கூச்சலில் – மறைக்கப்பட்ட “GOA” ஊழல் ….!!!


பாராளுமன்றத்தில் சப்தம் போட்டதால், உரக்கப்பேசியதால் – உண்டான விளைவு… அன்று இந்தியா முழுவதும் பேசப்பட்டிருக்க வேண்டிய மிகப்பெரிய ஊழல் கதையொன்று சுத்தமாக மறைக்கப்பட்டது… மறக்கப்பட்டது…

அதற்கு முந்தைய நாள் தான் உச்சநீதிமன்றம் (சுப்ரீம் கோர்ட்), கோவா
மாநிலத்தில், திருவாளர் மனோகர் பர்ரிகர் அவர்களை முதலமைச்சராக கொண்ட பாஜக அரசு, சட்டவிரோதமாக கொடுத்திருந்த
88 இரும்புத்தாது சுரங்கங்களின் லைசென்சை ரத்து செய்து, அந்த லைசென்சுகள் கொடுக்கப்பட்ட விதத்தைக் குறித்து தனது பலத்த கண்டனத்தையும் தெரிவித்திருந்தது.

கோவாவில் Iron, bauxite, manganese, limestone, silica ஆகிய
தாதுப்பொருட்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. 2015-ஆம் ஆண்டில் மட்டும் 31.69 மில்லியன் டன் தாதுப்பொருள் மர்மகோவா துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. இந்தியாவின் மொத்த இரும்புத்தாது ஏற்றுமதியில் 39% கோவாவிலிருந்து ஏற்றுமதியாகிறது.

தாதுப்பொருட்களை வெட்டியெடுக்கவும், ஏற்றுமதி செய்யவும்,
தனிப்பட்ட முதலாளிகளுக்கு, அவர்களின் நிறுவனங்களுக்கு, கோவா அரசு லைசென்சு கொடுத்ததில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் எனவே அவற்றை ரத்து செய்ய வேண்டுமென்றும் கோரி, ‘கோவா ஃபௌண்டேஷன்’ என்கிற ஒரு தொண்டு நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது.

2015-ல் மத்திய அரசால், கொண்டு வரப்பட்ட Mines and Minerals
(Regulation and Development) Act, 2015 பிரிவுகளின்படி, சுரங்கங்களுக்கு
லைசென்சு கொடுக்க வெளிப்படையான ஏல முறை தான்
மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்த சட்ட விதிகள் அமலுக்கு வருவதற்கு just ஒரு நாள் முன்னதாக,
அவசர அவசரமாக கோவா மாநில அரசு 88 சுரங்க கம்பெனிகளுக்கு
ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருந்த லைசென்சுகளை 20 ஆண்டுகளுக்கு
நீடித்து உத்திரவு பிறப்பித்திருந்தது.

இந்த நடவடிக்கையை உள்நோக்கமுடையது என்றும், தனிப்பட்ட முதலாளிகள் பயனடைவதற்காக மாநில அரசு மேற்கொண்ட சட்டவிரோதமான அணுகுமுறை என்றும் கூறி, இப்போது உச்சநீதிமன்றம் 88 லைசென்சுகளையும் ரத்து செய்திருக்கிறது.

சட்டவிதிகளை முறையாக நடைமுறைப்படுத்தி, வெளிப்படையாக
ஏல முறையில் மீண்டும் இந்த லைசென்சுகள் கொடுக்கப்பட வேண்டும்
என்றும் அதுவரை சுரங்க நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட
வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது. மார்ச் 15
முதல் சுரங்க நடவடிக்கைகள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்றும் உத்திரவு கூறுகிறது.

சட்டத்தை வளைத்து, புதிய விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முந்திய தினம், just ஒரு நாள் முன்னதாக, பழைய முறைகளில்
88 லைசென்சுகளை 20 ஆண்டுகளுக்கு
மாநில அரசு புதுப்பித்துக் கொடுத்ததற்கு காரணம் சட்டவிதிகளை சரியாக புரிந்து கொள்ளாதது தான் என்று திருவாளர் மனோகர் பர்ரிகர் சொல்ல முன்வந்தாலும் வருவார்…. அவருக்கு வக்காலத்து வாங்கும் பாஜக தலைமையும் சொன்னாலும் சொல்லும்…

ஏனெனில், அவர்களது கொள்கை தான்
“நா காவூங்கா – நா கானே தூங்கா…” ஆயிற்றே…!!!

அல்லது திருவாளர் மனோகர் பர்ரிகர் அவர்களுக்கு இந்த கொள்கையிலிருந்து எதாவது விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறதோ என்னவோ…?

ஆக மொத்தம், பாராளுமன்றத்தில் எழுந்த கூச்சல்களும், பதில் கூச்சலுமாகச் சேர்ந்து இந்த கதையை அடியோடு மறைத்து விட்டன…!!!

——————————————————–

பின் குறிப்பு –

கொள்கை விலக்கு, திருவாளர் பர்ரிகரோடு நிற்பதாகத் தெரியவில்லை…. திருவாளர் நி.க. அவர்களின் துறைகளிலும், நிறைய கமிஷன் ஏஜென்டுகள் உலா வருவதாக ஹிந்தி மீடியாக்களில் செய்திகள் வெளிவருகின்றன….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to கூச்சலில் – மறைக்கப்பட்ட “GOA” ஊழல் ….!!!

 1. புது வசந்தம் சொல்கிறார்:

  கூச்சல் குறித்த உங்கள் பதிவு வரும் என எதிர்பார்த்தேன் வராதது ஏமாற்றம் அளித்தது. இன்றைய பதிவுவின் முதல் வரி அதை போக்கியது. கூச்சலில் ஒரு பதற்றம் தெரிந்தது, சம்பந்தம் இல்லாத வெற்று கூச்சல், ஒரு பாராளுமன்றத்தில் இருக்கிறோம், பேசுகிறோம் என்பது போல அல்லாமல் கட்சி/தேர்தல் கூட்டம் போல. 2019 தேர்தல் பயம் இப்போதே முகத்தில் தெரிகிறது. கடந்த வாரம் சென்னை வந்திருந்தேன். வருவதற்கு முன்னர் உங்களை சந்திக்க வேண்டும் அது குறித்து உங்கள் அனுமதி பெறவும் எண்ணியிருந்தேன், சில காரணங்களால் முடியாமல் போனது. அடுத்த முறை இதற்கான முயற்சியுடன் வர வேண்டும்.

 2. BVS சொல்கிறார்:

  பாராளுமன்றம் போலவா இருந்தது அது ? தேர்தல் கூட்டம் போலத்தானெ இருந்தது;
  சப்தம் போட்டு பேசினால், தவறுகளிலிருந்து, செயல்படாமை குறித்த குற்றச்சாட்டுகளிலிருந்து திசை மாற்றி, எல்லாரும் சப்தத்தைப்பற்றியே பேசும்படி செய்து விடலாமெங்கிற சாணக்கியம்.
  இப்போது அந்த சத்தத்திற்கு இன்னொரு காரணம் கோவா பற்றிய தீர்ப்பு என்று
  தெரியவருகிறது. கோபத்திற்கு காரணம் ராஜஸ்தான் தோல்விகள்; இன்னும் என்னென்னவோ ?

 3. புதியவன் சொல்கிறார்:

  என்னோட assessment என்னன்னா, ஏதாவது peculiar incident நடக்குதுன்னா, அது ஏன் இப்போ நடக்கணும், ஏன் இந்த விஷயத்தை இப்போ பெரிசு பண்ணணும், ஏன் இவர் தன் ஸ்டேடஸைவிட்டு இந்த விஷயத்தைப் பெரிசாக்குறார், அப்படியெல்லாம் யோசிக்கும்படியான நிகழ்வுன்னா, அது ஆள்வோர் (அல்லது எதிர்க்கட்சி, அபூர்வமா) எதையாவது பெரிய நிகழ்வை மறைப்பதற்காகத்தான் இருக்கும்.

  இதுல பெரிய ஊழல் இருக்கறதா எனக்குத் தோன்றலை. பார்ப்போம். ‘அழுக்கு’ இருந்தால், வெளிய வந்துதானே ஆகணும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   இந்த “தம்மாத்தூண்டு” கோவா விவகாரத்திற்காக, பாராளுமன்ற கூச்சல் கிளம்பியது என்று
   நான் சொல்லவில்லை…. அந்த கூச்சலின் விளைவாக, இந்த விஷயம் அமுங்கி விட்டது
   என்று தான் கூறுகிறேன்.

   நீங்கள் சொல்வது போல், அதன் பின்னணி இன்னமும் பெரியதாகத்தான் இருக்க முடியும்…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.