மோசடி மன்னன் நிரவ் மோடியும்….திரு.ரவிசங்கர்ஜியும்….!!!


ஆனாலும் ரவிசங்கர்ஜி அநியாயத்துக்கு கோபப்படுகிறார்….
அப்படியென்ன தவறாகச் சொல்லி விட்டார்கள்.. ?
” சோட்டா மோடி ” … அவ்வளவு தானே…?
இதற்குப் போய் இவ்வளவு கோபமா…? நிருபர் கூட்டத்தில் பொங்கி விட்டார்… அதெப்படி அவமரியாதை செய்யலாம் என்று…!!!

பாவம் அவர் என்ன செய்வார். அவருக்கு எப்போதும் அவருடைய boss
ஞாபகம் தான்…. பாஸுடன் தான் ஒப்பிட்டு விட்டார்கள் என்று நினைத்து
பொங்கி விட்டார்…

நம்ம ஆட்கள் அவ்வளவெல்லாம் மோசம் கிடையாது.
பாவம் பிரதமர் என்ன தான் செய்வார்….?

அவர்பாட்டிற்கு தேமேனென்று துபாய், ஓமன், வளைகுடா நாடுகள்,
ஸ்விட்சர்லாந்து, தவோஸ் மாநாடு என்று ஒரு ரவுண்டு வெளிநாட்டு
பயணங்களை முடித்துக் கொண்டு நாலு நாள் முன்னர் தான் வந்தார்.,
ஆச்சு…அடுத்த வேலையாக நாகாலாந்து, திரிபுரா என்று சட்டமன்ற
தேர்தல் பிரச்சாரங்களில் அலைந்து கொண்டிருக்கிறார்…

தொடர்ந்து இன்றைக்கு “பரீட்சைகளை தைரியமாக எதிர்கொள்வது
எப்படி..?” என்று நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கூடத்து பிள்ளைகளுடன்
டிவி மூலம் தொடர்புகொண்டு சொல்லிக் கொடுத்தாக வேண்டும்..
(ஆமாம் – ஹிந்தியில் தான்…!!! ) இஸ்கூல் வாத்தியார்களுக்கு என்ன
தெரியும்… அவர்களால் இதையெல்லாம் செய்ய முடியுமா என்ன…?

ஒரு மனிதர், அவரால் முடிந்ததைத்தானே செய்ய முடியும்…?
அவரைப்போய், சம்பந்தமே இல்லாமல், இந்த வங்கி மோசடி பற்றி எல்லாம் யாராவது தொந்திரவு செய்யலாமா….??

சொன்னவர்கள் ஒப்பிட்டது – முன்பு ஓடிப்போன லலித்மோடியையும்
(அவர் வயதில் பெரியவர் …அதனால் படா மோடி ) இப்போது ஒடிப்போய்
விட்ட நிரவ்மோடியையும் ஒப்பிட்டு தான்….!!!

” குற்றம் நடந்தது காங்கிரஸ் காலத்தில்… அவர்கள் தான் இதற்கு பொறுப்பு “- என்று கடுப்படித்தார் ரவிஜி…. சரி – இத்தோடு விட்டிருந்தால்
பரவாயில்லை. அதை அடுத்து அவர் சொன்னது தான் மிகப்பெரிய காமெடியாகி விட்டது….

“குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் விட மாட்டோம்.
நிரவ் மோடியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு விட்டது… அனைத்து
விமான நிலையங்களுக்கும் “லுக் அவுட்” ஆர்டர் போய் விட்டது…..
கைது செய்யப்பட்டு, கம்பி எண்ணப்போவது நிச்சயம்… etc. etc…”

இது எப்படி ஜோக் ஆனது….?

குற்றத்தில் சம்பந்தப்பட்ட நிரவ் மோடியின் தம்பி நிஷால்- பெல்ஜியம் நாட்டின் குடிமகனாக உரிமை பெற்றிருக்கிறார்… அவர் ஜனவரி ஒன்றாம் தேதியே பெல்ஜியத்துக்கு பறந்து விட்டார்.

அடுத்தது அவரது மாமா மெஹூல் சோக்ஸி…அவர் எந்த நாட்டு குடிமகன் என்று கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்…. அவரோ ஜனவரி 4-ந்தேதியே ஆகாயக்கப்பலில் பறந்து விட்டார்..

மீதி இருந்தது மனைவி திருமதி அமி மோடி, அமெரிக்க பிரஜா உரிமை பெற்றவர்… இவர் தான் கடைசி…இவரும் ஜனவரி 6-ந்தேதி அமெரிக்காவிற்கு பறந்து விட்டார்.

கடைசியாக சின்னமோடி, ஒருவழியாக எல்லாரையும் வழியனுப்பி விட்டு, ஜனவரி கடைசி வாரத்தில் ஸ்விஸ் போய், உலக பொருளாதார
மாநாட்டில் கலந்து கொண்டு, தான் கலந்து கொண்டதன் அடையாளமாக,
சாட்சிக்கு நமது பிரதமருடன் போட்டோவும் எடுத்துக் கொண்டு மாயமானவர்….. இந்தியாவிற்கு திரும்பவே இல்லை என்று தெரிகிறது.

( பிரதமருடன் திட்டமிடப்பட்ட “க்ரூப்” புகைப்படத்திற்கு உட்கார்ந்து,
நின்று போஸ் கொடுக்க எவரை வேண்டுமானாலும், PMO அனுமதித்து
விடுமா…? அவர்களது பின்னணி verify செய்யவேண்டிய பொறுப்பு,
கடமை – அவர்களுக்கு இல்லையா …? தன் மீது 42 FIR உள்ள ஒரு
ஆசாமியை அங்கே எப்படி அனுமதித்தார்கள்…? )

…..

இவர்கள் எல்லாரும் போய் விட்டார்களா என்று உறுதிப்படுத்திக் கொள்ள காத்திருந்தது போல், எல்லாரும் பறந்த பிறகு, ஜனவரி கடைசியில், வங்கியால் சிபிஐ- க்கு புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் ஒரு 15 நாட்கள் கழித்து சாவகாசமாக இப்போது ரெய்டு
நடந்திருக்கிறது…!!!

இந்த லட்சணத்தில் நேற்று ரவிஜி செய்தியாளர் கூட்டத்தில் – வங்கிஅமைப்பு முறையை சீர்குலைக்க நினைக்கும் எந்த ஒருவரையும் இந்த அரசு தப்பவிடாது. எந்த தனிமனிதரும், எப்பேற்பட்ட அந்தஸ்தில் இருந்தாலும் அவர் தப்பிக்க முடியாது, இவர்களை சிறைக்கு அனுப்பியே தீருவோம் என்று வீரசபதம் செய்கிறார்….!!!

சீனியாரிடிபடி பார்த்தால் முதலில் விஜய் மால்யா, அடுத்து
சீனியரான லலித் மோடி – கடைசியில் தான் நமது தற்போதைய ஹீரோ
நிரவ் மோடி… இவர்களில் யாராவது, என்றாவது ஒரு நாள் இந்தியாவுக்கு வருவார் என்கிற நம்பிக்கை யாருக்காவது இருக்கிறதா..?

நமக்கு இருக்கிறதோ இல்லையோ….ரவிசங்கர்ஜிக்கு மட்டும்
இருக்கிறது…. 🙂 🙂 அவரது தன்னம்பிக்கை போற்றத்தகுந்தது….பாராட்டப்பட வேண்டியது….!!!

உண்மையில் என்ன தான் நடந்தது…?
அநேகமாக நண்பர்கள் இதற்குள் செய்திகளில் நிறைய படித்திருப்பீர்கள்…
இருந்தாலும் சில நண்பர்கள் விளக்கம் கேட்டிருந்தார்கள்…
அவர்களுக்காக, சுருக்கமாக –

Solar Exports, Stellar Diamonds, Diamond R US – இவையெல்லாம்
நம்ம சின்ன மோடி நடத்தி வந்த வைர வியாபாரம் செய்யும் சில
நிறுவனங்கள்… கூடவே, அவரது மாமா Mehul Choksi நடத்தி வந்த
Gitanjali Gems, Gili India, Nakshatra போன்ற சில நிறுவனங்கள்…
இவர்களுக்கு உலகம் பரவிய வியாபாரம்… நியூயார்க் முதல்
ஹாங்காங் வரை…!!! இந்தியாவில் பல இடங்களில்….

2011-ல், இவர்கள், மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கியில்
( Punjab National Bank ), வலுவானதொரு தொடர்பை உருவாக்கிக் கொண்டு, வெளிநாடுகளில் வியாபாரக்கடன் பெற LoU ( Letter of Understanding ) உருவாக்கிக் கொண்டார்கள்.

இதை வைத்துக்கொண்டு, அவர்கள் வெளிநாடுகளிலுள்ள இந்திய
வங்கிகளின் கிளைகளில் கடன் பெற முடியும்… இந்த LoU-வுக்கு,
இவர்களுக்கு கடன் கொடுக்கும் வங்கிகளுக்கு PNB செக்யூரிடி/ஜாமீன்
கொடுப்பதாக அர்த்தம். ஒருவேளை அந்த வங்கிகளின் கடன் திரும்ப
வராவிடில், PNB அந்த பணத்தை தர, உத்திரவாதம் கொடுக்கிறது.
இந்த மாதிரி ஒன்றல்ல இரண்டல்ல…கடந்த 7 வருடங்களில்
150 முறை LoU கொடுக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து, PNB -யில் உள்ள தங்களது தொடர்புகளின் மூலம் கடன்
வாங்கி, மேலும் கடன் வாங்கி…. அப்படியே தொகை
கடைசியில் சுமார் 11,400 கோடியை சென்றடைந்தபோது, PNB-யில்
யாரோ ஒருவர் இவற்றை கண்டுபிடிக்க, ஜனவரி கடைசியில்
சிபிஐ-க்கு தங்கள் வங்கியில் பணிபுரியும் சில நபர்களின் மீதும்,
நிரவ் மோடி க்ரூப் மீதும் கிரிமினல் புகார் கொடுத்திருக்கிறார்கள்…
அதன் விளைவாக, விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

வங்கிகள் சீரமைப்பு,
வாராக்கடன்களை மறுபரிசீலனை செய்வது,
500-1000 ரூபாய் நோட்டுகள் டிமானடைசேஷன்,
– என்கிற பெரிய அளவிலான சோதனைகளின் போதெல்லாம், இந்த
விஷயம் எப்படி கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது என்பது ஒரு
மில்லியன் டாலர் கேள்வி…

எல்லா வங்கிகளிலும், internal audit, external audit எல்லாம் உண்டு.
3 மாதத்திற்கு ஒரு தடவை சிறிய அளவிலும், வருடத்திற்கு ஒரு
தடவை பெரிய அளவிலும் என்றெல்லாம் தொடர்ச்சியாக ஒரு குழு
அனைத்து கணக்கு வழக்குகளையும் பரிசீலனை / சோதனை செய்துகொண்டே இருக்கும்.

இவை எல்லாவற்றையும் சின்னமோடி சமாச்சாரம் எப்படி தாண்டியது…?
இப்போது, PNB-யில் உள்ள யாரோ ஜூனியர் அதிகாரிகள் 2 பேர் தொடர்ந்து செய்துகொண்டிருந்த ஏமாற்று வேலை என்று சொல்வது
நம்பத்தகுந்ததாக இல்லை…. 7 ஆண்டுகள் தொடர்ந்து இவர்கள் ஒரே
சீட்’டில் எப்படி பணிபுரிந்தார்கள்…? இவர்களின் பின்னால், இந்த
ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு பின்னால், சில பெரிய மனிதர்களின்
கூட்டணி நிச்சயம் இருக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சி பாஜகவை குற்றம் சாட்ட, பதிலுக்கு பாஜக, காங்கிரசை
குற்றம் சாட்ட – நேற்று பகல் முதல் லாவணிக்கச்சேரி தொடர்ந்து
கொண்டிருக்கிறது.

இதில் பளிச்சென்று தெரியும் ஒரே ஒரு விஷயம் –
பலமான அரசியல், அதிகார பின்னணி இல்லாமல், இவர்களால்
நிச்சயமாக, இந்த விஷயத்தை இவ்வளவு நாட்கள் தொடர்ந்திருக்க
முடியாது…

பாஜக ஆட்சியின் மீது சில பலமான குற்றச்சாட்டுகள்
முன்வைக்கப்படுகின்றன….

ஜூலை, 2016-லேயே, பங்களூரைச் சேர்ந்த ஹரி என்கிற ஒரு நபர்
இந்த குற்றம் பற்றிய முழு விவரங்களைத் தொடுத்து, இந்த
கம்பெனிகளின் மீது பிறப்பிக்கப்பட்ட சுமார் 42 FIR பிரதிகளையும் இணைத்து, பிரதமரின் அலுவலகத்திற்கு( PMO ) இவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி எழுதி இருக்கிறார். தவறினால், விஜய்மால்யா, லலித் மோடி போல் இந்த வைர வியாபார மோசடிக்குழுவும் தப்பி விடும் என்றும் எச்சரித்திருக்கிறார்.

பிற்காலத்தில், அப்படி ஏதும் தபால் பிரதமர் அலுவலகத்திற்கு வரவில்லையென்று சொல்லிவிடப் போகிறார்களே என்று,
அந்த நபர் முன்னெச்சரிக்கையாக, தனது புகாரை,
ஆன்-லைனில், PMO-விற்கு ஆதாரங்களாக நிறைய attachments-யும்
இணைத்து அனுப்பி இருக்கிறார்….

கொஞ்சம் தாமதத்திற்குப் பிறகு, இந்த புகார் பிரதமர் அலுவலகத்திலிருந்து,
RoC ( Registrar of Companies ), mumbai -க்கு
மேல் ஆராய்ச்சிக்கு (??? ) அனுப்பப்பட்டிருக்கிறது. அத்தோடு சரி…
இந்தப் புகார் அங்கேயே சமாதியாகி விட்டது…. அதற்குப்பிறகு, அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தகவல் இல்லை…

உண்மையில் இந்த புகார் கிடைத்தவுடனேயே, பிரதமர் அலுவலகம்
இதனை சிபிஐ- க்கு உடனடி குற்ற ஆய்வு நடவடிக்கைக்காக
அல்லவா அனுப்பி இருக்க வேண்டும்….மாறாக, RoC ( Registrar of
Companies ), mumbai -க்கு அனுப்பப்பட்டது ஏன்…? பிரதமர் அலுவலகத்திற்கு இது கூடவா தெரியாது…? காரணம்…?
நிச்சயம் “அறியாமை” காரணமாக இருக்க முடியாது…

நான் மேலே எழுதியதில் சில தகவல்கள் விடுபட்டுப் போயிருக்கலாம்.
ஆனாலும், இப்போதைக்கு இந்த விவரங்கள் போதுமென்று நினைக்கிறேன். இந்த கதை இப்போதைக்கு முடியப்போவதில்லை….
இது ஒரு பெரிய தொடர்கதை ஆவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
தொடர்ந்து விவாதிப்போம்.

யார் ஆட்சிக்கு வந்தால் என்ன…?
ஊழலை ஒழிப்போம் என்பது தேர்தல் மேடைகளில் மட்டுமே
பேசப்படும் ஒரு விஷயம்…. நிஜத்தில் நடத்த அல்ல…
எல்லாருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது தான் நிஜம்…

அவ்வப்போது, வீராவேசமாக பேசும், இவர்களின் பேச்சை நம்பி
ஏமாந்துபோகும் இந்நாட்டு மக்கள் தான் நிரந்தர ஏமாளிகள்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to மோசடி மன்னன் நிரவ் மோடியும்….திரு.ரவிசங்கர்ஜியும்….!!!

 1. Raghuraman N சொல்கிறார்:

  Sir

  Add to this.
  Out of the funds, only Rs 2 crores is insured. Rest of them will be borne by Bank (General Public in due course).

  Is this not coming under the term ‘Modicare’

  Regards

  Raghuraman

  • புதியவன் சொல்கிறார்:

   ‘நல்ல பாயின்டைத் தொட்டுள்ளீர்கள் ரகுராமன். மத்திய அரசுதான் (அரசியல்வாதிகள்தான்), ‘வங்கிக் கடன்’ கொடுக்கும் விஷயத்தில் முன்னிருந்து நடத்துவதால், மத்திய அரசுதான், வங்கி திவாலாகும்போது, டெபாசிட்தாரர்களுக்கு முழுப் பணமும் கிடைக்கும்படிச் செய்யவேண்டும்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    கொடுக்கும்… நிச்சயமாக கொடுக்கும்…அவர்களுக்கு என்ன கஷ்டம்…?
    அவர்கள் என்ன தங்கள் பாக்கெட்டிலிருந்து எடுத்தா கொடுக்கப் போகிறார்கள்…?
    மீண்டும் மக்களிடமிருந்து வரியாக பிடுங்கி, மக்களுக்கே “டெபாசிட்” கிடைக்கச் செய்வார்கள்…!
    அதற்கு தனியாக விளம்பரம் செய்து “கிரெடிட்” கூட பெற்றுக் கொள்வார்கள்.

    மக்கள் இளிச்சவாயர்’களாக இருக்கும் வரை எதுவும் இங்கே நடக்கும்…!!!

 2. mekaviraj சொல்கிறார்:

  http://www.moneycontrol.com/news/business/google-launches-lightweight-gmail-go-app-for-android-heres-how-it-works-2509475.html

  இதுக்கும் மேல எப்படி complain பண்றது ??
  கண்டிப்பா மேல உள்ளவர்களுக்கு எல்லாம் தெரிந்தே நடந்துள்ளது

 3. tamilalagu சொல்கிறார்:

  can anybody guess, what would be the impact on the FD account holders of the PNB

 4. ssk சொல்கிறார்:

  இவர்களின் திருவிளையாடல் மற்ற வங்கிகளை சேர்த்தால் , மொத்தம் 30000கோடி இருக்குமாம்.
  இங்கே சிறு விவசாயி தற்கொலை செய்ய , இவ்வளவு கொள்ளை அடிப்பவர்கள் சுகமாக உள்ளார்கள். அரசியல்,வங்கி என எல்லோரும் சேர்ந்து கொள்ளை அடித்து உள்ளனர். மொத்தத்தில் அத்தனை பாரமும் சாதாரண மனிதர்கள் ஏற்கிறார்கள். வேதனை,
  சட்டம் சில மக்களை தொடவே முடிவதில்லை. தொட்டாலும் பல ஆண்டு வழக்கு இழுக்கப்பட்டு , அதற்குள் தேவையான கட்சிக்கு மாறி , இன்ப வாழ்வு வாழ்கின்றனர்.
  சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் நிலை , சட்டத்தின் முன் பயம் வர, நாடு நலம் பெரும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.