடுகிறார் “…

விபரீதம் அவனுக்கு சுளீரென்று உறைத்தது.

யூனியன் செயலாளரிடம் –
“நாராயணன், ஜி.எம். கூப்பிடறார்… நாம்ப அப்புறம் சந்திப்போம்” என்று சொல்லிக்கொண்டு, அவரை அனுப்பி விட்டு, அவன் நேராக ஜி.எம்.மின் அறைக்குள் நுழைந்தான்…!!!

( தொடர்கிறது – பகுதி -3-ல்….)

————————————————-

மறக்க முடியாத சில நினைவுகள் – முந்தைய பகுதி

———————————————————

மறக்க முடியாத சில நினைவுகள் – இதற்கு அடுத்த பகுதியை பார்க்க –

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to மார்க்சிஸ்ட் யூனியன் செயலாளருடன் பேசியதால் வந்த விளைவுகள்…..!!! ( மறக்க முடியாத சில நினைவுகள் -2 )

 1. Ramasubramanian சொல்கிறார்:

  Please break the Suspense.
  What happened inside GM’s room ?

 2. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  நீங்கள் ஜி.எம். ரூமிலிருந்து வெளியே வருவதற்காக
  ஆவலுடன் காத்திருக்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.