எது கொடுமை….? நோயா அல்லது நோய் பற்றிய பயமா…?சுகி சிவம் அவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு நிஜம்…!!!

இன்றைய உலகில், வாழ்க்கை முறை காரணமாக சர்க்கரையும், ரத்த அழுத்தமும் சர்வசகஜமாகி விட்டது. வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்துக் கொண்டாலும், தகுந்த நம்பிக்கை தரும் ஆலோசனைகள் கிடைத்தாலும் இவற்றால் ஏற்படும் பாதிப்புகளை, வேதனைகளை நிச்சயம்
ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும்.

ஒரு காலத்தில், மருத்துவம் என்பது ஒரு மிகப்பெரிய சேவையாக கருதப்பட்டது… மருத்துவர்கள் பிணி தீர்க்க வந்த தெய்வமாக கருதப்பட்டனர். ஆனால், இன்று மருத்துவத்துறை அதிக அளவில் பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறி விட்டது.

தேவையே இல்லாமல் எடுக்கப்படும் பல டெஸ்ட்கள்…வித விதமான பரிசோதனைகள். உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு ஸ்பெஷலிஸ்ட்…

தங்கள் உடல்நிலையைப் பற்றி, ஒவ்வொருவரும் அறிவுபூர்வமாக அறிந்து கொண்டு, அதற்கேற்றாப்போல், வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டு, தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தால், தனிப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரம் நிச்சயமாக உயரும்…!


நோய் என்றால் – அதனால் வரக்கூடிய சில அவஸ்தைகள், வலிகள், வேதனைகள் – இருக்கத்தான் செய்யும்.

கவலைப்படுவதாலோ, புலம்புவதாலோ – வேதனை அதிகமாகுமே தவிர, நிச்சயம் குறையாது.

சிலருக்கு எதற்கெடுத்தாலும், இறப்பைப் பற்றிய பயம் வந்து விடுகிறது…. வியாதி வந்து விட்டதே – செத்து விடுவோமோ என்று பயம்.

உண்மையில் “சாவு” என்பதை எந்த மனிதரும் சந்திக்கப் போவதே இல்லை என்கிற உண்மையை மனதாற உணர்ந்தால் – இந்த பயம் போயே போய் விடும்.

ஆமாம் நிஜந்தானே… யோசித்துப் பாருங்கள்…. “இறப்பு” வரும்போது நாம் இருக்கப்போவதில்லை…நாம் உயிருடன் இருக்கும் வரை “இறப்பு” நம்மிடம் வரப்போவதில்லை. நாம் “சந்திக்கவே போவதில்லை” – என்கிற ஒன்றிற்காக ஏன் அஞ்சி அஞ்சி வாழ வேண்டும்…?

இந்த கருத்தினை உறுதிப்படுத்துவற்காக, எனக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவரின் கதையை சுருக்கமாகச் சொல்கிறேன்….

2001 மார்ச் 19 – முதல் தடவையாக அவருக்கு massive heart attack வந்தது. அதிருஷ்டவசமாக, பத்தே நிமிடங்களில் மருத்துவ உதவி கிடைத்ததன் காரணமாக தப்பி விட்டார்..!

அவருக்கு நன்கு பழக்கமான டாக்டர் நண்பர் ஒருவர் இருந்தார். கொஞ்சம் விவரமாக அவரிடம் பேசியபோது தெரிய வந்தது… இந்த தடவை முழுவதுமாக தப்பி விட்டார்..கவலை இல்லை…ஆனால் இரண்டாம் தடவை வந்தால் ஆபத்து…. !

அந்த அடுத்த தடவை எப்போது வரும்…?
எப்போது வேண்டுமானாலும் வரலாம்…!!!

சரி அது வரும்போது வரட்டும்… அதற்குள் நம் கடமைகளை முடித்து விடுவோம் என்று கிடுகிடுவென்று செயல்பட்டார். அவர் பெண்ணிற்கு திருமணம் நடக்க வேண்டியிருந்தது… வீட்டின் மீது வாங்கிய கடன் சில லட்சங்கள் மீதி இருந்தது.

பணி ஓய்வு பெற இன்னமும் சில மாதங்கள் மீதி இருந்தன…உடனடியாக, பணியிலிருந்து விருப்ப ஓய்வு (voluntary retirement) பெற்றார். அதில் கிடைத்த பணத்தை வைத்து பெண்ணின் திருமணத்தை ஜாம் ஜாமென்று நடத்தினார்… வீட்டின் மீது வாங்கப்பட்ட மீதமிருந்த வங்கிக்கடனை ஒரே தவணையில்
ஒட்டு மொத்தமாக அடைத்தார்.

வங்கியில் தன் இருப்புகள், கணக்கு அத்தனையையும், either or survivor என்கிற முறைக்கு மாற்றி, எல்லாவற்றிலும் மனைவியின் பெயரைச் சேர்த்தார்.

நிதிச்சுமைகள், கடமைகள் முடிந்தன.
இனி வாழ்க்கை முறை….

உணவு முறையில் மாற்றம். ஏற்கெனவே வெஜிடேரியன் தான்.. உணவின் அளவு குறைக்கப்பட்டது. தினமும் ஒரு மணிநேரம் நடைப்பயிற்சி..
30 நிமிடங்கள் தியானம். தோன்றும்போதெல்லாம், நேரம் கிடைக்கும்போதெல்லாம் மூச்சுப்பயிற்சி… ( எளிய முறை பிராணாயாமம் – நம்ப மாட்டீர்கள்; சினிமா தியேட்டரில் கூட இடைவேளையின்போது,
கண்களை மூடிக்கொண்டு மூச்சுப்பயிற்சியில் ஈடுபடுவது உண்டு…!!! )

தன்னால் இயன்ற சின்ன சின்ன வேலைகளை எல்லாம் – இதில் பொதுப்பணியும் உண்டு… விரும்பிச் செய்கிறார்… 60 வயதிற்கு மேல், முதல் முதலாக கம்ப்யூட்டர் செயல்பாடு குறித்த ஒரு 10 நாள் அடிப்படை பயிற்சியை பெற்றார். தன்னை மிகவும் பிசி’யானவராக மாற்றிக் கொண்டார். தனக்கு பிடித்ததை
எல்லாம் தேடித்தேடி படிக்கிறார்… மனதில் தோன்றுவதை எல்லாம் எழுத்து வடிவில் மற்றவர்களுடன் உற்சாகமாக பகிர்ந்து கொள்கிறார்.

– மிக முக்கியமான ஒரு விஷயம்… கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக, தன் இதய பரிசோதனைக்காக எந்த டாக்டரிடமும் சென்றதே இல்லை….
கேட்டால் – எல்லா வேலைகளையும் முடித்து விட்டு பயணம் கிளம்ப தயாராக இருக்கிறேன் என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்….!!!

உடல் ஆரோக்கியத்தை விடவும், மன ஆரோக்கியம் – தைரியமான மனம் – நமக்கு மிக மிக உதவியாக இருக்கிறது… முக்கியமாக முதுமையில்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to எது கொடுமை….? நோயா அல்லது நோய் பற்றிய பயமா…?

 1. Sakthivel சொல்கிறார்:

  The story of the person can be guessed.

 2. chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

  Nallavan vazhvaan

 3. புதியவன் சொல்கிறார்:

  சுகி சிவம் அவர்களின் கருத்து மிகுந்த அர்த்தமுள்ளது. அதை நான் 100 சதவிகிதம் ஏற்கிறேன். என் நெருங்கிய உறவினர், எல்லாக் கடமையையும் முடித்துவிட்டார், தினமும் அவரது கடமைகளைச் செய்துகொண்டிருக்கிறார், வயதைப் பற்றியோ அல்லது நோயைப் பற்றியோ அவர் கவலைப்பட்டுப் பேசமாட்டார். சில சமயம் என்னிடம் சொல்லும்போது ‘நான் எப்போது போகவும் ரெடி. இருக்கும்வரை முடிந்த அளவு என்னுடைய வேலைகளைப் பார்த்துக்கொண்டிருப்பேன்’ என்று சொல்வார். நான் சில சமயம், ‘எனக்கு முடியலை, இப்போ நேரம் சரியில்லை, அந்தக் கோள்கள் சரியில்லை, அது இது என்றெல்லாம் சொல்லும்போது, ‘என்ன நீங்க..கடவுள் பக்தி என்று இருக்கும்போது, கோள், கீள் என்றெல்லாம் நினைக்கலாமா? மனசுல எப்போவும் பாசிடிவ் ஆக நினைத்துக்கொண்டிருக்கவேண்டும் என்று எனக்கு ஆலோசனை சொல்வார்.

  கா.மை. சார்.. இரண்டு இடுகைகளையும் படித்தேன். மிக உபயோகமானது. ‘போவது நிச்சயம்’, ஆனால் அதைப் பற்றி ஏன் சிந்திக்கவேண்டும்? எப்போ, எங்கே, எந்த விதத்தில் என்பது நம் கையில் இல்லாதபோது, இருக்கும் வாழ்க்கையை அதனுடைய போக்கில் ரசிப்போம், முடிந்த அளவு பிறருக்கு/சமூகத்துக்கு உபயோகமாயிருப்போம் என்பது சிறந்த ஆலோசனை. இதுமாதிரி இன்டெரெஸ்டிங்க் தலைப்புகளையும் அவ்வப்போது தொடருங்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நன்றி புதியவன்.

   விமரிசனம் தளத்தை முடிந்த வரையில் ஒரு Reader’s Digest மாதிரி, என்னுடைய இடுகைகளின் கூடவே, அவ்வப்போது நான் ரசிக்கும், பயனுள்ள, அழகான, சுவாரஸ்யமான – மற்ற விஷயங்களையும் இதில் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

   இதை புரிந்து கொள்ளாதவர்கள் அல்லது புரிந்தாலும் கூட சிலர் வேறு எரிச்சல்கள், மாற்று கருத்துகளை ஏற்க முடியாமை போன்றவை காரணமாக – cut & paste என்று வர்ணிக்கிறார்கள்…

   மற்றவர்களின் படைப்பை நம்முடையது என்று சொல்லிக்கொண்டால் தான் தவறு…. இதைப்படைத்தவர் இன்னார் .. இது நன்றாக இருக்கிறது என்று
   படைப்பாளிகளின் பெயரையும் சொல்லி விட்டு, இங்கே மறு பதிவு செய்வது ஒரு வகையில் அவர்களின் புகழை கூட்டும் செயலே…

   நீங்கள் சரியாக புரிந்து கொள்கிறீர்கள்…உங்களைப்போன்றே பெரும்பாலான சைலண்டான நண்பர்களும் கூட..!!

   Anyway – நமக்கு சரியென்று தோன்றுகிற வழியில் சென்று கொண்டே இருப்போம்…!!!
   மீண்டும் நன்றிகள்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.