ஜி.எம். அறையில் என்ன நடந்தது……? ( மறக்க முடியாத சில நினைவுகள் – பகுதி – 3 )அவனை, விஜிலன்ஸ் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் யூனியன் செயலாளருடன் பார்த்த ஜி.எம். நேராக தன் அறைக்கு சென்று, உடனடியாக P.A.விடம் சொல்லி அவனை கூப்பிட்டு விட்டார்….

இந்த நிலையை எப்படி சமாளிப்பது என்று யோசிக்கவே அவனுக்கு நேரம் இல்லை..

ஜி.எம். எதற்காக அழைக்கிறார் என்பது புரிந்தது … ஆனால், என்ன சொல்லப்போகிறோம், இதை எப்படி சமாளிக்க போகிறோம் என்று புரியாமலே
ஜி.எம். அறைக்குள் நுழைந்தான் அவன்.

உள்ளே நுழைந்து வணக்கம் சொன்ன அவனை ஒருக்கணம் ஆழமாக உற்றுப் பார்த்தார் அவர். அடுத்த நிமிடம் – அவனை நோக்கி பாய்ந்தன மிக உஷ்ணமான வார்த்தைகள் – மிகக்கடுமையான, உரத்த குரலில் –

” I was SHOCKED TO SEE
the UNION SECRETARY-
COMFORTABLY SITTING AND CHATTING
with incharge of VIGILANCE section..

WHAT THE HELL is happening here..?
Do you know HOW MUCH FAITH AND CONFIDENCE
is placed on you
by posting you as Incharge of Vigilance Section…?

DO YOU STILL BELIEVE YOU DESERVE THAT …?”

– என்கிற வகையில் வார்த்தைகள் வீசப்பட்டன.

அவன் மனதில் அதற்குள்ளாக சில சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன. இது எது வரை கொண்டுபோய் விடும் என்பதை அவன் உணர்ந்தே இருந்தான். செக்க்ஷனை விட்டு மாற்றப்படலாம்…. தண்ணி இல்லாத காட்டுக்கு ட்ரான்ஸ்வரும் செய்யப்படலாம்.

இருந்தாலும், அவன் மனதில் பயம் என்பது கொஞ்சமும் இல்லை.
மனசாட்சிக்கு விரோதமாக எதையும் அவன் செய்தவன் இல்லை…

என்ன வந்தாலும் சரி… வெளிப்படையாக பேசி விடுவது, விளைவுகளை எதிர்கொள்வது – என்கிற தீர்மானத்திற்கு உடனடியாக வந்தான்.

ஒரு பக்கம் விஜிலன்ஸ் பொறுப்பிலிருந்து அவன் விடுவிக்கப்படுவான் என்கிற விஷயம் அவனுக்கு நிம்மதியை கொடுக்கும் என்றாலும் கூட –

இன்னொரு பக்கம் அவனது தன்மான உணர்வு அதை எதிர்த்தது. தான் இந்த பொறுப்பிற்கு தகுதியற்றவன் என்று முத்திரை குத்தப்பட்டு வெளியே அனுப்பப்படுவதை ஏற்க அவன் மனம் சம்மதிக்கவில்லை.

ஜி.எம்.சூடாக கூறியவற்றை எல்லாம்அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தவன், மெதுவாக பேச ஆரம்பித்தான்.

ஜி.எம். மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர். கடைசியாக 8 ஆண்டுகள்
லண்டனில் இருந்தவர். மிகவும் வெளிப்படையாக பேசக்கூடியவர் –
நேர்மையானவர்…. ஆனால் மிக கண்டிப்பானவர்….
அவன் தன் எண்ணங்களை ஆங்கிலத்தில் தான் விளக்க வேண்டியிருந்தது…

அவன் சொன்னான் –

” நீங்கள் கோபம் அடைவதற்கான அனைத்து நியாயங்களும் இருக்கின்றன. விஜிலன்ஸ் செக்க்ஷனில் யூனியன் தலைவர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்தால், அதிர்ச்சியாகத்தான் இருக்கும்…

நான் சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன். அதைக்கேட்ட பிறகு நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும், எனக்கு எத்தகைய தண்டனையை கொடுத்தாலும் முழு மனதுடன் ஏற்கிறேன்… என்னை பணிமாற்றமோ, இடமாற்றமோ
எதைச் செய்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால், நான் சொல்ல விரும்புவதை மட்டும் நீங்கள் கோபமின்றி,
கொஞ்சம் பொறுமையாக அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்…

என் லெவலில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் விஜிலன்ஸ் பிரிவில் பணி புரிய நிச்சயம் ஆசைப்படுவார்கள். ஆனால், எனக்கு அந்த ஆர்வம் இல்லை.

நீங்கள் இந்த தொழிற்சாலைக்கு வருவதற்கு முன்னதாக இருந்த ஜி.எம். என்னை கூப்பிட்டு, விஜிலன்ஸ் பொறுப்பை ஏற்கச்சொன்னபோது நான் அவரிடம் எனக்குள்ள வெளியுலக பொறுப்புகளை கூறி, என்னை தயவு செய்து இந்த பொறுப்பிலிருந்து விடுவியுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.

விடுவிக்கப்படுவேன் என்றும் நம்பினேன்.

என்னுடைய சமூக தொடர்புகள், யூனியன் தலைவர்களுடனான நட்பு ஆகிய அனைத்துமே வெளிப்படையானவை. அவருக்கும் அது குறித்து தெரியும்.

சில சமயங்களில், தொழிற்சாலை நிர்வாகத்திற்கும், யூனியனுக்கும்
இடையே கடுமையான பிரச்சினைகள் வந்தபோது, என்னுடைய நட்பும், நல்ல உறவும், அவர்களுக்கு என் மீதான நம்பிக்கையும் அவற்றை தீர்க்க ஓரளவு உதவியாக இருந்துள்ளன.

ஆனால், நீங்கள் வந்தபிறகு –
நான் விஜிலன்ஸ் பொறுப்பினை ஏற்க வேண்டும என்று உத்திரவு வெளிவந்தது…. நான் அடிஷனல் ஜி.எம். அவர்களை சந்தித்து
பழைய ஜி.எம்.முடன் நிகழ்ந்த பேச்சுக்களைப்பற்றி அவரிடம் சொல்லி, நான் விஜிலன்ஸ் பிரிவின் பொறுப்பினை ஏற்க வேண்டும் என்கிற உத்திரவை மறுபரிசீலனை செய்ய முடியுமா என்றும் கேட்டேன்…. அவர் அதற்கு வாய்ப்பு இல்லையென்று சொல்லி விட்டார். தேவையென்று கருதினால், நீங்கள்
அவரிடம் இது குறித்து உறுதி செய்துகொள்ளலாம்.

எனவே, 2 நாட்கள் முன்பாக, நான் இங்கு வந்து பொறுப்பேற்றுக்கொண்டு விட்டேன். எப்போது பொறுப்பினை ஏற்றுக் கொண்டேனோ, அப்போதிலிருந்து முழு மனதுடன் நான் விஜிலன்ஸில் பணியாற்றத் தயாராகி விட்டேன்.

நான் இங்கு பொறுப்பேற்றுக் கொண்டு இரண்டே நாட்கள் தான் ஆகின்றன.
என் பழைய நட்புகளுக்கு நான் இனி அவர்களுடன் முன் போல் பழக முடியாது என்பதை உணர்த்த எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. நாராயணன், மதிக்கப்படும் தொழிற்சங்கத் தலைவர்….15 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு பழக்கமானவர்… என்னை சந்திக்க அவர் வரும்போது,
அவரை நான் உட்காரச் சொல்லாமல், பேசாமல் இருக்க முடியாது.

அவரை அமரச்சொல்லி பேசுவதால் மட்டுமே விஜிலன்ஸ் ரகசியம்
எல்லாவற்றையும் அவர் தெரிந்து கொண்டு போய் விடுவார்
என்று நினைப்பது சரியாக இருக்காது.

என் மேஜை மீதே TOP SECRET File இருந்தாலும் கூட, அதை பார்க்க முற்படும் அளவிற்கு அவர் அநாகரிகமானவர் அல்ல. நானும் என் பொறுப்பினை அறியாதவன் அல்ல…

எனக்கு அந்த அளவு கூட பொறுப்புணர்ச்சி இல்லை என்கிற தீர்மானத்திற்கு நீங்கள் வந்தீர்கள் என்றால் எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை.

நீங்கள் வந்த சில நாட்களுக்குள்ளேயே இந்த சம்பவம் நிகழ்ந்து விட்டதால், இது உங்களுக்கு மிகவும் சீரியசான விஷயமாக தெரிகிறது. இதே சம்பவம் நான் விஜிலன்சுக்கு வந்து உங்களுடன் இரண்டு மாதங்கள் பழகிய பிறகு ஏற்பட்டிருந்தால், உங்களுக்கு இத்தகைய எண்ணங்கள் நிச்சயம் ஏற்பட்டிருக்காது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். துரதிருஷ்டவசமாக சூழ்நிலை வேறு மாதிரி அமைந்து விட்டது.

ஆனால் ஒன்றை உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். என் விருப்பத்திற்கு மாறாகத்தான் எனக்கு இந்த பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது….
எனவே, இந்த பொறுப்பிலிருந்து நான் விடுவிக்கப்பட்டால், நியாயமாக அது எனக்கு மகிழ்ச்சியையே அளிக்க வேண்டும்..

ஆனாலும் கூட, ஏற்றுக் கொண்ட பிறகு
இந்த “பொறுப்பை நிர்வகிக்கத் தெரியாதவன்”, “தகுதியில்லாதவன்” என்று தீர்மானம் செய்யப்பட்டு வெளியேற்றப்படுவதை என் மனம் ஏற்கவில்லை. இந்த பொறுப்பிற்கு நான் தகுதியானவன் தான் என்பதை நிரூபிக்க எனக்கு அவகாசம் கொடுங்கள்.

இந்த சம்பவத்தை அப்படியே விட்டு விட்டு, பொதுவாக என் செயல்பாட்டை கொஞ்ச காலம் கவனித்துப் பாருங்கள். நான் தகுதியானவன் இல்லையென்று உங்களுக்கு தோன்றினால் தாராளமாக அனுப்பி விடுங்கள்…

பரிசோதனை செய்யப்படாமலே நான் தகுதியற்றவன் என்கிற தீர்மானத்திற்கு நீங்கள் வந்து விடக்கூடாது….அது எனக்கு செய்யப்படும் நியாயமாகாது.

நீங்கள் இந்த தொழிற்சாலையின் ஜெனரல் மேனேஜர்……
எந்த முடிவையும் எடுக்கும் உரிமையும் அதிகாரமும் உங்களுக்கு உண்டு. ஆனால், முடிவெடுக்கும் முன்னர் தயவுசெய்து என் வேண்டுகோளை பரிசீலனை செய்யுங்கள்…

– பேசி முடித்து விட்டு, அவர் முகத்தை பார்த்தான்…
அவரது முகத்தில் கோபம் குறைந்திருப்பது தெரிந்தது. ஆனாலும்
அவர் எந்த பதிலும் சொல்லவில்லை.

” You may go now ” என்று மட்டும் சொன்னார்…..

மீண்டும் சஸ்பென்ஸ்…
——————————————————-

இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு P.A.
மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

” சார், ஜி.எம். உங்களை கூப்பிடுகிறார் ‘”…

பலவித எதிர்பார்ப்புகளுடன் மீண்டும் அவன் ஜி.எம். அறைக்குள்
நுழைந்தான்…

அவரது முகத்தில் எதுவும் சீரியசாக தெரியவில்லை…
ஆனால், வார்த்தையில் கொஞ்சம் குளுமை இருந்தது…

” I spoke to your old GM over phone.
He gave me all about your background.

I take his words.
Let’s forget this issue.

But – Don’t have any illusion about getting out of Vigilance Section.
( இதைச் சொல்லும்போது கூட அவர் முகத்தில்
எந்தவித மாற்றமும் இல்லை…!!! )

Go and get settled down.
Wish you All the Best. ”

( இதைச் சொல்லும்போதும் மட்டும்
வார்த்தையில் சிறிது கனிவு தென்பட்டது…… )

———————————-

ஆனலும் கூட, அடுத்த 3 வருடங்கள், நெருங்கிப் பழக முடியாத இரும்பு மனிதராக இருந்த அவருடன் –

நான் நெருங்கி பணிபுரிந்த காலம், என் 40 ஆண்டுக்கால சர்வீசில்
மறக்க முடியாத, அற்புதமானதொரு காலம்….!!!

வெளியில் இருந்தால், நான் ஆற்றி இருக்கக்கூடிய
சமூகப்பணிகளை விட, அற்புதமான சில காரியங்களை
அங்கிருந்து என்னால் செய்ய முடிந்தது….!

——————————–

“மறக்க முடியாத சில நினைவுகள்” –
இந்த தலைப்பில் மீண்டும் சந்திப்போம் –
கொஞ்சம் இடைவெளிக்கு பிறகு….!

————————-

மறக்க முடியாத சில நினைவுகள் – முந்தைய பகுதியை பார்க்க –
————————————————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to ஜி.எம். அறையில் என்ன நடந்தது……? ( மறக்க முடியாத சில நினைவுகள் – பகுதி – 3 )

 1. அறிவழகு சொல்கிறார்:

  போங்க ஐயா முதல் படத்தை போட்டு எதிர்பார்ப்பை ரொம்ப எகிற வைத்துவிட்டீர்கள். ஆனாலும் நல்ல துணிவான நேர்மையான செயல்.

  கடைசி படத்தில் என்ன சொல்ல வருகிறீர்கள். நீங்கள் மட்டும் தன்னந் தனியே என்றா? இல்லை ஐயா. நாங்களும் இருக்கிறோம்.

 2. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  அபூர்வமான அனுபவங்கள் உங்களுக்கு.
  இத்தகைய அனுபவங்கள் எல்லாருக்கும் கிடைத்து விடாது.
  மாறி மாறி ஒரே நாளில் எவ்வளவு அதிர்ச்சிகள் ?
  இருந்தாலும் நீங்கள் அதிருஷ்டக்காரர் தான் ; முதலில் கோபப்பட்டாலும்,
  சந்தேகம் தெளிந்த பின் எவ்வளவு அழகாக தன் மனமாற்றத்தை, முடிவை
  சொல்லி இருக்கிறார் உங்கள் ஜி.எம்.
  விஜிலன்ஸ் பிரிவை விட்டு சென்றுவிடலாம் என்று கனவு கூட காணாதே !
  ( //But – Don’t have any illusion about getting out of Vigilance Section.// )

  மீண்டும் உங்கள் அடுத்த அனுபவங்களை விரைவில் எழுதுவீர்கள் என்று
  நம்புகிறேன். நீங்கள் அதை சொல்லும் விதம் மிக அழகாக இருக்கிறது.

 3. Radhakrishnan சொல்கிறார்:

  Thank you for sharing.
  Please share more of such experiences you had.
  You have a wonderful way of narrating things.

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இதனை வரவேற்று எழுதிய உங்கள் அனைவருக்கும்
  எனது மனமார்ந்த நன்றிகள்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 5. புதியவன் சொல்கிறார்:

  இந்த மாதிரி நடந்துகொள்வது எல்லோருடைய இயல்பு அல்ல. அது ஒரு சிலரின் இயல்பு. (இதேபோல்தான், எல்லோராலும் தலைவராக முடியாது. பிறப்பிலேயே அந்தக் குணம் உடையவர்கள் நல்ல தலைவராக மிளிர்வார்கள். BORN LEADERS)

  காவிரி மைந்தன் அவர்களுக்கு இயல்பாகவே இந்தக் குணம், தான் சரி என்று நம்புவதைச் செய்வது என்ற குணம் இருந்திருக்கிறது. பாராட்டுகள் (உங்களுக்கா… அல்லது உங்கள் பெற்றோருக்கா என்று சொல்லத் தெரியவில்லை)

  நன்றாக NARRATE செய்திருக்கிறீர்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நன்றி புதியவன்.

   சுயமாக யோசிக்கத் தெரிந்த நாட்களிலிருந்து, ஒரு நல்ல மனிதனாக வாழ முயற்சித்துக்
   கொண்டிருக்கிறேன். ஒருவன் தன் மனசாட்சிக்கு விரோதமின்றி வாழ்ந்தால் அதுவே
   சிறந்த வாழ்வு; அதுவே கடவுளின் ஆசியை அவனுக்கு பெற்றுத்தரும் என்று நம்புகிறேன்.

   இத்தகைய சிந்தனை எனக்குள் தோன்ற என்னை “படைத்தவர்” தான் காரணம் என்று
   நான் நம்புகிறேன். இளைஞனாக இருந்தபோது, வேறுவழிகளில் செல்ல பலமுறை
   சூழ்நிலைகள் அமைந்தபோது, ஒவ்வொரு முறையும் என் மனசாட்சி தான் என்னை வழிநடத்தியது.
   அந்த மனசாட்சியை இயக்கியவன் படைத்தவன் தானே…?

   என் அலுவலக வாழ்விலும் சரி சொந்த வாழ்விலும் சரி – இந்த குணத்தால் பலமுறை
   பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். பல சிறியவை… சில பெரியவை..
   சில மிகப்பெரியவை. அந்தந்த சமயத்தில் அது மிகுந்த மலைப்பையும், அயர்ச்சியையும் தரும்.

   ஆனாலும் அநேகமாக, ஒவ்வொரு முறையும், அந்த சிக்கல்கள் – பிற்பட்ட காலங்களில், ஒன்று –
   சம்பந்தப்பட்டவர்கள் என்னை சரியாகப் புரிந்து கொள்ளும் தருணத்தில் தானாகவே முடிவிற்கு வந்திருக்கின்றன…
   அல்லது இறைவன் அந்த சிக்கல்களிலிருந்து விடுபடும் வழியை எனக்கு காட்டி இருக்கிறான்.

   ஆனாலும், அந்த இடைப்பட்ட காலம் இருக்கின்றதே… அது தான் மிகவும் வேதனையான காலம்.
   சிலவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். சில என்னுள் புதைந்து, என்னோடு மறைய வேண்டியவை.

   Anyway – அதையெல்லாம் தாண்டி வந்தாகி விட்டது. பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாளில்,
   மிகுந்த மன திருப்தியுடன் வெளியே வந்தேன். கடமைக்காக உழைக்காமல், என் மனம் விரும்பி
   உழைத்தேன் என்கிற முழு திருப்தியுடன் வெளியே வந்தேன். முழு பணிக்காலத்திலும்,
   யாருக்கும் எத்தகைய தீமையும் ஏற்பட நான் காரணமாக இருந்ததில்லை.

   பல சமயங்களிலும் நான் வகித்து வந்த பொறுப்புகளை, அதன் விளைவாக
   எனக்கு கிடைத்த அதிகாரங்களை/ வாய்ப்புகளை – பலருக்கும் பலவித
   உதவிகளையும் செய்ய பயன்படுத்தி இருக்கிறேன்.( சில சமயங்களில் சட்டத்தில் இடம் இல்லாத போது கூட – மனசாட்சி செய்யச் சொன்னது என்பதற்காக….!)

   இனி அந்த இறைவனிடம் எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தான் –
   இருக்கும் வரை – என்னை சுற்றி இருப்பவர்களுக்கும்,
   சமூகத்திற்கும் உபயோகமாக வாழ வேண்டும் …
   போகும்போது “சட்டென்று” போய் விட வேண்டும்..! அவ்வளவே…!

   உங்கள் பின்னூட்டம் என்னை நிறைய எழுத வைத்து விட்டது.
   உங்கள் அன்பிற்கு நன்றி.

   .

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    உங்கள் பதிலுக்கு நன்றி கா.மை சார்.

    “இந்த குணத்தால் பலமுறை பல சிக்கல்களில் ” – இறைவன் இருக்கிறானா என்று பலர் கேள்வி கேட்பார்கள். அதை அறிய ஒரு எளிய முறை இருக்கிறது. ‘நான் இதைச் செய்வேன்/செய்யமாட்டேன்’ என்று உறுதி எடுத்துக்கொள்கிறவர்களை, உடனே இறைவன்/இயற்கை சோதிக்கிறது. இன்றைக்கு முழுமையாக உணவு உட்கொள்வதில்லை என்ற பிரதிக்ஞை எடுத்துக்கொள்ளும்போது அன்றைக்கு என்று பார்த்து நல்ல உணவு அமையும், நம் எண்ணமும் உணவிலேயே இருக்கும். பிரதிக்ஞையை மீறித்தான் ஆகவேண்டும் என்ற மாதிரி உங்களுக்கும் பல சம்பவங்கள் நடந்திருக்கும். அதை மீறாமல் இருக்கும்போதுதான் நம் பிரதிக்ஞைக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.

    உங்களுடைய இடுகைகளில் மோடியைப் பற்றிய கருத்துக்கள் பலவற்றை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘நன்மையை மட்டும் கருதித்தான் அந்த முடிவை எடுத்திருக்கிறார்’ என்று நான் நம்புவதால். காலம்தான் எது சரி எது தவறு என்று காட்டும் என நினைக்கிறேன். அதுபோல, சில ‘மதச்சார்பற்ற சம்பந்தமான’ கருத்துக்களையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. உங்கள் இடுகைகளைத் தொடருங்கள். மனசாட்சிக்கும் இறைவனுக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன? மனசாட்சி என்பது உள்ளுறை தெய்வமல்லவா?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     புதியவன்,

     உங்கள் பின்னூட்ட கருத்துகளுக்கு நன்றி.

     //உங்களுடைய இடுகைகளில் மோடியைப் பற்றிய கருத்துக்கள் பலவற்றை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘நன்மையை மட்டும் கருதித்தான் அந்த முடிவை எடுத்திருக்கிறார்’ என்று நான் நம்புவதால்.//

     – நாம் எங்கே, ஏன் மாறுபடுகிறோம் என்று உங்களுக்கு தெரிகிறதா…?

     என் பார்வையில் –

     1) மோடிஜியின் முதலும், முக்கியமானதுமான குறிக்கோள்,

     ” – தன்னையும், தன் கட்சியையும் promote செய்வது. கட்சியின்
     ஆதிக்கத்தை நாடு முழுவதும் விஸ்தரிப்பது – அந்த கட்சியில்
     தன்னுடைய இருப்பை பிரதானமாக்கி இருத்திக் கொள்வது. ”

     இதற்குப் பிறகு தான், நாடு, நாட்டின் வளர்ச்சி, மக்களின் முன்னேற்றம்
     எல்லாமே…. அதெல்லாம் குறிக்கோள் அல்ல என்று சொல்ல மாட்டேன் – ஆனால், இரண்டாம் பட்சம் தான்.

     2) பல சமயங்களில் அவர் செயற்கையாக பேசுகிறார்…
     தன் உரைகளில் நாடக பாவத்தோடு ஒரு உணர்ச்சி வசப்படுதலை உருவாக்கிக் கொள்கிறார். இது அவருக்கு இயற்கையானது அல்ல.
     எதிரே இருப்பவர்களை வசப்படுத்தும் ஒரு tactics.

     ஹிந்தி மொழி தெரிந்த, ஆனால், பாஜக ஆதரவு நிலையில் இல்லாத
     மக்களால் இதை புரிந்து கொள்ள முடியும்.

     மற்றவர்கள் அவரது தேசபக்தியை பாராட்டி, இந்த தேசத்தை உய்விக்க “வாராது வந்த மாமணி” என்று பரவசம் அடைவார்கள்.

     முந்தாநாள் அவர் குஜராத்தில் ஆற்றிய உரையை நான் live ஆக
     பார்த்தேன். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களைப்போல்
     மேடையில் நடித்துக் காண்பித்தார்… பேசிக் காண்பித்தார்…
     ஒரு முறை அல்ல… இரண்டு முறை.

     அதே போல் 26 ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்து விட்ட
     முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும் ‘இமிடேட்’ செய்து பேசிக்
     காண்பித்தார்.

     இரண்டு முன்னாள் பிரதமர்களையும் இவர் மேடையில் ஏளனப்படுத்தினார்.
     குறை கூறுவது வேறு…. அவமதிப்பது வேறு..

     இந்த நாட்டின் பிரதமர் பொது மேடையில் இவ்வாறு நடந்துகொள்வது
     மிக மிகக் கேவலமான செயல். குஜராத் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, எத்தகைய கீழ்நிலைக்கும் செல்லும்
     அவரது செயலைக்கண்டு – தீவிர பாஜக/மோடிஜி ஆதரவாளர்களை
     தவிர மற்ற அனைவரும் அருவருக்கவே செய்வார்கள்.

     3) நான் – மனிதர்களை படிப்பதை (study of human behaviour ) ஒரு வகை ஆர்வத்துடன், பல வருடங்களாக மேற்கொண்டு வருகிறேன்.
     என்னால் இவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை…
     இவர் காமராஜரை போலவோ, லால் பகதூர் சாஸ்திரியை போலவோ
     ஒரிஜினல் அல்ல…. இவர் ஒரு “போலி” என்பது என் கருத்து.

     நீங்கள் சொல்வது போல், காலம் இதற்கு பதில் சொல்லும்….

     மோடிஜியின் செயல்பாடுகளின் விளைவை நான் கடந்த இரண்டு
     வருடங்களுக்கு மேலாக விமரிசித்து வருகிறேன். துவக்கத்தில்
     நீங்கள் உட்பட பலர் கடுமையாக என்னை எதிர்த்தனர். ஆனால்,
     இப்போது, அதில் பலர் உண்மையை உணர்ந்து ஒப்புக்கொண்டும்
     வருகின்றனர். உங்கள் பின்னூட்டங்களினூடேயே கூட
     சில சமயங்களில் நான் அதை பார்க்க முடிகிறது.

     எனக்கு – இந்த தேசத்தின் வளர்ச்சி, மக்களின் நிம்மதியான வாழ்வு தான் முக்கியம். தலைவரோ, கட்சியோ – அது யாராக இருந்தாலும்
     முக்கியம் இல்லை. நாட்டுக்கு உண்மையிலேயே உழைப்பவர்களை
     தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

     ———————————————————–

     // சில ‘மதச்சார்பற்ற சம்பந்தமான’ கருத்துக்களையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. //

     இதில் என் கருத்து –
     ” மதங்களுக்குள் போர் மூண்டால் அதற்கு முடிவே இருக்காது….
     அதன் கடுமையான விளைவுகளை ஒன்றுமறியாத அப்பாவி மக்களே அனுபவிக்க நேரிடுகிறது…. எல்லையற்ற துன்பங்களை பெண்களும், குழந்தைகளும் எதிர்கொள்ள நேரிடுகிறது.

     என் பார்வையில்-

     ” என் மதம் தான் உசத்தி – உன் மதம் மட்டம் ” என்று சொல்பவர்கள் ஒன்று மூர்க்கர்கள் அல்லது சுயநலவாதிகள்.

     உலகில் அமைதியும், சமாதானமும் நிலவ ஒரே வழி,
     அவரவர் சார்ந்த மதங்களில்,
     அவரவர் விரும்பும் பாதையில் போக
     அனைவரையும் அனுமதிக்க வேண்டும்.
     ஆயிரம் மதங்கள் கூட இங்கு பிணக்கு இல்லாமல் வாழ முடியும்.
     அதற்கான மனம் இருந்தால் போதும்.

     அதற்கு மக்கள் மனதை விஷமாக்கும் அரசியல்வாதிகளையும்,
     மத வெறியர்களையும் தனியே அடையாளம் கண்டு –
     ஒதுக்க வேண்டும்… அடக்க வேண்டும். மத விஷயங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.

     மதவாதிகள் என்பவர்கள் –
     எதாவது ஒரு மதம் சார்ந்து செயல்படுபவர்கள்.

     ஆன்மிகவாதி என்பவர், அதைக்கடந்து –
     மதங்கள் பயணிக்கும் பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும்,
     அனைவருக்கும் – இறைவன் ஒருவனே,
     அனைவரின் குறிக்கோளும், பயணமும் அவனை நோக்கியே –
     என்கிற நிலையில் இருப்பவர்.

     நான் மதவாதி அல்ல… ஆன்மிகவாதி.
     என்னால் எல்லா மதங்களையும்,
     எல்லா மதங்களை சேர்ந்தவர்களையும்
     நேசிக்க முடியும், முடிகிறது.

     எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் பேர் இத்தகைய நிலைக்கு
     வருகிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு, உலகில் அமைதியும், சமாதானமும் நிலவும்.

     அவசரமே இல்லை.
     நிதானமாக யோசித்துப் பாருங்கள்…அதன் பிறகும்,
     நான் சொல்வதில் உங்களுக்கு ஏற்பில்லை என்றால் –
     விட்டு விடுங்கள்….. காலம் மாறும்…

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.