துக்ளக் ஆசிரியர் சோ’வும், ஜெயலலிதா அவர்களும்….போன வருடம் இதே நாளில் (07/12/2016), அதிகாலையில் துக்ளக்
ஆசிரியர் சோ அவர்களின் மறைவுச் செய்தி வந்தது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவு… தொடர்ந்து தமிழ்நாட்டை துன்பத்தில் ஆழ்த்திய இரண்டு நிகழ்வுகள்…

நேற்று முன் தினம், ஜெயலலிதா அவர்களின் முதலாம் ஆண்டு
நினைவு நாள் அனுசரிக்கப்பட்டபோது, எழுதலாமென்று நினைத்தேன்…

பின்னர், சரி இரண்டு நாட்கள் கழித்து ஆசிரியர் சோ அவர்களின்
நினைவு தினம் வருகிறது… இரண்டையும் இணைத்து எழுதுவோம்
என்று பொறுத்திருந்தேன்.

கடந்த ஒரு வருடமாக தமிழ்நாடு நாய்படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறது. சுயநலவாதக்கூட்டங்கள் எப்படி எல்லாம் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து செய்வதறியாது, திகைத்துப் போய், செயலற்று இருக்கிறோம்.

ஜெயலலிதா அவர்களது அருமையை அவர் இருக்கும்போது ஏற்காதவர்கள் கூட அவர் இல்லாதபோது உணர்கிறார்கள். திமுகவின் முன்னணி தலைவரான திரு.துரைமுருகன் சில நாட்களுக்கு முன்னர் அதைப்பற்றி வெளிப்படையாகவே பேசினார்….

அவரிடம் நெகடிவ் குணங்களே இல்லையென்று நான் சொல்லவில்லை….
குறைகளே இல்லாத மனிதர் யார்…? அதுவும் முக்கியமாக
அரசியல்வாதிகளிடையே…?
மறைந்து விட்ட நிலையில், அவரது குறைகளை மறந்து விட்டு, அவரது மிகச்சிறந்த நற்குணங்களை மட்டும் நினைத்துப் பார்ப்பதே நினைவு தினத்தின் சிறப்பு.
அவரது பல சமூக நல திட்டங்கள் இந்தியாவிற்கே முன்னோடியாக
இருந்தன… இருக்கின்றன…( நேற்றைய தினம் ஆந்திராவில், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தொட்டில் குழந்தைகள் திட்டத்தை துவக்கி வைத்திருக்கிறார்..)

மறைந்தவர்கள் திரும்ப வரப்போவதில்லை.
அவர்களைப்பற்றிய நல்ல நினைவுகளை பகிர்ந்துகொள்ள- இந்த நாள்
ஒரு வாய்ப்பினை தருகிறது.

ஆசிரியர் சோ அவர்களைப்பற்றி எழுத ஆரம்பித்தால் எழுதிக்கொண்டே
இருக்கலாம்.. அவ்வளவு சுவாரஸ்யமான மனிதர் அவர். அவரைப்பற்றி
இங்கே நிறைய எழுதி இருக்கிறோம். இனியும் எழுத நிறைய இருக்கிறது…

இருந்தாலும், இன்றைய தினத்தில் –

புதிதாக எதுவும் எழுதுவதை விட, சென்ற வருடம் இதே நாளில் –
சோ அவர்களின் மறைவுச்செய்தி வந்தபோது நான் எழுதிய
இடுகையிலிருந்து ஒரு பகுதியை மீண்டும் இங்கு பதிப்பித்தால் அது
ஆசிரியர் சோ மற்றும் ஜெயலலிதா அவர்கள் ஆகிய இருவருக்குமே
சேர்ந்து செலுத்திய நினைவஞ்சலியாக இருக்குமென்று தோன்றியது…
கீழே –

.
-அன்புடன்,
காவிரிமைந்தன்
7, டிசம்பர் 2017
—————————————————————————————

“சோ” அவர்கள் ஏற்கெனவே பலமுறை மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு, மிக சீரியசான நிலைக்கு போய் மீண்டு
திரும்பியவர் என்பதால், மனம் ஓரளவுக்கு இத்தகைய செய்தியை
ஏற்கும் பக்குவத்தில் தான் இருந்தது.

“சோ” அவர்களைப்பற்றி எல்லாரும் சொல்லாதது எதை நான்
சொல்லி விடப்போகிறேன்…? எனது ஒன்றிரண்டு நேரிடையான
அனுபவங்களை ஏற்கெனவே இந்த தளத்தில் சொல்லி இருக்கிறேன்…

இருந்தாலும் …..

சில மாதங்களுக்கு முன்னால் –
ஆசிரியர் “சோ” அவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து,
சில பொதுவான அரசியல்,சமூக விஷயங்களைப் பற்றி அவருடன்
பேசி, அவரது கருத்துகளை இந்த வலைத்தளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

இதற்கு முன்னால், சிலமுறை பொது இடங்களில் சந்தித்து பேசி இருக்கிறேனே
தவிர, தனிப்பட்ட முறையில் அவருடன் பழக்கமில்லை.

ஆனால், ஒரு விதத்தில் நான் சோ அவர்களை – ஏகலைவன் போல் ஒரு
” மானசீக குரு”வாக (சில விஷயங்களில் மட்டும்) வரித்து செயல்படுகிறேன்.

ஒரு நாள் “துக்ளக்” அலுவலகத்திற்கு நேரில் சென்றேன். வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம் இல்லையெனில் குறைந்த பட்சம் சந்திப்புக்கு அவருக்கு சௌகரியமான ஒரு நேரமாவது கேட்போம் என்று நினைத்து தான் போனேன்.

என் துரதிருஷ்டம். அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது. அன்று காலை தான் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாரென்று….

அவரது உதவியாளர்களிடம் கவலையோடு அவர் நிலை பற்றி விசாரித்தேன். மிகவும் சகஜமான மன நிலையில் – அவர்கள் கூறியது எனக்கு கவலைக்கு பதிலாக சிரிப்பை உண்டாக்கியது.

அப்படி என்ன சொன்னார்கள்…?

அன்று காலையில் வழக்கமான உடல் பிரச்சினைகளுக்காக, பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றிருக்கிறார் ஆசிரியர்.

ஓரளவு பரிசோதனைக்குப் பிறகு டாக்டர்கள் அவருக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு ( நுரையீரலில் கோளாறு….) சிகிச்சை தர அவரை
ஒரு 10 நாட்களுக்கு மருத்துவமனையில் in-patient ஆக admit ஆகச் சொல்லி இருக்கிறார்கள்.

மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர வேண்டும் என்றவுடன் கடுப்பானவர், டாக்டரைப் பார்த்து –

” ஏன் சார், முன்னே என்ன சொன்னீங்க..? சிகரெட்டை விட்டா
சரி பண்ணிடலாம்னு சொன்னீங்க இல்லையா…?
உங்க பேச்சை நம்பி தானே நானும் சிகரெட்டை விட்டேன்…ரெண்டு வருஷம் ஆச்சு…சிகரெட்டும் போச்சு – ஒடம்பும் சரியாகல்லை….திரும்ப அட்மிட் வேற ஆக சொல்றீங்களே.. இது எப்ப தான் சரியாகும் ? ” என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு டாக்டர் அவரை கூலாக “நீங்க எத்தனை வருஷமா சிகரெட் பிடிச்சுக்கிட்டிருந்தீங்க..?” என்று கேட்டிருக்கிறார்…

“அம்பது வருஷமா” இது சோ அவர்களின் பதில்..

“அப்ப குணமாகவும் அதே அளவு காலம் பிடிக்கும்…!!!” இது டாக்டரின் பதில்….!!!

விடுவாரா சோ…!!
மீண்டும் அட்டாக் – “இதை ஏன் நீங்க அப்பவே சொல்லலை..?
சொல்லி இருந்தீங்கன்னா சிகரெட்டையாவது விடாம இருந்திருப்பேனே…
அநியாயமா என்னை ஏமாத்திட்டீங்களே….”

அந்த அளவிற்கு தன் உடல்நிலையை லேசாக ஏற்றுக் கொள்ளும்
மனப்பக்குவம் உடையவராக இருந்தார் சோ அவர்கள்.

அவர் உடல்நிலை பற்றி ஒருவர் கேட்டபோது அவர் சொன்னது -“எல்லாம் சரியா ஆயிடுத்துன்னும் சொல்ல முடியாது. ரொம்ப சீரியஸ்னும் சொல்ல முடியாது.. ஏதோ இப்போதைக்கு ஓடிக்கிட்டுருக்கு…..
ஓரளவு தாங்கற மாதிரி இருந்தா – இருக்கறதுல பிரச்சினை இல்லை…
இல்லைன்னா, போயிடறது பெட்டர்…”

பாவம் – அவர் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சிரமப்பட்டு விட்டார்.
போனது நமக்கெல்லாம் துக்கமாக இருந்தாலும், ஒருவிதத்தில்
அவருக்கு பர்சனலாக இது ஒரு ( relief ) விடுதலை தான்.

நேற்று முன் தினம் மறைந்த ஜெயலலிதா அவர்களும் சோ அவர்களும்
மிக நீண்ட நாட்களாக நட்புடன் பழகியவர்கள். YGP அவர்களின்
அமெச்சூர் நாடக குழுவில் சோ இணைந்தபோது அங்கே, ஏற்கெனவே
பங்கேற்று வந்த ஜெயலலிதாவின் தாய் சந்தியா அவர்களின் மூலம் அவரது மகளான சிறு வயது ஜெ. அவருக்கு பழக்கமாகி இருக்கிறார்.

ஜெ. தன்னை விட 14 ஆண்டுகள் மூத்தவரான சோ அவர்களை ஒரு
நம்பிக்கையான நண்பராக மட்டும் அல்லாமல் தனது மூத்த சகோதரராகவும் பாவித்து வந்தார். ( இடையிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் கூட….)

ஜெ. அவர்களின் 60-வது வயதன்று யாரும் எதிர்பார்க்காத
ஒரு புகைப்படம் வெளியாகியது.

சோ அவர்களின் இல்லத்திற்கு தானாகவே சென்ற
முதல்வர் ஜெ.அவர்கள், சோ மற்றும் அவரது மனைவியிடம்
வணங்கி ஆசி பெற்றார்…

cho-and-jj-on-her-60

அதற்கு பிறகு, 2015-ல் சோ அவர்கள் மருத்துவமனையில் மிகவும் சீரியசான நிலையில் இருந்தபோது – முதல்வர் ஜெ. மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்து நலம் விசாரித்தபோது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இது –

முற்றிலும் தனிப்பட்ட உரையாடல் என்கிற விதத்தில், formality எதுவும் இன்றி உரையாடுகிறார்கள். அவர்களுக்குள் உள்ள பாசமும், அக்கறையும் அதில்
வெளிப்படுவதை பார்க்கலாம்.

ஜெ – “கவலைப்படாதீங்க…
எல்லாருக்கும் வர்ரது தான்.
நான் டாக்டர்ஸ் கிட்ட பேசினேன்
எல்லாம் சரியாயிடும்னு சொல்ராங்க

” உனக்கு தான் அநாவசிய சிரமம் ”

” not at all – it is always a pleasure to see you -”

” we need you ”

14 வயது மூத்தவரான சோ அவர்கள் தனது
இளைய சகோதரியை கவனித்துக் கொள்வதற்காகத்தான்,
அவர் சென்ற மறுநாளே பின்தொடர்ந்து
மேலுலகம் சென்று விட்டாரோ….?

——————————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to துக்ளக் ஆசிரியர் சோ’வும், ஜெயலலிதா அவர்களும்….

 1. paamaranselvarajan சொல்கிறார்:

  1970 களில் பத்திரிக்கைத்துறையில் ஒரு மாற்றமான — வினோதமான பத்திரிகையையும் – ஆசிரியரையும் பார்த்தவர்களுக்கு அன்றைய காலகட்டத்தில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியவரும் — அரசியல் விமர்சனங்களை அஞ்சாமல் எடுத்து எழுதியவரும் — 1970 ஆம் ஆண்டு ‘துக்ளக்’ என்ற வார இதழையும், ‘பிக்விக்’ என்ற ஆங்கில இதழை 1976-ம் ஆண்டும் ஆரம்பித்து வெற்றி பெற்றவருமான திரு . சோ. அவர்கள் அனைத்து அரசியல் தலைவர்களிடமும் நட்பு பாராட்டிய சோ, கொஞ்சமும் அஞ்சாமல் அனைவரையும் கடுமையாக விமர்சனமும் செய்தவர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது …

  திரு .சோ அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று 7 டிசம்பர் … பத்திரிக்கை உலகில் ஆண்டுதோறும் வாசகர் விழா நடத்தி அவர்களது கேள்விகளுக்கு நேரிடையாக — நேர்மையான பதில்களை அளித்த ஒரே ” ஆசிரியர் ” திரு .சோ அவர்கள் தான் — முதன் முதலாக தமிழத்திற்கு ” திரு மோடி ” அவர்களை ஆண்டு விழாவில் அறிமுகப்படுத்தியவரும் — அத்வானி பிரதமர் பதவிக்கு என்று இருக்கும்போதே மோடியை அதற்கு அடையாளம் காட்டிய துணிச்சல் பேர்வழிதான் – திரு சோ . அவர்கள் … ஒரு உலர்ந்த – உள்ளார்ந்த சோகம் இருப்பினும் – அவரது நினைவு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது — இனி ஒரு காலம் — ” துணிச்சலான துக்ளக்கை ” காண முடியுமா …. ?

 2. புதியவன் சொல்கிறார்:

  வருத்தத்தை ஏற்படுத்திய பதிவு. வாழ்வின் முக்கியமான காலகட்டங்களில் அரசியல் பகுதியில் (திரை இசைக்கு இளையராஜா) நம்மோடு இயைந்து இருந்தவர்களில் முக்கியமானவர்கள் சோ அவர்களும், எம்ஜியார்/ஜெயலலிதா போன்றோரும். அதிலும், எம்ஜியார், ஜெயலலிதா அவர்களை நோக்கி நம்மைத் திருப்பிவிட்டதில், கருணானிதிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. ஒரே வாரத்தில் இருவரும் மறைந்தது மிக்க வருத்தம்தான். தமிழக மக்களுக்கு எம்ஜியாரையோ ஜெயலலிதாவையோ இழக்கும் மனநிலை இருந்ததில்லை.

  நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்.

 3. புதியவன் சொல்கிறார்:

  சம்பந்தமில்லாத செய்தி ஒன்றை பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். துக்ளக்கில் ஒருமுறை, வாசகர் கடிதத்தில் நான் பார்த்த வாசகர் பெயர், என்னுடன் சவேரியார் கல்லூரியில் படித்த ‘திருவண்ணாதபுரம் பாலசுப்ரமணியம்’ என்று இருந்தது. எனக்கு அவருடைய முகவரி என்ன என்று அறிந்துகொள்ள துக்ளக்கிற்கு கடிதம் எழுதினேன் (நான் வெளி’நாட்டில் அப்போது இருந்தேன்). துக்ளக் அலுவலகத்திலிருந்து அவருடைய முகவரியை, 15 ரூ ஸ்டாம்ப் கவரில் அனுப்பியிருந்தார்கள் (அப்போ துக்ளக் விலையே 7 ரூ இருக்குமோ என்னவோ. நான் ‘தொடர் வாசகன்’ என்று மட்டும்தான் சொல்லியிருந்தேன். நான் நிஜமாகவே துக்ளக் வாங்குகிறேனா என்பதற்கெல்லாம் அவர்களிடம் Proof கிடையாது). ஆனாலும், ஒரு வாசகனின் கடிதத்தை மதித்து பதில் எழுதியிருந்ததில், அதுவும் ரூபாய் செலவழித்து அனுப்பியிருந்ததில், நான் மிகவும் நெகிழ்ந்துவிட்டேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   சோ சார் துக்ளக் அலுவலகத்திற்கு என்று ஒரு கௌரவத்தை ஏற்படுத்தி இருந்தார்.
   அது ஒரு கட்டுப்பாடான, ஆனால் அன்பான குடும்பத்தலைவரின் நிர்வாகத்தில்
   இருக்கும் குடும்பத்தைப் போல், மிக அழகாக செயல்பட்டது…
   இப்போதும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
   ஆண்டுதோறும் பொங்கலன்று நிகழும் துக்ளக் ஆண்டு விழாவில் அவர் தன்
   அலுவலகத்தில் பணிபுரியும் அத்தனை பேரையும், (ப்யூன், டிரைவர் உட்பட)
   மேடையில் பெயர் சொல்லி கூப்பிட்டு வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பார்.
   தான் இருந்த கடைசி ஆண்டு வரையிலும் அவர் இந்த பழக்கத்தை தொடர்ந்தார்.

   திரு.குருமூர்த்தி அவர்களின் தலைமையில் இனியும் இந்த பண்பாடு தொடரும் என்று நம்பலாம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.